நாளை பிறந்து இன்று வந்தவள் – அன்றாடங்களின் கவிதை

கவிஞர் மாதங்கி கிருஷ்ணமூர்த்தி. மாதங்கின் என்ற பெயரில் எழுதிவருகிறவர். கவிதைகள் சிறுகதைகள் என இரு இலக்கிய வடிவங்களிலும் தொடர்ந்து எழுதுகின்றவர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருச்சியில் கல்ல்லூரி படிப்பிற்கு பின் பெங்களூரில் வங்கிப் பணி புரிந்திருக்கிறார். 1993-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். 

‘நாளை பிறந்து இன்று வளர்ந்தவள்’ என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. 2008-ஆம் ஆண்டு அந்தப் புத்தகம் வெளிவந்ததது. அதனை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டில் ‘மலைகளின் பறத்தல்’ என் இரண்டாவது கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அதோடு 2012-ஆம் ஆண்டு ‘ஒரு கோடி டாலர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும்  2014-ஆம் ஆண்டு ‘மெல்பகுலாஸோ’ என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

‘மலைகளின் பறத்தல்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக 2014-ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கிய பரிசையும் இவர் பெற்றார்.

இவரது முதல் சிறுகதை 1988-அம் ஆண்டில் சுமங்கலி என்ற இந்திய இதழில் வெளியாகியிருக்கிறது. 1993-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த பிறகு அவருடைய இலக்கிய ஆர்வமும் தேடலும் மேலும் தீவிரமடைந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் வாசகர் வட்டம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை, தங்கமீன் வாசகர் உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளின் மாதாந்திர இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கவனத்தை ஈர்த்தார். பல பரிசுகளையும் பெற்றிருக்கின்றார்.

எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழிலும், மலேசிய தமிழ் நேசம் நாளிதழ்கள் உட்பட பல இணைய பக்கங்களிலும் வெளிவந்துள்ளன.

எந்தவொரு படைப்பாளிக்குமே அவனது முதல் புத்தகம் முக்கியமானது. அதைவைத்துதான் அந்தப் படைப்பாளியில் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாமா வேண்டாமா என்கிற முடிவுகளைச் சில வாசகர்கள் எடுக்கின்றார்கள். ஆனால் இப்போது முதல் புத்தகத்தை வைத்து வாசகர்கள் இப்படியான முடிவுகளை எடுப்பதில்லை. படைப்பாளியின் எழுத்துகள் முன்னமே ஏதோவொரு வகையில் சமூக ஊடகங்களில் வந்து அதனை வாசித்துவிடுகின்றார்கள். இப்போது முதல் புத்தகம் என்பதின் முக்கியத்துவம் பழையபடி இருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் புத்தகத்தில் வாசிப்பது முன்னமே அவர்கள் அந்த படைப்பாளியை வாசித்து விடுகின்றார்கள். அதன் பிறகே புத்தகத்தை வாங்குகின்றார்கள்.

அதிலும் இன்னொரு சிக்கல் இருக்கின்றது. சுவாரஸ்யமாக ஈர்க்கும் வண்ணம் விளம்பரப்படுத்தப்படும் புத்தகம் அதிகம் கவனம் ஈர்க்கிறது. அப்படி வாங்கி வாசித்து ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள்தான்

நமது இன்றைய மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 9-ல் சிங்கை எழுத்தாளர் மாதங்கியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நாளை பிறந்து இன்று வந்தவள்’ கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன்.

முதல் வாசிப்பிலேயே இந்தக் கவிதைகள் என்னை கவர்ந்தன எனலாம். கவிஞர் தனது அன்றாடங்களில் இருந்து கவிதைகளைக் கண்டுபிடித்து நமக்கு கொடுத்திருக்கிறார் என்ற எண்ணம்தான் காரணம். இந்தக் கவிதைத் தொகுப்பில் 42 கவிதைகளும், 3 நெடுங்கவைதைகளும் சேர்த்து மொத்தமாக 45 கவிதைகள் உள்ளன.

எது நடத்தாலும் அதனை நல்லதாகவே எடுத்து கொண்டு அடுத்த கட்ட வேலையைப் பார்ப்பது எளிதான காரியம் அல்ல. இழந்ததை நினைத்து இருப்பதை தொலைத்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் தொகுப்பின் முதல் கவிதையை இப்படி எழுதியிருக்கின்றார் கவிஞர்.

– நான் மிகவும் அதிர்ஷ்டசாலி –

உற்சாகம் கொப்பளிக்கும் முகம்

உழைப்பு என்றால் எனக்கு வெல்லம்

பெண்ணுக்குத் தலை பின்னிவிடுவேன்

சமையல் செய்வேன்

பள்ளிக்கூடத்தில் பாடம் எடுப்பேன்

ரங்கோலிப் போட்டியில் இந்த ஆண்டும்

முதல் பரிசு

பாட்டுகூடக் கற்றுக்கொள்கிறேன்

ஞாயிற்றுக் கிழமைகளில்

தவறவிட்ட கேமராவை

சுற்றுலாப்பயணி ஒரு முறை

ஓடி வந்து தந்துவிட்டார்

மறந்துவிட்ட பர்ஸை

ஆட்டோ ஓட்டுனர்

வீடுதேடி வந்து கொடுத்துவிட்டார்

ஒரு பொருளைக்கூட இதுவரை

தொலைக்கவில்லை

பத்தாண்டுகளுக்கு முன்

விபத்தில் இழந்த

என் இடது கையைத் தவிர (ப.13)

கவிதையின் கடைசி வரியை வாசிக்கும்வரை அந்த அதிஷ்டசாலியின் அதிஷ்டம் பிடிபவில்லை.

குழந்தைகளைப் பேசாத கவிஞர்கள் இல்லை. அதிலும் குழந்தைமையை இழக்கும் குழந்தைகள் குறித்து வாசிக்கும் போதெல்லாம் நாம் தொலைத்த நமது குழந்தைமையே நினைவில் வந்து நம்மைக் கலங்கசெய்கிறது. அப்படியே இருந்திருக்கலாமோ என தோன்றவும் செய்கிறது.

– நமக்கு சாத்தியமாவது –

நாமெல்லாம் அவசரப்படுகின்றோம்

உண்மையிலிருந்து உண்மையை எடுத்துவிட

கவிதையிலிருந்து கவிதையை எடுத்துவிட

பேச்சிலிருந்து பேச்சை எடுத்துவிட

மௌனத்திலிருந்து மௌனத்தை எடுத்துவிட

நேரத்திலிருந்து நேரத்தை எடுத்துவிட

ரகசியத்திலிருந்து ரகசியத்தை எடுத்துவிட

உறவிலிருந்து உறவை எடுத்துவிட

இவையெல்லாம் எப்போதும்

நம் இச்சைப்படி நடப்பதில்லை

பெரும்பாலும்

நமக்கு சாத்தியமாவது

குழந்தையிடமிருந்து குழந்தைமையை எடுப்பது மட்டுமே. (ப.20)

          நாம் வாழும் இன்றைய காலக்கட்டம் ரொம்பவும் பறந்துவிரிந்ததாக ஒரு மாயத்தை நிகழ்த்துகிறது. இங்கிருந்தபடியே பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவரோடு உரையாட முடிகிறது. ஆனால் அந்த மாயத்தின் பின்னணியில் மனிதர்கள் தொலைத்து கொண்டிருக்கும் ஒன்றை கவிஞர் இப்படியாக எழுதுகிறார்.

– ஒரு பண்டிகை நாளில் –

நான் குறிப்பிட்ட அனைவருக்கும்

என் வாழ்த்துகளைத்

தொலைபேசிகளும், கணினிகளும்,

தபால் நிலையங்களும்

சுமந்து சென்றன

இதுவரை நேரில் சந்தித்திராத

மின்நண்பர்களுக்கும்கூட.

எஞ்சியிருந்த ஒரு வாழ்த்து

அடுத்தவீட்டுக்காரனிடம் போகட்டா

என்று கேட்டபோது

அவன் முகம் நினைவுக்கு வரவேயில்லை

எவ்வளவு யோசித்தும் கூட. (ப.54)

கவிதைகளில் கொஞ்சம் திகலை சேர்த்து எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். அந்த திகிலுக்கு நடுவில் இருக்கும் மர்மத்தைவிட அது நமக்கு சொல்லிச்செல்லும் செய்தி மிக முக்கியமானது.

– குரல்கள் –

நள்ளிரவு

முன்னறையில்

புத்தகத்துடன் நான்;

வீடே படுக்கையறையில்

நடு அறையில்

பேச்சுக் குரல்

விளக்கைப் போட்டால்

நிசப்தம்

குழந்தைகளின் பொம்மைகள்

திருதிருவென்று

விழித்தன

திரும்பினேன்

அடுத்த முறை

சலசலப்பு வந்தபோது நான் எழவில்லை

பொம்மைகள் பேசட்டும் என்று

அதன்பின்

எங்கும் மௌனம். (ப.66)

சில கவிதைகள் அதற்குரிய இடத்தில் நின்றுவிடுவதை நம் வாசிப்பின் வழி நம்மால் அறிந்து கொள்ள முடியும். மேற்சொன்ன கவிதையில் கடைசி இரு வரிகளா ‘அதன்பின்/எங்கும் மௌனம்’; என்கிற வரி தேவையற்றது என்றே தோன்றுகிறது. அந்த இரு வரிகள் இல்லாமல் வாசித்து பாருங்கள். அந்த வீட்டில் பொம்மைகளாவது பேசிவிட்டு போகட்டும் என்கிற மனநிலை கொண்ட ஒருவனின் குரலாய் இக்கவிதை ஒலிக்கும். இங்கு அந்தக் குரல்கள் கேட்காமல் போவதைவிடவும் அந்தக் குரலாவது கேட்டுவிட்டு போகட்டும் என்பதில்தான் கவிதை இருக்கிறது.

– வேறுபாடு –

பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர்களுக்குச்

சொக்காய் வாங்கத் தெரிகிறது

பிடித்த உணவைத் தருவிக்கத் தெரிகிறது

முட்டிமோதி பள்ளியில்

இடந்தேடத் தெரிகிறது

சொட்டும் வியர்வையும் பிள்ளைக்கு

என்று உள்ளத்தின் துடிப்பு

புரிகிறது

புரிதலின்றித் தவிக்கிறது

முரண்டுபிடிப்பதற்கும்

முரண்படுதலுக்கும்

உள்ள வேறுபாட்டை மட்டும்

ஏன் அறியாமல் போயினர்

என்பது. (ப.30)

இந்தக் கவிதை யாருக்கு புரிகிறதோ இல்லையோ பெற்றோருக்கு நிச்சயம் புரிய வேண்டும். குழந்தைகள் முரண்படுகின்றார்களா முரண்டு பிடிக்கின்றார்களா என்பதை புரிந்து கொள்ளாமல் புலம்பும் பெற்றோர் கொஞ்சமா என்ன?

அவர்களை அவர்களாக ஏற்றுக்கொள்வதுதான் அன்பிற்கான முதல் கதவு என்பதை இப்படி சொல்கிறாரோ நம் கவிஞர்;

– பால்திரிபு –

என்னிடமிருந்து புறப்பட்ட

ஒரு கனல் துண்டு

உங்களைச்

சுட்டெரிக்கிறது என்கிறீர்கள்

என் மீது எய்யப்பட்ட

அஸ்திரங்களும்

ஊற்றப்பட்ட

கொதிநிலை நீர்மங்களும்

ஏற்படுத்திய கொப்புளங்கள்

வெடித்ததால் வெளிவந்த

வெப்பம்தான் அது

எனக்குத் தேவை

பரிதாபம் அல்ல

நான் உங்களில் ஒருத்தி. (ப.67)

          இங்கு எல்லா கவிதைகளுக்கே நாம் விளக்கம் கொடுத்து கொண்டிருக்க முடியாது. அதனை வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகருக்கும் அந்தக் கவிதை வெவ்வேறு திறப்புகளைக் கொடுக்கின்றன. என்னதான் வெவ்வேறு திறப்புகளின் வழியே அந்தக் கவிதைக்குள் நாம் நுழைந்தாலும் அதனுள் புதைந்திருக்கும் துயரத்தை உணர்ந்து ஒருசேர அழாமலிருக்க முடியாது. கவிதைக்கு ஒவ்வொரு சொல்லும் முக்கியம் என்பதற்கு இந்தக் கவிதை ஓர் உதாரணம். கவிஞர் பயன்படுத்தியிருக்கு ‘ஓம்’ என்ற ஒற்றைச் சொல்லே போதும். அதுதான் இந்தக் கவிதைக்கான திறப்பு நம் அழுகைக்கான திறப்பும் அதுதான்.

– சன்னல் இல்லாத வீடு –

எலியட்ஸ் பீச் மணலில்

மகனுடன் கோட்டை கட்டும்போது

அருகிலேயே விரலால்

வரைந்தாள் ஒரு சிறுமி

பக்கத்தில் தங்கை.

வீடு வரைகிறாயா?

ஓம்.

அம்மா அதுக்கு கதவு சன்னல் எதுவுமே இல்லை

இருந்தால் திறந்து சுட்டுவிடுவார்கள்

சிறுமி சொன்னாள்

அவள் தங்கை சொன்னாள்

சன்னல் கதவு இல்லாவிட்டால்

தெருவில் செத்துப்போன

அப்பாவைப் பார்த்து

எப்படிக் கூட்டிவார ஏலும்? (ப.52)

          இந்தக் கவிதை ஒரு சுழல் போல துயரத்தினுள் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறது.

          பெற்றோர்கள் சொல்வதை பிள்ளைகள் செய்வதில்லை. அவர்கள் செய்வதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுகின்றார்கள் என்பது ரொம்பவும் பழையதுதான் ஆனால் எப்போதும் பயனாய் அமைகிறது. இதையே கவிஞர் இப்படியாக சொல்கிறார்;

– கொடை –

கொடுத்துச்சிவந்த கைகள்,

கொடைவேந்தன்,

இப்போது

இப்படித்தான்

எல்லாரும்

அழைக்கிறார்கள்

என்னை.

கருவிலேயே

கொடுக்கத்

துவங்கினாரோ

என்று

இன்று கூட

என்னைப்

பற்றி

யார்யாரோ

மேடையில்
முழங்கிவிட்டுப்

போனார்கள்

அவர்களுக்கு

நிச்சயம்

தெரியாது

அழுக்குக் கைகளுடன்

சன்னலைத் தட்டி

காசுகேட்ட சிறுமியைக்

காருக்குள்ளிருந்த சிறுவன் நான்

விரட்டிய

ஒரு

தீபாவளி இரவில்

என் தாய்

பட்டினி

கிடந்தார் என்று….(ப.22)

          ஆம்; குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் உலகை புரிந்து கொள்கிறார்கள். வாழ்வென்பதும் துன்பத்தையும் சேர்த்துதான். பசுமை என்பது இலை உதிர்வதையும் சேர்த்துதான். காய்ந்து உதிரும் பூக்களில்தான் வாசனை தங்கியிருக்கின்றன. காயாத பூக்கள் அழகாய் இருக்கலாமே தவிர ஒருபோது அது காயும் பூக்களுக்கு ஈடாகிவிடாது என்ற சிந்தனையைத் தூண்டிய கவிதை அடுத்து;

– தீவு விரைவுச் சாலையில் –

வண்டிகள்

வழுக்கிக்கொண்டு

செல்லும்

இந்தத் தீவு விரைவுச்சாலை நெடுகிலும்

சிந்தியிருப்பவை

உதிரா இலைகளைக் கொண்ட

சாலையோர் மரங்களின்

நிழல்கள் மட்டுமே. (ப.36)

          குழந்தையின் மனதில் எதை விதைக்கின்றோமோ அதுவே அவர்களின் வாழ்வாக வளர்ந்து நிற்கிறது. அதைவிட்டுவிட்டு எது எதையோ செய்து கொண்டிருக்கின்றோம். ஒரு ஊரில் ஒரு இராஜாதான் இருக்க வேண்டுமா? அந்த ஊரில் ஒரு பன்றி இருக்கக் கூடாதா? என யோசிக்கும் குழந்தைகள்தான் நாம் நம்பும் வருங்காலம்.

– சஞ்சாரி பாவம் –

ஒரு ஊரில் ஒரு பன்றி இருந்தது

என்று தினமும் கதை சொல்லத்துவங்கும் குழழந்தையே

உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. (ப.31)

          நமது இன்றைய மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகத்தில் கவிஞர் மாதங்கியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நாளை பிறந்து இன்று வந்தவள்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து வாசித்த சில கவிதைகளின் வாசிப்பனுபவத்தை வாசித்தீர்கள்.

          நான் இரசித்து வாசித்த கவிதைகள் போல நீங்கள் இரசித்து வாசிப்பதற்கான கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. தனது அன்றாட வாழ்வில் இருந்து தான் பார்த்ததில் இருந்து கவிதைகளைத் தனியே பிரித்திருக்கிறார் கவிஞர். அது நாம் தவறவிட்ட இடம் என்கிற குற்றவுணர்ச்சியின்றி நம்மால் மீண்டும் அந்தக் கவிதைக்குள் நுழைந்து அந்த அனுபவத்தை அடைய முடிகிறது. அந்த அனுபவம் நமக்கு அதிகப்படியான விழிப்புணர்வைக் கொடுத்து வழியனுப்புகின்றன. வாய்ப்பு இருப்பின் தவறாது வாசித்துவிடுங்கள்.

          மீண்டும் அடுத்த மாத ‘மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்’ தொடரில் சந்திக்கலாம்.

00

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *