விளாடிமிர் ஸ்டெட்ரி

(கறுப்புப் பூனையைப்பற்றியது இந்த ருஷியக் கதை. உண்மையில் கறுப்புப் பூனையைப்பற்றியதா? பூனை ஒரு வியாஜம். அதன் மூலம் மனித உள்ளங்களையே சித்திரிக்கிறது.)

லிண்டன் ரோடு வழியாக நீங்கள் எப்போதாவது  போனால், ஒரு வீட்டு ஜன்னலில் கரும்பட்டுப் போல்  உடம்பைப் பெற்ற மகா அழகான ஒரு பூனையைக் காணலாம். அது கிரெய்க் தம்பதிகளின் வீடு. எப்போதும் கலகலவென்று ஜன நடமாட்டம் மிகுந்திருக்கும் வீதியை வெகு கூர்மையாக அந்தப் பூனை பார்த்துக்கொண்டிருக்கும். அதன் பார்வையில் குழந்தையின் ஆவலும், அரைக்கண் மூடிய வேதாந்தியின் துறவும், அமைதி செறிந்த ராஜ கம்பீரமும் கலந்திருக்கும். உயர்ந்த ஜாதிப் பூனைகளுக்குத் தான் இந்த மாதிரி பார்வை உண்டு. கிரெய்க் தம்பதிகளின் வீட்டுக்கு அது எப்படி வந்தது என்ற வரலாறு ஒரு கிறிஸ்துமஸ் கதை. வருஷத்திலேயே பெருமகிழ்ச்சி நிறைந்த பண்டிகை கிறிஸ்துமஸ். மனிதர்களுக்கு எத்தனை அற்புதங்களைச் செய்யவல்லது கிறிஸ்துமஸ் என்பதை நிரூபிப்பது அந்தக் கதை.

கிறிஸ்துமஸின்போதுதான் அந்தக் கறுப்புப் பூனை வந்தது. அதன் பலனாகத்தான் சில நிகழ்ச்சிகள் நேர்ந்தன. அடுத்த வருஷத்திலே தோன்றிய சில விபரீதங்களை அந்தப் பூனையின் பிரசன்னமே தீர்த்து வைத்தது

கிரெய்க் தம்பதிகளுக்குக் குழந்தையில்லை. அதனால் அவர்கள் கிறிஸ்துமஸுக்காக ஒன்றும் தடபுடல் செய்யவில்லை. அவர்கள் வீட்டிலே கிறிஸ்துமஸ் மரம் நாட்டவில்லை; மிஸில்டோ என்ற கன்னிமுத்தக் கொடியின் அலங்காரம் இல்லை; பரிசுகள் எவையும் வாங்கவில்லை.

அக்கம் பக்கத்து வீடுகளில்தான் கிறிஸ்துமஸுக்காக என்ன குதுகலம்! என்ன பரபரப்பு! அதெல்லாம் வளர்ந்த குழந்தைகளும் வளராச் சிறு குழந்தைகளும் கொண்ட பேருற்சாகத்தின் விளைவே என்று கிரெய்க் தம்பதிகள் நினைத்தார்கள். அவர்களுக்கு யாரும் நண்பர்கள் இல்லை. யாருடனும் பேசாமல் தங் கள் வீட்டுக்குள்ளே அவர்கள் அடைந்து கிடந்தார்கள். பெத்லகேமில் அவதரித்த குழந்தையின் ஜயந்தியை உலகத்து ஆடம்பரங்களுடன் கொண்டாட அவர்களுக்கு ஆசையில்லை. யாரிடமிருந்தும் பரிசுகளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை; யாருக்கும் பரிசுகளை அனுப்ப அவர்கள் வாங்கி வைக்கவும் இல்லை. ஆனால் இதெல்லாம் அவர்களுக்குச் சந்தோஷமா? அவர்களுடைய இல்வாழ்க்கைதான் இன்பமாய் இருந்ததோ? இரண்டும் இல்லை.

கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் மாலையில், யாரோ கதவு மணியை அடிப்பதாகத் தோன்றி, வாசல் பக்கம் மனைவி சென்றாள். கதவைத் திறந்தாள். யாரையும் காணவில்லை. ஆனால், எதிர்பாராத சின்னஞ்சிறு கறுப்புப் பூனைக்குட்டி ஒன்று நிலைப்படியைத் தாண்டிக் கூடத்திலே போய்ச் சேர்ந்தது. ஒரு மனிதனின் உள்ளங்கையிலே அடங்கிவிடக்கூடிய அவ்வளவு சிறியது அந்தப் பூனைக்குட்டி.

அது கூடத்திலே தங்கவில்லை. பசியால் வாடும் மனிதன் தனக்கு உணவு பரிமாறும்வரை காத்திராமல், உணவைத் தானாகவே எடுத்துத் தின்பானே; அந்த மாதிரி தான் பூனைக் குட்டியும் நேரே விடுவிடென்று சமையலறைக்குள் போய்விட்டது. கிரெய்க்கின் மனைவி தன்னை அறியாமலே ஒரு யந்திரம்போல் சிறு கிண்ணம் ஒன்றில் பால் வார்த்து ஒரு மூலையில் வைத்தாள். அதன்பின் என்றுமே அந்த மூலை அதற்குச் சொந்தமாகி விட்டது.

கிண்ணத்தைப் பூனைக்குட்டி இரண்டு தரம் வலம் வந்தது. பிறகு வலமோ இடமோ திரும்பிப் பாராமல் சௌக்கியமாய்த் தரையில் வயிறு பதியப் படுத்துக்கொண் டது. ரோஜாப்பூப் போல் சிவந்து நீண்ட மிருதுவான நாவை நீட்டி நீட்டிப் பாலை நக்கிக் குடிக்கத் தொடங்கியது.

கிரெய்க்கின் மனைவி மெல்லக் கூடத்து அறைக்குள் சென்றாள். அங்கே கிரெய்க் ஏதோ ஒரு புஸ்தகத்தைக் கையில் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தான்.

”நமக்கு ஒரு பாம்பினோ வந்திருக்கிறது” என்று மெல்லிய குரலில் சொன்னாள் மனைவி.

கணவன் தலையை நிமிர்த்தினான். சிறிது நேரம் மௌன ஆச்சரியத்துடன் மனைவியை வெறித்துப் பார்த்தான். அவன் படித்துக் கொண்டிரு க்கும்போது ஒருநாளும் இவ்விதம் அவன் கவனத்தை அவள் கலைத்ததில்லை.

“பாம்பினோவா?அதென்ன, அன்னா?”

இந்த ஐந்து வருஷ காலத்தில் இப்படித் தன் பெயரைக் கணவன் உச்சரித்தே அவள் கேட்டறியாள். ஒருவரை ஒருவர் பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டிய பிரமேயந்தான் ஏது? மூன்றாவது பிராணி இருந்தால்தானே வேறு பிரித்துக் குறிப்பதற்குப் பெயர் சொல்லி அழைக்கும் அவசியம் ஏற்படும். ‘இதைத் தா’ ‘அதைக் கொண்டு வா,’ ‘இங்கே பார்’ என்றே அவர்கள் பரஸ்பரம் சொல்லிக் கொள்வார்கள். அன்பு கனிய ஒருவர் பெயரை ஒருவர் உச்சரிப்பதேயில்லை. அவர்கள் ஒருவரோடும் கலகலப்பாய்ப் பேசியதே கிடையாது.

ஆண்களைவிடப் பெண்களே மிக்க உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். தங்கள் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் ரகசியங்களைத் தங்களை அறியாமலே சில சமயம் அவர்கள் வெளியே கொட்டிவிடுவார்கள். என்றாலும், சமையலறையிலே பசியோடு பாலை நக்கும் பூனைக்குட்டிக்குச் சட்டென்று ‘பாப்பினோ என்ற விசித்திரப் பெயரை அன்னா சூட்டியது மட்டும் ஆச்சரியந்தான். அவள் உள்ளத்திலே குழந்தையில்லாக் குறை புல்லரித்துக்கொண்டிருந்தது. கல்யாணமாகியும் மக்கட் பேறு கிட்டவில்லை. வீட்டிலே கலகலப்பில்லாமல் வெறிச்சென் றிருந்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் மாலையிலே எங்கிருந்தோ அநாதையாகப் பசியோடு வந்த அந்தப் பூனைக்குட்டி, தன் உள்ளத்தின் ஏக்கத்தைத் தீர்க்க வந்த தெய்வப் பரிசு – வீட்டின் வெறிப்பைப் போக்கத் தோன்றிய ஜீவ பாக்கியம் – என்று அன்னா ஒருவேளை கருதியிருக்கலாம்.

மனைவியின் விசித்திர வார்த்தைகளைக் கேட்டு, ஜான் கிரெய்க் கலவரமடைந்தான். எழுந்து சமையலறைக்குள்ளே போனான். அங்கே கிண்ணத்துப் பாலைக் குடித்தச் சுத்தமாய் நக்கிவிட்டு எழுந்த சின்னஞ் சிறு கறுப்புப் பூனைக்குட்டியை வியப்போடு பார்த்துக்கொண்டு நின்றான். பூனைக்குட்டி அவனிடம் ஓடிவந்து நன்றி செலுத்துவது போல அவன் கால் சட்டையிலே ஒட்டி உராய்ந்துகொண்டது. கிரெயக் கீழே உட்கார்ந்தான். பாம்பினோ அவன் மடியிலே தாவிப்படுத்தது. மனிதனின் அபார சக்தியையும் அவனுடைய தார்மிக உணர்ச் சியையும் பரிபூர்ணமாய் நம்பியது போல, கிரெய்க்கின் மடியிலே அது தூங்கத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு கிரெய்க் வியப்படைந்தான்.

கிரெய்க் தம்பதிகளின் உள்ள உணர்ச்சிகளை அறிந்துகொண்டவர்களால்தான் அவர்கள் வீட்டிலே இப்போது நிகழ்ந்துள்ள மாறுதல்க ளைக் கண்டுகொள்ள முடியும். அக்கம் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் அன்னா, ஜான் இருவரும் சென்று, “உங்கள் வீட்டிலிருந்து அழகான பூனைக்குட்டி ஏதாவது காணாமல் போயிற்றோ?” என்று எல்லாரையும் வெகு அக்கறையோடு விசாரித்தார்கள். கிறிஸ்துமஸுக்கு முந்திய நாள் மாலைமுதல் அது தங்கள் வீட்டில் வந்து வசிப்பதாகவும் தெரிவித்தார்கள்.

என்ன விந்தை! மிருதுவான பட்டுப் போன்ற அந்தப் பூனைக்குட்டி தங்களுக்குத்தான் சொந்தம் என்று யாரும் பாத்தியம் கொண்டாடவில்லை. இதற்கு மாறாக, கிரெய்க் தம்பதிகளை எல்லாரும் பிரமாதமாய் எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். “பூனைக்குட்டிகள் மோசமான பிராணிகள்; ஏமாற்றும்; திருடும். அவைகளுக்கு ஆளிடம் பிரியமே கிடையாது; வீட்டின் மீது தான் பிரியம். இதை விட்டுவிட்டு, ஒரு நாய்க்குட்டியை வளர்த்தாலும் பயனுண்டு” என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால் பூனைக்குட்டியின் பெருமையைக் கிரெய்க் தம்பதிகள் அறிந்துகொண்டார்கள். மனிதர்கள் வளர்த்திருக்கக் கூடிய எந்தப் பிராணியும் பாம்பினோவை விட அதிக அன்பு காட்டி, கொஞ்சி, விளையாடியிராது. பாம்பினோவின் கண்கள் உருண்டு விசாலமாய் ஈடு இணையற்று விளங்கின. அவற்றிலே சொர்ண வட்டங்கள் துலங்கின. அந்த வட்டங்களுக்குள்ளே சிவப்பும் பச்சையுமான விழிகள் மின்னின. இருண்ட மூலையொன்றிலே அமர்ந்தபடி பாம்பினோ தன் விழிகளைச் செலுத்தி, நாலுபக்கமும் நடப்பதையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும். பாம்பினோவின் வெல்வெட்டுப் போன்ற பாதங்களுக்கும், அதன் சூட்சுமமான காதுகளுக்கும் ஈடு ஜோடி எங்கும் இருக்க முடியாது. கடைந்தெடுத்தது போன்ற மூக்கு; உற்சாகமும் சுறுசுறுப்பும் அறிவும் நிறைந்த குஞ்சல முகம்;பால் போல் வெண்மையாய், ஊசி முனைபோல் கூர்மையாய்ச் சிலிர்த்த மீசை -இந்த லட்சணங்களோடு சிறிய புலிக்குட்டி போல் விளங்கியது பாம்பினா. அதன் தளுக்கு, ஒய்யாரம், சுயேச்சை, அழகு இவைகளையெல்லாம், எவ்வளவுதான் நன்றியுள்ள நாயிடமும் காணமுடியாது.

அதன் விஷமம் சொல்லி முடியாது; அழகிய திரைகள் மீதெல்லாம் தன் பாத நகங்களைப் பாய்ச்சிப் பொத்துவிட்டது. ஜானின் ஸிகரட் டப்பாவை மேஜையிலிருந்து உதைத்துத் தள்ளித் தரைமீது உருட்டி நொறுக்கியது. தளர்நடை போடும் குழந்தைபோலும், அபிநயித்து ஆடும் நாட்டியக்காரி போலும் நடித்து,  ஜானின் ஸிகெரெட் டப்பாவுடன் கண்ணாமூச்சி விளையாடியது. கீழே விரித்திருந்த ரத்தினக் கம்பளத்துக்கு அடியிலே அதை ஒளித்து வைத்துவிட்டு வெகு நேரம் தேடியது. கடைசியில், உபயோகிக்க முடியாதபடி நசுங்கிய நிலையில் அதை வெளியே எடுத்தது. ஜான் வருத்தத்துடன் பெருமூச்சு விட்டான். ஆனால் பாம்பினோவிடம் கோபம் கொள்ளவில்லை.

வீட்டிலே வெகு நேரம் தன்னந் தனியே அடைந்து கிடந்த அன்னாவுக்கு இப்போது பேச்சுத் துணை கிடைத்துவிட்டது. பாம்பினோவுக்கும் அவளுக்கும் பரஸ்பர பாஷை புரிந்துவிட்டது. பாம்பினோவுக்குப் பசியெடுத்தால் ஒரு வித ‘மியாவ்,’ அது விளையாட விரும்பினால் இன்னொரு வித ‘மியாவ், அதன் தூக்கம் கலைந்தால் வேறொரு வித ‘மியாவ்’-இப்படி வெவ்வேறுவகைக் குரல் கொடுக்கும். எஜமானின் மடி மீது உட்கார விரும்பினால், அது அவனைப் பிறாண்டும். தனக்குப் படுக்கையில் இடம் ஒழித்துத் தர வேண்டுமென்று கேட்க, எஜமானியின் முகத்தைப் பார்க்கும். பேச்சற்றிருந்த கிரெய்க் தம்பதிகளின் வீட்டுக்கு பாம்பினோ கொண்டு வந்த கிறிஸ்துமஸ் பரிசு பேச்சு.

பாம்பினோ அவர்களுடைய அறையிலே தூங்கும். அதிகாலையில் மிருதுவான சின்னஞ்சிறு தன் பாதத்தால் அவர்களுடைய முகத்திலே தட்டி அவர்களை எழுப்பும். அன்பு செலுத்தவும் சிந்திக்கவும் அவர்களுக்கு இப்போது ஒரு பிராணி கிடைத்துவிட்டதால், இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் நினைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இப்படிச் செய்து எத்தனையோ வருஷமாயிற்று. வளரும் பூனைக்கு உணவூட்டுவதன்மூலம், தங்கள் காதல் ஜ்வாலைக்கு அவர்கள் உணவூட்டினார்கள். அணையும் தருவாயிலிருந்த அது மீண்டும் உயிர் பெற்று ஓங்கி வளர்ந்தது.

அன்னாவும் ஜானும் மகிழ்ச்சி பெற்றார்கள். அவர்களைக் கண்டு ஊரார் நகைக்கிறார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

இந்தக்கிறிஸ்துமஸிலே அவர்கள் மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்கள் குதூகலத்துடன் நெடுநாளாய்க் காலியாகக் கிடந்த தங்கள் மேஜைமீது கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார்கள்.

நாளைக்கு நீங்கள் லண்டன் ரோடு வழியாகப் போக நேர்ந்தால், அன்னாவும் ஜானும் வசிக்கும் வீட்டு ஜன்னலிலே கரும்பட்டுப் போல் அழகான கறுப்புப் பூனை ஒன்றைக் காண்பீர்கள். அது மாதிரி பூனையை இதுவரைக்கும் நீங்கள் எங்கும் கண்டிருக்க முடியாது. வசீகரமும் லாகவமும் வாய்ந்த அதன் நீண்ட நாவுக்கு ஜோடியாக ரோஜா நிற ரிப்பன் ஒன்று அதன் கழுத்திலே சுற்றியிருக்கும். அதற்குக் கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு அந்த ரிப்பன்.

000

நன்றி :- மஞ்சரி- ஜனவரி -1952

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *