ரா.சண்முகவள்ளி

​”காலங்காத்தால இதுகள தொறந்துவிடாதனு எத்தனவாட்டி சொல்லுறது? பாரு கூப்பாடு போடுது, மனுஷன் நிம்மதியா தூங்க முடியுதா இந்த வீட்டுல?”

​”இப்ப நிம்மதிக்கு என்ன கொறவு கண்டீரா? சூரியன் சுள்ளுனு அடிக்குது, இப்பவும் போர்வையப் போத்திக்கிட்டு தூங்கணுமாக்கும்? எந்திரிச்சு சோலியப் பாக்கப் போவீரா, அதைவுட்டுட்டு அதை ஏன் தொறந்த, இதை ஏன் மூடுனேனு காலங்காத்தாலயே சண்டைக்கு நின்னுகிட்டு,” என்றபடியே அடுப்பைப் பற்றவைத்து உலை வைக்க ஆரம்பித்தாள் வளர்மதி.

​”என்னக்கா, காலைலயே எங்கண்ணனுக்கு அர்ச்சனை வைக்கலைனா உனக்கு பொழுது விடியாதே?” என்றபடியே வாசலில் நின்று குரல் கொடுத்தாள் செண்பகம்.

​”ஆமாடி, உங்கண்ணன் தான் எனக்கு சாமி, அதான் அர்ச்சனை வைக்கேன். நீ எதுக்கு எங்க வீட்ட வேடிக்கை பாக்குறவ?”

​”ஆமா, எனக்கு வேற சோலி இல்ல பாரு உங்க வீட்டுல வேடிக்கை பாக்க! முட்டை வேணும், அதான் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்.”

​”எத்தனை முட்டை வேணும்?”

​”பத்து முட்டை குடுக்கா…”

​”சரி இரு, எடுத்துட்டு வாரேன்,” என்றபடியே வீட்டிற்குள் நுழைந்தாள் வளர்மதி.

​”பத்து முட்டை இருநூறு ரூபாய், பழைய பாக்கி ஐம்பது இருக்கு, அதையும் சேர்த்து இருநூத்தம்பது,” என்றபடியே முட்டையைச் செண்பகத்திடம் கொடுத்தாள் வளர்மதி.

​”நீ கேப்பேனு தெரியும், பழைய பாக்கியும் சேர்த்துத்தான் கொண்டாந்தேன். இந்தாக்கா, நான் வாரேன்.”

​”ம்ம்…”

​”ஏன்யா, விடிஞ்சு நேரம் என்னாகுது, இன்னும் படுத்துட்டிருக்க? எந்திரியா…”

​”எந்திரிக்கேன்டி, கத்தாத,” என்றபடியே எழுந்தான் சுடலைமுத்து.

​சுடலைமுத்துக்கும் வளர்மதிக்கும் கல்யாணம் ஆகி முப்பது வருஷமாச்சு. அவனுக்குனு நிரந்தர வேலை எதுவும் கிடையாது. கூப்பிட்ட வேலைக்குப் போவான்; அதுவும் அவனுக்கு மனசு இருந்தாத்தான், இல்லைனா அதுவும் கிடையாது.

​சுடலைமுத்துவின் அப்பா நல்லகண்ணு கூத்து கட்டுவாரு. திருவிழா சமயத்துல ஊர் ஊராப் போயி கூத்து கட்டுவாரு. அவரு போடாத வேஷமே கிடையாது. என்ன வேஷம் போட்டாலும் அந்த கதாபாத்திரமாவே வாழ ஆரம்பிச்சிடுவாரு, பாக்குறவங்களுக்கு மெய்சிலிர்த்திடும். ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்கிற மாதிரி, சுடலை அவன் அப்பனையே மிஞ்சிட்டான் கூத்து கட்டுறதுல.

​ஒரு சமயம் பூலாங்குடியிருப்புல மாரியம்மன் கோவில் திருவிழால மகாபாரதம் கூத்து போட்டாங்க. அதுல துச்சாதனனா வந்து திரௌபதியைத் துகில் உரிஞ்சான். அதுக்கு அடுத்த மாசமே மேலப்பாவூர் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழால, அதே மகாபாரதக் கூத்துல கர்ணனா வந்து துரியோதனனுக்காகத் தன் உயிரைக் கொடுத்தான். பார்த்தவங்க யாரும் இது ரெண்டும் ஒரே ஆளுன்னு சொன்னா நம்பக்கூட மாட்டாங்க; அப்படி ஒரு நடிப்பு அவனுடையது. கர்ணனா அவன் செத்து விழும்போது சுத்தியிருந்த சனம் பூராவும் அழுதுடுச்சு.

​கூத்துதான் சுடலைக்கு எல்லாமே. சித்திரை மாதம் தவிர வேற எப்பவும் கூத்து நடக்காது. அதனால மத்த மாசம் கூப்பிட்ட வேலைக்குப் போவான், ஆனா சித்திரையில கோடி ரூபாய் கொடுத்தாலும் கூத்தை விட்டுக் கொடுக்க மாட்டான் சுடலை.

​இப்படிப் பொழப்பில்லாம சுத்துனதால ஊர்ல ஒருத்தனும் பொண்ணு கொடுக்க முன்வரல. கூத்து கட்டப் போன இடத்துலதான் வளரைக் கண்டான். ‘கண்டவுடன் காதல்’னு சொல்லுவாங்களே, அப்படித்தான் சுடலைக்கு வளரைப் பார்த்ததும் ஆசை வந்துச்சு. வளருக்கும் சுடலையைப் பிடிச்சுப்போக, கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க ரெண்டு பேரும். அம்மா, அப்பா இல்லாத பெண் வளரு; அவ ஆச்சிதான் அவளை வளர்த்து ஆளாக்கினா. ‘கட்டையில போறதுக்குள்ள ஒருத்தன் கைல பிடிச்சுக்கொடுத்துடணும்’னு தவிச்சப்ப, சுடலை வந்து பெண் கேட்டான். ‘சரி’னு அவன் கைல பிடிச்சுக்கொடுத்த மகராசி, ரெண்டு வருஷத்துலயே கண்ணை மூடிட்டா.

​”ஏன்டி, பிள்ளைங்க எங்கடி?” என்றபடியே பல் தேய்க்க ஆரம்பித்தான்.

​”அய்யோ, ரொம்பத்தான் அக்கறை வழியுது!”

​”ஏன், அக்கறையில என்ன குறை கண்டவ?”

​”குறை சொல்ல ஆரம்பிச்சா, பின்னங்காலு பொடனியில அடிக்க ஓடிடுவ… பரவாயில்லையா?”

​”என்னடி எகத்தாளமா?”

​”ஆமா, அப்படித்தான் வச்சுக்கோயேன்.”

​”வர வர வாய்க்கூடுது புள்ள உனக்கு!”

​”உண்மையைச் சொன்னா வாய்க்கூடுது, குறையுதுனு சொல்லுவியே!”

​”ஆரம்பிச்சிட்டியா? இனி மனுஷன் நிம்மதியா ஒருவேளை சோறு திண்ண மாதிரிதான்,” என்றபடியே முகம் கழுவத் தண்ணீர் மொண்டான் தண்ணீர் தொட்டியில். கோழியின் எச்சம் அதில் கிடப்பதைக் கண்டவன், கையில் இருந்த வட்டவையைத் தூக்கி எறிந்தான்.

​பதறியபடியே அடுப்பாங்கரைக்குள் இருந்து ஓடிவந்தாள் வளரு.

​”உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், இந்தச் சனியன்களை ஒழிச்சுக்கட்டுனு! பாரு, மூஞ்சு கழுவுற தண்ணியில பேண்டு வச்சிருக்கு. மனுஷன் எப்படி இதுல முகத்தைக் கழுவ முடியும்?”

​”அதுக்கு இப்படித்தான் எறியணுமாக்கும்? என்கிட்ட சொன்னா வேற தண்ணி தரப்போறேன்,” என்றபடியே சுடலை தூக்கி எறிந்த வட்டவையை எடுத்தாள் வளரு. ஏற்கனவே நெளிந்து இருந்த காரணத்தால் தான் அடுப்பாங்கரையில் இருந்து தண்ணீர் தொட்டிக்கு இடமாறுதலானது வட்டவை. சுடலை தூக்கி எறிந்ததில் முற்றிலும் நெளிந்து, இனி எதற்கும் பயன்படாமல் போக, தூக்கிப் பரணில் வீசப்பட்டது.

​”வீட்டுக்குள்ள நிம்மதியா இருக்க முடியுதா? எப்பப் பாரு இது கூவுற சத்தமும் பேல்ற நாத்தமும்… வீடே கவுச்சி வாடை அடிக்குது. முதல்ல இதைத் தலையைச் சுத்தி எங்கேயாவது கொண்டுபோய் விட்டுட்டு வா.”

​”அதுசரி, இதுகளைக் கொண்டுபோய் விட்டுட்டு வந்தா சோத்துக்கு என்ன பண்ணுறது?” என்றபடியே சருவச் சட்டியில் பழைய சாதமும், தொட்டுக்கொள்ளச் சின்ன வெங்காயமும் கொண்டுவந்து திண்ணையில் வைத்தாள்.

​”இன்னைக்கும் பழையதா?” என முனகியபடியே கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தான் சுடலை.

​”ஆமா, நீங்க கொண்டுவந்து கொட்டுன காசுக்கு ஆட்டுக்கறியும் கோழிக்கறியுமா ஆக்கிப் போட முடியும்!”

​”ஆனா ஊனா இதைச் சொல்லி மனுஷன் வாயை அடைச்சுப்புடு,” என்றபடியே சருவச் சட்டியில் இருந்த கஞ்சி மொத்தத்தையும் குடித்துவிட்டு வெளியில் சென்றான் சுடலை.

​”உன்னைப் பார்க்கத்தான் நான் வந்துகிட்டு இருந்தேன், அதுக்குள்ள கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி நீயே வந்துட்ட,” என்றபடியே கண்ணாயிரம் சுடலையை வழிமறித்தான்.

​”என்ன, எதுக்குடே என்னைத் தேடுறவன்?”

​”அட, அது ஒன்னுமில்லப்பா. நம்ம கொட்டாரங்கரையில கூத்து போடப்போறாங்க, அதான் உங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம்னு வந்தேன்.”

​”எப்ப போடப்போறாங்க?”

​”நாளைக்குத்தான் கூத்து ஆரம்பமாகுது. நாம இன்னைக்கு ராத்திரியே கிளம்பணும்.”

​”என்னய்யா இப்படித் திடுதிடுப்புனு வந்து சொன்னா எப்படி?”

​”நான் என்னப்பா பண்ணட்டும், எனக்கே இப்பத்தான் தகவல் வந்துச்சு. அதான் உடனே உன்னைப் பார்க்கணும்னு ஓடியாந்தேன்.”

​”அப்புறம் சொல்ல மறந்துட்டேன், அங்கே தங்குறதுக்கும் திங்குறதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. போக்குவரத்துச் செலவு மட்டும் நம்முடையதாம், அதை நாமதான் பாத்துக்கணுமாம். நீ அதுக்கு மட்டும் ரெடி பண்ணிட்டு வா, சரியா?”

​”என்னடே இப்படிச் சொல்லுற? கையில பத்து பைசா கிடையாது. இப்பப் போயி துட்டோட வான்னா நான் எங்கே போவேன் துட்டுக்கு?”

​”நான் என்னப்பா பண்ண? அது ஏதோ தன்னார்வத் தொண்டு நிறுவனமாம், அவங்களால இவ்வளவுதான் முடியும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேல நாம என்ன பண்ண முடியும்? இப்ப இருக்குற நிலைமையில கூத்து கட்டக் கூப்பிடுறதே பெருசு, இதுல அதுக்குத் துட்டு வேணும், இதுக்குத் துட்டு வேணும்னு கேட்டா, ‘நீயும் வேண்டாம், உன் கூத்தும் வேண்டாம்’னு ஓடிட மாட்டாங்களா? எப்படியாவது பஸ் சார்ஜை மட்டும் ரெடி பண்ணு சுடலை. நேரமாகுது, இருட்டுறதுக்குள்ள நாம கிளம்பணும். நானும் போறதுக்கு எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்,” என்றபடியே கண்ணாயிரம் சென்றான்.

​’இப்ப என்ன பண்ணுறது? இப்பத்தான் அவகிட்ட கோழியை ஒழிச்சுக்கட்டச் சொல்லிச் சண்டை பிடிச்சிட்டு வந்தேன். மறுபடியும் போயி கூத்து கட்டப் போகணும், செலவுக்குக் காசு வேணும்னு கேட்டா கிழிச்சுப்புடுவாளே பாவிமவ!’

​’எதைப்பத்தியும் யோசிக்காத சுடலை, நமக்கு வீரியம் பெருசா, காரியம் பெருசான்னா காரியம்தான் பெருசு. அதனால என்ன சொன்னாலும் கண்டுக்காம காரியம் சாதிச்சிடணும்,’ என்றபடி தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

​”என்னய்யா, போன வேகத்துல வந்துட்ட?”

​”அது ஒன்னுமில்ல புள்ள, உங்கிட்ட கத்திட்டுப் போனேனா, மனசு கேட்கல. அதான் ஒரு எட்டு உன்னைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

​”அடிசக்க! எம்புருஷனுக்கு என் மேல எம்புட்டு பாசம்!”

​”என்ன புள்ள, கிண்டல் பண்ணுறியா? அதெல்லாம் உள்ளூறப் பாசம் எல்லாம் இருக்கத்தான் செய்யுது, நான் தான் காட்டிக்கிறது இல்லையாக்கும்.”

​”ம்க்கும், நீ என்ன புதுசாவா கத்துற நான் வருத்தப்பட? உன்னைக் கட்டுன நாள்ல இருந்து இதுதானே எம்பாடா இருக்கு!”

​”என்னடி, நான் என்ன உன்னை அப்படியா கொடுமைப்படுத்துறேன்? ஏதோ கோவத்துல நாலு வார்த்தை பேசிட்டேன், அதுக்குப்போய் சலிச்சுக்கிறவ.”

​”சரியா, நான் சலிச்சுக்கல போதுமா? நீ வந்த விஷயத்தைச் சொல்லு.”

​”அது ஒன்னுமில்ல புள்ள, கொட்டாரங்கரையில கூத்து கட்டுறாங்களாம்.”

​”அதுக்கு என்ன இப்ப?”

​”இல்லடி, தங்குறதுக்கு, திங்குறதுக்கு எல்லாம் அவுக ஏற்பாடு பண்ணிருவாங்களாம். ஆனா போற வர செலவு நம்முடையதுதானாம்.”

​”அதான பாத்தேன், எலி ஏன் அம்மணமா ஓடுதுனு! காரியம் இல்லாம நீ பல்லக் காட்ட மாட்டியே!”

​”அடியேய், என்னடி ரொம்பத்தான் பண்ணுறவ? நான் என்ன மொத்தத்துக்குமா கேட்கிறேன்? போற வர செலவுக்குத்தானே கேட்கிறேன். நீ டீ குடிக்கக் கூடக் காசு கொடுக்க வேண்டாம், பஸ் சார்ஜுக்கு மட்டும் குடு புள்ள போதும்.”

​”நீ என்னய்யா கொடுத்து வச்ச மாதிரி கேட்கிற?”

​”காலைலதான புள்ள முட்டை வித்த காசை வாங்குன, அதுல இருந்து தான் புள்ள.”

​”எப்படி, எப்படி? கோழி பேண்டா உனக்கு நாறுது, ஆனா முட்டை வித்த காசு மட்டும் மணக்குதோ?”

​”நான் எப்ப அப்படிச் சொன்னேன்? மூஞ்சு கழுவுற தண்ணியில அப்படிப் பண்ணா கோவம் வராதா, அதான் சொன்னேன்.”

​”பேசுறதெல்லாம் பேசிட்டு நல்லாச் சமாளிக்கிறியாக்கும்! இங்க பாருய்யா, அந்தக் காசெல்லாம் கொடுக்க முடியாது. பெரியவனுக்கு யூனிஃபார்ம் கிழிஞ்சிட்டு, ஒன்னு புதுசா எடுத்துத் தைக்கணும், அதுக்குத் துட்டு வேணும். நீ வேற ஏதாவது பண்ணிக்கோ.”

​”என்னடி நீயே இப்படிச் சொன்னா நான் எப்படி? நான் யார்கிட்ட போய்க் கேட்க முடியும்? இன்னைக்கு ராத்திரியே நான் கிளம்பணுமாம், ஏதாச்சும் பார்த்துப் பண்ணு புள்ள.”

​”என்னய்யா நீ, பிள்ளைக்கு வேணுங்கிறேன், மறுபடி மறுபடி அதையே புடிச்சுத் தொங்குற? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறேன்?”

​”சரி புள்ள, காசும் வேணாம் ஒன்னும் வேணாம், நான் கூத்து கட்டப் போகல, போதுமா?” என்றபடியே துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினான் சுடலை.

​மாலை நேரம் பள்ளி முடிந்து சுடலையின் இரண்டு குழந்தைகளும் வீட்டுக்கு வந்தனர். ‘அம்மா, அப்பா எங்கம்மா, ஆளையே காணோம்?’

‘காலைல வெளிய போன மனுஷன் மதியம் சாப்பாட்டுக்குக் கூட வரலையே, எங்கதான் போனாரோ தெரியலை,’ என்றபடியே குழந்தைகளுக்குக் காபி போட்டுக் கொடுத்தாள் வளரு.

​மாலை நேரம் வீட்டுக்கு வந்த சுடலை வாசலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான்.

​”அப்படி நான் என்னத்தைச் சொல்லிப்புட்டேனு இப்படி மூஞ்சைத் தூக்கிட்டுப் போறீங்க? மதியம் சாப்பாட்டுக்குக் கூட வீட்டுக்கு வரல. வீட்டு நிலவரத்தைச் சொல்லக் கூடாதாக்கும்? உடனே கோவப்பட்டா எப்படி?”

​”அட, யாருடி இவ? நான் கோவப்பட்டுப் போனேனு யாரு சொன்னா?”

​”அப்புறம் ஏன் மதியம் வீட்டுக்கு வரல?”

​”புளிய மரத்தடியில காத்தாடப் படுத்தேன், நல்லாக் கண் அசந்தது, அப்படியே தூங்கிட்டேன் போதுமா? இதுக்குப்போய் இந்த வாரத்து வாரவ…”

​”உம்ம பத்தி எனக்குத் தெரியாதாக்கும்? வா, வந்து சாப்புடு, காலைல சாப்டது,” என்றபடியே அடுப்பாங்கரைக்குள் நுழைந்தாள் வளரு. கையில் ஐந்நூறு ரூபாய் பணத்துடன் வந்தவள், அதைச் சுடலையின் கையில் திணித்தாள்.

​”வேண்டாம், பிள்ளைக்குனு வச்சுகிட்டு இருக்கிற காசை எதுக்கு இப்ப எடுக்க?”

​”அதெல்லாம் எனக்குத் தெரியும். மேல வீட்டு மல்லியாக்கா பதினைந்து முட்டை கேட்டிருக்கா, அவகிட்ட முட்டையைக் கொடுத்து நான் காசை வாங்கிக்கிறேன். நீ ஒழுங்கா கூத்தை முடிச்சு வீடு வந்து சேரப் பாரு. அப்புறம், அதுல ஐந்நூறு ரூபாய் இருக்கு, காபி தண்ணி வேணும்னா குடிச்சுக்கோ, வயித்துக்கு வஞ்சம் பண்ணி ஒன்னும் காசு சேர்க்க வேண்டாம்.”

​காசோடு சேர்த்தபடி வளரின் கையைப் பிடித்தபடி, “எந்தச் சாமி கொடுத்த வரமோ நான் உன்னைக் கட்டுனது!”

​”கையை விடுய்யா, பிள்ளைங்க இருக்கு பாத்துடப் போகுது.”

​”பார்த்தா என்ன புள்ள? அடிச்சுக்கிறதைப் பார்க்கிற மாதிரி அணைச்சுக்கிறதையும் பார்க்கட்டும். அப்பத்தான் நாளைக்குக் குடும்பம் நடத்துறது எப்படினு அதுகளுக்கும் தெரியும்.”

​”அப்பனாட்டமா பேசுற பேச்சைப் பாரு! போய்யா, போயி கிளம்ப ஏற்பாடு பண்ணு. நான் சோத்தை எடுத்து வைக்கிறேன், தின்னுட்டுப் போ, அங்கே எப்ப என்ன கொடுப்பாங்களோ,” என்றபடியே அடுப்பாங்கரைக்குள் போனாள் வளர்.

​சுடலை அமர்ந்திருந்த கட்டிலைச் சில கோழிகள் கொக்கரித்தபடி சுற்றிச் சுற்றி வந்தன. கோழிகளைக் கண்ட சுடலை மெலிதாகப் புன்னகைத்தான். சுடலையின் கூத்தைக் காத்த அந்தச் சேவல்கள் அவனுக்கு அப்போது காவல் தெய்வங்களாகத் தோன்றி நகர்ந்துகொண்டிருந்தன

000

 ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *