எரிவதும் அணைவதுமாய்
போக்குக் காட்டும்
அந்த குழல்விளக்காய்
இக்கவிமனசு
+++
பாடவோர் படிமமில்லை
இடைநிறுத்தத்தில் முகம் பார்த்து
‘அக்காவை உட்காரச் சொல்லுங்க’
எனச் சொல்லும்
வெடித்த பருத்தி போல
முழுக்க முடி நரைத்த
கண்ணாடியணிந்து
தள்ளாடியெழுந்து வழிவிட்ட
அறுபது வயது தங்கையை
+++
நின்று கொண்டிருக்கும்
சைக்கிளைச் சந்தோஷமாக
ஓட்டியபடி சிரிக்கும் அச்சிறுவனைப் போலத்தான்
நகர்த்திக் கொண்டிருக்கிறேன்
இம்மீச்சிறு வாழ்வை
+++
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.