ஃப்ளாரன்ஸ் பிட்மான் ஹாட்க்ஸன்
சிறுவர் மனத்தை ஆராய்வதில் ஈடுபட்டவர் இதை எழுதியவரின் கணவர். குழந்தைகள் சில சமயம் கற்பனையாகத் தோழர்களைச் சிருஷ்டித்துக்கொள்ளலாம். அதைக் கண்டு பெற்றோர் அஞ்சக் கூடாது. காரணத்தை அறிந்துகொண்டு அநுதாபத்தோடு நடந்துகொள்ளவேண்டும். அதை விளக்கும் இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே இவர்கள் வீட்டில் நிகழ்ந்ததாம்.
எங்கள் கடைசிப் பையன் ராபின், எங்கள் வீட்டின் கொல்லைப்புற வழியாகக் கிளெண்டி என்ற ஒரு கற்பனைச் சிறுவனைத் தன்னுடன் அழைத்து வந்து இப்போது இரண்டு வருஷங்களுக்குமேல் இருக்கும். இரண்டு பேருக்கும் வயது மூன்றுதான்.கிளெண்டியும் இனி எங்களுடன்கூட இருக்கப் போவதாக ராபின் கூறினான். அதன் விசேஷம் முழுவதும் எனக்கு அப்போது புலப்படவில்லை.
“அப்பாவின் கட்டிலில் கிளெண்டி படுக்கக்கூடாது என் றால், ஏன், அவன் அந்த ரகசிய அறையில் படுத்துத் தூங்கட்டுமே! அங்கே அவனுக்குப் படுக்கைகூடப் போட வேண்டாம்” என்று கிளெண்டிக்கு ராபின் படுக்க இடம் தயார் செய்தான்.
“ராபின், நீ இதற்கு முன்பு அழைத்து வந்த பையன்களையெல்லாம் இங்கே சிறிதும் வைத்துக் கொள்ள முடியவில்லையே! அவர்களைப் போல் பயமுறுத்தாமல், இந்தக் கிளெண்டியாவது சுமாராக இருப்பானா?” என்று கேட்டேன்.
“சேச்சே! கிளெண்டி அவர்களைப்போல் பயமுறுத்த மாட் டான். இவனிடம் எனக்குப் பயமே கிடையாது; என்னிடம் இவனுக்கு ரொம்ப ஆசை” என்றான் ராபின் ஆவலோடு.
நான் காரட் தோல் சீவிக் கொண்டிருந்தேன். ‘சரி; போனால் போகிறது. அந்த மட்டும் நல்லது தான். இதுவரை ஒரே பயம் என்று இருந்தது போல இல்லாமலிருந் தால் போதும்’ என்று எண்ணிக் கொண்டேன்.
ராபின் அப்படி ஒன்றும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் குழந்தை இல்லை. உற்சாகமாய் விளையாடி விட்டு வரும் மற்றெல்லாக் குழந்தைகளையும் போலத்தான் அவன் தோன்றினான். ஆனால், இப்படிப்பட்டவன் திடீரென்று செத்து போவதைப்பற்றிக் கவலைப்படுவது, வேண்டாதவற்றை யெல்லாம் பற்றிப்பயப்படுவது, எதற்கெடுத்தா லும் அழுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டான்.
சாவைப்பற்றிக் கவலைப்பட்டது என்னவோ நியாயந்தான். ஏனென் றால், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் என் தாய் திடீரென்று காலமடைந்தாள். எங்கள் பெரிய பையன் ஜாக்குக்கு வயது 15; ரிக்குக்கு வயது 11. பாட்டி செத்துப் போய்விட்டாள் என்று தெரிந்துகொள்ள அவர்கள் இரண்டு பேருக்கும் வயதாகிவிட் டது. ராபினோ அப்படி இல்லை. பாட்டி போய்விட்டாள் என்ற செய்தியை அவன் நம்பினால் த தானே! பேரனும் பாட்டியும் இணை பிரியாமலிருந்தவர்கள். இப்போது பாட்டி இருந்த இடம் சூனியமாகி விடவே, ராபினால் அதைச் சகிக்க முடியவில்லை. அந்தச் சூனியமான இடத்தில் கண்ட கண்ட கற்பனைப் பிராணிகளும் வேண்டாத பயங்களும் வாசம் செய்யத் தொடங்கின.
கிளெண்டியைப்பற்றி ராபின் பிரமாதமாக வர்ணித்தான். அவன் படிப்பான் என்றும், அவன் போகாத இடமில்லை என் றும், அம்மா வயிற்றிலிருக்கும் போதே – அதாவது பிறப்பதற்கு முன்பே- எத்தனையோ மோட்டார் விபத்துக்களாகியும் காயமும் இல்லாமல் அவன் பிழைத்திருக்கிறானென்றும் சொல்லி, ராபின் எங்களை ஒரே அடியாய்த் திகைக்க வைத்தான். இவ்வளவு சாமர்த்தியமுள்ள “பையனை யாராவது அலட்சியம் செய்ய முடியுமா? பெரிய பிள்ளைகள் வியப்பு மேலிட்டவர்களாக இந்த அதிசயமான கிளெண்டியைப்பற்றிக் கேட்கக் கேட்க, ராபின் மேலும் மேலும் கிளெண்டியை உற்சாகத்துடன் வர்ணிக்கத் தொடங்கினான்.
ராபின் இந்த மாதிரி பேசுவது புதிதல்ல. என் கணவருக்கு மூன்று வயதாயிருந்தபோது இப்படித் தான் டிக் ஹிக்கென் என்றொரு கற்பனைத் தோழன் அவருக்குக் கிடைத்தானாம். அவர் அந்தப் பையனைப்பற்றி ரொம்பப் பேசுவாராம். இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு எங்கள் மூத்த பிள்ளை ஜாக், இதே மாதிரி ஒரு துஷ்டன் தன்னைப் பின்பற்றி வருவதாக மூன்று வயதில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். இப்போது ராபினுக்கும் அதே வயதில் இந்த அதிசயமான கிளெண்டி என்ற தோழன் ஒருவன் கிடைத்திருக்கிறான். விஷயம் ஒருவாறு விளங்கியதும், என் கணவர் புன்னகை புரிந்தார்.
இந்த விதமாகக் கிளெண்டி எங்கள் குடும்பத்தில் ஒருவனாக வந்து சேர்ந்தான். அவன் ஒரு கற்பனைப் பையனாகத் தோன்றாமல், மற்ற எல்லாரையும் போல் உயிரும் உடலும் உள்ளவனாகவே தோன்றினான். எங்கள் குடும்ப விஷயங்களில் அவனுக்கு மிகுந்த சிரத்தை இருந்தது. அதிலும் ராபின் விஷயத்தில் கேட்கவே வேண்டாம். ராபின் கண்ணால் காணாத பூச்சிகளை, கிளெண்டி ஒரே. நிமிஷத்தில் கண்டு பிடித்துக் கொன்றுவிடுவான். கிளெண்டி துணையாக இருக்கிற தெம்பில் ராபினுக்கு முன்பிருந்த பயம் எல்லாம் போய்விட்டது. அவன் அருகில் எப்போதும் கிளெண்டி இருந்ததால், அவன் உற்சாகத்துக்குக் குறைவில்லாமலிருந்தது. சாவைப்பற்றிய கவலை ஒன்று தான் இன்னும் அவனை முற்றும் விட்டபாடில்லை. நல்ல வேளையாகக் கிளெண்டியின் பெற்றோர்
இரண்டு பேரும் கார் விபத்தில் அகப்பட்டு இறந்து போனார்கள் என்ற செய்தி வந்தது. அதற்குப் பிறகு கிளெண்டியே எங்களை விட்டுக் கொஞ்ச நாள் விலகிப் போயிருந்தான். “அப்பா அம்மா இரண்டு பேரும் செத்துப் போய்விட்டால், கிளெண்டி அழாமல் இருப்பானா?” என்றான் ராபின். ஆனால் அந்தச் செய்தியைக் கேட்டு, ராபின் கொஞ்சமும் வருந்தவில்லை. ஏனென்றால், கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று காலையில் ஒரு ஜோடி புது அப்பா அம்மா பொம்மைகளை அவன் கிளெண்டிக்காக வாங்கி வைத்துவிட்டான்!
“மூன்று வயதாகும்போது குழந்தைகளுக்கு இப்படித்தான் யாராவது ஒரு தோழன் வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் தாமாகவே தமக்கு வேண்டிய தோழர்களைக் கற்பனை செய்து கொள்வார்கள்” என்றார் என் கணவர்.
ஆனால் ஜாக்கின் தோழன் இருந்தானே, அந்தக் கற்பனை மனிதனைப்பற்றி என்ன சொல்லு கிறீர்கள்? அவனை வைத்துக் கொண்டு ஜாக் கொஞ்ச நாள் என்ன பாடு பட்டான்!” என்றேன். “அப்போது ஜாக்குக்கு ஒரு நண்பன் தேவையாக இல்லை; விரோதிதான் தேவையாக இருந்தான். நாம் இடம் மாற்றி இங்கே வந்தோம் இல்லையா? பழகிய இடம், ஆசையுள்ள தாத்தா பாட்டிகள் எல்லாரும் போய்விடவே, அவனுக்கு எதுவும் பிடிக்காமல் போய்விட்டது. அப்பாடா! அவன் ஒவ்வொரு சமயம் பிடித்த முரண்டும் பிடிவாதமும் பற்றி உனக்கு நினைவிருக்கிறதா? அவனுக்கு ஏதாவது பிடிக்காத போதெல்லாம் வைவதற்கும் பழி சுமத்துவதற்கும் யாராவது ஒருவர் வேண்டும் இல்லையா?” என்றார் கணவர்.
அந்தக் கற்பனைத் துஷ்டனால் ஜாக் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பீரோவின் இடுக்கில் ஒளிந்துகொண்டு ஜாக் தனியாக இருக்கும்போது, இரவில் அவனை அந்தத் துஷ்டன் பயமுறுத்துவான். அவனை எப்படி ஒழிப்பது என்று தெரியாமல் நாங்கள் விழித்தோம். கடைசியில் ஒரு நண்பரிடம் யோசனை கேட்டபோது, அவர் வெகு சாமர்த்தியமாய் ஜாக்கைக் கூப்பிட்டு, “இதோ பார், ஜாக், அந்த மனிதனிடம் உனக்கென்ன பயம்? நீ இல்லையா அவனுக்கு எஜமான்? அந்தத் தடியனை உள்ளே வரவிடாமல் விரட்டியடித்து விடு’ என்று சொன்னார். ஜாக்குக்கு எங்கள் நண்பரிடம் ரொம்ப மதிப்புண்டு. அதுவும் ‘விரட்டியடித்து விடு’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு மிகவும் களிப்பையளித்தன. எங்கள் நண்பருடைய உபாயம் பலித்தது. அந்தத் ‘துஷ்டன்’ ஒரு வழியாய் எங்களை விட்டு ஒழிந்தான்.
“இந்தக் கிளெண்டியை எப்படி விரட்டுவது?” என்றேன்.
“எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். தானே அப்புறம் போய் விடுவான்” என்றார் என் கணவர். ஆனால் வெகு நாள் வரையிலும் கிளெண்டி போகிற வழியாகத் தெரியவில்லை.
என்றாலும், கிளெண்டி இருப்பது எங்களுக்கே சில சமயம் வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருந்தது.
சில காலத்துக்குப் பிறகுதான் கிளெண்டி நெடுநாள் வரைக்கும் எங்களை விட்டுப் போகாமல் இருந்ததன் காரணம் விளங்கிற்று,
ராபின் ஒரு நாள் தன் தோழன் ஒருவனைப் பார்க்கச் சென்றிருந்தான். பகலெல்லாம் அங்கேயே இருந்துவிட்டுச் சாயங்காலம் திரும்பியதும், “அம்மா” என்று கத்திக்கொண்டே என்னிடம் ஓடிவந்தான். “அம்மா, செத்துப் போவது என்றால் என்ன என்று நீ எனக்குச் சொல்லவே இல்லையே! புச் இருக்கிறானே, அவனுடைய அத்தை ரோஸ் செத்துப் போய் விட்டாளாம். அவளைப் பெட்டியில் வைத்திருந்தார்கள். அவள் அழகாய்த் தூங்குவது போலவே இருந்தாள். கொஞ்சங்கூட விகாரமாயில்லை. நம்ம பாட்டி செத்துப் போனபோதுகூட எப்போதும் போலவே இருந்தாளா? நீ சொல்லவே இல்லையே. அவளை நான் பார்ப்பதற்குக் கூட நீ விடவில் லையே! புச் வீட்டில் எல்லாரும் அழுதார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து அழுதேன்” என்றான். என்னிடம் நெருங்கி வந்து உட் கார்ந்துகொண்டு, “ஏன், அம்மா? நாநா பாட்டி செத்துப் போன போது நீ ஏன் அப்படி அவர்களைப் போல் அழவில்லை?” என்று கேட்டான்.
“ஏன்? நான் அழுதேனே!” என்றேன் மெதுவாய்.
“இல்லை; நீ ஒன்றும் அப்படி அழவில்லை. ஏன் என்னைக் கட்டிக்கொண்டு நீ அழவில்லை?” என்று அவன் திடீரென்று என்னைக் கோபித்துக்கொண்டான். எனக்கு இப்போது எல்லாம் விளங்கிவிட்டது. செத்துப் போவது என்றால் என்ன என்பதை அவனுக்கு நாங்கள் தெரியப்படுத்தவில்லை. அவன் எதிரில் அழாமலிருந்ததற்குப் பதிலாக ஒவென்று கதறி அழுதிருந்தால், அவனுக்கு ஒருவாறு அது விளங்கியிருக்கும். “பாட்டி செத்துப் போனாள் என்றால், நாம் அழ வேண்டாமா? அவன் எதிரில் நாம் ஒரு பொட்டுக் கண்ணீர்கூட விடவில்லையே!
‘இறந்து போன பாட்டியை அவனும் கண்ணால் பார்க்கட்டும்’ என்று நமக்கு ஏனோ தோன்றவில்லை. இந்தச் சிறு வயதில் பிணத்தைப் பார்ப்பதில் அவனுக்கென்ன பயம் தோன்றியிருக்கப்போகிறது?” என்று என் கணவரிடம் சொன்னேன்.
“உண்மை. இறந்து போனவர் களைக் குறித்துக் கண்ணீர் வடிப்பது நியாயந்தான். ராபினைக் காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு, நாம் பேசாமல் இருந்துவிட்டோம். அவனைத் தனியாக விட்டுவிட்டோம். அவன் மனத்துக்கு எப்படியிருந்திருக்கும், பாவம்!” என்றார். என் கணவர். இதனாலேதான் கிளெண்டியைப் போல் அவனுக்கு ஒரு கற்பனைத் தோழன் வேண்டி இருந்தான். இனிமேல் கிளெண்டி அதிக நாள் எங்களுடன் தங்க மாட்டான் என்று நான் மனம் தெளிந்தேன்.
சில நாள் கழித்து ஒரு நாள் ராபின் வெகு உற்சாகத்தோடு வெளியிலிருந்து திரும்பி வந்தான். ஆனால் சிறிது நேரத்துக்கெல்லாம் முகத்தில் வேதனைக் குறியுடன் என்னைத் தேடி வந்து, “அம்மா, ஒரு பயங்கரமான சமாச்சாரம் தெரியுமா? கிளெண்டி செத்துப் போய்விட்டான்” என் றான். இப்படிச் சொல்லிவிட்டுக் கவலையுடன் பேசாமல் நின்றான்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“போனால் போகிறான். அதையே இப்போது நினைத்துக் கொண்டிருக்காதே! ஒருவேளை கிளெண்டி செத்துப் போகவே இல்லையோ என்னவோ, பார்க்கலாம்” என்றேன். இதைக் கேட்டவுடன், ராபின் மனம் தேறியவனாய்ச் சென்றான். சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து உற்சாகத்துடன், “அம்மா, சொன்னபடியே தான் கிளெண்டி நன்றாய்த் தூங்கிக்கொண்டிருந்தான்; அவ்வளவுதான். அவன் செத்துப் போகவே இல்லை’ என்றான். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தது. கிளெண்டி செத்துப் போய்விட்டான் என்று ராபின் ஒரு வழியாய் முடிவு கட்டியிருந்தான். நானும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்திருக்க வேண்டும். இனிமேல் அவன் மறுபடியும், ‘கிளெண்டி! கிளெண்டி’ என்று நச்சரிக்க ஆரம்பித்து விடுவானே!
மறுபடியும் ராபினும் கிளெண்டியும் இணைபிரியாத நண்பர்களானார்கள். கிளெண்டி எங்களுடனேயே இருந்தான். ஆயினும், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிளெண்டிக்கு ஏதாவது விபத்து நேர்ந்து செத்துப் போய்விட்டான் என்று ராபின் சொன்னாலும் சொல்லுவான். அப்போது நிஜமாகவே நாம் அவனுக்காக வருத்தப்பட்டுக் கண்ணீர் வடித்துவிட வேண்டியதுதான் என்று என்று தீர்மானித்துக் கொண்டேன்.
000
நன்றி : மஞ்சரி

