– கமலா முரளி
பள்ளி முடிந்து மாலினி வீட்டுக்கு வந்துவிட்டாள்.
தினமும், உள்ளே நுழைந்ததும் ஏதாவதொரு விளையாட்டுப் பொருளை எடுத்து வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்துவிடுவாள்.
“மாலு, யூனிஃபார்மைக் கழட்டு. கை கால் கழுவிட்டு வா…” அம்மா பலமுறை சொன்னபின் …ஆடிக் கொண்டு பாடிக் கொண்டு போவாள்.
இன்று விளையாட்டுச் சாமான் பக்கம் திரும்பவே இல்லை.
கூடத்தில் கால்களைக் கட்டிக் கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
“போய் கை கால் கழுவு”, அம்மா.
மௌனமாக, சுரத்தே இல்லாமல் உள்ளே சென்றாள்.
அம்மா மாலினிக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.
“என்ன பொறியல்? அப்பளம் தா…” என ஏதாவது அடம் பிடிப்பாள். அதுவும் இல்லை இன்று.
ஒரே அமைதி.
அம்மா மாலினி பக்கத்தில் அமர்ந்து அவளைக் கட்டிக் கொண்டு, “என்னாச்சுடா செல்லம்?” எனக் கேட்டார்.
பொல பொலவென கண்ணீர்! “அம்மா..” விசும்பினாள்.
“இன்னிக்கி… தேவி இல்ல… தேவி…”
“ஆமாம், உன் ஃப்ரெண்டு”
“ம்ம்…அவ என்ன அழுக்கு மூட்டைன்னு சொல்லிட்டா. ரேணுவும் திவ்யாவும் என்கிட்ட பேசக் கூடாதுன்னு அவங்க கிட்ட சொல்லிட்டா”
“அடடா, ஏன்மா? என்ன நடந்துச்சு? நீ ஏதாவது…”
“நா ஒண்ணுமே செய்யல அம்மா. நா குளிக்கல… அதனால என் கூட அவ பேச மாட்டாளாம்”
“நீ இன்னிக்கி குளிக்கலன்னு அவ எப்படி கண்டுபிடிச்சா?” எனக் கேட்டார் அம்மா.
“நேத்திக்கி நாங்க விளையாடிகிட்டு இருந்தப்ப தேவி அவளோட மார்க்கர் பேனாவால என் கால்ல கிறுக்கினா. அது அப்படியே இருக்கு…”
அம்மா மாலினியின் காலில் இருந்த அந்த வண்ணக் கிறுக்கலைப் பார்த்தார்.
மாலினி தொடர்ந்து அழுது கொண்டு இருந்தாள்.
“இன்னிக்கி காலைல கூட நீ எழுந்த நேரத்துக்குக் கொஞ்சம் சுறுசுறுப்பா இருந்திருந்தா குளிச்சிட்டே கிளம்பி இருக்கலாம். சரி, சரி, அழுவறது இதுக்கு தீர்வாகாது.”
“மாலினி, தேவி சொன்னதுக்காக இல்ல, நம்மள சுத்தமா வச்சுக்கிறது நம்ம உடல் நலம், தூய்மை சார்ந்த விஷயம்”
தலையைக் கோதிய படி, ”இதை ஒரு சவாலா எடுத்துக்கோ. அம்மா நான் உனக்குத் துணையா இருப்பேன். கண்ணைத் துடைச்சுக்கோ”
மாலினி கண்ணைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
“உனக்கு ஒரு சவால். காலையில எழுந்ததும், நானோ அப்பாவோ திரும்ப திரும்ப உன்னிடம் கத்தாமல், குளிக்கப் போகணும் . நாங்களும் உன் டீம் தான் ! அது போல நகம், தலை வாரிக்கிறது, உடையை நன்றாக வைத்துக் கொள்வது… என எல்லா விஷயத்திலும், இந்த மாசம் பூரா! சவாலுக்கு ரெடியா?”
அம்மா கட்டை விரலை உயர்த்திக் காட்ட, மாலினியும் கட்டை விரலை உயர்த்தினாள்.
மாலினிக்கு உதவுவதில் அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டனர்.
உடைகளை அயர்ன் செய்வதாகட்டும், அவளுடைய புத்தகப்பை, பென்சில் பெட்டி முதற்கொண்டு எல்லாம் பளிச்சென இருந்தன. அப்பா நகம் வெட்டுவதில் கவனமாக இருந்தால், அம்மா, அழகாகத் தலையை வாரி விட்டாள்.
ஒரு நாள், மாலினி குதித்துக் கொண்டு வந்தாள்.
“அம்மா, எனக்கு சிறப்பு பரிசு கொடுத்து இருக்காங்க”
“எதுக்கும்மா?”
“மிக சுத்தமாக இருப்பதற்காக. நான் தான் என் வகுப்புக்கு ‘க்ளீன்லினெஸ் மானிட்டர்’”.
மாலினிக்குப் பெருமை பிடிபடவில்லை.
சவாலாக ஆரம்பித்த விஷயம் அவள் மனதில் ஒரு நல்ல பழக்க வழக்கமாக வேரூன்றியது.
00

கமலா முரளி பற்றி….
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின், கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் ’தினசரி.காம் இணையதள நாளேடு, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, கொக்கரக்கோ மின்னிதழ், மலர்வனம், மங்கையர்மலர் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
குறிப்பாக, இவரது சிறார் சிறுகதைகள் மற்றும் பாடல்கள், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர்வனம், கோகுலம், இந்து தமிழ் திசை மாயாபஜார், தினமலர் மாணவர் பதிப்பு ‘பட்டம்’, தினமணி குழந்தைகள் உலகம், நடுகல் இணைய இதழ், அமெரிக்கா டெல்லஸ் நகர் மின்னிதழ் ஆனந்தசந்திரிக்கை, ‘இயல்’ சிறார் மின்னிதழ், ‘குட்டி’ சிறார் மாத இதழ் ஆகிய இதழ்களில் வெளிவருகின்றன.
சென்னை, மூத்த குடிமக்கள் மன்றம், கலைமகள் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் பரிசு பெற்றது. கலைமகள் வெளியுட்டுள்ள சிறப்பு பதிப்பில் “யதார்த்த வாழ்வு” எனும் அச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.
குவிகம் மின்னிதழ் நடத்திய “குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் இவரது குறும்புதினம் தேர்வு செய்யப்பட்டு, குவிகம் குறும்புதினம் இதழில் வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதை 2024 போட்டியில் ஆறுதல் பரிசு வென்றுள்ளார்.
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளார்.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.
மற்றும் இவரது சிறார் கதை நூல்கள், “கிளியக்காவின் பாட்டு” மற்றும் “சின்ன மீனின் பெரிய உலகம்” ஆகியவை லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளன.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ ஆண்டு (2024) பெற்றுள்ளார்.
மின்னஞ்சல் : kamalamurali63@gmail.com

