கவிதைகளை வாசிப்பது ஒருவகையில் இன்பத்தைத் தரக்கூடியது. அதே சமயம் முதல் வாசிப்பில் நமக்கு புலப்படாமல் ஆட்டம் காட்ட அதன் அடுத்தடுத்த வாசிப்பில் நம்மை இழுத்துக் கொள்ளும் கவிதைகள் நமக்கு பேரின்பத்தைக் கொடுக்கக் கூடியவை. ஆனால் அந்தக் கவிதை எப்படி அடுத்தடுத்த வாசிப்பைக் கேட்கிறது என்பதுதான் இங்கு யாருக்கும் புரியாத புதிர். ஒரு கவிதை ஒரே மாதிரிதான் புரிந்து கொள்ளப்படுகின்றதா என்பதுகூட இன்ன்னொரு புதிர்தான்.
மற்றவர் எப்படி என தெரியாது; தான் வாசித்த கவிதைகள் தனக்கு கொடுத்த அனுபவத்தை பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களும் உண்மையில் பாக்கியசாலிகள். அவர்களால் கவிதைக்குள் ஒரு பெருவெளி பயணத்திற்கு செல்ல முடிகிறது. தான் பார்க்காததையும் வாழாததையும் ஒரு கவிதை வாசகனால் புதிதா க அனுபவிக்க முடிகிறது. சிலசமயங்களில் கவிதை எழுதிய கவிஞனுக்கே கிடைக்காத அனுபவங்கள் அதனை வாசித்த கவிதை வாசகர்களுக்கு சாத்தியமாகிறது.
ஒரு கவிதை அதன் வாசகனுக்கு கொடுக்கும் திறப்பு அந்த ஒற்றை வாசலோடு நின்றுவிடுவதில்லை. அந்தக் கதவில் நுழைந்த வாசகன் ஒரு போதும் வெறுங்கையோடு திரும்ப வருவதில்லை. கவிஞனின் பெயர் நினைவில் இல்லாமல் அந்தக் கவிஞன் எழுதிய கவிதையைப் பிழையின்றி சொல்லிக்கூடியவர்களும் எனக்கு தெரியும்.
வாசகன் தன் பெயரை மறந்தாலும் தன் கவிதையை ஒருபோதும் மறந்துவிடக் கூடாதென நினைக்கும் கவிஞர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.
நண்பர்களே நமது இம்மாத; ‘மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 11-ன்றில்’ கவிஞர் த.அழகுராஜனின் ‘தீம்பிழி’ என்னும் கவிதைத் தொகுப்பைக் குறித்து தெரிந்து கொள்வோம். புத்தகத்தின் தலைப்பு; இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஆவலைத் தூண்டியது.
‘தீம்பிழி’ என்றால் என்னவென்று தேடினேன். ‘தீம்பிழி எந்திரம்; பந்தல் வருந்த….’ என்ற வரி பதிற்றுப்பத்து நூலில் இடம்பெற்றுள்ளது தெரிந்தது. சங்க காலத்தில் கரும்பு போன்றவற்றைச் சாறு பிழிய இந்த தீம்பிழி இயந்திரம் பயன்படுத்தப்பட்டுளதாக குறிப்பிட்டிருந்தது.
கவிஞரும் தான் சந்திந்த; சந்திக்காத சம்பவங்களை தீம்பிழியால் பிழிந்து கவிதையாய் நமக்கு கொடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லத் தொடங்கினேன்.
கவிஞர் த.அழகுராஜன் மதுரை மாவட்டத்தில் கைலம்பட்டி என்னும் கிராமத்தில் விவசாய குடுமொஅத்தில் பிறந்திருக்கிறார். தந்தை தங்கராசு மற்றும் தாயார் தவமணிக்கு இரண்டாவது மகனாக பிறந்திருக்கிறார். இவரோடு பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள்.
இவர் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். தற்போது சிங்கப்பூரில் வேலை இட பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரியாக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு காஞ்சனா (முனைவர் ஆங்கில இலக்கியம் யாதவர் கல்லூரி) என்னும் மனைவியும் தியான மற்றும் ரமணா ஆகிய இரு குழந்தைகளும் உணடு.
அதோடு இவர் இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் தாயுமானவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்திருக்கின்றார். சிங்கப்பூர் கவிமாலை மற்றும் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்திலும் தனது சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகின்றார்.
இந்தத் தொகுப்பு இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
த.அழகுராஜனின் ‘தீம்பிழி’ என்னும் கவிதைத் தொகுப்பில் ‘மயிற்பீலியின் வருடல்’, ‘காமத்திற்கு மேலும் மூன்று தலைகள்’, ‘நினைவுக்கு மறுபெயர் பச்சை’, ‘இன்னும் சில மிடறுகள்’ என்ற பொது தலைப்புகளில் நான்கு பிரிவுகளாக கவிதைகளை பிரித்துள்ளார்.

ஒருமுறையாவது காதலித்துவிட மாட்டோமா என தன்னைத்தானே கேட்டு கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி நினைப்பது சிலருக்கு அவமானமாகக்கூட இருக்கலாம். ஆனால் கவிஞரின் கவிதையில் அந்த அவமானத்தை துடைத்து இதுவெல்லாம் மனித வாழ்வில் இயல்புதான் என்று சொல்வதோடு அவர்களுக்காக இப்படியொரு கவிதையைக் கொடுக்கின்றார்.
–பயணியர் மனக்குடை–
சன்னலோர இருக்கை காதல்
ஒருமுறையேனும்
அமர்ந்து விட்டுப்போக
விரும்புகிறது மனம். (ப.17)
சரி; இது காதலுக்காக ஏங்கும் மனது என்று வைத்துக் கொள்வோம். எதிர்ப்பார்த்தபடி காதல் வாய்த்துவிட்டது. அந்தக் காதல் ஏற்பட்ட முதல் அனுபவம் எப்படியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கும் ஒரு கவிதையைக் கொடுத்திருக்கின்றார்.
–மென் பொறியாளினி–
கண்களால் தட்டச்சு செய்து
காற்றிலனுப்பும்
காதல் தொழில்நுட்பம்
உன்னிடமேயிருக்கிறது. (ப.19)
தொழில்நுட்ப வளர்ச்சியில் தட்டச்சு செய்து காற்றிலனுப்பிய காதல்; தந்தி வடக்கம்பிகளிலும் வரத்தான் செய்திருக்கிறது அடுத்த கவிதையில்;
–அலைவரிசை–
கண்ணிமைக்கும் வேளையில்
நோக்கி நிலம் நோக்கும்
அவள்
தந்தி வடக்கம்பிகளைத்
தரையில் நட்டு செல்கிறாள். (ப.20)
பெண்கள் பூப்பெய்துவது போல, ஓர் ஆண் எப்போதாவது பூப்பெய்துவானா? இப்படியான கேள்விகளைச் சந்திக்காமலும் அது என்னவென்று குழம்பாமலும் இளம் பருவத்தை கடந்தவர்கள் குறைவுதான். “ஒரு ஆம்பள எப்போது வயதுக்கு வருவான் தெரியுமா?” என கேட்டு பாடம் நடத்தும் கூட்டம் இன்றும் இருக்கிறதா என தெரியவில்லை. ஏனெனில் இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் எளிதாக கற்று கொண்டு கடந்து விடுகிறது. அவர்களிடம் சுமப்பதற்கு சுமையும் இல்லை சொல்லிக்கொள்வதற்கு சுகமும் இல்லை. அப்படியானவர்களுக்கும் சேர்த்துதான் கவிஞர் ஒரு கவிதையைக் கொடுத்திருக்கின்றாரோ என யோசிக்க வைத்தது ஒரு கவிதை.
–தன்னிலை மாற்றம்–
ஏந்தல் நீர் பாய்ந்த
நிலம்போல் பசுமையேறிக்
காந்தள் மென்விரல் பிசைந்த
தயிர்போல் மென்மையாகிக்
கூந்தல் சரிவில்
குடியேறும் மலர்களில்
மெல்லத் தொலைந்து
ஆடிமுன் அசையாது நின்ற நாளொன்றில்
ஆணாகிக் போனேனோ!. (ப.21)
நாம் நேசிக்கும் பெண்ணிடம் இன்னொருவன் பேசினாலே நம்மில் பலருக்கு அது பிடிக்காது. அவனோ நாம் நேசிக்கின்றவளை இரசித்து கொண்டிருந்தால் கோவம் வராமல் போகுமா? போகும்.! ஆமாம் நண்பர்களே கோவம் வராமல்தான் போகும். அப்படி நாம் நேசிப்பவளை இரசித்து கவிதை எழுதுவது இந்த இயற்கை என்றால். இயற்கை எழுதிய கவிதையில் இந்தக் கவிஞன் என்ன செய்கிறான் தெரியுமா?
–மழைக் காலத் தேநீர்–
அது ஒரு மழைக்காலம்
ஒற்றைக் குடையோடு
நீ
நின்று கொண்டிருந்தாய்
பட்டுத் தெறித்த மழைத்துளிகள்
உன் வளைவுகளில்
கவிதை எழுத
வாசித்த நான்
தேநீர் இளஞ்சூட்டைப்
பருகிக் கொண்டிருந்தேன்!. (ப.25)
இந்தக் கவிதையை இதனுடன் நிறுத்தவில்லைக் கவிஞன். மழையில் நனைந்த காதலியைத் துவட்ட வேண்டாமா. அவள் நனைவது மட்டுமா அழகு. அந்த ஈரத்தை துவட்டுவதும் கூடத்தானே அழகு.
–சொட்டும் ஈரம்–
உன்னைத் தொட்டு
நுகர்ந்த மழைதான்
உன் பேரழகை நகலெடுத்துக்
காட்சிப்படுத்துகிறது
காதலும் மழையும் வெவ்வேறல்ல
நனைந்து துவட்டும் ஈரம் பேரழகு!. (ப.26)
காதல் எல்லோருக்குமா வெற்றியைக் கொடுத்துவிடுகிறது. ஆனால் அது ஏதோ ஒருவகையில் நம்பிக்கையைத் தவறாது கொடுத்துவிடுகிறது. கவிஞனின் இந்தக் கவிதை போல;
–அன்புடன்–
கடைசிக் கடிதமென்று தெரிந்தும்
அன்புடன்…
என்ற சொல்லுக்குப் பிறகு
தொடர் புள்ளிகளோடு
முடிகின்றன காதல் கடிதங்கள். (ப.38)
காதலிக்கின்றவர்கள் எல்லாம் உண்மையி; காதலிக்கின்றார்களா என்கிற கேள்வி உங்களுக்கு எழுந்ததுண்டா? அப்படி காதலிக்கிறேன் என பல ஆண்டுகளாக சுற்றியவர்கள் ஒரே நாளில் எப்படி எதிரிகளாக மாறிவிடுகிறார்கள. ஒருவர் உயிரை ஒருவர் ஏன் எடுத்து துணிகிறார்கள். அப்படியென்றால் அவர்கள் காதலித்தது அவர்களுக்கு மேலோட்டமாக தெரிந்த ஒன்றைத்தானோ. அந்த பாசாங்கு மனிதனின் உள்ளே மறைந்திருக்கும் நிஜமான மனிதனை எப்போதுதான் பார்ப்பது.
–பூக்கள் மலரும் அந்தி–
ஒப்பனை அற்ற
ஒரு பொழுதில்
ஈர்ப்புகளின் மாயக் கைகளிலிருந்து
நழுவிய வேளையில்
எல்லாம் உடைந்து நொறுங்கிய பின்பும்
உடையாத சமநிலையில்
உனக்கும் எனக்குமான
காதல் பிறக்கிறது !. (37)
காதலுக்கு அடிப்படையே நினைவுகள்தான். எவ்வளவுக்கு எவ்வளவு காதல் நினைவுகளால் தன்னை நிரப்புகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் காதல் ஆழமாகிறது. அந்தக் காதல் முடிவில் சேர்கிறதோ இல்லையோ. ஆனால் அந்த ஆழம் ஒருபோதும் தன்னை மூடிக்கொள்ளாது. சேர்ந்த காதல்களை விடவும் சேராத காதல்கள்தான் நினைவுகளைச் சேகரித்ததில் முன் வரிசையில் இருக்கின்றன.
–உதிராத வண்ணம்–
அது செய்முறை வகுப்பு
இரு வித்திலைத் தாவரத் தண்டின்
குறுக்கு வெட்டுத் தோற்றம் வரைய
உன் வளையல் கழற்றிக் கொடுத்தாய்
நீ கேட்காமலே
திருப்பிக் கொடுத்த பிறகும்
வண்ணம் மாறாத வளையல்
இன்னும் நினைவுப் பெட்டகத்தில். (ப.33)
அப்படியொரு நினைவுப் பெட்டகம் இல்லாத காதலர்கள் இருப்பார்களா என்ன? அதிலும் அந்த நினைவுப் பெட்டகத்தை அவ்வப்போது திறந்து அசைபோடும் மனநிலை வாய்ப்பதும் ஒருவிதத்தில் துன்பம் கலந்த இன்பம்தான். அதுதான் கவிஞனின் அடுத்த கவிதை;
–நினைவின் தடம்–
நீ
விட்டுச்சென்ற நினைவுகளால்
குளம்படி சுமந்து கிடக்கும்
கிடைமறித்த நிலமானேன்
கோடை வெயிலுக்கு
நிழலொதுங்கிக்கிடக்கும்
ஆடுகளுக்குத் தெரியும்
நான் அசைபோடுவது. (ப.32)
இதுவரையில் இந்தத் தொகுப்பில் ‘மயிற்பீலியின் வருடல்’ என்ற பொது தலைப்பில் கவிஞர் எழுதிய காதல் கவிதைகளில் சிலவற்றைப் பார்த்தோம். அடுத்த என்ன? அதான் காதலுக்கு பின் என்ன? என கேட்கிறீர்களா..
அதற்கு கவிஞனின் பதில்; ‘காமத்திற்கு மேலும் மூன்று தலைகள்’. இரண்டாவது பொது தலைப்பில் இருந்து சில கவிதைகளைப் பார்ப்போம்.
–வலி தீர்க்கும் வழி–
உன்னைக் காதலித்த பிறகு
நானும் தமிழும் ஒன்றானோம்
வலிமிகும் இடத்தில் ஒற்றும்
வலிமிகாதிருக்க உன் ஒத்தடமும்
வேண்டுமென்பது விதி. (ப.42)
இலக்கணம் தெரிந்து காதலிப்பது; கவிதை எழுத எவ்வளவு வசதியாக இருக்கிறது இந்தக் கவிஞர்களுக்கு என இந்தக் கவிதையே சொல்லிவிடுகிறது.
இரு உள்ளங்கள் இணையும் வேலை; வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட அனுபவமே முக்கியமாகிறது என சொல்லக்கூடிய கவிதை;
–வெப்பக்கடத்தி–
உன்கையில் அகப்பட்டுக் கிடக்கும்
தீக்குச்சி நான்
பற்றவைத்தல்
உன் பொருட்டேயென்றாலும்
எரிந்து தீர்ந்து போகும் வேட்கை
எனக்கும் தான்!. (ப.45)
இதையே கொஞ்சம் பக்குவத்தோடு செயல்படு என விண்ணப்பம் வைக்கின்றார் கவிஞர் இப்படி; காதல் அதற்கு செவி சாய்க்குமா என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்!

–எரியும் தூக்குச்சிகள்–
கார்த்திகை மாத இரவுகளில்
நமத்துப்போன
தீக்குச்சிகளை பற்றவைக்கும்
பக்குவத்தோடு
உரசிக்கொள்ளும் வேளையில்
பற்றிக்கொண்ச ஐம்புலன்
சொக்கப்பனையாய் வெடித்து சிதற
இரவெல்லாம் பூத்து நிற்கிறது
உயிரின் வெப்பம்! (ப.46)
இந்தக் கவிதையில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கத்தான் செய்கிறது கவிஞன் சொல்லியிருக்கும் ‘நமத்துப்போன/ தீக்குச்சிகளைப் பற்றவைக்கும்/ பக்குவத்தோடு’ என்ற வரியை நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? எப்படி பொருள் கொள்வீர்கள். நான் அதனைக் காதலனோ காதலியோ தாங்கள் சுமந்து கொண்டிருக்கும் கடந்த கால வலியாக பார்க்கிறேன். அதனை துடைத்தெறியும் பக்குவமே இரு இதயங்கள் மீண்டும் இணைய காரணமாக இருக்கும் என நம்புகின்றேன். இவ்வரிகளை இப்படியும் புரிந்து கொள்ளலாம். அல்லது நீங்கள் நினைப்பது போலவும்தான் பொருள் கொள்ளலாம்.
முத்தத்தைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இருக்கிறார்களா என்ன? அவர்கள் கொடுக்கிறார்களோ இல்லையோ எழுதிவிடுகிறார்கள். முத்தத்தை எழுதும் போது அதை இன்பத்தின் உச்சத்திற்கும் துயரத்தின் உச்சத்திற்கும் கொண்டு செல்ல கவிஞர்களால் முடிகிறது. முதல் முத்தத்திற்கும் கடைசி முத்தத்திற்கு அதுதானே வித்தியாசம்.
–கடைசி வரை–
முதல் முத்தம்
உயிரைச் சுட்டதும்
ஒவ்வொரு
கடைசி உள்ளிழுப்பும்
கையைச் சுடுவதும்
நீயின்றிப் போனாலும்
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. (ப.65)
தனக்கு கிடைத்த முதல் முத்தம் மனதை சுட்ட சூட்டையும் அந்த நினைவும் அந்தப் பிரிவும் கொடுத்த வேதனையால் தினம் தினம் உள்ளிழுக்கும் சிகிரெட்டின் கடைசி கைசூட்டையும் கவிஞர் ஒன்றாக சேர்ந்து அந்த துயரத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
கவிஞர் சொன்ன இந்த முத்தத்திற்கு நேர்மாறான இன்னொரு முத்தத்தையும் பதிவு செய்ய மறக்கவில்லை.
–சொட்டும் முத்தம்–
தூறல் விட்ட பிறகு
மரங்களைக் கொண்ட
நடைபாதையை மனம் விரும்புகிறது
இலை சிந்தும் துளிகள்
என்மீது பட்டுத் தெறிக்கையில்
நீ கொடுத்த
முத்தங்களின் ஞாபகம்! (ப.53)
தன் காதல் ஏற்றுக்கொள்ளாத வேதனையை கவிஞர் சொல்வது பலரின் வாக்குமூலமாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளது;
–ஒத்தையடிப் பாதை–
அந்தப் பெருங்காடு
தன் அடர்வனப்பில்
ஒளிக்கீற்றை ஊடுருவ விடவில்லை
எந்தப் பறவைக்கும்
கூடு கட்ட
இடம் கொடுக்கவில்லை
வளர்ந்து நின்ற மூங்கில்களில்
வண்டு துளைக்க உடன்படவில்லை
மரங்களின்
பழுத்த இலைகள்
உதிர்வதை அனுமதிக்கவில்லை
காற்றின் அசைவுகளுக்கு நடனமாடவில்லை
கடைசிவரை
வெறுங்காடாகவே இருந்தது. (ப.55)
காதலுக்கு மட்டுமல்லாது; வாழ்வில் எந்த அனுபவத்திற்கு இடம் கொடுக்காத மனிதர்களுக்கும் இந்தக் கவிதை; சொல்வதற்கான செய்தியை வைத்திருக்கிறதுதான்.
தீம்பிழி கவிதைத் தொகுப்பில்; ‘காமத்திற்கு மேலும் மூன்று தலைகள்’ என்ற பொது தலைப்பில் கவிஞர் எழுதியிருந்த கவிதைகளில் சிலவற்றைப் பார்த்தோம். அடுத்து ‘நினைவுக்கு மறுபெயர் பச்சை’ என்ற பொது தலைப்பில் கவிஞர் எழுதியிருக்கும் கவிதைகளுக்கு செல்வோம்.
இந்தத் தலைப்பில் உள்ள கவிதை பெரும்பாலும் ஒருவனின் நினைவில் வாழும் வாழ்வையும் அவனது வரலாறையும் நினைத்து பெருமிதம் கொள்ளும்படியாய் உள்ளன.
‘வாடிவாசல்’ (ப.67), ‘நடுகல்’ (ப.68), ‘கரிமக் காலக்கணிப்பு’ (ப.69) என்ற தலைப்புக் கவிதைகள் வழி தமிழனத்தின் பெருமையை வாசகர்களுக்கு கடத்துகின்றார் கவிஞர். ஆனால் அவை வெறும் பெருமை பேசுவதோடு நின்றுவிடுவதில்லை என்பதில்தான் கவிஞர் தனித்து தெரிகின்றார்.
‘ஈரத்துளிகள்’
துடைத்துவிட விரும்பாத ஈரம்
மகளின் முத்தம். (ப.72)
எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் தலைப்பில் ஈரத்துளிகள் என சொல்லிவிட்டு மீண்டும் கவிதையில் ஈரம் என சொல்வதைத் தவிர்த்து இருக்கலாம். ஏனெனில் மீண்டும் ஈரம் என சொல்லாமலேயே இக்கவிதை அதன் வாசிப்பு அனுபவத்தை தடுக்கவில்லை. மாறாக ஈரம் என்ற சொல் கவிதையில் இருப்பதுதான் இக்கவிதையை பல்வீனமாக மாற்றுவதாக தோன்றுகிறது.
இதை இப்படி வாசிக்கலாமா?
‘ஈரத்துளிகள்’
துடைத்துவிட விரும்பாத
மகளின் முத்தம்.
அல்லது இந்தக் கவிதையை இப்படி வாசித்துப் பாருங்களேன்;
‘மகளின் முத்தம்’
துடைத்துவிட விரும்பாத
ஈரத்துளிகள்..
இப்படியாக பலவகையில் வாசகனுக்கு இந்தக் கவிதை சுதந்திர கொடுப்பதற்கு காரணம் இக்கவிதையில் கூடுதலாக தெரிந்த ஈரம் என்ற சொல்தானே.
புலம்பெயர்ந்து வாழ்கிறவர்கள் எழுதும் கவிதைகள் பிரிவின் துயரமும் அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதமும் சொல்லப்படுவது உலகில் எந்த மூளையில் இருப்பவர்க்கும் புரிந்துவிடக் கூடியதாகவே இருக்கிறது. பிறந்தது முதல் தன் சொந்த நிலத்தை விட்டு நகராத ஒருவருக்குக் கூட புலம்பெயர்ந்த கவிஞனின் கவிதை அவனது வலியைச் சொல்லிவிடுகிறது. அந்த புரிதலுக்கு வாசகனிடத்திலும் தேடல் அவசியமே.
‘பூக்கள் விழுந்த ஓசை மட்டும்’ (ப.73) என்ற கவிதையில் வெளியூரில் வேலை செய்யும் கணவனுக்கு அழைத்திருக்கிறாள் மனைவி. வழக்கமான உரையாடல்; எப்போதும் போல தங்களின் ஐந்து வயது மகள் பற்றிய புகாருமே இருக்கிறது. அது இயல்புதான் இல்லையா. ஆனால் கவிஞர் அங்கு மாறுபடுகின்றார். அந்தக் கவிதையை இப்படி முடிக்கின்றார்;
இப்படியாகத் தொடர்ந்தபோது
எதிர்முனையிலிருந்து மகளின் குரல்
அப்பா எனக்கு
ஒரு கம்பியூட்டர் போதும்
நம்ம கோழி குட்டி போட்டிருக்கு
நாளைக்கு
நம்ம ஊருக்கு வரும்போது
எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி வேணும்பா
அந்தப் புகார் பெட்டியினுள்
சில பூக்கள் விழுந்த
ஓசை மட்டும்
கடல் கடந்திருக்கும்
என் காதுகளில். (ப.74)
பெண்ணின் பெருமையைப் பேசும்போதெல்லாம் தாய்மையைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். அதுதான் ஒரு பெண்ணை பெண்ணாக முழுமை படுத்துகிறதா இல்லையா என்கிற சர்ச்சைக்குள் நான் செல்லவில்லை. ஆனால் இந்தக் கவிதையைப் புரிந்து கொள்ள இப்படி தொடங்க வேண்டியுள்ளது.
பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்குமே கருவறை இருக்கிறது என்கிறார் கவிஞர். அதுமட்டுமா அந்தக் கருவறையும் நெரி கட்டி கொள்வதையும் சுட்டி காட்டுகின்றார். மிகவும் வெளிப்படையான கவிதைதான். வெளிப்படையாக இருக்கிறது என்பதாலேயே குறைத்து மதிப்பிட முடியாத கவிதைகளில் இதுவும் ஒன்று.
–தகப்பனின் கருவறை–
சித்திரையில் நீ பிறந்தாய்
என் வானமெங்கும் நிறைமதி
ஏழைக்குடிசையை நிறைத்துவிடும்
சிமிழ் விளக்கின் வெளிச்சத்தைப்போல் நீ
பூமியின் இறக்கையில்லாத் தேவதைகள்
பெண் பிள்ளைகள்
யாரும் எதிர்பாரா வேளையில்
வீட்டுப் பூந்தொட்டியைப்போல்
சட்டென்று பூத்து விடுகிறாய்
பள்ளி செல்ல எழுந்திருக்காமல்
சுருண்டு படுத்துக் கிடக்கும்
அந்த நாள்களில்
நெரி கட்டிக் கொள்கிறது
தகப்பனின் கருவறை.(ப.74)
‘பொதி சுமக்கும் வேர்’ (ப.88) என்ற கவிதையில் பூவரச மரத்தை வெட்ட வேண்டாம் என்பதற்காக சொல்லும் காரணம் ஒவ்வொரு ஊரின் மரங்களுக்கும் பொருந்தும். அந்தக் கவிதையை இப்படியாக முடிக்கின்றார் கவிஞர்;
அத்தனை பேர்களின் இரகசியத்தையும்
வேர்களில் சேமித்து வைத்திருக்கிறது
நட்டுவைத்தவர்கள் புலம் பெயர்ந்த பிறகும்
அவர்களின் வாழ்வையும் சேர்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறது
அந்தப் பூவரச மரம். (ப.88/89)
உலகமயமாக்கள் மீது படைப்பாளில் வைக்கும் விமர்சனம் எப்போதும் முக்கியமானது. அதிலும் எளிய மக்களோடு மக்களாக வாழும் படைப்பாளிகள் அதன் பாதிப்புகளை நேரடியாக உணர்ந்து தவிர்க்க முடியாத சூழலில் அவற்றை படைப்புகளாக எழுதி வைக்கிறார்கள். கவிஞரின் ‘நாடோடி என்ற ஒருசொல்’ (ப.91) என்ற கவிதையில் கடந்த கால வாழ்வை சொல்வதோடு இன்று நாம் இழந்ததையும் நமது சிக்கலான சூழலையும் இப்படியாக சொல்லி கவிதையை முடிக்கின்றார்.
எளிய மனிதனை ஏப்பமிட்டுவிட்டு
நெகிழிக் குடத்தை
செரிக்க முடியாமல்
திணறுகிறது காலம். (ப.91/92)
இந்தக் கவிதையின் இன்னொரு வடிவத்தையும் அடுத்தக் கவிதையான ‘சுட்டி ஐயா என்ற பெரியகருப்பன்’ (ப.93) என்ற கவிதையில் சொல்கிறார்.
தினமும் பத்து மைல்தொலைவு சென்று தலைச்சுமையாய் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்யும் ஐயாவைப் பற்றிய கவிதை. ஆனால் அந்த ஐயா வெறு ஒற்றை மனிதரல்ல என்பதை நினைக்க வைக்க கவிதையை இப்படியாக முடிக்கின்றார் கவிஞர்;
வாழ்ந்து சென்றவர்களால் வாழ்கிறோம்! (93/94)
சிங்கை கவிஞர் த.அழகுராஜனின் ‘தீம்பிழி’ கவிதைத் தொகுப்பில்; ‘நினைவுக்கு மறுபெயர் பச்சை’ என்ற பொது தலைப்பில் கவிஞர் எழுதியிருந்த கவிதைகளில் சிலவற்றைப் பார்த்தோம். அடுத்து ‘இன்னும் சில மிடறுகள்’ என்ற நான்காவது பொது தலைப்பில் கவிஞர் எழுதியிருக்கும் கவிதைகளுக்கு செல்வோம்.
இந்தப் பகுதி முழுக்க மனித இருப்பையும் மனதில் அலைச்சலையும் சொல்லுவதாக கவிதைகளை எழுதியிருக்கின்றார். அலைபாயும் மனதை எதனாலும் அடக்க முடியாவிட்டாலும் கவிஞர்களில் எழுத்துகளில் அவர்கள் மனம் மட்டுமல்ல நம் மனமுமே கொஞ்ச நேரம் கட்டுபடத்தான் செய்கிறது.
–சிறகு–
பறக்கத் தெரிந்தும்
அமரத் துடிக்கிறது பட்டாம்பூச்சி
அமரத் தெரிந்தும்
பறந்து கொண்டேயிருக்கிறது மனம். (108)
இதையே இன்னொரு விதத்தில் இப்படியும் சொல்லிச் செல்கிறார் கவிஞர்;
–ஒருபோதும்–
கறுப்பு வெள்ளை
எல்லைவரை
தன் சிறகுகளை விரித்து
அங்கே வண்ணங்களை
விட்டுவிட்டு வருகிறது
ஒளியாண்டு வேகத்தில் பயணப்பட்டு
யாருமற்ற வெளியில் இளைப்பாறித் திரும்புகிறது
அமரப் பிறந்த மனம்
ஒருபோதும்ன் அமர்வதில்லை. (ப.117)
நண்பர்களே நமது இன்றைய மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 11-ல் சிங்கை எழுத்தாளர் த.அழகுராஜனின் ‘தீம்பிழி’ கவிதைத் தொகுப்பு குறித்த என் வாசிப்பு அனுபவத்தை வாசித்தீர்கள். இன்னும் இத்தொகுப்பில் நாம் பேசுவதற்கு பல கவிதைகள் இருக்கவே செய்கின்றன. எல்லாவற்றையும் சொல்லிவிடும் பேராசை இருந்தாலும் நீங்களே வாசித்து உங்கள் வாசிப்பின் வழி உரையாடலை தொடங்க வேண்டும் என்பதால் என்னை நானே கட்டுப்படுத்தி கொள்கிறேன்.
கவிஞர் த.அழகுராஜனின் கவிதைகள் காதலில் தொடங்கி காமத்தில் உழன்று குடும்பத்தில் நுழைந்து சமுகத்தைப் பார்த்துவிட்டு தன்னையறிய முயன்று தத்துவ வெளிப்பாட்டில் வந்து நிற்கிறது. மனதை ஒரு கவிஞன் எப்படியெல்லாம் கவிதைக்குள் அடைக்கின்றான். எதை வைத்து மனதை அடக்குகின்றான் என்பதான ஒரு பார்வையையும் இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது. மிகவும் இரசித்து வாசித்த கவிதைத் தொகுப்புகளில் இதுவும் ஒன்று.
வாய்ப்புள்ளவர்கள் தவறாது வாசித்துவிடுங்கள்; நாங்கள் அங்கிருந்து ஓரு உரையாடலைத் தொடங்குவோம். மீண்டும் அடுத்த மாத மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடரில் நாம் சந்திக்கலாம். நன்றி…
00

எழுத்தாளர் தயாஜி.
மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

