மொழிபெயர்ப்பு     : மலையாளம்

மூலம்                     : தகழி சிவசங்கர பிள்ளை

ஆங்கிலம்                 : வி.சி.ஹரிஸ் [ V. C. Harris ]

தமிழில்                   : தி.இரா.மீனா 

அந்தக் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அன்பும், நம்பிக்கையும் ஆழமாக இருந்ததொரு சூழ்நிலையில் குழந்தைகள் துடிப்பாகவும், உற்சாகமாகவும் வளர்ந்தனர். யாருக்கும் எந்தக் குறையும் தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்க்கும் போது, அது சந்தோஷமும், செழிப்புமான குடும்பமாக இருந்தது! பொறாமைப்பட வைக்கும் வாழ்க்கை!

இருந்தாலும், அந்தரங்கத்தின் ஆழத்தில், அந்த வீட்டில் நெருப்புத் தணல் கனன்று கொண்டிருப்பதான உணர்வு இருப்பதாக எனக்குத் தெரிந்தது. எந்தக் கணத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செய்தி வரலாமென்று நான் நினைத்தேன். ஒரு பெரிய குறை எங்கேயோ இருந்தாலும் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மர்மம் நிறைந்த ஒரு தன்மை அங்கு படிந்திருந்தது. குழந்தைகள் இயல்பாக ஆடியும், ஓடியும் மகிழ்ந்தனர். ஆழமில்லாத, துள்ளல் நிறைந்த சிற்றாறு தான் அங்கு தேவையானதாக இருந்தது. ஆனால் அங்கேயிருந்ததோ அமைதியாக ஓடும் ஓர் ஆழமான நதி்!

கடவுள் நம்பிக்கை நிறைந்த அம்மா “நான் அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதேயில்லை” என்று அடிக்கடி சொல்வாள். ஆனால் அவளும் கூட அவர்களின் விசித்திரமான வாழக்கையை உணர்ந்திருக்கவில்லை. தன் மூத்த மகளின் வசதியான வாழ்க்கையைப் பற்றிய நன்றியுணர்வோடு  அவள் பேசும்போதெல்லாம் அது பற்றிய என் எண்ணங்களைச் சொல்லி விடவேண்டுமென்று தோன்றும். ஆனால் நிச்சயமாகச் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லையே. அது ஓர் உணர்வுதான்; ஆதாரமில்லாத, நியாயமற்ற ஓர் உணர்வு. அவநம்பிக்கை உடைய மனிதனின் சந்தேகம். அதை எப்படி நம்பும் வகையில் சொல்ல முடியும்? என் சந்தேகத்திற்கு நியாயமளிக்கிற ஒரு சம்பவமோ ,பேச்சோ அங்கேயி்ல்லை. அதனால் அதைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அந்த வீடு சிதைந்து போகலாம். எப்போது,எப்படி, ஏன்? எந்த பதிலுமில்லை. மொத்தத்தில் அந்த வீட்டில் ஏதோ ஒரு செயற்கைத் தன்மையிருப்பதாக எனக்குப் பட்டது. இருப்பினும் என் எண்ணங்களை எனக்குள்ளேயே வைத்துக் கொண்டேன்.

’சேட்டன்’ என்று நான் அழைத்த என் மைத்துனர் எங்களுக்கு வலிமையான ஒரு தூணாக இருந்தார். என் அக்கா எதுவும் சொல்லாமலே, ஆனால் அதை விரும்புவாள் என்பதை உணர்ந்து என் அப்பாவின் கடன்களை அடைத்தார். அக்கா என் அம்மாவை நேசித்த அளவிற்கு அவரும் நேசித்தார். அக்காவைக் கலந்தாலோசிக்காமல் அவர் எதையும் செய்ததில்லை. நகைகள், ஆவணங்கள் எல்லாம் அவள் வசம் ஒப்படைத்த நாளிலும் அக்கா எந்தவித உணர்வையும் காட்டாமல் நின்றதாக நான் பின்னாளில் அறிந்தேன். பாவம்! மோசமான ஏதோ ஒரு நிகழ்வு சேட்டனுக்குக் காத்திருந்தது.

சேட்டனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்குள் ஓர் அனுதாபம் வரும். ’அவர் அவ்வளவு புத்திசாலி இல்லை’ என்று ஒரு நாள் நான் சொன்ன போது அம்மா கோபப்பட்டாள். மோசமான ஓர் அனுபவத்தை அவர் சந்திக்கப் போகிறார் என்று நான் நம்பினேன். மிகக் கடுமையான ஒரு யதார்த்தத்தைக் வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக அவர் இருப்பார் என்று தோன்றியது. அக்கா இருக்கும் இடத்திற்குப் போய்ப் பேசும் போது அவர் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறாரென்று ஆச்சர்யப் படுவேன். மனித நாடகத்தின் சோகத்தை உச்சமாக்கிக் காட்டவே அவ்வளவு அன்பான இதயம் அவருக்கு இருந்ததோ என்னவோ? சில நேரங்களில் அக்காவை உற்றுப் பார்த்து ஒவ்வொரு கணமும் ரசிப்பார். அவர் ஏன் அவளைத் திருமணம் செய்து கொண்டார்?

ஒரு வேளை அக்காவிடமும் அதே அளவு காதலும், உற்சாகமும் இருந்திருக்கலாம். அவளால் அதை வெளிக்காட்ட முடியவில்லை—அப்படியும் நினைக்கலாம்தானே?

கடைசியாக அது நடந்து விட்டது — நான் பயத்துடன் கற்பனை செய்திருந்த விஷயம். ஒரு நாள் சேட்டன் அக்காவையும், குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். குழந்தைகள் ஆரவாரம் செய்தபடியே உள்ளே வந்து என்னைக் கட்டிக் கொண்டனர். அந்த வருகையே அதன் அர்த்தத்தைச் சொல்லியது. கனன்று கொண்டிருந்த நெருப்பு சிதறியது.. குடும்பம் சிதைந்து போனது. சேட்டன் முகத்தில் அப்படியொரு பாவனையை நான் அதுவரை பார்த்ததில்லை. எங்களிடம் எதுவும் பேசாமல், ஐந்து நிமிடத்திலேயே கிளம்பி விட்டார். குழந்தைகளிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. அவர் போன பிறகு ’அப்பா’ என்று பெருங்குரலெடுத்து கோமதி அழுதாள். அவளைக் கட்டியணைத்து முத்தமிடாமல் அவர் ஒரு போதும் போனதில்லை.

அக்காவின் முக பாவனையில் எங்களால் ஒரு மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. ஆனால் உண்மையை எதிர்கொண்ட அந்த முகம் சிவந்திருந்தது. எல்லாமே முடிந்து போனதா என்று அவள் தனக்குத் தானே கேட்டுக் கொள்வது போல இருந்தது.

ஒரு பெரிய கொந்தளிப்பிற்குப் பிறகு அவர்களிருவரும் பிரிந்ததாக எனக்குத் தோன்றியது. ஆனால் அந்த நேரத்தில் யாருக்கும் அது புரியவில்லை .“கேசவபிள்ளை ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?” என்று அப்பா கேட்டார். “உங்களுக்குள் என்ன சண்டை?” அம்மா கேட்டாள். “பாட்டி, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அம்மாவை அப்பா கோபமாகத் திட்டினார். அதிலிருந்து அம்மா தனியாக உட்கார்ந்து வானத்தைப் பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டு அழுவாள்.” என்று கோமதி விளக்கம் தந்தாள். மாதங்கள் ஓடின. சேட்டன் திரும்பி வரவில்லை. அக்காவும் அவரைப் பற்றிக் கேட்கவில்லை. அப்பா,அம்மாவிற்குச் சந்தேகம் வந்தது. “ஏன் சண்டை போட்டுக் கொண்டீர்கள்?” அப்பா ஒரு நாள் கேட்டார். பதிலில்லை. பலமுறை கேட்டாலும் அது பதிலற்ற கேள்வியாகவே நின்றது. அவள் உதடுகள் தைக்கப்பட்டது போல இருக்க, மௌனத்திலான முக பாவனையும் வித்தியாசமாகவே இருந்தது.

“நீங்கள் சண்டை போட்டுக் கொண்டீர்களா?”

“இல்லை.”

“பிறகு ஏன் இப்படி?”

பதிலில்லை.

“உனக்குத் திரும்பிப் போக விருப்பமில்லையா?”

“இல்லை.”

அந்த பதிலின் கடுமை அதிர்ச்சியளித்தது. அதற்குப் பின்னால் ஓர் ஆழமான சிந்தனை…விவரிக்க முடியாத ஓர் ஆறுதலும் கூட! பாவம், என் மைத்துனர்! அவரது உற்சாகத்திற்குக் கிடைத்தது அந்த இரண்டு எழுத்துக்கள் தான்!

இல்லை— அந்தச் சுமையை இனிமேலும் அவளால் சுமக்க முடியாது என்பதே அந்த இரண்டு எழுத்துக்களின் பொருள்.

அவரைப் பற்றிய எந்தக் குறையும் அவளுக்கில்லை. அவர் தன்னை விரும்பவில்லை என்று அவளால் சொல்ல முடியாது. அவளை மிக அக்கறையோடு பார்த்துக் கொண்டார். சொத்தும் ஏராளமாக இருந்தது. அப்படியான கணவன் கிடைப்பதும் எளிதல்ல. ஆனாலும் ’இல்லை’ என்ற வார்த்தைக்கு எப்படி அவ்வளவு சக்தி வந்தது? பெற்றோருக்கு அது ஒரு புதிராகவே இருந்தது.

நான்கு குழந்தைகளுக்குப் பின்னாலும் ஒரு பெண் தன் கணவனைக் கை விடுவாளா? ஆச்சர்யப்பட்டேன். வாழ்க்கை என்பதே சமாதானங்கள் தானே? விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொள்வதற்காகச் சேட்டனைப் பார்க்கச் சென்ற அப்பா உடனே திரும்பி விட்டார். பழைய மாதிரியே அன்பாகவும், மரியாதையுடனும் சேட்டன் இருந்ததாகவும். தங்கள் உரையாடலின் போது அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே தான் சிரமப்பட்டதாகவும் அப்பா சொன்னார்.

தன் மனைவி மிகப் பணிவானவள் என்ற எண்ணம் சேட்டனிடம் இருந்தது. அவர்கள் சேர்ந்திருந்த போது வாழ்ந்த வாழ்க்கையில் குழப்பமோ, கலக்கமோ அவர்களுக்கு இருந்ததில்லை. “அவளுடைய குணங்கள் குறை சொல்ல முடியாதவை. எந்த ஆணும் இந்த வீட்டிற்குள் வந்ததில்லை. அவள் மீது எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.”என்று சேட்டன் சொன்னார். உண்மையைச் சொல்லப் போனால் விவரிக்க முடியாத பிரச்னையில் அவர்கள் சிக்கியிருந்தனர்.

நான் சிறு குழந்தையாக இருந்த போது, எனக்கு ஏற்பட்ட ஒரு சிறு அனுபவம் மங்கலாக நினைவிலிருந்தது. தொடர்பில்லாத அந்த நிகழ்வுகளைச் சேர்த்துப் பார்க்க சில சமயங்களில் நான் முயன்றிருக்கிறேன். ஆனால் அதில் எந்த வெற்றியும் எனக்கில்லை. அது அக்காவின் வாழ்விலான ஒரு ரகசியம். இப்போதைய பிரச்னைக்கான தீர்வை அது தரலாம். ஆனால் அது ஒரு கனவா? அல்லது நிஜமா?

தன் கடைசிக் குழந்தையைப் பிரசவிக்க அக்கா வீட்டிற்கு வந்திருந்தாள். அது சேட்டன் தங்கள் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த சமயம். அப்போது நான் சிறுவன். பிரசவத்திற்குப் பிறகு அக்கா நீண்ட நாட்கள் எங்களோடு இருந்தாள். அடிக்கடி வீட்டிற்குத் தெற்குப் பகுதியிலிருக்கிற வேலி வரை நடந்து போய் நின்று கொண்டு யாரையோ பார்ப்பாள்…அந்த நாட்களில் அக்கா மிக அழகாக இருப்பாள்… நான் அரைத் தூக்கத்திலிருந்த போது, என் உடலில் இளம் சூடான மூச்சுக் காற்று பட்டது… பிறகு பழக்கமில்லாத ஒரு கை என்னைத் தொட்டது… அதிர்ந்து போனேன்…மற்றொரு இரவில் ”ஏழு நாட்களில் இறந்து விடுவேன்.” என்று யாரோ மிக மென்மையான குரலில் சொன்ன ஞாபகம்.

அடுத்த நாள் அக்காவை அழைத்துப் போக சேட்டன் வந்தார். அவள் போக மாட்டேன் என்று சொன்ன போது அப்பாவிற்குக் கோபம் வந்தது. கடைசியில் அவள் போகச் சம்மதித்த போது நானும் அவர்களுடன்  போனேன்.

சில நாட்களுக்குப் பிறகு எங்கோ வெளியில் போய் விட்டு வந்த அப்பா யாருடைய சாவு பற்றியோ பேசிக் கொண்டிருந்தார். அவர் எங்கள் வீட்டிற்கு இரண்டு,மூன்று தடவைகள் வந்திருக்கிறார். நல்ல நிறம், அழகான மீசை என்று பார்க்க நன்றாக இருக்கும் இளைஞர். ஒரு முறை பார்த்தால் மறக்க முடியாத தன்மையுடையவர். எங்களிருவருக்கிடையே ஒரு நெருக்கம் இருப்பதாக நான் உணர்ந்தேன்.

அந்தத் தெளிவில்லாத ஞாபகங்களின் பின்னணியில் நான் அக்காவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். கந்தர்வனின் மென்மைத் தீண்டலை அவள் இனம் கண்டிருப்பாளா? அவன் யாராக இருக்கும்? யாராக இருந்தாலும் இறந்து போயிருக்க வேண்டுமல்லவா?

ஒரு வேளை அக்காவால் அவனை மறக்க முடியவில்லையோ! மனைவியாக இருப்பவளுக்கு பல கட்டுப்பா்டுகளுண்டு. தன் கட்டுப்பாடுகளுக்குள் இருந்து, தனக்கான எல்லைக்குள் நின்று மட்டுமே அக்காவால் வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது. தடை செய்யப்பட்ட ஒன்றை அனுபவிப்பதில் எழும் பதற்றத்தையும், மனப் போராட்டத்தையும் அடிக்கடி அவள் நினைத்துப் பார்த்திருப்பாள். அவள் மனவுணர்வுகளைத் தட்டியெழுப்ப அந்த இளைஞன் மேற்கொண்ட முயற்சிகளால் அவளது கட்டுப்பாடுகள் தளர்ந்து ஒரு தீவிர அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். வேறொரு ஆணால் ஈர்க்கப்படும் போது கணவன் இப்படித்தான் முதன்மை இழந்து போகிறான். அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளைத் தட்டியெழுப்புகிற அனுபவங்கள், அழியாமல் நின்று விடுகின்றன.

பெண்ணின் உணர்வுகள் எப்படிச் செயல்படுகின்றன என்று யாருக்குத் தெரியும்? ஒரு முறை கட்டுப்பாட்டை அவள் மீறி விட்டால், தொடர்ந்து மீறுவது கடினமாகாது. இதுவரை புனிதமானது என்ற நினைத்ததைப் புறம் தள்ளவும் கூடும்.

அக்காவிடம் நான் இதைப் பற்றிக் பலமுறை கேட்க நினைத்தாலும் தயக்கம் தடுத்தது. சொல்வதற்கு அவளுக்குப் பல விஷயங்கள் இருக்கிறதென்று எனக்குத் தோன்றினாலும் இருவரும் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அவள் எப்போதும் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தாள். தீவிரமான ஏதோ ஒன்று அவளைப் பாதித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலும் தெற்குப் பகுதியையே பார்த்தவாறு உட்கார்ந்திருப்பாள். அவன் திரும்ப வருவானா?  அதனால்தான் கண்கள் தளும்பிக் கிடக்கின்றனவா?

அப்பாவும் அம்மாவும் அவளைத் திட்டினார்கள். ஒரு நாளில் குறைந்தது ஐந்து தடவையாவது அப்பா திட்டுவார். அந்த துரதிர்ஷ்டத்திற்கு அவள்தான் காரணம் என்று அப்பா சொல்வது நியாயமானதுதான். அப்பா சேட்டனைப் புகழ்வார். ஆனால் அக்கா ஒருபோதும் சேட்டனைக் குறை சொல்லியதில்லை. ஒரு நாள் கோமதியை மடியில் வைத்துக் கொண்டு ’உன் அப்பா ’என்று ஆரம்பித்து எப்படி அவளை நேசித்தான் என்று ஒரு கதையையே சொன்னாள்.

ஒரு வருடம் கழித்து தன் சொத்துக்களை கேட்டு சேட்டன் வந்தார். அக்கா உடனடியாக ஒப்புக் கொண்டாள். அந்த பதில் அவருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எந்தக் காரணமும் இல்லாமலே, சில நாட்களுக்குப் பிறகு திரும்பவும் வந்தார். அக்கா அவரிடம் பேசவில்லை. அடுத்த தடவை விவாகரத்து கேட்டு வந்தார். பின்னர் சேட்டன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கேள்விப் பட்டோம்.

எங்கள் வீட்டின் தெற்குப் பகுதியிலுள்ள தெற்கு அறைச் சுவற்றில் விரல் ரேகையின் அடையாளமிருந்தது. யாரால்,எப்போது அது வைக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. அக்கா அதைப் பார்த்து அழுது கொண்டிருப்பதை ஒரு நாள் கண்டு பிடித்தேன். அதை நான் உன்னிப்பாக கவனித்ததை அக்காவும் அறிந்திருந்தாள். அன்றிரவு நிலா வெளிச்சத்தில் நானும்,அக்காவும் நடந்து கொண்டிருந்த போது,”அன்பான ஓர் ஆத்மா இங்கெங்கோ நம் கண்ணில் படாமல் இருக்கிறது.” என்று சொன்னாள்.

“யார் அக்கா அது?”

அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணறினாள். கண்கள் நீரில் மிதந்தன.

சில நாட்களுக்குப் பிறகு கோமதி தங்கள் வீட்டிற்குப் போக வேண்டுமென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். அப்பா அழைத்துக் கொண்டு போனார். ஆனால் மூன்றாம் நாளே அழுது கொண்டே திரும்பி விட்டாள். நாங்கள் பயந்து போய் விசாரித்த போது, “யாரோ எங்கள் வீட்டில் இருக்கிறார்கள். அங்கிருக்க எனக்கு பயமாக இருந்தது.” என்றாள். அவளுடைய கிண்ணத்தில் வேறு யாரோ கஞ்சி குடிக்கிறார்கள்… அவளுடைய சின்ன பொம்மை பெட்டியைக் காணவில்லை…என்று பல புகார்கள் அவளிடம்.

எங்களால் ஆறுதல் சொல்ல முடியவில்லை.. அவள் வளர வேண்டும்.

வருடங்கள் கடந்தன. அக்கா நிறம் மாறிப் போனாள். எப்போதும் யாருக்காகவோ காத்திருக்கும் அந்த பாவனை கண்களில் நிரந்தரமாகத் தங்கி விட்டது. அதிக நேரம் தியானத்தில் கழித்தாள். அவள் என்ன பிரார்த்தனை செய்து கொண்டிருக்க முடியும்? இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா?

விஷயங்களைப் புரிந்து கொள்ளுமளவிற்கு கோமதி வளர்ந்து விட்டாள். சுவரிலிருந்த கை ரேகையை அவள் ஒரு நாள் பேனாக் கத்தியால் சுரண்டுவதை அக்கா பார்த்து விட்டாள்.

“இந்தக் குழந்தைகள் என்னை வெறுப்பார்கள் அல்லவா?” அக்கா கேட்டாள்.

என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.’அவர்கள் தங்கள் அப்பாவை நேசிக்கிறார்கள். அது மிக நியாயமானது’ என்று எனக்குள் நான் சொல்லிக் கொண்டேன்.

அந்த நேரத்தில் நான் கேட்டால் எல்லாவற்றையும் அக்கா சொல்லி விடுவாள் என்று எனக்குப் பட்டது. தன் பாரத்தையும் அவள் இறக்க வேண்டுமே.

“அப்படிப்பட்ட ஓர் அப்பாவை அவர்கள் ஏன் இழக்க வேண்டும்?”

“நான் முயற்சி செய்தேன், என்னால் தாங்கிக் கொள்ள முடியாத போதும் —நான் முயற்சி செய்தேன். அப்படித்தான் அது நடக்க முடியும். மனைவியை எதற்காக ஒருவன் விரும்புகிறான்? அவன் கூடவே இருந்து கொண்டு வேறு ஒருவனை அவள் நினைத்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது?”

“யார் அக்கா அது?”

“உனக்குத் தெரிந்தவர்…ஆமாம்..அதே மனிதர். எதிர்பார்த்தபடியே நான் புறப்பட்டு வந்த ஏழாம் நாள் இறந்து விட்டார்.” சொல்லி விட்டு விம்மினாள்.

“சேட்டனுக்கு இது தெரியுமா?” சிறிது நேரம் கழித்துக் கேட்டேன்.

“தெரியாது.”

“அப்புறம் ஏன் சண்டை வந்தது? சமாதானமாகப் போயிருக்கலாமே?”

“கணவனுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்ட பவித்ரமான பெண் நான்.”

“பவித்ரமா?”

“ஆமாம்.”

எனக்கு எதுவும் புரியவில்லை. அக்காவிற்கு அது புரிந்ததால் தன் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

“அதற்குப் பிறகு நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.”

“ஆனாலும் நீ அங்கிருந்தாயே–”

“என் குழந்தைகளின் அப்பாவோடு வாழ்ந்தேன்.” அக்கா இயந்திரத்தனமாகச் சொன்னாள்.

முழுக் கதையும் எனக்குத் தெரிந்தது அப்போதுதான்.

சிறிது நேரம் கழித்து அக்கா சொன்னாள். ”என் கனவிலாவது அவர் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன், தியானிக்கிறேன். இல்லை. இன்று வரை அது நடக்கவில்லை. ஆழமான விரக்தியிலிருந்துதான் என் ஒவ்வொரு காலையும் ஆரம்பிக்கிறது.”

                       000

நன்றி:  The Best Of Thakazhi s Pillai , Lotus Collection ,

Editor K.M. George, Roli Books 1999

                                                             000

மலையாள இலக்கியத்தின் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர்களில் மிகச் சிறந்தவராகப் போற்றப்படும் தகழி சிவசங்கர பிள்ளை முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்தவர். தோட்டியின் மகன் இவருடைய முதல் நாவல். செம்மீன், கயிறு,ஏணிப்படிகள், ரண்டாங்கழி உள்ளிட்டவை குறிப்பிடத் தக்க படைப்பகள்.

ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, எழுத்தச்சன் விருது, சோவியத் யூனியனின் நேரு விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *