– ஜெயபால் பழனியாண்டி
நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த தனிமை அவனைவிட்டு விலகப்போவதில்லை. சிலந்தியின் கூடுகள் பல மாதங்களாக தனிமையை ருசித்துக்கொண்டிருக்கின்றன. அவ்வப்போது இளையராஜாவின் இசைகொண்டு சிலந்திக் கூடுகளைக் களைய முற்படுகிறான். மீண்டும் தனிமை இருளுக்குள் மூழ்கிப்போகிறான்.
இன்றாவது அவர்கள் வந்துவிடுவார்கள்.. தன்னைவிட்டுச் சென்றவர்களின் நினைவில் மீளாத் துயருடன்.. மூடிய கண்களுக்குள் கனவுகள் புகுந்துவிடா வண்ணம்.. வாசற்கதவுகளைத் திறந்து வைத்தே உறங்கிக்கிடக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரியும் ஒருநாளும் மீண்டும் அவர்கள் தன்னிடம் வரப்போவதில்லை. தன்னுடைய காத்திருப்பு வீண் என்று தெரிந்தும் இந்த நீர்த்துப்போகாத தனிமையைத் தன் தலையணையோடு அணைத்து தூங்கியெழுகிறான்.
தனிமை எப்போதும், இவன் விரும்பத்தகா அறைத்தோழன். வேண்டா வெறுப்போடு வீட்டில் நுழையும் இவனுக்கு சிவப்புக்கம்பளம் விரிப்பதே தனிமையின் அன்றாட வேளை. குளியலறை நோக்கி செல்லும் இவனுக்கு ஏற்கனவே வெந்நீரையும் துவட்டும் டவளையும் எடுத்து தன் அன்பைப் பரிமாறிக்கொள்கின்றது.
பசியோடு வந்து அமரும் இவனுக்கு அறுசுவை உணவை தான் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களில் தேடித்தேடி படித்துக்காண்பித்து அவன் பசியைப் போக்குகின்றது. தொலைக்காட்சியில் அவனுக்குப் பிடித்த பாடலை ஒளிக்கவிடுகின்றது. அப்படி என்ன செய்துவிட்டான் இவன். இந்தத் தனிமை இவனை உருகி உருகி காதலிக்கின்றது. யாரிடமும் நெருங்கவிடா ஒரு நெருப்பு யாகத்தைத் தொடர்ச்சியாக நிகழ்த்திகொண்டே இருக்கின்றது.
இன்றைய அதிகாலை.. நிச்சயம் வீட்டைக் காலி செய்திருக்கும் அந்தத் தனிமை. இதோ நொடிக்கொருதரம் மூச்சுமுட்ட பேசிக்கொண்டிருக்கும் அவனின் தாய் வந்துவிட்டாள். வாசலில் அவள் காலடிசத்தம் கேட்ட மறுகணம்..
தனிமை தன் சிலந்திக்கூட்டை காலிசெய்துகொண்டு.. தனக்குத் தேவையான துணிமணிகளோடு கிளம்புவதுபோல் பாவனை செய்ய ஆயத்தமாகிக்கொள்ளும். அவ்வளவுதான்.. வேறொன்றும் நிகழாது.. மாதம்.. மாதம்.. நடக்கும் கதையாயிற்றே..
அந்த சிலிண்டர் நிறுத்தி வைக்கப்பட்ட மூலைக்குச் சென்று முடங்கிக்கொள்ளும். நிசப்தமான இரவுகளில் அவள் தூங்கிய நள்ளிரவில் சாதுர்யமாக அறிந்து அவனைச் சென்று அணைத்துக்கொள்ளும். விசயம் தெரிந்து அவள்.. துடைப்பைக் கட்டை கொண்டு விரட்டாத நாளில்லை. இருந்தபோதும் அவள் ஊர் திரும்பும் நாட்களில் சுதந்திரம் பெற்றுக்கொண்டு மீண்டும் கொண்டாட ஆரம்பித்துவிடுகிறது.
உருவமில்லா இந்தத் தனிமை அவன் உடைகளோடு சென்று உறவாடிக்கொள்கிறது. புத்தக அலமாரியில் மாறிமாறி அமர்ந்துகொள்கிறது. அவன் கரம்பிடித்து கடைவீதி செல்ல அன்றாடம் அடம்பிடித்தாலும்.. வாசற்படியை தாண்டவிடுவதில்லை அத்தனிமையை அவன்.
பேருந்து நிறுத்தத்தில் தனது காதலியை பேருந்தில் வழியனுப்பி வைக்க வந்த இளைஞன்.. தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே அவளோடு உரையாடிக் கொண்டிருக்கின்றான். பிங்க் வண்ணத்தில் வெள்ளை பூக்கள் ஒளிரும் படியாக இருந்த சேலை.. அவள் முகத்தில் இருபுறமும் வழிந்துகொண்டிக்கும் தலைமுடி காற்றில் கொஞ்சம் அசைந்தாடிக் கொண்டிருந்தது. சிரித்துக்கொண்டே தனது கைப்பையைக் கொண்டு அவனை மெலிதாக அடிக்கும் தோரணையில் சீண்டிக்கொண்டிருக்கிறாள்.
கையில் காய்கறிப் பையோடு ஏதோவொரு சிந்தனையில் நகர்ந்துக்கொண்டிருந்த அவன். அதனைப் பார்த்த மறுகணம் தான் தவறவிட்ட வாழ்க்கையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டான்.
கல்லூரியின் மூன்றாம் தளத்திலிருந்து வேகவேகமாக ஓடி வந்த அவளின் கால்கள் தரையைத் தொடும்முன்பாக பாதியிலேயே நின்றுவிட்டன. இதற்கு முன் பார்த்திராத இவள் எந்தத் துறையைச் சேர்ந்தவளாக இருப்பாள். பட்டாம்பூச்சிக்கு றெக்கை முளைக்காது இருந்தால் இப்படியும் இருக்குமோ.. உலகத்தில் யாருமே வைத்திராத ஒரு பெயரை இவள் வைத்திருப்பாளா?
நான் காணவேண்டும் என்பதற்காவே! இந்நேரம் இவள் தரிசனம் தரக்காத்திருக்கின்றாளா? அய்யோ! யார் இவள்.. மனதில் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.. குளிர் புன்னகையில் எனைத்தொட்ட நிலா..” பாடல் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றதே!. எப்படியாவது அவள் அருகில் சென்று மூச்சு வாங்காமல், சொற்கள் தடுமாறாமல்.. கால்கள் நடுங்காமல் காதலை சொல்லிவிட வேண்டும். துடிக்குது என்மனம்.
காதலை மனிதிற்குள்ளே பூட்டி வைக்க நானொன்றும் இதயம் முரளி இல்லையே!. அவள் தன் தோழியோடு விடுதிக்குச் செல்லும்பொழுது பார்த்துச் சிரித்த அந்த நன்நாளில் சொல்லவில்லை. ஜெராக்ஸ் எடுக்க சென்ற இடத்தில் அதிர்ச்சி வைத்தியமாக நின்ற அவளின் கடைக்கண் பார்வைக்கும் அந்நேரத்தில் அசடு வழியவில்லை.
அப்போ.. எப்போதுதான் சொன்னாய்!.. நீங்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளை எழுப்பலாம். அப்போதும் சொல்லவில்லை. ஆகவே இந்தத் தனிமை…
ஸ்டாப்.. ஸ்டாப்.. கதையில் பின்னோக்கி சென்றுவிட்டோம்..
மீண்டும் கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிடுவதில்லை என்ற உறுதியில்.. அவள் ஸ்லாம் புத்தகத்தின் முகப்பு பக்கத்தில் வரைந்த பூக்களின் பாதத்தில் உதிர்த்துவிட்ட இதழ்களாக எனது காதலை பரிமாறிவிட்டேன்.
அலைபேசி எண்ணை யாரிடமோ பெற்றுக்கொண்டு அவளின் குறுந்தகவலில் ஆரம்பித்து.. இரவு பகல் பாரா உரையாடலில் மயங்கிக்கிடந்து..
அதர்வாவே! அண்ணார்ந்து பார்க்கும்படியாக அவளின் காதலோடு கரம்கோர்த்துவிட்டேன்.
இப்போதெல்லாம் இரு சக்கர வாகனம் நன்றாக ஓட்டக் கற்றுக்கொண்டேன். பின் அமர்ந்துவர ஆசைப்படுவாள் என்று..
பிடிக்காத உணவை பிடிக்கப்பழகிக் கொண்டேன்.. அவள் கோபம் கொள்ளக்கூடாதென்று..
அவளுக்குப்பிடித்த ஆடையோடு நகரில் நடமாடவும் கற்றுக்கொண்டேன். கைப்பிடித்தால் உதறித்தள்ளாமல் இருப்பதற்கும் அவளோடு ஒத்தாசைக்கொண்டேன்.
பெற்றோரின் முழு சம்மத்தோடு இருவரின் திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும். அவளுக்கு பிடித்த ஒவ்வொன்றையும் பார்த்துபார்த்து வாங்கிக் குவிப்பேன். வாழ்வின் ஒவ்வொரு நிமிடம் அவளுக்காவே அர்ப்பணித்துக்கொள்வேன்.
இரு அழகான குழந்தைகள் அவளையும் சேர்த்து.. வாழ்க்கை வாழ்வதற்கே.. திரும்பத் திரும்ப வாழ்ந்து.. கடவுளையே மிரட்சி கொள்ள செய்வேன்… மயிலிறகால் மகிழ்ச்சி எந்நாளும் எனை வருடிக்கொண்டிருக்கும்..
பொறாமை கொள்ளும் ஊரார் கண்ணகளுக்கு திருஷ்டி பூசாணிக்காய் சுற்றி நடுரோட்டில் உடைத்து அளவில்லா ஆனந்தம் கொள்வேன்..
ஆம்.. ஆனந்தம் கொள்வேன்..
பெக்க.. பெக்க.. பெக்க என்ற பெருஞ்சிரிப்பு.. ஆம் பெருஞ்சிரிப்பு.. அறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
வெளியே சென்று வந்தவனிடம்.. இப்படியொரு மாற்றத்தை எதிர்ப்பார்க்கவில்லை. இவன் மனதில் இப்படியொரு தீயை விதைத்தவன் யார். சர்வகாலமும் அடிமையாக்கி வைத்திருந்த இவனை மீட்டெடுக்க முயற்சிப்பவன் யார்.. விடைதெரியா புதிருக்குள் மூழ்கிய தனிமைக்கு அவன் உரக்கச்சொன்ன கவிதையொன்று..
“இருள் என்னும் திரையைக் கிழித்துப் பார்த்தேன்..
அதனுள் இருந்தது இன்னொரு இருள்..
கதவின் தாழ்ப்பாழைத் திறப்பதுபோல்
சற்று விலக்கிப் பார்த்தேன்..
மீண்டும் இருள்..
என்னடா இது வம்பாய்ப்போனது..
அவன் பின்மண்டையில் இரண்டு தட்டுதட்டியது இருள்..
அதிர்ந்தவனை நோக்கி..
அட மடையா! விளக்கை ஏற்றடா என்றது மனதில் குரல்.. ”
00


