பல்லபுரம் பிரபாகரன்
“அப்பா… அப்பா…!”
“அப்பா… அப்பா…!”
“என்னடா?”
“ஒரு கேள்வி”
“சொல்லுடா”
“குரங்குக்கு ஏன் வாழைப்பழம் பிடிக்கும்?”
“அட… இதுவொரு கேள்வியா?”
தாடியை வருடிக் கொண்டிருந்த அப்பா,
“குரங்கு முதல்தடவ சாப்பிட்டிருக்கும்; அந்தச் சுவை பிடித்துப்போய் மீண்டும் சாப்பிடத் தோணும்.”
மகன் இல்லையென்று தலையசைத்தான்.
“சரி… ஆண்டவன் அதுக்காகவே அந்தப் பழத்தைப் படைச்சிருப்பான், போதுமா?”
“அப்பா! இல்லை.”
“மஞ்சள் நிறம் குரங்குக்கு ரொம்பத் தெளிவாகத் தெரியுமோ?”
“அய்யோ… அதுவும் இல்லை!”
அப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை? சிறிது மௌனித்துப் பின் அறிவியல் சிந்தனையோடு பதில் கூறினார்.
“ஒருவேளை வாழைப்பழத்தில் வைட்டமின் அதிகமா இருப்பதால்…”
“பொட்டாசியம் அதிகம் இருப்பதால்!…”
அவன் என்னவென்று தெரியாமல் விழித்ததைக் கண்டு, “தோல் மெல்லிசா இருக்குமே… ஈசியா உரிக்க முடிவதால!”
“இல்லப்பா இல்லை.” குரலை உயர்த்தினான்.
எப்படி யோசித்து அறிவுப் பூர்வமாக பதில் சொன்னாலும் ‘இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். கடைசியாக அடித்துப் பேசினார்: “முக்கனியில் மூன்றாவதாகவும், பெரியக் கொட்டையே இல்லாக் கனியாகவும் இருப்பதுதான்!” என்றார்.
அவன் ‘அதுவும் கிடையாதுப்பா’.
“அறிவுக்கு எட்டிய எல்லாத்தையும் சொல்லிட்டேன்! அடுத்து என்ன சொல்ல?” அப்பா விழித்தார்.
அப்பா விழித்தத்தைப் பார்த்து, “ஏன் குரங்குக்கு வாழைப்பழம் பிடிக்கும்ணு கேட்டேனுதானே யோசிக்கிறியா?”
“நேத்து குலதெய்வ கோலுக்குப் போயிருந்தோமே! பூசை முடிந்து, ஒருவர் சுண்டல், பொங்கல், தயிர், புளிசாதம் எல்லாம் கொடுத்தார். நீங்க ஒரு இலையில் குரங்குக்கு வச்சப்ப குரங்கு எடுக்கலயே. ஆனா, நான் வாழைப்பழம் எடுத்து வந்தேன்; அந்தக் குரங்கு மின்னல் வேகத்தில் வந்து பிடுங்கிக்கிட்டு ஓடி மரத்தில் ஏறியதே. அதுதான் இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம்.”
அப்பா தலையசைக்க மகன் சிரித்துக்கொண்டே மேலும் தொடர்ந்தான்.
“அந்த குரங்கு என்ன செய்தது? உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்; மரத்தில் ஏறி உட்கார்ந்தது. பழத்தை உரித்துக் கடித்துச் சாப்பிட்டது. மனிதர்கள் போல தோலைக் கீழேப் போட்டது. பாதையில் கிடந்த தோலை மிதித்துவிடாமால் ஜாக்கிரதையாக எல்லோரும் தாண்டிச் சென்றனர்.”
“சரி அப்பா! குரங்குக்கு வாழைப்பழம் ஏன் பிடிக்கும்? கடைசி சான்ஸ்”
“இதற்கு மேல் என்னால் முடியாது; ஆளை விடுடா சாமி!… நீயே சொல்லிடு!”
மகன் வெற்றி பெற்ற ஓர் விஞ்ஞானியைப் போல நிமிர்ந்து நின்றான்.
“அப்பா! அப்டின்னா, பாஸ் சொல்லு” கையை நீட்டினான்.
“ம்…பாஸ். சீக்கிரமா சொல்லுடா” ஆவலுடன் கேட்டார்.
சிறுவன் சிரித்துக்கொண்டே,
“நாம்தான் ‘குரங்குக்கு வாழைப்பழம் பிடிக்கும்’னு சொல்றோம். எந்தக் குரங்காவது பேசியிருக்கா? இல்ல, வாழைப்பழம்தான் பிடிக்கும்னு சொல்லித்தான் இருக்கா?“
இதைக் கேட்டு, அப்பா வாயைப் பிளந்தார்.
“குரங்கு இன்னும் ஆப்பிள் ஜூஸ், பீட்சா, பர்கர், பிரியாணி, ஜிலேபி, லட்டு, கேக், ஐஸ்கிரீம் சாப்பிட்டதே இல்லை. அதனால்கூட வாழைப்பழம் ரொம்பப் பிடிக்கும்!”
ஒரு நொடி அமைதி. அடுத்த நொடி…
“ஹா… ஹா… ஹா…!” அப்பா, அம்மா இருவரும் சிரித்தனர். வாசலில் இருந்த பாட்டியும் பொக்கை வாய் திறந்து சிரித்தார்.
வீட்டின் முன்னிருந்த மரத்தில் இருந்த காகம் “கா… கா…” என்று கரைந்தது. நாய் “லொள்… லொள்…” என்று வாலை ஆட்டியது. பூனை “மியா, மியாவ்…” மதில் சுவற்றில் இருந்து குதித்தது. பிறகுதான் தெரிந்தது எல்லாம் எதையோ பார்த்த பயத்தில் ஆர்ப்பாரித்தது.
அந்த மரத்தில் குரங்கு ஒன்று கிளைகளில் இருந்து தாவித்தாவி வந்தது.
“அதோ குரங்கு. அப்பா! மனிதனுக்கும் குரங்குக்கும் ஒற்றுமை இருக்குத்தானே!” என்றான்.
குரங்கு-வாழைப்பழம்-மனிதன் இம்முறை புத்திசாலித்தனமாக யோசித்துப் பதில் சொன்னார், அப்பா.
“ஆமாம் உண்மைதான்! குரங்குக்கும் வாழைப்பழம் பிடிக்கும்; மனிதனுக்கும் பிடிக்கும்.”
“அப்பா, வித்தியாசம் ஒன்னு இருக்குத் தெரியுமா?”
“அப்பா மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிச்சுட்டானே!” அமைதியானார்.
“குரங்கு பசிக்கும்போது மட்டும்தான் சாப்பிடும்; மனிதன் பசிக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவான்; பசிதீர்ந்து சாப்பிட்ட பின்னும் வாழைப்பழத்தைச் சாப்பிடுவான். இலவசம் என்றால் இன்னும் இரண்டைப் பிதுக்கிப் போட்டுக்கொள்வான்.”
அப்பாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு கணம் வியந்து பார்த்தார். முதலில் குரங்கு-வாழைப்பழம், பிறகு வாழைப்பழம்–மனுசன், இப்போ குரங்கு-மனுசன். “என்ன சொல்றனு புரியலயே! ஆக மொத்தம் எதையோ சொல்ல திட்டம் போட்டு இருக்கறடா! அது மட்டும் தெரியுது.”
குரங்கு வாழைப்பழத்தைப் பார்த்து ஆசைப்படும். மனிதன் குரங்கைப் பார்த்து ‘எவ்வளவு ஆசைய பாரு’ன்னு வசைபாடுவான்.
“தள்ளுபடி விற்பனைன்னா தேவையில்லாத பொருளையும் வாங்கிட்டு வருவான்!”
அப்பா அவனிடம் “அப்பா நீ என்னதான் சொல்ல வர?” என்றார்.
“வாழைப்பழம் வேணும்னு குரங்கு மரத்துக்கு மரம் தாவும். ஆனா மனிதன் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ பலகையைப் பார்த்தாலே… அவன் மனசு மரம் ஏற ஆரம்பிச்சிடும்!”
அப்பா, “அடேய்… கேள்வி குரங்கைப் பற்றி ஆரம்பிச்சு, முடிவில் மனிதனைப் பற்றியா?”
மகன் கண் சிமிட்டினான். ‘இதோ வருகிறேன்’ என்று வீட்டிற்குள்ளே சென்றான்.
திரும்பி வரும்போது, ஒரு ஆப்பிள், ஒரு மாம்பழம், ஒரு கொய்யா, இரண்டு வாழைப்பழம் ஒரு தாம்பூலத்தில் வைத்து எடுத்து வந்தான்.
“குரங்கு வாழைப்பழத்தை மட்டும் விரும்புகிறது அப்பா… மனிதன் ஆசையைப் பிடித்துக்கொள்கிறான். அதுதான் இருவருக்கும் இடையே இருக்கும் பெரிய வித்தியாசம்!”
குரங்கு மரத்தில் இருந்து குறுகுறுவெனப் பார்த்தது. பிறகு மரத்தின் கிளை நுனியில் இருந்து குதித்து வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு வேகமாக மரத்தின் மேல் ஏறியது! போகும்போது திரும்பிப் பார்த்து, “கீ… கீ…” என்று சிரித்துக் கத்தியது.
மகன் கைத்தட்டினான். அப்பா சிரித்தபடி மகனின் தலையைத் தடவினார்.
“பாருங்க அப்பா! குரங்குக்கு வாழைப்பழம்தான் ரொம்பப் பிடிக்கும் போல!”
000

பல்லபுரம் பிரபாகரன்
பி.டெக். (வேளாண் பொறியியல்)
ஸ்ரீரங்கம்-திருச்சி – 620006

