-அ. முனவர் கான்
ஈரானிய இலக்கியத்தின் ‘பிரான்ஸ் காஃப்கா’ என்று அழைக்கப்படும் சாதிக் ஹெதாயத் (Sadegh Hedayat 1903–1951), நவீன பாரசீக இலக்கியத்தின் மிக முக்கியக் குரல். ஈரானில் வசதியான குடும்பத்தில் பிறந்த அவர், மேல் படிப்பிற்காக ஐரோப்பா சென்றபோது அங்கிருந்த இலக்கிய மற்றும் தத்துவப் போக்குகளால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாய் பிரான்ஸ் காஃப்கா, எட்கர் ஆலன் போ ஆகியோரின் எழுத்துக்கள் அவர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. காஃப்காவின் ‘உருமாற்றம்’ (Metamorphosis) கதையில் நாயகன் ஒரு பூச்சியாக மாறுவது போல, ஹெதாயத் தன் கதைகளில் அக உலகச் சிதைவால் மனிதன் தன் தன்மையை இழக்கும் விசித்திரமான உளவியல் நெருக்கடியைப் பேசுகிறார்.
ஹெதாயத் வாழ்ந்த காலம் ஈரானின் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்புகள் நிறைந்த ஒன்றாகும். ஷா மன்னரின் ஆட்சியில் நாடு நவீனமயமாக்கலை நோக்கிச் சென்றபோது, பழமைவாதத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையே பெரும் மோதல் நிலவியது, அந்த நவீனமயமாக்கல் மேல்மட்ட அளவில் மட்டுமே இருந்தது. சமூகத்தில் கடுமையான தணிக்கை முறை (Censorship) ,அரசியல் அடக்குமுறைகள் நிலவின.. நவீன சிந்தனையாளரான ஹெதாயத்திற்கு ஈரானின் பண்டைய வரலாற்றின் மீது ஆர்வம் இருந்தது. ஐரோப்பாவில் கல்வி பயின்ற ஹெதாயத், மேற்கத்திய எக்சிஸ்டென்ஷியலிச (Existentialism) சிந்தனைகளை ஈரானிய இலக்கியத்திற்குக் கொண்டுவந்தார். இருப்பினும், நாட்டில் நிலவிய அரசியல் அடக்குமுறையும் கருத்து சுதந்திரமின்மையும் சமூகத்தில் நிலவிய பழமைவாதமும் மூடநம்பிக்கைகளும் அவரைத் தீவிர மனச்சோர்வுக்குத் தள்ளியது.
சாதிக் ஹெதாயத் தனித்து இயங்கவில்லை; மாறாக, அவர் தம் காலத்து பிற சிறந்த படைப்பாளிகளுடன் இணைந்து ஈரானிய இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
1930-களில் ஹெதாயத் மற்றும் அவரது நண்பர்களான போஸோர்க் அலவி, முச்தபா மின்வி, மசூத் ஃபர்ஸாத் ஆகிய நால்வரும் இணைந்து ‘ரௌபாயி’ என்ற குழுவை அமைத்தனர். பாரம்பரிய பழமைவாத எழுத்துக்களை எதிர்த்து, நவீன சித்தாந்தங்களை பாரசீக மொழியில் கொண்டுவருவதே இக்குழுவின் நோக்கமாக இருந்தது. . அவரது சமகால முக்கிய படைப்பாளிகளில் , பாரசீக சிறுகதைகளின் முன்னோடியான முகம்மது அலி ஜமால்ஸாதே,எதார்த்தவாத பாணியில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை எழுதிய சாதேக் சூபக், மேற்கத்திய கலாச்சார ஆதிக்கத்தை விமர்சித்து எழுதிய இளைய தலைமுறை எழுத்தாளரரான ஜலால் அல்-ஏ அகமத்ஆகியோர் குறிப்படத்தக்கவர்கள். உரைநடையில் ஹெதாயத் மாற்றத்தைக் கொண்டுவந்தது போல, கவிதையில் நிமா யூஷிஜ் “புதிய கவிதை” (She’r-e Nō) இயக்கத்தின் மூலம் பாரம்பரிய கவிதை வடிவங்களை உடைத்து புதிய பாதையை அமைத்தார். அஹ்மத் ஷாம்லூ போன்ற கவிஞர்கள் இப்பாணியைப் பின்பற்றினர்.
1936-ல் சாதிக் ஹெதாயத் எழுதிய குருட்டு ஆந்தை (The Blind Owl) நாவல், உலக இலக்கியத்தின் ஒரு மறுக்க முடியாத மைல்கல்லாகப் போற்றப்படுகிறது. நவீன உளவியல் புனைகதைகளில் பயன்படுத்தப்படும் ‘நனவோடை’ உத்தியைக் கையாண்டு, கதாநாயகனின் மனம் கனவு, மாயை, போதை,நிஜம் ஆகியவற்றுக்கு இடையே ஊசலாடுவதை வாசகனும் தன் அனுபவமாக உணரும் வகையில் எழுதியுள்ளார்.
நாட்டில் நிலவிய கடுமையான தணிக்கை முறை காரணமாக, இந்த நாவல் ஈரானில் நேரடியாக வெளியிட முடியவில்லை. ஹெதாயத் தன் கையெழுத்துப் பிரதிகளை நண்பர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி, பம்பாயில் (மும்பை) அது கையெழுத்துப் பிரதி வடிவில் (Handwritten / Stenciled copy) தான் வெளியானது. சுமார் 50 படிகள் மட்டுமே தயாரித்துத் தனது நண்பர்களுக்கு வழங்கினார். அதில் “ஈரானில் விற்பனை செய்யக் கூடாது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பிறகு, 1941-இல் ஈரானில் ‘அச்சுப் பிரதி’யாக வெளிவந்தது. தன் தாய்நாட்டின் சிதைவை, நாவலில் வரும் அழுகிய உடல்களாகவும் விகாரமான பிம்பங்களாகவும் அவர் சித்தரித்திருந்தார். நாவல் வாசிப்போரை தற்கொலைக்குத் தூண்டுகிறது என்ற அச்சத்தாலும், அதிகார வர்க்கத்திற்கு எதிரான மதச்சார்பற்ற தத்துவங்களாலும் இந்நாவல் நீண்ட காலம் ஈரானில் தடை செய்யப்பட்டிருந்தது.

‘குருட்டு ஆந்தை’ என்பது மனித மனதின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் பயங்களையும், மரணம் பற்றிய ஏங்கல்களையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்திய ஒரு காவியமாகும். மேலைநாட்டு நவீனத்துவ உத்திகளையும், கிழக்கத்தியப் பௌத்த-பாரசீகத் தத்துவங்களையும் இணைத்து எழுதப்பட்ட இந்நூல், பாரம்பரியக் கதைசொல்லல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் வரும் கதாபாத்திரங்கள் கதையாசிரியரின் மனச்சிதைவு, மனித மனத்தின் ஆழமான இருள், தனிமை, மரணம், பயங்கள், அடக்கப்பட்ட ஆசைகள் மற்றும் ஆன்மீகப் போராட்டங்களின் உளவியல் பிரதிபலிப்புகள் எனலாம்.
இந்நாவல் ஒன்றையொன்று கண்ணாடியில் பிரதிபலிப்பது போன்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதியை கனவுப் பகுதி அல்லது அபின் உண்டாக்கிய உலகம் எனலாம். பெயர் குறிப்பிடாத கதைசொல்லி ஒரு ஓவியன்; கதையின் நாயகன். அவன் நகர எல்லைக்கு வெளியே, ஒரு கல்லறைப் போன்ற சிறு அறையில் தனிமையில் வாழ்கிறான். பொழுதைக் கரைப்பதற்காக அவன் பேனா பெட்டிகளின் மூடிகளில் ஒரு சைப்ரஸ் மரத்தின் கீழ் கூன் விழுந்த,சால்வை போர்த்தியபடி முதியவர் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே கருப்பு ஆடை அணிந்த பெண் கருப்பு அல்லி மலரை வழங்குகிறாள்; அவர்களுக்கு இடையே ஒரு சிற்றாறு ஓடும் ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் வரைகிறான்:.
ஒரு நாள், தன் அறையின் காற்று வருவதற்கான சிறு திறப்பின் வழியாக இதே போன்ற காட்சியை நேரில் காண்கிறான். அப்பெண்ணை நகரம் முழுவதும் தேடுகிறான்.எதிர்பாராத ஒரு நாள் அந்தப் பெண் ஒரு தேவதையைப் போல அவனது அறைக்கு வருகிறாள். ஆனவது படுக்கையில் படுத்துக் கொள்கிறாள். மயக்கும் அவளது கண்கள் அவனை வசீகரிக்கின்றன. ஆனால், அவளைத் தொடும்போது அவள் இறந்துவிட்டதை உணர்கிறான். அவளது மயக்கும் கண்களை ஓவியமாக வரைந்துவிட்டு, அவளது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பெட்டியில் வைத்து, பிண வண்டி ஓட்டுநரின் உதவியுடன் அடக்கம் செய்கிறான். அந்த ஓட்டுநர் ஒரு பளபளப்பான பழங்கால ஜாடியை அவனிடம் கொடுக்கிறார் அதில் இறந்த பெண்ணின் முகத்தைப் போலவே வரையப்பட்டு இருக்கும்.
முதல் பகுதியின் கனவுத்தன்மை மறைந்து, கொடூரமான நிஜ உலகம் தொடங்கும் இரண்டாம் பகுதியை ‘லௌகீக உலகம்’ எனலாம். இதில் கதைசொல்லி நோயால் பாதிக்கப்பட்டவனாகவும், ‘வேசி’ என்று அவனால் அழைக்கப்படும் தன் மனைவியுடன் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழ்பவனாகவும் சித்தரிக்கப்படுகிறான்.
முதல் பகுதியில் வந்த அதே பாத்திரங்கள் இரண்டாம் பகுதியிலும் வேறு வடிவங்களில் வருகின்றனர். கருப்பு ஆடை, பெரிய பளபளக்கும் கண்கள், கருப்பு அல்லி மலருடன் தூய்மையின் மறுவடிவமாகவும், மரணத்தின் வாக்குறுதியாகவும் வரும் பெண், எட்ட முடியாத தூய்மையான காதலையும், “வானுலக அழகையும்” குறிக்கிறாள். அவளது வருகை தற்காலிக பிரபஞ்ச உணர்வையும், பின் உடலின் சிதைவையும் தருகிறது.
இரண்டாம் பகுதியில் காம உணர்வுமிக்கவளாக, ஏமாற்றுபவளாக, லௌகீக வாழ்க்கையின் பொறியாக வரும் பெண், கணவனுடன் இணையாமல் பிற தாழ்ந்த மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவனைக் கொடூர வன்முறைக்குத் தூண்டுகிறாள். அவன் தன் மனைவியை ‘வேசி’ என்று தொடர்ந்து அழைத்தாலும், அவள்மேல் பெரும் காதலும் காமமும் கொண்டவனாகவே இருக்கிறான். அவளுடன் இணைசேர வேண்டும், உடலோடு உடல் ஒன்றிணைய வேண்டும் என்கிற அவனது வேட்கை நிறைவேறுவதேயில்லை. எதிர்பாராதவிதமாக மனைவியுடன் இணையும் தருணத்தில், அவள் அவனது உதட்டைக் கடித்து இருதுண்டாக்க, ஆத்திரத்தின் உச்சத்தில் அவன் அவளைக் கத்தியால் குத்திக் கொல்கிறான். கதையின் இரண்டு பகுதிகளுமே அவளது விழித்திரையை அவன் கைப்பற்றுவதுடனேயே முடிகின்றன.
பழைய சாமான்கள் விற்பவர் – முதியவர் அவதார காலத்தின் நிழல் போல வருகிறார். கூன் விழுந்த உடல், அழுக்கடைந்த ஆடைகள், பற்கள் இல்லாத வாய், குழி விழுந்த கண்கள், அருவருப்பான கொடூரச் சிரிப்பு ஆகியவற்றுடன் வரும் அந்த நிழல்—பிண வண்டி ஓட்டுநராக, குப்பை சேகரிப்பவனாக, மாமாவாக, மாமனாராக, கசாப்புக் கடைக்காரராக எனப் பல வடிவங்களில் அவதரிக்கிறது. அவன் உலகியல் மாயைகளில் விழும்போதெல்லாம், அந்த முதியவரின் அருவருப்பான சிரிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறது. நாவலின் இறுதியில் மனைவியைக் கொன்ற பின் கண்ணாடியில் பார்க்கும்போது, தான் வெறுத்த அந்த விகாரமான முதியவராகவே தான் மாறிவிட்டதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைகிறான். இது கர்மச் சுழற்சியின் பூர்த்தியையும், மனிதனின் அப்பாவித்தனம் (Innocence) மறைந்து உலகத்தின் அழுக்குகளால் அவன் முழுமையாக ஆட்கொள்ளப்படுவதையும் காட்டுகிறது.
ஒரு கசாப்புக் கடைக்காரர் செத்த ஆடுகளை மென்மையாகத் தொட்டுத் துண்டு துண்டாக வெட்டுவதைப் போல, அவன் தன் மனைவியின் பிணத்தைத் துண்டாக்குகிறான்; மனித உடல் வெறும் கறித்துண்டுதான் என்பதையும் அதன் நிலையாமையையும் இது காட்டுகிறது.
அவன் அபின் மயக்கத்தில் சிக்கிக்கொண்ட ஓர் ஆன்மா. அபின் குழாயும் தூரிகையும் மட்டுமே கொண்ட, சவப்பெட்டி போன்றதொரு சிறு அறையில் வாழும் சிதைந்த உருவம் அவன். சமூகத்தை வெறுத்து, வெளி உலகத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, ஒரு சிறிய ஜன்னல் வழியாகவே உலகைப் பார்த்து, சுவரில் விழும் தன் நிழலுக்காக மட்டுமே அவன் எழுதுகிறான்.
பேனா பெட்டியில் தான் வரையும் ஓவியத்தின் காட்சியையே, தோண்டி எடுக்கப்பட்ட பழங்கால ஜாடியிலும் அவன் காண்கிறான். அந்தப் பழங்கால ஜாடி, கடந்துபோன பல பிறவிகளின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் ஒரு குறியீடு. ஹெதாயத் பம்பாயில் தங்கியிருந்தபோது கற்ற சமஸ்கிருதம், உபநிடதங்கள் மற்றும் கர்மவினை கோட்பாடுகளின் தாக்கத்தால், ‘மறுபிறவி’ மற்றும் ஆசை-துன்பச் சுழற்சியை இதில் கையாள்கிறார். இதன் மூலம், தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அதே ஓவியனின் மறுபிறவி என்பதை அவன் உணர்கிறான்.
சைப்ரஸ் மரத்தடியில் இருக்கும் முதியவர் மௌனத்தையும், புதிரையும் குறிக்கும் விதமாக, தனது இடது கை ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்திருக்கும் சைகை—மனைவியின் சிறுவயது உருவம், அவளது தம்பி, தேவலோகப் பெண் என அனைவரிடமும் இடம்பெயர்கிறது.
‘குருட்டு ஆந்தை’ ஒரு இருண்ட உண்மையை முன்வைக்கிறது மனிதன் அபின் கனவுகளுக்குள் ஓடினாலும் அல்லது கொடூரமான நிஜ உலகை எதிர்கொண்டாலும், பிறப்பு-இறப்பு மற்றும் ஆசை-துன்பச் சுழற்சியிலிருந்து தப்ப முடியாது. ஆசை, அருவருப்பு, ஆன்மீகத் தேடல், மரண பயம் ஆகியவற்றுக்கு இடையே நசுங்கும் ஒரு மனிதனின் அக உலகை ஹெதாயத் மிக நுட்பமாக விவரித்துள்ளார். “வாழ்க்கை என்பது ஒரு பெரிய சுடுகாடு, அங்கே நாம் அனைவரும் குருட்டு ஆந்தைகளாக அலைந்துகொண்டிருக்கிறோம்” என்பதை நாவல் வெளிப்படுத்துகிறது.

‘ஆந்தை’ என்பது வெறும் பறவை அல்ல; அது மனித இருப்பின் மிக இருண்ட, ஆழமான தத்துவக் குறியீடு. ஆந்தைகள் பொதுவாக இருளில் பார்க்கக்கூடியவை. ஆனால், ஹெதாயத் அதை “குருட்டு ஆந்தை” என்று அழைக்கிறார். நாயகன் தன்னைச் சுற்றி நடக்கும் கொடூரங்களையும் தன் மனதின் இருளையும் பார்க்க முடிகிறது; ஆனால், அவற்றிலிருந்து தப்பிக்க அவனுக்கு வழி தெரியவில்லை. ஒரு ஆந்தை எப்படி ஒளியைப் பார்த்தால் கண்கள் கூசிக் குருடாகுமோ, அதுபோல நாயகன் உண்மையான ‘யதார்த்தத்தை’ எதிர்கொள்ள முடியாமல் அறிவுப்பூர்வமாகக் குருடாகிப்போகிறான்.
நாவலில் ஆந்தை என்பது நாயகனின் அறைக்குள் இருக்கும் ஒரு மௌனமான சாட்சி. நாயகன் தனது கதையைச் சொல்லும்போது, அந்த ஆந்தை சுவரில் ஒரு பெரிய நிழலாக விழுகிறது. அது அவனது துயரங்களை விழுங்கும் ஒரு பிம்பம். அவன் எழுதுவது மற்ற மனிதர்களுக்காக அல்ல, அந்த “ஆந்தை போன்ற தன் நிழலுக்காக” மட்டுமே.
பாரசீகத்திலும் பல கீழைநாட்டுப் பண்பாடுகளிலும் ஆந்தை துரதிர்ஷ்டத்தின், மரணத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆந்தை ஒரு தனிமை விரும்பி. நாயகனும் சமூகத்திலிருந்து விலகி, ஒரு பழைய வீட்டில் தனிமையில் வாழ்கிறான். ஆந்தை எலிகளையும் மற்ற சிறு உயிரினங்களையும் வேட்டையாடுவது போல, நாயகனின் எண்ணங்கள் அவனது மனதையே வேட்டையாடிச் சிதைக்கின்றன.
ஹெதாயத்தைப் பொறுத்தவரை, மனிதர்கள் அனைவரும் இருளில் தவிக்கும் ஆந்தைகளைப் போன்றவர்களே; நாம் அனைவரும் நம்முடைய சொந்த நிழலிடமே பேசிக்கொண்டிருக்கிறோம்.
“விளக்கின் முன்னே சுவரில் விழும் என் நிழலுக்காக மட்டுமே நான் எழுதுகிறேன்; என்னைப் பற்றி அவனிடம் நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்பவன், தன் நிழல் தன்னைவிட உயிர்ப்புடன் இருப்பதை உணர்கிறான்.
அந்தக் கிழவன் ‘முதுமை மற்றும் அழிவின்’ அடையாளம். நாயகன் அந்த இளமையான ‘தெய்வீகப் பெண்ணை’க் காதலிக்கிறான்; ஆனால், அந்தக் கிழவனோ அந்த அழகின் முடிவைக் குறிக்கிறான். எவ்வளவு அழகான பெண்ணும் இறுதியில் ஒரு பிணமாகவோ அல்லது கிழவனைப் போன்ற ஒரு சிதைந்த உருவமாகவோதான் மாறுவாள் என்ற கசப்பான உண்மையை அவன் நினைவூட்டுகிறான். நாவல் முழுவதும் எதிரொலிக்கும் கிழவனின் சிரிப்பு, வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பாகும்.
மனிதர்கள் அன்பிற்காகவும், கடவுளுக்காகவும், புகழுக்காகவும் அலைகிறார்கள்; ஆனால் இறுதியில் மரணமும் சிதைவுமே மிஞ்சும் என்பதை அறிந்து அவன் கேலியாகச் சிரிக்கிறான். அருவருப்பான விகாரமான கிழவன், “மண்ணுலக அழுக்கையும்” யதார்த்தத்தின் கொடூரமான முகத்தையும் பிரதிபலிக்கிறான். ஒரு கதாபாத்திரமாக மட்டும் வராமல், ஒரு அச்சமூட்டும் குறியீடாகவே அவன் வருகிறான். இவனைப் பற்றிப் புரிந்துகொள்வதுதான் இந்த நாவலின் ரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கான சாவி.
வாழ்வின் ஒரு முனையில் அந்தத் ‘தெய்வீகப் பெண்’ (கனவு/மரணம்) இருக்கிறாள்; மறுமுனையில் ‘கிழவன்’ (யதார்த்தம்/மரணம்) இருக்கிறான். பெண் “தெய்வீகமானவள், ஆனால் உயிருடன் இல்லை”; கிழவன் “உயிருடன் இருக்கிறான், ஆனால் அருவருப்பானவன்”. இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஆன்மாவாகவே நாயகன் சித்தரிக்கப்படுகிறான். இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு நிழல் மட்டுமே அவன்.
நாவலின் பல காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது, தப்பிக்க முடியாத வாழ்க்கையின் சுழற்சியைக் குறிக்கிறது. மனிதன் எதை வாழ்நாள் முழுவதும் வெறுக்கிறானோ, காலத்தின் சிதைவாலும் முதுமையாலும் இறுதியில் அதுவாகவே மாறுகிறான் என்பதை இது உணர்த்துகிறது. தொடக்கத்தில் தன் நிழலுக்காக எழுதத் தொடங்கியவன், இறுதியில் விளக்கு அணையத் தன் நிழலையும் இழந்து முழு இருளில் மூழ்குகிறான்.
இந்நாவலில் காலமும் கதைக்களமும் நேர்கோட்டில் செல்வதில்லை; அது ஒரு சுழலாகவே அமைந்துள்ளது. கனவு, நிஜம், கடந்த காலம், நிகழ்காலம் ஆகியவற்றுக்கு இடையே கதை சுழன்றுகொண்டே இருக்கிறது. கதைசொல்லியின் மனநிலை சிதையும்போது, நிகழ்வுகளின் கால வரிசையும் குழம்புகிறது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் தோன்றுவது மனதின் சுழற்சி நிலையையும், வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத துயரச் சுழற்சி என்பதையும் குறிக்கிறது. கதையில் வரும் பெண், கிழவன், மனைவி என அனைவரும் நாயகனின் மனதிற்குள் இருக்கும் வெவ்வேறு பிம்பங்களே தவிர, நிஜமான மனிதர்கள் அல்ல எனலாம். மரணம் அல்லது முழுமையான பித்து நிலையே (பைத்தியக்காரத்தனமே) அவனது துயரத்திலிருந்து அவனுக்குக் கிடைத்த ஒரே விடுதலையாகப் பார்க்கப்படுகிறது.
பாரிஸுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஹெதாயத், ரெய்னர் மரியா ரில்கேயின் ‘தி நோட்புக்ஸ் ஆஃப் மால்டே லார்ட்ஸ் பிரிகே’ (The Notebooks of Malte Laurids Brigge) வரிகளையும், பௌத்த மதத்தின் ‘புத்தசரிதம்’ மற்றும் உலகைத் துறக்கும் கோட்பாடுகளையும் தன் படைப்பில் கையாண்டுள்ளார். அவர் பம்பாயில் இருந்தபோது சமஸ்கிருதம் கற்றதுடன், உபநிடதங்கள் மற்றும் கர்மவினை சுழற்சி பற்றிய பார்வைகளையும் பெற்றார்.
கதைசொல்லியின் இருத்தலியல் துயரத்தையே சாதிக் ஹெதாயத் தனது நிஜ வாழ்க்கையிலும் உணர்ந்தார். 1951-இல் பாரிஸில் அவர் தங்கியிருந்த வாடகைக் குடியிருப்பில், தனது வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகள் அனைத்தையும் எரித்துவிட்டு, அறையின் துவாரங்களைப் பஞ்சுகளால் அடைத்து, கேஸ் அடுப்பைத் திறந்துவிட்டு அமைதியாக உயிரை மாய்த்துக்கொண்டார். இந்தத் தற்கொலை, அவரது ‘குருட்டு ஆந்தை’ நாவலின் இருண்மையை மேலும் ஆழமாக்குகிறது.
அவரது தற்கொலைக்குப் பிறகு பாரசீக இலக்கிய உலகில் பெரும் அதிர்வலைகள் உண்டாயின. ஈரானிய இளைஞர்கள் மற்றும் நவீன எழுத்தாளர்கள் மத்தியில் அவர் ஒரு மாற்று அடையாளமாகவும், தனிமனித சுதந்திரத்தின் குறியீடாகவும் மாறினார். இன்றளவும் மத்திய கிழக்கு இலக்கியங்களில் ‘இருத்தலியல் துயரத்தின்’ முக்கிய முகவரியாக ஹெதாயத் கருதப்படுகிறார்.
அவர் உலகத்திற்காகவோ மற்ற மனிதர்களுக்காகவோ எழுதவில்லை; தனது ஆழமான தனிமையையும் வேதனையையும் தன் நிழலிடம் மட்டுமே பகிர நினைத்தார். “அவனிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்ற வரி, ஒரு மனிதன் தனக்குள்ளேயே இருக்கும் இருண்ட பக்கத்தைத் தேடும் முயற்சியைக் குறிக்கிறது.
ஹெதாயத்தின் புகழ்பெற்ற கூற்றுப்படி:
“வாழ்க்கையில் சில காயங்கள் உள்ளன; அவை ஆன்மாவை ஒரு புற்றுநோயைப் போல மெதுவாகவும் தனிமையிலும் அரித்து அழிப்பவை.”
அவரைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு பொய்; ஒரு மாயை. மரணத்தைத் தவிர வேறு எதுவும் உண்மையானது கிடையாது. அதனால்தான், அவருக்கு மரணம் என்பது பயமுறுத்தும் ஒன்றாக இல்லாமல், வாழ்க்கையின் துயரங்களிலிருந்து விடுதலை தரும் ஓர் அமைதியான உறக்கம்.
சாதிக் ஹெதாயத்தின் முக்கியப் படைப்புகள் :
உயிருடன் புதைக்கப்பட்டவன் – (1930): மனித மனத்தின் இருண்ட பக்கங்களையும் ஏமாற்றங்களையும் வெளிப்படுத்தும் கதைகளின் தொகுப்பு.
மூன்று ரத்தத் துளிகள் (1932): மனோதத்துவ ரீதியாகவும் சர்ரியலிச பாணியிலும் எழுதப்பட்ட 11சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு .
தெரு நாய் (1942): சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு நாயின் பார்வையில் மனிதர்களின் கொடூரத்தையும் அனாதரவான நிலையும் விவரிக்கும் புகழ்பெற்ற கதை கொண்ட சிறுகதை தொகுப்பு.
ஹாஜி ஆகா (1945): ஈரானிய அரசியல்வாதிகள் மற்றும் போலிகளின் பேராசையை நேரடியாக நையாண்டி செய்யும் நாவல்.
முத்து பீரங்கி (1947): ஈரானின் மூடநம்பிக்கைகளையும் அரசியல் சீர்கேடுகளையும் கசப்பான நையாண்டியுடன் விமர்சித்த படைப்பு.
பார்வின், சாசானின் மகள்: ஈரானிய வரலாற்றை பின்னணியாகக் கொண்ட நாடகம்.
தமிழில் மொழிபெயர்க்கப்படுள்ள அவரது சில சிறுகதைகள்
மூன்று ரத்தத் துளிகள், நெருப்பு வழிபாட்டாளன் -கணேஷ்ராம்.
தெரு நாய் ,இருட்டறை -அ. முனவர்கான்.
ஹாஜி மொரத் – இல . சுபத்ரா .
00

அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். கவிஞர் பிரம்மராஜன் மீட்சி இதழ் துவங்கியபோது உடன் இருந்தவர். ஆரண்யம் மற்றும் காலச்சுவடு இதழ்களில் சில கட்டுரைகள் எழுதி வெளிவந்துள்ளது.

