–வன்மி
நகரத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லாத தெருக்கள் இல்லை. மெர்னிகா என்னும் பெயருடைய நானும் அப்படிப்பட்ட நகரப் பள்ளியில்தான் படிக்கிறேன். ஃபோர்த் ஸ்டேன்டர்ட் எ க்ரூப். எனக்கு அப்படித்தான் சொல்லித்தந்திருக்கிறார்கள். நீ என்ன படிக்கிறாய்? என்று யாராவது தமிழில் கேட்டால் கூட இப்படித்தான் சொல்ல பழக்கப்பட்டிருக்கிறேன்.
நான் ஒரு தமிழ்ச்சிறுமிதான். ஆனால் அப்படியொன்றும் தமிழ் பேசும் சிறுமியல்ல. விட்டத்துக்கும் என் வீட்டு சன்னலுக்கும் பறக்கும் சிட்டுக்குருவிக்கும் இது தெரியும். அம்மா எனக்கு முதலில் ஆங்கிலம்தான் சொல்லித்தந்தார். என் அப்பா கொஞ்சமாகத் தமிழ் பேசுவார். ஆனால் இருவருமே தமிழ் தெரிந்தவர்கள். இருவருமே ஆங்கிலத்தை விரும்புபவர்கள். நான் சாப்பிடுவதிலிருந்து எல்லா செயல்களையும் ஆங்கிலத்தில்தான் சொல்லிக்கொடுப்பார் அம்மா. நான் பிறந்ததிலிருந்தே சில தமிழ்ச் சொற்களைத்தான் அம்மா எனக்கு சொல்லியிருக்கிறார். நாங்கள் நகரத்தில் வாழ்கிறோம். தெருக்களைத் தாண்டினால் வழவழப்பான தார்ச்சாலைகள் முழுவதும் வாகனங்கள் வரிசையற்று ஓடிக்கொண்டிருக்கின்றன. அவைகள் எழுப்பும் ஒலிகள் அதிரும். அப்பா அந்த வழியேதான் தினசரி என்னை பள்ளியில் விட வருவார்.
பள்ளிக்கு செல்ல நான் தினசரி துவைத்த ஆடைகளை அணியவேண்டும். அது நல்ல சீருடைதான் என்றாலும் அம்மா எனக்காக அக்கறையாக துவைத்து தருவார். அம்மா என் மீது மிகுந்த அக்கறைகாட்டுவார். அப்பாவும் அப்படியேதான். நான் பள்ளிக்குக் கிளம்பும் கடைசி நிமிடம் வரை அம்மா எனக்கு ஆங்கில உரையாடல்களும், சில ஆங்கிலப் பாடல் களையும் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் அதன் மீது எனக்கு வெறுப்பு வரத் தொடங்கிவிட்டது. என் பள்ளியில் எனக்கு சில நண்பர்கள் உண்டு. நாங்கள் பள்ளியின் அறையில் ஆங்கிலத்தில்தான் உரையாடவேண்டும். சில தமிழ்ச் சொற்களைக்கூட நாங்கள் பேச அனுமதியில்லை. ஆனால் சில நேரங்களில் நண்பர்களிடம் நான் தமிழில் பேச முயற்சிப்பேன். என் வகுப்பில் வகுப்பு ஆசிரியர் தவிர நான்கு ஆசிரியர்கள் உண்டு. அதில் ஒரு பெண் தமிழசிரியரும் உண்டு.
அவர் மிகவும் அழகானவர். அவர் பேசும் தமிழும் அழகானவை. எனக்கு மிகவும் பிடித்தவர். அவர் எங்களுக்குச் சில கதைகளை அழகாகச் சொல்லித்தருவார். குட்டி ஆமைக்கதை, காதுகள் நீண்ட முயல்கதை, நிலா பேசும் கதை என எல்லாமுமே நல்லகதைகள்தான். அவர் வார்த்தைகளில் ஒன்று கூட ஆங்கிலம் இருக்காது. என் அம்மாகூட அப்படி பேசியதில்லை. தமிழ் ஆசிரியர் எப்போதும் சேலையும் அதற்கு தகுந்த சட்டையும் அணிந்துவருவார். அவர் எப்போதும் வகுப்பறையில் அமரமாட்டார். நின்று கொண்டேதான் பாடம் சொல்லித்தருவார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். நான் தமிழில் சில வார்த்தைகளை தவறாக உச்சரிக்கிறேன் என்று அவர் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. எப்படி நான் அதை உச்சரிக்கவேண்டும் என அன்பாய் சொல்லிக்கொடுத்தார்.
நான் நிறைய நேரம் அவர் பாடம் சொல்லிக்கொடுக்கும் போது அவரையே கவனித்தேன். அதற்கு காரணம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் என் அம்மாவாக இருந்திருக்ககூடாதா என்று கூட நான் யோசித்திருக்கிறேன். அவருடைய வீட்டுப்பாடங்களை நான் என் வீட்டில் செய்வதில்லை. அம்மாவிற்கு அது பிடிப்பதில்லை. மொத்தத்தில் நான் தமிழைத் தெரிந்துகொள்வதில் அம்மாவிற்கு விருப்பமில்லை.
என் தோழி சங்கரியிடம் என் மன வருத்தத்தை சொன்னேன். இதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. எனக்கும் அதேதான் நடக்கிறது என்றாள். அப்போழுதுதான் புரிந்தது. எல்லா அம்மாக்களும் ஆங்கிலத்தை விரும்புபவர்களாகவே இருந்தார்கள்.
போன மாதத்தின் கடைசியில் எங்கள் வீட்டிற்கு அப்பாவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அப்பாவிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கிளம்பும்போது அப்பாவிடம் சில புத்தகங்களை பரிசளித்தார். நான் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவை சில தமிழ்க் கதைப் புத்தகங்கள். அப்பா அவரிடம் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டார். அந்த நேரத்தில் அம்மா சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்தார். அப்பாவின் நண்பர் விடைபெறும் போது அம்மா வரவேற்பறைக்கு வந்துவிட்டார். கனிவுடன் அவரை அனுப்பிவிட்டு அப்பாவிடம் இருந்த புத்தகங்களை வாங்கிப் பார்த்தார். அதைப் பார்த்ததும் அவருக்கு முகம் சலிப்புற்றதை நான் கவனித்தேன். சட்டென்று உள் அறையில் இருக்கும் அலமாரிக்கு மேல் அதனை மறைத்து வைத்துவிட்டார்.
நான் அதைக் கண்டும் காணாமலும் இருந்துவிட்டேன். நான் அதனைப் பற்றி அம்மாவிடம் பேசினால் அவ்வளவுதான். “உனக்கு இப்போது தேவையில்லை. நீ பாடப்புத்தகங்களை மட்டும் படி அதுவும் அது தமிழ்ப் புத்தகங்கள்…” என்று அவர் கடுமையாகப் பேசுவார் என்பது தெரியும். இப்பொழுதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் தமிழைத் தெரிந்துகொள்வதில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஏன் வெறுப்பாகிறது என்று நான் யோசித்துக்கொண்டேயிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ அப்புத்தகங்களை வாசிக்க எனக்கு ஆர்வம் அதிகமாகிக்கொண்டே வந்தது.
ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லாதபோது எனக்கு அலமாரிக்கு மேல் வைத்திருந்த புத்தகங்களை பார்க்கத் தோன்றியது. ஓரத்தில் இருந்த மர மேசையை இழுத்து அதன்மேல் ஏறி நின்றேன். விழுந்துவிடுவோமோ என்ற பயமும் அப்போது இருந்தது. அப்படியிருந்தும் புத்தகங்களை பார்க்கும் ஆர்வத்தால் நான் மேசைமேல் ஏறி அந்தப்புத்தகங்களை எடுத்துவிட்டேன்.
அதில் இரண்டு கதைப்புத்தகங்கள் இருந்தன. மிகவும் வழவழப்பான தாளில் அச்சடிக்கப்பட்டவை. நான் புத்தகங்ளை நுகர்ந்து பார்த்தேன். எனக்கு புதிய புத்தகங்களின் நறுமணம் மிகவும் பிடித்தமானது. நான் அதில் சில பக்கங்களை அவசர அவசரமா படிக்கமுயன்றேன். அம்மா வருவதற்குள் படிக்க வேண்டிய அவசரம்தான் என்னிடம் இருந்தது. ஆனாலும் அம்மா வந்துவிடுவார் என்ற பயம் இருந்ததால் நான் அதற்கு மேல் அதனை புரட்டாமல் என் பள்ளிக்கூடப் பையில் வைத்துவிட்டேன்.
பள்ளியில் உணவு இடைவேளையின் போது படிக்கலாம் என்ற திட்டம் எனக்கு வந்திருந்தது. அந்தப் புத்தகங்களை தமிழ் ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையும் வந்தது. இரண்டுக்குமேலான தடவைகள் அந்த மாதிரியான கதைப்புத்தகங்களை அவர் வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
மறுநாள் நான் அவசரம் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தேன். எப்படியும் அந்தப்புத்தகங்களை படித்து விடும் ஆர்வம்தான் எனக்கிருந்தது. அதனால் கூட நான் அவசரப்பட்டேன். வழக்கம் போல ஆங்கிலப்பாடல் ஒன்றை அம்மாவிடம் ஒப்பித்துவிட்டு சாப்பிட்டு முடித்து அப்போவோடு கிளம்பிவிட்டேன்.
சாப்பாடு ஊட்டும்போது அம்மா என்னிடம் “ஏன் பதற்றமாய் இருக்கிறாய்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். ஆமாம் என் பதற்றத்தை மறைக்கச் சிரமப்பட்டேன். அம்மா என்மீது கொண்ட அக்கறை வன்முறைக்கு அருகில் இருப்பதாக சொல்லலாம். நான் என்ன படிக்கவேண்டும். நான் என்ன மொழியில் பேசவேண்டும் என்பதில் ஆரம்பித்து என் உடைவரை அவர் விருப்பமாகத்தான் இருந்தது.
நான் உணவு இடைவேளைக்காக காத்திருந்தேன். என் புத்தகப் பையில் இருந்த புத்தகம் என் நினைவில் இருந்துகொண்டேயிருந்தது. அந்தப் புத்தகம் என்னை எடுத்துப் பார்க்குமாறு அழைப்பது போன்று இருந்தது. நான் மிகவும் அமைதியாக இருந்தேன். உணவு இடைவேளை வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். சரண்யாவும் நானும் அந்தப் புத்தகத்தை விரித்தோம்.
படங்களுடன் கூடிய அருமையான கதைப்புத்தகம். காரட்டுக்களை தொலைத்துவிட்ட சின்ன முயல் குட்டியின் கதை முதலில் இருந்தது. துள்ளிக்குதிப்பதுபோல் ஒரு முயல் குட்டியின் படமும் இருந்தது. அதை நாங்கள் இருவரும் ஒன்றாகவே படித்துமுடித்தோம். சரண்யாவும் மகிழ்ச்சியடைந்தாள்.
தமிழ் ஆசிரியர் வகுப்பு ஆரம்பித்தபோது நான் அந்தப் புத்தகத்தை அவரிடம் எடுத்துக்கொடுத்தேன். அவர் மிகுவும் ஆச்சர்யமடைந்தார். கைகளில் வாங்கி பிரித்து பார்த்துப் புன்னகைத்தார். அவர் விரல்கள் ஒவ்வொரு பக்கமாய் பிரித்துப் பார்த்தன.
“உனக்கு கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்குமா?” என்றார் ஆசிரியர். நான் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. பதிலுக்கு சிரித்தேன். அதன் பிறகு தமிழ் ஆசிரியர் என்னிடம் மேலும் அக்கறையுடன் நடந்துகொண்டார். உணவு இடைவேளைக்குப் பிறகு கிடைத்த நேரத்தில் அவர் அறைக்கு வரச்செய்வார். எனக்கு மேலும் கதைப் புத்தகங்கள் தந்து அங்கிருந்தே படிக்கச் சொன்னார்.
எனக்கு பல தமிழ் வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. என்பதை நான் வாசிக்க ஆரம்பித்தபோதுதான் தெரிந்துகொண்டேன். நிறைய வார்த்தைகளை நான் அவரிடம் இருந்துதான் தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு நான் தமிழ்க் கதைப் புத்தகங்களை தங்கு தடையில்லாமல் வாசிக்கவும் கற்றுக்கொண்டிருந்தேன்.
அதனால் மறந்து சில நேரம் அம்மாவிடம் தமிழ் வார்த்தைகளை பேசியிருக்கிறேன்.
“உனக்கு எப்படி தமிழ் தெரிகிறது?” என ஆங்கிலத்தில் கண்கள் உருட்டிக் கோபப்பட்டுக் கேட்டார். நான் அப்போது பொய் பேசினேன்.
எனக்கு சரண்யாதான் சொல்லிக்கொடுத்தாள் என்றும் அவர்கள் வீட்டில் தமிழ்தான் பேசுகிறார்கள் என்றும் அப்போதைக்கு நான் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லிச் சமாளித்தேன். ஆனாலும் அதற்கும் அம்மா “இனி சரண்யாவிடம் நீ பேசக்கூடாது” என்று கட்டளையிட்டார்.
அந்த அளவுக்கு அம்மாவுக்கு ஆங்கிலப்பற்று இருந்தது. அதிலிருந்து நான் மிகவும் கவனமாக பேசத்தொடங்கினேன். ஆனாலும் நான் தமிழ் பேசுவதை விடவில்லை. தமிழ் ஆசிரியரிடம் அடிக்கடிப் பேசிக்கொண்டிருப்பேன். அப்படியான சமயங்களில் நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன் என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்.
அந்த ஆண்டின் வகுப்புகள் முடிவடையத் தொடங்கிய நேரத்தில் பள்ளி விழாவிற்கு தயாரானது. விழாவிற்கு முன் சில போட்டிகள் இருக்கும்தானே. நான் எதாவது போட்டியில் கலந்துகொள்ளலாமா? என்று அம்மாவிடம் கேட்டேன்.
“உனக்கு படிப்புதான் முக்கியம் இதிலெல்லாம் நீ கவனத்தை செலுத்தாதே” என்று மறுத்துவிட்டார். மறுநாள் எதாவது போட்டியில் கண்டிப்பாக என்னைக் கலந்துகொள்ள சொல்கிறார்கள் என்று நான் அம்மாவிடம் சொன்னபோது விருப்பமில்லாமல் சம்மதித்தார்.
அதுவும் ஆங்கிலப் பேச்சுப்போட்டியில்தான் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயமாக சொல்லியனுப்பினார். ஆனால் அன்றைக்கு வகுப்பறைக்கு வந்திருந்த தமிழ் ஆசிரியர் என்னை ‘தமிழ்ப் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்’ என்று சொன்னார். நான் அம்மாவின் கண்டிப்பை சொன்னேன். அப்படியானால் நீ இரண்டிலும் கலந்துகொள். எனக்காக தமிழில் கலந்துகொள் என்று சிரித்தார்.
அவர் சொன்னதுபோல் நான் தமிழ்ப் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டேன். ஆசிரியர் நான் பேசவேண்டியதை எழுதித்தந்தார் நான் படித்துவிட்டு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவரிடமே பேசிக்காட்டினேன். அவர் கைதட்டி ரசித்தார். என்னைக் கட்டி முத்தமிட்டார். சில இடங்களில் எப்படி அழுத்தம் கொடுத்து பேசவேண்டும் எனச் சொல்லித்தந்தார்.
அதைப்போலவே ஆங்கிலத்தில் அம்மாதான் பேச்சுப் போட்டிக்கு எழுதித் தந்தார். அந்த வாரம் முழுவதும் வீட்டுப்பாடங்கள் இல்லை. வீட்டிற்கு வந்தால் ஆங்கிலப் பேச்சுப்போட்டிக்காக நான் பேசவேண்டும். பள்ளியில் தமிழ்ப்பேச்சுப் போட்டிக்காக பேசவேண்டும் என அந்த வார நாள்கள் போனது.
தமிழ் ஆசிரியர் என்னிடம் வேண்டுகோள் வைத்தபடி நான் என் அம்மாவிடம் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதை சொல்லவில்லை. அதை ஏன் என்றும் நான் அவரிடம் கேட்கவில்லை. எனக்கும் அதுதான் சரியென்று பட்டது. அம்மாவிடம் சொன்னால் அப்பாவோடு சேர்ந்து சாப்பிடும்போதும், தூங்கும்போதும் வசை பாடிக்கொண்டே யிருப்பார்கள்.
ஆண்டுவிழா நாள் அறிவிக்கப்பட்டுவிட்டது. எல்லா வகுப்புகளிலும் அதற்கான முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. சிலர் மாறுவேடப்போட்டிக்காக வீட்டிலிருந்தே மாறுவேடம் போட்டுக்கொண்டு வந்தார்கள். நிறைய பாரதியார்கள், அவ்வைப்பாட்டிகள், பொய்கால் குதிரைகள், டைனோசர்கள் என்று வித விதமான வேடங்களில் மாணவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். கூடவே பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
என் வகுப்பில் சரண்யா மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்திருந்தாள். சுதந்திரதேவி வேடம். பச்சைக் கலர் பட்டுப்புடவை கட்டி கையில் தேசியக்கொடி பிடித்து நின்று வசனம் பேசவேண்டுமாம். அதுவும் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டுமாம். ஆங்கிலத்தில் பேசினால்தான் அம்மாக்களுக்கு பிடிக்குமாம். அதனால் பள்ளிகளுக்கும் அதுவே பிடிக்கும்.
விழா முழுவதுமே ஆங்கில வசனங்கள்தான் இருக்கும். தமிழ்ப் பேச்சுப்போட்டிக்கு மட்டும்தான் விதிவிலக்கு. அம்மாவின் பேச்சை மீறி நான் தமிழ்ப் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள பெயர் கொடுத்துவிட்டேன். தமிழாசிரியர் எனக்கு ஆதரவாக பேசவில்லையென்றால் நான் அதற்கு சம்மதித்திருக்க மாட்டேன்.
விழா நாள் வந்துவிட்டது. அம்மாவும் அப்பாவும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் வீட்டின் முன்புறத்தில் நின்றிருந்த மரத்தில் இருந்த தனிமையாய் உட்கார்ந்திருந்த ஓரு குருவியுடன் பேச்சுப்போட்டிக்காக தயார் செய்து வைத்திருந்ததை பேசிக்கொண்டிருந்தேன். அந்தக் குருவியும் தமிழைப் புரிந்தது மாதிரியே அமைதியாக இருந்தது. கடைசியாய் கத்தியபடியே பறந்து சென்றது. அது என்னை பாராட்டியது என்றுதான் நினைத்தேன்.
அப்பாவும் நானும் வண்டியில் ஏறிப் புறப்பட்டோம். அம்மா இன்னும் தயாராகிக்கொண்டிருந்தார். பள்ளி எப்போதும் போல இல்லாமல் இன்று திருவிழாக் கொண்டாட்டமாய் இருந்தது. சிலர் மாறுவேடங்களோடு வண்டியில் வந்து இறங்கினார்கள். இராஜா வேடம் போட்டு வந்திருந்த ஒரு மாணவனின் வாள் வளைந்து தொங்கிக்கொண்டிருந்தது.
பெற்றோர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது. ஒலிப்பெருக்கியில் ஆசிரியர் ஒருவர் விழா நடைமுறைகளை வரிசையாக சொல்லிக்கொண்டிருந்தார். அப்பா என்னை வகுப்பறை வரை வந்து விட்டுவிட்டு பார்வையாளர்கள் வரிசையில் அமர்வதாகச் சொல்லிவிட்டுப்போனார்.
நான் அப்போது யோசித்தேன். இப்பொழுதாவது அப்பாவிடம் நான் தமிழ்ப் பேச்சுப் போட்டியில்தான் கலந்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம் என்று. ஆனால் அப்பா என்னிடமிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
வகுப்பில் தமிழ் ஆசிரியர் இருந்தார். மிக அழகான சேலை கட்டியிருந்தார். சில மாணவர்கள் மாறுவேடப் போட்டிக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த வகுப்பறையே பவுடர் வாசனை நிரம்பியிருந்தது. தமிழாசிரியர் ஒரு தாளில் அசரமாக எழுதிக்கொண்டிருந்தார். மேடையில் வாசிக்க அவர் எழுதிக்கொண்டிருக்கலாம். நான் அவருக்கு முன் போய் நின்றதும். மிக அன்பாய் புன்னகைத்து என்னை அணைத்துக்கொண்டார். பின்பு மீண்டும் எழுதத் தொடங்கிவிட்டார்.
அவருடைய அணைப்பின் அன்பு என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது. நான் அவர் அருகிலேயே நின்றிருந்தேன்.
“உட்கார் மெர்னிகா… நான் இரண்டு நிமிடத்தில் முடித்துவிடுவேன்… நாம் சேர்ந்து மேடைக்கருகே போகலாம்” என்று புன்னகையோடு சொன்னார் தமிழாசியர்.
நான் சரண்யாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். சரண்யா அன்று மிக அழகான உடை உடுத்தியிருந்தாள். அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டாள். அம்மா இன்னேரத்திற்கு வந்திருப்பார் என்று தோன்றியது. நான் ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் பரிசு வாங்குவேன் என்று அம்மா எதிர்பார்த்துதான் வருகிறார். அன்றைக்கு நான் ஆங்கிலத்தில் மிக அழகாகத்தான் பேசினேன். போட்டியை பார்வையிட்ட அனைவரும் கைத்தட்டி பாராட்டினார்கள். ஆனால் என்னைவிட மிக அழகாக சிலரும் பேசினார்கள். அதே போலவே தமிழிலும் நன்றாக பேசியதாய் தமிழாசிரியர் சொன்னபோது எனக்கு மிகவும் மகிழ்வாய் இருந்தது. போட்டி முடிவுகளை பள்ளிவிழா மேடையில்தான் அறிவிப்பார்கள் என்று தமிழாசிரியர் சொல்லியிருந்தார்.
தமிழாசியர் இப்போது எழுதிமுடித்திருந்தார். சரண்யாவும் நானும் எழுந்துகொண்டோம். நானும் நண்பர்களும் தமிழாசியரின் பின்னால் நடந்தோம். விழா மேடைக்கருகே மாணவ மாணவியரின் கூட்டமும் பெற்றோர்களும் அதிகமாக இருந்தது. நான் அம்மாவை பார்வையால் தேடினேன். மேடையின் இடதுபுறத்திற்கு நேரே அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்திருந்தனர். நான் சரண்யாவிடம் அம்மாவைப் பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு கூட்டத்திற்கிடையில் நடந்தேன்.
அம்மா என்னைப் பார்த்ததும் சிரித்துக் கைநீட்டினார். நான் அருகில் போனதும் என்னை அருகில் உட்காரச் சொன்னார். நான் அமர்ந்துகொண்டேன். மேடையில் தலைமையாசிரியரும் சில ஆசிரியர்களும் விழாவிற்கான கடைசிகட்ட ஏற்பட்டை கவனமுடன் நடத்திக்கொண்டிருந்தனர்.
விழா தொடங்கிவிட்டது. பேச்சாளர்களும் சில ஆசிரியர்களும் மேடையில் உட்காரத்தொடங்கினர். ஒலிப்பெருக்கியில் விழா நடைமுறைகளைப் பற்றி ஓர் ஆசிரியர் சொல்லத் தொடங்கினார்.
வாழ்த்துப் பாடலில் ஆரம்பித்தது. சில நடனப் பாடல்கள் என மகிழ்ச்சியாய் போய்க்கொண்டிருந்தது. அப்போது சரண்யா என்னை அருகில் வந்து தமிழாசிரியர் அழைப்பதாக கூப்பிட்டாள். நானும் அம்மாவிடம் சொல்லிவிட்டு மாணவர்களுக்கிடையே நகர்ந்து மேடையின் வலது பக்கம் நின்றிருந்த தமிழாசிரியரை நோக்கி போனோம்.
“மெர்னிகா நீ இங்கேயே இரு…” என்று தமிழாசிரியர் சொன்னார். நானும் சரண்யாவும் அவர் அருகிலேயே நின்றிருந்தோம். அப்போது போட்டிகளுக்கான பரிசு அறிவிப்புகள் ஆரம்பித்தது.
எனக்கு அப்போது பதட்டமாக இருந்தது. ஒவியப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, என வரிசையாக அறிவித்தபடி ஆங்கிலப்பேச்சுப்போட்டிக்கான பரிசு அறிவிப்பும் வந்துவிட்டது. அதில் என் பெயர் வரவில்லை. அங்கிருந்தபடியே நான் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். வியர்த்திருந்தது. அவரின் முகம் கடுங்கோபத்தில் இருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் வைதேகிதான் முதலிடம் பிடித்திருந்தாள்.
அவளை அழைத்து மேடையில் பேசச்சொன்னார்கள். வைதேகி ஆங்கிலத்தில் சரளமாக பேசி முடித்தாள். எல்லோரும் கைதட்டினார்கள். அம்மாவின் முகம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இறுக்கமான கோபத்துடன் இருந்தது. இனி இரண்டு வாரம் அம்மாவின் கோபம் என் மீது நீடிக்கும் என்று நினைத்தேன்.
தமிழாசிரியர் நிதானமாக இருந்தார். அவர் என் தோள்களை தொட்டார். அதில் என்னால் ஆறுதல்கொள்ள முடிந்தது. அடுத்தது தமிழ்ப் பேச்சுப்போட்டியின் அறிவிப்பில் முதலிடம் என என் பெயர் அறிவிக்கப்பட்டது.
என்ன நடக்கிறது என்பதை நான் யோசிக்கவே முடியவில்லை. இப்போது என் அம்மாவின் முகம் ஆச்சர்யமாய் விரிந்ததைப் பார்த்தேன். என்னைப் மேடையில் பேச அழைத்தார்கள். தமிழாசிரியர் என் கண்ணத்தை வருடி மேடைக்கு போகும்படி சொன்னார். நான் அந்த தருணத்தை எதிர்பார்க்கவில்லை. நான் மேடையில் ஏறும்போதே அம்மாவின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் கவனிக்கத் தவறவில்லை.
மொத்தப் பதட்டமும் என்னிடம்தான் இருந்தது. நான் மேடையேறி சற்று மௌனமாக நின்றிருந்தேன். ஆமாம் நான் வெற்றியடைந்தவள்தான். நான் மேடையேறும்போது ஆரம்பித்த கைத்தட்டல்கள் குறைந்து இப்போது அமைதியாகிவிட்டது. நான் பேசத்தான் வேண்டும். நான் என் அழகான தமிழாசிரியரின் முகத்தைப் பார்க்கிறேன். கருணை மிக்க அவரின் பார்வை என்ன மெச்சிக்கொண்டிருந்தது.
என் வீட்டுச் சன்னலுக்கருகில் உட்கார்ந்திருந்த ஒரு குட்டிக்குருவிக்கு பேசிக்காட்டியபடி, என் அழகுத் தமிழாசிரியரிடம் நான் பேசிக்காட்டியபடி தமிழின் மிகச்சிறந்த பாட்டுப்புலவன் பாவேந்தர் பற்றி நான் பேச ஆரம்பித்தேன். செருக்குடன் நிமிர்ந்து நின்று நான் பேச ஆரம்பித்தேன். கைகளை உயர்த்தி வீரம் பொங்க பொங்க நான் பேசிக்கொண்டே என் ஆங்கில விரும்பிகளான அம்மாவையும் அப்பாவையும் கவனித்துக்கொண்டே பேசினேன்…
இருவர் கண்களும் நீர் தழும்பி வழிவதைக் கவனித்தவாறே இனிய தமிழில் நான்…பேசிக்கொண்டிருந்தேன்.
***
என்னவொரு அற்புதமான கதை! இந்தக்கதைக்கு விளக்கமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க நடுகலிற்கு நேரமில்லை! வாசியுங்கள் சிறார் கதைப்பிரியர்களே!- நடுகல்

வன்மி என்னும் பெயரில் அச்சு இதழ்களில் சில கவிதைகள் வந்திருக்கிறது. பட்டுக்கோட்டைதான் சொந்த ஊர். புகைப்படக் கலைஞன், வடிவமைப்பாளன், எழுத்தாளன், ஓவியன் எனும் பணிகளில் விருப்பத்துடன் இயங்குகிறேன். தற்போது பள்ளிக் கல்வித்துறையிலிருந்து வரும் ‘தேன்சிட்டு’ ‘ஊஞ்சல்’ சிறார் இதழ்களின் வடிவமைப்பாளராக பணி செய்கிறேன். ‘பறக்கும் வெண்குதிரை’ ‘எறும்புகளின் நகரம்’ என இரண்டு சிறார் நாவல்கள் எழுதியிருக்கிறேன்.

