சந்திரன் கைபேசியில் அழைத்தபோது, எனது கம்பெனி வேனில் எலக்ரானிக் சிட்டியை நெருங்கிக் கொண்டிருந்தேன். வெளியே பார்த்தபோது, ஒரு சிறுவன் ஆஞ்சநேயர் வேடமணிந்தபடி நடந்து சென்று கொண்டிருந்தான்.

‘அம்மா, மறுபடியும் காணாமப் போயிடுச்சு’ என்றான். அதிர்ச்சியை விழுங்கி முடிப்பதற்குள், அடுத்த அடி: ‘போயி மூணு நாளாயிடுச்சி, இன்னும் ஒரு தகவலும் இல்ல, பயமாயிருக்கு’ என்று தொடர்ந்தான்.

‘ராஜிக்குச் சொல்லிட்டியா?’ என்றேன். ‘இன்னும் இல்ல’ என்றான். தம்பி ராஜ் சிங்கப்பூரில் பணியில் இருந்தான்.

‘ஸ்டேசன்ல கம்ப்ளெயிண்ட் குடுத்துறது பெஸ்ட். குமாரையும் கூட்டிக்கிட்டுப் போலாம்’ என்றேன். குமார் எனது நண்பன். வக்கீலாக இருக்கிறான்.

‘சரி,நைட்டேக் கெளம்பி வர்றன். குமார் கிட்டப் பேசிட்டுக் கூப்புடுறேன்’ என்றேன்.

குமாரிடம் பேசியதில், சந்திரன் வீடு அம்மாப்பேட்டை ஸ்டேஷன் கீழ் வருவதாகவும், அதில் சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவைத் தனக்குத் தெரியும் என்றும், நாளைக் காலையில் அவரைப் பார்த்து, கம்ப்ளெயின்ட் கொடுத்து விடலாம் என்றும் கூறினான்.

ராஜை வாட்ஸ்அப்பில் அழைத்து விவரம் சொல்லி, தைரியமாக இருக்கும்படிச் சொல்லி விட்டு, அண்ணனை அழைத்து அடுத்த நாள் அம்மாபேட்டைக்கு வரச்சொல்லி விட்டு தூங்கச்சென்றேன். மனைவி தைரியம் சொன்னாலும், மனசு ஏனோ விபரீதமாக யோசித்தது. கடுகளவும் தூக்கம் வரவில்லை.

அம்மா இப்படிச் செல்வது ஒன்றும் புதிதில்லை. இது மூன்றாவது தடவை. சென்ற முறை இப்படித்தான், திடீரென கோபித்துக் கொண்டு, சென்னைக்குப் பஸ் ஏறி விட்டார்.

அம்மாவுக்கு மூளையில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, நரம்பு டாக்டரிடம் மாதம் ஒரு முறை பார்த்துக் கொள்கிறார். ரத்தக்கொதிப்பு வேறு. தினமும் சாப்பாடு போல, கை நிறைய மாத்திரைகள். அப்பா இறந்ததிலிருந்தே அம்மா சரியில்லை. அஞ்சு நிமிஷம் நடந்து விட்டு கால் வலிக்குது என்று அமர்ந்து விடும்.

மெரினாவில் கடலில் விழ இருந்தவரை, மீன் பிடிக்கும் மீனவர்கள் பார்த்து விட்டு, ‘வயித்துப் பொழப்பு இப்படிக் கஷ்டப்படுறோம். பசங்க இருக்காங்குன்னு சொல்றீங்க. இனிமே, இப்படிப் பண்ணாதீங்க. பேரப் பிள்ளைகளோட சந்தோஷமாக இருங்க’ என்று அறிவுரை கூறி, சேலம் பேருந்தில் ஏற்றி, அனுப்பி வைத்தார்களாம்.

கடலில் தண்ணீர் நிறையக் குடித்து விட்டிருந்தார். வந்ததும், மருத்துவமனையில் சேர்த்து, ஒரு வாரம் கழித்தே நார்மலானார். குளுக்கோஸ் நிறைய ஏற்றியதாலும், மாத்திரைகளாலும், உடற்பயிற்சி இல்லாமையாலும், கை காலெல்லாம் நன்றாக வீங்கியபடி இருந்தது. எடையும் கூடி இருந்தது.

அம்மாவின் அம்மா, குஞ்சம்மாப் பாட்டியை அந்தளவுக்கு ஞாபகம் இல்லை. எப்போதாவது செல்லியம்மன் நகரில் இருக்கும் தோட்டத்திற்கு வருவார். முருக்கு, தட்டுவடையெல்லாம் வாங்கி வருவார். மடியில் அமர வைத்து எங்களைக் கொஞ்சுவார். ஒரு நாள், அம்மா சொன்னாள்: ‘பாட்டி, காணாமப் போயிடுச்சு’.

அம்மாவின் சித்தப்பா, சித்தியும் எப்போதாவது வருவார்கள். பாட்டிக்கு சரியாக காது கேட்காது. செவுட்டுப் பாட்டி என்று தான் சொல்வோம். ஒருவர் பின் ஒருவராக, இருவருமே ‘திடீரென’க் காணாமல் போனார்கள் என்று அம்மா சொன்னார்.

அடுத்த நாள் காலை, அண்ணன் சந்திரன் மற்றும் நண்பன் குமாருடன், ஸ்டேஷனுக்குச் சென்றோம்.

சப் இன்ஸ்பெக்டர் சூர்யா, நடிகர் சூர்யா போலவே, ஒட்ட வெட்டிய முடியுடன், நல்ல உடல்வாகுடன், இருந்தார்.

எங்கள் பிரச்சினையைச் சொன்னதும், பொறுமையாகக் கேட்டு விட்டு, ‘ஒரு எப்ஐஆர் போட்டுடலாம், ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுங்க. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடறேன்’ என்று சொல்லி விட்டு, தனது பைக்கில் வேறு ஒரு காவலரை ஏற்றிச் கொண்டு வெளியே சென்றார்.

வக்கீல் நண்பன் குமார் சொல்லச்சொல்ல, தட்டுத் தடுமாறி, கம்ப்ளெயிண்ட் எழுதி விட்டேன்.

சற்று நேரம் கழித்து வந்த, சப் இன்ஸ்பெக்டர், சந்திரனிடம், பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். பதில் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, சந்திரனுக்கு கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.

சீராப்பள்ளியிலிருந்து சொந்தக்கார அண்ணன், கோபி பேசினார். சந்திரன் தடுமாறியபடி என்னிடம் நீட்டினார். நான் கைபேசியை வாங்கி, ‘அண்ணா, சொல்லுங்கண்ணா’ என்றேன். கேட்டதும், எனக்கு காலடி நழுவி மயக்கம் வருவது போலிருந்தது.

நாமகிரிப்பேட்டை இன்றைய காலை தந்தி பேப்பரில் ஒரு விளம்பரம் வந்திருப்பதாகவும், படத்திலிப்பது, அம்மாவைப் போலவே இருக்கிறது என்றும், பாடி நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகப் போட்டிருக்கிறது என்றும் சொன்னார்.

சப் இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தைச் சொன்னோம். ‘பதட்டப் படாதீங்க. தந்தி பேப்பர் ஒண்ணு வாங்கிட்டு வாங்க. நான் அதுக்குள்ள விசாரிச்சு வைக்கிறேன்’ என்றார். சந்திரனை உட்கார வைத்து விட்டு, நானும் குமாரும் கடை கடையாக விசாரித்தோம். எங்குமே அண்ணன் குறிப்பிட்ட பேப்பர் எடிஷன் கிடைக்கவில்லை.

களைத்துப் போய், ஸ்டேசனுக்குத் திரும்பினோம்.  சந்திரன் அழுதபடியே இருக்க, சூர்யா தனது அறைக்கு வரச் சொன்னார்.

‘நாமக்கல் ஸ்டேசனுக்கு கால் பண்ணிப் பேசிட்டன். நீங்க சொன்ன அடையாளங்கள வைச்சுப் பாக்கும் போது, ஒங்க அம்மா மாதிரி தான் இருக்குது. தைரியமாகப் போங்க. ஏதாவது உதவி வேணுமின்னா, கால் பண்ணுங்க’ என்றார். இப்போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. கதறிக் கதறி அழுதவனை, குமார் ஆறுதல் படுத்தினான்.

அவரிடம் நன்றி சொல்லி விட்டு வெளியே வந்த போது, இந்த உலகமே சுற்றுவது போலிருந்தது. கைகால்கள் தன்னிச்சையாக நடுங்கின. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், பைத்தியம் பிடித்தது போல் நின்றிருந்தோம். ‘உடனே, வீட்டுக்குப் போயி, சுமோவ எடுத்துக் கிட்டுக் கெளம்பு. ஏதாவது உதவி வேணுமின்னா கால் பண்ணு. தைரியமாக இரு. நம்ம கையில எதுவும் இல்ல’ என்றான் குமார்.

அண்ணனை ரெடியாகி வரச்சொல்லி விட்டு, பஸ் ஏறி வீட்டுக்கு வந்து, மனைவியையும் அழைத்துக் கொண்டு, ஓட்டுனர் ஒருவரை ஏற்பாடு செய்து, அவசர அவசரமாகக் கிளம்பினோம்.

சேலத்தில் அண்ணனை வழியில் ஏற்றிக் கொண்டோம். அண்ணியும் வந்தார்கள்.

தம்பியிடம் வாட்ஸ்அப் காலில் அழைத்துச் சொல்லி விட்டேன்.

பித்து பிடித்தது போலிருந்தது. மனசெங்கும் அம்மாவின் நினைவு. வழியில் யாராவது வந்தால், அம்மாவாக இருக்கக் கூடாதா என ஏங்கினேன். மனசெல்லாம் நினைவலைகள்.

சென்னை நிகழ்வுக்குப் பிறகு, அம்மா எனது வீட்டில் தான் இருந்தார். அம்மாவுக்கு எப்போதும் அண்ணன் மீது பாசம் அதிகம். தினமும் போன் செய்யச்சொல்லி பேசுவார்.

மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொண்டதால், மார்புகளில் பெரிய கட்டிகள் தோன்றியது. நரம்பு டாக்டரிடம் கேட்டதற்கு, இது ஏதோ கேன்சர் மாதிரி இருக்கு, எதுக்கும் கோவை கந்தசாமி நாயுடு ஆஸ்பத்திரியில் காண்பித்தால் நல்லது என்றார். அம்மாவை அழைத்துக் கொண்டு நானும் அண்ணனும் சென்றோம். டெஸ்ட் செய்யும் போது, அம்மாவால் வலியைக் தாங்க முடியவில்லை. ’என்ன வுட்றுங்க’ என்று ஓடி வந்து விட்டார். ஒரு மாதிரி சமாதானம் செய்து மீண்டும் லேப்புக்குள் அனுப்பி வைப்பதற்குள் படாத பாடு.

வேறு ஒரு லேப்புக்குப் பரிந்துரை செய்தார்கள். அங்கும் இதே சித்ரவதை. மார்பில் ஊசியால் குத்தி சாம்பிள் எடுப்பது எவ்வளவு கொடுமை? பயாப்சி ரிசல்ட் வர ஒரு நாளைக்கு மேல் ஆகும் என்றும், அதுவரை தங்கி கவனிக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அண்ணன் கிளம்பி விட, நானும் மனைவியும் மருத்துவமனையில். இரண்டு நாட்களுக்குப் பின்னர், கொழுப்புக் கட்டிதான், பயப்பட வேண்டாம் என்று சொன்னதும் தான் உயிரே வந்தது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, அப்பா திருமணம் செய்து கொண்டார் எனவும், ஆபிசர் என்று சொல்லி விட்டு, காட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டார் என்றும் அப்பாவைத் திட்டுவார் அம்மா. ஆனால், எப்போதும் அப்பாவை விட்டுத் தர மாட்டார். அப்பா மீது அப்படியொரு பாசம்.

எங்களது பால்ய காலமெல்லாம், கோதமலை அடிவானத்தில் தான். தாத்தாவுக்கு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் கொடுக்கப்பட்ட மேட்டாங்காடு.

கூரை வேய்ந்த வீட்டில், தரையெல்லாம் செம்மண்ணால் பாவியது. குண்டும் குழியுமாக இருக்கும் தரையை சாணியால் மெழுகி மெழுகி அம்மாவிற்கு, கையெல்லாம் காயங்கள்.

தோட்டத்தை விற்கும் முன்னரே அப்பா மாரடைப்பால் இறந்து விட, அம்மா அண்ணன் வீட்டில் தங்கி இருந்தார்.

சிறு வயதில், அப்பா வீட்டுக்கு வரும் சத்தம் கேட்டதும் உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து கொள்வோம். இப்படித்தான் ஒரு முறை, ஆர்வக்கோளாறால், பல்பை எரிய வைக்கிறேன் என்று ஏதோ செய்யப்போக, சார்ட் சர்க்யூட் ஆகி, நெருப்புப் பிடித்து எரிய ஆரம்பித்தது. தண்ணீர் ஊற்றி எப்படியோ அணைத்து விட்டோம். அம்மா அப்பாவிடம் சொல்லாமல் எங்களைக் காப்பாற்றினார்.

நான் வெளிநாட்டில் வேலை செய்வதாகச் சொன்னதும், ‘எங்க வேணா வேல செய்யி. ஆனா ஒழுக்கமாக இரு’ என்று அனுப்பி வைத்தவர்.

பள்ளி செல்கையில் பெரும்பாலும் வீட்டு சாப்பாடு தான். அம்மாவுக்கு ஃபேவரைட் தக்காளி சாதம் தான். இல்லையெனில் தயிர் சாதம் தான் கிடைக்கும். அண்ணனுடன் அமர்ந்து, அவன் நண்பன் பாய் கொண்டு வரும் சப்பாத்தியைச் சாப்பிடுவோம்.

அம்மா எங்களை அடித்ததாக ஞாபகம் இல்லை. கோபம் வந்தால் திட்டுவதோடு சரி.

அம்மாவும் பாப்பாவும் படுக்கையில் படுத்தபடியே சிரித்தபடி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது.

அம்மா என்னை எப்போதும் கட்டையாக் கருப்பா, அவங்க ஆயா மாதிரியே என்பார்.

வண்டி நாமக்கல் அரசு மருத்துவமனையில் நுழைந்து, பிணவறைக்கு முன்னர் நின்றபோது, டக்கென்று நினைவிலிருந்து மீண்டேன்.

பிணவறைக் கண்காணிப்பாளரிடம் விவரம் தெரியப்படுத்தினேன். ’அந்த அம்மாவைப் பார்த்ததுமே, எனக்குத் தெரிஞ்சு போச்சு சார், பெரிய இடமுன்னு. இப்படி உட்டுட்டீங்களே சார்?’ என்றார். ’அந்தம்மாவுக்கு உடம்பு சரியில்லைங்க. நிறைய மாத்தர சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. ஏகப்பட்ட சைடு எபக்ட். நிறைய பிரச்சினை. வலி தாங்க முடியலிங்க அம்மாவால’ என்றேன்.

‘சரி ரெண்டு பேர் மட்டும் வாங்க’ என்றார்.

பிணவறையில் நுழைந்ததும், ஒரு நீண்ட டிராயரைத் திறந்தார்.

அங்கு நான் கண்ட காட்சி இந்த ஜென்மத்தில் என்னால் மறக்க முடியாது.

என் அம்மா, என் தெய்வம், ஆற்றுத் தண்ணீர் நிறையக் குடித்து, ஊதிப்போய், பிணமாகப் படுத்திருந்தார்.

‘ஐயோ, அம்மா’ என அலறியபடியே முகம் திருப்பி, சுவரில் சாய்ந்து, இதயமே வெடிக்கும் அளவுக்கு ’ஓ’வென வாய் விட்டு அழ ஆரம்பித்தேன்.

++

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *