பழைய குருடி – சிறுகதைகள்

இத்தொகுப்பில் உள்ள கதைகள் இந்த இசத்தைச் சேர்ந்தவை, இந்த சித்தாந்தத்தை முன்நிறுத்துபவை என்று வெளிப்படையாக எதையும் அறிவித்துக்கொள்ளாதவை. புனைவென்பதே பூடகத்தனமானது என்பதை மட்டும் தொகுப்பின் எல்லாக் கதைகளும் சுட்டிச் செல்கின்றன.

அதீதத்துக்கான அல்லது fantasyக்கான புனைவின் சுருள்மொழியொன்று தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய எவ்வித எத்தனமும் இன்றியே மிகுபுனைவும் மாய யதார்த்தமும் சாத்தியம் என்பதை ராஜனின் கதைகளின்வழி உணர முடிகிறது.

தொகுப்பில் உள்ள ஐந்து கதைகளிலுமே தலித் இருப்பும் இருப்புக்கான நெருக்கடியும் தற்செயலாகவோ அல்லது ஆசிரியரின் ஓர்மையுடனான திட்டமிடலாகவோ பேசுபொருளாக இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. மேலும் தலித் கதைகளில் அரிதாகக் காணக்கூடிய அல்லது பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்படாத தலித் தன்னிலையின் அக நெருக்கடிகளின் விரிவான மனவோட்டப் பதிவும் பிரத்யேக மன உணர்வு நிலையும் கதைகளின் அடிநாதமாகத் துலக்கமாவது இக்கதைகளின் இன்னொரு தனித்துவமாகும். இது தலித் கதைகளின் புறவயப்பட்ட பார்வைக்கு அடுத்த கட்ட நகர்தலை நோக்கமாகக் கொண்டுள்ளதாக நினைக்கிறேன்.

நகரமயமாக்கலால் சிதைக்கப்படும் பல்லுயிர்ச்சூழல் குறித்து அக்கறைப்படும் ‘பாலூட்டிகள்’ கதையில், பொருள்வயின் ஊர் நீங்கியோர் உருவாக்கிய தென்னந்தோப்பில் வசிப்போர் தம் குலசாமி மாடனுக்குப் பலியிட சினை ஆட்டுக்குப் பதிலாகக் கிடைக்கும் சினை வெளவாலைப் பலியிடுவது தொடங்கி மாடனின் விருப்பமாகவும் கந்தையனின் வளர்ப்புமாகவும் மாறிப் போன வெளவாலானது தொன்மப் படிமமாகப் பேரன் சின்னதுரையின் வாழ்விலும் எச்சமிடுகிறது.

ஒரு பால் ஈர்ப்பு குறித்தும் தன்னைப் பெண்ணாக உணருபவரின் மனத்தவிப்பு குறித்தும், அப்படிப்பட்டோர் இயல்பாகவே ஆண்கள் மீது காம உணர்வு மிகுந்திருப்பர் என்பன போன்ற நடப்பில் இருக்கும் கற்பிதங்களின் மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியபடி நகர்கிறது ‘வின்சென்ட்டின் அறை’ கதை. கதை – அதற்குள் ஒரு கதை – அதற்குள் இன்னொரு கதை என்ற பல்லடுக்கு மடிப்புகளின் வழி கதை வேறொரு பரிணாமம் அடைகிறது.

கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் தான் மறைக்க விரும்பும் தன்னுடைய ஒடுக்கப்பட்ட சாதி சார்ந்த அடையாளம் எவ்வாறு பொது வெளியில் துலக்கமாகி அவமான உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது என்பதைப் பேசும் ‘பழைய குருடி’ கதையில் தன் சாதி குறித்து நெற்றியடியாக அறிவிப்பதை கதை நாயகன் விரும்பினாலும், ஆனாலும் மீண்டும் மீண்டும் இதிலிருந்து தப்பித்துச் செல்லும் மனநிலையை உருவாக்கும் சூழலே வாய்க்கிறது என்பதை நேரிடையான கதை சொல்லல்வழி படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் ராஜன். இக்கதையில் எலியும் அதன் வேட்டையும் ஒரு படிமமாகக் கதை முழுக்க சுற்றுகிறது.

மீ-புனைவின் உச்சமாகவும் வெளிப்படுத்த இயலாமல் அடக்கிவைக்கப்பட்ட காமத்துக்குப் பதிலீடாக தன் களிகூடுதல் – தன்னின்பம் துய்த்தலின் உருவக வெளியாகவும் பிரவகித்துள்ளது ‘அரூபி’ கதை. மனோகரிக்கும் ரஞ்சிதத்துக்குமிடையிலான மனவெளி சஞ்சாரக் கூடுதலின் விவரிப்பான சொற்களில் காமத்தின் நறுமணமும் மரணத்தின் துர்மணமும் பெருஞ்சூட்டில் தகிக்கிறது.

ஒரே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்வதின் வழி  – வரலாற்றைக் கதையாகவும் கதையை வரலாறாகவும் மாற்றிப் போட்டுப் புனைவின் சாத்தியங்களை விரிவாக்குகிறார் ‘அறிவுஜீவியின் பொய்’ எனும் கதையில். தீண்டப்படாதோருக்கான தனித்தொகுதிக்கான அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்கக் கூடாதென்பதற்காக எரவாடா சிறையில் காந்தி மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்கப் பழரசம் கொடுக்க ஒரு தீண்டப்படாத இளைஞனையே வரலாறு பயன்படுத்திக் கொள்வதையும் X பயன்படுத்தாமல் தவறவிட்டதையும் திரும்பக் கூறலின் நிகழ்தகவின்வழி வரலாற்றைப் பொய்யாக்கும் புனைவின் சாமர்த்தியம் கதையின் சிறப்பு.

எல்லாக் கதைகளிலுமே பா.வெங்கடேசனின் தாக்கம் தெரிகிறது. அதை த.ராஜனும் தன்னுரையில் ஒப்புக் கொண்டுள்ளார். புனைவுக்கும் மீ-புனைவுக்குமான இடைவெளியை எதார்த்த வெளியில் நின்று கடக்க முயல்கின்றன இக்கதைகள். ஆனாலும் அது அதி-யதார்த்த வெளியாக மாறிவிடும் அற்புதமே கதைகளின் ‘உண்மையான எதார்த்தம்’.

பௌதீக நிலைக்கும் மன உணர்வின் வழியான இருப்புக்கும் இடையிலான முரணை உருவாக்கியும் கலைத்தும், வாசிக்கும் நம்மையும் புனைவின் ஓரங்கமாக மாற்றிவிடுகின்றன ராஜனின் கதைகள்.

பழைய குருடி – சிறுகதைகள் – த.ராஜன் – எதிர் வெளியீடு

00

மனசால் வானத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி

(சிறுகோட்டுப் பெரும்பழம் – விக்ரமாதித்யனின் கவிதைத் தொகுப்பு நூலை முன்வைத்து)

தொண்ணூறுகளின் இறுதியில் கவிஞர் செந்தியின் அழைப்பின் பேரில் திருப்பரங்குன்றம் த.மு.எ.ச. (இப்போதுதான் த.மு.எ.க.ச.) கிளைக்கூட்டத்தில் ஒரு ஞாயிறு மாலை ‘நவீன கவிதை’ குறித்து ஒரு சிறு உரையாற்றிட நேர்ந்தது. அப்போதுதான் வாசித்து முடித்திருந்த விக்ரமாதித்யனின் தொகுப்பில் இருந்து கீழ்க்கண்ட கவிதையைச் சொல்லித்தான் தொடங்கியது இன்னும் நினைவில் நிற்கிறது.

‘நெஞ்சு படபடக்கிறது

நீர்வீழ்ச்சியென்று

அருவியை

யாராவது சொல்லிவிட்டால்…’

இச்சிறு கவிதையில் பல பொருட்களைப் பொதிந்திருப்பார் கவிஞர். முதலில் தமிழ் வேர்ச் சொற்கள் இருக்கும் போதும் அவற்றைப் பயன்படுத்தாமல் பிறமொழியில் இருந்து பெயர்த்த சொற்களைப் பயன்படுத்தும் அரசியல் அல்லது அறியாமை. ‘அருவி’ என்ற மூலத் தமிழ் சொல்லிருக்க, waterfalls என்ற ஆங்கிலப் பதத்தின் நேரடி தமிழ்ப்பெயர்ப்பான ‘நீர்வீழ்ச்சி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் அவலம். இது போன்று பல வேர்ச்சொற்களை நாம் மறந்து, பதிலாக ‘பொருளற்ற/பொருள் திரிந்த’ பல சொற்களை நாம் வெகு இயல்பாக நாள்தோறும் பயின்று வருகிறோம். இது நாம் கவனம் கொள்ள வேண்டிய முதன்மையான மொழிச் செயல்பாடு. அடுத்து, அருவி எனும்போது ஏற்படும் பிரமிப்பும், வியப்பும், தெரியும் அழகும், பிரம்மாண்டமும் நீர்வீழ்ச்சி எனும் போது வீழ்ந்து விடும் உண்மை காட்சி மாறுபாடு, ரசனைக் குறைபாடு, அழகியல் வீழ்ச்சி. ஆறே வார்த்தைகளில் அரசியலும் அழகியலும் பேசும் கவிதையிது. இப்போது வரை எங்கு அருவியைப் பார்த்தாலும் இக்கவிதை மனதில் கண நேரம் தோன்றி மறையாமல் இருக்காது.

விக்ரமாதித்யனின் கவிதைகளில் பல மேற்படி கவிதை போல இருந்தாலும், வாய்த்துவிட்ட வாழ்க்கை பற்றிய புலம்பல்களாகவும் பல இருந்துவிடுகிறது. அதை வெற்றுப் புலம்பல்களாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு காலகட்டத்திய பொருளாதார ரீதியாக நலிவுற்ற நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த கற்றவனின் கனவு கருகிப் போன குரல் அது. தான் கற்ற தமிழ் தனக்குக் கவிதையைத் தருகிறது, ஆனால் சோற்றைத் தருவதில்லை என்ற கழிவிரக்கமும் மேலோங்கி இருக்கிறது. அது தமிழ்க் கவி மனதின் – வாழ்வின் சாபம் போல..! ‘ஏழைப் பிள்ளைமார்’ வீட்டில் பிறந்தவர்கள் பிழைக்கத் தேர்ந்தெடுக்கும் முறைகளைப் பட்டியலிட்டு (ரூம்பாய், கமிசன் கடை கணக்கர், கோயில் பியூன், சர்வர், பெட்டிக்கடை போன்று) ‘கவிஞனாய் விளங்கக் கனவு கண்ட கொடுமை/காலைச் சுற்றுகிறது காலகாலத்துக்கும்’ என்று முடிக்கிறார். ஒரு கட்டத்தில் எல்லாமே விரக்தியாகி ‘ஏன்/இப்படியாக வேண்டும்/இந்த வாழ்க்கை’ என்று கேட்கத் தொடங்குபவர் ‘வேட்டைக்காரன் போல/காசு பணத்துக்கு அலைவதே விதிக்கப்பட்டுவிட்டது’ என்று வருந்துகிறார். ஓரிரு மாதங்களுக்கு முன் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த அவரது செவ்வியைப் படித்தபோது இன்னும் இந்தக் கேள்வியும் ஏக்கமும் அவர் மனதில் தொக்கி நிற்பதை உணரமுடிந்தது.

லௌகீக வாழ்வு இப்படி சோற்றுக்கலையும் வாழ்க்கையாகி விட்டதே என்ற வருத்தமிருந்தாலும், தான் ஒரு தமிழ்க் கவிஞன் என்ற இறுமாப்பும் உடனிருக்கும் உணர்வாகிறது. ‘இவனை/இவன் காலத்தில்/இவர்கள் அறியாது போனதில்/இவனுக்கென்ன நஷ்டம்’ என்று கேட்டு, காலம் வாழ்வின் எல்லாவற்றையும் அழித்துவிட்டுச் சென்றாலும் ‘கவிஞனின் வார்த்தைகள் மட்டும் எஞ்சி நிற்கும்’ என்று அறைகூவுகிறார். ‘ஆனந்த தாண்டவமும்/காளியின் ஆங்காரமும்/புரிந்து கொள்ளக் கூடியவையா’ எனக் கெக்கலிட்டுச் சிரிக்கிறார் தானே அமைத்துக் கொண்ட கவி சிம்மாசன இருக்கையில் அமர்ந்தபடியே..!

‘…யோசிக்கையில்/ஒன்றுமில்லை – யோசனைதான்/பெருந்தொல்லை…’ எனும்போது தமிழ்ச் சித்தர் மரபின் தொடர்ச்சியாக விக்ரமாதித்யனின் இருப்பை கணிக்கலாம். ‘சித்தன் என்கிறார்கள்/சிவஞானபோதம் மண்டைக்கேறவில்லை’ என்று அந்த பிம்பத்தை உடைத்து நொறுக்கியபடி போய்க்கொண்டிருக்கிறார். அவரது நாடோடித்தனம் மிக்க வாழ்வியலைக் கொண்டும் – செல்லுமிடந்தோறும் நண்பர்கள் கொண்டிருப்பதை கொண்டும் தமிழ்ப் பாணர் மரபின் நவீனத் தொடர்ச்சி எனவும் கூறலாம்.

‘கனவிலும் நினைவிலும்

பாரதி…

கண்ணதாசனிலிருந்துதான்

தொடங்குகிறது என் கவிவாழ்வு…’ என்று அவரே தமிழ்ப் பெருங்கவிதைப் பரப்பில் தனது இடத்தைத் தெளிவுபடுத்தவும் செய்கிறார்.

தற்கொலை மனநிலையில் தவிக்கும் நண்பனைக் குடிக்கக் கூட்டிச் செல்லும் போது நடுங்கும் அவன் கரங்களைப் பார்த்தவாறிருக்கையில் அன்றைக்குத் தை அமாவாசையென்பது உறைக்கையில் திடீரென ஆத்மாநாமாகி விடுகிறார். சன் டிவி பார்த்துச் சிரித்து தலைவாரி பூச்சூடிய ‘பீடி சுற்றும் இயந்திரங்களை’ எழுதுகையில் சற்றே இன்குலாபாகவும் தெரிவார். ‘மக்கள் பாலும்பழமும் சாப்பிடுவதை விவரித்தால்/புரட்சிக்கவிதை பூத்துவிடாதா பின்னே’ என்ற எள்ளலில் இலேசாக ஞானக்கூத்தன் கூட எட்டிப்பார்ப்பார். புஷ்பா, சங்கரி, பத்மா, செண்பகங்களின் சிரிப்பையும் விழிகளையும் இதழ்த்துடிப்பையும் இன்னும் தன்னால் கவிதைக்குள் கொண்டுவர முடியவில்லையே என ஏங்கும் கணத்தில் மு.மேத்தாவாக முறுவலிக்கிறார். (இதன்வழியே, விக்ரமாதித்யன் ‘இன்னின்ன’ கவிஞர்களைப் போலச் செய்துள்ளதாக முடிவுக்கு வர வேண்டாம். எளிய புரிதலுக்காகவும் வகை மாதிரிக்காகவுமே மற்ற கவிஞர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது).

நிதானமான போதையில் எழுத்தாளன், பத்திரிகையாள சக நண்பர்களுடன் நடந்து போகையில் பெய்த சாரலுக்காக ஒதுங்கிய காவல் நிலைய சித்திரக் கவிதையில் இருத்தலியல்வாதியாகவும் மாறி நிற்கிறார்.

இவை தவிர பல்வகையான உணர்வுகளை உண்டாக்கக்கூடிய – வெவ்வேறு மனச் சித்திரங்களை – நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் ‘இந்தியக் குழந்தைகள்’, ‘வாழ்க்கை’, ‘சுவடுகள்’, ‘பொருள்வயின்பிரிவு’, ‘வீடு திரும்புதல்’, ‘நிலந்தருதிருவிற்பாண்டியன்’, ‘வெள்ளிக்கிழமை’, ‘கடக்கும் வழியில் வாழ்க்கை’, ‘மலைக்குகை ஓவியங்கள்’ போன்ற தனித்துவமிக்கக் கவிதைகளையும் எழுதியுள்ளார்.

அவரது குறுங்கவிதைகள் மிகச் சிறப்பானவை. தேர்ந்த வாசிப்பில் சில தருணங்களில் மந்திரங்களோ அவை என்னும் மயக்கம் ஏற்படுத்தக்கூடியவை. ‘நவபாஷாணம்’ போன்ற நெடுங்கவிதைகளுமே கூட குறுங்கவிதைகளின் தொகுப்பாகவே விளங்குகிறது. ஆக, சித்தர், பாணர் மரபு என்று மட்டுமே அவரை ஒரு சிமிழுக்குள் அடைத்துவிட முடியாதுதான்.

தொடர்ந்து வரும் தமிழின் நீண்ட கவிதை பாரம்பரியத்தில், மரபுக்கும் நவீனத்துக்கும் இடையில் அல்லாடும் கவிஞன் என்பது மட்டும் அவரது கவிதைகளை மொத்தமாக வாசிக்கையில் அவரைப் பற்றி மேலெழும் ஓர் எளிமையான பொதுமைப்படுத்தப்பட்ட கோட்டுச் சித்திரமாகக் கொள்ளமுடிகிறது. மரபிலிருந்தும் விடுபட இயலாமல், நவீனத்தின் மீதான ஈர்ப்பையும் விட இயலாமல், நவீனம் புகுவதைத் தடுக்க முடியாத மரபு மீந்த மனத்துடன் அலைந்து திரியும் ஒரு நாடோடி கவிஞன்.

அதே சமயம், கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தேர்ந்த ரசனையுடன் தொகுத்துள்ள இந்நூலில் உள்ள கவிதைகளை ஒட்டு மொத்தமாக வாசிக்கும் போது,  கீழ்க்கண்ட பொதுமைப் பண்புகளே அவரது கவிதைகளில் பெரும்பாலும் தென்படுவதையும் அவதானிக்கலாம். கவிதையே தன் வாழ்வு என்று கூறும் கர்வம், ஆனாலும் அந்தக் கவிதைகளால் தன் லௌகீக வாழ்வுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போன ஆற்றாமை, அதனால் பிழைப்பு தேடி நாள்தோறும் ஓடும் அவலம், எப்போதுமே எரியாத அடுப்பாகவே விளங்கும் வாழ்வு ஆகியவையே பெரும்பாலான கவிதைகளின் பாடுகளம் என்பது துலங்குவதோடு, குற்றால அருவிகள், ஊர் சுற்றும் வாழ்வு, அம்மை வழிபாடு, கட்டுகளற்ற வாழ்வு மீதான விருப்பம் போன்றவையும் ஊடுபாவாக இழைந்தபடியே இருக்கிறது.

‘விரும்புவது

நதிக்கரை நாகரிகம்

விதிக்கப்பட்டது

நெரிசல் மிக்க நகரம்’

– எனும் போது கவியின் அடி மன ஏக்கம் பிழைப்புக்காக வந்த சந்தடி மிக்க நகரச் சூழலை விட்டு விலகி, தனது ‘அமைதியான’ சொந்த ஊருக்கு – சொந்த கலாச்சாரத்திற்குத் திரும்புதல் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர் பெருநகரங்களிலேயே அலைந்து திரிய நேர்ந்ததும் வாழ்வின் அவல முரண். ஒரு வகையில நகர் நீங்குதல் – சொந்த ஊர் திரும்புதல் என்பது மீண்டும் சுயசாதிக்குள் வந்து சேர்வதாகவும், சொந்த ஊர் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கையில் மறைமுகமாக அங்கு சொந்த சாதிப் பண்பாட்டுச் சூழலை அறியாமலேயே உயர்த்திப் பிடிப்பதாகிவிடுகிறது. அதனாலேயே ம.மதிவண்ணன் போன்ற தலித் கவிஞர்களின் எதிர்வினைக்கும் ஆளாக நேர்ந்தது.

வாழ்வியல் யதார்த்தங்களின் குரூரம் பயப்படுத்தியபோதும்,

‘…சித்தம் பிரமை கொண்டால்

சித்தபிரமை

அத்தம் கண்டவன்தானே

அருமையானவன்

சுடுமணல் கொதிக்கலாம்

நெடுந்தேருக்கென்ன கவலை…’

 – என வாழ்வின் போக்கில் போய்க்கொண்டே இருக்கின்றது விக்ரமாதித்யன் கவிதைகளும் அவர் வாழ்வும்…!

எவ்வாறாயினும்,

‘விக்ரமாதித்யன் வாழ்வும் கவிதையும் ஒரு தனித்தழல்தாம்’. சிறுகோட்டுப் பெரும்பழம் – விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் – தேர்வும் தொகுப்பும் கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன் – டிஸ்கவரி புக் பேலஸ்

00

பெயர் அன்புச்செல்வன். சொந்த ஊர் தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டி. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணி நிமித்தமாக வசிப்பது மதுரையில். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் பணி. தந்தையின் வழிகாட்டுதலில் வாசிப்புப் பழக்கம் சிறு வயது தொட்டுத் தொடர்கிறது. பல சிற்றிதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளன. நூல் மதிப்புரைகள் பல இணைய இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. தொகுப்பேதும் இதுகாறும் வெளிவரவில்லை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *