–ரவி அல்லது.
மலையின் ஒரு சமவெளியில் இருந்த அந்த ஊரில் கொஞ்சம் பணக்கார குடும்பங்களும் அவர்களுக்கு வேலைகள் செய்ய கொஞ்சம் குடியானவர்களும் இருந்தார்கள்.
பணக்காரர்கள் என்றால் நீங்கள் நினைக்கிற மாதிரியான பணக்காரர்கள் இல்லை. அவர்களுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் விளைவதால் அவர்கள் மூன்று வேலை சாப்பிட்டார்கள்.
குடியானவர்கள் என்றால் நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. வேலை இல்லை என்றால் மலைக்குச் சென்று கிழங்கு புடுங்கிதான் பசியாற வேண்டும்.
அந்தக் குடியானவர்கள் குடும்பத்தில் அமுதா பிறந்திருந்தாள். அவளுக்கு பள்ளியை விட்டு வந்து வீட்டுப்பாடங்கள் செய்ததும் தன் ஆட்டுக்குட்டியை மேய்க்க காட்டுக்கு ஓட்டிச் செல்வதுதான் வழக்கமான வேலை.
இதுபோல அங்கு பல வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்கு வராமலையே ஆடு,மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள். அமுதாவும் அவள் வகுப்பாசிரியையும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் இவர்களைப் பள்ளிக்கு அழைத்துவர முடியவில்லை.
அமுதாவொன்றும் பணக்கார வீட்டுப் பிள்ளை இல்லை . அவள் அப்பா நகரத்தில் ஒரு வீட்டிற்கு நீண்ட காலமாக தேன் கொடுக்கப்போவார். அந்த வீட்டுப் பிள்ளைகள் பெரிய பள்ளிக்கூடங்களில் படித்து நாகரீகமாக இருப்பதைப் பார்த்து அமுதாவையும் அதேபோல படிக்க வைக்க ஆசைப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
அந்த ஊர் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டெல்லாம் திரியவில்லை.தொலைவாக இருக்கும் பள்ளிக்கு போவது அவர்களுக்கு சிரமமாக இருந்தது.
அமுதாவின் ஆசைப்படி ஆடு மாடு மேய்ப்பவர்கள் அவளிடம் படிக்கக் கற்றுக்கொண்டார்கள். இவளைப் போல இல்லை என்றாலும் எழுத்துக்கூட்டிப் படித்தார்கள். ஒரு நாள் ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த அமுதாவின் தந்தை அமுதாவைச் சுற்றி எல்லோரும் அமர்ந்து படிப்பதைப் பார்த்து தலைகால் புரியாமல் ஆடினார். தன் பிள்ளை கலெக்டரானதுபோல சந்தோசப்பட்டார். அதன் பிறகு வேலை பார்க்கும் இடங்களில் இதை அவர் சொல்லாமல் ஒரு நாளும் விட்டதில்லை.
ஒரு நாள் வெள்ளாமையை யானைகள் வந்து அழித்துவிடுகிறது என்று பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து முள் வேலியைப் போட்டார்கள். வெளியூர் ஆட்கள் சாமான்களை ஏற்றி வந்து வேலியைப் போட்டுவிட்டு போனார்கள். பார்க்க வேலி அழகாக இருந்தது.
அமுதாவுக்கு ஏனோ வேலிகள் போட்டது பிடிக்கவில்லை. ஒரு நாள் டீச்சரிடம் கேட்டாள். “தாத்தா, பாட்டி அவுங்க தாத்தா, பாட்டி அவுங்களோட தாத்தா ,பாட்டி எல்லாம் இப்படி வேலியப் போட்டா வாழ்ந்தாங்க டீச்சர்.’
டீச்சர் யோசித்து விட்டு சொன்னார்.
“தேவைக்கு அதிகமாக வசதியாக வாழனும்ன்னு மனிதன் ஆசைப்படும் போது மற்றவைகளைப்பற்றி மனிதன் எப்பொழுதும் கவலைப்படமாட்டான்.” என்றார்.
அமுதாவிற்கு டீச்சர் சொன்னது புரியவில்லை.
அமுதாவிற்கு யானைகள் மீது அதிக பாசம். அவள் வீட்டின் சுவரில் நோட்டுப் புத்தகங்களில் யானையின் படங்களை வரைந்து வைத்திருப்பாள். ஓவியப் பயிற்சி கொடுத்தால் அவளால் சிறந்த ஓவியராக முடியும் என்று டீச்சர் அடிக்கடி சொல்வார்கள். இதை சொல்லும்பொழுது அவர்களே மூச்சை இழுத்து விடுவார்கள்.அதற்கு இரண்டு பேருக்குமே அர்த்தம் புரியும்.
இவர்களுக்கு முன்பு இங்கு வேலை பார்த்தவர்கள் மாதத்தில் பத்து நாட்கள் இங்கு வருவதே பெரிய விசயம். யாராவது இதை புகார் செய்தால் அவர்களும் இங்கு வராமல் போய்விடுவார்கள் என்பதால் இதுபற்றி இங்கு யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. நேர்மையாக சொல்வதென்றால் காட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
அதனால்தான் அமுதா ‘நீங்களே எல்லா வகுப்பு பாடத்தையும் இங்கிருந்துப் போறதுக்குள்ள சொல்லிக்கொடுத்திருங்க டீச்சர்’என்றாள் ஒரு முறை. அவர்களும் சிரித்துக்கொண்டே அதைக் கடந்துவிடாமல் நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். இப்பொழுது அமுதாவால் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி அதிக மதிப்பெண்கள் வாங்க முடியாவிட்டாலும் அவளால் தேர்ச்சி அடைந்துவிட முடியும்.
இந்தளவுக்கு படித்திருப்பதால் ஊரில் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுக்கு தனது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு கொட்டகைப் போட்டு வகுப்பில் எடுப்பது போல எடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதெல்லாம் கனவில் நடந்தால்தான் உண்டு. மலை கிராமங்களில் இலவச பள்ளி ஆரம்பிக்கவேண்டும் என்பது போன்ற பல திட்டங்கள் வைத்திருந்தாள். ‘நான்காம் வகுப்பு படிக்கும் உன்னை நினைத்து நான் பலமுறை பொறாமைப்பட்டிருக்கிறேன்.’ என்பார்கள் லீமா டீச்சர்.
அமுதாவால் பள்ளி விடுமுறை நாட்களில் லீமா டீச்சரை பார்க்க முடியாமல் போகும் போது வீட்டில் அழுது கொண்டு இருப்பாள். அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்குமோ என்று அவளின் அம்மா பல முறை கவலைப்பட்டு இருக்கிறார்.
ஒரு நாள் அமுதாவின் அப்பாவும் அம்மாவும் நகரத்துக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் ஊருக்கு வருவதற்கு ஒரு பேருந்து தான் இருக்கிறது. அதிலிருந்து இறங்கி ஐந்து மைல் நடந்து வரவேண்டும். அடிக்கடி அந்தப் பேருந்தும் மக்கர் செய்தால் அதோ கெதிதான். அவர்கள் பேருந்து நிலையத்தில் தூங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் தான் ஊருக்கு வரமுடியும். சில சமயம் படுத்திருக்கும் போது காவல் அதிகாரிகள் சந்தேகப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுவதும் நடந்திருக்கிறது. ஏழை இரவுக்கு ஒண்டிக் கிடக்க பேருந்து நிலையமாக இருந்தால் என்ன காவல் நிலையமாக இருந்தால் என்ன என்று அவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அவர்கள் வீட்டிற்கு வரவில்லை.

அமுதா இரவு காண்டா விளக்கில் யானையின் ஓவியத்தை முழு பக்கம் வரைந்து லீமா டீச்சர் கொடுத்த வண்ணமடிக்கும் பென்சிலில் நிதானமாக வண்ணம் கொடுத்தாள். வண்ணத்தில் யானை மெருகேற, பார்க்க அழகாக மாறிக் கொண்டே இருந்தது. தும்பிக்கையின் முனையில் வண்ணமிடும்போது தூங்கிப்போனாள்.
அவள் கனவில் அந்த யானை வந்தது. அது எப்படி அந்த குடிசைக்குள் நுழைந்தது என்று அவளுக்கு தெரியவில்லை. அது அவளை தும்பிக்கையால் தூக்கி நெற்றியில் குப்புற படுக்க வைத்து தும்பிக்கையால் முதுகில் அழுத்திப் பிடித்திருந்தது.
அவளுக்கு அதன் தோல் சொற சொறப்பு பனையோலைப் பாயைப் போல அழுத்தியது. அவள் முதுகில் தும்பிக்கையால் அழுத்திப் பிடித்திருந்தது ஈரமாக பிசுபிசுப்பாக இருந்தது. அவள் அப்படியேப் படுத்திருந்தாள்.
மக்கள் கூச்சலிட்டபடி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு அப்படியே படுத்துக் கிடப்பது பிடித்திருந்தது. அதனால் அவள் கண் திறக்காமல் படுத்திருந்தாள்.
வெல்லாமை செய்திருந்ததில் எப்படியோ தீப்பிடித்து எரிந்து போயிருந்தது. அமுதா வீட்டு குடிசை வயல்களுக்கு பக்கத்தில் இருந்ததால் அதில் தீப்பிடித்து எரிந்திருந்தது. யானை அமுதாவை தூக்கிக்கொண்டு வரும்போது முள் வேலியில் சிக்கி நெருப்பால் கருகி இறந்து இருந்தது. அது இறந்தாலும் முன் கால்கள் இரண்டையும் உயர்த்திப் பின் கால்களில் உட்கார்ந்தபடி, அமுதாவை நெற்றியில் சுமந்த வண்ணம் கால்களில் கம்பிகளால் பின்னியபடி இறந்து இருந்தது.
ஊர்க்காரர்கள் அமுதாவும் இறந்துபோனதாக நினைத்தார்கள். நெருப்பு இருக்கும் என்று அருகில் செல்லத் தயங்கினார்கள். துணிச்சலான இளைஞர் ஒருவர் அமுதாவை தூக்கியதும் யானைக் கீழே சரிந்தது.
அமுதாவிற்கு கனவு இல்லை என்று புரிவதற்கு தாமதமானது.
மரத்தால் செய்த உயரத்தில் இருந்த தண்ணீர் டேங்க் எரிந்து கீழே விழுந்ததில் அமுதா வீட்டில் பற்றிய தீ அணைந்ததால் ஊர்க் குடிசைகள் தப்பியது.
ஊர்க்காரர்கள் அமுதா குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுப்பது என்றும் அதற்குப் பக்கத்தில் பந்தல் போட்டு அமுதாவைப் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கச் சொல்வது என்றும் முடிவு செய்தார்கள்.
பாட்டன் பூட்டன் தலைமுறையில் வெல்லாமைக்கு வேலிகள் போடாமல் தானே வாழ்ந்தார்கள். அதுபோல தாங்களும் வாழ்வோம் என்று முடிவு செய்தார்கள்.
அமுதாவிற்கு நடப்பது எல்லாம் வியப்பாக இருந்தது. அவள் பந்தலில் உட்கார்ந்தபடி வேறொரு கனவு கண்டு கொண்டு இருந்தாள். கண்கள் விழித்திருந்தது. அவளால் சாத்தியப்படுத்திவிட முடியும் என்று மேலதிகமாக நம்பினாள். அந்த நம்பிக்கையை எவரும் உடைக்க முடியாதபடி தான் செய்ய வேண்டியதை சிந்தித்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்து அவள் முன்னால் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.
***

