– ஏ.நஸ்புள்ளாஹ்
மதிய வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. காதர் காக்கா தன் வீட்டுத் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாற்காலி அவர் மூதாதையர் காலத்து மரம். உட்கார்ந்தால் எலும்புகள் முடறிக் கொண்டு முனங்கும். அதைப் போலவே காதர் காக்காவின் மூட்டுகளும் மழைக்காலங்களில் முனங்கும்.
வீட்டின் பக்கவாட்டுச் சுவர் ரொம்பவும் உயரமானது. சிவப்புச் செங்கற்களால் கட்டப்பட்டு மேல் கூர்மையான கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. அந்தச் சுவருக்கு அப்பால் இருப்பது ஒரு பெரிய மனநலக் காப்பகம். காக்காவுக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். கடந்த பத்தாண்டுகளாகவே அந்தச் சுவர்தான் அவரது உலகம். சுவருக்கு அப்புறம் நடப்பதைக் கவனிப்பதும் அங்கிருந்து வரும் சத்தங்களைக் கேட்பதும்தான் அவரது பொழுதுபோக்கு.
”காக்கா… சாப்பாடு எடுத்துக்கங்க,” என்று குரல் கொடுத்தாள் பக்கத்து வீட்டு ஜைனப். அவளுக்கு வயது முப்பது இருக்கும். கணவனை இழந்தவள். காக்காவுக்குச் சோறு கொண்டு வந்து தருவது அவள் வழக்கம்.
”கொண்டு வாம்மா ஜைனப்,” என்றார் காக்கா தலையைத் திருப்பாமல். அவர் பார்வை சுவரோரம் வளர்ந்திருந்த செடியின் மீதுதான் இருந்தது.
”எப்ப பார்த்தாலும் அந்தச் சுவரையே பாத்துக்கிட்டு இருந்தா என்ன காக்கா கிடைக்கும்? உள்ள இருக்கவங்க என்னவோ பைத்தியம்… நீங்க ஏன் உங்களோட நிம்மதியைக் கெடுத்துக்கிறீங்க?” என்றாள் ஜைனப் அலுப்புடன்.
காதர் காக்கா மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் பற்கள் முழுவதும் தெரிந்தன.
“உனக்கு ஒன்னும் புரியாதும்மா ஜைனப். உள்ளே இருக்கிறவங்க பைத்தியங்கள்னு யார் சொன்னது? அவங்களை நாம்தானே அப்படி முத்திரை குத்தி அடைச்சு வச்சிருக்கோம். வெளியே இருக்கிற நாமதான் ரொம்பச் சரியா நடந்துக்கிறோமா என்ன?”
ஜைனப் சோற்றுத் தட்டைக் கீழே வைத்துவிட்டு.
“எனக்கு அதெல்லாம் தெரியாது காக்கா. சாப்பிடுங்க,” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
காக்கா தட்டை இழுத்து வைத்துக் கொண்டார். சோற்றில் முருங்கைக்காய் சாம்பார் ஊறி நின்றது. ஒரு பிடி அள்ளி வாயில் போட்டுக் கொண்டே, மீண்டும் சுவரை நோக்கினார்.
சுவருக்கு அப்பால் உள்ளே பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அதன் நிழலில் எப்போதும் ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பான். அவனுக்குத் தாடி நெஞ்சு வரை வளர்ந்திருக்கும். வெள்ளை நிற சாரன் அணிந்திருப்பான். யாரிடமும் பேச மாட்டான். யாராவது சத்தமாகப் பேசினால் மட்டும் எழுந்து நின்று கை தட்டிச் சிரிப்பான். அவனுக்கு அங்கு வேலை பார்ப்பவர்கள் கைதி எண் 42 என்று பெயர் வைத்திருப்பதாகக் காக்கா கேள்விப்பட்டிருக்கிறார்.
இன்று அந்த மனிதன் என்ன செய்கிறான் என்று பார்க்க, காக்கா தனது நாற்காலியைச் சுவருக்கு அருகில் இழுத்துப் போட்டார். அதன் மீது ஏறி நின்று சுவரோரம் எட்டிப் பார்த்தார்.
அந்த ஆலமரத்தடியில் இன்று விசித்திரமானதொரு காட்சி.
நடு வயதுடைய ஒருவன் கையில் ஒரு காகிதத்தைக் வைத்துக் கொண்டு, காப்பகத்தின் காவலாளியிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசும் விதம் மிக நாகரிகமாக இருந்தது. இஸ்திரி போட்ட வெள்ளைச் சட்டை பளபளக்கும் காலணி. ஆனாலும் அவன் பேசியது என்ன?
”நான் அமெரிக்க அதிபரின் தூதுவன். என்னை உடனே ரகசிய விமானத்தில் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் இந்த உலகம் நாளைக்குச் சாம்பலாகிவிடும்,” என்றான் அந்த மனிதன். மிகவும் தீவிரமாக கண்ணீருடன் கைகூப்பி வேண்டிக் கொண்டிருந்தான்.
காவலாளி அவனிடம் சாவகாசமாக “சரி நண்பரே… நாளைக்குக் காலையில விமானம் வருது ஏறிப் போயிடலாம். இப்போ உள்ளே போய்க் கஞ்சி குடிங்க,” என்று சொல்லித் தள்ளினான்.
காதர் காக்கா இதைப் பார்த்துத் தன் தாடியைத் தடவிக் கொண்டார். அமெரிக்க அதிபரின் தூதுவன் என்று தன்னை நம்பிக் கொண்டிருக்கும் அந்த மனிதன் பைத்தியமா? அல்லது தன் சொந்தக் கடையை விற்க முடியாமலும் மூன்று லட்ச ரூபாய் கடனை அடைக்க வழி தெரியாமலும் நள்ளிரவில் நெஞ்சு விறைத்துச் மௌத்தாப் போகிறாரே ஒரு மளிகைக் கடைக்காரர் சுலைமான்… அவர்தான் பைத்தியமா?
காதர் காக்காவுக்குத் தன் நினைவுகள் நிழலாடின. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு பெரிய துணிக்கடை வைத்திருந்தார். நல்ல வியாபாரம். தன் தம்பியை நம்பி எல்லாவற்றையும் ஒப்படைத்தபோது, ஒரு நாள் அவன் கடையைக் காலி செய்துவிட்டு ஓடிவிட்டான். கடன்கள் காக்காவின் தலையில் விழுந்தன. சொந்தக்காரர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். மனைவியோ.
“உங்களால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டுப் பிள்ளைகளுடன் தன் தாய்வீட்டுக்குப் போய்விட்டாள்.
அன்று முதல் காக்கா தனிமரம். இந்த வீடும் ஒரு காலத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதை எப்படியோ சமாளித்து இன்று வரை வாழ்ந்து வருகிறார்.
”நான் பைத்தியமா? அல்லது என்னை ஏமாற்றிய அந்தச் சமூகம் பைத்தியமா?” இந்த உலகத்தோடு மல்லுக்கட்டத் தெம்பு இல்லாமல் இந்தச் சுவரோரம் ஒதுங்கி வாழ்வது ஒரு வகையான பைத்தியக்காரத்தனம்தானா?
மாலையில் சூரியன் மறையும் நேரம். தொழுகைக்கான நேரம் நெருங்கியது. காக்கா மிக அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று உளூச் செய்துவிட்டு, தொழுகையில் இணைந்து கொண்டார்.
தொழுகையை முடித்துவிட்டு வெளியேறியபோது சுவருக்கு அப்பாலிருந்து ஒரு பெண்குரல் கேட்டது. அந்தச் சத்தம் காக்காவைத் திடுக்கிடச் செய்தது. மிக மெல்லிய இருப்பினும் ஆழமான குரல்.
”என்னை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை? நான் யாரிடமும் எதையும் கேட்கவில்லையே… என் குழந்தையை மட்டும் என்னிடம் கொடுங்கள்…”
அது ஒரு இளம் பெண்ணின் குரல். காக்காவுக்கு அந்தக் குரல் எங்கேயோ கேட்டது போல் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன் மகளைப் பிரிந்தபோது அவள் வெளிப்படுத்திய அழுகைக் குரல் அது.
காக்கா மீண்டும் சுவரோரம் உள்ள நாற்காலியில் வந்து அமர்ந்தார். அந்தச் சுவரின் குளிர் காற்று அவர் முகத்தில் அடித்தது.
சுவருக்கு அப்பால் உள்ள அந்தப் பெரிய வளாகம் இப்போது அமைதியாகிக் கொண்டிருந்தது. இரவின் இருள் அந்த மரங்களை மூடத் தொடங்கியது. மனநலக் காப்பகத்தின் மின் விளக்குகள் ஒவ்வொன்றாக எரிந்தன. மஞ்சள் வெளிச்சம் அந்தத் தோட்டத்தை ஒரு விசித்திரமான உலகமாக மாற்றியது.
வெளியே இருக்கும் சாலை வழியாகச் சில கார்கள் வேகமாகச் சென்றன. ஹார்ன் சத்தங்கள் காதுகளைப் பிளந்தன. இளைஞர்கள் சிலர் பைக்கை விபத்து ஏற்படும் வேகத்தில் ஓட்டிச் சென்று சிரித்துக் கொண்டிருந்தனர். அரசியல்வாதிகள் போஸ்டர்களில் ஒட்டப்பட்ட முகங்களோடு மக்களைப் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். தேர்தல் நெருங்குகிறது. ஊரில் எங்கு பார்த்தாலும் பொய்யான வாக்குறுதிகள்.
காக்கா யோசித்தார்.
”உள்ளே இருப்பவர்கள் தங்களுக்குப் பிடித்த உலகில் வாழ்கிறார்கள். தங்களை யாரோ காப்பாற்றுகிறார்கள் என்றோ அல்லது தாங்களே ஏதோ ஒரு பெரிய ராஜாவின் பரம்பரை என்றோ நம்பி நிம்மதியாகத் தூங்குகிறார்கள். வெளியே இருக்கும் நாமோ… எது உண்மை எது பொய் என்றுகூடத் தெரியாமல், நாளையச் சோற்றுக்காகவும் பணத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். யாருக்கு நிம்மதி இருக்கு?”
அப்போது காப்பகத்தில் வேலை பார்க்கும் ஒருவன் சுவருக்கு அருகில் வந்து எதையோ தேடத் தொடங்கினான். அப்போது அவன் காக்காவைப் பார்த்துவிட்டான்.
”என்ன காக்கா… மறுபடியும் சுவரேறிப் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கேட்டான் சிரித்துக் கொண்டே.
காக்கா புன்னகைத்தார். “ஒன்னுமில்லப்பா… உள்ளே இருக்கிறவங்க எப்படி இருக்காங்கன்னு சும்மா ஒரு பார்வை.”
”அவங்க என்ன காக்கா மாறுவாங்க? அவங்களுக்குத் தலையில் கோளாறு. நம்மால என்ன செய்ய முடியும்?” என்றான் அவன்.
காக்கா மெல்லிய குரலில் கேட்டார், “தம்பி… உண்மையைச் சொல். உள்ளே இருக்கிறவங்க தலையில் கோளாறா இல்லை வெளியே இருக்கிற நம்முடைய சமுதாயத்தின் மூளையிலா கோளாறு?”
அவன் சற்று யோசித்தான். அவனுக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புரியவில்லை. தலையைச் சொறிந்து கொண்டே,
“உங்களுக்கு எப்பவுமே தத்துவம் பேசுறதுதான் வேலை காக்கா,” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.
இரவு ஆழ்ந்தது. ஊர் முழுவதும் உறங்கப் போய்விட்டது. காக்கா மட்டும் தன் சாய்வு நாற்காலியில் அப்படியே அமர்ந்திருந்தார். காற்று சில்லென்று வீசியது.
சுவருக்கு அப்பாலிருந்து இப்போது எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அந்த மௌனம் காக்காவுக்கு ஒரு விசித்திரமான அமைதியைத் தந்தது.
”பைத்தியக்காரத் தோட்டம்…” என்று முணுமுணுத்தார் காக்கா.
யார் பைத்தியக்காரர்கள்? உள்ளே இருப்பதாலேயே அவர்கள் பைத்தியங்களாகிறார்களா? அல்லது வெளியே இருந்து கொண்டு உலகத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பவர்களா நாம்?
காதர் காக்கா தன் கண்களை மூடிக்கொண்டார். விடியும் வரை அந்தச் சுவரும் அவரும் மட்டுமே சாட்சியாக நின்றிருந்தனர். மனிதர்களின் மதிமயக்கங்களை மறைக்கக் கட்டப்பட்ட அந்தச் செங்கற்கள், இரவின் அமைதியில் ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.
…….
விடியற்காலை. ஃபஜ்ர் தொழுகையின் குளிர்ந்த காற்று ஊரின் மீது போர்வையைப் போலப் போர்த்தியிருந்தது.பள்ளிவாசலிருந்து பாங்கு சத்தம் மெலிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. காதர் காக்கா வழக்கத்தைவிட முன்கூட்டியே கண் விழித்துவிட்டார். இரவெல்லாம் அந்தச் சாய்வு நாற்காலியிலேயே தூங்கியதால் கழுத்துப் பகுதியில் ஒரு பிடிப்பு இருந்தது. கைகளால் கழுத்தைத் தடவி விட்டுக் கொண்டே அவர் எழுந்தார்.
வீட்டின் கதவைத் திறந்தபோது தெருமுனையில் பால் காரனின் சைக்கிள் மணியோசை கேட்டது. வழக்கம்போலவே இன்றும் வாழ்க்கை தன் எந்திரத்தனமான ஓட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. காக்காவின் மனம் நேற்று நின்ற இடத்திலேயேதான் நின்றுகொண்டிருந்தது.
”காக்கா… காக்கா…” என்ற குரலோடு வந்தார் ஜைனப். கையில் ஒரு சிறிய அலுமினியப் பாத்திரத்தில் சூடான டீ இருந்தது.
”என்னம்மா ஜைனப்? காலையிலேயே வந்துட்ட?” என்றார் காக்கா, சோர்வான முகத்துடன்.
”நேத்து நீங்க சரியாச் சாப்பிடலைன்னு வாப்பா சொன்னாங்க. அதான் காலையிலேயே டீ கொண்டு வந்தேன். குடிங்க காக்கா,” என்றாள் அவள் பரிவுடன்.
டீ கிளாசை வாங்கிக் கொண்ட காக்கா, அதன் ஆவியைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.
“ஜைனப்… உனக்கு எப்போவாவது நம்ம ஊர் மேல கோபம் வந்ததுண்டா? இந்தச் சுத்து வட்டாரத்துல இருக்கிற மனுஷங்களைப் பாத்தா உனக்கு என்ன தோணுது?”
ஜைனப் சற்றே குழப்பத்துடன் அவரைப் பார்த்தாள்.
“என்ன காக்கா இப்படி கேக்குறீங்க? மனுஷங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க.”
”இல்லைம்மா…” காக்கா புன்னகைத்தார்.
“நம்ம எல்லாரும் ஒரு பெரிய கூட்டுக் குதிரை வண்டில உட்கார்ந்து ஓடிக்கிட்டு இருக்கோம். வண்டி எங்கு போகுதுன்னு டிரைவருக்குத் தெரியல. ஆனா பின்னாடி இருக்கிற நாம மட்டும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கோம். இதுக்குப் பெயர்தான் வாழ்க்கையா?”
”காலங்காத்தால என்னவோ பேசி என் மண்டையைக் கடிக்காதீங்க காக்கா. குடிச்சுட்டு உள்ள போங்க,” என்று சொல்லிவிட்டு அவள் தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.
காக்கா டீயைக் குடித்து முடித்துவிட்டு, தன் வழக்கமான இடத்திற்கு வந்தார். இன்று காப்பகத்தின் தோட்டத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகச் சுவரோரம் தன் நாற்காலியை நகர்த்திப் போட்டார்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் காப்பகத்திற்கு வெளியிலிருந்து சில உறவினர்கள் தங்கள் சொந்தங்களைப் பார்க்க வந்திருந்தனர். பெரிய கேட் திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காக்கா சுவரில் ஏறி எட்டிப் பார்த்தார்.
அங்கு ஒரு சோகமானதும் விசித்திரமானதும்மான நாடகம் நடந்து கொண்டிருந்தது.
நடுவயதான ஒரு மனிதர் தன் மனைவியையும் மகனையும் பார்த்ததும் ஓடிவந்தார். அவர் அவர்களைக் கட்டியணைக்க முயன்றபோது அந்த மனைவி பயந்து பின்வாங்கினாள். மகன் தன் தந்தையைப் பார்ப்பதற்கே அருவருப்படைவது போல முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
”ஏன் என்னை இப்படிப் பார்க்கிறீர்கள்? நான் ஒன்றும் மௌத்தாப்போகவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன்,” என்றார் அந்த மனிதர். அவர் குரலில் ஒரு பெரிய ஏக்கம் இருந்தது.
அங்கு வந்திருந்த அவரது மனைவி கண்ணீருடன் சொன்னாள்.
“நீங்க எங்களை விட்டுட்டுப் போன கடன் தொல்லை போதும். கோர்ட்டு, கேஸ்னு நீங்க செய்த வேலைக்கு இந்த ஆஸ்பத்திரிதான் உங்களுக்குச் சரியான இடம். நிம்மதியா இருங்க.”
அந்த மனிதர் அதிர்ந்து நின்றார். தன் சொந்தக் குடும்பமே தன்னை ஒரு பொருளாக மதிக்காமல் சமூகத்தின் அச்சுறுத்தலுக்காகத் தங்களைப் பிரித்துவிட்டதை உணர்ந்து அவர் சுவரோரம் சாய்ந்து அழுதுகொண்டார்.
காதர் காக்கா தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டார். இந்தச் காட்சி காக்காவின் சொந்த வாழ்க்கையின் மறுபதிப்பு போல இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு காக்காவின் மனைவியும் இதே போலத்தான் அவரிடம் சொன்னாள். “உங்களால் எங்களைக் காப்பாற்ற முடியாது. உங்களோடு இருந்தால் பட்டினிதான் மிஞ்சும்.” அன்று அவளைப் பிரிந்தபோது காக்கா அழுத அழுகை, இன்று இந்தச் சுவருக்கு அப்பால் இன்னொரு மனிதனின் வடிவத்தில் எதிரொலித்தது.
”இங்கு உள்ளே அடைக்கப்பட்டிருப்பவர்கள் குற்றவாளிகளா? இல்லை, இந்தச் சமூகத்தின் கடுமையான விதிகளுக்குத் தங்களை மாற்றிக் கொள்ள முடியாத பலவீனமான மனிதர்களா?” காக்கா தனக்குத்தானே கேட்டுக் கொண்டார்.
மதிய வெயில் கடுமையாக ஏறத் தொடங்கியது. பார்வையாளர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். காப்பகம் மீண்டும் அமைதியானது.
அப்போது அந்த ஆலமரத்தடியில் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்தத் தாடி வச்ச மனிதர் கைதி எண் 42 மெல்ல நடந்து காக்காவின் இருக்கும் பகுதிக்குச் சுவரோரம் வந்தார். அவரும் காக்காவைப் போலவே சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் கண்களும் ஒரு கணத்திற்கு நேருக்கு நேர் சந்தித்தன.
அந்த மனிதர் பேசவில்லை. அவரது கண்கள் ஏதோ ஒன்றைச் சொல்வது போல இருந்தது. அவர் தன் கையை நீட்டிச் சுவரைத் தொட்டார். அதே நேரத்தில் காக்காவும் தன் கையை நீட்டிச் சுவரைத் தொட்டார். இருவருக்கும் இடையே இடைவெளியாக இருந்தது அந்தச் செங்கற்களும் மேலே பதிக்கப்பட்டிருந்த கூர்மையான கண்ணாடித் துண்டுகளும்தான்.
”உனக்கு என்னப்பா வேண்டும்?” என்று காக்கா மெல்லிய குரலில் கேட்டார்.
அந்த மனிதர் சிரித்தார். ஒரு பைத்தியத்தின் சிரிப்பு அல்ல அது. எல்லாவற்றையும் துறந்த ஒருவனின் தெளிந்த சிரிப்பு. அவர் மெதுவாகச் சொன்னார்.
“வெளியே ரொம்ப இரைச்சலா இருக்குல்ல?”
காக்கா திடுக்கிட்டார். அந்த மனிதரால் பேச முடியுமென்பதே காக்காவுக்கு இப்போதுதான் தெரியும்.
”ஆமாம்… வெளியே ஒரே கூச்சல், குழப்பம், பொய், புரட்டு,” என்றார் காக்கா.
”அதனால்தான் நான் உள்ளே வந்துவிட்டேன். இங்கே அமைதி இருக்கிறது. யாருக்கும் யாரும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை,” என்றார் அந்த மனிதர் மிக நிதானமாக.
காக்காவுக்கு அந்த வார்த்தைகள் ஒரு மின்சாரம் போலப் பாய்ந்தன. “யாரும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை…”
உண்மைதான். வெளியே இருக்கும் மனிதர்கள் ஒவ்வொரு நொடியும் தாங்கள் நல்லவர்கள் என்றும் செல்வந்தர்கள் என்றும் புத்திசாலிகள் என்றும் இந்த உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அந்தப் போட்டித் தூண்டுதலே மனிதர்களைப் பைத்தியக்காரர்களாக மாற்றுகிறது. இந்த மனநலக் காப்பகத்தில் இருப்பவர்களோ எதையும் நிரூபிக்க முயல்வதில்லை. அவர்கள் தங்கள் சொந்த உலகத்தில் தமக்கென ஒரு நிம்மதியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது காப்பகத்தின் வார்டன் ஒருவன் அங்கே வந்து அந்த மனிதரை அதட்டினான்.
“ஏய்… என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க? உள்ளே போங்க”
அந்த மனிதர் எவ்விதப் பயமும் இன்றி அமைதியாக நடந்து ஆலமரத்தடிக்குத் திரும்பிச் சென்றார்.
காக்கா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார். மாலை மயங்கும் நேரம் வந்தது. வானம் செவ்வானமாக மாறி ஊரின் மீது தன் நிழலைப் பரப்பியது.
ஜைனப் மீண்டும் இரவு உணவுடன் வந்தாள். காக்கா இன்று எதையும் சாப்பிட விரும்பவில்லை.
”காக்கா… ஏன் சோறு அப்படியே இருக்கு? உடல்நிலை சரியில்லையா?” என்று கேட்டாள் அவள் பதட்டத்துடன்.
காக்கா மெலிதாகச் சிரித்தார். “எனக்கு ஒன்னும் இல்லம்மா ஜைனப். எனக்கு இப்போ ரொம்பத் தெம்பா இருக்கு. பல வருஷங்களா என் மனசுல இருந்த பாரம் இப்போ குறைஞ்ச மாதிரி இருக்கு.”
”என்ன பேசுறீங்க காக்கா ஒன்னும் புரியல.”
”புரிய வேண்டிய அவசியமும் இல்லைம்மா. நீ போய் தூங்கு.”
இரவு கவிழ்ந்தது. ஊர் முழுவதும் விளக்குகள் அணைந்தன. மனநலக் காப்பகத்தின் மஞ்சள் விளக்குகள் மட்டும் வழக்கம் போல எரிந்து கொண்டிருந்தன.
காதர் காக்கா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வானத்தைப் பார்த்தார். லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் வானத்தில் அமைதியாக மின்னிக் கொண்டிருந்தன. சுவருக்கு அப்பாலும் அந்தச் சூழலில் வாழ்ந்த மனிதர்களின் அமைதியான மூச்சுக்காற்று இரவின் காற்றோடு கலந்தது.
காக்கா தன் கண்களை மூடிக்கொண்டார். வெளியே இருக்கும் பைத்தியக்கார உலகமும் உள்ளே இருக்கும் அமைதியான தோட்டமும் இப்போது அவருக்குப் புரியத் தொடங்கின. பைத்தியம் என்பது சுவருக்கு உள்ளே இருப்பவர்கள் அல்ல, அந்தச் சுவரைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் சமூகம் தான் உண்மையான பைத்தியக்காரத் தோட்டம் என்பதை அவர் முழுமையாக உணர்ந்தார்.
00

ஏ.நஸ்புள்ளாஹ் 1974
இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பின்நவீனத்துவக் எழுத்தாளர்.
இலங்கை திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவைப் பிறப்பிடமாக கொண்டவர். இவர்,நாவல், கவிதை,சிறுகதை, திறனாய்வு மற்றும் நாவல்த்துறையில் பின்நவீனத்துவச் சிந்தனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். கிண்ணியா மண்ணிற்கு முதல்முறையாக ‘இலங்கை அரச சாகித்திய அகாதமி’ விருதைப் பெற்றுத்தந்த ‘நான் உமர் கய்யாமின் வாசகன்’.[2022] எனும் கவிதை நூல் இவரது மிகமுக்கிய படைப்பாகும்.

