–ச.முகிலன்

அம்மா இப்போது மருத்துவமனைப் படுக்கையில் சுயநினைவின்றி கிடக்கிறாள். வழக்கம் போலப் பள்ளி சென்று பணி முடித்து திரும்பியவள், நேற்று மாலையில் தன் இருசக்கர வாகனத்தை மெக்கானிக் கடையில் பழுதுபார்க்க விட்டுவிட்டு, வீட்டிற்கு வரும் சாலையில் நடந்து வரும்போது, அதிவேகமாக வந்த கார் அவள் மீது மோதியிருக்கிறது.

எங்கள் குடும்பத்தை நன்கறிந்த மெக்கானிக் அண்ணன் எனக்கு தகவலைச் சொன்னவுடன் நான்தான் முதலில் அங்கு சென்றேன். அம்மாவின் வாகனச் சாவியையும் தலைக்கவசத்தையும் என் கை அனிச்சையாய் தொட்டுப் பார்த்தது . அதில் அப்போதும் அவளுடைய வாசனை இருந்தது. ரத்த வெள்ளத்தில் இருந்த அம்மாவைப் பார்த்தபோது எனக்கு தாங்க முடியாத அழுகை வந்தாலும், சிறுவயதிலிருந்தே அம்மா எனக்கு தைரியத்தை ஊட்டி வளர்த்ததால் அந்தச் சூழலை என்னால் பதற்றமின்றி அணுக முடிந்தது.

பெண் குழந்தையான என்னை அம்மா தைரியமாக வளர்க்க முக்கியக் காரணம் அப்பா. அம்மா தன் சிறுவயதிலிருந்து திருமணமாகும் வரை மிக அமைதியானவளாக இருந்திருக்கிறாள்.பத்தொன்பது வயதில், வாழ்க்கை என்னவென்று புரியும் முன்பே அம்மாவுக்குத் திருமணம் நடந்துவிட்டது.

திருமணத்தின்போது அம்மா ஆசிரியர் பயிற்சி மட்டுமே முடித்திருந்தாள். அப்பா அப்போதே ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது பணியில் சேர்ந்த அம்மா, அதன் பின்னர் பி.ஏ., எம்.ஏ.,பி.எட்., எம்.ஃபில். என்று தன் கல்வித் தகுதியைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டாள். இடைப்பட்ட காலத்தில் அவள் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வும் பெற்றுவிட்டாள்.

அப்போது தொடங்கியது அப்பாவின் அகந்தை .

ஆரம்பத்தில் அப்பா மட்டும் வேலை செய்து கொண்டிருந்தபோதும்,பின்பு அம்மாவும் அப்பாவைப் போல இடைநிலை ஆசிரியராக இருந்தபோதும் அப்பா எல்லோரையும் போல இயல்பாகத்தான் இருந்தார். அம்மா பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, அப்பாவை விடக் கூடுதலாக வருமானம் ஈட்டத் தொடங்கிய போதுதான் அப்பாவின் குணம் மாறியது.

தன் இணையரின் முன்னேற்றத்தில் உண்மையாகவே மகிழ்ச்சியடைய வேண்டிய அப்பா,அம்மாவைப் போட்டியாளராக எண்ணத் தொடங்கிவிட்டார். அதனால் எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அம்மாவைக் குறைத்து மதிப்பிடவும் உதாசீனம் செய்யவும் தவறியதே இல்லை அப்பா. ஆரம்பத்தில் இது புரியாமல், தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ணி அப்பாவிடம் வருத்தம் தெரிவிப்பாள் அம்மா. “நான் என்ன தப்பு பண்றேனு சொல்லுங்க.அத நான் சரி பண்ணிக்குறேன். ஏன் எல்லாத்துக்கும் கோவப்படுறீங்க ? எதுனாலும் அமைதியா சொல்லுங்க. நீங்க சொல்ற விதமும் சத்தமும் எனக்கு பயமாவும் வருத்தமாவும் இருக்கு ” என்று கெஞ்சிக் கேட்பாள். அப்போதும் அப்பா கோபமாகக் கடுஞ்சொற்களையே வீசுவார் . சில சமயங்களில் நீண்ட நாட்களுக்கு அம்மாவுடன் பேசாமல் கூட இருப்பார். ஆனால் அந்தச் சமயங்களில்கூட அம்மா ஒரு மனைவியாக அப்பாவுக்குச் செய்ய வேண்டிய அனைத்துப் பணிவிடைகளையும் செய்துகொண்டுதான் இருப்பாள்‌ . எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் நடந்து கொள்வாள்.

அப்பாவோ, அம்மாவைச் சமைக்கவும் துவைக்கவும் வீட்டு வேலைகளைச் செய்யவும் இருக்கும் ஓர் இயந்திரம் போல நடத்த ஆரம்பித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது, அதுவரை தன் குரலை உயர்த்தாத அம்மா இப்போது போர்க்கொடி தூக்கினாள். “என்னைய ஏன் மதிக்க மாட்டேங்கிறீங்க? நான் உங்கள் மனைவிதானே? உங்களை மாதிரி ஒரு சக மனுஷிதானே? நான் படிச்சுருக்கேன்,சம்பாதிக்குறேன் . ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு சக உயிரா நினைச்சுக்கூட எனக்கு ஏன் மரியாதை கொடுக்க மாட்டேங்குகிறீங்க?” என்று அம்மா கேட்டால், “உனக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும்?” நான் அப்படி தான் பேசுவேன்” என்று பதில் சொல்வார் அப்பா . சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகமாகக் கோபப்படுவார். கடுமையான வார்த்தைகளால் அம்மாவைக் காயப்படுத்துவார்.

அம்மா என்ன சொன்னாலும் “உன் வேலையைப் பார்”, “எல்லாம் எனக்குத் தெரியும்”, “உனக்கு அப்படி என்ன தெரியும்?”, “எனக்குப் புத்தி சொல்லும் அளவுக்கு நீ வளந்துட்டயா?” போன்ற கேள்விகளைக் கேட்டு அம்மாவின் வாயை அடைப்பார்.

ஆனால் அப்பாவுக்கு அம்மாவை உறவினர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வதில் மட்டும் விருப்பம் உண்டு. ஏனெனில், “என் மனைவி எல்லாரும் புகழும் அளவுக்கு நல்ல பெயரெடுத்த ஒரு சிறந்த ஆசிரியர்” என்று வெளியுலகிற்குக் காட்டிக்கொள்வதில் அவருக்கு பெருமை உண்டு. அதுபோல வெளியில் தன்னை நல்ல மனிதனாகக் காட்டிக்கொள்ளவும் அவர் அதைச் செய்து கொண்டிருந்தார். ஆனால் வீட்டுக்குள் ஒரு நாள்கூட அம்மாவிடம் அவளது செயல்களைப் பாராட்டிச் சொன்னதே கிடையாது. அம்மா வேலைக்குச் சென்ற பிறகுதான் அப்பா வீடு, நிலம், கார் எல்லாம் வாங்கினார். அப்பாவழித் தாத்தா, பாட்டி மற்றும் அத்தைகளையும் அம்மா நன்றாகப் பார்த்துக்கொள்வார். எல்லோருடனும் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்து கொள்வார். இவ்வளவு செய்தும் அப்பாவுக்கு ஏனோ தன் அகந்தையினால் அம்மா மீது பாசம் என்பது துளியும் இல்லாமல் போனது.

அப்பா வீட்டுக்கு வெளியில் நண்பர்கள் உறவினர்கள் சக ஆசிரியர்கள் பொதுமக்கள் எல்லோரிடமும் நன்றாக பழகக்கூடியவர் தான். அம்மாவிடம் மட்டும் தான் இப்படி முரணாக நடந்து கொண்டார்.

சிறுவயதில் அம்மாச்சி வீட்டிற்கு செல்லும் போது அம்மா தன் தாயிடம் அப்பாவைப் பற்றி புலம்பித் தீர்ப்பாள். “ஆம்பளனா முன்ன பின்ன தான் இருப்பாங்க. நீ தான் பொறுத்துப் போகணும்னு அம்மாச்சி சொல்லுவாங்க”. நாங்கள் அம்மாச்சி வீட்டிற்கு போகும் போது அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்வது போல அப்பா நடிப்பார். அம்மாச்சி அதையெல்லாம் உண்மையென்று நம்பிக் கூட அம்மாவிடம் இப்படிச் சொல்லிருக்கலாம்.

ஒரு நாள் சண்டையின் போது எப்போதும் போல அப்பாவிடம் அம்மா கோரிக்கையாக தன் உரிமைகளைக் கேட்கும் போது , அப்பா ‘சம்பாதிக்குற திமிர்ல இப்படிலாம் பேசிட்டுத் திரியாத, உன் இஷ்டத்துக்கு இங்க எதும் நடக்காது. கஷ்டம்னா கிளம்பிப் போயிட்டே இரு உன்னை யாரும் இங்க தடுக்கல” என்றார். அதற்கு அம்மா “அப்படினா டிவர்ஸ் கொடுங்க நான் போயிடுறேன்” என்றாள். என்ன தைரியம் இருந்தா என்ட டிவர்ஸ் கேட்ப என்று கேட்டு அப்பா சரமாரியாக அம்மாவை அடித்து விட்டார்.

அப்போது “என் மீது அன்பு செலுத்த மாட்ட . என்னை மதிக்க மாட்ட. என்னோடு கூடுவதற்கு என்னோட அனுமதியோ விருப்பத்தையோ கேட்க மாட்ட. ஆனால் என்னை திட்டவும் அடிக்கவும் அடிமைப்படுத்தவும் மட்டும் உனக்கு உரிமை எங்கிருந்து வந்தது?” என்று கேட்டாள் அம்மா . “இந்த நிமிஷம் கூட என்னால உன்னை விட்டு பிரிஞ்சு போக முடியும். உன்ட டிவர்ஸ் கேட்டு கெஞ்சாம என்னால டிவர்ஸ் அப்ளை பண்ண முடியும். என் குடும்பம், உன் குடும்பம், சொந்த பந்தம் , நண்பர்கள்,கூட வேலை பாக்குறவங்க அத்தனை பேருக்கும் உன் நடிப்ப வெளிச்சம் போட்டுக் காட்டி, உன் முகத்திரையை கிழிக்க முடியும். ஆனால் நான் அத செய்ய மாட்டேன்‌.ஏனா நான் உன் மேல வச்சிருக்கிற அன்பு உண்மை. அதுக்கு சாட்சி தான் நம்ம பிள்ளையும் இத்தனை நாள் உன்ன சகிச்சிக்கிட்டு உன் கூட வாழ்ந்த வாழ்க்கையும்‌. இனிமே நான் அப்படி இருக்கப் போறது இல்ல.பயப்படாத. நான் எங்கயும் போயிற மாட்டேன் .எனக்கு கணவன் தேவ இல்லாம இருக்கலாம் . ஆனா என் பிள்ளைக்கி அப்பன் தேவ. என் கோபத்தால பிள்ளை வாழ்க்கைய நான் கஷ்டப்படுத்த மாட்டேன். இதுக்கு அப்புறம் நாம ஒரு வீட்டில இருந்தாக் கூட நமக்குள்ள எந்த உறவும் இல்ல. இது தான் நான் உனக்கு குடுக்குற தண்டனை” என்று தீர்க்கமாகக் கூறி விட்டாள் அம்மா.

இனிமேலும் அவரிடம் வாக்குவாதம் செய்து, சண்டையிட்டு, அடி வாங்கி நிம்மதி இழப்பதை விட, அமைதியாகக் கடந்து சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவு செய்தாள் அம்மா.

மனதில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு, அப்பாவின் துணையோ ஆதரவோ தேவையில்லை என்று எண்ணத்தோடு, தன்னையும் என்னையும் பார்த்துக் கொண்டு, எப்போதும் அப்பாவின் அடிப்படைத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து தருவதை கடமையாகச் செய்யும் முடிவோடு அன்றிலிருந்து அம்மா வாழத் தொடங்கினார்.

இத்தனைக்கு அப்புறமும் கூட அப்பா கொஞ்சம் கூட திருந்தல. அதுக்கான முயற்சியும் எடுக்கல. இன்னும் சொல்லப் போன அவர் ஒரு மிருகமா மாறிட்டார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே இருந்த அந்த நெருக்கம் தேய்ந்து, ஒரு கட்டத்தில் அது சுத்தமாகவே இல்லாமல் போனது. இப்போதுகூட அம்மா தேநீர் போட்டுக் கொடுத்தால் அப்பா வாங்கிக் குடிப்பார், சாப்பாடு சமைத்துக் கொடுத்தால் வாங்கிச் சாப்பிடுவார்; ஆனால் அந்தத் தேநீர்க் கோப்பையையோ தட்டையோ அவர் எடுத்து வைக்க மாட்டார். அம்மாதான் அதையெல்லாம் செய்ய வேண்டும்.

அம்மா அதையெல்லாம் தன்னுடைய கடமை என்று நினைத்தாலும், ஒரு பெண்ணாகத் தனக்கென்று சுயமரியாதை இருப்பதையும் உணர்ந்து கொண்டாள்.

போகப் போக அம்மா ஆறுதலுக்காகக் கூட யார்கிட்டேயும் போய் புலம்பியது இல்லை.

ஒரே வீட்டுக்குள்ள இருக்கிற அம்மா அப்பா ஒருத்தருக்கொருத்தர் சரியா பேசிக்காம இருந்துட்டாங்க. அப்பாவால் உடலளவிலும் மனதளவிலும் துன்பங்களை சந்தித்த அம்மா என்னை தைரியமான பெண்ணாக வளர்க்க ஆரம்பித்தாள். சமூகத்தில் எவருக்கும் பயப்படாமல் அடிபணியாமல் எந்தச் சூழலையும் துணிவோடு எதிர்கொள்ளும் மனநிலையை எனக்குள் உருவாகச் செய்தாள் அம்மா.

விபத்துக்குப் பின் அவசர ஊர்தியின் உதவியோடு அம்மாவை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தேன். லட்சுமி வயது 38 கணவர் பெயர் கிருஷ்ணன், பணி சார்ந்த மருத்துவக் காப்பீடு தகவல்கள் மற்றும் அதற்குரிய பங்களிப்பு ஓய்வூதிய எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டு செந்தணல் என்ற என் பெயரை கையொப்பமிட்டு வந்து காத்திருக்கத் தொடங்கினேன்.

தகவல் சொல்லி மூன்று மணி நேரம் கழித்து இதோ இப்போது தான் அப்பா வந்தார்.

என்ன நடந்தது? மருத்துவமனையில் என்ன கூறினார்கள் உள்ளிட்ட தகவல்களை பார்மாலிடிக்காகக் கேட்டுத் தெரிந்து கொண்டார் அப்பா. நான் விபரமறிந்த நாள் முதல் இன்றுதான் முதன்முதலாக அவர் முகத்தில் சோகத்தைப் பார்த்தேன். அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். ஆறுதல் சொல்ல அவர் பக்கத்தில் சென்றபோது, “அம்மாவுக்கு எதுவும் ஆகாது” என்றார் . அதைச் சொல்லும் போது அவர் குரல் உடைந்திருந்தது.

முன்பொரு முறை அம்மாவிடம், “அப்பாவுக்கு உன் மேல பாசம் இருக்கு மா . அதை வெளிப்படுத்தத் தெரியல” என்றேன். “வெளிப்படுத்தாம அன்ப பொத்தி பொத்தி வைக்குறதுல யாருக்கு என்ன லாபம் பாப்பா” ? விடு இதெல்லாம் பேசி இனிமே என்ன ஆகப் போகுது ? என்றாள் அம்மா. அதெல்லாம் இப்போது என் நினைவில் ஊஞ்சலாடுகிறது.

அப்பா இதற்கு முன்பு இப்படி எல்லாம் கனிவோடு பேசியதே இல்லை.அப்பா மாறிட்டாரோ? அப்படி என்றால் இனிமேல் எல்லாம் சந்தோஷம் தான் என்று எனக்குத் தோன்றியது.என் மீது அப்பாவுக்கு கொஞ்சம் சாஃப்ட் கார்னர் உண்டு.

ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் அம்மாவை பரிசோதனை செய்து விட்டு பயப்பட எதுவும் இல்லை. அம்மா அபாயக் கட்டத்தை தாண்டி விட்டார். காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு குணமாகும் வரை கொஞ்ச காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்றார். தலையைக் குனிந்தவாறு கண்மூடி அமர்ந்திருந்த அப்பா அதைக் கேட்டு சட்டென்று தலை நிமிர்ந்து கண் திறந்து பார்த்தார்.

அம்மாவின் அறைக்குள் சென்று நான் அம்மாவின் தலைமாட்டிலும் , அப்பா கால்மாட்டிலும் அமர்ந்தோம். அம்மா இப்போது கண் விழித்திருந்தாள்.

அப்பாவின் முகத்தில் சந்தோஷக்கீற்று தெரிந்தது. அவரது கண்கள் அம்மாவின் விபரங்கள் எழுதிய அட்டையில் நிலைபெற்றிருந்தது.

00

ச.முகிலன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மார்க்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 “கரையேறும் கவிதைகள்” “நீயே ஒளி” என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு இதழ்களில் கவிதைகளையும் நூல் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *