மூலம் : லூயி காரல்

தமிழ்ச் சுருக்கம்: எச்.கிருஷ்ணமூர்த்தி

கோடைக்காலம். ஆலிசும், அவளுடைய அக்காவும் தோட்டத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். செல்லப் பூனைச் குட்டி ‘தீனா’ அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. ஆலிஸ் ஒரு தாழ்ந்த மரக் கிளையில் உட்கார்ந்துகொண்டு குட்டிக்காக ஒரு மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள்.

அக்கா தரையில் உட்கொண்டு, ஒரு கதையை உரக்கப் படித்துக் கொண்டிருந்தாள்; புத்தகத்தில் படங்கள் இல்லை. கதையும் கவர்ச்சியாக இல்லை. மனம் கதையில் செல்லவில்லை. உறக்கம் அவளுடைய இமைகளை அழுத்தியது.

திடீரென ஒரு முயல் அவளைத் தாண்டி ஓடியது. வெள்ளை நிறம். சிவப்புக் கண்கள். சட்டைப் பையில் ஒரு கடிகாரம். முயல் கடிகாரத்தை வெளியே எடுத்துப் பார்த்தது. ‘“ஐயையோ! நேரமாகி விட்டதே!” என்று பதறிக் கொண்டே அது தலை தெறிக்க ஓடியது. கடிகாரம் பார்க்கும் முயலை ஆலிஸ் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. ‘அதற்கென்ன இவ்வளவு அவசரம்?’ என்று அறிய விரும்பினாள். ஆகவே, முயலைத் துரத்திக் கொண்டு அவளும் ஓடினாள். முயல் ஒரு பெரிய வளைக்குள் குதித்தது. ஆலிசும் தொடர்ந்து குதித்தாள். அது ஆழமான பள்ளம். காற்று வீசியதால் அவளுடைய சட்டை ஒரு பாராசூட்டைப் போல விரிந்தது. ஆலிஸ் மெதுவாகக் கீழே கீழே, கீழே விழுந்து கொண்டே இருந்தாள், பள்ளத்தின்பாதை நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவரில் பல படங்களும், விளக்குகளும், மாட்டப்பட்டிருந்தன. படங்கள் தலை கீழாகத் தொங்கின. தான் ஒரு வினோத உலகத்திற்குள் புகுவதை ஆலிஸ் உணர்ந்தாள். கடைசியாக அவள் சருகுகள் நிறைந்த தரையில் விழுந்தாள்.

நல்லவேளை; ஆலிசுக்கு அடிபட.வில்லை. எழுந்து நின்றான். எதிரே ஒரு சுரங்கப் பாதை தெரிந்தது. வெள்ளை முயல் அதில் ஓடிக் கொண் டிருந்தது. அவளும் தொடர்ந்தாள். பாதை ஒரு மண்டபத்தில் முடிந்தது. மண்டபத்தைச் சுற்றிலும் பல கதவுகள் இருந்தன. அவை பூட்டப்பட்டிருந்தன. முயல் மாயமாய் மறைந்திருந்தது. மண்டபத்தின் மூலையில் ஒரு கண்ணாடி மேசை. அதன் மேல் ஒரு தங்கச் சாவி. அருகில் ஒரு திரை. ஆலிஸ் திரையை விலக்கினாள். பின்னால் ஒரு சின்னக் கதவு. தங்கச் சாவியை எடுத்து அந்தச். சின்னக் கதவைத் திறந்தாள்.

வெளியே அழகான பூந்தோட்டம். வாசல் சின்னதாக இருந்ததால் அவளால் நுழைய முடியவில்லை.  வருத்தத்தோடு கதவைச் சாத்திச்  சாவியை மேசை மேல் வைத்தாள். திடீரென அங்கே ஒரு பாட்டில் தோன்றியது. அதன்மேல் ஒரு சீட்டு. ‘என்னை அருந்து” என்ற வார்த்தைகள் அதில் காணப்பட்டன. ஆலிஸ் அருந்தினாள். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

ஆனிசின் உயரம் குறைந்து கொண்டே போயிற்று! அவள் ஒரு மரப்பாச்சியின் அளவில் சின்னப் பெண்ணாக மாறினாள். மறுபடியும் தங்கச் சாவியை எடுக்கப்போனாள் மேசை உயரமாக இருந்தது. அவள் சுமார் பத்து அங்குல உயரம்தான் இருந்தாள். ஆகையால் சாவி எட்டவில்லை. ஏமாற்றமாகப் போயிற்று.

மேசையின் கீழே ஒரு கண்ணாடி ஜாடி தோன்றியது.  ‘என்னைச் சாப்பிடு’ என்ற சீட்டு இருந்தது. ஆலிஸ் அந்த ஜாடியைத் திறந்தாள். உள்ளே ஒரு கேக் இருந்தது. சாப்பிட்டாள். உடனே அவள் ‘கிடு கிடு’வென வளர்ந்தாள். பத்து அங்குலத்திலிருந்து பத்து அடிஉயரம் ஆனாள். தலை கூரையைத் தொட்டது. மறுபடியும் அவளால் அந்தச் சின்ன வாசலுக்குள் நுழைய முடியவில்லை. அழத் தொடங்கினாள். அவளுடைய கண்ணீர் அருவி போலக் கொட்டிக் குளம் போலத் தேங்கி, ஆறு போல ஓடியது.

”இளவரசி காத்துக் கொண்டிருப் பாள். சீக்கிரம் போக வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வெள்ளை முயல் மண்டபத்தில் தோன்றியது. ஆலிசின் பெரிய உருவத்தைப் பார்த்ததும் அது பயந்து போயிற்று.  தான் வைத்திருந்த கையுறைகளையும், விசிறியையும் அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது. ஆலிஸ் அந்தக் கையுறைகளை அணிந்தாள். விசிறியால் விசிறிக் கொண்டாள். “என் உருவம் சின்னதாக இருந்தால், நான் அந்த அழகியதோட்டத்திற்குப் போகலாமே” என்று எண்ணினாள். உடனே அவள் குறுகி. மிகச் சிறியவளாக மாறினாள்.

ஆலிஸ் தோட்டக் கதவை நோக்கி ஓடினாள். வழியில் தேங்கியிருந்த கண்ணீர்க் குளத்தில் விழுந்தாள். கையுறைகளும், விசிறியும் நீரில்

தொலைந்து போயின. ஆலிஸ் நீந்தினாள். மண்டபத்தில் இருந்த பொருள்கள் நீரில் மிதந்து சென்றன. பல மேலும் எலி, கிளி, பருந்து, வாத்து ஆசிய பல பிராணிகளும் பறவைகளும் அந்த நீரில் விழுந்திருந்தன. அவை கரையை நோக்கி நீந்தின. எல்லோரும் கரை சேர்ந்தனர். உடம்பிலிருந்த ஈரம் காயும் வரை ஆலிகம், மற்றப் பிராணிகளும் ஓர் ஓட்டப்பந்தயம் நடத்தி விளை யாடினர். பிறகு ஆளுக்கு ஒரு கதை சொல்லினர். ஆலிஸ் தன் பூனைக் குட்டியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். எலியும், மற்றப் பிராணிகளும் பயத்தினால் ஓடி மறைந்தன. வெள்ளை முயல் மறுபடியும் தோன் றியது. கையுறைகளையும், ‘விசிறியையும் தேடிக் கொண்டு வந்தது. சின்ன உருவிலிருந்த ஆலிசைப் பார்த்து அவளைத் தன் பணிப்பெண் மேரி என எண்ணியது. ”மேரி! வீட்டுக்குப் போய்க் கையுறைகளையும், விசிறியையும் எடுத்து வா!’ என உத்தரவிட்டது.

“நான் உன்னுடைய வேலைக்காரியில்லை. ஆனாலும் உனக்கு உதவி செய்வேன்!” என்று சொல்லிக்கொண்டே ஆலிஸ் முயலின் வீட்டை, நோக்கி ஓடினாள்.

அது அழகான ‘சிறிய வீடு, வாச லில் ‘வெ. முயல்’ என்ற பெயர்ப் பலகை இருந்தது. ஆலிஸ் கதவைத் திறந்தாள். படிகளில் ஏறி மாடிக்குச் சென்றாள், அங்கு கையுறைகளும், விசிறியும் இருந்தன. எடுத்துக் கொண் டாள், அருகில் ஒரு பாட்டில் நிறைய ஒரு திரவம் இருந்தது. அதன் மேல் ஒன்றும் எழுதப் படவில்லை. “இந்தச் சின்ன உருவம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் பெரியவளாக வளர்ந்தால் சௌகரியமாக இருக்குமே!’’  என்று சொல்லிக் கொண்டே அந்தத் திரவத்தைக் குடித்தாள்.

எண்ணியபடியே ஆலிஸ் மடமட வென வளர்ந்து ஒரு ராட்சச உருவத்தை அடைந்தாள். கைகள் ஜன்னல் வழியாக நீண்டு ஆகாயத்தில் தொங்கின. கால்கள் கதவுகளின் வழியாக நீளமாக வளர்ந்தன. உடம்பு பெருத்தது. கொஞ்சங்கூட அசைக்க முடியவில்லை. அசைத்தால், கண்ணாடிகள் படபடவென உடைந்து விழுந்தன. ஆலிசுக்கு உயிரே போவது போல இருந்தது.

கையுறைகளுக்காக வெள்ளை முயல் தன் வீட்டுக்கு வந்தது. வீட்டிற்குக் கையும். காலும் முளைத்திருந்தது! புகை போக்கி வழியாக ஒரு தலை நீண்டது! வீடே ஆடியது! முயல் பயந்து போய், ‘பூதம்! பூதம்! என்னைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று கதறிக்கொண்டே வெளியே ஓடியது.

முயலின் கூச்சலைக் கேட்டு அருகிலிருந்த பிராணிகள் ‘ஓடி வந்தன. அந்த ராட்சச உருவத்தை வீட்டிலிருந்து எப்படி. வெளியேற்றுவது என அவை ஒன்று கூடி ஆலோசித்தன. புகை போக்கியின் வழியாக உள்ளே இறங்கி, பில் என்ற பல்லி அந்த உருவத்தை வெளியே இழுத்து வர வேண்டும் என்று அவை தீர்மானித்தன. பில் ஏணி வைத்து முயன்றது. ஆலிஸ் ஓர் உதை கொடுத்தாள். பில் குட்டிக் கரணம் போட்டுக் கீழே விழுந்தது. உடம்பு முழுவதும் காயம். பாவம்! பில்லினால் எழுந்திருக்க முடியவில்லை.

‘வீட்டுக்கு நெருப்பு வைக்கலாம்” என்று ஒரு பிராணி யோசனை கூறியது. “பூனையைக் கூப்பிடுவேன்” என்று ஆலிஸ் பயமுறுத்தினாள். அவை அமைதியாயின. சிறிது நேரங்கழித்து அவை ஆலிஸ் மீது கற்களை எறிந்தன. உள்ளே விழுந்ததும் அந்தக் கற்கள் கேக்குகளாக மாறின. ஆலிசுக்கு ஒரு யோசனை தோன்றியது. “நான் இந்தக் கேக்கைச் சாப்பிட்டால் ஒரு வேளை சின்னவளாக ஆகலாம்” என்று நினைத்தாள்.

அவ்வாறே சாப்பிட்டாள். ஆலிசின் உருவம் சிறுத்தது. அவள் சந்தோஷமாக வாசல் வழியாக வெளியே ஓடினாள். பிராணிகள் துரத்தின. அருகில் இருந்த ஒரு காட்டுக்குள் ஓடி அவள் தப்பினாள்.

உருவம் மிகச் சிறியதாக இருந்ததால் அவளால் தலைக்கு மேல் வளர்ந்திருந்த மரங்களை பார்க்கமுடியவில்லை. பூச்செடிகள் அவளுடைய தலைக்கு மேல் ஓங்கி வளர்ந்திருந்தன. எத்தனை வண்ணங்கள்! எத்தனை வடிவங்கள்! மலர்களெல்லாம் காற்றில் அசைந்து ஆடின. ஆலிசைக் கண்டதும் அவை ஒன்று சேர்ந்து இனிய குரலில் பாடின. அந்த இசை ஆலிசுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளும் கூடவே பாடினாள்.

பாட்டு முடிந்ததும், மலர்கள் ஆலிசைப் பார்த்துச் சரமாரியாகக் கேள்விகள் கேட்டன. ஆலிசின் சட்டையைப் பிடித்து இழுத்து, ‘இது என்ன? புது மாதிரி இதழாக இருக்கிறதே? என்று ரோஜா மலர் கேட்டது. முரட்டுத்தனமாக ஆலிஸை முகர்ந்து பார்த்து, “உன்னிடம் வாசனையே இல்லையே?” என்றது. ஒரு டெய்சிப் பூ. “நீ எந்தத் தோட்டத்திலிருந்து வருகிறாய்?” என்று கேட்டது ஒரு லில்லி,

”நான் மலர் இல்லை; நான் ஒரு சிறுமி”, என்றாள் ஆலிஸ்,

“மலராக இல்லாவிட்டால், நீ பயனற்ற ஒரு களைச் செடியாகத்தான் இருக்க வேண்டும்”, என்று அவை கூறின.

”உன் பெயரை நாங்கள் கேட்டதே இல்லை. எங்களோடு இங்கே வேரூன்றி நிற்காதே. ஓடு!’ ஓடு!” என்று எல்லா மலர்களுமாக அவனை விரட்டின. “நான் மட்டும் என்னுடைய பழைய உருவில் இருந்தால் உங்களுக்கெல்லாம் சரியான பாடம் கற்பித்திருப்பேன்!” என்று சொல்லிக்கொண்டே. ஆலிஸ் நகர்ந்தாள்.

அந்தத் தோட்டத்தில் ஒரு பெரிய காளான் முளைத்திருந்தது. ஆலிஸ் அதன் அருகில் சென்றாள். “நான் மறுபடியும் பழைய உருவத்தை அடைய வேண்டும்! அதற்கு ஏதாவது சாப்பிடவேண்டுமே!’ என்று சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள். காளானின் மீது பச்சை நிறத்தில் ஒரு கம்பளிப் பூச்சி படுத்திருந்தது. ஒரு கையைச் சோம்பேறித் தனமாகக் கன்னத்தில் வைத்துக் கொண்டு, மற்ற இரண்டு கரங்களாலும் ஹுக்குழலைப் பற்றிப் புகை பிடித்துக் கொண்டிருந்தது.

 ஆலிசும், கம்பளிப் பூச்சியும் ஒரு . வரை ஒருவர் மௌனமாக உற்று நோக்கினர். “யார் நீ?” என்று வித மயக்கத்தோடு கம்பளிப் பூச்சி கேட்டது. ‘இன்று காலை முதல் அநேக தடவை உருமாறி விட்டேன்!”  என்றாள் ஆலிஸ்.

”விவரமாகச் சொல்?”

“இப்போது நான் யாரென்று எனக்கே தெரியவில்லை! நீயும் ஒருநாள் வண்ணத்துப் பூச்சியாக மாறுவாய். அப்போது உனக்கும் அது வினோதமாக இருக்கும் இல்லையா?”

“இருக்கவே இருக்காது!” ‘

‘உன்னுடைய உணர்ச்சிகள் வேறாக இருக்கலாம். ஆனால், எனக்கு இப்போது வினோதமாகத்தான் இருக்கிறது!”

“நீ யாரென்று சொல்லவே இல்லையே!… சரி, போனால் போகிறது. ‘அப்பா, உனக்கு மூப்பு வந்தது’ என்ற பாட்டைப் பாடு; பார்க்கலாம்” என்று கேட்டது கம்பளிப் பூச்சி. ஆலிஸ் பாடினாள். பாட்டு சரியில்லை என்று வாதாடியது கம்பளிப் பூச்சி. ஆலிசுக்குக் கோபமாக வந்தது. அங்கிருந்து போகத் தொடங்கினாள். “கோபித்துக்கொண்டு போகாதே. உனக்கு என்ன கஷ்டம் என்று சொன்னால் உதவி செய்வேன்’, என்றது கம்பளிப்பூச்சி.

“எனக்குக் கொஞ்சம் உயரமாக வளர்ந்தால் தேவலை” என்றாள் ஆலிஸ்.

“இந்தக் காளானின் ஒரு பக்கத்தை சாப்பிட்டால் உயரலாம்; மறுபக்கத்தைச் சாப்பிட்டால் குறுகலாம்”, என்று கூறிவிட்டு அந்தக் கம்பளிப்பூச்சி ஒரு குட்டிக் கரணம் போட்டது. உடனே அது ஓர் அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறி உயரப் பறந்தது.

ஆலிஸ் காளானிலிருந்து சில துண்டுகளை உடைத்து எடுத்தாள். இடது கையிலிருந்த துண்டைக் கொஞ்சம் உண்டதும் அவள் உயர்ந்தாள். வலது கைத்துண்டைச் சாப்பிட்டதும் அவள் குறுகினாள். அந்தக் கண்டுபிடிப்பு ஆலிசுக்கு ஆனந்தமாக இருந்தது.

ஆலீஸ் பழையபடி சாதாரண உயரத்தை அடைந்ததும் கொஞ்சதூரம் நடந்தாள். மரங்களடர்ந்த ஒரு மாளிகையைக் கண்டாள். அது இளவரசியின் இருப்பிடம். மீனைப் போன்ற ஒரு பணியாளன் ராணியிடமிருந்து இளவரசிக்கு ஒரு கடிதம் கொண்டு வந்திருந்தான். அவன் கதவைத் தட்டி. அழைத்தான். உள்ளேயிருந்து தவளையைப் போன்ற மற்றொரு சேவகன் அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண் டான். இருவரும் வணங்கி விடை. பெற்றனர். ராணி இளவரசியைக் கால்ஃப் பந்தாட்டத்திற்கு அழைத்திருந்தாள்.

ஆலிஸ் மாளிகையில் நுழைந்தாள். இளவரசி கையில் ஒரு குழந்தை இருந்தது. அடுப்பில் சூப் கொதித்துக் கொண்டிருந்தது. அறைகள் புகை மயம். ஒரே குழப்பம். சமையல்காரி பாத்திரங்களை எறிந்து கொண்டிருந்தாள். மிளகுப்பொடி கொட்டிக் கிடந்தது. அந்த நெடியில் எல்லோரும் தும்மிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த பூனை மட்டும் தும்மவில்லை. ஒரு காதிலிருந்து இன்னொரு காது வரைக்கும் அது வாயைப் பிளந்து, பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது ‘பூனை ஏன் அப்படிச் சிரிக்கிறது?’ ஆலிஸ் இளவரசியைப் பார்த்துக் கேட்டாள்.

‘’அது ஒரு இளிச்சவாய்ப் பூனை. அப்படித்தான் சிரிக்கும்”, என்று சொல்லிவிட்டு, “பன்றியைப் போல் சும்மா என்னை நச்சரிக்காதே!” என்று குழந்தையை அதட்டினாள். குழந்தை அழுது கொண்டே இருந்தது. ஆலிஸ் குழந்தைக்காகப் பரிதாபப்பட்டாள். இளவரசி குழந்தையை ஆலிசின் கையில் கொடுத்துவிட்டு, ”ராணி அழைத்திருக்கிறாள்.போகிறேன்”, என்று சொல்லி புறப்பட்டாள்.

ஆலிஸ் குழந்தையை வெளியே எடுத்துப் போய்ச் சமாதானம் செய்தாள். அது கை, கால்களை உதைத்துக் கொண்டு வீறிட்டது. குரல் வினோதமாக ஒலித்தது. கண்கள் சின்னஞ் சிறிதாக மாறின. ஆலிஸ் அதை உற்றுப் பார்த்தாள், அது ஒரு பன்றிக் குட்டியாகவே மாறியிருந்தது. அதைக் கீழே விட்டாள்.. அது துள்ளிக் குதித்து ஓடிக் காட்டில் மறைந்தது.

ஆலிஸ் திகைத்து நின்றாள். எங்கே போவதென்று தெரியவில்லை. அப்போது மரக்கிளையிலிருந்து ஓர் இனிய இசை கேட்டது. ஆர்மோனியத்தின் கட்டைகளைப் போல் வெண் பல் வரிசைகள் பளிச்சிட்டன. பச்சைக் கண்கள் இரண்டு பிரகாசித்தன. முகம், பிறகு வரிவரியான உடல் இளிச்சவாய்ப் பூனையின் முழு உருவமும் வெளிப்பட்டது! ஆலிஸ் அதனருகில் போய், “பூனையே, பூனையே! இங்கிருந்து நான் எந்த வழியாகப் போக வேண் டும்?” என்று கேட்டாள்.

“நீ எங்கே போகிறாய் என்பதைப் பொறுத்தது” என்றது பூனை.

’குறிப்பாக எந்த இடத்துக்கும் இல்லை.’

“அப்படியானால் நீ எந்த வழியாக வேண்டுமானாலும் போகலாம்.”

“ஏதாவது ஓர் இடத்திற்குப் போக வேண்டுமில்லையா?”

“சிறிது தூரம் நடந்தால் நிச்சயம் அப்படி ஓர் இடத்தை அடையலாம். ஒரு வெள்ளை முயல்கூட இந்த வழியாகத்தான் போயிற்று…’’

‘வெள்ளை முயலை எனக்குப் பார்க்க வேண்டுமே!’ ஆலிஸ் ஆர்வத்தோடு கேட்டாள்.

“இந்தப் பாதையில் போனால் ஒரு தொப்பி வியாபாரி இருக்கிறான். அவனைக் கேட்டால் சொல்லுவான். ஆனால், அவன் ஒரு பைத்தியக்காரன், அவள் வீட்டில் ஒரு தேநீர் விருந்து நடக்கிறது. ஒரு பழுப்பு முயலையும் அங்கே காணலாம்”’ பூனை பதில் சொன்னது.

“நான் பைத்தியகாரர்களைப் பார்க்கப் போக மாட்டேன்”, என்றாள் ஆலிஸ்.

”உன்னால் அதைத் தவிர்க்க முடி யாது. ஏனென்றால் இங்கு அநேகமாக எல்லோருமே பைத்தியக்காரர்கள் தான்’’, என்று சொல்லிவிட்டுப் பூனை கலகலவென்று சிரித்தது; குதித்தது; கூத்தாடியது. முதலில் தலையிலிருந்து வால் வரைக்கும், அது கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தது. மறுபடியும் அது தோன்றி, ‘வாலிலிருந்து ‘தலை வரைக்கும் மறைந்து கொண்டே வந்தது. கடைசியில். அதனுடைய இளிச்சவாய் மட்டும் நெடுநேரம் பளிச்சென்று காட்சி அளித்தது. அது வரை ஆலிஸ் சிரிப்பே இல்லாத பூனையைப் பார்த்திருந்தாள். ஆனால், அன்று பூனையே இல்லாத சிரிப்பைப் பார்த்து அதிசயித்தாள். இவ்வாறு பூனை தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் செய்து காட்டியது. அதற்கு நன்றி சொல்லிவிட்டு, ஆலிஸ் தொப்பி வியாபாரி வீட்டை நோக்கி நடந்தாள்.

அந்த வீட்டில் ஆலிஸ் வினோதமான மக்களைச் சந்தித்தாள். பைத்தியக்காரத் தொப்பி வியாபாரி, பழுப்பு முயல், தூங்கும் எலி – ஆகிய மூவரும் காணப்பட்டனர். அறை ஒழுங்கு இல்லாமல் இருந்தது. ‘மேசைமேல் தட்டுகளும், கோப்பைகளும் தாறுமாறாகக் கிடந்தன. எலி தன்னுடைய கோப்பையிலேயே படுத்துக் கொண்டு குறட்டை விட்டது. அவை சில முட்டாள்தனமான புதிர்களைக் கூறி ஆலிசிடம் விடை கேட்டன. பிறகு அவளை அலட்சியப்படுத்தி விட்டு அவை தங்களுக்குள்ளேயே உரையாடின. எலி ஒரு கதை சொல்லத் தொடங்கிப் பாதியிலேயே உறங்கியது. அந்தப் பைத்தியக்காரக் கூட்டத்திலிருந்து தப்பித்து ஆலிஸ் வெளியே ஓடினாள்.

அடுத்து அவள் ஒரு ரோஜாத் தோட்டத்தை அடைந்தாள். வெள்ளை ரோஜாச் செடிகள் அவளை வரவேற்றன. ஆட்டச்சீட்டுகளில்(Playings Cards) மூவர் செடிகளைச் சுற்றிச் சுற்றிக் குதித்துக் கொண்டிருந்தனர். கைகளில் அவர்கள் வண்ணக் குவளையையும், தூரிகையையும் ஏந்தியிருந்தனர். கிளாவர் மூன்று (clubs three) என்பவன் ஓர் ஏணியில் ஏறி உயரத்தில் இருந்த வெள்ளை ரோஜாவுக்குச் சிவப்பு வண்ணம் பூசிக்கொண்டிருந்தான். கிளாவர் இரண்டும். ஏசும் {clubs two and ace) செடியைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்த மூவரும் பாட்டுப் பாடிக் கொண்டே மலர்கள் மீது சிவப்பு வண்ணத்தை வாரி இறைத்துக்கொண்டிருந்தனர்.

அருகில் சென்று ஆலிஸ் காரணம் கேட்டாள். “அரசி இங்கு சிவப்பு ரோஜாவை நடச் சொல்லியிருந்தாள். மறந்து போய் நாங்கள் வெள்ளை ரோஜாவை நட்டு விட்டோம். விஷயம் தெரிந்தால், நிஜமாகவே அரசி எங்கள் தலைகளை வாங்கி விடுவாள்”, என பயந்து கொண்டே ஒரு தோட்டக்காரன் சொன்னான். அவர்கள் சாயம் பூசி முடிப்பதற்குள் ஆர்ட்ஸ் அரசி (Queen of Hearts) அங்கு வந்து விட்டாள். ஆர்ட்ஸ் அரசனும், ஈட்டி தாங்கிய மற்ற சீட்டு வீரர்களும் புடைசூழ வந்தனர். கூட்டத்தின் நடுவில் வெள்ளை முயல் ஊது கொம்பை முழக்கிக் கொண்டு கம்பீரமாக வந்தது. தோட்டக்காரர்கள் செய்த தவறை அறிந்ததும் அரசி கோபமடைந்தாள்.

‘’தவறு செய்தவர்களின் த தலையை வெட்டுங்கள்’’ என்று கடுமையாக உத்தரவிட்டாள். ஆலிஸ் அந்தத் தோட்டக்காரர்கள் மீது இரக்கப்பட்டாள். ஒரு பெரிய பூந்தொட்டியில் அவர்களை மறைத்து வைத்து அரசியின் தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினாள்.

கால்ஃப் ஆட்டம் தொடங்கியது. சீட்டு ராஜ்யத்தின் சீமான், சீமாட்.டிகள் பலர் அதில் ஆடினர். அத்தகைய வேடிக்கையான ஆட்டத்தை அது வரையில் ஆலிஸ் கண்டதில்லை. உயிருள்ள பிராணிகளை விளையாட்டுக் கருவிகளாக உபயோகித்தனர். நாரை தடியாகவும் (Stick), முள்ளெலி பந்தாகவும் பயன்பட்டது. ஆலிசையும் அழைத்தனர். கலந்து கொண்டாள். நாரையின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஆலிஸ் அதை வீசியபோது அந்த நாரை பந்தை அடிக்காமல் கழுத்தை வளைத்து ஆலிசை வினோதமாகப் பார்த்தது. எல்லோரும் சிரித்தனர். ஆலிசும் சிரித்தாள். அது அவளுக்குக் கடினமான ஆட்டமாகத் தோன்றியது. எல்லோரும் ஒரே சமயத்தில் ஆடினர். ஒழுங்கு இருக்கவில்லை. அரசிக்குக் கோபம் வந்தது. ”இவனுடைய தலையை வெட்டுங்கள்! அவனுடைய தலையை வெட்டுங்கள்!” என்று நிமிஷத்திற்கு ஒரு தரம் உத்தரவிட்டுக் கொண்டிருந்தாள்.  “இப்படி வெட்டிக் கொண்டே இருந்தால் கடைசியில்  யார்தான் மிஞ்சுவார்கள்?’’ என்று ஆலிஸ் ஆலோசித்தாள்.

ஆட்டம் நடந்து கொண்டிருக்கையில் இளவரசி ஆலிசைச் சந்தித்தாள். இருவரும் கடற்கரைக்குச் சென்றனர். பெரிய கடலாமைகளையும், அங்கு கிரிபன் (gryphon.) என்னும் பெயருள்ள கழுகுத் தலையும். சிங்க உடலும் கொண்ட வினோதப் பிராணியையும் கண்டு உரையாடினர். அப்போது  ஒரு செய்தி அரண்மனையிலிருந்து வந்தது.

அரசி புது மாதிரியான கேக்குகள் செய்திருந்தாள். சீட்டு வீரன் ஒருவன் குறும்புத்தனமாகச் சில கேக்குகளைத் திருடி விட்டான். அவனைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தனர். வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான சீட்டு மனிதர்களும் பிராணிகளும் நீதிமன்றத்தில் குழுமியிருந்தனர். 

ஆர்ட்ஸ் அரசியும், அரசனும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.  அறையின் மத்தியில் பெரிய தட்டு நிறைய புதிய கேக்குகள் வைக்கப்பட்டிருந்தன. வேல் தாங்கிய சீட்டு வீரர்கள் வரிசை வரிசையாக நின்றனர். கைகள் கட்டப்பட்டுக் குற்றவாளி சோகமே உருவாக ஒரு மூலையில் நின்றிருந்தான். பன்னிரண்டு சிறிய பிராணிகளும், பறவைகளும் ஜூரர்கள் பகுதியில் வீற்றிருந்தனர். அவர்கள் சிலேட்டை. வைத்துக் கொண்டு சாக்பீசால் (Chalkpiece) எழுதிக் கொண்டிருந்தனர்.

வெள்ளை முயல் ஊது கொம்பை முழக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தது. அரசிக்கு வணக்கம் தெரிவித்து விட்டுக் கையிலிருந்த சுருள் சுவடியைப் பிரித்தது. “குற்றவாளி முன்கூட்டியே திட்டமிட்டுக் கால்ஃப் ஆட்டத்தில் குழப்பத்தை உண்டாக்கி அரசி பொறுமையை இழக்கச் செய்தான்…” என்ற பகுதிகளை வெள்ளை முயல் தெளிவாகப் படித்தது.

“தண்டனையை நீ ஏற்கத் தயாரா?” அரசி கைதியைப் பார்த்துக் கேட்டாள்.

“தண்டனையா? முதலில் தீர்ப்பு அல்லவா வழங்க வேண்டும் ”, என்று ஆலிஸ் குறுக்கிட்டாள்.

‘அந்த வழக்கமெல்லாம் கிடையாது. இங்கு தண்டனை முன்னால். தீர்ப்பு பின்னால்”, என்று அரசி அடித்துக் கூறினாள்.

“சில சாட்சிகளை விசாரிக்கலாமே” என்று அரசர் ஆலோசனை கூறினார். சீட்டு வீரர்கள் சில சாட்சிகளை அழைத்து வந்தனர். அவர்கள் வேறு யாரும் அல்ல. பைத்தியக்காரத் தொப்பி வியாபாரி, பழுப்பு முயல், தூங்கு மூஞ்சி எலி, இளவரசியின் சமையல்காரி-ஆகியோர்தான் வெள்ளை முயல் வழக்கம் போலக் குழலை ஊதியது அர்த்தமில்லாத கேள்விகள், அர்த்தமில்லாத பதில்கள். ஆனால் ஜூரர்கன் அவற்றைக் கவனமாக எழுதிக்கொண் டனர். ஒவ்வொரு சாட்சியும் பேசி முடித்ததும். “சாட்சியின் தலையை வெட்டு!” என்று அரசி ஆணை பிறப்பித்தாள்.

‘அடுத்த சாட்சி யார்?”என்று அரசன் கேட்டான். வெள்ளை முயல் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டே, பட்டியலைப் பார்த்து, ‘ஆலிஸ்’ என்று உரக்கப் படித்தது. ஆலிஷ் ஆச்சரியத்தில் மூழ்கினாள். மற்ற சாட்சிகளின் விசாரணையின் போதே ஆலிஸ் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்திருந்தாள். இப்போது கிடுகிடுவென்று உயர்ந்து விட்டாள்.

‘இதோ வந்து விட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே துள்ளி எழுந்த ஆலிஸ் ஜூரர்களின் பகுதியில் மோதிக் கொண்டாள். ஜூரர்கள் தூக்கி எறியப்பட்டனர். சிலேட்டும், சாக்பீசும் நாலாப் புறமும் சிதறின. நீதிமன்றம் அமைதியடையக் “கொஞ்ச நேரம் ஆனது. வழக்கம் போல அர்த்தமற்ற கேள்விகள் ஆலிசிடமும் கேட்கப்பட்டன. ஏற்ற பதிலை அளித்தாள்.

அரசன் குறுக்கிட்டு, “கைதி கேக்குகளைத் திருடினானா, இல்லையா?” என்று கேட்டார். “முதலில் தலையை வெட்டுங்கள். பிறகு கேள்வி கேளுங்கள்” என்று அரசி உத்தரவிட்டாள். தென்ன

இதென்ன முட்டாள்தனமாக இருக்கிறதே! முதலில் கேள்வி கேளுங்கள்.” என்றாள் ஆலிஸ்.

“வாயை மூடு”, அரசி கோபமாகக் கூறினாள்.

”மாட்டேன்!'”

“இவளுடைய தலையை வெட்டுங்கள்!! என்று அரசி உத்தரவிட்டாள்.

 “நீங்கள் சாதாரண ஆட்ட சீட்டுத் தானே? உங்களுக்கு யார் பயப்படுவார்கள்?” என்று ஏளனமாகச் சொன்னாள் ஆலிஸ்.

கூரிய வேல் தாங்கிய சீட்டு வீரர்கள் கூண்டிலிருந்த ஆலிசை நோக்கிப் பாய்ந்து வந்தனர். அவள் கண்களை இறுக மூடிக் கொண்டு ‘ஓ’வென அலறினாள்.

இமைகளைத் திறந்ததும் ஆலிஸ் ஆற்றங்கரையில் மரநிழலில் படுத்திருந்தாள். மாலைக் கதிரின் ஒளிபட்டு மலர்ச்செடிகள் பிரகாசித்தன. ”எவ்வளவு  நேரம் தூங்குவாய் எழுந்திரு ஆலிஸ்” என்று அக்கா அவளை எழுப்பினாள். ஆலிசின் மீது விழுந்திருந்த சருகுகளைத் தட்டினாள்.

அருகிலிருந்த செல்லப் பூனை, “மியாவ்” என்று குரல் கொடுத்தது. மாதா கோவில் மணி ‘டண், ‘டண்’ அடித்தது. மாலைத் தேநீர் நினைவுக்கு வந்தது. தான் கண்ட அதிசயக் கனவை அக்காவுக்குச் சொல்லிக் கொண்டே, ஆலிஸ் வீட்டை நோக்கி நடந்தாள்.

000

Lewis Carroll எழுதிய Alice in Wonderland என்ற ஆங்கிலக் கதையின் சுருக்கமே இது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *