நஞ்சினம்

அப்பூனைக்கு பெயரில்லை 

பால்திருடி எனும் பட்டமுண்டு

அன்று அது பூக்குவியலைப்

போல கிடந்தது

அதன் திறந்த வாயில் 

நஞ்சுநுரை பொங்கியிருந்தது 

முட்டியபடி தாய்பால் 

குடித்து முடித்த குட்டிகள் 

சாகாது விளையாடுகின்றன

அவளின் அசையா வாலோடு

வேறெந்த இனமும் 

நஞ்சை கலப்பதில்லை.

தொடர்பிழப்பு

ஜன்னலின் வெளியே

பச்சை குன்றின் மடியில் 

ஒற்றை வெள்ளை வீடு

தடங்களற்ற புல்வெளியில் 

காத்துக் கிடக்கிறது 

என்னைக் கண்டதும் 

அந்திச் செஞ்சூரியன் 

விளக்கணைக்க இறங்குகிறான்

அதற்குள் கயிற்றுக் கட்டிலில் 

படுத்து வானம் பார்க்க தொடங்கிவிட்டேன்

சங்கொலி கேட்டு 

காது வெடைக்கும்

தின்னை நாய்க்கு அஞ்சி 

மீண்டும் ஓட ஆரம்பித்தது ரயில்

அஞ்சும்படி ஏதுமில்லை 

சிறிய‌தொடர்பிழப்பு தான்

00

நான் கோவையைச் சேர்ந்தவன். இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறேன். எனது பள்ளிக் காலத்தில் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் தொடங்கியது. ஆனந்த விகடனில் சில கவிதைகளும், சிறுகதைகளும், சொல்வனம் மற்றும் வாசகசாலை இணையதளங்களில் சிறுகதையும் வெளியாகி இருக்கின்றன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *