-கமலா முரளி
“எனக்கு நீலக் கலர் தான் வேணும்” எனக் கத்தினான் செல்வம்.
”நாந்தான் நீலக் கலரை முதல்ல எடுத்தேன். எனக்கு தான் அது , போடா” ராஜுவும் தொண்டை கிழியக் கத்தினான்.
செல்வமும் ராஜுவும் ஆறாம் வகுப்பில் படிக்கிறார்கள். வேறு வேறு பள்ளிகளில். செல்வம் அக்ஸிலி பள்ளி. ராஜு படிப்பது பாரத் வித்யாலயா. இருவரது வீடுகளும் கம்பர் தெருவில் அடுத்தடுத்து உள்ளன.
சிறுவயதில் இருந்தே இருவரும் தோழர்கள். பள்ளி இல்லாத நேரங்களில் சேர்ந்தே தான் இருப்பார்கள். தெருவில் விளையாடுவார்கள். அருகில் இருக்கும் பூங்காவுக்கு ஒன்றாகச் சென்று விளையாடுவார்கள்.
செல்வம் வீட்டின் மாடி ‘லேண்டிங்’ பகுதி தான் இருவருக்கும் பிடித்த இடம்.
யூ.கே.ஜி படிக்கும் போது அந்த ‘லேண்டிங்’ இடத்தில் உட்கார்ந்து சொப்பு விளையாட ஆரம்பித்தவர்கள் இப்போது கேரம், செஸ், பரமபதம், ஆடு புலி ஆட்டத்தில் நிற்கிறார்கள்…. அதாவது உட்கார்ந்து விளையாடுகிறார்கள்.
அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகளும் நடக்கும் தான்.
ஆனால் ஓரிரு மணித்துளிகளில் சமாதானமாகி விடுவார்கள். அந்தத் தெருவில் ஒத்த வயதுடைய வேறு குழந்தைகள் இல்லை. அது ஒரு முக்கிய காரணம். மேலும், மெல்ல மெல்ல இருவருக்கும் இடையிலான பாசமும் பற்றும் உறுதிப்பட்டுக் கொண்டிருப்பதும் இன்னொரு காரணம்.
பள்ளிப்பாடங்களைக் கூட இருவருமாக சேர்ந்து படிப்பார்கள். கேள்வி பதில்களை ஓப்புவிப்பது, எழுதிய பதில்களை சரிபார்ப்பது என ரொம்பவே ஒத்துமையாக இருப்பார்கள்.
அவர்கள் ஒன்றாகப் பாடம் படிப்பது அவர்களின் பெற்றோர்களுக்குப் பெருமையாக இருந்தது. இன்னொரு பள்ளியின் அதே வகுப்பு பாடங்களை இருவரும் அறிந்து கொள்வதைக் கூட ஒரு நல்வாய்ப்பாக அவர்கள் பார்த்தார்கள்.
ஒன்றாகப் படிப்பதில் செல்வத்துக்கும் ராஜுவுக்கும் ஒரு காரணம் இருந்தது. அதான், பெற்றோர்களின் கண்டிப்பு பார்வையில் இருந்து விலகி இருப்பது தான்.
நண்பனுடன் படிக்கும் போது ஒரு சகஜ சூழல். அது இருவருக்கும் பிடித்து இருந்தது.
“டேய், இந்த கணக்கு உனக்குத் தெரியுமாடா?”
“ரொம்ப ஈஸி. யார் சீக்கிரம் போடராங்கன்னு பாப்போமா?”
“நாளைக்கி திருக்குறள் மனப்பாடப் பகுதி. நா சொல்றேன் கேக்கிறயா?”
இப்படி இனிமையாகப் போய் கொண்டிருந்த நட்பில் தான் இன்றைய சண்டை கொஞ்சம் பலமாக நடந்து விட்டது.
எந்த நிறக் காய்களை யார் எடுத்துக் கொள்வது என ஆரம்பித்து, எப்படியோ முடிந்தது.
“என்கிட்டயே பேசுறியா? முதல்ல உனக்கு எழுத்துக் கூட்டி படிக்க சொல்லிக் கொடுத்ததே நான் தான் தெரியுமா?”
“அப்போ, நா செஸ் விளையாடக் கத்து கொடுத்து தான, உங்க ஸ்கூல்ல நீ பரிசு வாங்கின? அது?”
காய்களைத் தட்டி விட்டுவிட்டு, ராஜூ தபதபவென மாடிப்படிகளில் இறங்கி அவன் வீட்டுக்குச் சென்றான்.
இரண்டு நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
“என்ன செல்வம், ராஜுவோட விளையாடப் போகல்ல?” என அம்மா கேட்டார்.
“ம்ம், வீட்டுப்பாடம் நெறய இருக்கு”
“அதையும் அவன் கூடத் தான எழுதுவ? நேத்திக்கும் விளையாடல்ல தான? ராஜு ஆளையே காணோமே? எதனா சண்டையா?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல…”முணுமுணுத்தான் செல்வம்.
“அப்ப, சண்டை தான். சரி தான் எத்தனை நாளைக்கு சண்டைன்னு பாப்போம்” எனச் சிரித்தபடி சென்றார் அம்மா.
ராஜுவிடம் பேசாமல் இருப்பது செல்வத்துக்கும் என்னவோ போல் இருந்தது.
”ராஜு வந்து வரியாடான்னு ஒரு வார்த்தை சொன்னா போதும், ஓடிடலாம். ஆனா, அவந்தான் திரும்பிக் கூடப் பாக்கல்லயே!” என நினைத்தான் செல்வம்.
ஒரு வேளை அவனும் தன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டு இருப்பானோ?
வீட்டுப்பாடம் எழுதுவதை வைத்து விட்டு மாடிப்படியில் நின்று எட்டிப் பார்த்தான் செல்வம்.
ராஜூ வீட்டில் யாரோ வந்திருக்கிறார்கள். பேச்சு சத்தம் கேக்குது. அவனோட பாட்டி குரல் தான் அது.
“ராஜூ வெளிய வா… ராஜூ வெளிய வா…” ஏதோ மந்திரச்சொல் போல சொல்லிக் கொண்டு செல்வம் படியில் இருந்தே எட்டிப் பார்த்தான்.
ராஜுவும் அதே மந்திர சொல்லைத் தான் சொல்லிக் கொண்டு இருந்திருப்பான் போல. மாடியில் செல்வம் நிற்கிறானா என்ற பார்வையுடன் வெளியே வந்தான் ராஜு.
இருவர் முகத்திலும் ஒரு கீற்றுப் புன்னகை.
”கீழ வரியாடா?” ராஜு கேட்டான்.
உதட்டைப் பிதுக்கிய படி சரியெனத் தலையை ஆட்டினான் செல்வம்.
சண்டைபோட்ட போது இருந்த கோபமும் வேகமும் போன இடம் தெரியவில்லை.
ஒரு ஒரு படியாக செல்வம் இறங்குவதற்குள், ராஜு செல்வம் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டான்.
“எங்க பாட்டி வந்து இருக்காங்க”
“குரல் கேட்டுச்சு”
“பாட்டி, என்ன கொண்டு வந்து இருக்காங்க தெரியுமா? உனக்குப் பிடிச்ச அதிரசம். முறுக்கு, பூந்தி கூட இருக்கு.”
மகிழ்ச்சித் துடிப்புடன் சொன்னான் ராஜு. செல்வம் முகமும் மலர்ந்தது.
”வாப்பா செல்வம், உனக்குப் பிடிச்ச அதிரசம் தான் செஞ்சு வரணும்ன்னு சொல்லிட்டான் ராஜு” என்றார் பாட்டி.
பலகாரங்களைக் கிண்ணியில் போட்டு எடுத்து வந்தார்.
“ரெண்டு பேரும் உக்காந்து சாப்பிடுங்க”
“நாங்க மாடிப்படியில உக்காந்து தான் சாப்பிடுவோம். அதான் எங்க இடம்” என்றான் ராஜு.
இருவரும் பலகாரக் கிண்ணிகளைத் தூக்கிக் கொண்டு, மாடிப்படி ‘லேண்டிங்’கில் வந்து உட்கார்ந்தனர்.
“செம டேஸ்ட்ரா” செல்வம்.
“நீ போய் கேட்டா பாட்டி இன்னும் கொஞ்சம் தருவாங்க. எனக்கும் சேத்து வாங்கிட்டு வா”
பலகாரத்தால் மீண்டும் பலம் பெற்றதோ நட்பு?
00

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
சென்னை, மூத்த குடிமக்கள் மன்றம், கலைமகள் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் பரிசு பெற்றது. கலைமகள் வெளியுட்டுள்ள சிறப்பு பதிப்பில் “யதார்த்த வாழ்வு” எனும் அச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.
குவிகம் மின்னிதழ் நடத்திய “குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் இவரது குறும்புதினம் தேர்வு செய்யப்பட்டு, குவிகம் குறும்புதினம் இதழில் வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதை 2024 போட்டியில் ஆறுதல் பரிசு வென்றுள்ளார்.
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளார்.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.
மற்றும் இவரது சிறார் கதை நூல்கள், “கிளியக்காவின் பாட்டு” மற்றும் “சின்ன மீனின் பெரிய உலகம்” ஆகியவை லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளன.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

