மூலம்: ஹான்ஸ் ஆஸ்டர்ஸென்               தமிழ் : எல்.ஸி. ரிச்சர்டு

(நாலு வகுப்புப் படித்த எவரும் ஹான்ஸ் க்ரிஸ்டியன் ஆண்டர்ஸென் என்ற பெயரை அறியாதிரார். இவருடைய கதைகள் உலகப் பிரசித்தம். இவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர். இங்கே உள்ள கதை மிகப் பிரபலமானது; உருக்கமானது.)

குளிர் நடுக்கியது. மழைபோல் கடும்பனி பெய்தது. அது வருஷத்தின் கடைசி நாள். அந்திப் பொழுது. இருள் கவிந்துவிட்டது. எதையும் பொருட்படுத்தாமல் ஏழைச் சிறுமி தெருவில் சுற்றிக் கொண்டிருந்தாள். தலையில் முக்காடு இல்லை. கால்களில் ஒன்றும் இல்லை. வீட்டை விட்டுப் புறப்பட்டபோது, செருப்பு அணிந்து கொண்டுதான் வெளியே வந்தாள். ஆனால் வேகமாகப் போகும் வண்டி களுக்குக் குறுக்கே ஓடித் தெருவைக் கடந்தபோது, செருப்பு இரண்டும் நழுவிவிட்டன; அவளுடைய தாயின் பழைய செருப்பாதலால், சுளுவில் நழுவிவிட்டன. ஒன்றைக் கண்டு பிடிக்க முடியவில்லை; மற்றொன்றைக் குறும்புக்காரப் பையன் ஒருவன் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டான்.

நடந்து நடந்து அவளுடைய கால்கள் ஓய்ந்துவிட்டன. குளிரில் மரத்துப் போன பாதங்கள் ரத்தம் போல் சிவந்துவிட்டன. தன் கையில் ஒரு கட்டும் மடியில் ஒரு கட்டுமாக இரண்டு கட்டுத் தீக்குச்சிகள் வைத்திருந்தாள். ஒருவரும் அவளிடமிருந்து ஒரு குச்சிகூட வாங்கவில்லை; ஒரு பைசாக்கூட அவளுக்குக் கிட்டவில்லை. குளிரினால் மாத் திரமல்ல, பசியினாலும் நடுக்கம் கொண்ட சிறுமி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றாள் – சோகத்தின் உருவே போல.

சிறு பணிக்கட்டிகன் அவள் தலையில் குவிந்தன; அவளுடைய சுருள் முடிகளின் வழியாக உருண்டன; அவளுடைய தோள்களில் தேங்கின. தன் பேரழகைப்பற்றியோ குளிரைப்பற்றியோ. அவளுடைய எண்ணங்கள் ஓடவில்லை. தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஜன்னல் வழியாக, ஒளி வீசிக் கொண்டிருந்தது. அநேக வீடுகளில் தயாராகிக்கொண்டிருக்கும் கறிமசாலாக்களின் மணம் வீதியிலே வீசியது.போது விடிந்தால் புது வருஷம். ஏழைச் சிறுமியின் எண்ணங்களெல்லாம் மறுநாள் கொண்டாட்டத்தில் நாட்டம் கொண்டன.

வீசிக்

இரண்டு வீடுகளின் இடையே இருந்த முடுக்கில் கீழே உட்கார்ந்தாள் சிறுமி. அவள் கால்களை மடக்கி ஒடுக்கினாலுங்கூடக் குளிர் விட்டபாடில்லை; வீடு திரும்பவும் அவளுக்குத் தைரியமில்லை. ஒரு தீக்குச்சிகூட விற்கவில்லையே ! ஒரு சல்லி கூடச் சம்பாதிக்கவில்லையே! அப்பா அடிக்க மாட்டாரா? வீடாவது கதகதப்பாக இருக்குமா என்றால், அதுவும் இல்லை. கூரையின் முக்கில் ஒரு சிறு அடைப்பு. கூரையின் பெரிய துவாரங்களை ஒருவாறு பழைய துணிகளைக் கொண்டும் வைக்கோலைக் கொண்டும் அடைத்து வைத்திருந்தாலும், சிறிய துவாரங்களின் வழியாகக் காற்றும் பனிக்கட்டியும் புகுந்து விடும். அவள் கைகள் குளிரினால் மரத்துவிடும் போல் இருந்தன. கட்டில் இருந்த தீக்குச்சி ஒன்றைக் கொளுத்தினாலும் போதும்; அவள் கைகளை உஷ்ணமாக்கிக் கொள்ளலாம்.

அவள் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு ஒரு தீக்குச்சியைக் கொளுத்தினாள். மிகவும் பிரகாசத்துடன் ஜ்வாலை எழுந்தது. அதன் மேல் கையை விரித்து ஒன்றொன் றாகச் சூடு காட்டிக்கொண்டாள். அவள் ரசித்தது தீக்குச்சியின் உஷ்ணத்தை அல்ல; மந்திரத் தீவட்டியின் மகிமையான பேரொளியை! மனோராஜ்யத்தில் பெரும் பணக்காரர் வீட்டில் உள்ள பேரடுப்பின் முன்னே தான் வீற்றிருப்பது போன்ற காட்சியைக் கண்டாள். அந்த அடுப்பின் உஷ்ண வாடை அவள் கால்களை நீட்டிக்கொள்ள அழைத்தது. பாவம், அடுத்த கணம் தீக்குச்சி அணைந்தது; பேரடுப்பு மறைந்தது. மறுபடியும் குளிரில் ஆதரவற்று விறைத்தாள் சிறுமி – கையில் அணைந்த குச்சியைப் பிடித்தவண்ணமாக!

இன்னொரு தீக்குச்சியைக் கொளுத்தினாள். வெளிச்சம் கொழுந்து விட்டு எழுந்தது. பிரகாசித்த இடமெல்லாம் கண்ணாடியைப் போல் தோற்றம் அளித்தது.எதிரில் உள்ள சுவர் மறைந்து உள்ளே இருந்த சாப்பாட்டு மேஜை புலப்பட்டது. உறைந்த பனிபோல் ஒரு வெள்ளைத் துணி அதன்மேல் விரித்திருந்தது. பளபளப்பான கோப்பைகள் அதன் மேல் வரிசை வரிசையாக நின்றன. சமைத்த வாத்து ஒன்று தன் நெஞ்சில் குத்திய கத்தியுடன் சுடச் சுடக் காட்சியளித்தது. இது மட் டுமா? அது அப்படியே சிறுமியைப் பார்த்து அசைந்தாடி நடந்து வந்தது. ஐயோ ! தீக்குச்சி அணைந்து விட்டதே! அவள் முன்னே நின்றது வெறும் மண் சுவர்தானா?

மூன்றாவது தீக்குச்சியைக் கொளுத்தினாள். அது கொழுந்து விட்டு எரிந்தது. அதன் மாய ஒளியில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று தென்பட்டது. மரத்தின் அடியில், தான் உட்கார்ந்திருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. வெகு அழகான மரம்; சென்ற வருஷம் பெரும் பணம் படைத்த ஒருவர். வீட்டில் அவள் பார்த்ததைவிடப் பெரிய மரம்; ஜோடனை பிரமாதம். மரத்தின் பச்சைக் கிளைகள் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் ஜொலித்தன. சிறு பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் கிளைகளில் தொங்கியபடி கீழே சிறுமியைப் பார்த்துக்கொண்டிருந்தன. தன் கைகளால் ஒன்றைப் பற்ற முயன்றாள் சிறுமி. அடடா! அந்தக் கணத்தில் குச்சி அணைந்தது. ஆனால், அவளுடைய மனக்கண் முன் கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்திகள் எரிந்தவண்ணமாகவே இருந்தன. அவை உயர்ந்து உயர்ந்து விண்ணுலகத்தில் மின்னும் தாரகைகளைப்போல் ஆயின. கடைசியாக ஒரு மெழுகுவர்த்தி கீழே சாய்ந்தது.வால் நட்சத்திரத்தைப்போல் அதன் சுடர்கள் பின்தொடர்ந்தன. “யாரோ மரிக்கிறார்” என்றாள் சிறுமி. “நட்சத்திரம் சாய்ந்து விழும்போதெல்லாம், ஓர் ஆவி உடலை விட்டுப் பிரிவதற்கு அறிகுறி’ என்று. அவளுடைய அருமைப் பாட்டி சொல்லியிருக் கிறாள். ஆத்மா தன் இருப்பிடமான பரமண்டலத்தை மீண்டும் அடையும் காட்சி இது! பாட்டி முன்பே பரனிடம் சென்று விட்டாள்.

மீண்டும் சிறுமி ஒரு தீக்குச்சியைக் கொளுத்தினாள். அதன் ஒளியில் பாட்டி பிரசன்னமானாள். எப்போதையும்விட அதிக அன்புடனும் ஆவலோடும், ‘பாட்டி!” என்று சிறுமி ஓலமிட்டாள்: “என்னையும் கூட்டிக்கொண்டு போய்விடு. குச்சி அணைந்ததும் போய்விடுவாயே!”

பெருந்தீயின் உஷ்ணத்தைப் போல், புதிய வருஷ விருந்தைப் போல், கிறிஸ்துமஸ் மரத்தண்டைப் போல் எங்கே பாட்டி மறைந்து விடுவாளோ என்று அவள் பயந்தாள் . கையில் இருந்த ஒரு கட்டுத் தீக்குச்சிகளையும் எரித்துவிட்டாள். அதன் ஒளி உச்சி வெயிலின் பிரகாசத்தை ஒத்திருந்தது. பாட்டி எவ்வளவு அழகாயிருந்தாள்!என்ன உயரம்! என்ன கம்பீரம்! அவள் முகத்தில் இரக்கம் வடிந்தது. சிறுமியைத் தன் கரங்களில் அணைத்துக் கொண்டு மேலே சென்றாள் பாட்டி- உயர, உயர வானுலகை நோக்கிப் பறந்தாள்! அங்கே குளிர் இல்லை; பசி இல்லை; துன்பம் இல்லை. இருவரும் மோட்ச லோகத்தை அடைந்தார்கள்.

மறுநாள் காலையில் தெருவிலே இரண்டு வீடுகளின் முக்கில் பதுங்கிக் கிடந்த சிறுமியின் கன்னங்கள் ‘பளபள’ என்று மின்னின; உதடுகளில் புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. வருஷத்தின் கடைசி நாள் இரவு குளிரினால் மரித்து விட்டாள் சிறுமி. புதிய வருஷத்துச் சூரியனின் கதிர்கள், மரித்த குழந்தையின் உடலின்மேல் ‘கண, கண’ என்று சொரிந்தன. அசையாமல் உட்கார்ந்தவண்ணம் இருந்தாள் சிறுமி. மடியிலே தீக்குச்சிக் கட்டுகள். ஆனால் ஒரு கட்டு எரிந்துவிட்டது.

”பாவம்! சிறுமி தீ உண்டாக்கிக் குளிர் காய முயன்றிருக்கிறாள்” என்று பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டார்கள். ஆனால் யாருக்குத் தெரியும், அவளுடைய மனக் கோட்டையின் இன்ப நிகழ்ச்சிகள்! யாருக்குத் தெரியும், அவள் பாட்டியுடன் புதிய வருஷம் கொண்டாடிய விதமும் பேரின்ப வீட்டை அடைந்த மகிமையும்!

000

நன்றி :- மஞ்சரி, மே-1948

‘தீக்குச்சி விற்ற சிறுமி’ (The Little Match Girl) என்பது டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய உலகப் புகழ்பெற்ற சோகக் கதை. கடுமையான குளிரில், விற்க முடியாத தீக்குச்சிகளுடன் நடுங்கும் ஏழைச் சிறுமி, தனது கற்பனையில் கண்ட அழகான கனவுகளையும், பரிதாபமான மரணத்தையும் இக்கதை விவரிக்கிறது.

கதைச் சுருக்கம்:

  • புத்தாண்டு ஈவ்: கடுமையான குளிரான புத்தாண்டு முன்தினம், ஒரு ஏழைச் சிறுமி தீக்குச்சிகளை விற்க தெருவில் அலைகிறாள். அவளது தந்தை அவளைத் திட்டுவார் என்பதால் விற்காமல் வீடு திரும்ப பயப்படுகிறாள்.
  • கற்பனை காட்சிகள்: குளிரில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு தீக்குச்சியாக உரசுகிறாள். ஒவ்வொரு குச்சியின் ஒளியிலும், ஒரு சூடான அடுப்பு, சுவையான உணவு, அழகான கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அவளை நேசித்த அவளது இறந்த பாட்டி ஆகியவற்றை அழகாகக் காண்கிறாள்
  • முடிவு: பாட்டியைத் தன்னுடன் வைத்துக்கொள்ள சிறுமி ஒரே நேரத்தில் பல குச்சிகளை உரசுகிறாள். அந்த ஒளியில் பாட்டி அவளைத் தன் கைகளில் ஏந்தி, வலி, பசி இல்லாத சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். மறுநாள் காலை, சிறுமி உறைந்து இறந்துகிடப்பதை மக்கள் பார்க்கின்றனர்.
மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *