‘ரோவெல் தெரு மனிதர்கள்’; எளிய மனிதர்களும் வாழ்கிறார்கள்தான்
சமீபத்தில் நான் அதிக நேரமெடுத்து சொல்லப்போனால் அதிக நாட்கள் எடுத்து வாசித்த சிறுகதைத் தொகுப்பு இது. வாசிக்கத் தொடங்கி இரண்டாவது மாதத்தில் வாசித்து முடித்தேன். வாசிக்க இவ்வளவு நாட்கள் எடுக்கும் அளவிற்கு பெரிய புத்தகமெல்லாம் இல்லை. பத்து சிறுகதைகள் கொண்டு தொகுப்பு. மொத்தமே 180 பக்கங்கள்தான். சில சிறுகதைகளை வாசித்து முடித்ததும்; அவை என் கற்பனையில் மேலும் தன்னை வளர்த்து கொண்டே சென்றது. இந்தத் தொகுப்பில் சில கதைகள் குறுநாவலுக்கு உரிய கதைக் களத்தை கொண்டிருந்ததும் ஒரு காரணம்.
இனி சிறுகதையை எழுத விரும்புகிறவர்களுக்கு தாராளமாக இந்தத் தொகுப்பை என்னால் பரிந்துரைக்க முடியும். எங்கிருந்து கதையை எடுத்து எழுதுவது என்கிற குழப்பம் உள்ளவர்களுக்கு தன்னைச்சுற்றியே பல கதைகள் இருப்பதை உணர்த்தும் தொகுப்பு இது.
எதை எழுதி தங்கள் எழுத்து பயணத்தை தொடங்க வேண்டும் என்கிற குழப்பம் உள்ளவர்களை அடிக்கடிப் பார்க்கிறேன். எழுத வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும் ஆனால் எதை எழுதுவது எங்கிருந்து எழுதுவது என்கிற குழப்பமும் இருக்கும். அப்படியானவர்கள் இத்தொகுப்பின் முதல் சிறுகதையை வாசித்துவிட்டு பிறகு எழுத்தாளரின் முன்னுரையை வாசிக்கவும். அது ஒரு திறப்பை தவறாது கொடுக்கும். குறிப்பாக இப்படித்தான் எழுதவேண்டும் என்கிற கட்டுபாட்டில் இருந்து முதலில் எழுத வேண்டும்ம் என்கிற உந்துதலைக் கொடுக்கும். மனஅழுத்தத்தால் எழுத முடியவில்லை என சொல்கிறவர்கள் மத்தியில் தன் மனஅழுத்தத்தை எழுத்தாக மாற்றி அதிலிருந்து மீண்டிருக்கிறார் எழுத்தாளர்.
இப்போது இந்த வாசிப்பு அனுபவத்தை எழுதும்போதுகூட நான் அந்தப் புத்தகத்தின் உள்ளே அந்த மனிதர்களுக்கு நடுவேதான் இருப்பதாக தோன்றுகிறது.
நமது இம்மாத, மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 10-ல் சிங்கை எழுத்தாளர் உமா கதிரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ரோவெல் தெரு மனிதர்கள்’ புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
‘ரோவல் தெரு மனிதர்கள்’. எழுத்தாளர் உமா கதிரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. 10 சிறுகதைகள் கொண்டது. 2021-ல் இத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. எழுத்து பிரசுரம் இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இந்தத் தொகுப்பை வாசித்து முடித்தது; ஒரு நாவலை வாசித்து முடித்த எண்ணமே எனக்கு இருந்தது. ஏறக்குறைய ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகப்பட்டது. அது சூழலாக இருக்கலாம் வலியாக இருக்கலாம் ஊர்விட்டு ஊர்வந்தவர்களின் வாழ்வாக இருக்கலாம் இயலாமையாக இருக்கலாம் கடைசியாய் ஒரு புன்னகையாகவும் இருக்கலாம்.
அசோகமித்திரனின் சிறுகதைகளை வாசிக்கும் போது நான் உணர்ந்த வாசிப்பனுபவத்தை இச்சிறுகதைத் தொகுப்பில் சில சிறுகதைகளை வாசிக்கும் போது மீண்டும் உணர்ந்தேன்.

எழுத்தாளர் உமா கதிர், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயப்பாளையம் எனும் ஊரைச் சேர்ந்தவர். தற்பொழுது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். அதிநவீன மாநகரத்திலும் கவனிக்கப்படாத , இருள் படிந்த, விளிம்புநிலை வாழ்க்கையை வழும் மனிதர்களை எவ்வித பாசாங்குமின்றி எவ்வித அலங்காரமுமின்றி நேரடியாகவே கதைகளின் வழி நம்முன் நடமாட வைக்கும் திறன் கொண்டவர் இவர்.
‘மார்க்கும் ரேச்சலும்’, இக்கதையில் வரும் மார்க் உண்மையான மனிதர். எழுத்தாளரின் நண்பர். அவர் இறந்துவிடுகிறார். அந்தச் செய்தி தாமதமாகத்தான் எழுத்தாளருக்கு கிடைக்கிறது. அது அவரை மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறது. சிங்கப்பூரில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார் என நினைத்திருந்த நண்பரின் மரணத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த மனஉளைச்சல் அவரது தூக்கத்தைக் கெடுக்கின்றது. அந்தத் துயரைக் கடப்பதற்காக இந்தச் சிறுகதையை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இச்சிறுகதைதான் இத்தொகுப்பின் முதல் சிறுகதை. வரலாற்றில் தன் துயரையும் துக்கத்தையும் எழுதி கடந்தவர்கள் என பலரை பார்த்திருப்போம். அதுவெல்லாம் சாத்தியம்தானா. கதையாக எழுதுவதால் மனஉளைச்சல் எப்படி தீரும் என கேட்பதற்கு இடமின்றி நிகழ்கால உதாரணமாக இந்தச் சம்பவத்தை நாம் எடுத்து கொள்ளலாம். இச்சிறுகதையின் கடைசி பத்தி; ‘நான் கடைசிவரை மார்க் கொடுத்த நம்பர் சீட்டைக் காசாக மாற்றவில்லை. என் அன்புக்குரிய மார்க் க்றிஸ்னி… நான் இந்தச் சீட்டைத் தீயிலிடுகிறேன். இது ஆவியாக உன்னை வந்தடையும் நேரம் நீ பசியோடிருந்தால் இந்தக் காசை வைத்துப் பசியாறிக் கொள் நண்பனே!’ என முடித்திருக்கின்றார் எழுத்தாளர். அவரை அந்தத் துயரில் இருந்து மீட்டது இந்தக் கடைசி வரியாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் குரல் ஏதோ ஓரிடத்தில் இருக்கும் மார்க்கின் காதுகளுக்கு நேரடியாகவே சென்றிருக்கும்.
‘பிணை’. இச்சிறுகதை நாடுவிட்டு நாடு சென்று வேலை செய்கிறவர்களின் வாழ்வில் ஒருபகுதியைச் சொல்லும் கதை. நாங்கள் நடத்தும் ‘சிறகுகளின் கதைநேரம்’, சிறுகதை கலந்துரையாடலில் இச்சிறுகதையை வாசித்து பேசியிருக்கிறோம். ‘அண்டிப்பிழைப்பது’ என்றால் என்ன அந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் இயலாமை என்ன என்பதனை இயல்பாகச் சொல்லிச்செல்லும் கதை. சிங்கப்பூருக்கு மட்டுமல்லாது புலம்பெயர் வாழ்விலும் வெளிநாடு சென்று சம்பாதிப்பவர்களின் வாழ்விலும் பொருந்திபோகும் கதைகளில் இதுவும் ஒன்று. குற்றச்செயல்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் கண்ணுக்கு புலப்படாத அதிராக குரலை இச்சிறுகதையில் பார்க்கலாம். தன்னை ஒருவன் நம்பித்தான் ஆகவேண்டும் என்கிற நிலையில் ஒரு இருக்கும் போது அவனால் வேறென்ன செய்யமுடியும் என இக்கதையின் வழி நம்மில் ஒரு கேள்வியும் எழச்செய்கிறது.
‘பிரார்த்தனை’. எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பிரார்த்தனை என சொல்லானே அது பலிக்கத்தான் வேண்டுகிறோம் என ஒரு பொருள் இருப்பதாக தோன்றுகிறது. பொதுவாக ஒரு பிரார்த்தனை எப்படி பலிக்கிறது என நாம யோசிப்பதில்லை. ஆனால் பலிக்காத பிரார்த்தனைகள் மீது கவனத்தை வைத்து கேலி செய்வதில் தவறுவதில்லை. நாயகனின் பர்ஸ் தொலைந்துவிடுகிறது. அதையொட்டி கதை நகர்கிறது. இயல்பாகவே மகளும் அம்மாவுடன் இரவு பிரார்த்தனை செய்கிறாள். காரணம் கேட்கிறார் அப்பா, தொலைந்து போன அவரது பர்ஸ் கிடைக்க வேண்டும் என தான் பிராத்தித்தகா சொல்கிறாள் அந்தக் குழந்தை. இனி அந்தப் பர்ஸ் கிடைக்கப் போவதில்லை என காவல் நிலையத்தில் இருந்தே அவருக்கு தகவல் கிடைக்கிறது. ஆனால் மகளின் இரவு பிரார்த்தனையோ தொடர்கிறது. இனி அது அவசியம் இல்லை பர்ஸ் கிடைக்கப் போவதில்லை என்று அப்பா சொல்கிறாள். குழந்தைக்கு அது புரியவில்லை அந்தக் குழந்தை பிரார்த்தனையைத் தொடர்கிறது. சில நாட்களுக்கு பிறகு நாயகனுக்கு அவனது பர்ஸ் கிடைக்கிறது. அதற்கிடையில் அவர் மனைவி அவருக்கு புதிய பர்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். தனது பழைய பர்ஸ் கைக்கு கிடைத்ததும் தன் மகளான எடிகுட்டியின் தொடர் பிரார்த்தனை அவரின் நினைவிற்கு வருகிறது. ‘இப்போது என்னிடம் இரண்டு பர்ஸுகள் உள்ளது’ என எழுத்தாளர் கதையைப் முடிக்கின்றார். இந்த இரண்டு பர்சுகளில் ஒன்று அவரது பர்ஸ் இனி கிடைக்காது என்கிற எண்ணம். இன்னொன்று பர்ஸ் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்த குழந்தையின் பிரார்த்தனை. இரண்டில் எதை அவர் பயன்படுத்த போகிறார் என்கிற கேள்வி வாசகர்களுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
‘ப்ளூடூத் ஜோஹன்’. இக்கதை ப்ளூடூத் ஜோஹன் என்கிற மனிதனைப் பற்றிய கதை. தன் நிலை எதுவாக இருந்தால் இன்னொரு மனிதனுக்கு பயனாக எதையாவது செய்ய வேண்டும் என்கிற குணம் கொண்ட மனிதன் அவர். பல கேலி கிண்டல்களுக்கு மத்தியில் நாயகனைப் போலவே நம்முள் அவர் ஏதோ ஒரு நம்பிக்கையை விதைக்கத்தான் செய்கிறார்.
‘பை சைக்கிள் தீவு’. முழுக்கவும் நகைச்சுவைக் கதையாக சொல்லியிருக்க வாய்ப்புள்ள சிறுகதை. திறன்பட சைக்கில்களை திருடும் திருடன் ஒருநாள் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டு சிறைக்கு செல்கிறான். திரும்பி வரும்போது பார்க்கும் இடம் எல்லாமே சைக்கில்களாக இருக்கின்றன. ஒவ்வொருவரும் தன் கைப்பேசி மூலமாக சைக்கிலுக்கு பணம் செலுத்தி அதன் பூட்டைத் திறந்து எடுத்து பயன்படுத்தி வேறொரு இடத்தில் வைக்கிறார்கள். முன்னால் சைக்கில் திருடனுக்கு எதுவுமே பிடிபடவில்லை; என்ற இக்கதையை எழுத்தாளர் எழுதும் போது நகைச்சுவைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் வீடற்ற மனிதர்களையும் நம் கண்முன்னே நடமாட வைக்கின்றார். உலகி எந்த மூலையிலும் வீடற்ற மனிதனுக்கு இன்னொரு வீடற்ற மனிதன் தான் முதலில் அடைக்களம் கொடுக்கின்றான்.
‘களப எயிறு’. இது இத்தொகுப்பில் சற்றே மாறுபட்ட கதை. மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த கதை. அதனுள் ஆளும் அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் முதற்கொண்டு தெரியவருகின்றது. நாயகி வழுக்கி விழுந்து பல் உடைகிறது. அதற்கு மாற்று பல்லாக யானை தந்தத்தில் இருந்து பல்லை செய்து போட்டுக்கொள்ளும் சூழல் அமைந்துவிடுகிறது. அங்கு ஆரம்பிக்கிறது கதை. அதோடு அந்த யானையின் உரிமையாளரின் மரண படுக்கையில் நாயகி இருக்கும் போது முடிகிறது. அவரின் மரணத்திற்கு என்ன காரணம் அவரிடம் இருந்த யானைக்கு என்ன ஆனது என்பது நம் கண்களுக்கு புலப்படாத இன்னொரு இருள் உலகமாக இருப்பதை எழுத்தாளர் அதன் சுவாரஸ்யம் குன்றாமல் கொடுத்திருக்கின்றார்.
‘ரொட்டி கோசம்’. இத்தொகுப்பில் என்னை அதிகம் பாதித்த சிறுகதை. ஒரு குறுநாவல் போல நிறுத்தி நிதானமாக நகரும் கதை. அதற்கு ஏற்றார்ப்போல நாமும் மெல்ல மெல்ல கதைக்குள் நுழைகின்றோம். வாழ்நாள் முழுக்க முழுக்க வேலை செய்தபடியே கழித்த நாயகனுக்கு எதிர்பாராத விதமாக விடுமுறை கிடைக்கிறது. ஏறக்குறைய பதினான்கு நாட்கள். நாயகன் தனக்கு கிடைத்த விடுமுறையில் என்ன செய்கிறான் எனபதுதான் கதை. இந்த விடுமுறையை எப்படி கழிப்பது என குழம்பும்போதுதான் இத்தனை ஆண்டுகளாக தான் வேலை செய்த இடத்தை விட்டே அதிக தூரம் தான் போயிருக்கவில்லை என்பது புலப்படுகின்றது. இப்படிபட்ட நாயகன் தனக்கு கிடைத்த ஓய்வில் இன்னொரு மனிதனுக்காக வேலை செய்கிறான். ஒரே வேலைதான். செய்து செய்து சலிப்படைந்த வேலைதான். ஆனால் இப்போது அதே வேலையை எந்தச் சலிப்பும் இன்றி மகிழ்ச்சியாக செய்கிறான். அதற்கான காரணத்தை ரொட்டி கோசோங்கில் ஆசிரியர் வைத்திருக்கின்றார்.
‘உதிரிகளின் பயணம்’. பயணம் போக திட்டமிடும் நண்பர்கள் சந்திக்கும் சிக்கல்களும் குழப்பங்களும்தான் கதை. ஆனால் அதில் அவர் சொல்லியிருக்கும் செய்திகள் நமக்கு ரொம்பவும் புதிதாக இருக்கும். வெளிநாடுகளில் தங்குமிட சிக்கல்களுக்கு அங்குள்ளவர்கள் அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு தீர்வை தேடிக்கொள்கிறார்கள். இங்கோ கம்பியூட்டர் கடைக்கு சென்று தங்களில் இரவு தூக்கத்தை அங்கு கழிக்கின்றார்கள். கம்பியூட்டரை பயன்படுத்துவதற்கான பணத்தை கட்டி குளிர்சாத வசதியுடன் கூஷன் நாற்காலியில் உட்கார்ந்த படி காலை வரை தூங்கும் மனிதர்கள் என்பது நமக்கு புதியதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது.
‘எலி வேட்டை’. இத்தொகுப்பில் எனக்கு பிடிக்காத அல்லது இப்படி கதையை முடித்திருக்க வேண்டாம் என தோன்ற வைத்த கதை இது. நாயகன் எலியை கொல்வதற்கான முயற்சி கதைக்குள் நம்மை இழுத்துவிடுகிறது. அதுவும் தான் மனைவியுடன் இருக்கும் அந்த நேரத்தில் தொந்தரவு செய்த எலியை கொல்வதுதான் அவரது ஒரே லட்சியமாக மாறுகிறது. தன்னை எதிலிருந்து தற்காக அவர் எலிமீது கோவத்தை காட்டுகிறார் என்று யோசிக்க ஆரம்பித்தால் இக்கதை நம்மை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும். எலியை கொல்வதற்கு அதற்கு தன் மீது நம்பிக்கை வரும்படி செய்கிறார். அதுவும் இவர் போடும் உணவுகளை இவரின் கைக்கு அருகிலேயே வந்து சாப்பிடுகிறது. இருவருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் அன்பும் நெருக்கமும் உண்டாகிவிட்டதாக புரிந்து கொண்ட அடுத்த நொடியிலேயே நாயகன் அந்த எலியைக் கொன்றுவிடுகிறான். அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் உடனே மீண்டு வர முடியவில்லை. இருவரும் ஒரு புள்ளியில் இணைந்த போதே ஆசிரியர் இக்கதையை முடித்திருக்க கூடாதா என்று அவரை திட்ட வைக்கிறார்.
‘வாத்தியார்’. மற்றவரின் துயரத்தை காண முடியாத நாயகன் இதுநாள்வரை தான் பூஜித்த கடவுளை அகற்றுகிறார். அந்தக் கடவுளும் அது பிடித்த செயலாகத்தானே இருக்க வேண்டும்.
எழுத்தாளர் உமா கதிரின் இச்சிறுகதைகளில் வரும் எளிய மனிதர்கள் ஒவ்வொருவருமே நாம் நமது தினசரிகளில் வந்து போகிறவர்கள்தான். அவர்களை தன் கதைகளின் வழி இன்னமும் ஆழமாக அவர்களைப் புரிந்து கொள்ள வைக்கிறார் இந்த கதைசொல்லி.
சிறுகதை என்பது எடுத்தவுடன் கதைக்குள் சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணமுள்ளவர்களுக்கு இக்கதைகள் சிக்கலைக் கொடுக்கலாம். இச்சிறுகதைகள் மெல்ல மெல்ல நிறுத்தி நிதானமாக நம்மை கதைக்குள் அழைத்துச் செல்கிறன. சில கதைகள் மூன்றாவது பக்கத்தில்தான் தொடங்குவது போன்ற தோற்றத்தையும் கொடுக்கிறது.
ஒரு நாவலை நாம் வாசிக்கும் போது அது கொடுக்கும் அந்த தொடக்கத்தை இவரது கதைகள் கொடுக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் நாம் செல்வதற்கு முன்பாக முழு சித்திரத்தையும் எழுத்தாளர் கொடுக்க முயல்கிறார். முதல் வாசிப்பில் அது நமக்கு சலிப்பை கொடுக்கிறது. ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. 20 பக்க கதைகள் கூட என்ன சீக்கிரத்திலேயே முடித்துவிடுகிறார் என்ற எண்ணத்தை அவரது எழுத்து நமக்கு கொடுக்கின்றது.
ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை அவர் எழுதியிருக்கும் விதம்; ஒரு வாசகனாய் நமக்கு மிக நெருக்கமான உணர்வைக் கொடுக்கின்றது. மீண்டும் சொல்கிறேன் இளம் எழுத்தாளர் யாருக்கும் தைரியமா உமா கதிர் என்னும் கதைசொல்லியை நான் அறிமுகம் செய்வேன். குறிப்பாக அவரது இந்த ரோவல் தெரு மனிதர்களை; அந்த மனிதர்கள் நிச்சயம் அதன் வாசகர்களை ஏமாற்ற மாட்டார்கள்.
மீண்டும் அடுத்த மாத; மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடரில் சந்திக்கலாம்.
00

எழுத்தாளர் தயாஜி.
மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

