கண்ணன்
கவிஞர் ஆகாசமுத்து அவர்களின் ‘வெருகு’ கவிதைத் தொகுப்பு வாசித்தேன்.
127 பக்கங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள். உரைநடைக்கு அருகில் வரும் சற்றே நீண்ட கவிதைகள் நிறைய இருக்கின்றன.
கவிஞர்களுக்குக் காண்பெதெல்லாமே பாடுபொருள் தான். இயற்கையும், கிராமமும், நகரமும் தொடர்ந்து வருகின்றன. காட்சிகளாக பல கவிதைகள். புத்தர் புத்தகமெங்கும் வருகிறார்.
பின் அட்டைக் கவிதை சிறப்பு. காற்றில் கீழே விழும் தைல இலை, நாரையாய் மாற, கவிஞர் குளத்தையும், மீன்களையும் வரைய, நாரை மீன்களை உண்கிறது. அருமையான கற்பனை.
வீட்டில் நிறைய பூனைகள் வளர்ப்பதால், வெருகு கவிதை பிடித்தமான ஒன்று. வெருகு என்றால் காட்டுப்பூனை என்கிறது கூகுள்.
‘பூகம்பம் கலவரம் நடந்த
சிதைந்த நிலத்தின் மேட்டில் நின்று கூட
தன்னுடலை எச்சில்படுத்தி
சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும்’
அடுத்து மிகவும் பிடித்தமான கவிதை, ‘நான் இந்த உலகத்திற்கே அப்பன்’. எனக்கும் மகள் இருப்பதால், கவிஞரின் வரிகளை மிகவும் எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.
கவிஞர் தனது மகளை, அனைத்து வடிவங்களிலும் காண்கிறார். அவளே யாதுமாகி நிற்கிறாள். அவளையே தெய்வமாகவும் காண்பதால், அவளுக்கே தான் தந்தையாக இருப்பதால், தன்னை இவ்வுலகிற்கே அப்பன் என்கிறார். பிள்ளையார் அம்மையப்பனைச் சுற்றி வருவதற்குச் சொல்லும் காரணமே இங்கும்.
ஆம், இது திமிரல்ல, பெருமிதம்.
‘அப்பால் எதுவுமில்லை’ நான்கு கவிதைகளும் தத்துவம் என்றால், ‘வாதுமை’ இரண்டு கவிதைகளும் இயற்கையின் ஆராதனை.
இடுகாட்டுக்கு அப்பால் வெளிகள் ஏதுமில்லை கவிதை மனதை கனக்கச் செய்கிறது. இடுகாடு பற்றி ஒவ்வொன்றாகச் சொல்லிச் செல்வதில், நாமே அங்கு இருப்பதாக உணர்கிறோம். “பிரேதச் சமையல்” என்று சாதாரணமாக சொல்லிச் செல்கையில், படிக்கும் நமக்கு உடல் சிலிர்க்கிறது.
வாதுமை1 கவிதையில் வரும் கீழ்க்காணும் வரிகள் மிகச் சிறப்பு:
“எந்தக் காட்டின் யானைக் காதுகள்
இந்தப் பசும்பொழிர் இலைகள்”
மரம் வளர்க்கவும் உரிமையில்லாத புலம்பெயர்வுத் தொழிலாளி என்பதில் அவ்வளவு அதிர்ச்சி.
வாதுமை2 கவிதையில் வரும் கீழ்க்காணும் வரிகள் எவ்வளவு அழகு:
“தெருவே வெள்ளையடித்தது போல் எச்சங்கள்”
பிறிதொரு நாளில் அந்நாரைகள் தாயகம் ஏக, தனித்து விடப்பட்ட கவிஞனுக்கு, மொட்டைக் கொம்புகளெல்லாம் நாரையின் அலகுகளாகின்றன. இருப்பு கொள்ளாத அவனுக்கு, குணங்கும் சப்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
சமர்ப்பிக்கப்பட்ட மூன்று கவிதைகளும், தஸ்தயேவ்ஸ்கி மற்றும் பிரான்ஸிஸ் பற்றிய கவிதைகளும் அருமை.
பரத்தை காதைகளில், கழிவிரக்கமும் உண்டு, பரத்தையனும் உண்டு.
அருள்வாக்கு கவிதை அருமையான காட்சிகளை ஓவியமாகத் தீட்டுகிறது.
“தூண்களும் கோபுரமும் அதன் ஆதிகால பற்றுக் கொடிகள்”
“வெள்ளை லிங்கத்தை உரித்துத் தின்ற குரங்கார்”
வாழைப்பழத்தை வெள்ளை லிங்கம் என்பது எவ்வளவு அழகான கற்பனை.
அற்றலையும் புத்தன் ஐந்து கவிதைகளில், முதலும் முடிவும், புத்தனுடன் ஒப்பீடு, மற்றவை அன்பும் காதலும். மூன்றாம் மற்றும் நான்காம் கவிதைகள் மிகச் சிறப்பு.
“தன்னைத்தானே பூட்டிக்கொண்டு சாவியைத் தேடுபவனை”
“பிரிவின் பீடத்தில் பேருருவாய் எழுதினார்”
“மூலை தேடி அன்பு
உட்கார்ந்து அழுவதைப் பார் நேரா”
பேவநத்தம் மலையாந்தம் கவிதைகள் சிறப்பு.
தெப்பக்குளம் ஆறு கவிதைகளும், குளத்து மீன்களுக்கும், கவிஞருக்குமான உரையாடல்.
மரணத்தை சாணை பிடிக்கும் இரயில் கவிதை, எனது பயணத்தை ஞாபகப் படுத்தியது. படிக்கையில், சக்கரத்தினடியில் உள்ளே மாட்டிக்கொண்ட ஒரு வயதான அம்மா, கால் மட்டுமே வெட்டுண்ட நிலையில், உயிரோடு வெளிவந்த நிகழ்வு, எனக்குள் நிழலாடியது.
ஆதார சுருதி கவிதை எனது பயணங்களில் எப்போதும் பாடும், கண் தெரியாத கலைஞனை ஞாபகமூட்டியது.
பல குறுங்கவிதைகள் சிறப்பாக வந்துள்ளன.
தொகுப்பின் முதல் கவிதையே நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக அந்தரத்தில் கயிறு கட்டி வித்தை செய்யும் கலைக்கூத்தாடிப் பற்றி சொல்லிக்கொண்டே வரும் கவிஞர், கடைசி இரண்டு வரிசைகளில் கண் கலங்க வைக்கிறார்:
“கையில் சமநிலைக்கு
கிடைமட்ட மூங்கில் கம்பு
கலச மகுடம் சுமக்கும்
வித்தைச் சிறுமி நான்”
எடையற்ற காலை கவிதை வாழ்க்கையின் யதார்த்தத்தை, முகத்தில் அறைவது போல் சொல்கிறது. எடையற்ற காலை ஒவ்வொரு கவிஞனுக்குமான கனவு:
“இப்படியே ஒவ்வொரு காலையும்
விடிய வேண்டுமாய் மன்றாடுகிறேன்
மனமோ
அப்படி ஒருநாளும்
எடையற்று விடிவதில்லை”
நடுத்தர வர்க்கமான நமக்கு, பிரச்சனைகளின் அழுத்தத்தில், காலைகளின் எடை ஒவ்வொரு நாளும் கூடித் தான் போகிறது. குறைவதாகத் தெரியவில்லை.
மற்றொரு கவிதையில், ஒரு கொய்யாச் செடி பூப்பதை, ஒரு பெண் பூப்பெய்வதாகவும், அதை ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறந்து காண்பதாகவும் எழுதுகிறார் கவிஞர். அருமையான கற்பனை:
நாளை நீ மறுபடியும் பூப்பெய்துவதை
மறுபடியும் பிறந்து காண்பேன்
மருள் கவிதையில், கடைசி வரிகள் மிகச் சிறப்பு:
“வளைந்து சுழன்றெழும்
சின்னஞ்சிறு
கருநிழல் பறவைகளின்
கூட்டு ஒழுங்கின் பறத்தல்
நெடுஞ்சாலை ஹாரன்களின்
திடுக்கிடல்களை மருட்டும்
நிசப்த பேரிசை”
மயக்கும் கொலுநாகம் கவிதையில், “ஆடையுடுத்திய கொலுநாகம்” என்னும் வரிகள் சிறப்பு.
குட்டிராணியின் நகர்வலம் கவிதையில் கடைசி வரிகள் அழகு:
“இந்தப் பூமியே பொம்மையென
ஆட்டுவிக்கும் என் ராணியை
ஒரு குழந்தையென்று எப்படி ஒத்துக் கொள்வது”
எலிவேட்டை கவிதையில் ஒரு சிறுகதையே இருக்கிறது:
“மதுஅடிமைக் கணவனின் கொடுமைகளைச் சகித்து
குடும்பம் பேணிய என் வைராக்கிய அம்மாதான்
அப்படி நடுயிரவில்
சுண்டெலிகளை விரட்டி விரட்டிக் கொன்றாளென”
வில்லுப்பாட்டுக் கலைஞன் கவிதை ஒரு திரைச்சித்திரம்:
“காடதிர
விருவோடிய பெருங்குளம் அதிர
தீப்பந்தம் ஒளிர
ஆதாளி போட்டுச் செல்லும்
சலங்கைச் சத்தம்”
“பொத்தென விழுந்து பாம்பெனச் சீறும்
மஞ்சள் குளித்த பெண்கள்”
அவனது இன்றைய கையறு நிலையையும் சொல்லத் தவறவில்லை கவிதை. முன்பு போல இல்லாமல், இரண்டரை மணி நேரம்தான். ஒரு பால் காப்பி கிடைத்ததற்கு நெகிழ்ந்து போகும் கலைஞன், இருபதுக்கும் அம்பதுக்கும், பரம்பரைப் பெயர்களை வாழ்த்துரைக்கவும் வேண்டியிருக்கிறது வயிறு வளர்ப்பதற்கு. மிகச் சிறந்த சிறுகதை கவிதை வடிவில்.
அதிசகாவில் இலக்கியப் பகடி.
இப்படியும் பார்க்கலாம் தானே?
இரண்டாம் ஏன் கவிதை:
“பார்வைக்கு
அடுக்கி வைக்கப்பட்ட
மீன் பிணங்களின் வாசனை
அவ்வளவு
தூக்கலா இருக்கு”
நீ நிலம் எனத் தொடங்கும் கவிதை அழகு:
“நீ நிலம்
நான் மழை
பிஞ்சு விரல்களை
நீட்டிச் சிலிர்த்து எழும்
பச்சை வெளிகளெல்லாம்
நாம் பெற்ற பிள்ளைகள்”
பெருங் கவிகள் கவிதையில் பல அழகான வரிகள்:
“காதோரம் உரசிச் செல்லும் காற்றிடம்
ஒற்றை வரிக்காகக் கொக்குத் தவமிருக்கின்றனர்
—–….++++
மொழிக்கடல் கடைந்து கசந்த அமுதமளிப்பவர்கள்
—–+++++—
கூண்டுக்குள்ளும் வானம் வனம்
வானமளவு கூண்டின் இருள்
ரெயின் ரெயின் கவிதையும், கொன்றை மரங்களின் கிரிக்கெட் கவிதையும், நாமும் கூடவே பயணிக்கும் அனுபவத்தை, வார்த்தைகளில் காட்சிப் படுத்துகின்றன.
கவிஞரே ஒரு தேர்ந்த எடிட்டராகி, பல கவிதைகளை நீக்கி இருக்கலாம்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கவிதைகள், சாத்தியமான எல்லா பாடுபொருள்களின் வழியாக.
ஆழி பதிப்பகம் , 15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்ரம், திருவண்ணாமலை – 606806
அலைபேசி எண்: 9994880005

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

