கதைகள் வழி ஒரு மனிதனை துய்த்துப் பாருங்கள்! மனிதர்கள் எத்தனை ஆழமிக்கவர்கள், எவ்வளவு அற்புதமானவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். காதல், வீரம், பகை, பொறாமை, போட்டி, மோதல் என ஒவ்வொரு குணமும் மனிதனுக்கான ஒன்றுதான். இவை இல்லாமல் ஒரு மனிதன் உருவாவதில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனையும் அற்புதமானவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். நம்மைக் கடந்த போற ஒரு மனிதனையும் கதைக்குள் வைத்துவிட்டால் அவன் மிளிர்வான்.
எழுத்தாளர் செந்தில்குமார் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து இப்போது சிங்கப்பூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். எழுத்தாளர் செந்தில்குமாரின் முதல் நூல் இது. ஒரு நிலத்தின் கதையை அம்மக்களின் வழி கேட்பதற்கும், ஒரு புலம் பெயர்ந்தவனின் பார்வையில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வின் எல்லாக் காலத்திலும் கூடவே வருபவை பிறந்த நிலமும் வசிக்கும் நிலமும். அப்படியான சூழலில் வாழ்நாள் முழுதும் இரண்டு நிலத்திற்கு கிடையில் அகப்பட்ட ஓர் ஆன்மாவின் குரலாக இருக்கிறது செந்திலுடைய எழுத்து.
உலகம் முழுவதும் ஏதேதோ காரணங்களுக்காக நிலம் விட்டு நிலம் பெயர்ந்தவர்களின் இதயத் துடிப்பின் சன்னதமான குமுறலின் ஒலி இந்த நீர்முள் தொகுப்பு.
ஒரு சிறுகதை எழுதும்போது அதற்கான அறம் என்ற ஒன்று அந்தக் கதையில் இருக்கும். ஒரு நிலம் சார்ந்த மக்களைப் பற்றிய வாழ்வைப் பேசும்போது அவர்களின் வாழ்வியல் கூறுகள், பண்பாடு, மொழி போன்றவற்றைப் பற்றியும் எழுதுவது ஓர் எழுத்தாளனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அப்படியாக நீர்முள் பேசும் அறம் என்னவென்றால், இதுவரை நாம் நினைத்துப் பார்க்காத கேட்காத வேறு வேறு பண்பாடு கொண்ட மனிதர்களை சிங்கப்பூர்ச் சூழலித் அவர்களின் இருப்பைப் பேசுவதுதான் நீர்முள் தொகுப்பின் அறமும் சிறப்பும்.
புறாக்களை சமாதானத்தின் குறியீடாக பார்த்து வந்த நமக்கு ஆலாப்பறவைகளை இந்நூலின் விடுதலையின் குறியீடாக்கியுள்ளார் எழுத்தாளர் செந்தில்குமார். தன்னுடைய முன்னுரையில் “மொழியே வேட்டை நிலம், மொழியென்பது பழக்கப்பட்டதொரு விலங்கு, மொழியே மகத்துவமான இரை” என்கிறார். மொழியையே நிலமாகவும், அதுவே நிலத்தில் வேட்டையாடும் விலங்காகவும், ஏன் மொழியே அந்நிலத்தின் இரை என்று கூறுகிறார். மொழியே அத்தனையுமாக மாறிக்கொள்வது எத்தனை சிறப்பு.
இந்த நூலில் பேழை, மாடம், சன்னதம், கூத்தன், பிறழ்வு, முதுகுப்பாறை, மறுமொழி, நீர்முள், தபோவனம் என ஒன்பது சிறுகதைகள் உள்ளது. ஒரு கதைக்கு எப்போதும் முடிவே இருப்பதில்லை. எப்படிப் போனாலும் ஒரு கதையின் முடிவில் இன்னொரு கதையின் தொடர்ச்சி இருக்கும். அதுதான் வாசகர் பேசிட வேண்டிய ஒரு கதையின் தொடர்ச்சி. அக்கதையானது அந்நூல் பேசும் அரசியலாக இருக்கலாம், இல்லை ஓர் உரிமையாக இருக்கலாம். பல ஆண்டுகளாக அடிமைப்பட்ட மக்களின் வாழ்விலிருந்து எழும் ஒரு சிறு ஒளியாக இருக்கலாம். இல்லை ஒரு ஆன்மாவின் உன்னத மொழியாக இருக்கலாம் அல்லது அதிகார வர்க்கத்தை எதிர்த்து உரத்துக் கேட்கக்கூடிய ஒரு கேள்வியாக இருக்கலாம். இப்படியான கேள்வியோடுதான் ஒவ்வொரு சிறுகதையும் இருக்கிறது.
நிலம் விட்டு நிலம் வந்தவர்களின் பெரிய ஆசை என்னவாக இருக்கும். தன் வாழ்நாளில் என்றேனும் தன் சொந்த நிலத்தில் கால் வைப்பது. அப்படி வாழ்நாளில் நிலத்தைத் தேடும் பொருட்டும் திரும்பவே முடியாத ஆன்மா என்னவாகியிருக்கும். இந்நூலில் இருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் தனித்தனி நிலத்தைப் பற்றி பேசுபவை. ஆனால் ஒவ்வொன்றுக்கும் தொடர்பு இருக்கிறது. எல்லாமே ஒரு விடுதலை நோக்கி விரல் நீட்டுவதாகவே உள்ளது. விடுதலை என்பது என்ன என்று ஆழ்மனத்தில் நாம் நம்மையே கேட்டால் அது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஒரு மனிதன் எதிலிருந்து விடுபட விரும்புகிறான் என்பது கணத்தில் நிகழ்வதன்று. அஃது ஆன்மாவின் பலநாள் குமுறல்.
சிறு கதையோ, புதினமோ புனைவுக் கதைதான் என்றாலும் கூட அதற்கென்று ஓர் உண்மைத் தன்மையும் தேவையாய் இருக்கிறது. இந்நூலில் உள்ள ஒன்பது கதைக்களமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. சில கதைகள் சிங்கப்பூர் இலக்கியக் களத்திற்கு புதுமையானதாகக் கூட இருக்கலாம். சன்னதம் என்ற சிறுகதையில் சீனன் ஒருவன் சிங்கப்பூர் முருகன் கோவிலில் அவனது மரபான தாங்கி ஆட்டத்தை ஆடுவதைச் சித்தரிக்கும் கதையில் கொக்கியன் சீனர்கள் பற்றிய குறிப்போடு அவர்கள் ஆடும் தாங்கி என்றதொரு குலதெய்வ வழிபாட்டு ஆட்டத்தைக் பற்றியும் கதை விவரிக்கிறது. நம் கண் முன்னே நமது வழிபாட்டில் எங்கோ பிறந்து வளர்ந்த நம்மொழி புரியாத ஒருவர் நம்மைப்போல காவடி தூக்கினால் எப்படியிருக்கும். பார்த்துவிட்டு கடந்து போகிறவர்களுக்கு மத்தியில் அதற்கு பின்னர் என்ன கதை இருக்கும் என்பதைத் தேடி அளித்திருக்கிறார்.
ஒரு கடலடிமைக்கு என்ன சுதந்திரம் இருந்திடப் போகிறது. ஓர் உயிர் எப்போது விடுதலை அடையும். ஓர் உயிர் விடுதலை அடைவதற்கு என்னவெல்லாம் முயற்சி செய்யும் என்று நாம் கொண்டிருந்த எல்லாப் பிம்பங்களையும் உடைக்கும் விதமாக இருப்பதுதான் நீர்முள் கதை. நீர்முள் என்றதும் அதன் பொருள் என்ன? உள்ளே உள்ள கதைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு இருக்குமா என்ற கேள்விதான் நம்மில் பலருக்கும் ஏற்படும் முதல் கேள்வியாக இருக்கும். நீர்முள் என்ற தலைப்பிலே ஒரு சிறுகதையும் உள்ளது.
நூல் முழுவதும் விரிந்து கிடக்கிற கதை மொழியானது எழுத்தாளர் செந்திலின் தனித்துவானது என்றால் மிகையாகாது. ஒவ்வொரு நிலத்தையும் அதன் தன்மையையும் விவரிப்பது முதல் கதாபாத்திரங்களை விவரிப்பது ஒவ்வொன்றும் அவ்வளவு சிறப்பாக உள்ளது. ஒரு கதைக்கு கதையின் மையக் கரு எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போல் கதை வழி நம்மோடு பயணிக்கும் ஒவ்வொரு மனிதனின் குணங்களும் கதைக்கு வலு சேர்ப்பது.
ஒரு கதை என்பது கதையல்ல மனிதனின் வாழ்க்கை. வெகு எளிதாக நம்மைக் கடந்து செல்லும் ஒரு மாந்தனிடம் என்ன இருந்திடப் போகிறது என்றெண்ணாமல் அவரைச் சற்று கூர்ந்து அருகினில் ஒரு எளிய மனிதனையும் கதை வழி நாயகனாக்காலம். அத்தகைய சிறப்பு எழுத்தாளருக்கு உரியது. எழுத்தாளர் செந்தில்குமார் நாம் இதுவரை கேட்கப்படாத கதைகளை நம் காதருகில் சொல்ல முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் பல்லினச் சூழலில் வாழும் நாடு. அத்தையை நாட்டில் வாழும் மக்களுக்கு இருக்கும் சிக்கலையும் கதைக்குள் வைத்திருக்கலாம் என்ற எண்ணமும் உருவானது. சிங்கப்பூர் என்று நாடு உருவாகும் முன்பிருந்து வாழும் மலாய் மக்களின் வாழ்வைக் காட்டும் சிறுகதையோ, பல்லினச்சூழலில் வாழும் மூன்று சமூகங்களுக்கு இடையே இருக்கும் உறவை எடுத்துக்காட்டும் விதமாக கதை வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு உருவானது. கூடவே கதையைச் சொல்லும் போது சில இடங்களில் மையக்கருத்தை விட்டு விலகி மிகையான வரருணனை இருப்பதும் சில இடங்களில் வாசிக்கும்போது கதையை விட்டு விலகிப்போவது போல் தேன்றினாலும் அவ்வகை வருணனை கதைக்கும் தேவையான ஒன்றுதான். அதை சமபங்கில் வைத்தால் இன்னும் எழுத்தாளர் செந்தில்குமார் மேன்மேலும் மிளிர்வார் என்று நம்பிக்கை அளிக்கிறது.
தொடர்ந்து அறிப்படாத மக்களின் பேச்சுக்குச் செவி மடுத்து எவ்விதக் கட்டுப்பாடின்றி ஆலாப் பறவையின் கடற் சுதந்திரம் போல தொடர்ந்து எழுதிட வாழ்த்துகிறேன்.
00

வெற்றிச்செல்வன் இராசேந்திரனின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் உடைகுளம் என்னும் சிற்றூர். தந்தை இராசேந்திரன், தாய் பூமயில், மனைவி பவித்ரா ஆவர். வெற்றிச்செல்வனின் இயற்பெயர் விஜயகாந்த்.
வெற்றிச்செல்வன் என்று தன் பெயரைப் புனைந்துள்ளார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் திட்டப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை மனிதச் சிறகுகள், கீதாரியின் உப்புக்கண்டம் என்ற இரு கவிதைத் தொகுப்புகளையும், குளம்படி என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். இதோடு தமிழ்நாட்டிலிருந்து மேய்ச்சல் நிலத்தை மைய்ப்படுத்தி வெளியாகும் “கிடை” காலாண்டு இதழின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவராகாவும் உள்ளார்.