பல்லபுரம் பிரபாகரன்
“வணக்கம், பிள்ளைங்களா!”
தமிழாசிரியர் சிரித்த முகத்தோடு உள்ளே வந்தார்.
“வணக்கம் ஐயா!”
மழை பெய்து ஓய்ந்ததுபோல மாணவர்கள் இருக்கையில் அமைதியாக அமர்ந்தனர்.
பள்ளிக்கூடம் திறந்த முதல் நாள். தமிழ் பாடவேளை. நாற்பது மாணவர்கள். எல்லாமே புதிது. புதிய சீருடை, புதிய புத்தகங்கள், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள்… ஒவ்வொருவரும் ஒவ்வொரு பள்ளியில் இருந்து வந்தவர்கள். பலர் ஆங்கில வழிக் கல்வி; சிலர் தமிழ்வழிக் கல்வி. சிலருக்குப் புதிய நண்பர்களைக் காணும் ஆர்வம்; பலருக்கும் புதிய பள்ளி என்ற பயம்.
“சரி… முதலில் எல்லோரும் அறிமுகம் செய்து கொள்ளலாம். பெயர்… எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறீர்கள்… பெரியவனாகி என்ன ஆகப் போகிறீர்கள்… மூன்றையும் சொல்லுங்கள்.”
ஒருவன் எழுந்தான்.
“என் பேர் சூர்யா. நான் பெரிய நடிகராகப் போறேன்.”
அடுத்தவன்,
“ஐயா, என் பெயர் ஜோசப். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராவேன்.”
மூன்றாவது மாணவன் பெருமையாக,
“நான் பாத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு சிறந்த கிரிக்கெட் வீரன் ஆகப் போகிறேன்.”
ஒரு மாணவி,
“ஐயா, நான் கலெக்டர்.”
கடைசியில் இருந்து குண்டு மாணவன் எழுந்து,
“நான் இன்னும் முடிவு பண்ணல ஐயா… வீட்டில் அம்மா, டாக்டர் ஆகவேண்டி சொல்றாங்க; அப்பா, ஐபிஎஸ் ஆகணும்னு சொல்றார்; நான் எப்படா கோடை விடுமுறை வரும்னு காத்துக்கிட்டு இருக்கிறேன்!”
வகுப்பறையே சிரிப்பால் அதிர்ந்தது. ஆசிரியரும் சிரித்தார்.
“சரி… உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?”
எல்லோரும் ஆர்வமாகத் தலையை ஆட்டினர்.
“நான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையை மட்டும் சொல்ல வேண்டும்.”
“சரிங்க ஐயா!”
“உங்களில் எத்தனை பேருக்கு அம்மாவைப் பிடிக்கும்?”
நாற்பது கைகளும் ஒரே நேரத்தில் வானோக்கி உயர்ந்தன.
“அம்மாவைப் பிடிக்காதவர்களும் உண்டோ உலகில்!” முணுமுணுத்த ஆசிரியர் அடுத்த கேள்வி.
“சரி… அப்பாவைப் பிடிக்கும் என்பவர்கள்?”
இந்த முறை சில கைகள் மட்டும் தயக்கத்துடன் உயர்ந்தன.
கையைத் தூக்காதவர்களிடம் ‘ஏன் அப்பாவை பிடிக்காது?’ என்று கேட்டார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம்.
“என் அப்பா திட்டுவார்; அடிப்பார்.” என்று ஒருவன் சொன்னதும்,
மற்றவன், “ஆமாம் ஐயா! ஒரு நாளைக்கு ஒருமுறையாவது என்னை அடிக்காமல் திட்டாமல் இருந்ததே கிடையாது. அதற்காக நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. நான் சின்ன பையன் தானே, தப்பு என்று தெரிந்தால் செய்யாமல் இருக்க மாட்டேனா!”
“உங்க அப்பா வரட்டும், தம்பி. சொல்லிப் புரிய வைக்கிறேன்” என்றார் ஆசிரியர்.
“என்னிடம் போனைப் பிடுங்கிடுவார். அவர் மட்டும் எப்போதும் எதையாவது பார்த்துக்கொண்டே இருக்கிறார்.”
“கேம் விளையாட விட மாட்டார்.”
“டிவி பார்ப்பதை பார்த்தால் அடிப்பார்.”
“ஐஸ்கிரீம் வாங்கித் தரவே மாட்டார்.“
ஒருவன் மிகவும் சோகமாக எழுந்தான்.
“என் அப்பா தினமும் ‘நல்லா படி’ன்னு சொல்வார்.”
ஆசிரியர் சிரிப்பை அடக்கிக்கொண்டு,
“அது பெரிய குற்றமாங்க, சார்?”
“ஆமாம் ஐயா! நான் படித்துக் கொண்டுதான் இருப்பேன். அதுவும் மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் நேரத்துலதான் சொல்லுவார். நாங்கல்லாம் சின்னப் பிள்ளையில்… !”
மீண்டும் வகுப்பறை சிரிப்பில் மூழ்கியது. சிரிப்பு அடங்கியதும், ஆசிரியர் பேசினார்.
“அப்பா திட்டுவது வெறுப்பால் இல்லை. வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக.”
அப்போது ஒரு மாணவன், “ஐயா என்னதான் பொத்திப்பொத்தி வளர்த்தாலும் படவேண்டியதை நாங்கள் பட்டுத்தானே புரிந்து கொள்ளமுடியும்!”
வகுப்பறை முழுவதும் அமைதி.
“சரி… இன்னொரு கேள்வி.”
“ஆங்கிலப் பாடம் பிடிக்குமா?”
முப்பத்தாறு கைகள் உடனே உயர்ந்தன. நான்கு பேர் மட்டும் கையை உயர்த்தவில்லை.
ஆங்கில வழிக் கல்வி படித்த உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு இருக்கக் கூடாது. தமிழ் மொழியை எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்?”
இந்த முறை அந்த நான்கு கைகள் மட்டும் உயர்ந்தன.
ஆசிரியரின் முகத்தில் ஒரு சிறிய வலி.
“தமிழ் மொழியைப் பிடிக்காதவர்களிடம் ஏன்?” என்றார்.
முன் வரிசையில் இருந்த மாணவன் எழுந்தான்.
“ஆங்கிலத்தில் வெறும் இருபத்து ஆறு எழுத்துக்கள்தான் இருக்கின்றன. தமிழில் இருநூற்று நாற்பத்து ஏழு எழுத்துக்கள் இருக்குதே! ஐயா. எப்படி நினைவில் வைத்துக் கொள்வது?”
சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. ஆசிரியர் கரும்பலகை அருகே சென்று பெரிய எழுத்தில் எழுதினார்.
க்
“இது என்ன எழுத்து?”
“க்!”
“அ!”
“இது எந்த எழுத்து?”
“இரண்டையும் சேர்த்தால்?”
“க” என்றனர்.
“க் அ, க்அ…” என்று சொல்லிப் பழகுங்கள்
“இதுவரைக்கும் கஷ்டமா?”
“இல்லை.”
“இன்னொரு முறை.”
க்அ இதை சேர்த்தால் க
அடுத்ததாக,
க்ஆ…கா
க்இ…கி
க்ஈ…கீ
இப்படி ஒருசில எழுத்துக்களை எழுதினார்.
“பாருங்கள்… நான் புதிய எழுத்தை உருவாக்கவில்லை. ஏற்கெனவே தெரிந்த இரண்டு எழுத்துக்களைச் சேர்த்து உச்சரிக்க வேண்டும். அவ்வளவுதான்.”
ஒரு மாணவன் மெதுவாக,
“அப்படின்னா 247 எழுத்துக்களையும் மனப்பாடம் பண்ண வேண்டியதில்லையா?”
“இல்லை.”
“முப்பது எழுத்து மட்டும்?”
“அப்படித்தான்.”
அனைவரின் கண்களிலும் ஆச்சரியம்.
அப்போது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
போ
“இதைப் படி.”
“போ.”
“இப்போ பிரிச்சுப் பார்ப்போம்.”
ப் ஓ, ப்ஓ,… போ
“இப்போ சொல்லு.”
மாணவன் மெதுவாக,
“ப்…ஓ… போ!”
“அடடே!”
அவன் முகம் மலர்ந்தது.
“இவ்வளவுதானா?”
“அவ்வளவுதான். உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு; மெய் எழுத்துக்கள் பதினெட்டு. இந்த முப்பது எழுத்துக்களைச் சரியாக எழுதவும் உச்சரிக்கவும் தெரிந்து கொண்டால் போதுமானது. உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும், ஒன்றுடன் ஒன்று சேர்த்து உச்சரிக்கும்போது பிறக்கும் இருநூற்று பதினாறு உயிர்மெய் எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்.
சிறிது நேரம் கழித்து ஆசிரியர் மேசையின் மீது இருந்த தமிழ் புத்தகத்தை எடுத்தார்.
“உங்கள் அம்மா முதலில் உங்களிடம் பேசிய வார்த்தை என்ன தெரியுமா?”
யாரும் பேசவில்லை.
‘கண்ணா’…
‘செல்லம்’…
‘தங்கம்’…
‘சாப்பிடு’…
‘தூங்கு’…
அந்த முதல் வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லை. அவைகள் உங்கள் அம்மவின் இதயத்திலிருந்து வந்த மொழிதான் தமிழ்.
“உலகில் எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அது அறிவை வளர்க்கும். ஆனால் தாய்மொழியை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். அது உங்களை பெற்றெடுத்து பேணிக்காத்து வளர்த்த அம்மாவை மறப்பதற்குச் சமம்.”
முன்னால் இருந்த மாணவி எழுந்தாள்.
“ஐயா… இனிமேல் வீட்டில் தம்பிக்கு தமிழை நானே சொல்லித் தருகிறேன்.”
அடுத்தவன்,
“நான் தாத்தாவிடம் தினமும் ஒரு பழமொழி கேட்கிறேன்.”
மற்றொருவன்,
“நான் இனிமேல் கடைக்குப் போனாலும் தமிழில்தான் பேசுவேன்.”
கடைசியில் இருந்த குறும்புக்காரன் எழுந்தான்.
“ஐயா… இனிமேல் அப்பா ‘படி’ன்னு சொன்னா கோபப்பட மாட்டேன்.”
“ஏன்?”
“அப்பா சொல்வது நல்லதுக்குத்தானே இருக்கும்?!”
தமிழின் அழகு பயமுறுத்தாது; புரிந்துகொண்டால் புன்னகைக்க வைக்கும்.
அந்த நாளிலிருந்து வகுப்பில் ஒரு புதிய பழக்கம் உருவானது.
ஒவ்வொரு தமிழ் வகுப்பும் தொடங்குவதற்கு முன் எல்லா மாணவர்களும் எழுந்து ஒரே குரலில் சொல்லுவார்கள்:
“எல்லா மொழிகளையும் மதிப்போம்;
தாய்மொழியை உயிராய் நேசிப்போம்.
முப்பது எழுத்துகள் போதும்;
வாழ்நாள் முழுவதும் தமிழோடு நடப்போம்.”
அது பள்ளி திறந்த முதல் நாள் அல்ல.
தமிழ் கடினமல்ல… “முப்பது எழுத்துகளின் அதிசயம்” என்பதை உணர்ந்த நாள்.
00

பல்லபுரம் பிரபாகரன்
பி.டெக். (வேளாண் பொறியியல்)
ஸ்ரீரங்கம்-திருச்சி – 620006

