இறுதி தீர்ப்பு :

   ஒன்று

கடவுளை கொன்ற குற்றத்திற்கான

தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது..

பெருந்தனக்காரரின் முறைகேட்டை போலவோ

ஏழைப்பங்காளியின் போராட்ட கள மீறலைப்போலவோ

தண்டணை வழங்க அவ்வளவு எளிதானதில்லை..

மேலும் இது தனிமனித குற்றமில்லை

ஒட்டு மொத்த சமூகம் சார்ந்தது..

நிரூபணம் எதுவும் இதுவரை கிட்டவில்லை.

முடிவுறா வழக்கில்

ஒவ்வொருவரும் கைதி

ஒவ்வொருவரும் நீதிபதி..

  இரண்டு

அற்புதங்கள் எதுவும் நிகழாமல்

பூமி வெறுமையானது..

பேரழிவிற்கும்

பெருஞ்சேதத்திற்குமான

பெயர்கள் கைவசம் உள்ளன.

உயிர்கள் அடித்து செல்லும் காட்டாற்றில்

கரையொதுங்குபவை மட்டும்

காலத்தின் பகடை காய்கள்..

ஒரு தடவை ஒரு முகம்

மட்டுமே காண்பிக்கப்படும் எனும் நிபந்தனை ஏற்று

நான்முகனை காண

முண்டியடிக்கும் கூட்டம்..

 மூன்று

கடுங்குளிர் காலத்தில்

பாசுரம் பாடி

நித்திரையில் மூழ்கிய கடவுளை

எழுப்பத்தான் முடியுமா?

,

வழியெங்கும் உதிர்ந்த

ரோஜாவும் சாமந்தியும்..

மதியம் பெய்த தூறல் மழையின் ஈரத்தில் கலந்து..

மணம் வீசிய மாலை பொழுதில்

வாழ்விற்கு அழகு சேர்த்தது மரணம்..

,

ஏதோ ஒன்றில் அடையாளப்படுத்திக்கொண்டு

அச்சிடப்பட்டிருக்கும் விதவிதமான மனித முகங்கள்..

அவ்வப்போது குதித்து

உருண்டோடி மறையும்..

,

அம்புகள் எய்தபட்ட மார்புடன்

வீழ்ந்து கிடக்கிறேன்..

குகைக்குள் செல்லும் வரிசை

நீண்டு கிடக்கிறது..

கருணையின் விரல்கள் வெட்டப்பட்டு

மொக்கையாகி போயின..

நோய்மையின் சதுக்கத்தில்

முகிழ்த்த மலர்..

,

இருக்கும் போது நெருங்க

முடியாதவர்கள்

இல்லாதபோது மிகவும்

நெருங்கி விடுகிறார்கள்..

 மாலகோவில்

எண்ணச் சிதறலாய் 

குவிந்திருக்கும்

சின்னஞ்சிறிய பசு சிற்பங்கள்..

அருளும் பொருளும் கலந்தே 

பெருகும் எத்திசையிலும்..

அலங்கார ஜீவன்கள் 

முன்னிலையில் 

ஆண்மையின் ஆட்டம் 

கண்டு களிக்கும் பெண்மை..

எங்கோ ஒலிக்கும் குழல் நாதம்

யார் வரவுக்காக?

00

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *