–ஆ.கிருஷ்ணதாஸ்
‘கண்ணு!, நமக்கு புடிச்ச விஷயம் நடக்கலேனா அத நெனச்சு கவலப்பட கூடாது. அது நடக்குறவரைக்கும் பொறுமையா காத்திருக்கோணும். நீ நெனச்சது கண்டிப்பா நடக்கும். தைரியமா இரு கண்ணு’, என்று என்றோ ஒருநாள் தன் தந்தை சொன்ன வார்த்தைகளை, சாலை சிக்னலில் தனது இருசக்கர வாகனத்தின்மீது அமர்ந்தபடியே நினைவில் ஓடவிட்டுக் கொண்டிருந்தான் கார்த்தி. பச்சை விளக்கு எப்போது எரியும் என்று கவனித்தபடியே அவனும் அவனது வாகனமும் இருக்க, இடையிடையே ஒலிப்பான்களின் சப்தமும், அதனையும் தாண்டி தன் பெற்றோர், வாழ்க்கை மற்றும் இலட்சியமென பல எண்ணங்கள் அவனது நினைவுச்சாலையில் ஓடியவண்ணமிருந்தன.
‘யய்யா…கார்த்தி! உங்கய்யனுக்கு வர..வர சரியா வேலசெய்ய முடியறதில்ல. உனிமேலும் நமக்கு இந்த பைக் ஓட்டமெல்லா வேணாங்கண்ணு. பால்காரன் மவனுக்கெதுக்கு பணக்கார வெளையாட்டுனு ஊரே கேக்குதுய்யா. அவ்வளவு செலவு பண்ணி அந்த வெளையாட்டுல நஷ்டமானதுதான் மிச்சம். உங்கய்யனுக்கும் வயசாகிட்டேபோது, என் அப்பா… தங்கமே… ராசா… இதவிட்ருய்யா, ஏதாச்சும் வேலைக்கு போய்யா. என் கண்ணு… ராசா… அம்மா சொல்றத கேளுய்யா..’ என்றவாறே அழுதாள், கார்த்தியின் அன்னை மாரியம்மாள்.
‘எனக்கு என்ன சொல்றதுனே தெரியலம்மா, உங்க கஷ்டம் எனக்கு புரியுது. ஆனா இந்த வெளையாட்ட விட்டுட்டு வர எனக்கு மனசே வரலம்மா’.
‘அம்மா சொல்றத கேளுய்யா ராசா, இப்படியே வெளையாட்டுன்னு போயிட்ருந்தா உன் வாழ்க்கை கேள்விக்குறியா போயிரும்யா. ஒனக்கடுத்து உன் தம்பியும் இருக்கான். அவனோட வாழ்க்கையையும் பாக்கோணுமில்ல, ஏதாச்சும் வேலைக்கு போ கண்ணு’.
‘இப்போ எதுக்குடி புள்ளக்கிட்ட பொலம்பிட்டு இருக்க…’ என்கிற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தார், கார்த்தியின் தந்தை ராமசாமி.
‘இந்தா கண்ணு கார்த்தி! இதுல அம்பதாயிரம் பணமிருக்கு. நீ பணத்த கட்டி நேஷனல் லெவெலு போட்டியில கலந்துக்கோ. இதுதான் உங்கொய்யனால முடிஞ்சது, இதுக்குமேல என்னால பணத்த பொறட்ட முடியாது கண்ணு. எப்படியாச்சும் இந்த முக்கியமான போட்டியில ஜெயிச்சுப்போடு.., நீ ஜெயிச்சிடுவ, எனக்கு தெரியும்’
‘இப்டி செல்லங்குடுத்து, செல்லங்குடுத்து நீயே அவன கெடுத்துருய்யா…’
‘த்தெ சும்மா இருடி, இவ ஒருத்தி புள்ள ஆசப்பட்டத நெறவேத்தாம என்னால இருக்க முடியல. எவ்ளோதூரம் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு அவன் வந்துருக்கான். நடக்குறத அப்புறம் பாத்துக்கலாம். இந்தா புடி கண்ணு …’
‘ஏதுப்பா இம்புட்டு பணம்?’
‘வண்டியய்யும் பால்கேனயும் வித்துப்போட்டன்ல. அதுல வந்த காசுதான் இது. அதில்லாம, பக்கத்துல ஒரு கம்பெனியில செக்கூருட்டி வேலைக்கு சேந்துட்டேன், எனக்கு அது போதுங்கண்ணு…’
‘ஏம்பா இப்டி பண்ணீங்க?’ என்றவாறே அவரை கட்டியணைத்துக்கொண்டே கண்ணீர் துளிகளை சிந்தினான் கார்த்தி.
‘அழாத கண்ணு! அழாதய்யா, இந்த பணத்த வாங்கிட்டு போயி போட்டியில கலந்துக்க பேர பதிவு பண்ணிட்டு வா…’
‘இல்லப்பா வேணாம். இவ்வளவு நாள், நான் உங்கள ரொம்ப செரமப்படுத்திட்டேன். அத நெனக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மா சொன்ன மாதிரியே நான் வேலைக்கே போறேன்ப்பா…’
‘இதுக்காகவா கண்ணு, இவ்வளவு தூரம் கஷ்டப்பட்ட? இந்த தடவ நல்லா முயற்சி பண்ணு. உன்னோட மொத்த ஒழைப்பயும் இதுல போடு. கண்டிப்பா உன்னால ஜெயிக்க முடியும். நீ பெரிய எடத்துக்கு போவ, இந்தா புடி…’ என்று அவனது உள்ளங்கையில் பணத்தை வைத்துவிட்டு நகர்ந்தார் ராமசாமி.
பணத்தின் மீது கண்ணீர் சொட்ட! சொட்ட! தனது லட்சியத்தின் அடுத்த முயற்சியை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்தி. எதுவாகினும் சரி, இனி விதியின்வழி. இந்த போட்டியில் நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என்கிற உறுதியோடு அங்கிருந்து புறப்பட்டான். நினைவில் அவன் மூழ்கிக்கிடந்த வேளையில் இங்கு சாலை சிக்னலில் பச்சைவிளக்கு எரியத் தொடங்கியது. அவனும் அவனது வாகனமும் செல்லவேண்டிய பாதையை நோக்கி நகர்ந்தனர். ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா அலுவலகத்தில் நுழைந்த அவன், தேசிய அளவிலான சூப்பர்கிராஸ் போட்டியில் பங்குபெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்ய தொடங்கினான். ஒவ்வொரு இடத்தையும் நிரப்பும்பொழுது அவனோ வெற்றிக்கு அருகில் வந்துவிட்டோம் என்கிற நம்பிக்கையோடு எழுதிக்கொண்டிருந்தான். விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்து போட்டிக்கான கட்டணம் செலுத்தியவுடன், போட்டி விபரங்கள் அடங்கிய கோப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதனை பெற்றதும் அவனது எண்ணங்கள் சிலநிமிடம் பிரேக் அடித்து நின்றது.
ஏழு வருடத்திற்கு முன்பு, பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பிரிவில் வேளாண்மையியல் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தான் கார்த்தி. அவனுக்கு இருசக்கர வாகனங்களின் மீது அலாதியான காதல் என்றே சொல்லலாம். அதிலும் யமஹா ஆர்.எக்ஸ்.100 பைக்மீது அலாதி பிரியம், அதன் விளைவாக ஒரு ஆர்.எக்ஸ்.100 பைக்கிற்கு இரண்டாவது உரிமையாளராக ஆனான். அப்போது சஞ்ஜயும் உடன் இருந்தான். சஞ்ஜய் அவனுடைய நெருக்கமான நண்பன். இருசக்கர வாகனம் வாங்கியபிறகு, இருவருமே அந்த வாகனத்தில்தான் எங்கும் சென்று கொண்டிருந்தார்கள். ஒருமுறை கார்த்தியும், சஞ்ஜயும் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற இருசக்கர ஓட்டப்பந்தயம் ஒன்றிற்கு சென்றிருந்தார்கள். அது தார்சாலையில் நிகழ்ந்த ஓட்டம் அல்ல, மண்மீது நிகழ்ந்த டர்ட்-ரேஸ் என்கிற அழுக்குப்பந்தயம். அதாவது மற்குவியல்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. அதில் வீரர்கள் எல்லோரும் ஆங்காங்கே தாவிக் குதித்துக்கொண்டிருந்தனர். அதனை கண்டதும், கார்த்தியின் மனதில் தானும் இவர்களைப்போல் இந்த மாதிரியான அழுக்கு ஓட்டத்தில் கலந்து கொண்டால் என்ன? என்கிற எண்ணம் எழுந்தது. அதனை தன் நண்பன் சஞ்ஜயிடம் கூறினான்.
‘மாப்ள நீ நெனைக்கிற மாதிரி இது சாதாரண ஓட்டமில்ல. கஷ்டமான வெளையாட்டு, அப்புறம் கவனமா ஓட்டனும் வேற. எதுக்குடா ஒனக்கு?’
‘என்னடா மாப்ள இப்டி சொல்ற…’
‘இதுக்கு நெறைய பிராக்டீஸ் பண்ணனும் மாப்ள. கூடவே நெறைய செலவாகும் வேற…’
‘முயற்சி பண்ணிதான் பாப்போமேடா…’
‘மண்ணுல உருளணும்னு ஆசப்படுற, சரி வா பாப்போம்…’
‘என்னடா சொன்ன? கேக்கல…’
‘அது ஒன்னுமில்ல. மண்ணுமேல பறக்கணும்னு ஆசப்படுற, சரி வா பறப்போம்னு சொன்னேன்…’
‘அப்டியா?’
‘ஈஈஈஈ…’யென ஈறுகள் தெரிந்தன.
இருவரும் வீடுதிரும்பினர். அன்றிலிருந்து கார்த்தி மற்குவியல்கள்மீது வாகனம் ஓட்டும் தகவல்களையும் நுணுக்கங்களையும் சேகரிக்கத் தொடங்கினான். மேலும் மண்ணோட்டத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களை கண்டறிந்து, அவர்களிடம் விசாரித்தால் நிறைய தகவல்கள் கிட்டுமென நினைத்தான். அவ்வகையில்தான் அண்ணனென உரிமைகொண்டாடும் விக்னேஷிடம், தேவையான தகவல்களும், மேலும் ரேஸ் பைக்குகளை தயார்செய்யும் மெக்கானிக் ஒருவரின் அறிமுகமும் கிடைத்தது. அவரின் பெயர் ராஜன்.
கார்த்தி தனது விருப்பத்தையும் ரேஸுக்காக பைக் ஒன்று வாங்குவதை பற்றியும் அவரிடம் முழுமையாக தெரிவித்தான். அதற்கு ராஜன், தான் அந்த பைக்கை தயார்செய்து தருவதாக உறுதியளித்தார். நினைத்த காரியம் கைகூடிய வேளையில், கார்த்தியின் அடுத்த இலக்கு ரேஸ் பைக் ஒன்று வாங்குவதுதான். இதனை அண்ணன் விக்னேஷிடமும் நண்பன் சஞ்ஜயிடமும் தெரிவித்தான். பழைய பைக் ஒன்றினை வாங்கி அதனை ரேஸிற்காக தயார்படுத்தலாம் என்று மூவரும் முடிவுசெய்தனர். தங்களிடமிருந்த பணத்தில் பதினான்காயிரம் ரூபாய் செலவுசெய்து பழைய பைக் ஒன்றை வாங்கினர். ஆனால் அதனை ரேஸிற்காக தயார்செய்ய அவர்களுக்கு மேலும் பணம் தேவைப்பட்டது. மாற்றம் செய்யப்பட வேண்டிய டயர்கள், கூடுதல் திறனுக்கான உபகரணங்கள் ஆகியவற்றையும் அதில் இணைக்க வேண்டியிருந்தது. இப்படியொரு இக்கட்டான சூழலில் என்ன செய்வதென்று மூவரும் யோசித்துக் கொண்டிருக்க, சரி தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப்பார்க்கலாமென ஒவ்வொருவரிடமும் பணஉதவியை நாடினர். இவ்வாறு அங்குமிங்குமாய் அலைந்துதிரிந்து பணத்தை திரட்டிய பின், அப்பணத்தை கொண்டு வாகனத்தை தயார் செய்தனர். ஒருவழியாக வாகனத்தை தயார்செய்துவிட்டோம் என்கிற சந்தோசத்தில் மூவரும் நிம்மதி பெருமூச்சுவிட, அதனை இயக்குவதற்காக கார்த்தி மிகுந்த ஆவலோடு இருந்தான்.
முதன்முறையாக கார்த்தி வாகனத்தை இயக்கும்பொழுது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஏனென்றால் ரேஸ் பைக் ஓட்டுவதற்கான கற்றலும், அதற்கேற்ற உடற்பயிற்சியும் அப்போது அவனிடமில்லை. எனவே அதற்கான பயிற்சி முதலில் மிக அவசியமென அக்கணம் உணர்ந்தான். முதலில் உடலைத் தயார்படுத்திக்கொள்ள நினைத்தவன், தொடர்ந்து இருவாரங்களாக காலை மாலையென ஓட்ட பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்டான். உடலிலும் மனதிலும் ஒருவித உறுதிவந்தவுடன் ரேஸ் ஓட்டுவதற்காக தயாராகினான்.
மறுநாள் காலை தனது யமஹா-ஆர்.எக்ஸ்.100 பைக்கில் கல்லூரிக்கு சென்றான். அன்றைய நாள்முழுவதும் மாலை எப்போது வரும் என்கிற எண்ணமே அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவனது காத்திருப்பும், கால்களும் மாலை ஆனவுடன் மெக்கானிக் ராஜனுடைய வொர்க் ஷாப்பை நோக்கிச் சென்றது. பின் இருவரும் ரேஸ் பைக்கை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி எஸ்.என்.சி கலைக்கல்லூரி அருகிலுள்ள காலியிடத்திற்கு சென்றனர். அங்குதான் கார்த்தியின் இலட்சிய கனவு முறையாக ஓட ஆரம்பித்து, பிறகு தொடர்பயிற்சியாக ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு தொடர்பயிற்சி மேற்கொள்ள அவனுக்கு எரிபொருள் செலவும் கூடுதலானது. ஆகையால் யமஹா-ஆர்.எக்ஸ்.100 பைக்கை வீட்டிலேயே நிறுத்திவிட்டு, தினசரி கல்லூரிக்கு பேருந்திலேயே வருவதென்று முடிவு செய்தான். அதன்பின் நண்பர்களின் உதவி, விடாமுயற்சியென அவனுடைய பயிற்சி தொடர்ந்துகொண்டிருக்க, அப்பயிற்சியின் ஆதாரமாக அணிந்திருந்த பாதுகாப்பு உடையெங்கும் மண்ணழுக்கே நிறைந்திருந்தது.
இப்படியே நாட்கள் செல்ல, அவனது கனவை நனவாக்கும் அழுக்கு ஓட்டத்திற்கான போட்டி அறிவிப்பொன்று அவனுடைய செவிகளில் ஒலித்தது. பொள்ளாச்சியில் நிகழவிருக்கும் அப்போட்டி கார்த்திக்கு முதல்போட்டி என்பதனால் மிகுந்த எதிர்பார்ப்பும் துணிச்சலும் அவனை முன்னகர்த்திச் சென்றது. இப்போட்டியில் பல்வேறு பிரிவுகள் உள்ளபடியால் ஒவ்வொரு பிரிவிற்கும் நுழைவுக் கட்டணம் செலுத்திதான் பங்கேற்க முடியும். எனவே கார்த்தி தன்னிடமிருந்த மூவாயிரம் ரூபாயை வைத்து மூன்று பிரிவுகளில் பங்கேற்க முடிவு செய்தான். அதன்படி நியூ பாய்ஸ் என்ற பிரிவில், முதன்முதலாக போட்டிக்களத்தில் “பெயர் கார்த்தி, வண்டி எண்: 96” என்கிற அறிவிப்போடு அவனும் அவனது பைக்கும் வந்துநின்றனர். மக்கள் கூட்டத்தில் ஒருவனாக அன்றொருநாள் நின்றுகொண்டிருந்தவன் இன்று மக்களின் பார்வையில் ஓடத் தயாராகிய தருணம். ஸ்டார்ட்-கேட் தரையை தொட்டதும் கூண்டிலிருந்து வெளியேறும் கிளியென ஆனந்தமாய் பறந்தான். நல்ல ஸ்டார்ட்-அப் எடுத்து ஓட்டத்தொடங்கினான். ஆனால், அந்த முயற்சி பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில் தோல்வியே கிடைத்தது. இருந்தபோதும் முதல்முறை ஓட்டம் அவனுக்கொரு கிளர்ச்சியை கொடுத்ததென்றே சொல்லவேண்டும். பிறகு பொள்ளாச்சி மற்றும் உடுமலை கிளாஸ் பிரிவில் பங்கேற்றான். அதிலும் நல்ல ஸ்டார்ட்-அப் கிடைத்து நன்றாக ஓட்டினான் கார்த்தி. தனக்கு தெரிந்த விதத்தில் நுட்பமாக செயல்பட்டு பைக்கை இயக்கிக் கொண்டிருந்தான். ஆங்காங்கே வளைந்து வளைந்து அவனும் அவனது பைக்கும் தங்களின் தடத்தை பதித்துக் கொண்டிருந்தனர். பின் போட்டியின் முடிவு நெருங்கியவேளையில், கார்த்திக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. பல அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு, பங்கேற்ற முதல்நாள் போட்டியிலேயே ஒரு இடத்தை பிடித்த காரணத்தினால் பலரும் அவனை வெகுவாக பாராட்டினர். அந்த மகிழ்ச்சியுடனே வீடுதிரும்பினான் கார்த்தி.
இவ்விளையாட்டிற்கு செலவு அதிகம் என்பதால், அதற்கான ஸ்பான்சர்களை தேடிப்பிடிக்கும் நிலை ஏற்பட்டது. அதன்காரணமாக ஊரில் உள்ளவர்களிடமும், நண்பர்கள் வட்டாரத்திலும் உதவியை நாடினான். அப்போது அவனுடைய நண்பர்களில் ஒருவர், ஊரில் செல்வாக்கு மிகுந்த பணக்காரர் ஒருவரிடம் அழைத்துச் சென்று, அவரிடம் இவனது விவரங்களையெல்லாம் தெரிவித்தார்.
‘அண்ணா! நீங்க கொஞ்சம் ஸ்பான்சர் பண்ணா, நல்லா இருக்குங்கண்ணா…’
‘நான் ஸ்பான்சர் பண்ணா, உனக்கு நல்லாதான்டா இருக்கும். பால்கார மவனுக்கு எதுக்குடா பணக்கார வெளையாட்டு? பால்கேனு வாங்க காசுகேட்டாக்கூட காசு தருவேன். நீ மண்ண கட்டிப்புடிச்சு உருள நான் பணம் தர்றோணுமாக்கும்…’
‘அண்ணா! அது என்னோட கனவுங்கண்ணா…’
‘இப்படியே ஒவ்வொருத்தன் கனவுக்கும் நான் காச கொட்டோணுமாக்கும். பணமெல்லா ஒன்னுமில்ல, நீ கெளம்பு…’ என்று அவமதித்து வெளியனுப்பினார் அச்செல்வந்தர்.
‘டே கார்த்தி மன்னிச்சிருடா! இந்த மனுஷன் இப்படி பேசுவார்னு நான் நெனச்சுக்கூட பாக்கல. நீ ஒன்னும் வருத்தப்படாத, நம்ம பசங்ககிட்ட பேசி ஏதாச்சும் ரெடி பண்ணலாம், சரியா…?’
அவரிடம் என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். வழக்கம்போல் அவனது பயிற்சி தொடர்ந்துகொண்டேயிருக்க, தனது கனவை துரத்திக்கொண்டிருந்தான். அச்சமயத்தில்தான் மீண்டும் பொள்ளாச்சியில் ஒரு போட்டிக்கான அறிவிப்பு வெளியானது. பிறகு அப்போட்டியில் யங்-பாய்ஸ் மற்றும் பொள்ளாச்சி-உடுமலை கிளாஸ் பிரிவில் கலந்துகொண்டான். காலை பதினொரு மணி அளவில் போட்டிகள் ஆரம்பிக்கத் துவங்கின. இருபதுபேர் கலந்துகொண்ட யங்-பாய்ஸ் பிரிவில் சரியான ஸ்டார்ட்-அப் கிடைக்காத காரணத்தினால் பதினைந்தாவது ஆளாகத்தான் ஓட்டத் தொடங்கினான். தனக்குமுன் சென்ற எட்டுவீரர்களை கடந்து, ஆறாவது ஆளாக போட்டியில் நிறைவுசெய்தான். ஆனால் முதலில்வந்த ஐந்து நபர்களே இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்கள் என்ற காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் அடுத்த கிளாஸில் பங்குபெற மாலை நான்குமணி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அவன் முகம் சோர்வடைந்து இருப்பதை கண்ட பார்வையாளர்களில் ஒருவர், கார்த்தியிடம், ‘தம்பி நீ ரொம்ப நல்லா ரேஸ் ஓட்டுனப்பா. ஆனா ஏன் சோகமா இருக்க?…’ என்று விசாரிக்க,
‘இந்த ரேஸ்ல ஃபைனல்ஸ விட்டாச்சுண்ணா! இனி அடுத்த ரேஸ் மத்தியானம் மூனு மணிக்கு மேலைங்ணா. மொத்தமா ரெண்டு கிளாஸுக்குதான் பணம் கட்டிருக்கேங்ணா…’
‘அப்டீனா நீ பிகின்னர்ஸ் கிளாசுக்கு பணங்கட்டி கலந்துக்கோப்பா…’
‘எங்கிட்ட அவ்வளவு காசில்லைங்ணா…’
‘அப்டியா! சரி கொஞ்சமிரு…’யென்று சொல்லிவிட்டு, அம்மனிதர் மைதானத்தில் சுற்றி இருந்தவர்களிடம் சென்று பத்து, இருபது, ஐம்பது, நூறு ரூபாயென கேட்டு சேகரிக்கத் தொடங்கினார். அதன்மூலம் கிட்டத்தட்ட அவன் நான்கு ஓட்டங்களில் பங்குபெறுவதற்கான பணம் கிடைத்தது. அப்பணத்தை வைத்து அடுத்துநடைபெற்ற நான்கு செலக்சன் போட்டிகளில் பங்குபெற்றான். அதில் இரு போட்டிகளில் முதலிடத்தையும், இரு போட்டிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிகளுக்கு தேர்வாகியிருந்தான்.
மாலை நான்கு மணி ஆனதும் இறுதிப்போட்டிகள் நிகழத் தொடங்கியது. முதலில் நடைபெற்ற கிராக்கர்ஸ் பிரிவில் மூன்றாவது இடம்பிடித்தான். மிகுந்த அனுபவம் வாய்ந்திருந்த வீரர்களுடன் போட்டியிட்டு குறைந்த அனுபவமே உள்ள இவன், கிராக்கர்ஸ் பிரிவில் மூன்றாமிடத்தை பிடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையே தந்தது. அத்தருணத்தில்தான் கவனிக்கும்படியான வீரர்களில் ஒருவனாக கார்த்தி உருவெடுத்தான். இதற்கிடையில் அவன் அதிர்ஷ்டத்தினால்தான் வென்றான் என்கிற குரல்களும் ஆங்காங்கே வலம்வந்தன.
சில நாட்களுக்குப் பின் அடுத்த போட்டிக்கான அறிவிப்பொன்று வெளியானது. அப்போட்டியில் பங்கேற்க நண்பர்கள் மூலம், கிடைத்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை அவனிடம் சஞ்ஜய் வழங்கினான்.
‘டேய் மாப்ள! எப்படியாச்சும் இந்த போட்டியில ஜெயிச்சிருடா, இல்லேன்னா நீ லக்குலதான் போனதடவ ஜெயிச்சேனு சொல்லிருவாங்கடா…’
‘சரிடா மாப்ள! பாத்துக்கலாம். நீ கவலப்படாத…’ என கூறிவிட்டு நகர்ந்தான். போட்டியில் மூன்று பிரிவுகளில் கலந்துகொள்ளலாமென முடிவுசெய்து அதற்காக மூவாயிரம் ரூபாயை நுழைவு கட்டணமாக கட்டினான். மீதமிருக்கும் இரண்டாயிரம் ரூபாயில் எரிபொருள் செலவு மற்றும் இதர செலவுகளுக்கு வைத்துக்கொள்ளலாமென நினைத்தான். போட்டி துவங்கும் நேரமும் நெருங்கிவர அவனும் வரிசையில் வந்து நின்றான். போட்டிக்கேற்ற உடையை அவன் அணிந்திருக்கவில்லை. நண்பன் சஞ்ஜயிடமிருந்து பெற்ற ஒரு கெட்டியான ஜீன்ஸ் காற்சட்டையை உடுத்தியிருந்தான். அணிந்திருந்த காலணியோ மற்றொரு நண்பனுடையது. அனல்பறக்கும் வெயிலில் ஒவ்வொரு பைக்கும் பின்னஞ்சக்கரத்தில் புழுதி கிளப்பியபடி இருக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் போட்டி துவங்கியது. அனைவரும் ஒருவரையொருவர் முந்தியடித்துக்கொண்டு சென்றனர். அப்போது ஓட்டத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே பைக்கின் முன்சக்கரம் உடைந்து கீழேவிழுந்தான் கார்த்தி. அவனது காற்சட்டை கிழிந்து முழங்காலில் காயமுண்டாக, கைகளிலும் ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. போட்டியிலிருந்து வெளியேறி அடுத்த இரண்டு பிரிவுகளிலும் கலந்து கொள்ளவியலா நிலை உருவானது. கண்கலங்கியபடியே அங்கிருந்து மருத்துவமனைக்கு நண்பர்களுடன் சென்றான்.
‘மாப்ள நான் போனதடவ லக்குலதான் ஜெயிச்சேன்னு சொல்லுவாங்க தான…?’
‘டேய் மாப்ள அதெல்லாம் ஒன்னுமில்ல, நீ பேசாம வா…’யென்று ஆறுதல்படுத்தினாள் சஞ்சய். மருத்துவமனையில் காயத்திற்கு மருந்திடப்பட்டு அவனை பத்திரமாக மெக்கானிக் ராஜனும், சஞ்ஜயும் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். அவனது பெற்றோரிடம் நடந்தவற்றையெல்லாம் கூற, அவர்களும் கண்கலங்கி நின்றனர்.
அவனுடைய அப்பா, ‘கவலப்படாத கண்ணு! போட்டினா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். நீ அத நெனச்சு வருத்தப்படாத, அடுத்த போட்டியில பாத்துக்கலாம். நீ கொஞ்சம் ரெஸ்டெடு கண்ணு’ என்று சொல்ல, அப்பாவின் ஆறுதலும் அடுத்த போட்டியில பாத்துக்கலாம் என்கிற வார்த்தைகளும் அவனுக்கு மருந்தாகவே தோன்ற, ஓய்வெடுக்கலானான். நாட்கள் மெல்ல…மெல்ல நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. பலநாட்களுக்குப்பிறகு, போட்டியில் எவ்வாறு கீழேவிழுந்தோமென யோசித்தான் கார்த்தி. ஆம்! சக்கரம் நன்றாக தேய்ந்திருந்ததே இதற்கு காரணமாக இருக்கலாமென ஒருகணத்தில் தோன்றியது. மெக்கானிக் ராஜனும் இதே காரணத்தை தான் அவனிடம் கூறினார். பயிற்சிக்கு அதிகமாக உபயோகித்திருந்த காரணத்தினால் போட்டியில் சக்கரம் உடைந்ததென்பதை இருவரும் கண்டறிந்தனர். அதன்பின் பயிற்சிக்கு வேறு சக்கரங்களும், போட்டிக்கு வேறு சக்கரங்களும் உபயோகிக்கலாமென இருவரும் முடிவுசெய்தனர்.
அதற்குள் கல்லூரிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டுமாதங்களே இருந்த காரணத்தினால் போட்டிகளில் பங்குபெறுவதை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினான். இதற்கிடையில் கல்லூரிவளாக நேர்முகத்தேர்வில் அவன் கலந்துகொள்ள, வேளாண்துறை சார்ந்த நிறுவனமொன்றில் வேலையும் கிடைத்தது. மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் என்றறிந்ததும், உற்சாகம் அடைந்தான். மேலும் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அந்நிறுவனத்தார் அவனிடம் தெரிவித்தனர். நாட்கள் கடந்து, கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அந்நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான். இவ்வாறு பணியில்சேர்ந்த சிலநாட்களுக்கு பின்பு மீண்டும் தனது பைக்கில் அமர்ந்து ஓட்டப்பயிற்சி மேற்கொண்டான். அடுத்தடுத்த போட்டி அறிவிப்புகளும் வர, வேலை…பயிற்சி…போட்டி…வேலை…பயிற்சி…போட்டியென அவனது வாழ்க்கை சக்கரமாய் சுழன்றுகொண்டிருந்தது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த போட்டியிலும் அவன் வெற்றிபெறவேயில்லை. தொடர்தோல்விகளே குவிந்துகொண்டிருந்தன. தோல்விகளோடு சேர்த்து சம்பந்தமில்லாத நபர்களின் தூற்றலும் அறிவுரைகளும் தேடிவந்தன. ஒருகணம் மனமுடைந்தாலும் விடாத தன்முயற்சியை தொடர்ந்துகொண்டேயிருந்தான். கிட்டத்தட்ட உள்ளூர் மற்றும் வெளியூரென கலந்துகொண்ட இருபத்தைந்து போட்டிகளிலுமே தொடர்ந்து தோல்விகளையே சந்தித்திருந்தான். அதேசமயம் வேலையிலும் சரியான முறையில் கவனம்செலுத்த இயலாமல் மூன்று இடங்களில் வேலைமாற்றம் செய்துவிட்டான். பிறகு வேலையிழந்து, எரிபொருளின்றி நிற்கும் வாகனம்போல் சாலையில் நின்றுகொண்டிருந்தான் ஒருநாள் .
இலட்சியதாகம் அதிகமாக…அதிகமாக கடனும் அதிகமானது. நண்பர்கள், தெரிந்தவர்களென தான் வாங்கிய பணத்தை அவர்களிடம் திருப்பித் தரவியலா சூழலுக்குத் தள்ளப்பட்டான். ஆகவே இச்சூழலை சமாளிக்கவும், இலட்சியத்திற்கு ஏதுவாகவும் இருக்க, பொள்ளாச்சி சந்தைக்கு அருகிலுள்ள ஒரு காய்கறி மண்டியில் கணக்கு வழக்குகள் பார்க்கும் பணியிலமர்ந்தான். தினமும் காலை நான்குமணி அளவில் காய்கறி மண்டிக்குச் சென்று, பிறகு மாலை வேலைமுடிந்ததும் அருகிலுள்ள மைதானத்தில் பைக் ஓட்டும் பயிற்சிக்கு சென்றிடுவான்.
ஒருநாள் மெக்கானிக் ராஜன், காணவந்த அவனிடம் ‘கார்த்தி, நீ தோத்துக்கிட்டே இருக்க! வரப்போற உடுமலைப்பேட்டை போட்டியில நீ தோத்தையினா, உனக்கு நான் வண்டி ரெடிபண்ணி குடுக்கமாட்டேன். அத மனசுல வச்சுக்கோ’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
ஆம்! யாராக இருந்தாலும் குதிரை நன்றாக ஓடினால்தான் நம்பி பந்தயம் கட்டுவார்கள். நொண்டிக் குதிரையின்மேல் யாரும் பந்தயம் கட்டுவதில்லை. அதுதானே மனிதஇயல்பு, தற்போது கார்த்தியும் அந்த நொண்டிக்குதிரையைப் போல்தான் இருந்தான். ஆனாலும் மெக்கானிக் ராஜன் அந்நொண்டிக்குதிரைக்கு ஒரு இறுதிவாய்ப்பை வழங்கினார்.
எதிர்பார்த்திருந்த அந்த இறுதி வாய்ப்பும் நெருங்கிவர, மெக்கானிக் ராஜன் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவனுள் ஓடிக்கொண்டிருந்தது. உடுமலைப்பேட்டையில் நிகழ்ந்த அப்போட்டியில் முன்வரிசையில் வந்துநின்றான். லீக் சுற்று தொடங்கிய வேளையில் சரியான ஸ்டார்ட்-அப் கிடைக்கவில்லை. மேலும் பதட்டமும் அதிகமாக அவனுடைய முயற்சி வீணாகிப் போனது. இறுதிப்போட்டிக்கு கூட தேர்வாகாமல் தோல்வியைத் தழுவினான். இதனைக் கண்ட மெக்கானிக் ராஜனும் அவனிடமிருந்து நழுவிச்சென்றார். இம்முறை குதிரை மட்டுமல்ல, மனமும் நொண்டி நொண்டிதான் அங்கிருந்து சென்றது.
காலம் ஓட…ஓட கவலை ஒருபுறம் வாட்டிக் கொண்டிருந்தாலும், ஆறுதல்மொழி இல்லாமல் போய்விடுமா? என்பதுபோல் சுந்தரம் எனும் சகவீரர், தான் வாகனத்தை பந்தயத்திற்கு தயார்செய்து தருவதாகக் கூறி அவனை தன்னுடைய மெக்கானிக் ஷாப்பிற்கு அழைத்துச்சென்றார். தனக்கு தெரிந்தவிதத்தில் அவனுக்கு வாகனத்தை தயார்செய்து கொடுத்தார். ஆதலால் மீண்டும் நம்பிக்கை மிகுந்தவனாய் கார்த்தி ஓடினான்.
இனி உள்ளூர் வெளியூர்களை கடந்து வெளிமாநில போட்டிகளிலும் கலந்து கொள்ளலாமென்று முடிவெடுத்திருத்தான். அதற்கேற்ப கேரளாவில் ஒரு போட்டி அறிவிப்பும் வந்தது. கேரளாவிற்குச் செல்ல ஒரு ஆட்டோவில், அதாவது ஓட்டுனர் இருக்கையே இல்லாத ஒரு ஆட்டோவில் மர நாற்காலியிட்டு அதில் தன்னுடைய ரேஸ் பைக்கை ஏற்றிக்கொண்டு அவனும் அவனுடைய நண்பன் சஞ்ஜயும் புறப்பட்டனர். தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைப்பகுதியான கோவிந்தாபுரம் வாகன சோதனைச் சாவடியில் கேரளா செல்வதற்கான அனுமதிப் பெற்று பின் சென்றனர்.
ஆனால், அங்கு நடைபெற்ற போட்டியிலும் அவன் தோல்வியையே தழுவினான். அதன் பிரதிபலிப்பு ஆட்டோ பொறுமையாக ஊர்ந்து வீடுதிரும்புகையில் தெரிந்தது. வாடிய முகத்துடனே அவனும் சஞ்ஜயும் திரும்பிவந்தனர். கேரளாவில் தவறவிட்டதை நாசிக்கில் பிடிக்கலாமென நினைத்து மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரத்தில் நிகழவிருந்த போட்டிக்காக கிளம்பிச்சென்றான். பலநூறு கிலோமீட்டர் தொலைவுள்ள அந்நகரில், அவன் ஒருவார காலம் தங்கும் சூழல் உருவானது. அந்நாட்களில் பயிற்சியை மேற்கொள்ள துவங்கினான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான்காம் நாள்முதல் அந்நகரில் மழைபொழியவே மைதானத்தின் தன்மை மாறிப்போக, பயிற்சி தொடரமுடியாமல் போனது. மேலும் அடுத்தடுத்த நாட்களிலும் கனமழை பெய்த காரணத்தினால், நடக்கவிருந்த போட்டியும் ரத்தாகி அனைத்து வீரர்களையும் வீடுதிரும்ப சொல்லி அறிவிப்பும் வெளியானது.
அங்கிருந்து ஏமாற்றத்துடனே வீடுதிரும்பினான். வரும்வழியெங்கும் மழைபெய்து கொண்டிருக்க, நனைந்தபடியே பயணம் செய்தான். கொட்டும் மழையுடனே அவனது கண்களிலிருந்து கண்ணீரும் கொட்டியது. பயணித்த 1313கி.மீ தொலைவில் எத்தனைமுறை அழுதிருப்பான் என்று அவனுக்கே தெரியாதவாறு ஆனைமலையை வந்தடைந்தான். இப்பெரும் ஏமாற்றத்தினூடே ஆங்காங்கே பரிகாச பேச்சுக்களும் படையெடுத்தன. ‘உள்ளூர்லயே ஒடக்காய் புடிக்கலயாம்… இதுல வெளியூர்ல போயி உடும்பு புடிக்கிறானாம்…’ ‘மொதல்ல இந்த வண்டிய தூக்கி காய்லாங்கடையில போட்டுட்டு, ஒழுக்கமா வேலைக்கு போற வழிய பாரு…’ என்றெல்லாம் மனம் தளர்வுண்டாக்கும் சொற்கள் அவன் செல்லும்பாதையில் அதிவேகமாய் வந்தன. இதற்கெல்லாம் இனி இடம்கொடுக்காமல் மேலும் கவனமாக செயல்பட வேண்டுமென்று தீர்மானித்தான். ‘ஏதோ ஒன்னு நீ ஜெயிச்சிருவடா கார்த்தி, ஜெயிச்சிருவடா கார்த்தினு வெரட்டுது. கண்டிப்பா நான் ஜெயிப்பேன்! என்னால முடியும்’, இவ்வாறு தனக்குத்தானே ஆறுதல்படுத்திக்கொண்டான். ஆனால் இத்தனை தோல்விகளிலிருந்து தான் ஏதோவொருவிதத்தில் முன்னேறியிருப்பதை உணர்ந்திருந்தான்.
ஒருமுறை வாகனத்தை முழுமையாக பரிசோதனைசெய்து பார்க்கலாமென்று சுந்தரம் சொல்ல, சரியென்று இவனும் சம்மதிக்க, வாகனத்தின் பாகங்களை ஒவ்வொன்றாக பரிசோதித்த அச்சமயத்தில்தான் வாகனத்தில் கோளாறொன்றிருப்பதை கண்டறிந்தனர். வாகனத்தில் ஃபைபர்-ரீடுவால்வு என்கிற எரிபொருள் வழங்கும் பகுதியில் வினியோகம் சீராகயில்லாத காரணத்தினால், செயல்திறன் குறைவாக இருப்பது தெரியவந்தது. பிறகு மற்ற பாகங்களையும் பரிசோதித்துவிட்டு, வாகனத்திலிருந்த கோளாறை சரிசெய்தனர். இவ்வளவு நாள் தவித்துக்கொண்டிருந்த நம்பிக்கை, புதுப்பிக்கப்பட்ட வாகனத்தோடு தைரியத்துடன் ஓடத்தொடங்கியது. இனி கவனமாக பயிற்சி மேற்கொண்டு, போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென உறுதிகொண்டான். அப்படி அவன் ஒருநாள் பயிற்சி மேற்கொண்டிருந்த தருணத்தில் மண்மேட்டில் தாவிக் குதிக்கும்பொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி தலைகுப்புற கீழேவிழுந்தான். அதில் சற்றும் எதிர்பாராத நேரத்தில், ஓட்டிய மோட்டார்பைக்கே பறந்துவந்து அவனதுமேலே விழுந்தது. அதில் கழுத்தும் தோள்பட்டையும் இணையும் இடத்தில், பெரும் காயம் ஏற்பட்டது. வலியில் துடித்துக்கொண்டிருந்த அவனை, உடனிருந்த நண்பர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, அங்கு பரிசோதித்த மருத்துவர் அறுவைசிகிச்சை செய்துதான் இதனை சரிசெய்ய வேண்டுமெனவும் அதற்கு அதிகம் செலவாகுமெனவும் கூற, இவர்களோ என்னசெய்வதென்று தெரியாமல் முதல் உதவியுடன் அங்கிருந்து கிளம்பினர். பிறகு கார்த்திக்கு தெரிந்த ஒருவரின் எம். ஆர்.ஐ ஸ்கேனிங் சென்டருக்கு சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் சிறு எலும்புமுறிவு இருப்பது தெரியவந்தது. அந்த எக்ஸ்ரே அறிவிப்புடன் கார்த்தி தன் வீட்டின் அருகிலுள்ள கணேசன் கிளீனிக்கிற்கு சென்றான்.
அங்கு தனக்கு முன்பே தெரிந்த மருத்துவரிடம் எக்ஸ்ரே அறிவிப்பை காண்பித்தவுடன்,
‘என்னடா, எக்ஸ்ரே எடுத்துட்டே வந்துட்டியா…?’
‘ஆமா சார்! ரொம்ப வலிக்குது. கொரவளி வரைக்கும் வீங்கிருச்சு சார்…’
‘சரி! சரி! ஒன்னும் கவலப்படாத…’
‘இல்ல சார், ஆபரேஷன் பண்ணாதான் சரியாகும்னு இதுக்கு முன்னாலபோன ஆஸ்பத்திரியில சொன்னாங்க. அதான் கவலையா இருக்கு சார்…’
‘யாருடா சொன்னது அப்டி…? அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல, ஒரு ஊசிய போட்டுட்டு தோள்பட்டையில மாவுகட்டு போட்டுவிடுறேன். ரெண்டு மாசத்துக்கு கொஞ்சம் கவனமா ரெஸ்ட் எடுத்தீனா, எலும்பு கூடிடும். அதுவே போதும் பயப்பட தேவையில்ல சரியா…?’
‘சரிங்க சார்!’ என்று சந்தோசம் ஒருபக்கம் உதித்தாலும், மறுபக்கம் பயிற்சிக்கு இரண்டுமாத ஓய்வு என்கிற வருத்தமும் உதித்தது.
வீட்டிலோ பணியிடத்தில் காயம் உண்டானதாக சொல்லி சமாளித்தான். பிறகு அப்படி, இப்படியென கட்டுப்பாடாக இருந்து இரண்டு மாதங்களும் ஓட, கட்டவிழ்க்கும் நேரமும் வந்தது. மருத்துவரிடம் சென்றதும், அவர் மாவுக்கட்டை அவிழ்த்துவிட்டு, மீண்டும் ஒருமாத காலம் ஓய்வெடுத்தபின் பயிற்சிக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கி அனுப்பினார்.
“மனுசன் இத்தச்சோடு ஊசிய போட்டு, மாவுக்கட்ட போட்டாரே! அப்பவே சரியாயிடும்னு நெனச்சேன். ஆனா திரும்பவும் ஒருமாசம் ரெஸ்ட் எடுக்க சொல்றாரே… இருந்தாலும் அவருக்கு தேங்க்ஸ்”, என முணுமுணுத்தவாறே வீடுதிரும்பினான். மூன்றுமாதம் முடங்கிக்கிடந்த குதிரை மீண்டும் பந்தயத்திற்கு தயாரானதுபோல், அந்த ஒருமாதமும் முடிந்து அவன் வெகுண்டெழுந்து வந்தான். மீண்டும் பயிற்சி தொடர, அவன் மண்மேடுகளில் பறந்தான். பறக்கத்தொடங்கிய சில வாரங்களில், கோவை மாநகரில் தேசியஅளவிலான போட்டிக்கான தகுதிச்சுற்று தேர்வு ஒன்று நடைபெற்றது. அந்தப் போட்டியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் போட்டிகளில் பங்குபெற நூற்றுக்கணக்கான வீரர்களும் வந்திருந்தனர். அதில் கார்த்தியும் பங்கேற்றான். மறுபுறம் அப்போட்டியை காண மெக்கானிக் ராஜனும், அவரது நண்பர்களும் வந்திருந்தனர். கார்த்தியின் மீதான அவர்களது பார்வையில் ஒரு ஏளனம் எட்டிப்பார்த்தது. இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்க, மறுமுனையில் தேசிய அளவிலான போட்டிக்குரிய தகுதிச்சுற்றுகள் ஆரம்பித்தது.
இந்தப் போட்டியில் மொத்தம் 15 சுற்றுஓட்டங்கள் வாகனத்தை ஓட்டவேண்டும். அதில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி கார்த்தியும் நோ-வைஸ் பிரிவில் 15 சுற்றுஓட்டங்கள் ஓட்டுவதற்காக தயாராக நின்றுகொண்டிருந்தான். ஸ்டார்ட்-கேட் தரையைத்தொட்டதும், மின்னல் வேகத்தில் பாயந்தான். அவனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாகனங்களும் சென்றன. நல்ல ஸ்டார்ட்-அப் கிடைத்து முன்னேறிக்கொண்டிருந்தான் கார்த்தி. அச்சமயம் முதல் மூன்று சுற்று ஓட்டங்கள் முடிவடையும் தருவாயில், அவனுடைய பைக்கின் பின் சக்கரம் பஞ்சரானது. டியூப் கிழிந்தது கூட தெரியாமல், அவன் பைக்கை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தான். வேகமும் விவேகமும் கூடிவந்த வேளையில் எவ்வித தடையுமின்றி அவன் பாய்ந்து ஓட்டிக்கொண்டிருந்தான். என்ன நடக்கப் போகிறதோ? என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்க… கைத்தட்டல்கள், விசில் சப்தங்களென ஆரவாரமாக 15 சுற்றுஓட்டங்களை முதல் ஆளாகக் கடந்தான். வெற்றிபெற்ற பின்னரே பின் சக்கரம் பஞ்சர் என்பது அவனுக்கு தெரியவந்தது. இந்நிகழ்வு மைதானத்திலிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்படி ஆச்சரியப்பட்டுவர்களுள் ராஜனும் ஒருவர் என்றுதான் சொல்லவேண்டும். அவர் மனதில் இந்தக்குதிரை நொண்டிக்குதிரையல்ல! பந்தயக்குதிரைதான் என்கிற எண்ணம் இம்முறை அழுத்தமாக உதித்தது. சுந்தரமோ இது தனக்கும் கிடைத்த வெற்றியென்று கார்த்தியிடம் தன் மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளிப்படுத்தினார். இவ்வெற்றியின்மூலம் கார்த்தி தேசியஅளவிலான போட்டிக்கு தேர்வாகினான். அதன்பிறகு ஆங்காங்கே நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு போடியம் பண்ணிக்கொண்டிருந்தான். அவனது விடாமுயற்சியின் அடையாளமாக பரிசுக்கோப்பைகளின் எண்ணமும் அதிகரித்துக்கொண்டிருந்தது. கூடுதல் சந்தோசமாக, காலப்போக்கில் அவனது முன்னேற்றத்தை கண்டு மெக்கானிக் ராஜனும் அவனுடன் மீண்டும் இணைந்தார்.
இன்று, தேசியஅளவிலான போட்டிக்கு தேர்வாகியிருந்த காரணத்தினால், அதற்கான நுழைவுக் கட்டணத்தை தன் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்டு மோட்டார் ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அலுவலகத்திற்கு விரைந்தான். அங்கு போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பின் கட்டணம் செலுத்தினான். மேலும் போட்டிக்கான விவரங்கள் அடங்கிய கோப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதில் போட்டி நடைபெறும் நாள் 14 பிப்ரவரி 2018 என்றிருந்தது.
இதுவரை தான் கடந்துவந்த பாதைகளையும், பயிற்சிமேற்கொண்ட மைதானத்தையும் அடிக்கடி நினைவுகூர்ந்து கொண்டேயிருந்தான். இன்னும் இருபது நாட்களே தேசியஅளவிலான போட்டி நடைபெறுவதற்கு இருப்பதால், தனது பயிற்சியையும் கவனத்தையும் ஒரே நேர்கோட்டில் செலுத்திக்கொண்டிருந்தான். அங்கு வாகனம் மட்டுமே வளைந்து…வளைந்து ஓடிக்கொண்டிருந்தது. நாட்களும் கடந்த…கடந்து போட்டிக்கான நாளும் அருகில் நெருங்கிவந்தது. போட்டிக்கு முந்தையநாள் அன்று, கார்த்தி காலைநேரமாக எழுந்ததும் குளித்துவிட்டு, போட்டி நிகழும் இடத்திற்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தான். பின் பூஜை அறைக்குச் சென்று கடவுளை நன்றாக வழிபட்டபின், தாய் தந்தையரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டான்.
‘மகராசனா இரு சாமி! நல்லபடியா ஜெயிச்சு, கப்போட தான் வீட்டுக்கு வர்றோணும். சரியா கண்ணு…’
‘உங்க வார்த்த பலிக்கட்டும்ப்பா. இதுல ஜெயிச்சா தனியார் ஃபேக்டரில ஸ்பான்சரோட வேலையும் கெடைக்கும். அடுத்தகட்ட போட்டிக்கும் போலாம் ப்பா…’
‘ரொம்ப சந்தோசம் கண்ணு…’
‘அம்மா நான் போயிட்டு வரேன்…’
‘அய்யா, பாத்து பத்திரமா போ சாமி! நல்லா வண்டி ஓட்டி, நீ நெனச்சத சாதிச்சிட்டு வா. சரியா…’
‘சரிம்மா…உங்க புள்ள ஜெயிச்சிட்டு வர்றேன். அப்புறம் நான் வண்டி ஓட்டுறத டிவியில காட்டுவாங்க. அப்பா, தம்பி, நீங்க மூணுபேரும் வீட்டுலயே ஒ க்காந்து நல்லா பாருங்க. நான் போயிட்டு வர்றேன்’ என தனது குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்று, போட்டி நடைபெறும் பெங்களூரு நகரத்தை நோக்கி, மெக்கானிக் ராஜன், சுந்தரம் மற்றும் நண்பர்களுடன் பயணித்தான் கார்த்தி.
போட்டி நாளில், அனைத்து வீரர்களும் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். போட்டிக்கேற்ற உடையணிந்து வாகனத்தின் திறனை பரிசோதித்தபடியிருந்தான் கார்த்தி. வீரர்கள் அனைவரும் போட்டி துவங்கும் இடத்திற்கு வந்து தங்களுடைய மார்க்கத்தில் நிற்கும்படி அறிவிப்பொன்று ஒலிவாங்கியிலிருந்து வந்தது. அதன்படி கார்த்தியும் அவனது வாகனமும் (வண்டி எண்: 96) தங்களுக்குரிய இடத்தில் வந்துநின்றனர். அங்கே, கார்த்தி! கார்த்தி! என அவனது நண்பர்களும், சில ரசிகர்களும் பதாகை பிடித்தவண்ணம் சப்தமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். 20பேர் கலந்துகொண்ட அப்போட்டி துவங்க இன்னும் ஒருநிமிடமே இருந்தவேளையில், அனைத்து வீரர்களும் ஸ்டார்ட்-கேட்டையே கூர்ந்து நோக்கியபடி இருந்தனர். ஸ்டார்ட்-கேட் தரையைத் தொட்டதும் மின்னல் வேகத்தில் ஒவ்வொரு வீரர்களும் பாய்ந்தனர். கார்த்தியும் தனது பைக்கை நல்ல ஸ்டார்ட்-அப் எடுத்து ஓட்டத் தொடங்கினான். இது மிகமுக்கியமான போட்டி என்பதால் சுற்றுவட்டப் பாதையில் ஆங்காங்கே அதிகளவில் காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் ஒவ்வொரு வீரர்களின் தலைக்கவசத்திலும் பிரத்யேக காமிரா பொருத்தப்பட்டிருந்தது. வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் அவை அழகாக படம் பிடித்துக்கொண்டிருந்தன. சுற்றுவட்டப்பாதையில் 15 சுற்றுகள் தொடர்ந்து வாகனத்தை ஓட்டவேண்டும். 15 சுற்றுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் முதல் மூன்று நபர்களே போட்டியின் வெற்றியாளர்கள் என்கிற அறிவிப்பொன்று பொதுமக்களின் கவனத்திற்காக சொல்லப்பட்டது. அதனைக்கேட்ட ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான வீரரின் பெயரைச் சொல்லி ஊக்கபடுத்திக் கொண்டிருந்தனர். வீரர்களும் விரைந்து ஓட்டிக்கொண்டிருக்க, அச்சமயம் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. சுற்றுவட்டப்பாதையில் நான்காம் சுற்றுஓட்டத்தில், ஒரு மண்மேட்டில் தாவிக்குதிக்கையில் நிலைதடுமாறி கீழேவிழுந்தான் கார்த்தி. பார்வையாளர்கள் ஓ…வென்று கூட்டமாக கூச்சலிட, சுற்றுவட்டப்பாதையில் பதற்றம் அவனை தொற்றிக்கொண்டது. இரண்டாம் நிலையில் வந்து கொண்டிருந்தவன், கீழே விழுந்த காரணத்தினால் தற்போது 20வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டான்.
ஒருவித பதற்றத்தோடு பைக்கின்மீது அமர்ந்து மீண்டும் மின்னலாய் கிளம்பினான். அவனுக்குள் இருந்த பதற்றம் சற்று அதிகமாகி காயத்தையும் உண்டாக்கியது. இதுதான் தம்மிடம் இருக்கும் இறுதிவாய்ப்பு, இதனை தவறவிட்டால் அவ்வளவுதான் என்பதை உணர்ந்தவன்போல், பதற்றத்தை விடுத்து மீண்டும் சிந்தனைக்கு கடிவாளமிட்டு ஓட்டத்தொடங்கினான். சுற்று ஓட்டங்களோ ஐந்து, ஆறு, ஏழென வேகமெடுக்க அவனும் பதினேழு, பதினாறு, பதினைந்தென தன்னுடைய நிலையில் முன்னேறிக்கொண்டிருந்தான். அங்கு ஒவ்வொரு வீரர்களும் முனைப்புடன் வேகமாய் முன்னேறிக்கொண்டிருந்தனர். இது ஒவ்வொரு வீரருக்குமே நிச்சயம் கடினமான ஒன்றுதான். பனிரெண்டு சுற்றுக்கள் முடிந்து, இன்னும் மூன்று சுற்றுகளே இருந்தவேளையில், ஐந்தாம் நிலையில் ஓட்டிக்கொண்டிருந்தான் கார்த்தி. அப்போது ஒரு வளைவில் சாதூர்யமாக செயல்பட்டு இரண்டு வீரர்களை முந்திவிட்டு மூன்றாம் நிலைக்கு வந்தான். இந்த சூழலில் போட்டியின் பரபரப்பு மேலும் கூடியது. அனைத்து வீரர்களும் இன்னும் தங்கள் வேகத்தை மேலும் கூட்டிக்கொண்டு பாய்ந்தனர். இன்னும் இரண்டு சுற்றுகளே இருக்க, அச்சமயம் இரண்டாம்நிலை வீரரை கடந்து முதல்நிலை வீரருக்கு சமீபத்தில் கார்த்தி வந்ததும், மக்கள் கூட்டம் பலத்த கோஷம் எழுப்பியது. அச்சமயம் ஒரு வளைவில் எதிர்பாராதவிதமாக இருவரின் வாகனங்களும் உரசிக்கொள்ள, இருவரும் சற்று தடுமாற்றத்திற்கு உள்ளாகினர். இந்த இடைவேளையில் இரண்டு வீரர்கள் அவர்களை முந்திச் சென்றனர். அப்போது கார்த்தி அவர்களை விரட்டி மூன்றாம் நிலையில் சென்றுகொண்டிருந்தான். அவனை விரட்டி நான்காம் நிலையில், உரசிய வீரர் வந்துகொண்டிருந்தார். போட்டி சூடுபிடித்த இந்த பரபரப்பான சூழலில் சுற்றுவட்டப்பாதையில் ஓடுவதற்கான இறுதிச்சுற்று ஓட்டம் நெருங்கியது.
இறுதிச்சுற்றினுள் நுழைந்ததும் கார்த்தி இரண்டாம்நிலைக்கு வந்தான். முதல்நிலையில் சென்றவருக்கு சமீபத்தில் அவன் நெருங்கியதும், மூன்றாம் நிலையில் வந்த வீரர் இவர்கள் இருவரையும் ஒரு வளைவில் கடந்து முதல் இடத்திற்கு வந்தார். இப்போது நான்காம்நிலை வீரர் அவனுக்கு நிகராக வந்தார். கார்த்தியும், அவரும் இரண்டாம்நிலை வீரருக்கு சமீபத்தில் விரைந்து கொண்டிருந்தனர். ஒரு வளைவை கடந்து, சிலதூரம் சென்று மண்மேட்டில் தாவினால் போட்டி முடிவடையும் நிலையென இருக்கையில், முதல்நிலையில் சென்றவர் எவ்வித நெருக்கடியுமின்றி இலக்கை எட்டினார். இப்போது இரண்டாவது இடத்திற்கான கடும் போட்டியில், வளையவேண்டிய இடத்தில் நான்காம் நிலையில் வந்த வீரர் தனது வேகத்தைக் கூட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து முன்னேறினார். அச்சமயம் கார்த்தியும் மற்றொரு வீரரும் ஒருவருக்கொருவர் நிகராகவே இலக்கை நோக்கி ஓடினர். இருவரும் ஒருசேர இலக்கை நோக்கி தாவிக்குதிக்க வந்தவேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் இலக்கைத் தாண்டி, கார்த்தி கீழே விழுந்தான். மற்றொரு வீரரோ இலக்கைத் தாண்டி நிலைதடுமாறி ஒரு மண்மேட்டில் மோதிநின்றார்.
அங்கு எல்லோரும் பெருங்குழப்பத்தினூடே மூன்றாவது இடத்தைப் பிடித்தது யார்…? என்று பரபரப்படைய தொடங்கினர். அந்தக் குழப்பத்தை அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் தீர்த்துவைத்தனர் நடுவர்கள். ஆம், ஒரு நூலிழையில் மூன்றாம் இடத்திற்கான வாய்ப்பை இழந்து, நான்காம் இடத்தை பிடித்து தோல்வியுற்றான் கார்த்தி.
நிச்சயம் இது அவனுக்கொரு மாபெரும் வலிதான். தன் முயற்சியெல்லாம் தோற்றுவிட்டதே! இதனை எப்படி தன் பெற்றோரிடம் சென்று சொல்வதென அழுதுகொண்டிருந்தான். தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரும் அவனடைந்த தோல்வியை பொறுக்காமல் கண்ணீர்சிந்தினர். அங்கு, மைதானத்தில் அவன் மட்டும் விழவில்லை. அவனது ஃபேக்டரி ரேஸர் கனவும், அடுத்தகட்ட லட்சியமும் சேர்ந்தே விழுந்தது.
நில்லாத கண்ணீருடன் மைதானத்திலிருந்து புறப்பட்டு, பெங்களூரு நகரிலிருந்து வீட்டை அடைந்ததும், பெற்றோரின் முகத்தை நேரிட்டுகூட பார்க்காமல் தனது அறைக்குள் நுழைந்தான் கார்த்தி. அவர்களும் அவனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவனது ரேஸ் பைக்கோ வீட்டுவாசலின் ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் ஓடியதும்,
‘கண்ணு ஒன்னும் வருத்தப்படாதய்யா… நமக்கு குடுத்து வச்சது அவ்வளவுதான் போல, நீ அதயே நெனச்சிட்டு இருக்காம. அடுத்து என்னவோ அத பாரு கண்ணு…’
‘அப்பா நான் தோத்துட்டேன்ப்பா! என்ன மன்னிச்சிடுங்க…’ என கண்ணீர் விட்டான்.
‘அதெல்லாம் ஒன்னுமில்ல கண்ணு… நீ அழாத!’ என்று அவரும் கண்கலங்க, பிறகு அவ்விடம்விட்டு நகர்ந்து அவர் வேலைக்குச் சென்றார்.
அதன்பின் கார்த்தி தன் தாயிடம் சென்று, நண்பர் ஒருவரின் மூலம் அருகிலுள்ள ஒரு காய்கறி கடையில் தான் வேலைக்கு சேர்ந்திருப்பதாகச் சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான். தினமும் தனது ரேஸ் பைக்கை ஆசையாய் காணும் கார்த்தி. அத்தோல்விக்குப் பின்னர் அதனை, அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதற்குப்பின் அவன் ஓட்டமெல்லாம் குறைந்து அருகிலுள்ள காய்கறிக்கடைக்கே சென்றுகொண்டிருந்தது. இப்போது தன்னை நடப்பதற்கு பழக்கப்படுத்திக் கொண்டான், கடக்கவும் பழகியிருந்தான்.
இப்படியே ஒருமாத காலம் ஓட…
ஒருநாள் கார்த்தியின் வீட்டைநோக்கி காரொன்று வந்தது. அதிலிருந்து சுமார் 50வயது மதிக்கத்தக்க நபரொருவர் இறங்கி வந்தார்.
‘இது பைக் ரேஸர் கார்த்தி வீடு தான…’
‘ஆமா சார்! அவன் என் புள்ள தான். நீங்க…’
‘நான் எஃப்.எம்.ஆர்.மோட்டார்ஸ் கம்பெனியில இருந்து வர்றேன். என் பேரு விவேக். மிஸ்டர் கார்த்திய பாக்கணும். அவர் இருக்காரா…?’
‘இருக்காரு, உள்ள வாங்க சார்… என்று கார்த்தியின் அப்பா அவரை வரவேற்றார்.’
‘மிஸ்டர் கார்த்தி…?’
‘ஆமா சார்! நீங்க…’
‘நான் எப்.எம்.ஆர்.மோட்டார்ஸ் கம்பெனியோட டெவலப்மெண்ட் மேனேஜர். உங்கள நேருல பாத்து பேசணும்னு தோணுச்சு, அதான் வந்தேன்.’
‘சொல்லுங்க சார்…’
‘கடைசியா நடந்த நேஷனல் லெவல் காம்பிடீஷன்ல உங்களோட டிரைவ பாத்தேன். எனக்கு ரொம்ப புடிச்சிது, ஆனா கடைசியா நீங்க கீழ விழுந்துட்டீங்க. சாரி! அத உங்கள காயப்படுத்துறதுக்காக நான் இப்போ சொல்லல. கீழ விழும்போது, என்னோட கண்ணுலயும் நீங்க விழுந்துட்டீங்க. அதாவது நீங்க விழுந்த இடத்துக்கு பக்கத்துல தான் நான் நின்னுட்டு இருந்தேன். சரி அதவிடுங்க, நான் நேரா விஷயத்துக்கே வர்றேன். உங்களுடைய ரேஸ் ஹிஸ்ட்ரிலாம் பாத்தேன், வெரிகுட் ரெக்கார்ட்ஸ். ஆனா, இந்த நேஷனல் ஈவன்ட் ஃபெயிலருக்கு அப்புறம் நீங்க ரேஸ விட்டுட்டதா கேள்விப்பட்டேன்.’
‘ஆமா சார்! இனி ரேஸு…ரேஸுனு சுத்துறதுக்கு முடியல சார். ஏற்கனவே எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்…’
‘அட திரும்ப ரேஸுக்கு வாங்க, அடுத்த வருஷம் நடக்குற போட்டிக்கு இப்போ இருந்தே பிராக்டீஸ் பண்ணுங்க…’
‘இல்ல சார் வேண்டாம்! இதுக்குமேல என்னால காசு செலவு பண்ணமுடியாது சார். ஏற்கனவே நெறைய கடன் இருக்கு. இதுக்கு மேலயும் கடனாளி ஆக விரும்பல. என்ன விட்டுருங்க சார்…’
‘அட உங்ககிட்ட யாரு காசு கேட்டா? எங்களோட கம்பெனியில டெவலப்மென்ட் செக்சன்ல உங்களுக்கொரு நல்ல சம்பளத்தோட வேலை போட்டு தர்றேன். நம்ம கம்பெனியில தயாராகுற வண்டிய வச்சே, பிராக்டீஸ் பண்ணுங்க. நான் உங்களுக்கு ஸ்பான்சர் பண்றேன்…’
‘சார்! அது வந்து…’
‘நீங்க ரொம்ப யோசிக்காதீங்க! பந்தயக்குதிர நொண்டிக்குதிரயாகும்! நொண்டிக்குதிர பந்தயக்குதிரயாகும்! இந்த போட்டிய பொறுத்தவர களத்துல இருக்கணும்! எல்லாரும் விட்டுட்டு போய்ட்டா, அப்புறம் களம் இருக்காது. கட்டடந்தா இருக்கும். அதனால ஒரு நல்ல முடிவா என்கிட்ட சொல்லுங்க. இது என்னோட விசிட்டிங் கார்டு, உங்களுக்கு எப்போ என்ன வந்து பாக்கணும்னு தோணுதோ, அப்போ வந்து பாருங்க . நான் கெளம்புறேன், தேங்க்யூ…”
‘ஐயா வீடுவரைக்கும் வந்துருக்கீங்க, ஏதாவது சாப்புட்டு போங்கய்யா…’
‘இல்லம்மா, எனக்கு எதுவும் வேணாம். உங்க புள்ளைக்கிட்ட சொல்லி ஒரு நல்ல முடிவா எடுக்க சொல்லுங்க அதுபோதும், நான் வர்றேன்…’
‘அம்மனிதர் காரில் ஏறியமரும்வரை பார்த்துக்கொண்டே இருந்தான் கார்த்தி. அவனது அப்பா, அவனுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினார். பின் கார்த்தியின் கையிலிருந்த விசிட்டிங் கார்டை வாங்கி, அவனது சட்டைப்பைக்குள் வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா.’
அவனோ வீட்டுவாசலின் வெளியேவந்து, இம்முறை தனது ரேஸ் பைக்கை ஏறெடுத்துப் பார்த்தான். பந்தயக்குதிரை கனைத்தது போலிருந்தது.
000

நான் ஆ.கிருஷ்ணதாஸ், கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறைப் பகுதியைச் சேர்ந்தவன். இளங்கலைப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளேன். தற்போது கோவையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறேன்.
எனது படைப்புகள் கணையாழி, கொலுசு, ஆவநாழி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும் 2020ம் ஆண்டு கருவூர் மாவட்ட இளந்தமிழர் இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற இணையவழி சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய “புகையும் நெருப்பும்” என்கிற சிறுகதை சிறந்த கதைகளில் ஒன்றாக தேர்வுசெய்யப்பட்டது. தொடர்ந்து வாசிப்பிலும் எழுத்திலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

