விஜயராணி மீனாட்சி

ஏ… அமுதா.. நில்லு நில்லு… என்ற சத்தம் கேட்டு ரோட்டில் நடந்து கொண்டிருந்த அமுதா தன் அருகில் வந்து பிரேக்கடித்து நின்ற ஸ்கூட்டியையும் அதிலிருந்த பெண்மணியையும் ஒருசேரப் பார்த்தாள்.

ஹேய் நீ அமுதா தான?..

ஆமா. நீங்க …?

என்னையத் தெரியலையா?

இல்லையே..

நல்லாப் பாரு. கொஞ்சம் முப்பத்தி மூணு வருஷம் பின்னோக்கி யோசிச்சுப் பாரு…

அதென்ன முப்பத்தி மூணு வருஷம்?

ஏ.. டென்த் ஸ்டாண்டர்டு ப்பா..

எவ்வளவுதான் மூளையைக் கசக்கிப் பார்த்தும் அமுதாவுக்கு நினைவில் வரவில்லை.

அவளை ஒரு முறை அழுத்தமாக ஏறஇறங்கப் பார்த்த அமுதா பத்தாம் வகுப்பிற்கே சென்றாள்…….

முழுஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றைய முதல்நாள் பத்தாம் வகுப்பு “சி” பிரிவுக்கு ஒன்பதாம் வகுப்பு “ஏ’ பிரிவு முதல் “ஈ” பிரிவு வரையிலான ஐந்து வகுப்பு மாணவிகளை ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வைத்திருந்தனர். அவர்களில் பத்து ரேங்க்கிற்குள் எடுக்கும் மாணவிகளைக் கலந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் பாகம் பிரித்து அந்தந்த வகுப்பு டீச்சர்கள் எடுத்துக் கொள்வார்கள். மீதம் இருக்கும் மாணவிகளை பகுதி பிரித்து எடுத்துக் கொள்வார்கள். ஒன்பதாம் வகுப்பில் படித்த மாணவிகள் அப்படியே பத்தாம் வகுப்பில் இருக்கமாட்டார்கள். வகுப்பு மாறி மாறி மாற்றி விடுவார்கள்.

அந்தப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதுதான் வழக்கம். அதே ஃப்ரண்ட்ஸோடு சேர்ந்திருக்க விடமாட்டார்கள். கேட்டா படிப்புல கவனமில்லாம கூட்டுச் சேர்ந்து சுத்திட்டுத் திரிவாங்கன்னு இப்டி ஒரு முறை.

அமுதாவுக்கு  அவளோடு முந்தைய வகுப்பில் ஒன்றாய் படித்த தோழி செல்வியே வந்ததில் சந்தோஷம். அமுதா, செல்வி, சுகந்தி மூவரும்தான் ஃப்ரண்ட்ஸ். இந்த மூவருக்குள்தான் போட்டியே. முதல் மூன்று ரேங்க் எடுப்பதும் இவர்களுக்குள் தான் ….

ஆனால் இங்கே பத்தாம் வகுப்பில் மற்ற வகுப்பு படிப்புப்புலிகள் யார்யார்னே தெரியலையே!, என்று செல்வியும் அமுதாவும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

வகுப்புகளுக்குச் சென்று உயரவரிசைப்படி டெஸ்க்கில் அமரவைக்கப்பட்டனர். சிறிது நேரத்திலேயே வகுப்பில் கசமுசவென பேச்சும் கடைசி டெஸ்க்கில் ஒருத்தி மட்டும் இருந்து மற்ற இருவர் டீச்சர் அருகில் கீழே வந்து உட்காரவும் என்ன ஏதோவென சலசலப்பு..

அப்போதுதான் கடைசி பென்ச் எல்லோரின் பார்வைக்கும் வந்தது.

அங்கே…

வொய்ட் அண்ட் ப்ளூ யூனிஃபார்மிலேயே அது சென்ற வருடம் துவைத்ததாக இருக்கலாம். அத்தனை அழுக்காக… தலைமுடியில் அளவுக்கு அதிகமாக வழிய வழிய எண்ணெயோடு பள்ளி விதிமுறைக்கு மாறாக ஒற்றைச்சடையோடு… அவளைப் பார்த்தால் முகத்தில் பல்வரிசை அந்த உதடுகளைப் பாதுகாக்கும் அரண்போல குத்தீட்டியாக இருக்க யாரையும் சட்டைசெய்யாது குனிந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

வகுப்பினுள் நுழைந்த கணக்கு டீச்சர் மேகலா ஏய் ஏன்டீ கீழ உட்கார்ந்திருக்கீங்க? டெஸ்க் பத்தலையா? போ போ.. மேல போய் உக்காரு.. என்றார்.

இல்ல டீச்சர். வேணாம் நாங்க இங்கயே உக்காந்துக்கிடுறோம் ..

அப்போதெல்லாம் பெரிய படிப்பாளிப் பிள்ளைகள் டீச்சர் சேர் பக்கத்தில் கீழே உட்கார்ந்து பாடத்தைக் கவனிப்பதை பெருமையாக நினைப்பார்கள். அப்படி நினைத்துக்கொண்ட மேகலா டீச்சர் அதன்பிறகு எதுவும் கேட்கவில்லை.

நாளாக நாளாக மெல்ல மெல்ல அந்தக் கடைசி பென்ச் யாராலும் கண்டுகொள்ளப்படாத யாரும் திரும்பிக்கூடப் பாராத பென்ச் ஆகிப் போனது. அவள் அமர்ந்து எண்ணெய்ப்பிசுக்கும் அழுக்குமாக அந்த டெஸ்க் இருந்தது. இன்னுஞ் சொல்லப் போனால் அதற்கு முந்தின பென்ச் பிள்ளைகளும் சைடு பக்கத்து டெஸ்க்கில் இடம் கேட்டு நாலு பேராக நெருக்கடியாக இருந்தாலும் பரவாயில்லை என்று இடம் மாறினார்கள்.

எங்கேயிருந்தாலும் அவளைக் கண்டால் மட்டும் எல்லோருக்கும் ஒருவித ஒவ்வாமை வந்துவிடும். பி.டி. பீரியடுக்குக் கூட அதனால் அவள் வருவதில்லை. அதுவே மற்றவர்களுக்கு பெருத்த நிம்மதி.

அப்படி என்னதான் அவளிடம் குறை? ஏன் எல்லோருக்கும் ஆகாதவளாக  இருக்கிறாள்?

அவள் வீட்டில் அவள் அம்மா அல்லது  யாரும் அவளைக் கவனிப்பதே இல்லைபோல… அவளது தலை முழுக்க திருவிழாவுக்குக் கட்டப்பட்ட சீரியல் பல்பைவிட வெகுநெருக்கமாக ஈரும், விடுமுறைக் காலங்களில் சுற்றுலாத்தலங்களில் ஒழுங்கு செய்யப்படாது அங்கங்கே நிரம்பி வழியும் கூட்டம் போல பேன்களும் வகைவகையாக வலம் வரும்.

அதுமட்டுமா? அவை சிலபல நேரங்களில் புருவமயிரில் நின்றாடும். கன்னக்கதுப்பின் கடைசிப் பகுதியான கிருதாவுக்கருகில் கட்டாயம் விளையாடும். இதுபோக அவ்வப்போது கைகளில் ஊர்ந்து செல்லும். கூர்ந்து கவனித்தால் ஆடைகளில் எப்போதும் அங்கங்கே சீலப்பேன் என்று சொல்வார்களே தன் சுத்தமின்மையால் அவையும் நடமாடிக் கொண்டிருக்கும். ஒருவித நாற்றமடிக்கும். எல்லோருக்கும் அசூயையாக இருக்கும்.

திடீர் திடீரென்று இரண்டிரண்டாக சண்டையிட்டு வெடித்து சிதறும்போது டெஸ்க்கில் விழுந்து பரவித் திண்டாடும்.  டெஸ்க்கிலெல்லாம் ஊர்ந்து பரவினால் யார் அவளுக்குப் பக்கத்தில் உட்கார நினைப்பார்கள்?

இப்படியாக அவள் யாராலும் ஆமாம் டீச்சர்களாலும் கண்டு கொள்ளப்படாதவளாகவே பள்ளிக்கு வந்து சென்றாள். என்ன சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் தன் சுத்தம் பேணாதவளை தலைச்சுத்தம் பேணி ஈறுபேன்களை ஒழிக்க நினைக்காதவளை வேறென்ன செய்வது? 

கணக்கு டீச்சர் மட்டும் சற்றும் தளராத மனம் கொண்ட விக்கிரமாதித்தன் போல தன் கடமையாக தினந்தோறும் அவளுக்கு எடுத்துச் சொல்வதை விடவே இல்லை. கூடவே அவளுக்கு அவ்வப்போது வசவும் விழும். ஆளப்பார்த்தா அழகுபோல வேலையப் பார்த்தா எழவுபோலன்னு ஒரு சொலவட உண்டு. உனக்கு யார்டீ இப்டி ஒரு பேரு வச்சாங்கன்னு டீச்சர் அடிக்கடி வைவாங்க. ஆனால் அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிப் போனதுதான் மிச்சம்.

என்ன படிக்கிறா? எப்படிப் படிக்கிறா? என்ன மார்க் வாங்கறான்னு நாங்க யாருமே கவனத்தில் எடுத்துக்கறதே இல்லை. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அவள் பள்ளிக்கு வரவில்லை. என்ன ஆனாளோ தெரியவில்லை.

அமுதா இப்போது சுயநினைவுக்கு வந்தவளாக, ஆமா இவ(ங்க) டென்த் ஸ்டாண்டர்டுன்னு சொன்னதும் யோசிக்க ஆரம்பிச்ச நாம ஏன் வேறெதும் யோசிக்காம என்றைக்கோ மறந்து போன அவளைப்போய் நினைத்தோம்? என மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தாள்.

ஏய் ஏய்… என்ன நீ …நீள நீளமா ரீல் போட்டு பார்த்துட்டே இருக்க? என்னைய நினைவில்ல உனக்கு. ரைட்டா?

ஆமா..என்றாள் தயங்கியவாறே

நாந்தான் கடைசி பென்ச் “ஸ்ரீதேவி”

அவ்வளவுதான்.. ஆயிரம் வாட்ஸ் ஷாக் அடித்ததுபோலானாள் அமுதா.

என்ன ஷாக்காகிட்டியா?

இல்ல…என்று இழுத்தாள்

சமாளிக்காத. எனக்குப் புரியாம இல்ல..

அமுதாவுக்கு சங்கடமாகிவிட்டது.  டென்த்னு சொன்னதுமே நமக்கேன் வேறெதுவும் நினைவு வராம இவளப்பத்தி நினைச்சோம்?! என்று ஒரே மர்மமாய் இருந்தது. அடையாளமே தெரியாம ஸ்டைலிஷா மாறிட்டாளே! நாமதான் இவகிட்டப் பேசினதே இல்லையே… ஆனாலும் கௌரவம் பார்க்காம நம்மள கண்டுபிடிச்சுத் தானா வந்து பேசறாளே!! பரவால்ல என நினைத்தாள்.

சரி வா ஒரு காபி குடிச்சிட்டே பேசலாம் என்று அமுதாவை அழைத்தாள்.

இல்ல இருக்கட்டும். வீட்டுக்குப் போணும்… என்றாள் இன்னும் அவளைப்பற்றிய அவள் உருவம் பற்றிய பிரமிப்பிலிருந்து மீளாதவளாக.

அட வாப்பா… அந்த டீக்கடைல ஒரு அக்கா டீ போடுவாங்க. சூப்பரா இருக்கும். வா குடிச்சிட்டே கொஞ்ச நேரம் பேசிட்டுப் போலாம், என்றாள்.

என்னது டீக்கடைல டீ குடிக்கவா?

ஏன் பொம்பளைங்க டீக்கடைல டீ குடிக்கக் கூடாதுன்னு சட்டம் எதுனா இருக்கா என்ன?

இல்ல…

பொறவென்ன தயக்கம். வா…என்றவாறே ரோட்டின் எதிரில் சற்று தள்ளியிருந்த டீக்கடையில் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு, “அக்கா ரெண்டு டீ, சூப்பரா போடுங்கக்கா” என்றாள்.

என்ன தேவி ஃபிரண்டா?

ஆமாங்கக்கா. டென்த் ஸ்டேண்டர்டு ஃபிரண்டு என்றாள்.

அவள் ஃபிரண்டு என்று சொன்ன வார்த்தையில் சற்றே கூசினாள் அமுதா.

டீ சொன்ன கையோடு கடையில் தொங்கிக் கொண்டிருந்த செய்தித்தாளின் அன்றைய முக்கியச் செய்தியான “சட்டப் பிரிவு 370 ரத்து… ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து இந்திய அரசால் ரத்து செய்யப்படுவதாக” இருந்ததை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள் தேவி.

டீ வந்ததும் அமுதாவுக்கு ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு பேச்சைத் தொடங்கினாள்.

எந்த ஊர்ல இருக்க அமுதா?

திருச்சில…

நான் இந்த ஊர்லதான். இந்த ஊரவிட்டுப் போகக்கூடாதுன்னு தான்…

அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் ஒருவித மிரட்சியும் பிரமிப்பும் அகலாத மனநிலையில் இருந்த அமுதாவை சகஜ நிலைக்கு மாற்ற தானாகவே பேச்சைத் தொடங்கினாள் தேவி.

என்ன அமுதா….டென்த்ல நான் அப்டி இருந்ததுக்கு உங்களுக்கெல்லாம் காரணம் தெரியாதுல்ல..? அப்ப யார்ட்டயும்பேசாம இப்ப மட்டும் தானா வந்து பேசறாளேன்னு தோணுதா? அது அந்தக்காலம் ஒரு வெரதம் இல்ல தவம் போலன்னு வச்சுக்கயேன்.  எனக்கு சின்ன வயசிலயே அப்பா இறந்துட்டாங்க. உங்களுக்கெல்லாம் என்னைப்பத்தி எதுவுமே தெரியாதுல்ல??..

எங்கம்மா வேற ஒரு ஆளச் சேர்த்துக்கிட்டாக. அந்த ஆள் சரியில்ல. அம்மாட்டச் சொன்னா நம்பல. அதான் நான் யாரும் நெருங்க முடியாத முள் வேலி போட்ட மாதிரி வேஷம் போட்டுக்கிட்டேன்.

நீ என்ன செய்ற? பசங்க எத்தன?

நான் ஹவுஸ்வொய்ஃப் தான். பொண்ணு ஒண்ணு பையன் ஒண்ணு.பொண்ணுக்கு வரன் பார்க்கறோம். பையன் காலேஜ் படிக்கிறான்.

ஹவுஸ் வொய்ஃப் தான் அப்டின்னு சொல்லாத. நம்மளே அப்டிச் சொல்லலாமா? அது எவ்ளோ பெரிய வேலை.. அத நம்மளே மதிக்கத் தெரியணும்.

சரி சரி… நீ சொல்லு இப்ப உன்னப் பத்தி..

என்னப்பத்தித்தான இவ்ளோ நேரமா சொல்லிட்டு இருந்தேன்..

இல்ல நீ வேல பார்க்கறியா? பிள்ளைக எத்தனை? என்ன செய்றாங்க?

டீச்சர் ட்ரெய்னிங் முடிச்சு வேலை கிடைச்சு கல்யாணமும் ஆச்சு. குழந்தை இல்ல. டைவர்ஸ் வாங்கிட்டுப் போய்ட்டாரு. நானும் பெரிசா அலட்டிக்கல. ஈரும் பேனும் இருந்த தலைமுடி முழுக்க கொட்டிப் போச்சு. யாருமில்லாத தனி ஆளாவே படிச்சு வேல பார்த்து போராடி மீண்டு வந்துட்டேன். அந்தக் காலத்துல ஈரு பேனுக்கு மட்டும் இடமிருந்த தலைமுடிகூட போச்சு… இப்ப அதுவும் இல்ல.  அதான் பாப் கட் பண்ணிக்கிட்டேன் அமுதா. வீஆரெஸ் வாங்கிட்டேன். அப்பப்போ எதாவது ஊரச் சுத்திப்பார்க்கக் கிளம்பிடுவேன். நினைச்சபடி ஜாலியா இருக்கேன்ப்பா”…. என்ற ஸ்ரீதேவியை முதல் முறையாக வேறொரு கோணத்தில் பார்த்தாள் அமுதா.

00

விஜயராணி மீனாட்சி

இராஜபாளையம்

தனியார் பள்ளியில் முன்னாள் ஹிந்தி ஆசிரியர்.

உள்ளூர் தொலைக்காட்சி நேரலை செய்தி வாசிப்பாளர்,

தனியார் நூலகத்தில் நூலகராக இரண்டு ஆண்டுகள்.

2016 லிருந்து இலக்கியம் தொடர்பான  வாசிப்பு 

2017 ல் கலை இலக்கியப் பெருமன்றத்தில் 3 ஆண்டுகள்  நகரத் தலைவர்.

பகிர்வு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகர்.

கவியரங்களில் பங்கு பெறுதல்,

கவிதை , கதை, கட்டுரை  ஆகியவை பல மின்னிதழ் , அச்சிதழ்களிலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *