– கி.ச.திலீபன்
பெருநகரத்தின் மக்கள் திரள் உண்டாக்கும் பதற்றமும், அதனை எதிர்கொள்வதிலான அச்சமும் அப்போது அவனை ஆட்கொண்டிருந்தது. சென்னைக்கு வரும் முடிவை விரும்பி எடுத்தது அவன்தான் என்றாலும் பண்டிகை காலத்தில் ஊருக்குத் திரும்புவதில் உள்ள அவஸ்தைகள் என்னவென்பதை அவன் அறிந்திருக்கவில்லை. தீபாவளிக்கு முந்தைய இரவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில், நிரம்பித் ததும்பும் பயணியர் கூட்டத்துக்கு நடுவே அவன் நின்றிருந்தான். அந்த வரிசையில் சேலம் செல்லும் பேருந்துகள் வருகையில் எல்லாம் பெருங்கூட்டம் பேரலையாக எழுந்தோடியது. தங்களது ஒட்டுமொத்த வலுவைத் திரட்டி ஒருவரைத் தள்ளியபடி ஒருவர் என இருக்கையைக் கைப்பற்றுவதற்கான மூர்க்கமான மோதல் நிகழ்ந்தேறியது. இன்னும் சிலர் பேருந்து நிலையத்தின் நுழைவுக்கே சென்று, சற்றே வேகம் தளர்ந்து ஓடும் பேருந்தில் ஏறி இடம்பிடித்துக் கொள்வதால், வரிசைக்கு வரும் முன்னதாகவே பேருந்து பகுதியளவு நிறைந்து வந்தது. 16 வயதே ஆன மெலிந்த தேகத்தைக் கொண்டிருக்கும் அவன், அந்தக் கொடூர நெரிசலை வென்று தனக்கென இருக்கையைக் கைப்பற்றுவதிலான சாத்தியங்களை எண்ணித் துணுக்குற்றான். இருக்கைகள் நிறைந்தாலும் நின்று கொண்டே செல்லும் முடிவில் படிக்கட்டுகள் வரையிலும் கூட்டம் தளும்பிக் கொண்டிருந்து. மூச்சு முட்டுகிற அக்கூட்டத்தில் நின்றபடியே சேலம் வரையிலும் செல்வதை நினைத்துப் பார்க்கையில் ஊருக்குச் செல்லும் திட்டத்தினைக் கைவிட்டு தனது விடுதிக்கே திரும்பி விடலாம் என்று கூடத் தோன்றியது. இருந்தும் இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டமெல்லாம் கரைந்து சென்று விடும் என்கிற நம்பிக்கையிலேயே காத்திருந்ததில் நள்ளிரவாகி விட்டது. இனி விடுதிக்குத் திரும்புவதும் அவ்வளவு எளிதல்ல. மாநகரப் பேருந்துகளின் வரத்து குறைந்திருக்கும் இந்நேரத்தில் பேருந்தைப் பிடித்து பட் ரோட்டில் இறங்கி இந்த நள்ளிரவில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அவன் விடுதிக்கு நடந்து செல்ல வேண்டும். வழியெங்கும் உள்ள தெரு நாய்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இன்னும் வரப்பெறாத அவனால் அது சாத்தியமே இல்லை.
செல்போனை எடுத்துப் பார்த்தபோது மணி 1-ஐக் கடந்திருந்தது. சிறிதளவே ஒட்டிக்கொண்டிருந்த பண்டிகைக் களையும் அவனுள் காணாமல் போனது. இப்போது பேருந்து ஏறினால் கூட சத்தியமங்கலம் போய்ச்சேர்வதற்குள் முதற்பாதி நாள் கடந்து போய் விடும். காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிகிற பரவசம் ஏதுமின்றி கொண்டாட்டம் முடிந்து ஓய்ந்திருக்கும் தெருக்களைத்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்பதை நினைக்கையில் அவனுள் ஆற்றாமை எழுந்து அடங்கியது. மக்கள் திரள் ஆர்ப்பரிப்புடன் அடுத்ததாக வந்த சேலம் பேருந்தை நோக்கி ஓடுகையில் அவனும் ஓடினான். எப்படியாயினும் இடத்தைப் பிடித்தமர்ந்து சென்று விடும் மூர்க்கம் அவனுக்குள் எழுந்தது. பேருந்து வந்து நிற்பதற்குள்ளாகவே படிக்கட்டை ஒட்டியபடியே ஓடிய கூட்டத்தினுள் அவனும் கலந்து ஓடினான். பேருந்து நின்றதும் தானும் ஏற முடியாது பிறரையும் அனுமதிக்காது மல்லுக்கட்டிக்கொண்டிருந்த அக்கூட்டத்தினுள் சிக்கிய அவனுக்கு மூச்சு முட்டியது. யாரோ ஒருவன் அவனது தோள் பற்றித் தள்ளி விட்டு முன்னகர்ந்ததில் அவனது சட்டையின் மேல் பொத்தான் பிய்ந்து போனது. சிலர் ஜன்னல் வழியாக தங்களது பைகளைத் தூக்கி உள்ளே எறிந்து தங்களுக்கான இடத்தினை உறுதி செய்தனர். இன்னும் சிலர் ஓரளவு வளர்ந்து விட்ட தங்களது குழந்தைகளை ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பினர்கள். அவர்கள் உள்ளே சென்றதும் எப்படி இடம் பிடிக்க வேண்டும் என்பதற்குப் பழக்கப் படுத்தப்பட்டிருந்தனர்! இதனையெல்லாம் தாண்டி இவர்களெல்லாம் கைக்கொண்டது போக மீதமுள்ள இடங்களுக்காகத்தான் படிக்கட்டுகளில் கடும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. யாரும் யாரைப்பற்றியும் சிந்திக்கும் வாய்ப்பற்ற அக்கூட்டத்தினிடையே அவன் சிக்குண்டு அல்லற்பட்டான். கூட்டத்தைத் தன் திறன் கொண்டு தள்ளியபடி முதலில் ஒருவன் ஏறி உள்ளே போனான். பின்னால் அக்கூட்டம் பாய்ந்து வந்தது. அவ்வளவுதான் அது நிரம்ப முழுமையாக ஒரு நிமிடங்கள்கூட தேவைப்படவில்லை. மீண்டும் அவன் வாசலோடு திருப்பி அனுப்பப்பட்டான்.
கலவரத்தில் சிக்கி மீண்டவனைப் போலத் திரும்பி வந்து நின்றவனிடம் பக்கத்தில் நின்றிருந்த பச்சை சட்டை அணிந்திருந்தவன்…
“ரொம்பக் கஷ்டம் ஏறுறது…” என்றான்.
“ஆமாங்க” என்றபடியே அவன் பச்சை சட்டைக்காரனைப் பார்த்தான். அவனுக்கு வயது 40 இருக்கலாம். மீசையும், தாடியும் நரை கண்டிருந்தது. சற்றே தொந்தி முட்டிக் கொண்டிருக்கும் அளவுக்கு பருத்த உடல் அவனுக்கு. இந்த ஆள் மட்டும் அக்கூட்டத்தில் சிக்கியிருந்தானென்றால் எல்லாவற்றையும் பிதுக்கி அனுப்பியிருப்பார்கள் என்பதை நினைக்கையில் இவனுக்கு சிரிப்பு வந்தது.
“கூட்டம் குறையவே குறையாது… காலைல வரைக்கும் இப்படித்தான் இருக்கும்” என்று அவன் சொல்ல. அதற்கு என்ன பதில் தருவதென்று யோசிக்கக்கூட இவனுக்குச் சலிப்பாக இருந்தபடியால் “வேற என்ன பண்ண முடியும்?” என்று மட்டும் சொன்னான். இவனது சிந்தனை முழுக்க ஊருக்குப் போவதற்கான வழியை மட்டுமே தேடிக்கொண்டிருந்ததால் சக மனித உரையாடல் மீதெல்லாம் ஆர்வமற்று இருந்தான்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விழுப்புரம்… விழுப்புரம்…. விழுப்புரம் என்று விழுப்புரத்தைக் கூப்பிட்டபடியே வந்தார். “அண்ணா விழுப்புரம் போறது யார்னா இருக்கீங்களா… ஷேர் ஆட்டோ போகுது” என்று குரலுயர்த்திக் கேட்டார். கூட்டத்திலிருந்த ஒருவர் “எவ்ளோண்ணா விழுப்புரத்துக்கு” என்று கேட்க… “எறநூறு ரூவாண்ணா” என்றார். அதற்கு அவர் “அம்மாடியோவ்” என்று சொல்லி விட்டு “இந்தக் காசுக்கு ஈரோடே போயிரலாம்” என்றார். ஆட்டோ ஓட்டுநர் அவரைப் பொருட்படுத்தாமல் மீண்டும் “விழுப்புரம்… விழுப்புரம் போறது” என்று குரல் கொடுக்க கூட்டத்திலிருந்து இரண்டு பேர் முன் வந்தார்கள். ஆட்டோ நிற்கும் இடத்துக்கு அவர்களை ஓட்டுநர் கூட்டிகொண்டு போனார்.
“பண்டிகை நாள்னாலே இப்படித்தான் இருக்கும்… விழுப்புறம் போறதுக்கே எறநூறு ரூபா கேட்குறானுக. அநியாயமா கொள்ளை அடிப்பானுக” என்றபடியே பச்சை சட்டைக்காரன் இவனைப் பார்த்தான்.
“நான் ஒரு யோசனை சொல்லட்டுமா… விழுப்புரம் வழியா சேலம் போற பஸ்ஸெல்லாம் கூட்டமாத்தான் இருக்கும்… வேலூர் போற பஸ்ஸுல இவ்வளவு கூட்டம் இருக்காது. வேலூர் போய் அங்கிருந்து சேலத்துக்கு மாறிப் போறதுதான் ஈஸியான வழி… நான் வேலூர் பஸ்ஸுக்குத்தான் போலாம்னு இருக்கேன் நீயும் வர்றியா” எனக்கேட்டான். விழுப்புரம் வழியைக் காட்டிலும் வேலூர் வழி சற்றுத் தொலைவு அதிகம் என்பதை மட்டும் இவன் அறிந்திருந்தான். தற்போதைய சூழலில் சற்றுக் கூடுதல் தொலைவெல்லாம் பொருட்டே இல்லை என்றானதால் இவன் மறுப்பேதும் சொல்லாமல் “சரி… போலாம்” என்றபடி அவனுடன் நகர்ந்தான். முடிந்தளவு சீக்கிரத்தில் வீடு போய்ச்சேர வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருக்க வழிகளையெல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. மனிதர்களை எதிர்கொள்ளும் துணிவு இயல்பாகவே அவனிடம் இருந்தாதால் ஓர் அந்நியனுடன் பயணப்படுவது குறித்து எந்தத் தயக்கமும் இல்லாமல் பச்சை சட்டைக்காரனோடு போய் வேலூர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினான்.
அவன் சொன்னது போலவே வேலூர் பேருந்தில் முண்டியடித்து ஏறும் கூட்டமில்லை. பேருந்தினுள் ஏறியதும் இவன் ஜன்னலோர இருக்கையைத் தேடிப்பிடித்து அமர்ந்தான். பச்சை சட்டைக்காரன் வந்து பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான். சீரான இடைவெளியில் மக்கள் பேருந்தினுள் ஏறிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் ஏறியதும் குடுகுடுவென ஜன்னல் இருக்கையை நோக்கி ஓடின. சில குழந்தைகள் பேருந்தின் நீளத்தைக் கால்களால் அளந்தன. நள்ளிரவுக்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் எல்லோரது முகத்திலும் பண்டிகைக்களை குடி புகுந்திருந்தது. விடிந்ததற்குப் பிற்பாடான கொண்டாட்டங்களைப் பற்றி உற்சாகம் ததும்ப பேசிக் கொண்டிருந்தனர். இவனுக்குள்ளும் உற்சாகம் ஊற்றெடுத்தது. பேருந்தினுள் இருபுறமும் தொலைக்காட்சிப் பெட்டி பொருத்தப்பட்டிருந்தது. சற்று நேரத்திலெல்லாம் அப்பெட்டியில் கடந்த ஆண்டு வெளியான ‘கில்லி’ திரைப்படம் ஓட்டப்பட்டது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பண்டிகை தின சிறப்புத் திரைப்படத்தைக் காணும் கொண்டாட்ட மனநிலைக்கு வந்தான். வேலூர் போகிற வரையிலும் சோர்வையே உணராதபடி படம் பார்த்து வரலாம் என்று நினைத்தான்.
முழுக்கவனத்தையும் படத்தில் குவித்திருந்த இவனிடம் பச்சை சட்டைக்காரன் “உன் பேரென்ன?” என்றான்…
“தினேஷ்”
“நீ விஜய் ஃபேனா”
“இல்ல… விஜயகாந்த் ஃபேன்” என்று தினேஷ் சொன்னதும் அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பின்னர் அவன்… “இது செம்ம படம்ல…” என்றான்.
“ஆமா… தேட்டர்லயே மூனு தடவப் பார்த்தேன்”
“அப்ப சரி” என்று அவன் சொல்ல தினேஷ் மீண்டும் படத்துக்குள் போனான். பேருந்தில் படம் ஓட்டப்படுவதன் நன்மைகளுள் இந்த ஆளுடனான தேவையற்ற உரையாடலைத் தவிர்க்க முடிவதும் ஒன்று என நினைத்தான் தினேஷ்.
“சூரத்தேங்கா… அட்றா… அட்றா” பாடல் வருவதற்குள்ளாகவே பயணிகள் நிரம்பி விட்டதால் பேருந்து புறப்பட்டது. பச்சை சட்டைக்காரன் அவனுக்கு மட்டும் பயணச்சீட்டு வாங்கிக் கொள்ள, சரியான சில்லரை கொடுத்து தினேஷும் சீட்டு வாங்கிக் கொண்டான். பேருந்து மதுரவாயலைக் கடக்கும் வரை எதுவும் பேசாமல் வந்த அவன், தினேஷிடம்…
“என்ன சின்னப் பசங்க மாதிரி படம் பார்த்துக்கிட்டிருக்க… எடுத்துக் கையில புடி” என்றான்.
தினேஷ் படத்திலேயே லயித்துக்கிடப்பவனைப் போல எதுவும் சொல்லாமல் இருந்தான். அவனுக்கு அது கேட்டதுதான். கேட்காதது போலவே பார்வையை படத்திலிருந்து விலக்காமல் உட்கார்ந்திருந்தான். பேருந்து நிலைய சிறுநீர் கழிப்பிடங்களில் தன் குறியினைக் கூர்நோக்குகிற கண்களை சந்திக்காமல் எப்படித் தவிர்க்கிறானோ அது போலவே இந்த பச்சை சட்டைக்காரனை கண்டு கொள்ளாமல் கடந்து விட நினைத்தான். பேருந்து புறப்படுவதற்கு முன்பு இப்படிச் சொல்லியிருந்தான் என்றால் இறங்கி வேறு பேருந்துக்கு மாறியிருப்பான். வேலூர் போகிற வரைக்கும் இனி எதுவும் செய்ய முடியாது. கிஞ்சித்தும் பார்வையை படத்திலிருந்து நகர்த்தாமல் நேரத்தைக் கடத்தினான். இந்தப் பேருந்தை இன்னும் வேகமாக ஓட்டினால்தான் என்ன? நன்றாக மிதித்தால் எக்ஸலரேட்டர் உடைந்து விடுமா? என்று ஓட்டுநரைப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று தோன்றியது தினேஷுக்கு.
பொறுமையிழந்த அந்த பச்சை சட்டைக்காரன் “பார்த்த படத்தையே எத்தனவாட்டிப் பார்ப்ப?” என்று அழுத்தமாகவே கேட்டான்…
“பிடிச்ச படத்தை எத்தனவாட்டி வேணாலும் பார்க்கலாம்” என பதில் தந்தான் தினேஷ்.
இருந்தும் தினேஷுக்கு மனம் ஒப்பவில்லை. பச்சை சட்டைக்காரன் தன்னை எளிதாகக் கைக்கொண்டு விட முடியும் என்கிற நினைப்போடு தன் மீது அதீத உரிமை எடுத்துக் கொள்வது போலத் தோன்றியது. அதனை நினைக்கையில் தினேஷுக்குத் தாள முடியாத ஆற்றாமை எழுந்தது. இவன் யார் தன்னைக் கேள்வி கேட்க… இவன் எப்படி தன்னிடம் அப்படிப் பேச முடியும் என நினைக்கிறான்… இவன் கூப்பிட்டதும் இவனுடன் வேலூர் பேருந்துக்கு வந்ததைத் தவிர தான் எதுவுமே செய்யவில்லையே… ரத்த ஓட்டம் மூளையை நோக்கியே பாயும்படியாக அவன் தீவிர எண்ண ஓட்டங்களுக்குள் போனான். பின்னர் தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டு பச்சை சட்டைக்காரனிடம் எகிறி விட வேண்டும் என முடிவெடுத்து அதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான். அந்த சந்தர்ப்பம் வெகு தொலைவிலெல்லாம் இல்லை. அந்த பச்சை சட்டைக்காரன் அடுத்து என்ன பேசினாலும் எகிறி விட வேண்டியதுதான்.
“நீ இந்நேரத்துக்கு வயசுக்கு வந்திருப்பதான” என்று அவன் கேட்க, தினேஷ் மூர்க்கமாக எழுந்தான்.
“உங்களுக்கு என்னங்க பிரச்னை… படம் பார்க்க விட மாட்டீங்களா… வந்ததுல இருந்து தொண தொணன்னு எதையாச்சும் பேசிக்கிட்டே இருக்கீங்க” என சற்றுக் குரல் உயர்த்தியே சொன்னான். சுற்றியுள்ள இருக்கைகளில் உள்ள பயணிகளில் சிலர் இவர்களைத் திரும்பிப் பார்க்கும்படியாக தினேஷ் அவனை சுடு சொற்களில் பேசியதில் அவன் சற்று அரண்டுதான் போனான். நீண்ட நேரம் அவன் வாய் திறக்கவே இல்லை. ஒரு பிரச்னையை துணிச்சலாக எதிர்கொண்டு விட்டதாக தினேஷுக்கு சற்றே தன் மீது பெருமை மேலோங்கியது. பேருந்து ராணிப்பேட்டையைக் கடந்த பிறகு அவன் மீண்டும் தினேஷிடம் வந்தான்…
“என்ன தம்பி… கோவிச்சுட்டியா… நான் உங்கிட்ட வெளையட்டுக்கு சொன்னேண்டா பையா…” என சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்.
“எந்த இதுக்காகவும் நீங்க இப்படிப் பேசத் தேவையில்லை” என்றான் தினேஷ். உண்மையிலும் அவன் விளையாட்டுக்குதான் சொன்னானா… இல்லை, தன் எதிர்வினை காரணமாக பின் வாங்குகிறானா என்று இவனுக்குக் குழப்பமாகவே இருந்தது. அவன் விளையாட்டுக்காகச் சொல்லியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறதுதான். அந்தரங்க உறுப்பைக் குறித்துப் பேசுவது இங்கே பலருக்கும் கேளிக்கையானது என்பதை தினேஷ் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதுதான் தெரிந்து கொண்டான். அப்போது ஒரு நாள் கோட்டூர் வீராம்பாளையத்தில் இருந்து குய்யனூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு இவன் தனியாகப் போனான். இவன் பயணச்சீட்டு வாங்கிக் கொண்ட பிறகும் நடத்துநர் வந்து “தம்பி… டிக்கெட் வாங்கியாச்சா” என்றார். இவனும் “வாங்கியாச்சுங்ணா” என்று சொல்ல மீண்டும் அவர் “தம்பிக்கு டிக்கெட் வாங்கியாச்சா” என்று இவனது தொடையைத் தொட்டு உலுக்கியபடி கேட்க இவனும் “வாங்கியாச்சுங்ணா” என்று சொன்னான். அதைக்கேட்டு நடத்துநர் தொடங்கி பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் மக்கள் எல்லோரும் சிரித்த போது எதற்காகச் சிரிக்கின்றனர் என்றே தினேஷுக்குப் புரியவில்லை. வகுப்பறையில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் சத்யசீலனிடம் சொன்ன போது அவனுக்கும் சிரிப்பு வந்தது. “டேய்… தம்பின்னா இதுடா” என்று சுட்டிக்காட்டிச் சிரித்தான். இதெல்லாம் ஒரு நகைச்சுவையா என தினேஷுக்கு அப்போது எரிச்சலாக இருந்தது. அடுத்த முறை அந்த நடத்துநரைப் பார்க்கையில் அவரது பேண்ட் -ஐக் கழற்றிக் கீழே இழுத்து விட்டு ஓடி விட வேண்டும் என்கிற அளவுக்குச் சினம் கொண்டான். பச்சை சட்டைக்காரன் அந்த நடத்துநரைப் போலத்தான் என நினைத்த தினேஷ் இனி அவன் தன்னை சீண்ட மாட்டான் என்கிற உறுதிப்பாட்டில் படம் பார்க்க ஆரம்பித்தான். ‘கொக்கரக் கொக்கரக்கோ…’ பாடல் வருகையில் எல்லாம் பேருந்து வேலூருக்குள் நுழைந்து விட்டது.
“தம்பி… பார்த்தீல்ல சட்டுன்னு வேலூருக்கு வந்துட்டோம்… இங்க இருந்து சேலத்துக்கு ஒரே பஸ்தான் போய்க்கிட்டே இருக்கலாம்” என பச்சை சட்டைக்காரன் சொல்ல உறங்கிக் கொண்டிருந்த வேலூர் நகரத்தை ஜன்னல் வழியே பார்த்தபடி வந்த தினேஷ் அவனுக்கு “ம்ம்ம்” என்பதை மட்டும் பதிலாகக் கொடுத்தான். வேலூர் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்ததுமே பயணிகள் அனைவரும் எழத் தொடங்கினர். ஏறுவதில் காட்டும் வேகத்துக்கு நிகராகவே இறங்குவதிலும் வேகம் கூட்டுவர். சீக்கிரத்தில் இறங்கினால் அடுத்த பேருந்தில் இடத்தைக் கைப்பற்றி விடலாமில்லையா. தினேஷ் பச்சை சட்டைக்காரனை சற்று முன்னால் அனுப்பி விட்டுத் தான் பின்னால் இறங்கிக் கொள்ளலாம் என நினைத்து அவனுக்குப் பின் சிறிது இடைவெளி விட்டே சென்று கீழே இறங்கினான். இவன் இறங்குகையில் அவன் படியருகேதான் நின்றிருந்தான். “சேலம் பஸ்ஸுக்கு அந்தப் பக்கமாப் போகணும்… சீக்கிரம் வா” என்றபடி அவன் முன்னால் சென்றான். அவனைப் பின் தொடர்ந்து போவதைத் தாண்டி வேறு தேர்வுகள் இல்லாத நிலையில் தினேஷ் அவனுடன் சேலம் பேருந்து நிற்கும் வரிசைக்குச் சென்றான். பார்வையின் ஒரு சுற்றிலேயே எண்ணி விடக்கூடிய அளவுதான் கூட்டம் இருந்தது. அனைவரும் சேலம் பேருந்தை எதிர்நோக்கிக் கிடந்தனர். பச்சை சட்டைக்காரன் “ஒரு நிமிசம் நில்லு வந்துடறேன்” என்று பேருந்து நிலையத்தின் நுழைவாயிலை நோக்கிப் போனான். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என தினேஷ் சிறுநீர் கழிப்பிடத்துக்குச் சென்றான். அவனுடன் இருக்கையில் சிறுநீர் கழிக்கச் செல்வதை அவன் ரகசிய அழைப்பாகப் பொருள் கொண்டு விட்டால் என்ன செய்வதென்கிற பதற்றம் இருந்தபடியால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் தினேஷ். ஆயசமாக சிறுநீர் கழித்து விட்டுத் திரும்புகையில் அந்த பச்சை சட்டைக்காரன் வலது கையில் கப் டீயைக் குடித்தபடியே இடது கையில் இன்னொரு டீ கப்பை ஏந்தியபடி நின்றிருந்தான்.
“எங்க போன நீ… நான் போய் சிகரெட் வாங்கிட்டு நம்ம ரெண்டு பேருக்கும் டீ வாங்கிட்டு வந்து பார்க்குறேன்… ஆளையே காணோ… இந்தாப் புடி… இப்பயே கொஞ்சம் ஆறிருக்கும்” என்றபடியே தினேஷை நோக்கி டீ கப்பை நீட்டினான் பச்சை சட்டைக்காரன். வாங்கலாமா வேண்டாமா என்பதில் தினேஷ் சற்றுக் குழம்பிப் போனான். அவனுக்குத் தேநீர் அருந்துவதில் எந்த நாட்டமும் இல்லை. இதனை மறுத்தால் இவனுக்காக அவன் தேநீரை வாங்கிச் சுமந்து வந்த கதையை சொல்லி ஒரு உரையாடலை உருவாக்கக் கூடும்… அது தேவையற்றது என்றாலும் இதனை வாங்கிக் கொண்டால் அவனுக்கு நன்றிக்கடன் பட்டவனாகி விடுவோமே என்கிற எண்ணமெல்லாம் ஓட அவனால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.
“புடி… என்ன டீல மயக்க மருந்து கலந்திருப்பேன்னு நினைக்கிறியா…” என்று சிரித்தபடியே கேட்டான். ஒவ்வாமை தரக்கூடிய சிரிப்பாக அது தினேஷுக்குப் பட்டது. இறுதியில் தினேஷ் அந்த டீ கப்பை வாங்கிக் கொண்டான். இரண்டு மிடறுகள் அருந்திய பிறகு மீண்டும் குழப்பம் அவனைச் சூழ்ந்தது. “அவசரப் பட்டு விட்டோமா?” தினேஷ் அவனுக்குள்ளாகவே கேட்டான். “உண்மையில் அந்தச் சூழலில் என்ன செய்வதெனத் தெரியவில்லை… முகத்தில் அறைந்தாற்போல வேண்டாமென மறுப்பதா? தட்டி விட்டு நகர்வதா? டீ கப்பை என் முன் நீட்டிக் கொண்டிருக்கும் சூழலில் துரிதகதியில் முடிவெடுக்க முடியாமல் வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று…” அடுத்த மிடறை உறிஞ்சினான். “இதன் மூலம் அவன் தன்னிடம் நெருக்கம் காட்டினால் என்ன செய்வது?” நான்காவது மிடறை அருந்தினான். “அதற்கு இடமளிக்கக் கூடாது… நான் அவனிடம் கேட்கவில்லையே… போக தேநீர் வாங்கச் செல்லும் முன்பு கூட அவன் என்னிடம் கேட்கவே இல்லை… இதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல… இதற்காக நான் அவனுக்கு நன்றியுடன் இருக்கும் தேவை இல்லை… நியாயப்படி இத்தனை பேர் முன்னதாக அந்தத் தேநீரை வேண்டாம் என மறுத்து சங்கடத்தை விளைவிக்காமல் வாங்கிக் கொண்டதற்காக அவன்தான் என் மீது நன்றியோடு இருக்க வேண்டும்” என தினேஷ் தனக்குள்ளேயே ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தான். அதன் பிறகு கப்பில் பாதியளவு இருந்த தேநீரைக் குடிக்கத் தோன்றவில்லை அவனுக்கு. எல்லாம் இந்த எழவெடுத்த டீயால் வந்தது என கப்பை ஒரு ஓரமாக விட்டெறிந்தான்.
சேலத்துக்கு அரசுப்பேருந்து வந்தது… தினேஷ் அந்த பச்சை சட்டைக்காரனுக்கு முன்பே பேருந்தில் ஏறி விட நினைத்து பேருந்து நிற்பதற்கு முன்பாகவே ஓடிப்போய் ஏறிக்கொண்டான். பேருந்தின் நடுப்பகுதியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்ட அவன் பேருந்தில் ஏறுகிற எவரேனும் தன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள மாட்டார்களா என்று பார்த்தபடி இருந்தான். திபு திபுவென ஏறிய எல்லோரும் ஜன்னலோர இருக்கையையே குறி வைத்தனர். அதை விட்டால் விளிம்பில் உள்ள இருக்கையில் உட்கார்ந்தார்களே தவிர இவனுக்குப் பக்கத்தில் இருக்கும் நடுவாந்திர இருக்கைக்கு யாரும் வரவில்லை அவன் தான் வந்தான். “பரவால்ல சீக்கிரத்துல ஏறி சீட்டைப் புடிச்சிட்ட” என்றபடியே உட்கார்ந்தான். தொலைக்காட்சி இல்லாத அந்தப் பேருந்தில் அவனிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள எதுவுமில்லை. பகல் நேரமாக இருந்தால் கூட ஜன்னல் வழியே பின்னோக்கி விரையும் நிலக்காட்சிகளைப் பார்த்தபடியே வரலாம். தற்போது அதற்கான வாய்ப்பும் இல்லாததை எண்ணிச் சலிப்புற்றான். அவனைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி தூங்கி விடுவதுதான் என்றெண்ணி நடத்துநருக்காகக் காத்திருந்தான். பயணச்சீட்டை எடுத்து விட்டால் சேலம் போகிற வரையிலும் எந்த இடையூறுமின்றித் தூங்கி விடலாம் என்று நினைத்தான்.
அப்போது தினேஷ் காதருகே வந்த அந்த பச்சை சட்டைக்காரன் “உன்னோடது பெருசா இல்ல சிறுசா” என்று கேட்டான். “உங்க வேலைய மட்டும் பாக்கிறீங்களா” என்று சொல்லி விட்டு வாசலைப் பார்த்தான். அப்போதுதான் நடத்துநர் வந்து முன் வரிசைக்கு சீட்டு தர ஆரம்பித்திருந்தார். அவர் தன்னிடம் வரும் ஒவ்வொரு நொடியையும் தினேஷ் எதிர்பார்த்துக் கிடந்தான். அவர் வந்ததுமே சேலத்துக்கு ஒரு சீட்டு வாங்கி விட்டு, நன்றாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். பேருந்தின் விளக்கொளிகளால் தூக்கம் வரவில்லை என்றாலும் தூங்குவதைப் போலான பாவனை செய்தாவது நேரத்தைக் கடத்தி விட எத்தனித்தான். பேருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் அவன் தினேஷின் தோள் தொட்டு தம்பி… என்று உலுக்கிய போது கூட அவன் தூங்குவதைப் போலவே பாவனை செய்து கொண்டிருந்தான். பேருந்து புறப்பட்ட பிறகு விளக்குகளை அணைத்து விட்டபடியால் தினேஷ் தூக்கத்துக்குள் மெல்ல மெல்லப் போய்க் கொண்டிருந்தான். நினைவுகளையோ, கற்பனையையோ காட்சியாக விரித்து ஓட விட்டால் நன்றாகத் தூக்கம் வரும். ஊருக்குப் போன பின்னர் மேற்கொள்ளவிருக்கும் தீபாவளிக் கொண்டாட்டங்களைத் தனக்குள் ஓட விட்ட படியே தூங்கிப் போனான். அதன் பின்னர் கனவுகள் அவனைக் கூட்டி போயின.
கனவுகளில் சஞ்சரித்த அவனுக்கு திடீரென விழிப்புத் தட்டியது. இயல்புக்கு மாறான தூண்டலை உணர்ந்தவன் விழித்துப் பார்த்தான். பச்சை சட்டைக்காரன் தூங்குவது போல கண்களை மூடி அண்ணாந்து சாய்ந்தபடி அவனது இடது கையை மட்டும் இவன் தொடையில் வைத்து பேண்ட் ஜிப்பைக் கழற்றி உள்ளே கை விட்டு உசுப்பிக் கொண்டிருந்தான். தினேஷ் அந்தக் கை மீதே இழுத்து ஒரு அடி வைத்ததும் அவன் திடுக்கிட்டு எழுந்தான். “என்ன இதெல்லாம்…” என்று மட்டும் கேட்டான். வேறு என்ன செய்வதென தினேஷுக்குத் தெரியவில்லை. கத்திக் கூச்சலிடவா முடியும் என்றே தோன்றியது இவனுக்கு. பேருந்தே துயில் கொண்டிருக்கும் வேளையில் சத்தமாகப் பேசக்கூடத் தயக்கமாக இருந்தது. அப்படியே இதற்காக முறையிடுவதென்றாலும் யாரிடம் முறையிடுவது என்பதைத் தாண்டி என்னவென்று முறையிடுவது எனத் தெரியவில்லை. ஏற்கனவே இப்படியான ஒரு சூழலை அவன் எதிர்கொண்டிருந்தான்.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையில் பாட்டி வீட்டுக்குப் போயிருந்த போது சொந்தத்தில் ஒரு வகையில் மாமன் முறையாகிற ஒரு ஆள் வந்திருந்தான். வாயில் எந்நேரமும் வெற்றிலையை அதக்கிக் கொண்டிருக்கும் அவனது பேச்சிலும், பாவனையிலும் சற்றே பெண் தன்மை கூடியிருப்பதை தினேஷ் கண்டுகொண்டான். அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தாது மாப்ள என்றழைப்பவனிடம் மாமா என்று உறவு கொண்டாடினான். இரவு தூங்குகையில் தினேஷிடம் பேசிக்கொண்டே அவன் பக்கத்திலேயே படுத்துக் கொண்டான். நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் மர்மமான ஒரு தீண்டலை தினேஷ் உணரத் தொடங்கியதும் எழுந்து பார்த்தான். மாமன் முறையாகிறவன் எதிர்ப்புறம் பார்த்தபடி படுத்துக் கொண்டு கையை மட்டும் பின்புறம் விட்டுக் குறியைத் தூண்டி எழுப்பிக் கொண்டிருந்தான். தினேஷ் அவனது முதுகில் இழுத்துக் குத்தினான். அவன் எந்த அசைவும் காட்டாமல் படுத்துக் கொண்டிருந்தான். “என்ன வேலை பார்க்குற நீ… இரு காலைல உன்னை பேசிக்கிறேன்” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்தான். இவன் காலையில் எழுந்து பார்த்த போது அந்த ஆள் இல்லை. பாட்டியிடம் கேட்ட போது விடியற்காலையிலேயே கிளம்பி அவன் ஊருக்குப் போய் விட்டதாகச் சொன்னார். போய்தொலையட்டும் என அதனை அத்தோடு விட்டுவிட்டான் தினேஷ். இதனைப் புகாராக மாற்றுவதில் அவனுக்குள்ளும் சற்றுத் தயக்கம் இருக்கத்தான் செய்தது. தற்போதைய சூழலையும் அவ்வாறே கையாள நினைத்தான்.

“இனி இந்த மாதிரி பண்ணீன்னா கண்டக்டர்கிட்ட சொல்லிடுவேன்… பக்கத்து சீட்டுல இருக்கவங்ககிட்ட சொன்னாலே போதும் உன்ன அடி பொளந்துருவாங்க” என டெசிபல் குறைத்துச் சொன்னான்.
“நான் உன்னைய எதாவது தொந்தரவு பண்ணனா சொல்லு… சும்மாவே வெச்சிருந்தீன்னா அது பெருசே ஆகாது… அது நல்லா பெருசா இருந்தாத்தான் புள்ளைகளுக்குப் புடிக்கும். நாளைக்கு நீ கல்யாணம் பண்ணீன்னா அது பெருசா இருந்தாத்தான் உன் பொண்டாட்டிய திருப்திப்படுத்த முடியும்… அதுகாக்கத்தான் இப்படி செஞ்சேன்” என்றான்.
“அதப்பத்தியெல்லாம் நீ அக்கறப்படாத… சேலம் போற வரைக்கும் கம்முன்னு வா… அவ்ளோதான் உனக்கு லிமிட்டு” எனச் சொல்லி விட்டு தூங்கப் போனான். “பெரிய தியாகி இவரு.. எனக்குப் பெருசாகணும்னு இவரு தூங்காம உக்கார்ந்து அடிச்சு விடுறாராம்” என்று முனகும் குரலில் சொன்னான். ஒருமையில் அவனைக் கையாண்டதே இதற்காற்றிய எதிர்வினையாக நினைத்தான். ஆகவே அவனால் நன்றாகத் தூங்க முடிந்தது.
சேலம் பேருந்து நிலையத்துக்கு வந்த போது நன்றாகவே பொழுது புலர்ந்திருந்தது. செல்போனை எடுத்துப் பார்த்தான் 7 மணியாகியிருந்தது. அம்மாவிடமிருந்து ஒரு தவறிய அழைப்புக்கான அறிவிப்பு திரையில் தெரிந்தது. பச்சை சட்டைக்காரன் எதுவும் பேசாமல் முன்னே நகர இவன் சற்று இடைவெளி விட்டு இறங்கினான். மீண்டும் அதே போல் வாசலருகேயே அவன் நின்றிருந்தான்.
“தம்பி ஒரு நிமிசம்…” என்றான்.
“என்ன வேணும்?”
“அஞ்சு ரூபா… வேலூர் பஸ் ஸ்டாண்ட்ல டீ வாங்கிக் கொடுத்தேன்ல அதுக்கு” என அவன் கேட்கவும் தினேஷ் பெருஞ்சினம் கொண்டெழுந்தான்.
“நான் கேட்டனா உங்கிட்ட எனக்கு டீ வாங்கிக் கொடுன்னு… நீயாத்தான வாங்கிட்டு வந்து வாங்கிக்க வாங்கிக்கன்னு நீட்டுன…”
“நானா வாங்கிட்டு வந்தாலும் நீ வக்கனையா குடிச்சியல்ல” என்று சொன்னான். அதில் வக்கனையாக என்பதை அவன் அழுத்திச் சொன்னதில் வெளிப்பட்ட அவனது குரூரத்தை அக்கணத்திலேயே கண்டுணர்ந்தான் தினேஷ். அவனுக்கு இணங்க மறுத்ததற்கான ஆற்றாமை முழுவதையும் இந்த ஐந்து ரூபாயில் தணித்துக் கொள்ளப் பார்க்கிற அவனது வன்மம் தினேஷை கொடூரமாகச் சீண்டியது. இது குறித்து இது மேற்கொண்டு வாதிடுவதில் தினேஷுக்கு நாட்டமில்லை. அது எந்த விதத்திலும் பயனளிக்காது என்பதையும் அவன் உணர்ந்தான். பர்ஸை எடுத்துக் காண்பித்தான். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே அதனுள் இருந்தது.
“சில்லரை இல்லை… நீ எங்கூட வா எதாச்சும் கடையில சில்லரை மாத்தித் தரேன்…” என்று தினேஷ் கூப்பிட அவனும் உடன் வந்தான். பேருந்து நிலைய வரிசைக்கடைகளில் ஒவ்வொன்றாக ஏறி நூறு ரூபாய்க்குச் சில்லரை கேட்டான். யாரும் தரவில்லை. எல்லோரும் சும்மாக் கேட்டா எப்படி ஏதாச்சும் வாங்கினாத் தர்றோம் என்றே சொன்னார்கள். பேருந்து நிலையத்துக்கு வெளியே அவனைக் கூட்டி வந்து அச்சாலை நெடுக உள்ள கடைகளில் ஒவ்வொன்றாகச் சென்று சில்லரை கேட்டான். எல்லாரும் மறுப்பையே பதிலாகத் தந்தார்கள்.
வெயில் மெல்ல ஏறிக்கொண்டிருந்ததால் பச்சை சட்டைக்காரனுக்கு வியர்த்து வடியத் தொடங்கியிருந்தது. அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்துத் துடைத்தபடியே இவனுடன் வந்தான். சில மைல் தொலைவுகளை ஓடிக் கடக்கிற உத்வேகத்துடன் இருந்த தினேஷ் பச்சை சட்டைக்காரனை அடுத்ததாக பஜாருக்குள் கூட்டிச் சென்றான். பஜார் கடைகளில் ஏறி தளராது இவன் சில்லரை கேட்க பச்சை சட்டைக்காரன் வாசலிலேயே நின்று கொண்டான். அவனது நடை தளர்வதை தினேஷ் பெருமகிழ்ச்சியோடு பார்த்தபடி நகர்ந்தான்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பச்சை சட்டைக்காரன் “நீ ஏதாச்சும் பொருள் வாங்கினா சில்லரை கிடைக்கும்ல” என்றான்.
“உனக்கு அஞ்சு ரூவா கொடுக்கிறதுக்கு நான் இருவது ரூபாய்க்கு பொருள் வாங்கணுமா?” அதெல்லாம் முடியாது அஞ்சு ரூவா வேணும்னா கூட வா என்றபடி அடுத்த கடை நோக்கிப் போனான். பண்டிகை நாள் என்பதால் பல கடைகள் பூட்டிக் கிடக்க நீண்ட தூரம் அலைய வேண்டியிருந்தது. பேருந்து நிலையத்தை அப்படியே வட்டமிட்டு அதன் பின்புறத்துக்கு வந்தனர்.
“இப்படி சுத்திக்கிட்டே இருந்தா எப்படி… எதையாச்சும் பண்ணிக்குடு” என பச்சை சட்டைக்காரன் சொன்னான். ‘வக்கனையாக’ என்பதில் வெளிப்பட்ட அவனது தொனி இப்போது காணாமல் போயிருப்பதை தினேஷ் கேட்டதும்…
“சரி வா… நாம கண்டர்ககிட்டக் கேட்டுப் பார்க்கலாம்…” என மீண்டும் அவனை பேருந்து நிலையத்துக்குள் அழைத்துப் போனான்.
பஸ்ல டிக்கெட் வாங்கிறவங்களுக்கே கொடுக்க சில்லரை பத்துறதில்லை என்றே கண்டக்டர்கள் சொன்னார்கள். ஒரு கண்டக்டர் மட்டும் நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு இரண்டு ஐம்பது ரூபாய்த் தாள்களைக் கொடுத்தார்.
“இந்த அம்பது ரூவாய்க்கு இனி சில்லரை தேடணும்… இவங்களும் தர மாட்றாங்க… சரி உள்ள உட்கார்ந்துகிட்டிருக்க யார்கிட்டயாச்சும் கேட்போமா” என தினேஷ் கேட்க… அவன் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே நின்றிருந்தான். “உனக்கு அஞ்சு ரூவா வேணுமா… வேணாமா” என தினேஷ் அழுத்தமாகக் கேட்டான். தனது குரூரமும், வன்மமும் மொத்தமாக தினேஷுக்குள் இடம் பெயர்ந்து விட்டதை பச்சை சட்டைக்காரன் அப்போதுதான் கண்டறிந்தான். அவனது உடல் சோர்வு கண்டபடியால் மேற்கொண்டு அவனால் அம்பெய்த முடியவில்லை.
“சரி தம்பி பரவால்ல… எனக்கு அஞ்சு ரூபா வேணாம்… நீயே வெச்சுட்டு நல்லாரு” என்று மட்டும் சொன்னான்.
“இல்லல்ல… உன் காசு எனக்கெதுக்கு… அந்த டீயைக் குடிச்சதை நினைச்சாலே கொமட்டுது…” என்று சொல்லிய தினேஷ் “சரி வா” என முன்னிருந்த ஒரு தேநீர் விடுதிக்கு அழைத்துப் போனான். இரண்டு டீ சொன்னவன் அதில் ஒன்றை பச்சை சட்டைக்காரனிடம் நீட்டினான். அதனை வாங்காமல் நின்றிருந்த அவனிடம் “சூடு ஆறிடப்போகுது புடி” என வலுக்கட்டாயமாக நீட்டினான். அவன் வாங்கிக்கொண்ட பின்னர் தனது தேநீரை அருந்தி முடித்தவன் “இதாண்டா டீ” என்று சொல்லியபடி இரண்டு தேநீருக்கும் பணம் கொடுத்து விட்டு ஈரோடு செல்லும் பேருந்தை நோக்கிப் போனான்.
00

கி..ச.திலீபன்
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

