மாதம் ஒரு மலேசிய புத்தகம்-19

‘ஆறாவது பேரவைக் கதைகள் சொல்வது என்ன?’

-தயாஜி

பழைய கதைகள் என்பதற்கும் மூத்த எழுத்தாளர்களின் கதைகள் என்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அது என்னவென்று தெரியுமா? எழுதப்பட்ட அந்தப் படைப்புகள் காலம் தாண்டியும் அதற்கான வாசகர்களை உருவாக்கி கொண்டால் அது மூத்த எழுத்தாளர்களின் கதைகள் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் அதற்கான வாசகர்களை அப்படைப்புகள் கொண்டிருக்கவில்லை என்றால் அவை பழைய கதைகள் என்கிற பட்டியலுக்கும் நுழைந்துவிடும். இப்போது நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.

பிறகு எந்த வாசகராவது அந்தக் கதையில் இருக்கும் இன்னொரு கோணத்தை தன் வாசிப்பின் வழி கண்டறிந்தால் அந்தப் படைப்பு மூத்த எழுத்தாளரின் படைப்பு என்கிற பட்டியலில் நுழைந்துவிடும்.

ஆக ஒரு படைப்பு எழுதப்படுவதைவிட வாசிக்கப்படுவதுதான் அந்தப் படைப்பின் தகுதியையோ அதற்கான அடையாளத்தையோ அடைய காரணமாக இருக்கிறது எனலாம். அதே சமயம் அப்படியொரு படைப்பை தேர்ந்த எழுத்தாளர்களால் இயல்பாக கொடுக்க முடிகின்றது.

அதே சமயம் வழும் காலத்தில் அதிகம் புகழப்பட்ட வாசிக்கப்பட்ட எழுத்துகள் அந்தப் படைப்பாளி மறைந்த கொஞ்ச காலத்திலேயே அதன் வாசகர்களை இழந்து நிற்கும்படியும் ஆகிறது. பெரும்பாலும் குழு மனப்பான்மையில் தனது படைப்புகளை தனது குழுவினரால் வெளிச்சத்திலேயே வைத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு நடக்கிறது.

ஒரு போட்டி வைக்கிறார்கள். சிறுகதை எழுதும் போட்டி. பலரும் கலந்து கொண்டு எழுதுகிறார்கள். அதில் சிலருக்கு முதல் மூன்று நிலைகளின் பரிசுகள் கிடைக்கின்றன. சட்டென ஓரளவிற்கு கவனம் ஈர்க்கிறார்கள். கலந்து கொண்ட சிலரின் கதைகள் ஆறுதல் பரிசுகள் பெறுகின்றன. பின் அனைத்து கதைகளையும் ஒரு புத்தகமாக வெளியிடுகிறார்கள்.

சில ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வாசகன் அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். முதல் மூன்று கதைகளுமே அந்த வாசகனைக் கவரவில்லை. மாறாக ஆறுதல் பரிசு பெற்ற சில கதைகளை அந்த வாசகனுக்கு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுகின்றது. அச்சிறுகதைகளில் வழி புதிய திறப்புகளையும் அந்த வாசகன் கண்டடைகின்றான். இப்போது அந்த ஆறுதல் பரிசுகள் பெற்ற கதைகள் பலராலும் மீள்வாசிப்பு செய்யப்பட்டு மூத்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் என்கிற இடத்தை அடைகிறது. முதல் மூன்று நிலை பரிசுகள் பெற்ற சிறுகதைகள் பழைய கதைகள் என்கிற இடத்திற்கு தள்ளப்படுகின்றன.

இதற்கு இன்னொரு காரணத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. போட்டிகளில் தெர்வு செய்யப்படும் கதைகள் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். அவர்கள் விதிக்கும் கட்டுப்பாட்டுக்குள் அந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதோடு அதனை தேர்வு செய்த நீதிபதிகளின் வாசிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இன்னொரு சுவாரஸ்சியமான சம்பவத்தைச் சொல்கிறேன். சமீபத்தில் சிறுகதைப் போட்டிகளுக்கு நீதிபதியாக இருந்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியொன்றில் அவர் நீதிபதியாக இருந்து தேர்வு செய்த சிறுகதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்ததும் அந்தப் போட்டிக்கு கதை எழுதிய சிலர் அவரிடம் தங்களின் சிறுகதைகள் குறித்து கேட்டார்கள். அவரும் ஓரளவிற்கு நினைவில் இருப்பதைச் சொல்கிறார் என தெரிந்தது. இளைஞர்களில் ஒருவன் ‘எந்த மாதிரி சிறுகதைகளை வாசிக்க வேண்டும் ஐயா..?” என பணிவாக கேட்கிறார். “அதான் நாளிதழ்களில் வருதே… ஞாயிறு மலர் சிறுகதைகளை வாசிச்சாலே போதும்… அப்பறம் எல்லாம் சரியாகிடும்” என்றார். அதற்கு அந்த இளைஞனோ “அதான் ஐயா வாசிக்கிறோம்…” என்றபடி அடுத்தவருக்கு வழி விட்டான்.

பிறகு அவருடன்  தேநீர் அருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் மற்ற கதைகளைப் பேசியபடியே, சமீபத்தில் அவர் எழுதிய சிறுகதையை வாசிக்க கேட்டேன். அதற்கு அவர் கொடுத்த பதில் இருக்கிறதே… அபாரமான பதில்.

“இல்ல தயாஜி… நான் எழுதியே வருச கணக்காச்சி… இப்போ எல்லாமே மாறியிருக்கு…. எழுத உட்கார்ந்தாலே கஷ்டமா இருக்கு….”

எனக்கும் உங்களைப் போலவே அதிர்ச்சிதான். முகத்தில் காட்டாது. சமீபத்தில் அவர் வாசித்த சிறுகதைகளைப் பற்றி கேட்டேன்.

“எந்தக் கதையைப் படிச்சாலும் மனசுல ஒட்ட மாட்டுது… ஆளுக்கு ஒரு மாதிரி எழுதிட்டு அதுதான் கதைன்றாங்க.. அதுவும் நேரம்னு ஒன்னு இருக்கனுமே வாசிச்சி வைக்க…” என்றவர் ஏனோ சிரித்தார்.

என்ன செய்வது நீதிபதியின் தீர்ப்பை நினைத்து நானுமே சிரித்தேன்.

யாரை நீதிபதிகளாக அழைக்கலாம் என்பதில் நான் மூக்கைன் நுழைக்க மாட்டேன். ஆனால் புதியவன் ஒருவன் என்ன வாசிக்க வேண்டும் என கேட்பதற்கு சரியான பாதையைக் காட்டி வாசிக்க வேண்டிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்ய வேண்டிய ஒருவராக அந்த நீதிபதி இருக்க வேண்டாம என அழைக்கின்றவர்கள் முடிவெடுத்து கொள்ளட்டும்.

இந்த மாத தொடரில் புத்தகத்திற்குள் நுழைவதற்கு முன்னமே இவ்வளவும் பேசியதற்கு காரணம் உண்டு. அதுவும் இந்த தொடருக்கு சம்பந்தமான ஒன்றுதான்.

மாதம் ஒரு மலேசிய  புத்தகம் தொடரில் இன்று, ‘பேரவைக் கதைகள் 6’ சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதுகிறேன். மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையில் நடத்திய ஆறாவது சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.  1991-ஆம் ஆண்டில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெய பக்தி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் புத்தகம் வெளிவந்து இந்த (2026) ஆண்டோடு 35 ஆண்டுகள் ஆகின்றன. மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை தற்போது 39வது பேரவைக் கதைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். 1982ம் ஆண்டில் டாக்டர் இரா.தண்டாயுதபாணி அவர்கள் மலாயா பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த போது அன்றைய தமிழ்ப் பேரவையின் தலைவர் டத்தோ ஸ்ரீ தெய்வீகன் அவர்களின் ஏற்பாட்டில் முதன்முதலாக பேரவைக் கதைகள் நூலாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க வரலாறு.

இம்மாதிரி கதை எழுதும் போட்டிகளால் மட்டுமே ஒருவனை கதை எழுத வைக்க முடியுமா? அவனை எழுத்தாளனாகம் மாற்ற முடியுமா என்கிற கேள்விக்கு கடைசியில் வருவோம். இப்போது இந்தக் கதைகளைப் பார்த்துவிடுவோம். அதற்கு முதல் பரிசு ஆறுதல் பரிசு என்று இக்கதைகளை அணுகாமல்; இன்றைய வாசகர்களில் ஒருவனாக என்னா இந்தக் கதைகளில் என்னென்ன கண்டறி முடிகிறது என்பதை நானுமே தெரிந்து கொள்ள இதனை எழுதுகிறேன்.

முதல் பரிசு பெற்ற ‘பிரதிநிதிகள்’ என்கிற சிறுகதையை மு.அன்புச்செல்வன் எழுதியிருந்தார். இக்கதை அவரது இயற்பெயரான எம்.பெருமாள் என்கிற பெயரில் வெளிவந்திருந்தது.

      தொன்மக் கதைகளையும் இதிகாச கதைகளையும் மீண்டும் மீண்டும் எழுதுவதும் மீளுருவாக்கம் செய்வதும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்து கொண்டுதன இருக்கிறது. புதுமைப்பித்தன் தொடங்கி (உடனே அதற்கு முன் யாரும் தொடங்கிவில்லையா என ஆரம்பித்துவிடாதீர்கள்) ஜெயமோகன் வரை அதனை நாம் பார்க்கலாம்.

குறிப்பாக மகபாரத கதைகளை மீளுருவாக்கம் செய்தல் அந்தக் கதையில் இருந்து ஒரு கதாப்பாத்திரத்தை எடுத்து ஒரு கதையை உருவாக்குதல். அதிலிருந்து ஒரு தொடக்கத்தை எடுத்து இன்னொரு முடிவைக் கொடுத்தல் என பல யுக்திகள் கையாளப்படுகின்றன. அம்மாதியொரு கதைதான் ‘பிரதிநிகள்’.

‘குருஷேத்திரம் உறுதியாகி விட்டது’ என தொடங்கும் சிறுகதை ‘ஏர்கண்டிஷன் சிலிர்ப்பில் கடிதம் மிக நிதானமாய் அர்ச்சுனனை நினைத்துக் கொண்டது’ என்று முடிகின்றது.

ஆமாம் பாரத போரில் தொடங்கிய கிருஷ்ணனின் சூழ்ச்சிகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என சொல்கிறது இச்சிறுகதை. எழுதப்பட்டு முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டிருந்தாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இக்கதை நமக்கு ஏதோ ஒரு பாடத்தையும் எச்சரிக்கையையும் கொடுத்து கொண்டுதால் இருக்கும்.

 கிருஷ்ணன் கடவுளாக இருந்தாலும் அவன் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. எல்லா சுழ்ச்சிகளுக்கு பின்னாலும் தர்மத்திற்கான ஒரு காரணம் கிருஷ்ணனுக்கு கிடைத்து கொண்டே இருக்கிறது. கிருஷ்ணன் கடவுள்தானே; பின் ஏன் எல்லோரையும் ஒரே நொடியில் திருத்திடவில்லை. எது தர்மம் என விளக்கிவிடவில்லை. இந்த மகா யுத்தம் நடக்கப்போவதையும் பல்லாயிரம் மக்கள் மடியபோகிறார்கள் என்பதையும் கிருஷ்ணன் தெரியாமலா இருப்பான். மகாபாரதத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. பாரத யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால் கண்ணனின் கீதா உபதேசத்தை எப்போது நாம் கேட்டிருப்போம்.

 பாரத போரில் சூழ்ச்சிகள் அதிகம் செய்தது சகுனியா கிருஷ்ணனா என கேட்டால் சகுனிதான் என்போம். ஏனெனில் சகுனி மனிதன். அவன் மனிதன் என்பதாலேயே அவன் குற்றம் சுமத்தப்படவேண்டியன். கிருஷ்ணன் கடவுள். அவன் கடவுள் என்பதாலேயே அவனது செயல்களுக்கு பின்னால் ஒரு தர்மம் இருக்கிறது எனதானே நினைக்கின்றோம்.

இதை அப்படியே நிகழ்காலத்தில் இறக்கி வைக்கின்றார் எழுத்தாளர். முதலாளிகள் என்பதால் அவர்களிடம் எப்போதும் அதிகாரம் இருக்கிறது. அவர்களின் அதிகரத்தின் பின்னால் ஒரு தொழில்தர்மம் இருக்கிறது.

தொழிலாளி என்பதால் அடிபணிந்தே இருக்க வேண்டும். முதலாளிகளின் நிர்வாகத்தின் முடிவுகளுக்கு ஒத்துப்போகவேண்டும்.

பாரத போரில் கிருஷ்ணன் ஒரு பக்கமாக பாண்டவர்களுடன் செல்கிறான். ஆனால் கிருஷ்ணன் தன் போர் வீரர்களையோ துரியோதனனுக்கு அனுப்பி வைக்கின்றான். அதற்கு சொல்லப்படும் கதையில் ஒரு நியாயம் நமக்கு சொல்லப்பட்டிருக்கும்.

உறங்கிகொண்டிருக்கும் கிருஷ்ணனின் தலைப்பக்கம் துரியோதனன் நின்றிருக்க; கிருஷ்ணனின் கால் பக்கம் அர்ஜுனன் அமர்ந்திருக்கிறான். கண் விழித்த கண்ணன் அர்சுனனையே முதலில் பார்க்கிறான். பின் அவனுக்கே தேரோட்டியாகின்றான். திரியோதனனுக்கோ கண்ணனின் முழு படையையும் அனுப்பி வைக்கிறான்.

இதில் ஒரு சூழ்ச்சி இருப்பதை எழுத்தாளர் இந்தக் கதைக்குள் நுழைகின்றார். தன்னையே நம்பி இதுநாள் வரை இருந்த போர் வீரர்களை, அதிலும் கடவுளாக போற்றப்படும் கிருஷ்ணனுடன்  இருக்கின்றோம் என நம்பியிருந்த போர்வீரர்களை எதிரிகளுக்கு ஆதரவாக அனுப்பி வைத்ததில் என்ன நியாயம் இருக்கிறது? எதிரி படைகளில் சென்றவர்கள் மடியப்போகிறார்கள் என கிருஷ்ணனுக்கு தெரியாதா என்ன?

அர்ஜுனனுக்கும் இந்தப் பொறி தட்டுகிறது. கிருஷ்ணன் இதனை சாஸ்திர தர்மம் என்றும் உலக நன்மைக்காக இப்படி செய்யத்தான் வேண்டும் என்றும் எதிர்காலத்திலும் இது தொடரத்தான் போகிறது என்கிறான்.

கதை அங்கிருந்து கி.பி 1987-ம் ஆண்டுக்கு வருகிறது.  தன்னை நம்பி வந்த தொழிலாளிக்கு தொழிற்சங்க செயலாளர் செய்யும் அநீதியில் இல்லை இல்லை தொழில் தர்மத்தில் ஒருவகையில் சாஸ்திர தர்மத்தில் இக்கதையை முடிக்கின்றார் எழுத்தாளர்.

இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதையான ‘தரிசனம்’ சிறுகதையை மருத்துவர் மா.சண்முகசிவா எழுதியிருந்தார். கோவிலை மையமாக கொண்ட இச்சிறுகதையில் மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள் வருகின்றார்கள். கோவில் தலைவர், கோவில் அர்ச்சகர், வலிப்பு நோயினால் ஊனமான வேலைக்காரன் பத்துமலை.

உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் கீழ்மையையும் கீழான நிலையில் இருப்பவர்களின் மேன்மையையும் சொல்லும் சிறுகதை இது. எழுத்தாளருக்கே உரிய நடையில் இச்சிறுகதை எழுதப்பட்டிருக்கும்.

‘சரித்திரம் சறுக்குகிறது’ என்கிற மூன்றாவது பரிசு பெற்ற சிறுகதையை காசிதாசன் எழுதியிருந்தார்.

கதை எழுதுகின்றவர்களிடம் ஒரு சிக்கலை நாம் கவனிக்கலாம். உண்மையை எழுதுகிறேன். எனக்கு நடந்ததை எழுதுகிறேன். இன்றைய சிக்கலை எழுதுகிறேன் என எழுதிவிட்டு அதற்கான விமர்சனத்தில் இருந்து தப்பிக்க இப்படி சொல்வார்கள். அதற்காக நிகழ்கால சிக்கலை எழுதக்கூடாதா என கேட்கவும் செய்வார்கள். வெறுமனே நடந்தை எழுதுகிறேன் என எழுதுவதும் நிகழ்கால சிக்கலை எழுதுகிறேன் என எழுதுவதும் அந்தப் படைப்பின் புனைவுத்தன்மையைக் குறைத்து அல்லது மழுங்கடித்து பிரச்சாரமாக மாறிவிடுகிறது. ரொம்பவும் குறுகிய ஆயுளில் அந்தக் கதை மறைந்தும் விடுகின்றது.

நமக்கு நடந்ததையோ நடக்காததையோ, எழுதும் போது அதன் புனைவுத்தன்மையும் அதன் கலைத்தன்மையுமே அந்தப் படைப்பை அடுத்த வாசிப்பின் தளத்திற்கு கொண்டு செல்கிறது.

இப்போது ‘சரித்திரம் சறுக்குகிறது’ சிறுகதைக்கு வருவோம். ஒவ்வொரு இந்திய மாணவனும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் அதுதான் இந்திய குடும்பங்களைக் காப்பாற்றும் என்கிற கருத்து இச்சமூகத்தில் ஆழமாக பதிந்து கொண்டிருந்த காலகட்டம் அதையே தலைவர்கள் முதல் சமுக ஆர்வலர்கள் வரை காணுமிடமெல்லாம் பிரச்சாரம் செய்த காலகட்டமும் அதுதான். பல்கலைக்கழக வாசலை தன் பிள்ளைகள் மிதிக்க வேண்டும் என்பதற்காகவே பல நாட்கள் ஊண் உறக்கமின்றி உழைத்த குடும்பங்கள் இருந்தார்கள். அவர்களைக் ஊக்கப்படுத்தவும் பல்கலைக்கழகத்திற்கு நுழைய வேண்டிய அவசியத்தையும் பலரும் கதைகளாக எழுதி தள்ளினார்கள். இன்றும் கூட கல்வி ஒன்றே ஒரு சமூகத்தை மாற்றும் என்ற கருத்தை வலியுறுத்தும் படைப்புகள் வந்து கொண்டுதானே இருக்கின்றன.

இச்சிறுகதையிலும் அதுவேதான் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாவது பரிசுக்கான காரணமும் அதுவாக இருக்கலாம்.

ஆனால் இக்கதை முழுக்க முழ்க்க பிரச்சாரமாகவே எனக்கு தோன்றியது. பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்கிற  வேட்கை இருக்கும் அதே சமயத்தில் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் அதை தவறவிடும் இளைஞன் பற்றிய கதை இது.

காதலால் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை செய்கிறான். அதனைப் பார்த்த பெரியவர் ஒருவர் அங்கிருந்த இறந்த மாணவனின் நண்பனிடம் உரையாடுவதுதான் கதை. அதிலும் தற்கொலை செய்து கொண்டு இறந்த ஒருவனின் உடல் முன்னே விழுந்து கிடக்கிறது அவனது இரத்தம் கூட இன்னும் உறைந்திருக்காது. அந்த நேரத்தில் கூட பல்கலைகழக இறுக்கையின் முக்கியத்துவம், இந்த இறுக்கை இன்னொரு மாணவனுக்கு கிடைத்திருக்க வேண்டிய அறிய வாய்ப்பு, இதற்கா பெற்றோர்கள் பாடுபடுகிறார்கள் என அந்தப் பெரியவர் அந்த மாணவனுக்கு பாடம் எடுக்கின்றார். இது கூட பரவாயில்லை. இதற்கு அடுத்து அவர் சொல்கிறார், இந்தப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக இருப்பவர் இவரது மகனாம், அவரது இளைய மகனை மருத்துவராக்கியிருக்கிறாராம். பிணத்தின் முன் பேசக்கூடிய பேச்சா இது என இன்றைய வாசிப்பில் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அன்றைய சூழலில் ஒரு பல்கலைக்கழக மாணவனின் தற்கொலை என்பது இன்னொரு மாணவனின் வாழ்க்கையின் எட்டி கூட பார்க்க வாய்ப்பளிக்காத பல்கலைக்கழக (இறுக்கை) இடமாக இருந்திருக்கும் போது இப்படியான கதைகள் அவசியம்தான்.

முதல் மூன்று நிலைகளில் பரிசுகள் பெற்ற சிறுகதைகளைப் பார்த்தோம். அடுத்ததாக ஆறுதல் பரிசுகள் பெற்ற ஒன்பது சிறுகதைகளைப் பார்ப்போம்.

நான்காவது சிறுகதை ‘வேலி’. சமீபத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ என ஒரு திரைப்படம் வந்ந்திருந்தது. ஜீவா நடித்திருப்பார். சுவாரஸ்யமான கதை என்பதால் வெற்றி திரைப்படமாக மாறியது. அதன் கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா. பக்கத்து பக்கத்து வீடு ஒரு வீட்டில் கல்யாணம் ஒரு வீட்டில் மரணம் அதையொட்டிய சிக்கல்களும் கலாட்டாக்களும்தான் கதை.

கு.கிருஷ்ணன் எழுதியிருக்கும் ‘வேலி’ சிறுகதையின் கருவும் அதுதான். தமிழரும் சீனரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் இரு வீட்டாருக்கும் சிக்கல். அதையொட்டி இரு வீட்டிற்கும் நடுவில் மறைமுக  வேலி வந்து நிற்கிறது.

இப்படியாக பல சிக்கல்களுக்கு மத்தியில் ஒரு நாள் தமிழர் வீட்டில் கல்யாணம் ஏற்பாடாகிறது. இதே சமயத்தில் சீனர் வீட்டில் சீனரின் தந்தை உடல்நிலை மோசமடைந்து சாகும் தறுவாயில் இருக்கின்றார். வழக்கமாக சீனர்களில் இறப்பு சடங்கு அதிக நாட்கள் நடப்பது போலிருக்கும். பலர் வருவார்கள் போவார்கள். வீட்டு வாசலில் கூடாரமிட்டு அதில் பிணத்தை கண்ணாடி பெட்டியில் வைப்பார்கள். சில வீடுகளில் இரண்டு மூன்று நாட்கள் வரை சடங்குகள் நடக்கும்.

இப்போது இறக்கும் தறுவாயில் இருக்கும் சீனரின் தந்தையால் தன் மகளின் கல்யணம் தடைபடுபோ என தமிழர் குடும்பம் தவிக்கிறது. சீனரிடம் இதுகுறித்து பேசவே தயங்குகிறார்கள். இதற்கிடையில் ஒருநாள் சீனர் தனது தந்தையை கட்டிலுடன் வெளியே எடுத்து செல்கிறார். எதிரே தம்ழ் குடும்பத்தை சந்திக்கும்படி ஆகின்றது.

தன்  அப்பாவிற்கு உடல்நிலை ரொம்பவும் மோசமாகியுள்ளதால் எப்போது என்ன நடக்கும் என சொல்ல முடியவில்லை. அதோடு பக்கத்துவீட்டிலும் கல்யாணம் ஏற்பாடாகி இருப்பதால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் எல்லோருக்கும் அது சங்கடத்தைக் கொடுக்கும். ஆகவே தன் அப்பாவை தன் தம்பியில் வீட்டிற்கு கொண்டு செல்வதாக சொல்கிறார். அங்குதான் கூடுதல் வசதி இருக்கிறது என்றவர், பக்கத்து வீட்டுக்காரரிடம் அவரின் மகளின் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லி புறப்படுகின்றார்.

பக்கத்துவீட்டுக்காரரை இவர்கள் புரிந்து கொள்வதாக சிறுகதையை எழுத்தாளர் முடிக்கின்றார். சீன சமூகமும் இந்திய சமூகமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை பிரச்சரமாக அல்லாமல் ஒரு கதை பின்னணியோடு எழுத்தாளர் சொல்லியிருப்பது இரசிக்க வைத்தது.

ஐந்தாவது கதையை ப.ஆறுமுகம் எழுதியிருந்தார். ‘நீரலைகள் என்றும் நிலைத்ததில்லை’ என்பது அதன் தலைப்பு. தோட்ட துண்டாடலையும் அதன் பின்னணியில் சிலர் செய்யும் சூழ்ச்சிகளையும் சொல்லும் கதை. இதற்கிடையில் வெளியில் சொல்ல முடியாமல் ஒரு காதல் கதையும் நகர்கின்றது. தன் மகளுக்கு அவள் காதலிப்பவனை மாப்பிள்ளைக் கேட்கவா அல்லது போராட்டவாதியாக இருக்கும் வருங்கால மாப்பிள்ளைக்கு துணையாய் நிற்கவா என்கிற குழப்பத்தில் நல்லதொரு முடிவை நோக்கி நகர்கின்றார் பெரியவர் ஒருவர்.

ஆறாவது சிறுகதை ‘கண் திறந்திட வேண்டும்’. பாவை இச்சிறுகதையை எழுதியிருப்பார். புஸ்பலீலாவதி என்ற பெயரில் இச்சிறுகதை பிரசுரமாகியிருக்கும்.

இன்றும் நடக்கும் சிக்கலில் ஒன்றைத்தான் எழுத்தாளர் அன்று எழுதியிருக்கிறார். இன்று மட்டுமல்ல; நம்பிக்கை மூட நம்பிக்கை என்கிற விளையாட்டுகளுக்கு மத்தியில் சிதைந்து போகும் குடும்பங்கள் எல்லா காலத்திலும் இருக்கத்தான் போகிறார்கள். அதிலும் சாமியாடிகளின் பின்னால் ஓடுகின்றவர்களை எப்போதுமே பார்க்கிறோம்தானே.

எது நடந்தாலும் சாமியாரை பார்த்து, மலாய் மாந்திரவாதிகளைப் பார்த்து பரிகாரம் தேடுகும் குடும்பத்தில் நடக்கும் சிக்கல்தான் கதை. கணவனுக்காக சாமியார்களை பார்க்க போகும் மனைவி, ஒரு கட்டத்தில் தன் கணவன் தனக்கே செய்வினை செய்துவிட்டதாக புலம்பி வீட்டை விட்டு வெளியாகின்றார்.

சாரதா கண்ணன் ‘யார் துடைப்பது?’ என்கிற சிறுகதையை எழுதியிருக்கின்றார். தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதா அல்லது பிற மொழி பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதாக என்கிற குழப்பத்தில் இருக்கும் குடும்பதம் எதிர்நோக்கும் சிக்கல்கள்தான் கதைக்கரு. ‘ஒரு தமிழ்ப்பள்ளி மாணவன் மலாய்ப்பள்ளிக்குப் படிக்கப் போனது குற்றமில்லை. ஆனால் அவன் எந்தச் சூழ்நிலையை எதிர்நோக்கி அதைத் தவிர்த்துக் கொள்ளப் போகிறான் என்பதே கவனிக்கப்பட வேண்டியது’ என்கிற தனது பார்வையையும் கதைச்சொல்லியின் குரலாக பேசுகின்றார் ஆசிரியர்.

இவண்சியா மேரி, ‘படித்தவர்கள்?’ என்கிற சிறுகதையை எழுதியிருக்கின்றார். படித்த ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். படிக்காத வேலைக்கார பெண், பல போராட்டங்களுக்கு பின்னரும் தனது போராட்டமான வாழ்க்கையை தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதுதான் கதை. படித்தவர்கள் எதைதான் படிக்கிறார்கள் என்கிற கேள்வியை எழுத்தாளர் நம் முன் எடுத்து வைக்கின்றார்.

‘மகாலட்சுமி’ என்னும் சிறுகதையை எம்.ஆறுமுகம் எழுதியிருக்கின்றான். இந்தத் தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. தன் மகனுக்கு மகாலட்சுமியை திருமணம் செய்துவைகின்றார் பெரியர் குணக்குன்று. ஓராண்டு கூட ஆகாத நிலையில் குணக்குன்றின் மகன் இறக்கின்றான். மருமகள் மகாலட்சுமி விதவையாகின்றாள். ஆனால் தன் கணவன் கட்டிய தாலியை கழட்ட மறுக்கின்றாள். பொட்டை அழிக்க மறுக்கிறாள்.. பலரும் அதனை ஒரு தகாத செயலாகப் பார்க்க மாமனார் குணக்குன்று மருமகள் விருப்பப்படியே தாலி அவள் கழுத்தில் இருக்கட்டும் என சொல்கிறார்.

கழுத்தில் தாலியுடனே இருப்பதை ஊர் மக்கள் பார்த்து புறம் பேசுகின்றார்கள். இது அவளது மாமியாருக்கு அவமானமாக இருக்கிறது. இதுபற்றி வீட்டில் பேச மருகளோ தன் பக்க நியாயத்தைச் சொல்கிறாள்.  கணவனின் நினைவாக இருக்கும் இந்தத் தாலி தனக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறிய மருமகள் இது தன் உணர்ச்சிகளையும் கட்டுபாடாக வைத்திருக்க உதவுவதாக சொல்லி கண் கலங்குகின்றாள். மருமகளாக வீட்டிற்கு வந்து மகளாக மாறியிருக்கும் மகாலட்சுமியை குணக்குன்று புரிந்து கொண்டவராய், அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது அவள் அதை வாழ வேண்டும் என்கிற முடிவோடு தன் மகளுக்கு நிரந்தர தாலிக்கு ஏற்பாடு செய்ய புறப்படுவதாக கதை முடிகின்றது.

மருமகள் தன் தரப்பு நியாத்தைச் சொல்வதோடு கதை முடிந்திருந்தால் வழக்கமான கதையாகத்தான் இது அமைந்திருக்கும். ஆனால் அவளுக்கு மறுமணம் செய்ய மாமனார் புறப்படுவதாக கதை முடிவதுதான் இந்தக் கதையைக் காப்பாற்றியதாகத் தோன்றுகிறது. பெண்ணுக்கு தாலிதான் பாதுகாப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இருந்தாலும் அன்றைய காலக்கட்டத்தில் மறுமணம் என்பதே கொஞ்சம் புரட்சிதான் இல்லையா?

‘சந்தன மரங்கள்’ சிறுகதையை எஸ்.அருள்சாமி எழுதியிருக்கிறார். தமிழர்கள் வாந்த தோட்டங்களில் (எஸ்டேட்டுகளில்) அவர்களை குடிக்க வைத்த காரணங்களில் ஒன்றுதான் சீன வியாபாரிகள். அவர் விற்ற சம்சுகளால் (சாராயம்) அழிந்த குடும்பங்கள் எத்தனையோ. அப்படியொரு அழிவை நோக்கி செல்லும் இராமசாமியைப் பற்றிய கதை. அதுவும் இராமசாமி கிழவராய்ச் சாகும் தறுவாயில் கதை தொடங்குகிறது. முதல் மரியாதை திரைப்படத்தில் மரணப்படுக்கையில் சிவாஜி காத்திருப்பது போல இராமசாமியும் மரண படுக்கையில் காத்திருக்கின்றார். இவர் காத்திருப்பது தனது முன்னால் காதலிக்காக. அந்தக் காதலி வேறுயாருமல்ல இதே தோட்டத்தில் சம்சு விற்கும் சின கடைக்காரரின் மகள்.

இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் மகளுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறார் கடைக்காரர். சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்து குழந்தைகளுடன் அப்பாவின் கடைக்கா வருகின்றாள் மகள். அவளை பார்ப்பதற்காகவே அங்கு சென்று தினமும் குடிக்கின்றார் இராமசாமி.

கடைசியில் மரண படுக்கையிலும் சீனக்கிழவி கையால் ஒருவாய் சம்சுவை குடித்த பின்னரே உயிர் பிரிகிறது. காதல் ஒரு பக்கம் இருந்தாலும் குடித்து அழிந்தவர்களின் கதையையும் ஓரளவு எழுத்தாளர் சொல்லியிருக்கின்றார்.

தற்காலிகம் என்பது பாதுகாப்பற்றது. அதை வைத்து நம்மால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. கொஞ்ச காலம் சமாளிக்கலாமே தவிர தற்காலிகமாக கிடைக்கும் எதை வைத்தும் நிம்மதியாய் நீண்ட தூரம் போக முடியாது. தற்காலிக ஆசிரியராக பணி கிடைத்த செல்வமணிக்கு அது கொடுக்கும் மன உளைச்சலையும் அதிலிருந்து நிரந்தர ஆசிரியராக மாறினாரா இல்லையா என்கிற முடிவையும் சொல்கிறது மா.இராமையா எழுதிய ‘விடிவு’ என்னும் சிறுகதை.

“புலி வருகிறது…! புலி வருகிறது..” என்று ஊரை ஏமாற்றிய இளைஞன் ஒருவனை உண்மையாக புலி வந்து கடித்து கொன்ற கதையின் மாற்று வடிவமாக இந்தக் கதையைப் பார்க்கலாம். தொகுப்பின் நிறைவு கதையான ‘அவனைக் காப்பாற்றியிருக்கலாம்” என்கிற கதையை மைதீ.சுல்தான் எழுதியிருக்கிறார். தலைப்பிலேயே கதையையும் சொல்லிவிட்டார். இருமுறை தங்களிடம் உதவி கேடவர்களுக்கு உதவி செய்கிறான் நாயகன் தனது மோட்டாரில் ஏற்றுக் கொண்டு போகும் போதுதான் அவர்கள் குடித்திருக்கிறார்கள் என தெரிந்து வேதனைப் படுகின்றான். மூன்றாவதாக ஒருநாள் அதே மாதிரி ஒரு இளைஞன் உதவி கேட்டு வருகிறான். அவன் மீதும் சாராய நெடி அடித்ததால் உதவாமல் செல்கிறான். பின்னர்தான் தெரிகிறது அந்த சாராய நெடிக்கு காரணம் அந்த இளைஞன் அல்ல, உதவி செய்யாததால் குண்டர் கும்பலால் தாக்கப்பட்டு இறந்துபோகிறான். இது நாயகனுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. இந்த சமூதாயத்தையே காப்பாற்ற வேண்டும் என சங்கலப்ம் செய்த நாயகனால் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியாத வேதனையில் சிறுகதை முடிகின்றது.

மாதம் ஒரு மலேசிய புத்தகத்தில் இன்று, 1991-ம் ஆண்டு வெளிவந்த பேரவைக் கதைகள் 6, சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் குறித்து பேசியிருக்கின்றோம். போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற கதைகளை புத்தகத்தில் தொகுத்திருக்கிறார்கள். மலாயா பல்கலைக்கழகம் இந்தப் பேரவைக் கதை போட்டியை தொடர்ந்து நடத்தி வருவது கவனத்திற்கு உரியது பாராட்டத்தக்கது.

இம்மாதிரி போட்டிகளில் இருந்து எழுத்திற்கு வந்தவர்கள் ஒருபக்கம். வெறும் போட்டிகளுக்கு மட்டுமே எழுதுகிறவர்கள் ஒருபக்கம் என ஏதோ ஒரு வகையில் இம்மாதிரி போட்டிகள் எப்போதும் வரவேற்க வேண்டியவை. ஒவ்வொருவரிடம் சொல்வதற்கான கதைகள் இருக்கவே செய்கின்றன. சிலரிடம் பொய்களாக வெளிப்படுகின்றது சிலரிடம் வன்மமாக வெளிப்படுகின்றது. சிலரிடம் விரக்தியாக வெளிப்படுகின்றது. சிலரிடம் வியாதியாக வெளிப்படுகின்றது.

இப்படி பல்வேறு கிளைகளைக் கொண்டு வெளிவந்து இருக்கும் நிலமையை இன்னமும் மோசமாக்கிடாமல் அவற்றை படைப்பு என்கிற ஒன்றாக வெளி கொண்டு வருவது சம்பந்தப்பட்டவர்களுக்கும் வாசிக்கின்றவர்களுக்கும் பயனாக அமையும். அதிலிருந்து தங்களின் எழுத்தை தனது பிறவி நோக்கமாகவோ தனது வாழ்வின் தேடலாகவோ உணர்ந்தவர்கள் ஒருபோதும் அதிலிருந்து விலகிட மாட்டார்கள்.

மீண்டும் அடுத்த மாத ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம்’ தொடரில் மேலும் ஒரு புத்தகத்தைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

00

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *