-ரவி அல்லது

      1.

        தாத்தாவின் கடிதங்களை அமுதன் பத்திரமாக வைத்து இருக்கிறான். இம்முறை அவர் எழுதிய கடிதம் தான் அவனை இந்தியாவிற்கு அழைத்து வந்து விட்டது. விமானத்தில் ஏறியதிலிருந்து பலமுறை படித்து விட்டான். கொண்டு வந்த பெட்டிகளை எடுக்க காத்திருந்தபோது கூடப் பயணித்தவர்களின் கூட்டம்  அவர்களுடைய பெட்டிகளை எடுக்க கன்வேயர் பெல்டில் குழுமி இருந்தார்கள்.

அமுதன் நாற்காலியில் அமர்ந்து மறுபடியும் கடிதத்தைப் படித்தான்.

அன்புள்ள தம்பி, நான் இங்கு நலமுடன் இருக்கிறேன். உன்னைப் பார்க்க மனம் தேடி அலைகிறதுடா. இனிமேல் இந்தக் கைகளால் எழுதமுடியுமா என்று தெரியாது. கமலாயிதான் படுக்கையிலிருந்து தூக்கி விடுகிறாள்.

நான் தான் உன்னை அனுப்பி வைத்தேன். அது இத்தனை துயரத்தை கொடுக்கும் என்று எனக்குத் தெரியாது.

ஆறுமாதக் குழந்தையாக தூக்கிய கைகள். நான்தான் உனக்கு எல்லாமுமாக இருந்தேன். பெரிய படிப்பு படிக்க வைத்து வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று உன் தாய்தான் கனவு கண்டாள். அதனால்தான் உன்னை வற்புறுத்தி அனுப்பினேன். கிழவன் ஒழுங்காக வளர்க்கவில்லை என்று சொல்லி விடுவார்கள் என்று எல்லாவற்றையும் உயர்தரமானதாகவே செய்தேன். அது உன்னோடு நான் இருப்பதைக் காவு வாங்கிக் கொண்டதை நினைக்கும்போது இயலாமை நெஞ்சை அறுக்குதுடா அமுதா.

படிப்பிற்காக பால்யத்தில் பிரியத் தொடங்கிய நீ பிறகு பார்க்க முடியாத சூழ்நிலையில் சிக்கிவிட்டாய். எது தவறு என எனக்குத் தெரியவில்லை.

கை நடுங்குகிறதுடா அமுதா. இனி என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை.

உன்னைப் பார்க்கமுடியுமாடா என்னால்.

உன்னைப் பார்க்க ஏங்கும்

தாத்தா,

வைரவன்.

என்று அவரது கையெழுத்தைப் போட்டு இருந்தார்.

அமுதன் யாரும் தான் அழுவதைப் பார்த்துவிடக்கூடாது என்று கர்சீஃப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

தாத்தாவின் கையெழுத்து ஐம்பதுகளுக்கு முன்பும் எழுவதுகளுக்கு பின்னருமான இடைப்பட்ட வகையைச் சார்ந்தது. அது அவருடைய அடையாளம். அது இந்த தலைமுறையினரிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

தாத்தா அமுதனுக்கு அதிகம் கடிதங்கள் எழுதினார். அவனை அதற்குப் பழக்கினார். கணினி,கைபேசிகள் வந்துவிட்ட போதும் அவர் கடிதங்களையே தனக்கான தொடர்பு சாதனமாக வைத்து இருந்தார்.

அமுதன் நண்பர்கள் யார் இந்தியா வந்தாலும் அவனிடம் கடிதம் இருக்கிறதா என்று கேட்பார்கள். தாத்தாவிற்கு விரைவாக கடிதம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். ‘ஏன்டா.. அமுதா என்னோடக் கடிதம் உனக்கு தாமதமாவுது. உன்னோடது எனக்கு உடனே வந்துருது.’என்று போனில் அடிக்கடி கேட்பார்.

இவனது பெட்டிகள் மட்டும் சுற்றிக்கொண்டு இருந்தது. அவைகளை எடுத்து வெளியே நின்ற காரில் ஒன்றை ஊரின் பெயரைச் சொல்லி எடுத்துக் கொண்டு கிளம்பினான். நகரம் வெகுவாக மாறி இருந்தது. இருபது வருடங்கள் என்பது நீண்ட காலம் தான். அப்போது இந்த நகரத்திற்கு விமான நிலையமே வரவில்லை. சென்னை சென்றுதான் வெளிநாட்டிற்குப் பயணிக்க வேண்டும்.

“சார் செங்கிப்பட்டி வழியாக போகவா இல்லை வல்லம் வழியாக போகவா. “

“தஞ்சாவூர் வழியாக போகலாம் ப்ரதர். இரயில் நிலையம் முன்பு முந்திரி பருப்பு இருக்கும் வாங்கிக்கலாம். “

“எப்படி சார் பழசு மாறாமல் இருக்கீங்க. அமெரிக்காவில் டிரம்பிற்கு எதிர்ப்பு அதிகமாமே சார். “

“எல்லா நாடுகளிலும் என்னவோ அதுதான் அங்கும். எதிர்ப்பும் ஆதரவும் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும். அதைத் தாண்டி அங்கே வாழுவதற்கான பொருள் தேடுவது பிரதானமாக இருக்கு. நீங்கள் நினைப்பது போல சினிமாத்தனமான வாழ்க்கை இல்லை.”

“சார் இரயில் நிலையத்திற்கு முன்பாக ஒரு முந்திரிக் கடை இருக்கு. இன்னொரு கடை அதே வரிசையில் பூம்புகார்கிட்ட இருக்கு. முன்னாடி இருந்த பில்டிங் இடிச்சுட்டாங்க.”

“எப்டீன் பைல்ஸ் அங்கேப் பெரிய பிரச்சினையாக இருக்கா சார். உலகத்தில் உள்ள எல்லா நாதாரியும் எப்படி இருந்திருக்கு பாருங்கள். “

“இங்க உள்ள பிரதமர் பேர் இருந்ததா சொன்னாங்க. இங்க என்ன நடந்துச்சு.”

“எதுவும் நடக்கல சார். “

அமுதனுக்கு தாத்தாவிடமிருந்து போன் வந்தது. அவருக்கு வந்துவிட்டதை சொல்லாமல்விட்டது அப்போது தான் நினைவுக்கு வந்தது.

“சொல்லுங்க தாத்தா. “

“எங்கப்பா இருக்கே. “

“நான் கிளம்பி கார்ல வந்துக்கிட்டிருக்கேன். “

“சரி பத்திரமா வாப்பா. “

தாத்தாவின் கடிதத்தை பையில் தொட்டுப் பார்த்தான். அதை எடுப்பதற்கு முன் அதில் உள்ள வாசகங்கள் மனதில் தடுமாறாமல் ஓடியது.

***

2.

கமலாயிதான் தாத்தாவைக் கவனிக்கிறது. வேலைக்காரி கவனிக்கும் அளவிற்கு தாத்தா சொந்த பந்தம் இல்லாதவர் இல்லை.

மூன்று மகள்கள் ஒரு மகன். சொத்து ,சொந்தங்கள், பங்காளி என்று பெரிய பட்டாளமே உள்ள ஆள் தான். அந்த அசம்பாவிதம் நடைபெறாமல் இருந்தால் ஒரு வேலை எல்லோரும் நல்லவர்களாக இருந்திருப்பார்களோ என்னவோ தெரியவில்லை.

எவரையும் எதைக் கொண்டும் இங்கு இறுதியான முடிவுகள் எடுக்க முடியாது. அந்த அசம்பாவிதத்திற்கு முன் வைரவன் தாத்தாவின் வாலிப காலத்தை சொல்ல வேண்டும்.

அன்றைய காலகட்டத்தில் பண்ணையார்கள் அவர்களிடம் பசிக்காக வேலை பார்ப்பவர்கள் என்றுதான் மக்கள் வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருந்தார்கள். ஊரில் கொஞ்சம் நிலம் வைத்திருந்தவர்கள் கூட மேட்டிமைப் புத்தியில் திரிந்த காலம் அது. அரிசிச் சோறு கிடைப்பதே அரிதான சூழ்நிலை.

வைரவன்  உடன் பிறந்தவர்கள் கூலி ஆட்களை சுரண்டி வேலைகள் வாங்குவதில் முரட்டுப் புத்தி உடையவர்கள். அவர்களுக்கு அந்த ஊரில் பெரும் பகுதி விவசாய நிலங்கள் இருந்தன. அவர்களை அண்டிதான் அவர்களின் சமூகத்தவர்களேப் பிழைக்க முடிந்தது.

அவர்களில் வைரவன் மட்டும் ஏன் மாறிப் பிறந்தவராக இருந்தார் என்பது அங்கு இருந்த அத்தனை பேருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர்களின் சகோதரர்கள் அதனை அவமானமாக நினைத்தார்கள்.

பள்ளன், பறையன், அம்பட்டன், ஆசாரி அத்தனை பேரையும் அவர் சக மனிதனாக மதித்தார். அவருக்கு வேலைக்கு வந்தால் நியாயமான கூலிகளைக் கொடுத்தார்.

அப்பொழுது கூலி கொடுக்க தனி மரக்காள் (படி), தனியான தகர ட்ரம் இருக்கும். அதுவே தெருத் தெருவாக  அளவைக்குப் பயணப்பட்டுப் பயன்படும்.

அளவைப் படி அடியில் உப்பலாக இருக்கும். அதில்தான் அளந்து கூலி கொடுப்பார்கள். கூலி நெல்லில் கருக்காய்(பதறை) கலந்து விடுவார்கள்.

கதிர் அறுத்து அடித்து நெல் பொழி போட்டு முட்டாக குவித்துக் கிடக்கும். அளந்து கூலி கொடுப்பது தனி ஒரு நாள் நடக்கும். எல்லோரும் பனிரெண்டுக்கு ஒண்ணு பத்துக்கு ஒன்று. ஒன்பது ஒன்று என்று கூலி கொடுத்தால். தாத்தா மட்டும் எட்டுக்கு ஒண்ணு கொடுப்பார். அதாவது எட்டுவாளி அளந்து போட்டு அவர்களுக்கு கூலி ஒரு வாளி போடவேண்டும். நில உடைமையாளர்களுக்கு அளக்கும்போது கும்பமாக நெல்லை வாளியில் வைத்து அளப்பார்கள். கூலியாட்களுக்கு மேலேச் சமமாக தட்டி அளப்பார்கள். இந்த வித்தியாசம் கூலி ஆட்களுக்கு தெரிந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அந்த ஊரில் உள்ளவர்களின் நிலங்களை நம்பித்தான் அவர்கள் எல்லோரும் பிழைப்பு நடத்தினார்கள்.

“சார் டீ சாப்பிடவா சார். இங்க எல்லாம் நீங்கள் குடிப்பீங்களான்னு தெரியல சார். ” டிரைவர்.

“தாராளமாக குடிங்க.எனக்கும் ஒரு டீ சேர்த்துச் சொல்லுங்கள். இது எந்த ஊர்.”

“வல்லம் சார். “

சாலையில் மக்கள் எள்ளைக் காய வைத்து இருந்தார்கள். முத்திய எள்ளுச் செடிகளை கும்பலாக போர் மாதிரி தூரை  வெளியே நீட்டியபடி வட்டமாக அடுக்கி இருந்தார்கள். குறிப்பிட்ட நாளில் செடிகள் பச்சையாக இருப்பது பட்டுப் போயி சங்காயமாக மாறும் பொழுது அதை எடுத்து காய வைத்து உதறி எடுக்க வேண்டும். சிலர் அதுபோல காய வைத்து இருந்தார்கள். சிலர் சங்காயத்தை உதறி எள்ளைக் கூட்டி குவித்து வைத்திருந்தார்கள்.

டீயை அருந்திவிட்டு காரை எடுக்கும்போது அமுதன் கண்ணாடியை இறக்கியபோது எள் சங்காய வாடை வீசியது.

வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை திருவோணத்தில் ஆடு, மாடு சந்தை கூடும். வைரவன் மாடு வாங்க சுப்பனை அழைத்துச் சென்றார். சுப்பன் கமலாய்யின் கணவன். இவர்தான் அவர்களின் திருமணத்தை முடித்து வைத்தார். வேஷ்டி சட்டை, சேலை,தாளி மற்றும் கல்யாண சாமான்களை திருவோணத்தில் வாங்கிக் கொடுத்தார். ஒரு மூட்டை நெல்லும் கொடுத்தார்.இவைகள் எதையும் கூலியாக கழிக்க வேண்டாம் என்றார்.  இதுமாதிரி வைரவனிடமிருந்து பல ஒத்தாசைகள் இவர்களுக்கு கிடைப்பதால் அவர் எப்பொழுது எங்கு கூப்பிட்டாலும் வருவார்கள். அப்படித்தான் சுப்பன் அவரோடு திருவோணம் மாட்டுச் சந்தைக்கு வந்திருக்கிறான்.

கண்ணாபுரம் காளை மாடுகள் வாங்குவதற்காக அவர் அலைந்து கொண்டு இருக்கிறார். அடுத்த வாரமும் வரத்து இல்லை என்றால் கண்ணாபுரம் சந்தைக்கு போக வேண்டியதான் என்று சுப்பனும் வைரவனும் முடிவு எடுத்தார்கள்.

திருவோணம் சந்தைக்கு வந்தால் சர்பத் அல்லது பாயாசம் குடிப்பது சுப்பன் வழக்கம்.

“நீ பாயாசம் குடிச்சிக்கிட்டு இரு. நான் கறி வாங்கிட்டு வந்துற்றேன்.உனக்கு கால் கிலோ வாங்கித் தர்றேன் வீட்டுக்கு கொண்டு போப்பா.”

“எனக்கு வீட்டுக்கு வேண்டாம்.என் கறியையும் ஆயிய சேர்த்து வைக்கச் சொல்லுங்க. நான் கொலம்பா வாங்கிட்டுப் போறேன். ஆயி கைப்பக்குவம் என் வீட்ல அவளுக்கு வராது.”

அவர் சிரித்துக் கொண்டே பாயாசத்திற்கு பணம் கொடுத்து விட்டு ஆட்டுக் கறி விற்கும் பாய் கடையை நோக்கிப் போனார்.

சுப்பனுக்கு வீட்டில் உப்பு, மிளகாய், புளி இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் அப்படிச் சொன்னான்.

****

3.

வெளியில் இருந்து வீட்டு ஆட்கள் வந்தால் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்ட பிறகு தான்  எந்த விசயத்தையும் சொல்வார்கள்.வைரவன் வீட்டில் குளித்துவிட்டு சாப்பிட்டு வெற்றிலை போடும்போது அவரது மனைவி சொன்னார்.

“சடையன் செத்துட்டாங்க. காலையில தான் என்கிட்ட நீராரம் வாங்கி குடிச்சிட்டுப் போனான். பாவிப்பய செத்துப் போயிட்டான்.”

சடையன் அந்த தெருவுக்கே சாப்பாட்டுக்கும் வரக்காப்பிக்கும் வேலைகள் பார்த்துக் கொடுப்பவன். வைரவன்தான் அவனுக்கு தீபாவளி, பொங்கலுக்கு புது வேஷ்டி சட்டை எடுத்துக் கொடுப்பார்.

“என்னடி சொல்றே. “

“மூத்தவர் வீட்ல(வைரவனோட அண்ணனை மற்றவர்களிடம் சோனப்பய என்றுதான் அவர் மனைவி சொல்லுவார்) எள்ளு அறுத்துக்கிட்டு இருந்திருக்கான். மூத்தவர் வயல்ல வெட்டிகிட்டு இருக்கிற கேணிக்கும் பக்கத்தில் சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கார். அப்போ அவரோட சாம்பார் வாளி உள்ள விழுந்திருக்கு. இந்த போக்கத்தவனை சோனப்பய உள்ள இறங்கச் சொல்லி இருக்கான். கைய கழுவாம போனதால கயிற புடிச்சு இறங்கும்போதே கை வழிக்கி சர்ருன்னு உள்ளே போயி அங்கே குத்தி இருந்த பாறை ஆசன வாயிலப் புகுந்து கிணத்துக்குள்ளேயே செத்துட்டான். “

“முருகா… ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போகலையா.”

“அங்கே இருந்து அப்படியே கொண்ட எரிச்சிட்டாங்க. “

“என்னடி சொல்ற. “

“எங்கங்க கிளம்புறீங்க.”

“அவன் ஆயி என்ன ஆனான்னு பார்த்துட்டு வர்றேன். அவனைவிட்டா அவளுக்கு நாதியே இல்ல. “

“யார்கிட்டயும் வம்புக்கு போயிறாதீங்க. பயலுக்கு இப்பதான் கல்யாணம் நடந்து இருக்கு.”

இரண்டு மகள்களுக்கு கல்யாணம் முடிந்து ஒரு மகன் ஆண் வாரிசு இல்லாத இடத்தில் கல்யாணம் முடிந்ததால் மாமனார் வீட்டில் தான் அதிகம் இருந்தான். இவர்களைவிட இரண்டு மடங்கு சொத்து அவர்களுக்கு இருந்ததால்  அவன் அங்கு இருக்க வேண்டியதாக இருந்தது.

“நீ கறிய உப்புக் கட்டம் போடு. சாம்பார் வச்சியன்னா. சுப்பனுக்கும் சேர்த்து வச்சி. அவனுக்கும் கொடுத்துரு. “

அவர் சடையன் ஆயியப் பார்த்தபோது அவருக்கே பாவமாக இருந்தது. குடிசைக்குள் இவரை கட்டிக்கொண்டு அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. காலனி ஆட்களிடம் ஆறுதல் சொல்லிவிட்டு தெரு பங்காளிகளை கூட்டிவிட்டார்.

“இப்ப என்ன நடந்துருச்சுன்னு. இந்தக் கூட்டத்தை இவன் கூட்டி வச்சிருக்கான். அந்தப் பரதேசிப் பள்ளப்பயலுக்காக நாம இங்க கூடனுமா.அவன் இருக்க இடம் கொடுத்ததே நாம தான்.” பெரியவர்(சோனப்பய)  கேட்டார்.

ஒவ்வொருத்தரும் ஒரு கருத்தை சொன்னார்கள். அவைகள் எதுவும் சடையனுக்கு நீதி கிடைப்பதாக இல்லை. எல்லோரின் பேச்சும் மேட்டிமைத் தனமாகவே இருந்தது.

“சடையன் ஆயி இருக்கிற இடத்தை அவளுக்கு எழுதிக்கொடுங்க. அவளுக்கு வருசா வருசம் ஒரு மூட்டை அரிசி கொடுக்கனும் இல்லைன்னா. நான் காலையில போலீஸ் ஸ்டேஷன் போயிருவேன்.”

“உன்னால எங்க குடும்பத்துக்கே அவமானம். டீக்கடையில எவ்வளவு கேவலமா பேசுறாங்க தெரியுமா. உன்னைய முடிச்சுவிட்டா இங்க எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சிரும். வேலைக்கார நாயி எதுவும் நம்மல மதிக்க மாட்டேங்குது. ” பெரியவர் மகன் கத்தினான்.

“என் மேல கைய வைடா பார்ப்போம். நாளைக்கே உன் வீட்டைக் கொழுத்துறாங்கலா இல்லையான்னுப் பார்ப்போம்.” என்றார்.

வேலிகளிலும் வீட்டின் ஜன்னல்களிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் பயந்தார்கள். வைரவன் ஒத்த ஆளாக இருப்பதால் அவரது மனைவி மிகவும் பயந்தார்.

ஒரு வழியாக சடையன் ஆயி சந்தோசமாக வாழ வழிவகைகள் வைரவன் செய்துவிட்டார். காலனி ஆட்கள் இவர்மேல்  அளவு கடந்த பாசம் வைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் வைரவனை கட்சியில் சேர்ந்து விடச் சொன்னார்கள். அதனை அவர் தவிர்த்து விட்டார்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வைரவனை ஊர் தள்ளி வைக்க வைத்துவிட வேண்டும் என்று பெரியவர் குடும்பம் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தது.

****

4.

வைரவன் மனைவி மூச்சுத் திணறல் வந்து இறந்த சில நாட்களில் சுப்பனும் இறந்துபோனான்.

பெரியவர் வீட்டு மூத்தவன் வைரவன் கமலாயியை வப்பாட்டியா வச்சிருக்கிறது தெரிஞ்சதாலதான் அவர் பொண்டாட்டி இறந்து போயிருச்சு.சுப்பன் பயலும் செத்துப் போயிட்டான்னு ஊரு முழுவதும் இட்டு கட்டி விட்டான். சாதி வெறி பிடித்த நாய் எல்லாம் ஊர் முழுவதும் குரைத்துக் கொண்டே இருந்தது.

கமலாயியை வேலை விட்டு நிறுத்தச் சொல்லி மகள்கள் திட்டியபோது வைரவன் மனம் நொந்து போனார்.

அவரது மகன்தான் அவரை முதல் முறையாக கட்டிக்கொண்டு அழுதான்.

“அய்யா அவனை வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போயிரவாய்யா. அம்மா என்கிட்ட சொல்லிச்சுய்யா. நாங்க செத்த பிறகும் கமலாயி  உயிரோட இருந்தா. அவளுக்கு வயிறார சாப்பாடு போட்டுட்றான்னுச்சு. அக்கா எல்லாம் பேசுதுன்னு நீ கோவிச்சுக்காதைய்யா. “

வைரவன் அழுது அப்போது தான் அவரது மகன் பார்த்தான்.

“உங்களுக்கு எல்லாம் ஒரு விசயம் தெரியாதுடா.உன் பெரியப்பன் அதான்டா அந்தச் சோனப்பய. கமலாயியை கச்ச வயல்ல வச்சு கெடுக்க தொந்தரவு பண்ணப்ப. அவனை ஒதச்சி வெரட்டுனேன். கிணத்தில குதிக்கப்போனவளே நான் தான் தடுத்து சுப்பனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்.  அவ மவளுக்கு நான் தான் மாப்பிள்ளை பார்த்து கெவர்ன்மெண்ட் ஆபீசருக்கு கட்டிக்கொடுத்தேன்.அந்த விசுவாசத்தில அவ இங்க வேலை பார்த்துக்கிட்டு கிடக்கிறா.”

வைரவனின் மேல் அவரது மகனுக்கு மரியாதை கூடியது.

ஊர்க்காரப் பயலுவலவை அவர் வேறுவிதமாக தாக்கினார். பள்ளன், பறையன், அம்பட்டன், வண்ணான், கம்மாலனையும்  வயலுக்கு வேலைக்கு போகும்போது தவிர துண்டப் போடாதீங்க. துண்டப் போட்டிருந்தாதானே கக்கத்துல வைக்கணும் இடுப்பு கட்டனும்ன்னார்.

முடிவெட்டுகிறவர்களை வீடு வீடாக போய் வெட்டாதீங்க. பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில் இருக்கும் புளிய மரத்தடியில் இருக்கிறோம் அங்கு வாங்க வெட்டிவிடுகிறோம் என்று நடை முறைக்கு கொண்டு வரும் செய்தியை பெரியவர் வீட்டில் மொங்கான் சொன்னபோது அவரை தென்னை மரதத்தில் கட்டி வைத்து சாட்டையால் தோள் கிழியும் அளவிற்கு அடித்தார்கள்.

’எவன் வந்து உன்னைய அவுக்கிறான்னு பார்க்கிறேன். அவன்தான் வருவான் அவனைக் கட்டி வச்சா.உங்க திமிர் எல்லாம் அடங்கிரும்டா’ பெரியவரின் மூத்த மகன் கத்தினான்.

அவன் சொன்னது போலவே வைரவன்தான் வந்து மொங்கானை அவுத்துவிட்டார். மொங்கானால் நடக்க கூட முடியவில்லை. கோவணத்தோடு இருந்தவருக்கு இவருடைய மேல் துண்டைக் கொடுத்தார். அப்போது வந்த மூத்தவன் வைரவன் கன்னத்தில் அறைந்துவிட்டான். வைரவன் கீழேக் கிடந்த கம்பை எடுத்து மூத்தவன் மண்டை உடைத்துவிட்டார்.

தர்மாஸ்பத்திரிக்குப் போனால் போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்று தம்பித்துரை டாக்டரிடம் கட்டுப்போட்டு வந்தார்கள். அவர்கள் வருவதற்கும் வைரவன் மச்சான்கள் வரவும் நேரம் சரியாக இருந்தது. ஒரு மணி நேரம் ஊரே வேடிக்கை பார்க்க காது கொடுத்து கேட்க முடியாத கேள்விகளை வந்தவர்கள் கேட்டார்கள். பெரியவர் வீட்டு குடும்பத்தார்கள் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு யாருமே வெளிவரவில்லை. இதனால்தான் அவரிடம் யாரும் வம்பு வலக்குகள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இதுதான் அவர்கள் வைரவனுக்கு உரிமையோடு வந்த உறவுகள். பிறகு அவர்களுக்குள்ளும் சாதிய சாம்பிராணி தூவப்பட்டுவிட்டது.

வைரவன் ஊரில் அவரோடு ஒத்துப் போனவர்களோடு பேசி கூழாப் பழனியை தண்டோர  போட வைத்து விட்டார். ‘இனி முடி வெட்டுகிறவர்களுக்கு அவரவர்கள் வருட நெல் கொடுக்கிறபடிக் கொடுக்க வேண்டும் அவரவர்கள் கொடுப்பதை வழங்கும் போல கொடுக்க வேண்டும். முடி வெட்டும்போது பெரியவங்களுக்கு 2 ரூபாயும். சின்னவங்களுக்கு 1 ரூபாய் கொடுக்க வேண்டும்’ என தண்டோராப் போட்டுக் கொண்டு சென்றார். இந்த கூழாப் பழனி மகனை வைத்துக்கொண்டு பெரியவர் வீட்டு குடும்பம் ஊரில் யாராவது பிரச்சினை செய்தால் அவர்கள் மேல் இவனிடம் காசு கொடுத்து போலீஸில் யூ.டி கேஸ் போட்ட வைத்துவிடுவார்கள். இன்று டாக்டருக்கு படித்துவிட்டு நீட் வேண்டாம் என்று சொல்லும் ஈனப் பிறவி போல அன்று அவன் ஒரு  கேடுகெட்ட பச்சோந்தி.

பிறகு ஒரு நாள் டீக்கடை செல்வராஜூவிடம் ‘டவுன்ல வக்கீல்கிட்ட கேட்டேன். யூ.டி கேஸ் போட்டா  ஆயுசுக்கும் கழி திங்க வேண்டியதுதான். ஒன் அப்பன் என் கூட்டாளி. அதுலதான் உனக்கு நல்லது சொல்றேன். இந்தா இதுல ஒரு டஜன் கிளாஸ் இருக்கு. சில்வர் டம்ளர், அலுமினிய டம்ளர்களைத் தூக்கி வீசிட்டு.இதைப் பயன்படுத்து என்றார்.

கோயிலில் அர்ச்சனை செய்யும் அய்யரிடம் ‘சென்னையில எல்லாம் கண்ணாடி கிளாசைக் கழுவிட்டு குடிச்சா தீட்டு இல்லைன்னு சொல்றாங்கன்னு. சாமி கும்பிட வர்றவங்க.ஜோஸியம் பார்க்க வர்றவங்ககிட்ட சொல்லுங்க. இல்லைன்னா திராவிடக் கட்சிக்காரங்களா.வீட்டுக்குள்ள பூறுங்கடான்னு சொல்லிருவேன்’ என்றார். அய்யர் கையெடுத்து கும்பிட்டு சொல்வதாக சொன்னார்.

எல்லாவற்றையும் சகித்துக்கொண்ட ஊர் வைரம் மனைவியின் வருஷ நினைவு நாளுக்கு ஊரில் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் உள்ளவர்களுக்கு அவரது மகனின் மாமனார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரை வைத்து வேட்டி, சேலை, செருப்பு வழங்கியதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அன்று இரவே வைரவனை ஊரைக்கூட்டி அவரை ஊர் தள்ளி வைத்துவிட்டார்கள்.

****

5.

டிரைவர் காரை பூம்புகாருக்கு பக்கத்தில் நிறுத்தினார். முந்திரிக்கடை வைத்திருந்த அந்த ஆள் வயோதிக தோற்றத்தில் இருந்தார். நெற்றியில் பழையபடி குங்குமம் வைத்திருந்தார். அமுதனுக்குத் தேவையானவைகளை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

“சார் வெளிநாட்டில் இதைவிட உயர்ந்த முந்திரி பருப்புகள் கிடைக்கும் இங்கதான் வாங்கனுமா.”

“உங்களுக்கு தெரியாது ப்ரோ. நான் அப்பா அம்மாவைப் பார்த்தது இல்ல. போட்டோ கூட என்கிட்ட இல்ல. என் தாத்தாதான் என்னை வளர்த்தார். ஐந்து வயதில் என்னை எங்க தாத்தா ஊட்டி கான்வென்டில் சேர்த்தார். அதன் பிறகு காலேஜ் ஐஐடியில் படிச்சேன்.சின்ன வயசுலேர்ந்து இந்த இரயில்வே ஸ்டேசன்ல என்னைய ஏத்தி விடும்போது ஒரு கிலோ, இரண்டு கிலோ முந்திரி பருப்பு  வாங்கித் தருவார். நாள் முழுவதும் நான் அங்க சாப்பிடனும்ன்னு சின்னக்குழந்தைன்னு தாத்தா வாங்கித் தருவார். நான் காலேஜ் போகும்போதும் அதையேதான் செஞ்சார். நீங்கள் முந்திரி சாப்பிட்டா அது உங்களுக்கு சுவையான பருப்பு சாப்பிட்றது.நான் அதை மெல்லும் போதே எனக்குள்ள என் தாத்தாவின் அன்பு கிரங்க வைக்கும். அது அப்படியே மென்னு மென்னு முழுங்கும்போது நான் என்னையே மறந்துருவேன் ப்ரதர். இதுபோல உணர்வு யாருக்கும் கிடைக்குமான்னு தெரியல. என் ப்ரண்ட்ஸ் முந்திரி மாமான்னுதான் கிண்டல் பண்ணுவாங்க. அமெரிக்காவில் என் டேபிள் மேல உலகத்தோடு சிறந்த முந்திரி பருப்பு எல்லாம் இருக்கும். தஞ்சாவூரில் வாங்கி சாப்பிடுவது என் தாத்தாவிற்காக. ஊருக்கு வந்தா இங்க வந்து வாங்காம இருக்க மாட்டேன். அந்தக் கடைக்காரருக்கே அது தெரியுமான்னு தெரியல. “

அமுதன் பேசுவதை ஆச்சரியமாக கேட்டுக்கொண்டே டிரைவர் வாகனத்தை ஓட்டினான்.அமெரிக்காவில்  வேலை வாங்கித் தர முடியுமா என்று கேட்க நினைத்தான். பிறகு ஒரு சூழ்நிலையில் கேட்கலாம் என விட்டுவிட்டான்.

ஒவ்வொரு கிராமத்திலும் சிறு கடைகள் இருந்தது. எல்லா ஊர்களும் பெரிய மாறுதல் அடைந்து இருந்தது. குறிப்பாக துரித பொறித்த உணவுகள் சாப்பிட  அனைவருமே பழகி இருந்தார்கள்.

அய்யனார் கோயிலைத் தாண்டி வந்ததும் ஆறு வந்தது. அந்த சட்ரஸில் தண்ணீர் வந்து பாலத்திற்குள் போவது பார்க்க அழகாக இருக்கும். பலமுறை தாத்தாவிடம் பேருந்தைவிட்டு இறங்கி பார்க்கலாம் என்று கேட்டபோதும் தாத்தா மறுத்து விட்டார்.

அமுதன் பிறந்து ஆறு மாதம் இருக்கும் போது பட்டவன் கோயில் பூஜை வந்தது. அப்போது ஊரில் ஒரு வாரம் விடாமல் மழை பெய்து வெள்ளக்காடாக மாறி இருந்தது. வானொலி இரவு நேர சேவைகளை செய்து கொண்டு இருந்தது. அமுதன் அப்பா, அம்மா,பாட்டியோடு பேருந்தில் கிளம்பி அவனது ஊருக்கு பூஜைக்காக சென்று கொண்டு இருந்தார்கள். காட்டாற்று பாலத்திற்கு முன்பாக சறுக்கை ஒன்று இருக்கும். அதில் மழை வெள்ளம் அதிகமாகும்போது அதன் வழியாக பெரிய ஆறு மாதிரி தண்ணீர் ஓடுவது பார்க்க பயமாக இருக்கும். அதில் பேருந்துகள் மெதுவாக மெதுவாக ஊர்ந்து கடந்து செல்வது இதுவரை வழக்கமாக இருந்தது. அதிக வெள்ளம் வந்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிடும். குறைவாக தண்ணீர் போனதால் டிரைவர் பேருந்தை மெதுவாக சறுக்கையில் இறக்கி நடுவில் சென்று கொண்டிருந்த போது பெரிய வெள்ளம் வந்து பேருந்தைப் புறட்டி மூழ்கடித்து விட்டது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் முட்டி ஒதுங்கி கிடந்தது.

தமிழ்நாட்டின் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியான அந்தக் கோர விபத்தில் அத்தனை பேருமே இறந்து போனார்கள். காணாமல் போன அமுதனும் இறந்துவிட்ட பட்டியலில் இணைக்கப்பட்டான்.

அரசாங்கத்திடமிருந்து பெரிய தொகை பணம் வந்தது. தொண்டு நிறுவனங்கள் சிலதிடமிருந்தும் பணம் கிடைத்தது. கமலாயி கைப்பற்றிவிடப் போகிறார் என்று மகள்கள் வைரவனிடமிருந்து பணம் சொத்து அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள். குடி இருக்கும் வைரவன் வீடு மட்டும் அவரிடம் இருந்தது. அவருக்கு பிறகு அதை அவர் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று பத்திரம் எழுதப்பட்டது. நல்ல வேலை வைரவன் வங்கியில் சொத்தைவிட கூடுதலாக பணமும் பவுனும் வைத்து இருந்தது அவர்களுக்கு தெரியவில்லை.

அமுதனின் கம்யூனிஸ்ட் தாத்தா மனைவியும் விபத்தில் இறந்து போனதால் அவர்களது சொத்தையும் மகள்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு முழு நேர கம்யூனிஸ்ட் கட்சி பணிக்காக அவர் சென்னை சென்றுவிட்டார்.

ஆறு மாதங்கள் கழிந்த ஒரு நாள் நல்லிரவில் கமலாயி கைக்குழந்தை ஒன்றை வைரவனிடம் கொடுத்தார்.

“ஐயா நான் பள்ளத்தூருக்கு பக்கத்தில என் சொந்தக்கார ஊருக்கு போயிருந்தேன். அங்க காட்டாத்துல மிதந்து வந்ததுன்னு இந்தக் குழந்தைய வளர்த்துக்கிட்டு இருந்தாங்க. அப்பதான் இது எங்கய்யா பேரன்னு கெஞ்சி வாங்கிட்டு வந்துட்டேன்ய்யா. “

“இவன் என் பேரன்னு எப்படி சொல்றே. “

“நான் எத்தனை வாட்டி குளிப்பாட்டி இருப்பேன்.சோத்தாங்கைப் பக்க தொடையில ஐஞ்சு காசு அளவுக்கு மச்சம் இருக்கிறது எனக்குத் தெரியாதா. அதோட பின்னாடி முதுகுல கையளவு இன்னொரு மச்சம் இருக்கே அதையும் பாருங்க ஐயா. “

வைரவன் அன்று இரவு முழுவதும் அமுதனை தோளில் சாய்த்து தூங்க வைத்து நடந்து கொண்டே இருந்தார்.

பிற பிள்ளைகளைப் போல அழுது அவன் அடம் பிடிக்கவில்லை. அந்த வீட்டில் குழந்தை ஒன்று இருப்பதே தெரியாத அளவிற்கு அமைதியாக இருந்தான். எப்பொழுதாவது கமலாயி மடியில் படுக்க வைத்து இருக்கும் போது மார்பை பிடித்து இழுப்பான். கமலாயி லவுக்கையை திறந்து பால் குடிக்க வைப்பார். வெற்றுக் காம்பை சப்பிய கலைப்பில் அமுதன் தூங்கி விடுவான். இதுபோன்ற சூழலில் வைரவன் அந்தப் பக்கம் போகவே மாட்டார்.

“எல்லாரையும் தூக்கி முழுங்கிட்டு அம்பட்டச்சிறுக்கியோட படுத்துப் பெத்த புள்ளைய எங்கோ மறச்சி வச்சிருந்து இப்போ தூக்கி கொண்டாந்து வளர்கிறான் பாரூ. அப்பாயி இவனை தாத்தாவுக்குத்தான் பெத்தால பள்ளு பறைகிட்டே இருந்து வாங்கியாந்து வளர்த்தாளா.”

சோனையன் மகன் வைரவன் மகள்களிடம் சென்று கத்தினான்.

வைரன் எதுபற்றியும் கவலைப்படாமல் அமுதனைப் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தினார். அதில் அவர் அழகிய முறையில் வெற்றியும் கண்டார்.

கார் வீட்டிற்குள் நுழைந்ததும் வாசலில் வந்து கமலாயி எட்டிப்பார்த்தாள். முகம் லேசாக வீங்கியதாக பழுப்பு நிறத்தில் தோள் சுருங்கி வயோதிகத்தில் காணப்பட்டார். அமுதன் இறங்கியதும் ‘தம்பீ’ என்று சந்தோசமாக அழைத்தாள். அவன் அவளைக் கட்டிப் பிடித்து கைகளில் முத்தமிட்டான். முதியவர்களிடமிருந்து வரும் உழைப்பு வாடையும் வெற்றிலைப் பாக்கு மணமும் அவனுக்கு பிடித்துதான் இருந்தது. கமலாயி இதை எதிர்பார்க்காததால் உடலைக் குன்னினார்.

“நன்றி பாட்டி. தாத்தாவைப் பத்திரமாக பார்த்துக்கிட்டீங்க. நன்றி பாட்டி. “

டிரைவர் பெட்டிகளை இறக்கிவிட்டு பணம் வாங்கிக்கொண்டு செல்லும்போது அவனது நம்பரைக்கொடுத்துவிட்டு  அமுதனுடைய போன் நம்பரை வாங்கிக்கொண்டு சென்றான்.

தாத்தா அவனைக் கண்டதும் சந்தோஷத்தில் எழுந்து உட்கார முயன்றார். அவனது கையை விடாமல் பிடித்தபடி அழுது கொண்டு இருந்தார். அன்று இரவு முழுவதும் அமுதன் மடியிலேயே தலை வைத்து படுத்து இருந்தார்.

“அமுதா நீ யாருன்னு ஊரு உலகத்துக்கு சொல்லாம போறேன்னு உனக்கு வருத்தமாடா.”

“அம்பட்டச்சி மவன்னு எவன் நினச்சாலும் எனக்கு ஒரு மயிரும் இல்ல தாத்தா. ரேசன் கார்டில் உன் பேரன்னுதானே வச்சிருக்கே. பிறகு ஏன் நீ கவலைப்பட்றே.”

அவர் மௌனமானார். தலையணைக்கு அடியிலிருந்து ஒரு குழந்தைகள் தடுப்பூசி போடுவதற்கான மருந்து அட்டையைக் கொடுத்தார். அது பத்து பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகமாக இருந்தது. பழுப்பேறி நிறம் மங்கி இருந்தது.

“இது நீ பொறந்தப்ப நிலோபர் காதர் டாக்டர் கொடுத்த மருந்து சீட்டு. அதோட கடைசியில பார்.” என்றார்.

அதில் குழந்தையின் கால் பாதம் கை ரேகை வைப்பது போல கால்களின் பதிவு மையினால் படி எடுக்கப்பட்டிருந்தது. அந்த மருத்துவமனையில் அதுமாதிரியான வழக்கம் இருந்திருக்கிறது.

“இது உன்னுடைய கால் பாதம்டா.இது தான்டா நானும் கமலாயியும் தப்பு செய்யலைங்கிறதுக்கு ஆதாரம்.”

அவன் அதைக் கோவத்தில் கிழிக்கப்போனான். வைரவன் தடுத்துவிட்டார். ‘என்னுடைய ஞாபகமா இதை நீ வச்சுக்கடா.தயவு செஞ்சி இதை வச்சுக்கடா’ என்றார்.

“என் ஹீரோ தாத்தா நீ. இந்த சுத்துப்பட்டுக் கிராமத்தில் இந்த ஊர்ல இருந்த ஒடுக்கப்பட்ட மக்களை உயருவதற்கு வழி வகுத்திருக்கே. இது மிகப்பெரிய புரட்சி தாத்தா. பெரியார், அம்பேத்கார் உன்னையக் கேள்விப்பட்டிருந்தா.தூக்கி வச்சி கொண்டாடி இருப்பாங்க.என் தலைமுறைக்கு உன் கதையை நான் சொல்லி தான் வளர்ப்பேன் தாத்தா.எங்களுக்கு நீ வைரமா ஜொலிச்சுக்கிட்டேதான் எப்போதும் இருப்பே.”

வைரவன் நிம்மதியாக தூங்கினார்.காலையில் அவர் எழுந்திரிக்கவே இல்லை.

****

6.

துக்க வீட்டிற்கு அந்த ஊரில் ஒதுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த  அத்தனை பேரும் வந்திருந்தார்கள். அக்கம்பக்கத்து ஊரிலிருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தார்களே வந்திருந்தார்கள். சில கம்யூனிஸ்ட் தோழர்களைத்  தவிர  அவன் அத்தைமார்கள்கூட வரவில்லை.

இறந்த அன்றே அவன் ஆடுகள் வெட்டி வந்தவர்களுக்கு கறி விருந்து வைத்தான். அந்தக் கட்டுமனையின் ஓரத்தில் அவரை சம்மாது(சமாதி) வைத்தான். நர்சரி கார்டன் வைத்து இருப்பவர்களை அழைத்து அந்த இடத்தையே அடுத்த நாள் பூங்காவாக மாற்றிவிட்டான்.

கல்லூரி முடித்த கமலாயி பேத்தி வந்திருந்தாள். அவள் ஒரு யூடியூப் மற்றும் இன்ஸ்டாவில் இன்ஃப்ளூயன்சராக இருந்தாள். அம்பேத்கார், பெரியாரியக் கொள்கைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவேற்றிக் கொண்டு இருந்தாள். அவளை ஒரு மில்லியன் பேர் பின் தொடர்ந்தார்கள்.

வைரவன் இறந்த மூன்றாவது நாள் கமலாயி இறப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தூங்கும் போதே அவளுக்கும் உயிர் பிரிந்தது.

வைரவனுக்கு செய்ததைப்போல கமலாயிக்கும் அமுதன் செய்தான். அந்தப் பூங்காவின் வடக்கு ஓரமாக கமலாயிக்கு சம்மாதை வைரவனுக்கு நேர் எதிராக வைத்தான். அடுத்த தலைமுறை தன் உறவு நாதாரிகள் அவர்கள் ஒன்றாக இருந்தார்கள் ஆனால் இந்த இடைவெளியை கடைசிவரைக் காவந்து செய்தார்கள் என்று நினைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். கமலாயி குடும்பத்தார்கள் அவனுக்கு நன்றி சொன்னார்கள். ‘கமலாயி எங்க வீட்டு தாய்க்கிழவி’ என்றான் அவர்களிடம் அமுதன்.

வைரவன் இறந்த இரண்டாவது நாள் அமுதன் கமலாயிடம் கேட்டே விட்டான்.

“ஏன்யா மன்னிப்பு எல்லாம் கேட்கிறே. நீயே இதைக் கேட்கனும்னு ஆசைப்பட்டேன். எங்களுக்கு அவர் குலசாமிய்யா. இந்த ஊர்ல ஒதுக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் கையெழுத்து போடுவாங்க. அதுக்கு அய்யா தான் காரணம். அடுத்த தலைமுறையில அத்தனை பேரும் படுச்சுட்டாங்கையா. பல பேர் அரசாங்க வேலை பார்க்கிறாங்க.அதுக்கு காரணம் ஐய்யாதான். என் மவலுக்கு புதுக்கோட்டையிலப் போயி அரசாங்கத்தில வேலை பார்க்கிற மாப்பிளை பார்த்து கட்டி வச்சாரூ. அதுதான் இந்த சுத்துபட்டுக்கே ஆச்சரியம். ஊர் உலகம் என்ன சொன்னாலும் நான் அதுனால தான் ஐய்யாவுக்கு பணிவிடை செஞ்சிக்கிட்டு இருந்தேன். அது உன் பாட்டி எனக்கு போட்ட உத்தரவு. “

அமுதன் அந்த வயதானவர்களின் வாழ்க்கையை நினைத்து ஆச்சரியப்பட்டான்.

அமெரிக்கா கிளம்பும்போது கமலாயி பேத்தியிடம் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்றான்.

“நாம தனியாகத் தானே இருக்கிறோம். பிறகென்ன தனியாக பேச வேண்டும் என்கிறீர்கள்.”

“தாத்தாவும் பாட்டியும் இருக்காங்க. “

“ஃபன்னி கெய்.”

அவர்கள் மாமரத்தடியில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார்கள்.

“உங்களுக்கு தெரியுமா தமிழ்நாட்டிலையே இந்த ஊர்லதான் இறந்தால் புதைக்கிறப் பழக்கம் இருக்கு. எந்த சமூகத்தைச் சேர்ந்தவங்க இருந்தாலும் அன்னைக்கேப் புதைச்சி சமாதியில பால் தெளிச்சு சாயந்திரம் சாப்பாடு போட்ருவாங்க. பறையர், வண்ணார், முடிதிருத்திரவங்க,  ஆசாரிகள் என்று அத்தனைப்பேரும் செத்த வீட்டில் எதுவும் செய்யாமல் வரிசையாக மாலை வரை உட்கார்ந்து இருப்பார்கள்.சடலத்தைப் புதைச்சிட்டு வந்து அவர்களுக்கு முதல் பந்தியில் சாப்பாடு போட்டு தாம்பாளத் தட்டில் அவரவர்களால் முடிந்த பணத்தை வைத்து கொடுப்பார்கள்.மரியாதையைப் பெற்ற அத்தனை பேரும் ஒருவர்  தோள் மீது ஒருவர் கைபோட்டு ஒற்றுமையாக சிவ.. சிவா.சிவ…சிவா. சிவ… சிவா என்று அழுவார்கள்.இது தாத்தாவால் நடந்தது. இனி நடக்குமா என்று தெரியாது.” என்றாள்.

அவன் அமெரிக்காவில் வைத்திருக்கும் கம்பெனிக்கு இந்த ஊர் இளைஞர்களை இங்கிருந்தே வேலை பார்க்க   வைக்கும் ஒரு திட்டம் அவனுக்குள் உருவாகிவிட்டது.அது ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“தாத்தாவுக்கு நான் இதுமாதிரி செய்யலையே.”

“உங்க ஆட்கள் யாருமே இல்லாததால. நாங்க யாரும் இதை பெரிசா எடுக்கல. இங்க தாத்தாவோட துக்கம் எங்க ஒவ்வொருத்தர் வீட்டுத் துக்கம்.”

அவன் தாத்தாவின் சமாதியைப் பார்த்துவிட்டு கேட்டான்.

“நான் உன்னைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்” அதைக் கேட்டு அவள் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை.

“இதை என் வாழ்வின் பல தருணங்களில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். நான் சொல்லப்போகும் இந்த விசயம் எங்கள் வீட்டில் கூட இன்னும் சொல்லவில்லை.நான் யாருக்கும் தெரியாமல் ஒரு மதத்தைத் தழுவி தீவிரமாக பின் பற்றிக் கொண்டு இருக்கிறேன். அதன் வழியாக சாதிய விழுமியங்களை உடைத்துவிட  முடியுமென நான் நம்புகிறேன்.நீங்கள் என் மதத்தைத் தழுவாமல் நான் உங்களை திருமணம் செய்ய முடியாது.”

“அதி தீவிர அம்பேத்காரிய பெரியாரிஸ்ட் ஒரு மதப்பற்றாளாராக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.”

“மிகச்சரியாக அவர்களைப் புரிந்தவர்களால் மட்டுமே அது சாத்தியப்படும். புரிதல் என்பது இறைவன் கொடுக்கும் மகத்தான வெகுமதி. “

அமுதன் அந்த அளவிற்கு புத்தி தெளிவு உடையவன் இல்லை. அவனுக்குப் பெரிதாக வாசிப்புப் பழக்கமும் இல்லை. அவன் எழுந்து மாமரத்து கிளையின் சிறு கொப்பை உடைத்து அதன் ஒவ்வொரு இலையாக கீழே இனிக்கிப்போட்டான்.

“இவ்வளவு பெரிய வன்முறை தேவையா ” என்றாள்.

“சாரி” என்று அவன் அந்த சிறிய கொப்பைத் தூக்கி வீசினான். மாமரம் சிரித்திருக்க வேண்டும். அது காற்றிற்கு தன் எல்லா கிளைகளையும் ஆட்டியதில் பழுத்த இலைகள் உதிர்ந்தது.

ஒரு முறை வைரவன் தாத்தா கமலாயி பேத்தியிடம் நீ விரும்பினால் அமுதனை திருமணம் செய்து கொள். இது கட்டாயம் இல்லை என்றார். அவர் தன் குடும்பத்தார்கள் யாரிடம் சொல்லி இருந்தாலும் கண்டிப்பாக இந்த திருமணத்தை நடத்தி வைத்து இருப்பார்கள். ஆனால் தாத்தா தன்னிடம் சொன்னதை வியப்பாக மதித்தாள்.

“அவனோடு உனக்கு கல்யாணம் நடந்தால் ‘நீ நான் அவனுக்கு கொடுத்த வெகுமதி’என்று அவனிடம் உன் முதல் நாள் இரவில் சொல். ” என்றும் சொல்லி இருந்தார்.

“இது எனக்குப் புரியலை தாத்தா. “

“அவன் என்னைப்போல வாழ வேண்டும் என்று அதற்கு அர்த்தம். ” என்றார்.

இது எதுவும் அமுதனுக்குத் தெரியாது.

அவர்கள் இருவரும் மௌனமாக கைபேசியைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். கமலாயி பேத்தி கொள்கையில் தீவிர பிடிப்பு உள்ளவள். கருத்தியலாக தன்னை தீவிரப்படுத்திக் கொண்டவர்கள் அப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லைதான். அவள் நீலத்தையும் கருப்பையும் பச்சையாக பாவிப்பவள். அவள் தன் நிலையில் உறுதியாக இருந்தாள்.

“நான் அமெரிக்கா போயிட்டு சொல்றேன். நான் போன் பண்ணா எடு. “

“உங்க போனை எடுக்க எனக்கு என்ன பயம். “

அமுதன் அழுதான். இங்கு அவன் தனித்துவிடப்பட்டதாக  உணர்ந்தான். யார் மடியிலாவது அவன் தலை சாய்ந்து அழுவ வேண்டும் என்று நினைத்தான். எழுந்து சென்று கமலாயி சமாதியில் தலை வைத்து அழுதான். அவன் வைரவன் தாத்தா சமாதிக்கு செல்லாமல் தன் பாட்டியின் சமாதிக்குச் சென்றதை அவள் வெகுவாக ரசித்தாள்.

கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் சென்டிமென்டில் சிக்கக் கூடாது என்று ஒரு வீடியோ போட்டதை அவள் நினைத்துக் கொண்டாள். அது தோழர் தொல். திருமாவளவன் பிறந்த நாளா இல்லை மார்க்ஸின் பிறந்த நாளா என்று அவளுக்கு நினைவுபடுத்த முடியவில்லை.

அமுதன் அமெரிக்கா சென்றதும் நிச்சயமாக அவளுக்கு போன் பேசுவான். அவர்களுக்குள் ஏதாவது இரசாயன மாற்றம் நிகழலாம். நிகழ வேண்டும் என்று வைரவனும் கமலாயியும் நினைத்துக் கொண்டார்கள்.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *