கீர்த்திவாசன்

பறக்கத் துடிக்கும் பறவையின் உந்தலோடு அமர்ந்திருந்தார் வேளான் விஞ்ஞானி நாதன். அவர் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவரின் தலைமுடியில், வலப்புறமாக மட்டும் படர்ந்திருந்த நரை, அவருக்கு இன்னும் கம்பீரத்தை கொடுப்பதாக இருந்தது. மேஜையில் வைக்கப்பட்டிருந்த நான்குமுகச் சிங்கத்தின் அருகில் அவரது மூக்குகண்ணாடியைக் கழட்டிவைத்து, இன்னும் பார்வையைக் கூர்மையாக்கி நாதனிடம் சொன்னார்…

“ஈஸ் இட் க்லியர்… அண்ட் டோன்ட் ஃபர்கெட் வீ ஹேவ் ஃபிப்டி க்ரோர் பீப்புல்ஸ் டூ ஃபீட், யூ மே லீவ் நவ்.” என்று எதிரில் இருந்த அந்தப் பெண்மணி கூறியதும், பட்டென எழுந்து நன்றி சொல்லி கிளம்பினர் நாதனும், உணவுதுறை அமைச்சரும். அந்த பெரிய கதவைத் திறந்து பிரதமரின் அறையிலிருந்து வெளியே வந்த இருவரும், முகத்திலிருந்த வியர்வையை துடைத்து, நீர் அருந்தி ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது. ஏனென்றால் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தப் பெண்மணி இரும்பு பெண்மணி. அடுத்தாக காமராஜர் உள்ளே சென்றார், இம்முறை கொஞ்சம் தளர்ச்சியோடு. தேர்தல் முடிவு கணிப்புகளால் இருக்கலாம். கதவுகள் மூடிக்கொள்வதைப் பார்த்து திரும்புவதற்குள், நடக்க ஆரம்பித்துவிட்ட அமைச்சரை ஓடி பிடிக்க வேண்டியதாக இருந்தது நாதனுக்கு.

“சுதந்திரம் கிடைச்சு இருபது வருசமாகிடுச்சு, இன்னும் பஞ்சத்துலருந்து மீளமுடியல. தவழும் பருவத்துல பட்டினி கிடந்தா, குழந்த என்னவாகும் சொல்லுங்க, அப்படித்தான் நம்ம நாடு இருக்கு. மேடம் சொன்னத நல்லாக் கேட்டுகிட்டீங்களா, அந்த நெல்விதைகள் வழக்கத்தவிட இரண்டு மடங்கு மகசூல் கொடுக்கனும், அதுவும் உங்க லேப்ல கிடையாது, நிஜ வயல்ல நாதன், அப்போதான் மேற்கொண்டு எதாவது செய்ய முடியும்” என்றார் உணவுதுறை அமைச்சர்.

“நம்ம இன்ஸ்டியுட் வயல்கள் எல்லாம் வெள்ளம் வந்து நிறைஞ்சு நிக்குது, சவுத் ஸ்டேட்ல எதாவது டெஸ்ட் ஃபீல்ட் ஏற்பாடு பண்ண முடியுமா…”

 “இதப் பாருங்க நாதன், இங்க சூழ்நிலை இப்போ கொஞ்சம் சரியில்ல இல்ல, எலெக்ஷன் டைம் வேற. உங்களுக்கு தெரியுமிலில்லயா, பார்மர்ஸும் பெரிய இன்ட்ரெஸ்ட் காட்ட மாட்டங்கிறாங்க. எல்லாருமே பயப்படறாங்க. இப் யூ வான்ட் டு சேஞ்ச் தெம், ஷோ தெம்.”

“அப்போ எங்க சார் டெஸ்ட் பன்றது, எங்க வீட்லதா பண்ணனும்”

“ஓ தாரளமா… உங்க லேண்ட்ல பண்ணுங்க, நா அப்ரூவல் தரேன். பட் ஒன்னு நியாபகம் வெச்சுகோங்க நாதன், உங்க குட்டையர்கள் ரெண்டு மடங்கு வேலை செய்யனும்.”

நாதன் சுதாரிக்கும் முன் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட படிக்கட்டுகளில் இறங்கி அவசரமாக சென்றுவிட்டார் அமைச்சர். ஊரில் விவசாய நிலமுண்டு, ஆனால் நல்லமுத்து போல நல்ல விவசாயி கிடைக்க வேண்டுமே, இன்னும் அவர் ஊரைவிட்டுப் போகாமல் இருக்க வேண்டும். அவர் கால்கள் தன்னைப் போல வேகமெடுத்தன. பயணங்கள் நாதனுக்கு பழக்கப் பட்டவைதான், திருவனந்தபுரம், கோவை, டில்லி, இங்லாந்த், அமெரிக்கா என வேளான் அறிவியலுக்காக பல பயணங்களை செய்தவர் தான். இருப்பினும் காலச்சக்கரம் தன் சொந்த ஊரான கும்பகோணத்திற்கே கொண்டுசெல்வதை நினைத்து புன்னகைத்துக் கொண்டார். அதுவும் மீண்டும் நல்லமுத்துவிடமே, இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன், அவரை முதன்முதலில் சந்தித்த அந்த மறக்க முடியாத நாளை தன் நினைவுகளால் மீண்டும் உயிர்பித்தார்.

அப்போது நாடு சுதந்திரம் அடைய இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்தன. சமீபத்தில்தான் நாதன் திருவனந்தபுரத்தில் விலங்கியல் டிகிரி முடித்து கும்பகோணம் திரும்பியிருந்தார், அடுத்து கோவையில் மருத்துவம் படிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவரான தன் அப்பா இறந்தபோது நாதனுக்கு வயது பதினொன்று, இத்தனை காலம் அவரது சொத்துக்களை குடும்ப நண்பர் திருமலை மூலமாக நிர்வகித்து வந்தனர். மருத்துவம் படிக்கப் போகும்முன் நாதனுக்கு உரித்தான நிலங்களை, திருமலையுடன் புறப்பட்டு ஒருமுறை பார்த்துவிட்டு வர சொல்லியிருந்தார் அம்மா. தந்தை துவக்கிய மருத்துவமனயில் மகன் மருத்துவராக இருக்கவேண்டும் என்பதே தாயின் ஆசையாக இருந்தது. ஆனால் அன்று காலம் அவருக்கான வேறு பாதையை திறந்தது.

ஊரைத்தாண்டியதும் வரப்புகள் தென்பட ஆரம்பித்தன, மாசி மாதம் என்பதால் ஆற்றுக்கு பக்கத்தில் இருந்த கொஞ்ச வயல்களில் அறுவடை முடிந்திருந்தது.

“இதோ பாலம் வந்திட்டதே, இதிலிருந்து உங்க நிலம் ஆரம்பம் தம்பி…”

தரைப்பாலத்தின் கீழே லேசாக நீரோடிக் கொண்டிருந்தது. மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு தொடர்ந்தனர். போகப்போக பெரும்பாலான வயல்கள் காய்ந்து, ரேகைகள் ஓடி வெடித்திருந்தன.

“விவசாயம் கம்மி ஆயிட்டாமாறி தெரியறதே…” நாதன் கொஞ்சம் கவலையோடுக் கேட்டார்.

“விவசாயத்துல ஒன்னும் கெடைக்கலேனு, கொத்து வேலைக்கும், எஸ்டேட் கூலிக்கும், அங்கஇங்கனு பொழப்பத் தேடிப் போயிட்டாங்க, பாவம் அவங்களாலயும் எவ்வளவு காலம் தான் தாக்குப் பிடிக்க முடியும். மழையும் கொறஞ்சுட்டது, எங்கயாவது கடன வாங்கி பயிர் செஞ்சாலும், நெல்லுக்கு நோய் வந்து பாதி, காத்தடிச்சு சாயறது மீதினு, முக்கால்வாசி போயிடறது. எதோ கடைசியா நிக்கற கொஞ்ச நஞ்சத்த வெச்சு வாங்கின கடன கட்ட முடியுமா, இல்ல வயித்த கழுவ முடியுமா. நம்மாளுங்க கூட போய்ட்டாங்க, நல்லமுத்து ஒருத்தன் மட்டும் இருக்கான், வைராக்கியகாரன்.”

“அவர பாத்துட்டு போவோமா” பட்டென கேட்டார் நாதன்.

“அதுக்கென்ன பாத்துடுவோம் வாங்க, பக்கம் வந்தாச்சு” என்று நல்லமுத்துவின் வீட்டை நோக்கி சென்றனர்.

பள்ளி செல்லும் வயதில் அவரைப் பார்த்த நியாபகம், வரப்புகளில் விளையாடிய பால்யகால நினைவுகளை, கலைக்கும் படியாக அவர்களின் எதிரில் இரு மாட்டு வண்டிகள் வந்து, அவர்களை சாலையில் விட்டு ஒதுக்கிவிட்டு கடந்து சென்றது. அந்த இருவண்டிகள் நிறைத்து கட்டப்பட்ட மூட்டைகளின் மேல் இருவர் கம்புடன் உட்கார்ந்திருந்தனர், மூன்றாவது வண்டியில் அரைக்கால்சட்டை அணிந்த காவல் காரர்கள் இருவரும், மற்றொருவனும் இருந்தான்.

“உனக்கெல்லா நல்ல சாவு வருமா, உன் புள்ளகுட்டி வெளங்குமா…” எனக் கத்தினார் திருமலை.

அவன் எகத்தாளமாக, வாயில் அதக்கிருயிந்த வெற்றிலை எச்சிலை அவரை நோக்கித் துப்பிவிட்டு சென்றான்.

வண்டியை மீண்டும் பாதைக்கு திருப்பி, முனகியபடி கிளப்பினார் திருமலை. ரோட்டிலிருந்து நல்லமுத்துவின் வீடிருந்த பாதையில் வண்டியை இறக்கி வேகத்தைக் கூட்டினார். வரப்புகளின் மேற்கு ஒரத்தில், கிணற்றை ஒட்டியிருந்தது அவர் வீடு. சிறுவயதில் அந்த பெரிய கிணற்றில் அவர் ஏத்தம் கட்டி நீர் இறைப்பதைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும் நாதனுக்கு. அவர் கொஞ்சம் சாந்தமாகட்டும் என எண்ணிய நாதன், எதுவும் பேசக் கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து அவராகவே பேசினார்.

“வெளஞ்ச கொஞ்ச நஞ்சத்தையும் புடிங்கிட்டுப் போரானுக படுபாவிக, வெள்ளக்காரனுகள விட இவனுகதா மோசமானுவனுக, இன்னும் கொஞ்ச வருசத்துல சுதந்திரமே கெடச்சாலும், இவனுககிட்டயிருந்து ஜனங்கள காப்பாத்த முடியாது போல…”

“யார் இவங்க…”

“பெரியமனுசங்களோட கைத்தடி அவன், கஷ்ட காலத்துல பசிக்கு கம்பு வாங்குனது, சோளம் வாங்குனது, வாங்கின கடனுக்கு வட்டினு, அறுவடை முடிஞ்சதும் எல்லாத்தையும் அடிச்சு புடிங்கிட்டு போயிறானுக, இதுல வெள்ளக்காரனுகளுக்கு ஒரு பங்கு உண்டு”

“எல்லாத்தையும் புடுங்கிட்டா எப்படி வாழமுடியும் பாவம்…”

“நாம வாழ்ந்தா என்ன செத்தா அவனுக்கு என்ன, சில சமயம் கேப்பை வாங்கின கடனுக்காகனு விளையாடிட்டு இருந்த புள்ளைங்களக் கூடத் தூக்கிட்டுப் போயிருக்கானுக. என்ன செய்ய முடியும் சொல்லுங்க. அழுகத் தான் பாக்க முடியும்.” 

 வீட்டுக்குள் சென்றபோது நல்லமுத்துவும் அவரது மனைவியும் இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர். தங்க மூக்குத்தி, பித்தளைத் தூக்கு, இயச் சட்டி என்று அனைத்தையும் தின்று தீர்த்தப் பஞ்சம், பல்குத்துவதற்கென சுவற்றில் அறைந்த ஆணிகளை மட்டும் விட்டு வைத்திருந்தது. வீட்டில் பொருட்கள் இருந்த தடம் கூட இல்லை, ஒரு மண்பானையும், எரிந்து வெகு நாட்கள் ஆனதைப் போல, விறகுகள் இன்றி வெரும் கரிபடிந்த அடுப்பும் இருந்தது. முதலில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட நல்லமுத்துவின் மனைவி தங்கம்மாள், தலை தொங்கி அமர்ந்திருந்த நல்லமுத்துவை உசுப்பினாள். முதலில் எதோ கடங்காரர்கள் தான் என்று பதறி எழுந்து, பின் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் வைத்தார்.

“இந்த வருசமும் வந்து புடுங்கிட்டுப் போய்டானுவளா, பாப்போம் இன்னும் எத்தன வருசத்துக்கு புடிங்கித் திம்பானுகத் …” வந்த கெட்டவார்த்தையை நாதன் இருப்பதால் மென்று விழுங்கினார் திருமலை.

“என்ன ஆச்சு…” நாதன் கேட்டார்.

     நல்லமுத்துவின் கும்பிட்ட கைகள் இப்போது இறுகப் பின்னிக் கொண்டன, “எல்லாம் வயித்துக்கு வாங்குன கடன்தானுங்க அய்யா. நாங்க என்ன, தெனம் ரெண்டு வேள சோறா சாப்புடறோம்,  மொத்தமா சேத்தாக்கூட எட்டுப் படி கேப்ப, பன்னென்டு படி சோளமுங்க, அப்பறம் ஆள்கூலி கொடுக்க வாங்குன பத்து ரூவா, அம்புட்டுதானுங்க. இந்த வட்டமாச்சு கடன முடிச்சுரனும்னு, கஞ்சி கூட குடிக்காம வெள்ளாம வெச்சு உழச்சுமுங்க, கடைசிநேரத்துல பாதிய, காத்து வந்து சாச்சிபோடுச்சுங்கய்யா…” அவர் சொல்லி முடிக்கையில் தங்கம்மாளும் சேர்ந்து அழுதாள்.

“சரியா அறுவட முடிச்சதும் ஆளுங்கள கூட்டிட்டு வந்து, ஒரு நெல்லுமணி வுடாம, இருக்குற கொஞ்சத்தையும் அள்ளிட்டுப் போயிரானுகத் தம்பி” அங்கலாய்த்துச் சொன்னார் திருமலை.

 எதோ நினைவுக்கு வந்ததைப்போல, நல்லமுத்து வெளியே எட்டிப்பார்த்து, வேறு யாருமில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு கிணற்று பக்கம் ஓடினார். அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட தங்கம்மாள், கொட்டகையில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து, கிணற்றில் நீர் சேந்தும் கமலையில் பூட்டினாள். நல்லமுத்து மீண்டும் ஒருமுறை சுற்றியும் பார்த்துவிட்டு. மாடுகளை ஓட்டியதும், வடக்கயிற்றோடுக் கட்டப்பட்டிருந்த தோல்பரி மேலே வந்தது. வால்கயிற்றை இழுத்ததும், ஒரு குட்டையான ஒரு மூட்டை வந்து விழுந்தது. அதை நாதனின் அருகில் போட்டுவிட்டு நல்லமுத்து சொன்னார்…

“குட்டையா இருக்கப்போய் தப்பிச்சுது, நாலஞ்சு வருசம உங்களுக்கு எதுவும் கொடுக்க முடியல, மனசுக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு, இதையாவது மறுக்காம ஏத்துக்கோனும்.”

நாதனின் மனம் கனத்துப் போய்விட்டது, இருக்கும் ஒரு குறைமூட்டை நெல்லைக்கூட தந்துவிடத் தயாராக இருக்கும் இவருக்கு என்ன பதிலாய் சொல்வது என அப்போது அவருக்கு விளங்கவில்லை. அதை அவர்களிடமே விட்டுவிட்டு, இருவரும் அங்கிருந்து கிளம்பினர். மாலை சூரியன் மெல்ல சாய்ந்து கொண்டிருந்தது. இருவரும் நெடுநேரமாக பேசிக்கொள்ளவில்லை. நாதன் எதிலோ மூழ்கிப்போனவர் போல கிடந்தார். திருமலை அவரிடம் பேச எண்ணி…

“ஊருக்கே சாமிசோறு போடுர வம்சம் தம்பி‌அவுங்க, நெலமயப் பாருங்க. ஆனா ஒன்னு, உங்க அப்பாவோட நல்ல மனசு அப்படியே, உங்க கிட்டயும் இருக்குத் தம்பி.” என்றார்.

     அவர் பக்கம் திரும்பிய நாதன், “வங்காளப் பஞ்சம் பத்தி கேள்விப் பட்டிருக்கிறீங்களா…” என்றார்.

     “அது தான் பத்திரிக்கைலே வருதே, லட்சக் கணக்குல பசில மக்கள் செத்துகிட்டுருக்காங்கனு…” 

     “குழந்தைகள் எலும்பும் தோலுமா ரோட்டுல கெடக்குறாங்க, பிரிட்டிசார் போடுற அரை படி புளுத்துப் போன அரிசிக்காக நாள்கணக்குல வரிசைல காத்துக் கெடக்குறாங்க, பத்திரிக்கைல அந்த படங்களையெல்லாம் பாத்துட்டு பல நாள் தூங்காம முடியாம இருந்திருக்கேன்…” மிரட்சியோடு சொன்னார் நாதன்.

     “எவ்வளவு மோசமாகிடுச்சுப் பாத்தீங்களா, எப்படியும் இன்னும் ரெண்டு மூனு வருசத்துல சுதந்திரம் கொடுத்துத் தான் தீரனும், ஆனா அதுக்கப்புறம் நாடு முழுக்க இதே நெலம தான் இருக்கும். நிறைஞ்ச சட்டிய சொரண்டி திண்ணுட்டு, தூக்கிப் போட்டு ஒடச்சிட்டுப் போரது மாதிரி, நாட்ட விட்டுப் போகப் போரானுக…”

     “இதிலிருந்து மீண்டு வர முடியும்னு நெனைக்கரீங்களா…”

     கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்ட திருமலை “ஒருகாலத்தில ஊர் முழுக்க கொசுத் தொல்லையால, யானக்கால் வியாதி பெருகி அவதிப் பட்டுப்போச்சு. உங்க அப்பா தான் அப்போ முனிசிபல்ல பொறுப்பில இருந்தார், ஊர்ல இருந்த பள்ளிக்கூடத்திலேயெல்லாம் பேசி, அவங்க உதவியோடு ஓய்வில்லாம உழைச்சு, நம்ம ஊர்ல கொசுவ ஒழிச்சு, நோய்கிட்டயிருந்து ஜனங்கள காப்பாத்தினார். இதிலேர்ந்து தப்பிக்கவே முடியாதானு எல்லாரும் பயந்து கெடந்தப்போ, டாக்டரய்யா அதிலேர்ந்து காப்பாத்தினார். அவர் மாதிரி இதுக்குனு ஒருத்தர் வராமயா போயிருவாங்க… என நாதனைப் பார்த்து வருத்தத்தோடு புன்னகைத்தார்.

     வீட்டுக்குச் சென்று, சாப்பிடாமல் படுத்துக்கொண்டார் நாதன். அம்மா எழுப்பியும் எழவில்லை, தூங்கினால் சரியாகிவிடும் என அம்மாவும் விட்டுவிட்டார். வெறுமனே கட்டிலில் படுத்து கிடந்த அவரை, பத்திரிக்கைகளில் கண்ட வங்கப் பஞ்சத்தின் காட்சிகள் தூங்க விடவில்லை. இன்னும் சில வருடங்களில் அதேபோலத் தானே இந்தியத் தெருக்களிலும் குழந்தைகள் எலும்பும் தோலுமாய் செத்து கிடக்கும், ஒருபிடி சோற்றுக்கு நாட்கணக்கில் மக்கள் காத்துகிடப்பார்கள் என்ற சிந்தனைகள் அவரின் வயிற்றிலிருந்த பசியை இதயதிற்கு கடத்தின. “தனிஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என காதுக்குள் கேட்டுக் கொண்டேருந்தது. சிலமணி நேரங்கள் கழித்து விழித்தபோது நடுநிசியாகி விட்டிருந்தது. அடுப்பங்கரைக்குச் சென்று ஒரு வாழைப் பழத்தை விழுங்கி நீர் அருந்திவிட்டு வந்தார். சாப்பிட எதயாவது வைத்துக் கொண்டு, விரதம் போல பாவித்த ஒருவேளை பட்டினியைக் கூட தாங்க முடியவில்லை, நாட்கணக்கில் எதுவுமின்றி தவிக்கும் பட்டினி எவ்வளவு கொடுமையானது.

        பூட்டியிருந்த தன் அப்பாவின் அறைக்குள் சென்ற நாதன், அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தார், பெரும்பாலும் காந்தியைப் பற்றியது, புத்தங்களுக்கு நடுவில் தந்தையின் குறிப்பேடு ஒன்று இருந்தது. அதில், அந்நிய துணி எதிர்ப்பு, அரிஜன கோவில் பிரவேசம் போன்றவற்றில் அவரின் பங்கெடுப்புகள் பற்றிய குறிப்புகளும், அவ்வப்போது பத்திரிக்கைகளில் வந்திருந்த காந்தியடிகளின் சொற்பொழிவுகளை வெட்டியெடுத்தும் பத்திரப் படுத்தியிருந்தார். அருகிலிருந்த தந்தையின் மரநாற்காலியில் அமர்ந்து புரட்ட ஆரம்பித்தார். ஒரு பக்கத்தில் காந்தியடிகள் இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் ஆற்றிய உரையிருந்தது. அதில் அடிக்கோடிடப் பட்டிருந்த அந்த வார்த்தைகள், பசியையும் உணவையும் பற்றியது. அதைப் படித்து முடித்த கணத்தில் நாதன் ஒரு முடிவு செய்தார். அவர் மருத்துவராகப் போவதில்லை.

     தன்னை ஒரு மருத்துவராக பார்க்க ஆசைப்பட்ட அம்மாவை ஒருவழியாக சமாதானம் செய்து, கோவையில் வேளாண் அறிவியல் படிக்க கிளம்பினார் நாதன். வழியனுப்ப வந்த திருமலையிடம், நல்லமுத்துவுக்கு அவ்வப்போது உதவி செய்யும்படியும், அவர்கள் ஊரை விட்டு போகாதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டு, ஒரு மாபெறும் பயணத்துக்கான முதல் அடியை எடுத்துவைத்து கிளம்பினார். நாதன் சொல்லி சென்றதைப்போல, திருமலையும் அவ்வப்போது அவர்களுக்கு உதவி செய்துவிட்டு, பேசிவிட்டு வருவார். வருடங்கள் செல்ல செல்ல பஞ்சத்தின் பிடி இருகிக்கொண்டே சென்றது. சுதந்திரம் கிடைத்து இருபது ஆண்டுகளாகியும் பஞ்சம் மட்டும் தீர்வதாயில்லை. எப்போதும் போல நல்லமுத்துவை பார்க்க வந்தார் திருமலை, கொண்டு வந்திருந்த கேப்பையை கொடுத்துவிட்டு,

     “இந்த வட்டமும் வெள்ளாம இல்ல போலியே…” என்றார்.

     “ஆமாங்க அய்யா என்னத்த சொல்ல, உசிரு பொழச்சு கெடக்கோம் அவ்ளோதானுங்க”

     “அரிசியே கண்ணுல காணமாட்டேங்கிது தெரியுமா நல்லமுத்து, எனக்கும் இதே கேப்ப கஞ்சிதான்…”

     “சின்னய்யா ஊருக்கு வந்தாருங்களா…” பஞ்சப்பாட்டை திசைதிருப்பினாள் தங்கம்மாள்.

     “அவருக்கு அமெரிக்காவுல வேல கெடச்சிட்டதாம், என்ன முழிக்கிர, அதான் கோதுமைய கையேந்தி வாங்கி கப்பல்ல கட்டி கொண்டாரமே அந்த நாடுதான்”

     “அவரு அங்கனயே சௌரியமா இருக்கட்டும், என்ன சொல்ரீக… இங்க வந்து நம்ம கூட நொக்குபடனும்னு என்ன அவருக்கு விதியா”

     “அதுவும் சரிதா, நாட்டுல முக்காவாசி பேரு விவசாயந்தா பாக்குரோம், ஆனா சோத்துக்கு வேத்துநாட்டுக்கிட்ட இரந்த வேண்டியதா இருக்கு” ஆற்றாமையில் கைத்தடியை தரையில் குத்தினார் திருமலை.

“அய்யா, நம்ம சிவங்கோவில் பண்டிகையில ராட்டனம் பாத்துருப்பீகளே, அதுபோல தான் எங்க பொழப்பும், நாள்பூரா சுத்துனாலும் ஒருஅடி நகராது”

“நல்லா சொன்ன போ…” என கிளம்பினார் திருமலை. 

     அமெரிக்காவில் உயிரணு மரபியல் பயின்ற நாதனுக்கு, அங்கேயே  விஞ்ஞானியாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. காந்தியையும், பாரதியையும் படித்த ஒருவரால் தாய்நாட்டை புறந்தள்ள முடியுமா என்ன. தாய்நாடு திரும்பிய நாதனுக்கு, தானிய உற்பத்தியை பெருக்கி, மக்களின் பசியைப் போக்கும் பெறும்பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதற்காக சர்வதேச அரிசி ஆய்வு நிறுவனத்தில் உருவான, அதிக விளைச்சல் தரும் புதியரக நெல்விதைகளை களச்சோதனை செய்ய இறுதியாக அங்கு வந்து சேர்ந்தார் நாதன்.

     எதையோ கூடைக்குள் அடைத்துக் கொண்டிருந்த நல்லமுத்துவும் அவர் மனைவியும், வந்துகொண்டிருந்த வெள்ளை நிற காரைக் கண்டு பயந்து வீட்டிற்குள் ஓடினர், அவர்களிடத்திற்கு கார் வருவது இதுவே முதல்முறை. திருமலையின் குரல் கேட்டு தான் வெளியே வந்தார் நல்லமுத்து.

“யார்னு தெரியுதா நல்லா…” நாதனைக் காட்டி கேட்டார் திருமலை.

முழுக்கை சட்டையும், மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்த நாற்பது வயது நாதனை, கண்களை சுருக்கிப் பார்த்து, அவரின் சிரிப்பை வைத்தே அடையாளம் கண்டுகொண்டார் நல்லமுத்து. சட்டென பரவிய ஆச்சரியத்தோடு வாங்க அய்யா என்று கும்பிட்டார்.

“எனக்கு ஒரு உபகாரம் பண்ணனுமே, செய்வீங்களா…” எனக் கேட்டார் நாதன்.

“ஐயா என்ன இப்படி கேட்டுடீங்க, என்ன செய்யனும்னு சொல்லுங்க, செய்ய வேண்டியது எங்கடமைங்கய்யா…”

அவரை திண்ணையில் இருத்தி, “நா ஒங்களுக்கு புதுரக விதைநெல் தரேன், அத நல்லபடியா விளைவிச்சுத் தரனும், முடியுமா…” என்றார் நாதன்.

கொஞ்சம் யோசித்த நல்லமுத்து காய்ந்து கிடந்த நிலத்தைப் பார்த்துவிட்டு, “அய்யா ஒங்களுக்கு செய்யாம வேராருக்குங்க செய்யப் போரேன், நல்லமழ பொழிஞ்சு நாலஞ்சு வருமாச்சுதுங்க, மாடுக பட்டினில கெடக்கரத தாங்கமாட்டாம அதுகளையும் தந்துட்டங்க, எப்படியோ மாடு வாங்கி, உழுது வெள்ளாம செஞ்சாலும், பூச்சித் தொல்ல, நோவுனு போயி, அறுத்துக் கணக்குப் பாத்தா, மீண்டுங் கடன்லதான் முடியுங்க அதான் ஓசிக்கரன்…”

“எல்லா நான் ஏற்பாடு பன்றேன், உரம், மருந்து கூட கொடுத்து அனுப்பறேன் நீங்க நம்பிக்கையோடு பண்ணுங்க, இந்த அறுவடைல உங்க எல்லா கடனும் அடைஞ்சிரும்…” என்றார் நாதன்.

நல்லமுத்து நெளிந்தபடி சொன்னார், “எல்லாமே காசு கொடுத்து வாங்கிரலாமுங்க அய்யா, தண்ணிக்கு என்னங்கய்யா பண்றது, ஆத்துலயும் தண்ணி போகல, கேணிலயும் இரைக்க முடியாத ஆழத்துலதான் தண்ணி கெடக்குது…”

திருமலை பட்டென எழுந்து, “அந்த கவலைய வுடு, கோயமுத்தூர்ல எனக்கு தெரிஞ்ச மோட்டார் கம்பெனி இருக்குது, வந்து பாக்க சொல்லி நல்ல பம்பு செட்டா மாட்டிருவோம்…”

அரைகுறை நம்பிக்கையோடு எழுந்த நல்லமுத்துவின் கரம் பற்றி “நீங்க ஜெயிக்கறதப் பாத்துதான் நாட்டுக்கே நம்பிக்கை வரப்போகுது, பசிக்கு எலிக்கரி சாப்பிடற கொடுமை இதோட ஒழியட்டும், வர தலைமுறைகள் மூனுவேல வயிராற சோறு சாப்பிடட்டும், என்ன சொல்றீங்க…”

“செஞ்சிடலாங்க அய்யா” என்று நல்லமுத்து தீர்க்கமாக சொல்வதைக் கண்ட தங்கம்மாள், கூடையை முட்டிகொண்டிருந்த எலிகளை திறந்து விட்டாள்.

 வேப்பமரத்தின் அடியில் இருந்த சாமிசிலைமுன், கோடாரி, அரிவாள், புது மாடுகள், கழுவிய ஏர் என அனைத்திற்கும் பொட்டுவைத்து, கண்மூடி நின்ற நல்லமுத்து, மரத்திலிருந்த பட்சிகள் சிதறி பறக்கும்படி, உரத்த குரலெடுத்து கத்தினார்…

“எங்குலங்காத்த முப்பிடாரித் தாயீ… என் வெள்ளாமைக்குத் தொணநில்லுத் தாயீ… என் நெலநெறஞ்சா… உன் மனநெறய… புத்தரிசிப் பொங்கல் வெச்சு, ஊரக்கூட்டி சாமிசோறு போடுரேன் தாயீ.” சொத்தென திருநீரில் அடித்து பட்டையிட்டுக் கொண்டார். தங்கம்மாளுக்கு பயமாக இருந்தது, கடைசியாக பாட்டனார் காலத்தில் விளைச்சல் செழுமையாக இருந்தபோது, ஊருக்குச் சாமிசோறு போட்டது, இந்த பஞ்சகாலத்தில் முடியுமா.  பெரிய நம்பிக்கையின்றி வயலில் இறங்கினாள். நாட்கள் செல்ல செல்ல, வயல்களில் கொஞ்சம் கொஞ்சமாய் பசுமை ஏறியது, நெற்பயிர்கள் கொத்துகொத்தாய் பூப்பிட்டித்து ஆடின. ஆனால் வழக்கத்தைவிட குட்டையாக இருந்ததால், ஊர்மக்களுக்கு சந்தேகம் இருந்துகொண்டுதானிருந்தது. ஒருநாள் இரவில் திடீரென நல்ல காற்றடித்துப் போனது, பயிர்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டது என்றே எண்ணியிருந்தார் நல்லமுத்து. விடிந்து லேசாக வெளிச்சம் பரவியபோது, பதறியடித்து வந்த அவருக்கு முன்னமே, ஊர்மக்கள் சிலர் அங்கிருந்தனர். மேட்டில் ஏறி பார்த்த அவர் வாயடைத்து நின்றார். வயல் முழுவதும் நெற்பயிர்கள் வனப்பாக ஆடிக்கொண்டிருந்தன. ஒருபயிர் கூட சாயவில்லை, குட்டையாக இருந்ததால் தப்பித்துக் கொண்டன. அவநம்பிக்கையில் இருந்த ஊர்மக்களின் நெஞ்சில் கூட உரமேறியது. பெரிய சேதாரம் ஏதுமின்றி அறுப்பு முடிந்தது. மூட்டைகளாய் கட்டியபின், தன் கொட்டகை போதாமல், ஓரே இடத்தில் அடுக்கினால், கணக்குப் பார்க்க தோதாக இருக்குமென இடம் தேடினார் நல்லமுத்து. மழைவரக்கூடும் என்பதால் கூரையோடு இருந்தால் இன்னும் நல்லது என எண்ணிய திருமலை, பெரிய மனிதர்களிடம் பேசி ஒரு இடத்தை பிடித்தார்.

நாதன் டில்லியிலிருந்து வந்ததிலிருந்து திருமலையைக் கேட்டுக்கொண்ருந்தார், “விளைச்சல் எப்படி, வழக்கத்தவிட ரெண்டு மடங்கு இருக்குமா, மேடம் கிட்ட பதில் சொல்லனும் திருமலை” எனத் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். அவரை காரில் ஏற்றிக் கொண்டு பாக்கத்தானேப் போறீங்க வாங்க போலாம் என அழைத்து சென்றார். கார் ஒரு சினிமா தியேட்டரின் முன் நின்றது, கண் கண்ட தெய்வம் என்ற படத்தின் போஸ்டர், தட்டியில் ஒட்டப்பட்டிருந்தது, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

“இப்போ எதுக்கு இங்க, கூட்டம் அதிகமா இருக்கே, யார் படம் ஓடுது…” என்றார் நாதன்.

“உங்க படம் தான்…” என்று சிரித்தார் திருமலை.

கதவினைத் திறந்து தியேட்டரின் உள்ளே சென்றபோது ஒரு கணம் உறைந்து நின்றார் நாதன். ஆள் நடப்பதற்கு வழி விடப்பட்டு, முழுக்க நெல் மூட்டைகள் நிறைக்கப் பட்டிருந்தது. தலைக்கு மேல் சுவர் போல அடுக்கப் பட்டிருந்த மூட்டைகளின் இடைவெளியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். மக்கள் எறும்புகளைப் போல, சுற்றி வந்து கொண்டிருந்தனர். நெல்மூட்டைகளை தொடும் அவர்களின் கண்களில், யானையைத் தொடும் ஆச்சரியம் மிளிர்ந்தது, கூடவே நம்பிக்கையும். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாதனின் கண்களில் நீர் கோர்த்தது.

“கண்டிப்பா ரெண்டு மடங்கு இருக்குமில்லயா…” என்றார்.

திருமலை புன்னகைத்தபடி நான்கு விரல்களைக் காட்டினார்.

பட்டென சுற்றிலும் முற்றிலும் “எங்க நல்லமுத்து” என தேடினார்.

வாங்க போகலாம் என அவரை அழைத்து சென்றார் திருமலை. போகும் வழியில் நாதனால் எதுவும் பேச முடியவில்லை, உழைப்புக்கு பலன் கிடைத்தவிட்டதை எண்ணி அவரின் மனம் பொங்கிக் கொண்டிருந்தது. அவரின் காருக்கு முன்னும் பின்னும், மாட்டு வண்டிகளில் மக்கள் திருவிழாவைப் போல சென்று கொண்டிருந்தனர். எல்லோரின் வண்டியும் நல்லமுத்துவின் வீட்டில் தான் நின்றது. காரைக் கண்டு ஓடிவந்த நல்லமுத்து, இருவரையும் வரவேற்று அழைத்துச் சென்றார். வீட்டின் மறுபுறம் பந்தல் அமைக்கப்பட்டு விருந்து போய்க்கொண்டிருந்தது. தயக்கத்தோடு “சைவந்தானுங்க, சாப்புடறீங்களா” என கேட்ட நல்லமுத்துவை தன்னோடு அமர்த்திக் கொண்டார் நாதன். பெரிய கூடையில் வடித்த சோற்றை ஆவி பறக்க எடுத்து வந்து பரிமாறினர். பந்தியில் அமர்ந்திருந்த அனைவரின் முகத்திலும் புதிதாக ஓர் உற்சாகம், அது தன்பசி தீரும் என்ற அர்ப்ப காரணத்தினாலல்ல, அடுத்த தலைமுறைகள் பசியின்றி வாழுமென்ற நம்பிக்கையினால். “இப்படியிருந்தா வருசம் ரெண்டு வெள்ளமாக் கூடப் பாக்கலாமே” எனப்பேசி ஆச்சரியப் பட்டுக் கொண்டனர். நல்லமுத்துவும் திருமலையும், காத்திருந்ததை கவனித்த நாதன், சாப்பிடுமாறு சொல்லி ஒரு வாய் சாப்பிட்டார். நல்லமுத்து கம்மிய குரலில் கேட்டார்,

“அய்யா இப்போ எங்கடனெல்லா தீந்திருக்குந் தானே…” 

“அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு, நீங்க இல்லாம இதெல்லாம் வந்திருக்குமா, இது உங்க உழைப்பு, மொதல்ல சாப்பிடுங்க…” என்றார் நாதன்.

“நெனவு தெரிஞ்சதிலிருந்து உழச்சிட்டு தானுங்க இருக்கே, இப்படி ஊருக்கே சாமிசோறுபோட்டு, உக்காந்து சாப்புடரது இது தான் மொதோமொறை…” என கையெடுத்து கும்பிட்டுவிட்டு, இலையில் இருந்த சோற்றைத் தொட்டு, நீர்வழியும் கண்களில் ஒற்றிக் கொண்டார் நல்லமுத்து.

இதைக் கண்ட சுவாமிநாதனுக்கு என்றொ ஓர் உறக்கம் தொலைத்த இரவினில் தன் தந்தையின் குறிப்புகளில் படித்த, அடிக்கோடிடப்பட்டிருந்த காந்தியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன, “பசியோடு இருப்பவர்களுக்கு, அவர்கள் மண்ணிலிருந்து கிடைக்கும் சோறுதான் கடவுள்”.

00

கீர்த்திவாசன்

நான் கோவையைச் சேர்ந்தவன். இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறேன். எனது பள்ளிக் காலத்தில் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் தொடங்கியது. ஆனந்த விகடனில் சில கவிதைகளும், சிறுகதைகளும், சொல்வனம் மற்றும் வாசகசாலை இணையதளங்களில் சிறுகதையும் வெளியாகி இருக்கின்றன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *