கமலா முரளி       

சிக்வி- பிக்வி குரங்குக்குட்டிகளின் வீட்டில் இன்று விருந்தினர்கள் வருகிறார்கள். சிக்வி மற்றும் பிக்வி இருவரும் வீட்டை ஒழுங்கு படுத்துவதிலும் அலங்கரிப்பதிலும் உதவ வேண்டும் என்பது அம்மாவின் கட்டளை.

பொன்முகி ஆற்றங்கரைக்கும் சமீபமாய், அந்தக் குரங்குக் குடும்பம் புதிதாக வீடு கட்டிக் குடியேறி இருந்தது.

சிக்வி குட்டிக்கும் பிக்வி குட்டிக்கும் பிடித்தது அவர்கள் வீட்டு வரவேற்பறை தான்.

வசதியாக உட்கார்ந்து கொள்ள சிறு சிறு பாறாங்கற்கள் இருந்தன.

எங்கிருந்தோ ஒரு ரேடியோப்பெட்டியையும் எடுத்து வந்திருந்தார் அம்மா.

சிக்வியும் பிக்வியும் அதில் பாடல்களைக் கேட்டு ஆட்டம் போட்டனர்.

“சிக்வி ! பிக்வி! சும்மா ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்காதீங்க!”

“சரிம்மா”

“சிக்வி! நீ வாசல் முன்புறம் அழகு படுத்த வேண்டும்”.

“ம்ம்! ஏதேனும் இலைகளைப் பிய்த்து….”

“அடடா! சிக்வி ! பிய்த்து போடற எண்ணத்தை அறவே ஒதுக்கு! நான் வாசல் புறம் அழகான கோலம் போட்டிருக்கிறேன். அதை நீ மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.”

”பிக்வி , நீ பின்பக்கம் நம் கோழிகளின் இடத்தையும் நம் குதிரை ஜிம்முவின் இடத்தையும் சுத்தம் செய்” அம்மா  உத்தரவிட்டார்.

“நா சுத்தம் செய்யணும்! அவன் அலங்காரம் செய்யணுமா?”

“ஆமா! ரெண்டு பேரும் ஓரே இடத்தில இருந்தா வேலையை ஒழுங்கா செய்ய மாட்டீங்க!” 

நந்தவனத்துக்குச் சென்ற சிக்வி நல்ல நறுமணமுள்ள வெவ்வேறு வண்ண மலர்களைப் பார்த்து வியந்தான்.

“மலர்கள் பிய்ந்து விடாமல், அழகாகப் பறித்துச் செல்ல வேண்டும். அப்போது தான் அம்மாவுக்குப் பிடிக்கும்” என நினைத்தான் சிக்வி.

வீட்டின் பின்பக்கத்தில் கழிவுகள், இலை மற்றும் சத்தைக் குப்பைகள், குதிரைச் சாணத்தைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தான் பிக்வி.

சிக்வி பூக்களைக் கொண்டு வந்து கோலத்தை அலங்கரிக்க ஆரம்பித்தான்.

பன்னீர்பூக்கள், கனகாம்பரம், பச்சை நிறத்துக்கு துளசி, சாமந்தி மற்றும் சிவப்பு மற்றும் பன்னீர் ரோஜா.

கோலத்தின் கடைசிச் சுற்றில் இருந்த  சின்னச் சின்ன வட்டங்களில் பன்னீர் ரோஜாக்கள் இருந்தன.

மலர்களின் வாசம் பிக்வியைச் சுண்டி இழுத்தது.

குப்பையைக் குவித்துக் கொண்டிருந்தவன் வேலையை நிறுத்தி விட்டு, முன்புறம் வந்தான்.

“ஆஹா! அழகான பூக்கள்!“ என வியந்தான் பிக்வி.

“பிக்வி! இங்கே என்ன செய்யிற நீ? போ, போ, போய் குப்பையை அள்ளிப் போடு” என விரட்டினாள் அம்மா.

“சிக்வி!, நடுவில இன்னும் கொஞ்சம் பூ வைக்கலாம். இன்னும் கொஞ்சம் மலர்களைப் பறித்து வா” என சிக்வியையும் விரட்டினாள்.

பிக்விக்கு ரோஜாப்பூ என்றால் பிடிக்கும். அதிலும் பன்னீர் ரோஜா என்றால் ரொம்பப் பிடிக்கும்.

”கோலத்தில  இருக்கிற பன்னீர் ரோஜாவை எப்படிச் சாப்பிடலாம்?” என யோசித்தான் பிக்வி.

”ஜிம்முவைத் துணைக்குக் கூப்பிடலாம். ஜிம்மு! ஜிம்மு! எனக்கு அந்த ரோஜாப்பூவைச் சாப்பிடணும் போல இருக்கு. நீயும் வா! நான் பூவை எடுக்கும் போது யாராவது வந்தால், லேசாக கனைத்து எனக்குத் தெரியப்படுத்து.”

ஜிம்மு யோசித்தது.

“ஜிம்மு, உனக்கு நான் தான் கொள்ளு வைக்கணும். இரண்டு பிடி கொள்ளு அதிகமாப் போடுறேன்”

கோலத்தை மறைத்த படி நின்று கொண்டது ஜிம்மு.

பிக்வி பன்னீர் ரோஜாப்பூக்களை சாப்பிட ஆரம்பித்தான். இரண்டு சாப்பிட்டாகிவிட்டது.

ஜிம்மு கனைத்தது.

பிக்வி சட்டென நகர்ந்து, வீட்டின் பின்புறம் ஓடிவிட்டான்.

“நான் எல்லா வட்டங்களிலும் பன்னீர் ரோஜா வைத்திருந்தேனே! இரண்டு பூக்களைக் காணோமே” என சிக்வி தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

தான் மீண்டும் கொண்டு வந்திருந்த பூக்களில் இருந்த பன்னீர் ரோஜாக்களை எடுத்து மீண்டும் அந்த வட்டங்களில் வைத்தான் சிக்வி.

மேலும் சில மலர்களை அம்மா சொன்னபடி, வெவ்வேறு இடங்களில் இட்டான்.

“இன்னும் கொஞ்சம் துளசி எடுத்து வந்து, அலங்கரிக்க வேண்டும்” என்றபடி மீண்டும் நந்தவனத்துக்குச் சென்றான் சிக்வி.

பிக்வி மெல்ல வந்து, பன்னீர் ரோஜாக்களைச் சுவைக்கத் துவங்கினான். மூன்று பூக்களைச் சாப்பிட்டு விட்டான்.

ஜிம்மு கனைத்தது. பிக்வி பின்புறம் நோக்கி ஓடினான்.

இந்த முறை மூன்று பன்னீர் ரோஜாக்களைக் காணவில்லை.

சுற்றுமுற்றும் பார்த்தான் சிக்வி.

ஜிம்மு மட்டும் தான் நின்று கொண்டு இருக்கிறது. அது நகர்ந்ததாகத் தெரியவில்லையே! “ஜிம்மு! நீ இங்கேயே தான நிக்கிற! யார் இந்த பன்னீர் ரோஜாக்களை எடுத்தது?”

“எனக்குத் தெரியாதே”, ஜிம்மு.

“ஆமா ! நான் இரண்டு முறை வரும் போது நீ கனைத்தாயே? ஏன்?”

ஜிம்மு மௌனமாக நின்றது.

“சரி, இந்த முறை பாத்துக்கோ , நா இன்னொரு முறை மலர்கள் பறித்து வருகிறேன்” எனச் சொல்லிவிட்டு, சிக்வி வெளியேறினான்.

சிக்வி நந்தவனத்துக்குப் போகாமல், வீட்டைச் சுற்றி இருந்த அடர்த்தியான கிளுவைச் செடியின் பின்னால் நின்று கவனித்தான்.

பிக்வி பன்னீர் ரோஜாவைச் சாப்பிட ஆரம்பிக்கும் போது, சிக்வி தரையிலேயே தவழ்ந்து வந்தான்.

ஜிம்மு சிக்வியைக் கவனிக்கவில்லை.

“கண்ணா, இன்னொரு ரோஜாப்பூ தின்ன ஆசையா?” எனச் சத்தமாகக் கேட்டான் சிக்வி.

பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு, “எனக்கு பன்னீர் ரோஜாவைப் பாத்ததும் சாப்பிடணும் போல இருந்திச்சி” என்றான் பிக்வி.

“என் கிட்ட கேட்டா நானே தருவேனே! அந்த சக்கரைக்கட்டியைத் திருடித் தின்னும் ஜானி போல திருட்டுத்தனமா திங்கக் கூடாது. நாம் எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கணும், புரிஞ்சுதா?”என்றது சிக்வி.

00

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

சென்னை, மூத்த குடிமக்கள் மன்றம், கலைமகள் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் பரிசு பெற்றது. கலைமகள் வெளியுட்டுள்ள சிறப்பு பதிப்பில் “யதார்த்த வாழ்வு” எனும் அச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.

குவிகம் மின்னிதழ் நடத்திய “குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் இவரது குறும்புதினம் தேர்வு செய்யப்பட்டு, குவிகம் குறும்புதினம் இதழில் வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதை 2024 போட்டியில் ஆறுதல் பரிசு வென்றுள்ளார்.

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளார்.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல்கள், “கிளியக்காவின் பாட்டு” மற்றும் “சின்ன மீனின் பெரிய உலகம்” ஆகியவை லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளன.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’  ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *