கொலை

அவன் வெகுநேரம் அமைதிக்குள் சிறைப்பட்டிருந்தான். உறக்கம் கண்களை இழுத்தது. சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தபடியே அமர்ந்திருந்தான்.

“உனக்கு ஏன் இவ்ள பிடிவாதம்?”

அவன் பதிலளிக்கவில்லை. விட்டத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். உணவுத் தேடி வந்த எலியும் அந்த வீட்டின் வெறுமையை உணர்ந்ததுபோல் திரும்ப ஓடியது.

“நீ செத்துதான் ஆகணும்…”

உலர்ந்து ஒட்டியிருந்த உதடுகள் பிரிந்தன.

“கொஞ்சம் யோசிச்சிப் பாரு… இந்தக் கதவைத் திறந்து வெளில போனா உனக்குன்னு ஒரு உலகம் இருக்கு…”

தரையில் எப்பொழுதோ விழுந்த வெல்லக்கட்டியை எறும்புகள் வரிசையாக இழுத்துச் சென்றன. அவனுடைய பார்வை அந்த ஒழுங்கிலேயே சிக்கிக் கொண்டது. கண்களை மீண்டும் விட்டத்திற்குக் கொண்டு வந்தான். எப்பொழுது வேண்டுமானாலும் காற்றில் பறந்துவிடக்கூடிய தளர்ந்த தகரங்கள்.

“யோசிக்க ஒன்னும் இல்ல. நீ செத்துரு… எனக்கு இந்த இருள்தான் பிடிச்சிருக்கு…”

உயிரற்ற வார்த்தைகள் உடைந்து சிதறின.

“என்னைய கொல்றதுனால உனக்குள்ள இருக்கும் மிருகம் அடங்கிருமா?”

அவன் கையில் வைத்திருந்த துருப்பிடித்த கத்தியை எடுத்துத் தொடை மீது நிமிர்த்தி வைத்தான்.

“நீ வாழ்றதுக்குத் தகுதி இல்லாதவன்…”

“அதை ஏன் நீ முடிவு செய்ற?”

தகர விலகலிலிருந்து நள்ளிரவின் வான அமைதியைத் தரிசிக்க முடிந்தது.

“இந்த வானம் எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதான் தெரியும்… இருள்… வெளிச்சம்… எல்லாத்தலயும்…”

“உன்னைக் கொன்ன பிறகும் நான் இந்த வானத்தை பார்ப்பன்… அப்பவும் அது அதே மாதிரிதான் தெரியும்…”

அவன் கத்தியை உயர்த்திப் பிடித்தான்.

“நீ யோசிக்காமல் எடுக்கற முடிவு இது…”

“இதுதான் எனக்கு அமைதிய கொடுக்கும்…”

அவன் உயர்த்திப் பிடித்த கத்தி மெதுவாக அவன் நெஞ்சுக்குள்ளேயே இறங்கியதும் அந்த வீடு அமைதியானது.

சுவர்

அன்றைக்கும் சுவரின் ஒரு பகுதியைத் தம்பி சேதப்படுத்தியிருந்தான். அவனுடைய அறையில்தான் இந்தச் சம்பவம் தொடங்கியது. இரவெல்லாம் சுவரைச் சுரண்டும் ஓசை மெல்ல கேட்டது. காலையில் பார்த்துக் கொள்ளலாம் என உறங்கிவிட்டேன். மறுநாள் அவன் அறைக்குள் சிறு துகல்களாக ஒரு பகுதி சுவர் இடிந்து இலேசாகச் சரிந்திருந்தன. முதலில் விபத்தென்று நினைத்தேன். அன்றைய இரவே மீண்டும் சத்தம் கேட்க தம்பியின் அறைக் கதவைத் திறந்தேன். அவன் தான் சுவரைச் சுத்தியலால் உடைத்துக் கொண்டிருந்தான்.

நான் எவ்வளவு திட்டினாலும் கத்தினாலும் அவன் என்னைக் கவனிக்க மறுத்தான். நான் ஒருவன் அவனுக்குப் பொருட்டாகவே இருந்ததில்லை. நேர்க்கொண்டு என் கண்களைப் பார்ப்பதிலிருந்து தவிர்த்தான்.

அப்பாவின் மரணத்திற்குப் பின்னர், அவனை நான்தான் முழுமையாகக் கவனித்து வருகிறேன். சிறுவயதிலிருந்து அவனுக்கு இப்படித் தோன்றுவதுண்டு. யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளே இருப்பான். இப்பொழுது ஒரு மாதக் காலமாக இப்படித்தான் சுவரில் ஆள் இருப்பதாகச் சொல்லித் தொடர்ந்து சுவரை உடைக்கிறான்; உடைக்கும்போது அழவும் செய்கிறான்.

என்னுடைய அறையில் இருக்கும் சுவரை உடைத்தால்தான் அவன் சொல்லும் அந்த ஆள் அதாவது என் உடல் கிடைக்கும் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நான் அமைதியாகத் தினமும் காத்திருக்கிறேன்.

மறதி

நாளெல்லாம் கதறினேன். அழுது ஆர்ப்பரித்தேன். கடவுளிடம் மன்றாடினேன். பசியென நினைத்த அம்மா வாயில் புட்டியைத் திணித்தார். இரு பக்கமும் ஆட்டி ஆட்டி உறங்க வைக்க முயன்றார். தொட்டிலில் போட்டு என் அழுகையை அடக்க முயன்றாள். தொட்டில் உயர எழும்பி எனக்கு மயக்கத்தை உண்டாக்கியது.

அப்பாவின் கூச்சல், அம்மாவின் விசும்பல், வீட்டின் பசி என அனைத்தையும் நான் தெளிவாக உணர்ந்தேன். ஆனால், என்னால் என் வார்த்தைகளைத் திரட்ட முடியவில்லை. என்னால் பேச இயலவில்லை. பாட்டி என் முகத்தைப் பார்த்து சனியன் என்கிறார். வீட்டிலிருக்கும் இன்னொரு பையன் என் தொடைகளைக் கிள்ளி விளையாடுகிறான். என்னால் அப்பொழுதும் அவனைத் தடுக்க முடியவில்லை. என் கைகள், உடல் என அனைத்தும் சிறுத்து என் கட்டுப்பாட்டை மீறி இருந்தன.

“இறைவா எனக்கு அமைதியைக் கொடு. எனக்கு மறதியைக் கொடு!” எனக் கெஞ்சினேன்.

அழுது தீர்த்த களைப்பில் உறங்கினேன். மீண்டும் விழிக்கையில் நான் பாட்டியின் கையில் இருந்தேன். குப்புறப் படுக்க வைத்து என் மீது நீரை ஊற்றிக் கொண்டிருந்தார். அதன் குளிர்ச்சித் தாளாமல் அழுது ஆர்ப்பரித்தேன். முகம் சிவந்து எரிச்சல் உண்டானது. என்னால் எதையும் என் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அன்று மதியம் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும்போதுதான் அந்த வரம் கிட்டியது. மெல்ல என்னை நான் மறக்கத் தொடங்கினேன். நினைவின் இழப்பு. பிரக்ஞையின் அறுப்பு. என்னிடமிருந்து என்னை இழந்து குழந்தையானேன்.

000

கே.பாலமுருகன்

மலேசியத் தமிழ் எழுத்தாளர், சிறார் இலக்கியவாதி

சிறுகதைகள், நாவல்கள், சினிமா கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என இதுவரை 29 நூல்கள் இயற்றியுள்ளார். ‘தேவதைகளற்ற வீடுகள்’, ‘மூக்குத் துறவு’ ‘பசித்திருக்கும் பேய்கள்’, நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள், உயாங் மலை, மாயவிடுதி, இறந்தகாலத்தின் ஓசைகள், ‘தேவதைகளின் காகித கப்பல்’, ‘தீர்ந்துபோகாத வென்கட்டிகள்’, ‘மரங்கொத்தியின் இசை’, ‘தலேஜூ’ என இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

பன்முக நவீனப் படைப்பாளியாகக் கருதப்படும் இவர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக எழுதி வருகிறார். கே.பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், ஏழு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் எனப் படைத்துத் தொடர்ச்சியாக சிறார் இலக்கியத்திலும் இயங்கி வருகிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழக அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதே சிறுகதை மலேசியாவின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் இரண்டாம் பருவத்திற்கான பாடமாகச் சேர்க்கப்பட்டிருப்பதும் பெருமைக்குரியதாகும்.

தாம் எழுதுவது மட்டுமல்லாமல் நம் நாட்டிலுள்ள சிறார்களையும் போட்டியின் வழியாக எழுத வைத்து கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கீகரித்து வருவதும் அவருடைய இலக்கியப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதுவரை மலேசியத் தமிழ் சிறார்களுக்கு ஆறு முறை சிறார் இலக்கிய விழாவை நடத்தி கற்பனைவளத்தினையும் எழுத்தாற்றலையும் வளர்த்து வருகிறார்.

2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் பாலமுருகன் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். மேலும், தமது குறும்படங்களின் மூலம் பல சர்வதேச விருதுகளைப் பெற்ற கலைஞர் என்றும் அவரை அடையாளப்படுத்தலாம். தமது No Exit என்கிற மௌனக் குறும்டத்தின் வழியாகப் பலரையும் பேச வைத்தவர். அக்குறும்படத்திற்காக இதுவரை இந்தியா, மஹாராஷ்ட்ரா, லண்டன் என பல உலகலாவிய திரைப்பட விழாக்களில் கவனித்தக்க விருதுகளை வென்றுள்ளார். இதுவரை கரிகாற்சோழன் விருது, தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, ஆதி.ராஜகுமாரன் விருது, சிறந்த எழுத்தாளருக்கான நம்பிக்கை நட்சத்திர விருது, பாஷோ ஹைக்கூ விருது, சோழன் கடார விருது, கற்பனையாற்றல்மிக்க ஆசிரியர் விருது, மலேசியத் தேசிய நூலகத்தின் சிறந்த நூலுக்கான விருது என கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு எனப் பல நாடுகளில் சிறுவர் இலக்கியம் தொடர்பான பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் பாலமுருகன் அவர்கள் கடார மண்ணைச் சேர்ந்தவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *