‘அன்பேற்றுதல்’ என்னும் புதிய பாடத்திட்டம்

தயாஜி

கேள்விகோபத்தில் என் பிள்ளையின் கன்னத்தின் அறைந்துவிட்டேன். ஒரு வாரமாகியும் வீக்கம் குறையவில்லை. என்ன மருந்து கொடுக்கலாம்?

பதில்கன்னத்தின் வீக்கம் வடிய DAIZEN, PAPASE போன்ற மருந்துகள் கொடுக்கலாம். பிள்ளையின் மனமும் அடிபட்டு வீங்கி இருக்கும். அந்த வீக்கம் வடிய அறைபட்ட கன்னத்தில் தினமும் ஐந்து முறை முத்தம் தரவும். ஆனால் உண்மையில் மருந்து தேவைப்படுவது தங்களுக்குத்தான். வன்முறை எந்த வடிவத்திலும் தவறுதான். அடிப்பதுபோல் பாவனை செய்யலாம். அரட்டி மிரட்டி உருட்டிப் பயத்தை ஏற்படுத்தலாம்.

உணர்வைக் கட்டுப்படுத்தி அறிவைப் பயன்படுத்த முடியாவிட்டால்  மட்டுமே அறையலாம். மன்னிக்கவும் தங்களையே அறைந்து கொள்ளலாம். பிள்ளைகளை அடித்துத் திருத்திவிடலாம் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது ஐயா. அணைத்துத் திருத்துங்கள்.

இந்த மருந்துகளால் வீக்கம் குறையவிட்டால் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அறையபட்ட பக்கத்தில் காதுகளைப் பரிசோதனை செய்யச் சொல்லுங்கள். சிலநேரங்களில் செவிப்பறை கிழிபட்டிருக்கலாம்.

…………………………………………………………………………

இது ஒரு மருத்துவ கேள்வி பதில். ஆனால் இது வழக்கமான மருத்துவ கேள்வி பதிலாக இல்லை என்பதை வாசித்த உடனேயே தெரிந்து கொண்டிருப்பீர்கள். பதிலைக் கொடுத்தவர் மருத்துவர் மட்டுமல்ல இலக்கியம் அறிந்தவர் என்பதும் அன்பை போதிக்க முயல்பவர் என்பதும் இந்தப் பதிலில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மலேசிய இலக்கியச் சூழலில் பல இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருக்கும் அதே வேளையில் இலக்கிய வெளியில் சிறந்த ஆலோசகராகவும் எழுத்தாளர் மா.சண்முகசிவாவைச் சொல்லலாம். தொழில்முறை மருத்துவர். அவரை மருத்துவராக அறிந்தவர்களைவிடவும் இலக்கியவாதியாக அறிந்தவர்கள் அதிகம். உடல் வேதனைகளை விட மன வேதனைகளே அந்த எழுத்தாளரிடம் பலரையும் அழைத்துச்செல்கின்றன. அவரும் அதற்கு கட்டணம் வாங்குவதில்லை

அவரது புத்தம் புதிய புத்தகம் ‘அன்பேற்றுதல்’; இந்த ஆண்டு வெளியீடு கண்டது. அன்பேற்றுதல் என்ற சொல்லே முதலில் எனக்கு புதிதாக இருந்தது. உண்மையில் அப்படியொரு சொல் இருக்கிறதா என்கிற சந்தேகமும் எழுந்தது. அதோடு அன்பேற்றுதல் என்ற சொல்லின் அர்த்தம் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது.

அன்பேற்றுதல் என்பது சாத்தியம்தானா என்கிற கேள்வி எழாமல் இல்லை.

திட்டமிட்டு நம்மால் ஒருவரை ‘கடுப்பேத்த’ முடியும்தானே. அப்படி செய்திருக்கிறோம்தானே. வேண்டுமென்றே சிலரை நம்மால் கோவப்படுத்த முடியும். சரியான தூண்டுதல் இருந்தாலே போதும்; எவரையும் சட்டென நிலைகுலைய செய்துவிடலாம். இப்படி ஒருவரை திட்டமிட்டு நம்மால் வெறுப்பேற்றவும் கோவப்படவும் அழவும் செய்ய முடிந்தது சாத்தியமாக இருக்கும் போது; அதே பாணியில் ஒருவர் மீது அன்பை ஏற்றி அவருள் இருக்கும் அன்பை அவரையே புரிந்து கொள்ள வைக்க முடியாதா என்ன? என்கிற ஆதார கேள்வியே இந்த புத்தகத்தின் சாராம்சம்.

மருத்துவர் மா.சண்முகசிவாவின் இந்த ‘அன்பேற்றுதல்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு 28 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம். எழுத்தாளர் பாவண்ணன்; ‘ஒளி பரவட்டும்’ என்கிற தலைப்பில் இந்தப் புத்தகத்திற்கு நீண்டதொரு முன்னுரையைக் கொடுத்திருக்கின்றார். அவர் கொடுத்திருக்கும் தலைப்பிற்கு ஏற்றார் போலவே இந்த முன்னுரையை வாசித்து முடிக்கவும் அன்பென்ற ஒளியைக் கைகளில் ஏந்தியபடி புத்தகத்திற்குள் நாம் வெகு இயல்பாக நுழைந்துவிடுவோம்.

பழைய நகைச்சுவைத் துணுக்கு ஒன்று இருக்கிறது.

புதிதாக திருமணம் செய்தவர் தன் மனைவியின் தொல்லை தாங்காது சாமியார் ஒருவரிடம் செல்கிறார் கணவர். தனது துன்பத்தை சாமியாரிடம் முறையிட்டபடி தனக்கு இந்த துன்பத்தில் இருந்து விடுதலையே கிடைக்காதா என கேட்டு அழவும் செய்கிறார். எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த சாமியார் கொஞ்ச நேரம் கண்களை மூடியபடி இருந்து பின் கண்களைத் திறந்து கணவரைப் பார்க்கின்றார். “இன்னும் மூன்று பொறுத்து கொள் மகனே…” என்கிறார் சாமியார்.

காத்திருந்த கணவருக்கு ஒரே ஆனந்தம். “அப்படியென்றால் இந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு மனைவியால் தொல்லை இருக்காதா..?” என்று கேட்கவும் செய்கிறார்.

“அப்படியில்லை மகனே.. இந்த மூன்று மாதங்களில் உன் மனைவியின் தொல்லை உனக்கு பழகிவிடும்…” என்று பதில் சொல்கின்றார் அந்த சாமியார்.

இந்த நகைச்சுவை துணுக்கு இதே கருத்தில் பல பாணிகளில் வெளிவனந்திருக்கிறது. ஒவ்வொன்றுமே அந்தக் கடைசி வரியின் நகைச்சுவையை நோக்கியே இருக்கும். சாமியாரின் அந்தப் பதிலுக்கு பின்னால் இருக்கும்  ஒரு காரணமும் வாழ்வின் சூட்சுமமும் நமக்கு பிடிபடுவதில்லை.

மூன்று மாதங்களுக்கு கணவர் தன் மனைவியில் தொல்லையைப் பொறுத்து கொள்கிறார் என வைத்து கொள்ளுங்கள். அந்த மூன்று மாத காலங்களில் வேறென்ன மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கின்றது.

மனைவியின் செயல்களுக்கு கணவர் எதிர்வினை செய்து மேலும் அவரது கோவத்தை அதிகப்படுத்த மாட்டார். அதனால் சுனாமியாக மாற வேண்டிய சிக்கல்கள் புயலென கடந்து போயிருக்கும். தனது கணவரரின் இந்த மாற்றம் மனைவியின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமையும்.

அதுவே அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பேச்சை வளர்க்காமல் தங்களைப் புரிந்து கொள்ள உதவுவதாகவும் அமையும்தானே. அந்தச் சாமியார் சொன்னதில் இருந்து நகைச்சுவையை எடுத்தவர்கள் சிரித்ததும் கடந்துவிடுகிறார்கள். அதிலிருந்து வாழ்க்கைக்கான பாடத்தை எடுக்க முயல்கிறவர்கள் அதற்கான பலனை அடைகின்றார்கள்.

அப்படியான மாற்று சிந்தனையை நம் மனதில் விதைக்கக்கூடிய புத்தகங்களில் ஒன்றுதான் இந்த ‘அன்பேற்றுதல்’. மருத்துவ கேள்வி பதிலிலேயே அன்பின் ஆழத்தையும் அதன் தேவையையும் சொல்லியிருக்கும் மருத்துவர். அன்புக்கு என்றே ஒரு புத்கத்தை எழுதியிருக்கின்றார் என்றால் அதன் ஆய்வும் ஆழமும் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா.

மருத்துவர் மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் பலரையும் வெகுவாக கவர்ந்து இழுப்பது அவரது கதை சொல்லும் முறையும் அவரின் எழுத்து நடையும். அதுவே அவரது கட்டுரைகளிலும் அவருக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.

வழக்கம் போல சொல்லும் உதாரணங்களைவிடவும்  ‘வாழும் உதாரணங்களாக’ நம் கண் முன்னே நடமாடுகின்றவர்களின் வாழ்க்கையையும் அதிலிருக்கும் வலியையும் அந்த வலிக்கான நிவாரணம் கிடைத்த கதையையும் வாசிக்க மட்டுமல்ல வாழ்க்கையில் பயன்படுத்தவும் உதவுகின்றது.

எழுத்தாளர் தேர்ந்த வாசிப்பாளர் என்பதாலும்; கட்டுரைகளில் ஆங்காங்கே பல எழுத்தாளர்களின் சிறுகதைகளும் அந்தச் சிறுகதைகளின் அடிநாதங்களும் வந்து போகின்றன.

அன்பு என்பதை நீங்கள் பலவீனமாக பார்க்கிறீர்கள் என்றால், அன்பை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அன்பால் நீங்கள் காயப்படுகின்றீர்கள் என்றால் இவ்வளவு ஏன் அன்பு ஒன்றே போதும் இந்த உலகை வெல்லலாம் என நீங்கள் மூழ்மையாக நம்பினால் கட்டாயம் இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்துவிடுங்கள். உங்களுக்காகத்தான் ‘அன்பேற்றுதல்’ புத்தகத்திற்குள் நீங்கள் நுழைவதற்கான கதவு வழியை மட்டும் இந்தப் புத்தக அறிமுகத்தில் சொல்லியிருக்கின்றேன்.

அந்தக் கதவின் வழி நீங்கள் உள்ளே வரும் போது என்னையும் சந்திப்பீர்கள் அதன் பின் நாம் நீண்ட பயணம் செல்லலாம்.

 மீண்டும் அடுத்த மாதம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு உங்களைச் சந்திக்க வருகின்றேன்.

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *