-தயாஜி
வேலையில் மன உளைச்சல். அதுவும் காலையில். வேலையே இல்லாமல் இருக்கும் போது வந்த மனஉளைச்சலை இப்போது யோசித்துப் பார்க்கையில் இந்த உளைச்சல் எல்லாம் அவ்வளவு உயரமாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில் இதுவும் வலிக்கத்தான் செய்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் வீட்டு வாடகையைக் கட்ட வேண்டும். மகளுக்கு உடல்நலமில்லாததால் கையில் வைத்திருந்த பணம் அப்படியே செலவாகிவிட்டது. அதுதான் இன்னும் ஒரு வாரம் இருக்கின்றதே; அதற்கு வீட்டு வாடகைக்கான பணத்தை ஏற்பாடு செய்திடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் நாம் நம்பும் நம்பிக்கை பல சமயங்களில் நம் கைகளில் இருப்பதில்லை என இரண்டு நாட்களில் தெரிந்தது.
இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்களில் டெலிவரிகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. காருக்கான பெட்ரோல் போக கையில் மிஞ்சியது கொஞ்சத்திலும் கொஞ்சம்தான். இன்னும் ஐந்து நாட்களில் திட்டமிட்டபடி கூடுதலாக ஆடர் எடுக்க வேண்டும். அதற்கு காலையிலேயே காரை எடுக்க வேண்டும். அலுவலகங்கள் அல்லது சாப்பாட்டு கடை வரிசையில் காரை நிறுத்தி காத்திருக்க வேண்டும். எப்போதும் அங்குதான் அதிகமாக டெலிவரிகள் கிடைக்கும்.
காலையிலேயே முதல் ஆடர். காரை அப்போதுதான் அந்தக் கடை வரிசையில் நிறுத்தினேன். உடனே ஆடர் கிடைத்துவிட்டது. ஆனால் கிடைத்த ஆடர் கடை வரிசைக்கு பின்னால் இருக்கும் வீட்டிலிருந்து ஆடர் வந்தது. உடனே நான் வருவதாக செய்தியை கஸ்டமருக்கு அனுப்பிட்டு புறப்பட்டேன்.
வீட்டு வருசைக்குச் சென்றேன். காலை என்பதால் பொதுவாகவே எல்லோரும் வேலைக்கோ எங்கோ சென்றுவிட்டது போல அந்தத் வரிசை முழுக்க உள்ள வீடுகள் பூட்டியிருந்தன. கார் கடந்து செல்வதற்கு முன்னமே; ஒரு பெண் வாசற்கதைத் திறந்து எனது காருக்கு கையைக் காட்டினார். அவர்தான் இன்றைய முதல் கஸ்டமர். கடவுளாய் அனுப்பிய முதல் முதலாளி. ஆமாம் முதலாளிதானே. அவர்தானே இன்றைய நாளின் வருமானத்திற்கு பிள்ளையார் சுழி போடப்போகின்றார்.
காரை நிறுத்திவிட்டு இறங்கி வணக்கம் சொல்லிவிட்டு நாந்தான் டெலிவரி எடுக்க வந்தவன் என என்னை அறிமுகம் செய்து கொண்டேன். முன்னமே எங்கள் இருவரது கைப்பேசி அப்லிகேஷனின் அந்த செய்தி இருக்கும். இருந்தாலும் ஒவ்வொருமுறையும் எங்களை இப்படி அறிமுகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் சின்ன கவனக்குறைவு கூட யாரோ செல்ல வேண்டிய டெலிவரிக்கு யாரோ சென்றுவிட வாய்ப்புள்ளது.
இன்றைய முதல் கஸ்டமரின் கஸ்டமருக்கு பிறந்தநாள் அணிச்சலைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டுமாம். ஆம் இவர் வீட்டிலேயே அணிச்சலைச் செய்து விற்பனை செய்யும் பெண். காலையிலேயே அணிச்சலை அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருக்கிறார். முன்பு போல இல்லாமல்; யாரும் எங்கிருந்தும் எத்தனை மணி என்றாலும் பொருட்களையும் உணவுகளையும் டெலிவரி செய்வதற்கான வசதி வாய்ப்புகள் இருப்பதை அவர் பயன்படுத்திக்கொண்டார்.
என்னைக் காத்திருக்க சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றவர் கையில் பெரிய பெட்டி ஒன்றை எடுத்து வந்தார்.
“கார்ல ஏர்கோன் இருக்கா…?” என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருந்தது.
என் காரில் ஏர்கோன் இருக்கிறது உங்கள் கையில் என்ன இருக்கிறது என்றேன். சிரித்தபடி கஸ்டமருக்கு அணிச்சலை அனுப்ப வேண்டும் என்றார். இங்கிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை ஆகும். கடந்த முறை இப்படி அணிச்சலை அனுப்பும் போது சூட்டால் சில இடங்களில் உருகி விட்டதாகவும் இன்னொரு முறை அனுப்பிய அணிச்சல் கொஞ்சம் சேதமாகியும் கஸ்டமருக்கு கிடைத்ததைக் குறித்து பேசினார். அதனால் அவரது வியபாரத்திற்கும் கெட்ட பெயர் என வருத்தப்பட்டார். அதுதான் காரில் குளிர்சாதன வசதி இருப்பதை உறுதி செய்ததாகக் கூறினார்.
இரண்டு நாட்களாக செய்த அணிச்சல் அதுவென சொல்லியபடி என்னிடம் அந்தப் பெட்டியைக் கொடுத்தார். நானும் அந்தப் பெட்டியை வாங்கி கொண்டு காரின் முன் வரிசை நாற்காலியை முன்னமே நகர்த்தியிருந்ததால் அதன் கீழ் கால் வைக்கும் பெட்டியை வைத்தேன்.
தெரிந்தோ தெரியாமலோ டெலிவரி செய்கிறவர்களுக்கும் அவரது இந்தச் சிறு தொழிலுக்கு பாட்னர் போல ஆகிவிட்டார்கள் என்றார். அழகாய்ச் செய்த அணிச்சல் அதற்குரியவர்களிடம் சென்று சேர்ப்பதும் பெரிய வேலைதானே என்றார். அதில் கொஞ்சம் தவறு நடந்தாலும் அவருக்கு அதனால் பெரிய பாதிப்பு வந்துவிடும் என்றார்.
பெட்டியை வாங்கி, கோ டிரைவர் சீட்டின் கீழ் வைத்த நான், காரில் குளிர்சாதன வசதி இருப்பதை மீண்டும் ஒரு முறை அவரிடம் சொல்லிவிட்டு சிரித்தேன். உங்கள் பாட்னர் பொறுப்பாக நடந்து கொள்வார் என்றேன்
அவரும் சிரித்தபடி ஐந்து ரிங்கிட்டை எடுத்து கொடுத்தார். நான் கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அப்லிக்கேஷ்னில் அவர் பணம் செலுத்தியுள்ளதாகக் காட்டியது. பெட்டியைச் சேர்த்ததும் எனக்கு அந்தப் பணம் கிடைக்கும். அதனை அவரிடம் சொன்னேன்.
“அது தெரியும்ங்க… இது உங்களுக்கு… நீங்கள் எங்களுக்கு பாட்னர்தான.. இது உங்க பங்கு கமிஷன் என்றபடி என்னைவிட அழகாய்ச் சிரித்துவிட்டு வீட்டிற்குள் சென்றார்
நானும் சிரித்தபடி காரில் ஏறி அமர்ந்தேன். இடது பக்கத்தில் இருக்கும் அந்த அணிச்சல் பெட்டியைப் பார்த்தேன். அழகாய் இருந்ததும் உள்ளே இருக்கும் அணிச்சலையும் பார்க்க முடிந்தது. யாரோ ஒருவர் தன் குழந்தையின் இரண்டு வயது அணிச்சலுக்கு ஆடர் கொடுத்திருக்கின்றார். அதில் எழுதிய பெயரை வாசிக்க முடியவில்லை. ஆனால் அதில் அமர்ந்திருந்த ஸ்பைடர்மேன் பொம்மையைப் பார்த்ததும் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று யூகித்து கொண்டேன்.
காலையிலேயே இப்படிபட்ட கஸ்டமர்கள் நமக்கு கிடைப்பது எவ்வளவு நல்லாருக்கு, என்று நினைத்தபடி கிளம்பினேன்.
அடுத்ததாய் நடக்கப் போவதை அப்போது நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.
நான செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னும் சரியாக நாற்பத்து ஐந்து நிமிடங்கள் இருப்பதை கைப்பேசியில் காட்டியது ‘கூகள் மேப்’. வாகனத்தில் அணிச்சல் இருப்பதால் இதைவிட வேகமாக ஓட்ட முடியாது. வேறேதும் பொருட்கள் டெலிவரிக்கு வந்திருந்தால் கூகள் மேப் சொல்லும் நேரத்திற்கு முன்னமே சென்று சேர்ந்துவிடுவேன். இன்று ஓரளவிற்கு வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்தபடி வாகனத்தைச் செலுத்தினேன்.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சமயம் என் வழியில் சட்டென ஒரு மஞ்சள் நிற வாகனம் குறுக்கிட்டது. முன்னறிப்பாக வலதுபக்க சமிக்ஞை எதுவும் இல்லாமல் அந்த வாகனம் நுழைந்ததால் சட்டென எனது வேகத்தைக் குறைக்கவும்; நாற்காலிக்கு கீழ் வைத்திருந்த அணிச்சல் பெட்டி சட்டென கொஞ்சம் முன்னகர்ந்து பின் செல்லவும் சரியாக இருந்தது.
எனக்கு கோவம் வந்துவிட்டது. காரின் ‘ஹார்னை’ அடித்தேன். என் வாகனத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவ்வப்போது ‘ஹார்ன்’ அடிக்காது. வேகமாக அழுத்த வேண்டும். அந்த நினைப்பிலேயே ஹார்னை வேகமாக அழுத்த, இன்றும் மட்டும் ஏனோ பயங்கர சத்தமாய்க் கேட்டது. அந்தச் சத்தம் எனக்கே பயத்தைக் கொடுத்தது.
அந்தச் சத்தம், குறுக்கே வந்த வாகனமோட்டியைக் கோவப்படுத்தியிருக்க வேண்டும். சட்டென இடது பக்கமாக வாகனத்தை செலுத்தினார். வந்த இடத்திற்கே அவரது கார் எந்தவித சமிக்ஞையும் இல்லாது வெட்டிச் சென்றது. நான் வழக்கம் போல நேரே செல்லத் தொடங்கினேன். அந்த மஞ்சள் நிறக்கார் இப்போது எனது இடது பக்கத்தில் எனது காருக்கு சரிக்கு சரியாக வந்தது.
அந்த மஞ்சள் காரில் யாரென நான் பார்க்கவும், எவண்டா எனக்கு ஹார்ன் அடிச்சது என அங்கிருப்பவர்கள் என்னைப் பார்க்கவும் சரியாக இருந்தது.
‘ஓ தமிழரா…?’ என நானும், ‘டேய் தமிழனா நீ…!!’ என அவர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்.
காரை ஓட்டுகின்றவரின் பக்கத்தில் அவரது நண்பரும் இருந்தார். அதனால்தான் என்னவோ அவருக்கு என் மீது கோவம் அதிகமாகியது. அவர் தனியாக வந்திருந்திருந்தால் கூட இப்படி ஆவேசப்பட்டிருக்க மாட்டார் போல. அந்த மஞ்சள் கார் எனது வாகனத்தை இடிப்பது போல வரத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் என் வழியில் குறுக்கே வருவது போல வித்தை காட்டியது.
எனக்கும் வயிற்றில் புளியில் இருந்து ஏதேதோ கரையத் தொடங்கியது. இந்தச் சூழலில் எனது காரை ஓரத்தில் நிறுத்தவும் முடியாது. தமிழன் என்ற ஒரே காரணம் போதும் இன்னொரு தமிழன் என்னை அடித்துவிட்டு அப்பறம் நடந்ததைப் பற்றி விசாரிப்பதற்கு.
இதனால் அணிச்சலுக்கு ஏதும் ஆகிவிட்டால் அது என் வேலைக்கே சிக்கலாகிவிடும். இப்போதுதான் 3 முதல் 4 ஸ்டார்கள் வரை எனது கஸ்டமர்களிடம் வாங்க ஆரம்பித்திருக்கின்றேன்.
நான் எனது காரை நிறுத்தாமலேயே அந்த மஞ்சள் காரையும் அவர்கள் செய்யும் தொந்தரவுகளையும் சமாளித்தவாறு சென்று கொண்டிருந்தேன். இதற்கிடையில் இப்போதுதான் அணிச்சல் பெட்டிய கூடுதலாக கவனித்தேன் அணிச்சலில் அமர்ந்திருந்த ஸ்பைடர்மேன் அதிலேயே கவிழ்ந்து கிடக்கின்றான்.
“அட ஆண்டவா…!!”
இன்றைக்கு அவ்வளவுதான் என நினைத்தபடி இருபது நிமிட போராட்டத்திற்கு பின் அந்த மஞ்சள் நிற காரில் இருந்து தனியாய்ப் பிரிந்து கஸ்டமரின் முகவரியை அடைந்தேன்.
அது அடுக்குமாடி குடியிருப்பு. அங்கு குடியிருப்பவர்களுக்கு என்னைப்போன்ற டெலிவரிக்கு வருகிறவர்களுக்குமென இரு வழிகளை ஒதுக்கியிருந்தார்கள். எங்களுக்கான வழியில் காரை நிறுத்தி நான் வந்திருக்கும் விபரங்களை அங்குள்ள காவலாளியிடம் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்து காரை அதற்குரிய நிறுத்தத்தில் நிறுத்திவைத்தேன்.
என் ஒருவனின் காரைத் தவிர மற்ற எல்லா கார்களும் கப்பல் போல இருந்தன. இவ்வளவு பெரிய காரை வைத்துக் கொண்டு எதற்காக இவர்கள் இவ்வளவு பெரிய வீடுகளில் வசிக்கிறார்கள். காரிலேயே வாழ்ந்துவிடலாம்தான் என எனக்கு நானே என் நிலைமை புரியாமல் உளற தொடங்கியிருந்தேன்.
காரில் இருந்த அணிச்சல் பெட்டியை எடுத்தேன். உள்ளே கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர் மேன் பாவமாக பார்த்தேன். இன்று அவன் பாவமல்ல இவன்தான் பாவம் என சொல்வது போல என் முகத்தில் ஒரு பகுதி அந்த அட்டைப்பெட்டியின் ஒரு பக்க நெகிழியில் தெரிந்தது.
அங்கிருந்தபடி கஸ்டமரை அழைத்தேன். நான் வந்த செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்திருப்பது அவர்களின் உற்சாகமான குரலில் கேட்டது. அந்த உற்சாகம் கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர்மேனைப் பார்க்கும் போது இருக்குமா என தெரியவில்லை. அதோ அப்பாவும் மகனுமாய் உற்சாகமாக என்னை நோக்கி அவர்கள் வருகிறார்கள். அணிச்சலைப் பார்த்ததும்….. மேற்கொண்டு என்னால் அதனை யோசிக்க முடியவில்லை. எப்படியும் காலையிலே இந்த டெலிவரியாய் எனக்கு அடுத்தடுத்த டெலிவரிகள் கிடைக்காமல் போகப்போகிறது. கஸ்டமர் உடனே என் மீது புகார் செய்யப் போகிறார். இன்று முழுக்க சமூக ஊடகங்களில் என் முகமும் கவிழ்ந்துகிடக்கும் ஸ்பைடர்மேன் முகமும்தான் மாறிமாறி பேசு பொருளாக வரப்போகிறது.
இவனுங்களையெல்லாம் யார் டெலிவரி வேலைக்கு கூப்பிடுவது. ஒரு அணிச்சலக் கூடவா பொறுப்பாக கொண்டு போக முடியாது. அது என்ன காரா இல்லை விமானமா என்கிற மாதிரி பல கருத்துகளின் என்னை குளிப்பாட்ட போகிறார்கள்.
தூரத்தில் இருந்தபடியே கையை அசைத்தபடி வந்து கொண்டிருக்கிறார் அப்பா. நானும் அந்த அணிச்சல் பெட்டியை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி நடக்கின்றேன். அப்பாவிற்கு அருகில் உற்சாகத்தில் குதித்து கொண்டே வருகிறான் குட்டி ஸ்பைடர் மேன். அந்தச் சிறுவனும் இன்று ஸ்பைடர் மேன் சட்டையோடுதான் வருகிறான். அப்படியும் இப்படியும் அந்தக் குட்டி ஸ்பைடர் மேன் குதித்தபடியும் கையையும் காலையும் ஆட்டியபடியும் வந்து கொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் அவன் குதித்த குதியில் அவனது கால் வழுக்கிவிட்டது. பொட்டென கீழே விழுந்தான். அழுதான். அப்பா அவனை தூக்க்லி நிறுத்தி சமாதானம் செய்தபடி இருந்தார் நானும் பெட்டியுடன் அவர்களிடம் ஓடினேன்.
பையன் எழுந்து நின்று என்னைப் பார்த்தான். அப்பாவும் என்னைப் பார்த்தார். அணிச்சலை வாங்கினார். அதில் கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர் மேனைப் பார்த்தார். மகனும் பார்க்கலானான். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கலானார்கள்.
“பாரு தம்பி…. ஸ்பைடர் மேனும் உன்னைப் போலவே விழுந்துட்டாரு…” என்றேன் பையனும் அப்பாவும் ஒருசேர சிரிக்கிறார்கள். எனக்குமே சிரிப்பு வந்தது. பின் அணிச்சல் பெட்டியை வாங்கி கொண்டார்கள். குட்டி ஸ்பைடர் மேனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லியபடி விடைபெற்றேன். பழையபடி உற்சாகத்தோடு அப்பாவும் குட்டி ஸ்பைடர் மேனும் துள்ளியபடி நடந்து கொண்டே உள்ளே செல்கிறார்கள்.
வாகனத்தில் ஏறி அமர்கிறேன். கைப்பேசியில் ஒரு சத்தம். இன்றைய முதல் டெலிவரி வேலைக்கான பணம் சேர்ந்ததாய்ச் அப்லிகேஷன் சொன்னது. அதோடு என் வேலைக்கு இன்று 5 ஸ்டார். இரண்டு கஸ்டமர்களும் என் வேலையைப் பற்றி நல்லபடியான கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
கவிழ்ந்த ஸ்பைடர் மேனுக்கும் அந்த குட்டி ஸ்பைடர் மேனுக்கும் நன்றி சொல்லியபடி வாகனத்தை கிளப்பினேன்.
எங்கள் டெலிவரி வேலையாட்கள் இருக்கும் வட்சப் குழுவில் ஒரு செய்தி வந்தது. நான் வந்த வழியில் ஏதோ விபத்து நடந்து கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதைப் படம் ஒருவர் படமெடுத்து அனுப்பியிருந்தார். அந்த வழியில் டெலிவரி செல்ல தாமதமாகலாம் என்ற குறிப்பையும் எழுதியிருந்தார். எனக்கு என்னமோ சுருக்கென்றது. அந்தப் புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்கிறேன்.
ஸ்பைடர் மேன் போல கவிழ்ந்து கிடக்கும் அந்தக் கார், கொஞ்சம் மஞ்சளாக இருக்கிறது…..
00

எழுத்தாளர் தயாஜி.
மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

