1.
யாரோ!
தூக்கி வீசி விட்டார்களென்று
மணலிலேயே
நிலை கொள்ளாமல்
மீள்வதற்கான வழியைத்தேடி அசையும் கல்லிற்கும் நம்பிக்கையூட்டுகிறது
கொஞ்ச தூரம் உருட்டிச்செல்லும் நதி
2.
ஏமாற்றத்தின்
வலிகளை உணர்ந்த யாரும்
குளத்தினுள் கற்களை வீசுவதில்லை
வலியென்பது
எல்லா உயிர்க்கும் ஒன்றுதானே….
3.
திருமணமாகி
பத்தாண்டுகள் கழித்து
மகள் வயிற்றில்
புழு பூச்சி ஏதோவொன்று
தங்கியிருப்பதை அறிந்ததிலிருந்தே அம்மாவுக்கும் ஆசைதான்
அருகிலிருந்து
மகளைக் கவனித்துக்கொள்ள
என்ன செய்வது
வெளி நாட்டிலிருக்கும் மகன் அனுமதித்தால்தான்
அடுத்த தெருவைக்கூட எட்டிப்பார்க்க முடியும்
முதியோர் இல்லத்திலிருக்கும் அம்மாவால்….
4.
ஊருக்குள்
எங்கு எது நடந்தாலும்
வசந்தி அக்காவுக்கு அத்தனையும் அத்துபடி
கிழக்கு வீதியிலிருந்து
மேற்கு வீதிவரை
பால் விற்பனை செய்பவளிடம்
அங்கு என்ன நடந்ததென்று விசாரித்தால் போதும்
கதை கதையாய்
அளந்து விடுவாள்
ஊருக்குள் ஓட்டை வாய்ச்சி மைக்செட்
தினத்தந்தி யென்று
பெயர் வைத்து கேலிகள் செய்தாலும்
வெற்றிலை பாக்குக் கறை படிந்த பற்கள் தெரிய
சிரித்து அதையும்
கடந்து போகிறவளிடம்
யாராவது உனது கதை என்னவென்று கேட்டுவிட்டால்
விழி மதகை உடைத்து விடும்
அவளது கண்ணீர் கதை.
00

கோவை ஆனந்தன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகிலுள்ள குமாரபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1981 ஏப்ரல் 22 ல் பிறந்துள்ளார்,ஆரம்பகால கல்வியை அவரது கிராமத்திலும், கிணத்துக்கடவு அரசுப்பள்ளியிலும் பயின்றார், பிறகு கோவையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இயந்திரவியல் துறையில் தொழிற்கல்வி முடித்துள்ளார்.தற்போது தனியார் நிறுவனத்தில் பணியிலுள்ளார்.
ஆரம்பத்தில் வெகு சாதாரணமாக எழுத ஆரம்பித்தவர், 2003 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதைக்காக, கலாம் அவர்கள் அனுப்பிய பதில் கடிதம் பெரும் ஊக்கமாக அமைந்தததினால் பல்வேறு சிற்றிதழ்கள் மற்றும் அச்சுஇதழ்களில் (இளையவேர்கள், குடும்பநாவல் உட்பட) எழுதியவர், 2005 ஆம் ஆண்டில் பாக்யா வார இதழில் தொடர்ந்து ஓராண்டு காலம் பல்வேறு சிறுகதைகள் எழுதியுள்ளார்.
குமுதம், பாக்யா,மகாகவி,இனிய உதயம், கனவு, கொலுசு, கவிதை உறவு, புன்னகை,காற்றுவெளி,தமிழ்நெஞ்சம், ஹைக்கூ திண்ணை,தூண்டில் (ஹைக்கூ மாநாட்டு சிறப்பு மலர் 2024)தன்னம்பிக்கை, போன்ற அச்சு இதழ்களிலும்,
நடுகல்,புக்டே, கதவு,கவிச்சூரியன், பொற்றாமரை,அகரமுதல, தாய்த்தமிழ்,சுவாசம், நுட்பம், பதாகை, வாசகசாலை, வானவில், வான்மதி உட்பட இன்னும் பல மின்னிதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன,
சில கவிதைகளும், சிறுகதைகளும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

