ச.முகிலன்
“வாழைமரம் வந்துடுச்சா? கட்டியாச்சா? ப்ளக்ஸ் ஃப்ரேம் எடுத்துட்டு வந்தாச்சா? சமையல் சாமான் வாங்கப் போய்ட்டாங்களா? சமையல்காரங்க வந்துட்டாங்களா?”
இப்படி ஒருத்தர் ஒருத்தரைக் கேட்டுக்கிட்டே ஊரே பரபரப்பா இயங்கிக்கிட்டிருந்தது.
“அட, நம்ம கார்த்தி வீட்டு பால்காச்சி. நாம செய்யாம யாரு செய்வா? நம்ம ஊர்ல யாரு வீட்டுல என்ன விசேஷம்னாலும் மொத ஆளா வந்து நின்னு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சு, கடைசி ஆளாத்தான் கெளம்புவான்.”
“இப்படி ஒரு புள்ள நம்ம வயித்துல பொறக்கலயே!”
“இப்படி ஒருத்தன் நம்ம கூடப் பொறக்கலயே!”
“இப்படி ஒருத்தனுக்குக் கட்டிக்குடுக்க நம்ம வீட்டுல பொண்ணு இல்லயே!”
இப்படிச் சொல்லி ஆதங்கப்படாத ஆளே ஊர்ல இல்லை.
ஊர்ல இருக்கிற அவ்வளவு பேரோட அன்பையும் மரியாதையையும் பெறத் தகுதியானவனாத்தான் இருந்தான் கார்த்தி. அதனாலதான் அவன் வீட்டு பால்காச்சியை ஊரே திருவிழா மாதிரி கொண்டாடத் தயாராக இருந்தது.
கார்த்தி ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவனோட அப்பா படுக்கையில விழுந்துட்டார். ஆஸ்துமாவால அவதிப்பட்ட அம்மா, இரண்டு தங்கச்சிங்க, ஒரு தம்பி .குடும்பத்தோட மொத்தப் பாரமும் அவன் தோள்ல விழுந்துச்சு.
பள்ளிக்கூடம் போற வயசுலேயே விடுமுறை நாள்ல பட்டாசு ஆலைக்குப் போய் வேலை பார்த்தான். பின்னாடி படிப்பையே நிறுத்திட்டு முழுநேர வேலைக்குப் போனான். தன்னோட ஆசை, விருப்பம் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு தங்கச்சிங்களப் படிக்க வச்சான். அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சான். தம்பியையும் முன்னேத்தினான்.
சம்பாதிச்ச காசுல தனக்குன்னு எதுவும் பண்ணிக்கிட்டதில்லை. குடும்பத்துக்காகத்தான் செலவு பண்ணினான். சிக்கனமா வாழ்ந்து, பல வருஷ உழைப்புக்குப் பிறகு, இன்று ஊரே வியக்குற மாதிரி ஒரு வீட்டைக் கட்டியிருந்தான்.
அவன் வயசுல எல்லா வசதியும் இருந்தும் படிக்காம இருக்கிற பையங்களும், படிச்சு முடிச்சுட்டு வேலைக்குப் போகாம இருக்கிற பையங்களும் நிறைய இருந்தாங்க. ஆனா கார்த்தி அப்படியில்ல. பொறுப்பா இருந்தான். அதனாலதான் அவனை எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும்.
ஆனா அந்த “எல்லாரும்”ன்னு சொல்லுற வார்த்தைக்குள்ள கூட சில கண்ணுக்குத் தெரியாத கோடுகள் இருந்துச்சு. அதைக் கார்த்தி இதுவரைக்கும் கவனிச்சதில்லை.
விடிஞ்சா பால்காச்சி.
காலை எட்டு மணிக்கே மொத பந்தி நடக்கணும். அதனால விடியற்காலையிலேயே சமையல் வேலை ஜரூரா ஆரம்பிச்சிருச்சு. சமையல்காரங்களோட சேர்ந்து ஊர்க்காரங்களும் ஆளும் பேருமா நின்னு வேலை பாத்தாங்க. அடுப்பு புகையோட சேர்ந்து சந்தோஷமும் வீட்டைச் சுற்றி எழுந்துக்கிட்டிருந்தது.
சுடச்சுட சாப்பாடு தயாராச்சு. “குளிச்சுட்டு பால்காச்சில கலந்துட்டு வந்து சாப்பிடலாம்”னு சொல்லிட்டு எல்லாரும் வீட்டுக்குப் போனாங்க.
சமையல் வேலை நடந்துக்கிட்டிருந்த நேரத்துல, வெளியூர்ல இருந்து வந்த ஒருத்தன் சமையலுக்கு உதவி செஞ்சவங்களைப் பற்றி விசாரிச்சுக்கிட்டே இருந்தான்.
“யார்யாரு கை வச்சிருக்காங்க?”
“யாரெல்லாம் சமையலுக்கு நின்னாங்க?”
அப்படின்னு திரும்பத் திரும்ப கேட்டதை சிலர் கவனிச்சாங்க. ஆனா விழா பரபரப்புல யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கல.
காலை விடிஞ்சதும் ஊர்ப் பயலுக அம்பேத்கர் சிலைக்குப் போய் மாலை போட்டு மரியாதை செஞ்சுட்டு பால்காச்சி வீட்டுக்கு வந்தாங்க.
ஆளுங்க எல்லாம் வந்தாங்க. மொய் எழுதினாங்க.
ஆனா யாரும் சாப்பிடல.
வழக்கமா பந்தியில சாப்பிட்டதோட இல்லாம வீட்டுக்குச் சட்டிச் சோறும் எடுத்துட்டுப் போவாங்க. இன்னைக்கு சாப்பிடவும் இல்ல. சட்டிச் சோறும் எடுக்கல. மொய் மட்டும் எழுதுனாங்க.
கார்த்தி மேல உயிரா பிரியமா இருக்குறவங்கதான். இன்னைக்கு காலைல இருந்து தன் வீட்டு விசேஷம்னு நினைச்சு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சவங்கதான்.
ஆனா ஏன் இப்படி நடந்துக்குறாங்கன்னு கார்த்திக்கே புரியல.
“அப்படி என்ன திடீர் சடவு?”
“அதுவும் சோத்துமேல கோபத்தைக் காட்டுற அளவுக்கு?”
பொங்கி ரெடியா இருந்த சோறு அப்படியே இருந்துச்சு. சட்டியிலிருந்து இலைக்கே வராம நின்னுச்சு.
மொத பந்தியில சிலர் மட்டும் சாப்பிடாம எழுந்தாங்க.
அடுத்த பந்தியில பாதிப் பேர் உட்காரவே இல்ல.
மூணாவது பந்திக்குள்ள விஷயம் ஊரெல்லாம் பரவியிருச்சு.
நண்பர்களெல்லாம் “விடுறா… பாத்துக்கலாம்…”ன்னு சமாதானப்படுத்த முயற்சி பண்ணாங்க.
அம்மாவைப் பாத்த உடனே கார்த்தி உடைஞ்சு அழ ஆரம்பிச்சுட்டான்.
“அழாத சாமி…”ன்னு அவன் அம்மா அவன் கண்ணைத் துடைச்சு விட்டாங்க.
வெளியூர் சொந்தபந்தம் சாப்பிட்டதுப் போக இன்னும் மிச்சமா இருந்த சாப்பாட்டை என்ன பண்றதுன்னு தெரியாம மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டிருந்தான் கார்த்தி.
இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வீடு கட்டுன சந்தோஷத்தை, ஊர் மக்கள் செஞ்ச செயல் ஒரு நொடில கலைச்சுப் போட்டிருச்சு.
வாடிப்போன முகத்தோட வாசற்படியில் உக்காந்திருந்த கார்த்திய பாத்து தொங்கு தொங்குனு ஓடி வந்தான் சேகர்.
“டேய் கார்த்தி… சமையலுக்கு உதவிக்கு நின்ன அந்த… மகன்தான் இதுக்கெல்லாம் காரணம்.”
“என்னடா சொல்ற?”
“நாம சமையலுக்கு கூப்பிட்ட ஆளுக வேற ஆளுகளாம். இவனுக அவங்கள விட உசத்தியா பொறந்துட்டாங்களாம். அதனால அவங்க கைப்பட்ட சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களாம்.”
மூச்சிரைக்க சொல்லி முடிச்சான் சேகர்.
கார்த்திக்குக் கண்கள் இருண்டுபோச்சு.
அந்த வீட்டோட சுவர்களைக் கட்ட அவன் கைகள்ல இருந்த தோல் தேய்ற அளவுக்கு உழைச்சிருந்தான்.
ஆனா அந்த வீட்டுக்குள்ள வந்து சாப்பிடுற அளவுக்கு மனசுகளை கட்டுறது மட்டும் அவனால் முடியல.
அவன் கட்டின வீடு உயரமா நின்னுச்சு.
ஆனா மனுசங்களுக்குள்ள நின்ன சுவர்கள் அதைவிட உயரமா இருந்துச்சு.
உக்காந்திருந்த போதும் கால்கள் நழுவி பாதாளத்துக்குள்ள இழுத்துட்டுப் போற மாதிரி அவனுக்குத் தோணிச்சு.
இத்தனை வருஷமா தன்னோட உழைப்பால எல்லாரோட மனசையும் வென்றுட்டோம்னு நினைச்சிருந்தவன், சில மனசுகள் இன்னும் திறக்கப்படாம பூட்டியே கிடக்குதுன்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டான்.
வீடு கட்டுறதுக்கு செங்கல்லும் சிமெண்டும் போதும். ஆனா மனுசங்களை இணைக்க அதெல்லாம் போதாது.
அந்த உண்மையை கார்த்தி அன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டான்.
000

ச.முகிலன்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மார்க்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டு பல்வேறு இதழ்களில் கவிதைகளையும், நூல் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.”கரையேறும் கவிதைகள்” மற்றும் “நீயே ஒளி” ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். பெண்களின் நிலை, இயற்கை, பகுத்தறிவு, மனிதம், சாதியம் மற்றும் சமூக அவலங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படைப்புகளை எழுதி வருகிறார்.


அருமையான கதை தோழர் சாதிய உணர்வுகளை செருப்பால் அடித்துள்ளார்