சு.ராம்தாஸ்காந்தி.
“அடுத்த வாரம் திண்டுக்கல் வரேன்“ என்று நித்யா கூறியிருந்தாலும்
அந்நாள் உடனே வந்து விடவில்லை. நான்கு வாரங்களைக் கடந்து விட்ட
ஒரு நாள் மதியப்பொழுதின் அலைபேச்சில்
“வருண்… நாளைக்குத் திண்டுக்கல் வந்துருங்க. பஸ் ஸ்டாண்ட் வந்துட்டு
எனக்குக் கால் பண்ணுங்க. நான் லொகேஷன் ஷேர் பண்றேன். சரியா? என்றாள். “சரி“ என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் வருண்.
மறுநாள் கொஞ்சம் சீக்கிரம் விடிந்தது போலத் தோன்றினாலும்
’எப்பொழுது மாலையாகும்? ’ என்று காத்திருக்கும் அளவிற்கு அவஸ்தை வருணை ஆக்கிரமித்திருந்தது.
இரவு 8 மணிக்கு மேலிருக்கும். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்
வருண் இறங்கியபொழுது பெரிதாகக் கூட்டமிருப்பது போல் தெரியவில்லை.
கரூர் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் டீக்கடையில் பலகாரங்கள் கண்ணாடிப் பெட்டியின் மீது வட்டத்தட்டில் அடுக்கப்பட்டிருந்தன.
“ உளுந்து வடையை எப்படி இத்தனை மென்மையாக
எண்ணெயில் வார்த்து எடுக்க முடியும்? “ என்கிற தனது சந்தேகத்திற்கு
“பஜ்ஜி மாவுல கீது போட்ருப்பானுக“ என்று தனக்குத்தானே மனதிற்குள் பதில் சொல்லியபடி அந்தக் கடையின் குறுக்கே நுழைந்து மதுரை வண்டிகள் நிற்குமிடத்திற்கு வந்தான் வருண்.
அந்த மிருதுவான வடையை கடலைமாவு போட்டுச் செய்த காரக்குருமாவில் முக்கி வாயில் போட்டுக் கொள்ள வேண்டுமென கடைவாயின் இரு ஓரங்களிலிருந்தும் உமிழ்நீர் ஓடிவந்தது. இடப்புறம் திரும்பி நேரே கிழக்குப் பக்கம் வந்த வருணின் கண்களில்பட்டது அந்தக் கட்டணக் கழிப்பறை. டேபிளின் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தவன் உள்ளே நுழைந்தான். பொதுக்கழிப்பிடத்திற்கான சகல அம்சங்களுடனும் உள்ளே மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. பக்கத்துப் பக்கத்து அறைகளின் வெளியே நின்று ஒருவரை மாற்றி ஒருவரை வெறித்தபடி குறியைப் பற்றிக் கொண்டிருந்த இருவரும் நிமிர்ந்து இவனைப் பார்த்ததும் வருணின் நெஞ்சில் ஒரு கனத்த இருள் பரவி அதிர்ந்தது. கொஞ்சம் தள்ளி மூன்றாவது அறையிலிருந்து மற்றுமொருவன் உடலை உள்ளே பதுக்கியபடி தலையை மட்டும் வெளியே ஒரு பாம்பைப் போல நீட்டியது தான் தாமதம். கைகழுவும் பீங்கான் பொருத்தப்பட்டிருக்கும் வாசலுக்கு ஓடியே வந்துவிட்டான் வருண்.
அடர்ந்த நாற்றம் விலகாத சிறுநீர் தரையெங்கும் பரவியிருந்ததால் பையைக் கீழே விடாமல் தொடைகளுக்கிடையே பொருத்திக் கொண்டு துணிகளை ஒவ்வொன்றாக வெளியே உருவி தரைபாவாமல் பற்றிப் பிடித்து செருப்பில் கால் வைத்து ஆடைமாற்றிக் கொண்டான். கழிவறைக்கு வெளியே வந்து தூரத்தில் நகர்ந்துவிட்ட போதும் வருணின் நெஞ்சில் அந்தப் பதட்டம் தணிந்தபாடில்லை. சிவந்த நிறத்தில் தடித்த உடலுடனிருந்த அந்தக் கிழவனின் கண்களில் துலங்கிய ஒருபால் நுகர்வின் வெறி ஒரு பாம்பின் தடம் போல வருணின் பாதையெங்கும் மிரட்டிக் கொண்டிருந்தது. நித்யா அழைத்தாள்
“அலோ… ஏங்க திண்டுக்கல் வந்துட்டீங்களா?“
“ஆங்… இப்போதாங்க வந்தேன்“
“ஆங்ஞ்… சரி… கரூர் போற பஸ் ஏறி கோவிலூர் ஸ்டாப்ல எறங்கிருங்க சரியா?“
“ம்ம்… சரிங்க. நீங்க வந்துட்டீங்களா?“
“இன்னும் இல்லங்க. பிள்ளைங்க போய்ட்டாங்க. நான் வந்துட்டு இருக்கேன்.
நீங்க வந்துட்டு எனக்குக் கால் பண்ணுங்க சரியா?“
“ம்ம்… சரிங்க“ அலைபேசியை அணைத்துச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு நகர்ந்தான் வருண். வெளிர்பச்சை நிறத்தில் ’கரூர்‘ எனப் போர்டு போட்டுக்கொண்டு நின்றது ஒரு அரசுப்பேருந்து.
“அண்ணே கோவிலூர் நிக்கும்ல“
நடத்துனரிடம் கேட்டுவிட்டு ஏறி அமர்ந்தான். ஐந்து நிமிடத்தில் கிளம்பிய பேருந்து ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் கோவிலூர் சென்றது. நிறுத்தத்திற்கு முன்னமே ஊரை உணரும்படியாக சீரியல் லைட்டுகளும், இதயத்தில் பட்டுத் தெறிக்கிற ராட்சத ஸ்பீக்கர்களின் பேரிரைச்சல்களும் அவனை ஆட்கொண்டன. அவனுக்கு முன்பாக மஞ்சள் வர்ணத்தில் செம்புள்ளிகள் ரத்தமாகச் சிதறிய சாமி சேலை உடுத்திய மூன்று பெண்கள் கைகளில் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு கீழிறங்கினார்கள். கோவிலூரில் இறங்கியதும் ஹோட்டலைத் துளாவினான் வருண். தூரத்தில் சாலையின் இடப்புறம் ஒரு ட்யூப் லைட்டின் வெளிர்பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது ஒரு புரோட்டாக்கடை. உள்ளே நுழைந்த வருண் குருமாவின் உதவியோடு மூன்று புரோட்டாக்களைக் கபளீகரம் செய்தான். மிளகுத்தூள் தூவிய ஆம்லெட், இலையின் மீது எஞ்சியிருந்த குருமாவின் செந்நிறத் துளிகளின் மீது விழுந்தது கூடுதல் சுவையைத் தந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு கடையிலிருந்து வெளியே வந்தவன் காலாற நடந்து கோவிலின் முன்பு வந்தான். கரூர் செல்லும் சாலையின் மேல் கிழக்குப் பார்த்து அமைந்த இரட்டைக் கோயில்கள். கருவறைக்கு வெளிப்புறம் இருபக்கமும் கருப்பசாமி உருவாரங்கள் சந்தனக்காப்பில் களையாக எழுந்து நின்றன.
வெள்ளையடிக்கப்பட்டு சிகப்புப் பட்டைகள் இழுக்கப்பட்டிருந்த கோவில் சுவர்களும் சீரியல் லைட்டுகளும் நெஞ்சைப் பிளக்கும் ராட்சத ஸ்பீக்கர்களும் மாவிலையும் மலர்த்தோரணங்களும் என கோவிலூரின் வீதிகள் திருவிழாக் களையில் செலையோடியது.
போனைக் கையிலெடுத்த வருண் மணியைப் பார்த்தான் 09.23 pm என்று காட்டியது. பொத்தனைச் சொடுக்கியவன் ’நித்யாவுக்கு’ அழைத்தான். ஒரு துள்ளலோடு
“வந்துட்டீங்களா? “ என்றவள்
“எங்க இருக்கீங்க?“ என்று கேட்டாள்.
“கோயிலுக்கு எதுத்தாப்புல தான் நிக்கிறன்“
என்ற வருணை அவள் சட்டென அடையாளம் கண்டு கொண்டு
“இங்க பாருங்க உங்களுக்கு நேராப் பாருங்க“
என்று போனில் துள்ளினாள். வருணால் அவளைப் போல சட்டென திசையை உணர முடியவில்லை.
“கோயிலுக்கு எடதுபக்கம் மேக்க போற வீதியில பாருங்க“
என்றாள். தாடையை நிமிர்த்திப் பார்த்த வருண் மேற்குக் கடைசியில்
ஒரு தகரச் செட்டிற்கு வெளியே கரக உடையில் ஜிகினா மின்ன
நித்யா நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டான்.
தேடலுக்குப் பிறகு காணப்பெறுகிற மனித முகங்களில் பரஸ்பரம் தோன்றும் ஒளி மிகுந்த பூரிப்பு பேரழகு வாய்ந்த ஒன்று. நேரே முன்புறம் நடந்து அவளை அடைந்த வருணைப் பார்த்த நித்யா
“வாங்க வருண். நல்லாருக்கீங்களா? “ என்றாள். “ஆங்… நல்லாருக்கேங்க“ என்றான் பதிலுக்கு.
“வாங்க.உள்ள வாங்க“ என்றழைத்தபடி தகரச் செட்டிற்குள் முன் சென்ற நித்யாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தான் வருண்.
உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் மேற்குப்பார்த்து ஒரு தடித்த ஆள் அமர்ந்து அரிதாரம் பூசிக்கொண்டிருந்தான். அவனைக் குறிப்பிட்ட நித்யா
“இவர் எங்க மச்சாம்…பாடகர்… “
என்று அறிமுகப்படுத்தப்படுத்தினாள்.
“மச்சான் நான் சொன்னேன்ல… இவர்தான் அந்தக் கவிஞர்“
என்று கூறி வினித்திற்கு வருணைக் கண்களால் அறிமுகம் செய்தாள் நித்யா.
நித்யாவின் அறிமுகம் கிடைத்த தொடக்க நாட்களில் அவளைப் பற்றிய தேடலில் இருந்தபோது யூட்யூப் தளத்தில் கிடைத்த ஒரு காணொளி அவனது மனத்திரையில் ஓடியது.
“பாசமுள்ள பாண்டியரு…“ வாசித்துக் கொண்டிருந்தார்கள் வாத்தியக்காரர்கள்.
“கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள
உள்ளூர ஊறுதடி தேன்போல…
முத்தாரம் தான் வித்தாரம் தான்
அரே அஹ்ஹா… ஆஆஆஆ…
அரரரரரரரர…ஹோய்… ஹொய்யா…“
நாதஸ்வரம் ஓய்ந்து தவில் வலுத்து ஒலிக்கிற இடத்தில் உடனாடிய குறவன் நித்யாவை இழுத்து வைத்து அவளது மார்பில் தலைசாய்த்து உடல்பாகங்களில் தனது விரலைப் படரவிட்டுக்கொண்டிருந்தான்.
தவில் நாயன பக்கவாத்திய அதிர்வின் உற்சாக வெறியில் பார்வையாளர்கள் பக்கமிருந்து “ஹே… “ என்ற கூச்சல் வலுவாக வந்தது. குறவனும் விடவில்லை விலகியோடிய நித்யாவை விரட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் பதித்தான். அவளைத் தன் தொடையில் சாய்த்து பெண்ணுறுப்பில் தட்டினான். தவில் சத்தத்தை மீறி கூட்டத்தின் ஆரவாரமே வெளியில் மிதமிஞ்சி நின்றது.
நொடிப்பொழுதில் நினைவிலிருந்து மீண்டு தன்னுணர்வுக்கு வந்த வருணை
“வாங்க இப்டி உட்காருங்க“ என்றாள் நித்யா. சூட்கேஸைத் திறந்து வேஷப் பொருட்களை வெளியில் பரப்பி முகத்திற்கு ஃபேஷியல் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு மத்தியில் அமர்ந்த வருண் மீண்ட நினைவின் அதிர்வு தாளாமல் வேஷத்தை முடித்திருந்த குறவனை நிமிர்ந்து பார்த்தான். குறவனும் பதிலுக்கு இவனை முகம் துணுக்குறப் பார்த்தான். கண்களைத் தாழ்த்திக் கொண்டான் வருண்.
’அந்தக் காணொளியில் ஆடியவனே தான் இவன்’ என்று அவனது முகக்கூறு உணர்ந்து தீர்மானம் பண்ணிக்கொண்டான் வருண்.
அப்பொழுது தான் அந்த யூட்யூப் காணொளியின் தலைப்பில் நித்யாவுடன் இணைத்துப் பதியப்பட்டிருந்த அவனது பெயர் நினைவுக்கு வந்தது.
’வினித்’
வினித்தும் நித்யாவும் ஆடிய அந்த ஆட்டத்தில் தொழில்முறைக் கலைஞர்களின் அடவுகளைத் தாண்டிய ஒரு புரிதலும் ஒத்திசைவும் நெருக்கமும் சில்மிஷமும் மிதமிஞ்சியிருந்தன.
ஓ… இவர் தான் அந்த வினித்தா?“
வருணின் மனதிற்குள் அதிர்ச்சிக் கேள்விக்குறி முனை தொடுத்து நின்றது.
“என்னங்க பேசாம எதையோ யோசிச்சிட்டே இருக்கீங்க? “
மௌனத்தைச் சலனப்படுத்தியபடி நித்யா கேட்டாள்.
“ஒன்னுமில்லங்க.புது எடம்ல. அதான். வேறொன்னுமில்ல“ என்றான்.
“அப்டியா? சாப்ட்டு வந்தீங்களா? வீட்ல எல்லாம் நல்லாருக்காங்களா? “ என்றாள்.
“எல்லாம் நல்லாருக்காங்கங்க. வரும்போது சாப்ட்டுத்தான் வந்தேன்“ என்றான்.
“அடடா! சாப்ட்டு வந்துட்டீங்களா? நான் வேற அண்ணன்ட்ட உங்களுக்கு எதும் சாப்ட வாங்கி வைக்கச் சொல்லிட்டேனே? சரி பாத்துக்கலாம் விடுங்க.“ என்றாள்.
எதிரில் அமர்ந்து கொண்டிருந்த புவனாவும் காவ்யாவும் இவனது இருப்பை அந்நியமாக உணர்ந்தபடி ஒப்பனையில் மும்முரமாயிருந்தனர். அவர்களுக்கு அருகில் மெலிந்த உடலும் துருத்திய பற்களுமாக ஒரு இருபத்தொன்பது வயது மதிக்கத்தக்க பெண் அலங்கார உடையுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.

கருநீலக் கலர் டாப்பும் காட்டன் உள்பாவாடையும் அணிந்தபடி சம்மணமிட்டு அமர்ந்து முகக்கண்ணாடியின் முன் ஒப்பனை முகத்தில் மாசு நீக்கிக் கொண்டிருந்த நித்யாவின் கனத்த, சதைப்பற்றுமிகுந்த கெண்டைக்காலில் பட்டும்படாமற் படிந்து மேலெழுந்தது வருணின் கண்கள். அதனை உணர்ந்திருப்பாளோ என்னவோ தாழ்ந்த முகத்தில் மைதீட்டியிருந்த கண்களும் புருவங்களும் குத்திட்டு நிற்க நிலைத்த விழிகளால் வருணை வெறித்தாள். அவளது இதழில் மெல்லிய புன்னகை இருந்ததால் அவனுக்குப் பதட்டம் ஏற்படவில்லை. செல்லமாகவோ சினமாகவோ இப்படி மூர்க்கம் கூடுகிற கணங்களில் ஒரு கம்பீரத்தின் அழகு நித்யாவிடத்தில் கூடிப்போகும். வாநீர் ஒழுக மைதானத்தில் நின்றபடி தனது அங்கங்களை ரசித்துக்கொண்டு ’தொன்னாந்தபடி’ நிற்கும் ஆம்பளைகளை திமிராக ஒரு பார்வை பார்ப்பாளே? அதைக் குறித்து முன்னம் ஒருமுறை அவளிடம் சிலாகித்துப் பேசியிருந்தது வருணின் நினைவுக்கு வந்தது.
“அது ராஜதோற்றம்“ என்றவள் கூறியது நினைவுக்கு வந்ததும்
“ராஜ அம்சம் உள்ள ஒருத்தி நாலுபேர் முன்னிலையில் அரை நிர்வாணமாக ஆட நேர்ந்த விதியின் கணக்குத்தான் என்ன?“
எனத் தோன்றியபடி அவளைப் பாவமாகப் பார்க்கக் கண்ணெடுத்த வருணிடம் இறைஞ்சுகிற முகபாவத்தில் எழுந்து நின்றபடி நித்யா கூறினாள்
“கொஞ்சம் வெளியில இருக்கீங்களா? புள்ளைங்க துணி மாத்தப் போறாங்க“ என்று.
உடனே பதறிய வருண் “அய்யய்யோ சாரிங்க சாரிங்க“ என்றபடி வெளியேறினான்.
வெளியே வந்த வருண் கோயிலுக்குப் பின்புறம் ஒப்பனை முடித்து சால்வை போர்த்தி நின்றிருந்த வினித் அருகில் சென்றான்.
“என்னண்ணே? நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் எவ்ளோ நேரம் ஆகுமாம்?“
என்று இயல்பாக ஆரம்பித்த வருணை ஒரு விலக்கத்தோடு பார்த்த வினித்
“அவ்ளோதான் நேரமாச்சு. இப்ப ஆரம்பிச்சிருவாங்க.“ என்றான்.
“ராம்நாட்டுல உங்களுக்கு எங்கணே? “
“திருவாடானை“
“திருவாடானைல எங்க? “
கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்த வருணின் சுபாவம் வினித்திற்குள் ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கோபம் வருவதற்கான அறிகுறியாக அவனது முகத்தில் படர்ந்த வியர்வைத்துளிகள் ஒப்பனையில் கலங்கி நிறம் பெற்றன.
“திணையத்தூர்“ என்று கூறிவிட்டு “இதெல்லாம் எதுக்குக் கேட்குறான்?“ என்கிற பாவனையில் இலேசாகச் செருமிக் கொண்டான்.
“நீங்க விஜயகாந்த் படத்துல நடிச்சிருக்கீங்களாண்ணே?“
“ஆங்ங்… அவரோட பேரரசு படத்துல ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கேன்“
“ம்ம்… சூப்பர்ணே“ என்றான் வருண்.
தூரத்தில் யாரையோ அழைக்கும் ஓசை கேட்டது.
“இருங்க. வந்திடுறேன்“ என்றபடி ஓசை வந்த திசையில் மேளகாரர்களைப் பார்க்கப் போனான் வினித்.
வருண் மெல்ல முன்புறம் நடந்து கோவிலுக்கு முன்பு தார்ச்சாலையைத் தாண்டிக் கிடந்த தடித்து நீண்ட ஒரு மரத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
வாத்தியக்காரர்கள் கோவிலின் முன் வந்து தட்டிப் பார்த்து சுருதி சோதித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில நிமிடங்களில் ஆட்டம் தொடங்கலாம் என்று வருணுக்குத் தோன்றியது. கரூர் சாலையில் வலப்புறமாக மெல்லக் காலாற நடந்தான்.
கோவிலுக்குக் கொஞ்சம் தள்ளி தெற்குப் பார்த்து நின்றிருந்தது நித்யாவின் வண்டி.
காருக்குள் எட்டிப்பார்த்தவனை தூக்கக் கலக்கத்துடன்
“வாங்க.இப்பத்தான் வந்தீங்களா?“ என்றான் நித்யாவின் அண்ணன்.
“ஆங்… இப்பத்தான் வந்தேன்“ என்றான் வருண்.
உறக்கச்சடவும் வியர்வைப் பிசுக்குமாக அவனது முகத்தில் அடர்ந்த சோம்பல் பரவியிருந்தது. நனைந்த கருத்த உதடுகள் கன்னத்தில் ஓரம் சேர்ந்திருந்தன. குடித்திருப்பதைப் பார்த்த மாத்திரத்தில் உணர முடிந்தது.
“நீங்க வருவீங்க சாப்ட எதும் வாங்கி வைன்னு நித்யா சொல்லுச்சு. கொத்துப்புரோட்டா வாங்கி வச்சுருக்கேன்“ என்றவனிடம்
“இல்ல நான் வரும்போது சாப்ட்டுத்தான் வந்தேன்“ என்றான் வருண். தவிலைத் தட்டும் ஓசை கேட்டதும்
“சரி இருங்க வந்தர்றேன்“
என்று அங்கிருந்து நகர்ந்து தென்திசையில் கோவிலை நோக்கி நடந்தான். நாயனமும் தவிலும் தொடக்கநிலையைக் கடந்து ஒத்திசைந்து போய்க் கொண்டிருந்தது. புவனாவோடு காவ்யாவும் உள்ளே சுருண்டு படுத்திருந்த தெத்துப்பல் பெண்ணும் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒல்லியாகத் தொடை வற்றிய ஒரு ஆள் உடனாடிக் கொண்டிருந்தான்.
தெத்துப்பல் பெண் மைக்கைப் பிடித்தாள்
“சுத்தி நிக்கிறவஹல்லாம் யாரு?“
“யாரு யாரு யாரு…“ தொடைவற்றியவன் பக்கக் குரலெடுத்தான்.
“ஏம்புருஷன்மாருக…“
தெத்துப்பல்லுக்காரி முட்டியை வளைத்து மைக்கில் மீண்டும் சொன்னாள்
“பிருசன்கள்… ஏம்பிருசன்கள்“
“ஆமா ஆமா ரொம்பப் பேசுனேன்னா ’வச்சுட்டுப் போயிருவாஹ’
பார்த்துச் சூதானமா நடந்துக்க“ என்றான் தொடைவற்றிய குறவன்.
வற்றிய மாரும் தொடையுமாக அந்தப் பிள்ளைகள் எத்தனை ஆடியும் அக்கிரமம் பேசியும் கூட்டத்திடம் ஒன்றும் எடுபடவில்லை. பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகமில்லை.
மணி பதினொன்றரை இருக்கும். கூட்டத்திற்குள் இரைந்து கிடந்த மேளச்சத்தத்திற்குள் நின்றிருந்த வருணுக்கு அலைபேசியில் அழைத்தாள் நித்யா.
“இங்க வர்றீங்களா? மேக்கப் போடுற எடத்துக்கு?“
“ஆங்… ஆங்… இந்தா வரேங்க“
நித்யா அங்கு தனியாக இருந்தபடி தன்னை அழைக்கிறாள் என்கிற எண்ணமே வருணக்குப் பதட்டத்தை ஏற்படுத்தியது. சற்று அச்சத்தையும் கிளர்த்தியது. விரசமான சிந்தனை எதுவும் இல்லையெனினும் விருப்பத்திற்குரியவரின் நெருக்கம் ஒருவித சுவாசத் தடுமாற்றத்தை உண்டுபண்ணி விடுகிறது. மெல்ல தைரியத்தை வரவழைத்தபடி மேக்கப் செட் நோக்கி நடந்தான். உள்ளே தனியாக அமர்ந்தபடி தனது தனித்துவமான இரட்டைத் தாடையில் நட்சத்திரக்குறியிட்டுக் கொண்டிருந்தாள் நித்யா. வாசலில் வருணைக் கண்டதும்
“வாங்க.உட்காருங்க இப்டி. “ என்றாள். அருகில் அமர்ந்தான் வருண்.
“அப்போயே புள்ளைங்க துணி மாத்துனதால தான் வெளிய போகச் சொன்னேன். எதும் நெச்சுக்காதீங்க. என்ன? “ என்றாள்.
“அச்சச்சோ! இதுல என்ன இருக்கு? நானும் சூழல மறந்து உக்காந்துட்டேன். பரவால்ல அதுனால ஒன்னுமில்லங்க“ என்றான்.
“ஏன் இவ்ளோ தூரம் வந்து இப்டி கண்ணு முழிச்சுருக்கீங்க? அவ்ளோ புடிக்குமா என்ன? “ திடுமென இப்படி ஒரு கேள்வியை வருண் எதிர்பார்க்கவில்லை.
இருவர் மட்டுமே தனியே அமர்ந்திருந்தது கூடுதல் அவஸ்தையைத் தந்தது. தலைகுனிந்து அமர்ந்திருந்தான் வருண். அவனுக்கு மேலே தனது கூர்நோக்கு பார்வையில் வெறித்து நின்றன நித்யாவின் கண்கள். வெட்கத்தில் தலை தாழ்ந்திருந்த வருணின் காதுக்குள் இரு சோடி பாதங்களின் ஓசை கேட்டன. காவ்யாவும் அந்தத் தெற்றுப்பல் பெண்ணும் உள்ளே நுழைந்தனர். வருண் எதிர்பார்த்ததைப் போலான சந்தேகக்குறி தொனிக்கும் எந்தப் பாவமும் அவர்களது
முகத்தில் இல்லை. நாகரீகம் கருதி வருணே
“சரிங்க வெளிய இருக்கேன். வாங்க“ என்று நித்யாவிடம் கூறியபடி செட்டை விட்டு வெளியேறினான்.வெளியே வந்த வருண் மரக்கட்டையில் அமர்ந்த சில மணித்துளிகளில் செட்டை விட்டு வெளியே வந்தாள் நித்யா உடன் வினித்தும்.
கோவிலை ஒட்டிச்செல்லும் கிழமேற் பாதையில் நித்யாவும் வினித்தும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வினித்திடம் ஏதோ சிரித்துப் பேசியபடியே நடந்த வந்த நித்யா பூரண ஒப்பனையில் சப்பரத்து விக்ரகம் போலிருந்தாள்.பார்வையில் படுகிற தொலைவிற்கு வந்ததும் வருணைப் பார்த்துச் சிரித்தபடி இடதுபுற வழியில் கோவில் முன்பக்கம் சென்றாள். கோவிலின் முன்பு தார்ச்சாலை என்பதால் மைதானம் போன்ற வாகான இடமில்லாததால் வாத்தியக்காரர்களுக்கு வணக்கம் போன்ற சம்பிரதாயம் ஏதுமின்றி இயல்பாக ஆட ஆரம்பித்தார்கள்.
“காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அத மறச்சு வச்சேன்
பொழுதிருக்கப் பறந்துருச்சு
போன தெச மறந்துருச்சு…“
அந்தப் பாடலின் சரணத்தை இரண்டொரு முறை கேட்டிருக்கிறான் என்றாலும் அன்றைக்கு ’உருதிக்கோட்டை முத்துக்கண்ணன்’ வாசிப்பில் மயங்கி மனம் பித்துக் கொண்டான் வருண்.
ஆடிக் கொண்டிருக்கும்போதே எதிர்ப்பில் மரக்கட்டையில் பாவம் போல் தனியாக அமர்ந்திருந்த வருணைப் பார்த்துச் சிநேகமாகச் சிரித்தாள் நித்யா. நிமிர்ந்து மெல்ல முறுவலித்த வருணுக்குள் சிறிது உற்சாகம் பிறந்தது.
சிறிது நேரம் கடந்திருக்கும். நித்யா போனில் அழைத்தாள்.
“வருண்… கோயிலுக்குக் கொஞ்சந் தள்ளி வடக்குப் பக்கம் வர்றீங்களா?
காஃபி சாப்டலாம்? “
“ஆங்ஞ் சரிங்க. வரேன்“ என்றபடியே நடந்த வருண் சில விநாடிகளில் அவ்விடத்தை அடைந்தான். எப்பொழுதும் மனதிற்குள் தாழ்வு மனப்பான்மை துளிர்விட்டுக் கொண்டிருக்கும் வருண் தனக்கு எதிரே யாரேனும் நின்று பார்த்தார்களேயானால் தெரிந்தவர்களே ஆனாலும் அவர்களின் பார்வைக்குத் தான் பலமானவனாகத் தெரிய வேண்டும் என்பதற்காகச் சிறுபிள்ளைத் துடுக்குத்தனத்துடன் ஒரு தோள்பட்டையைத் தூக்கி பார்வையைத் தீவிரமாக்கியபடி நடப்பான். இவனது இத்தகு மனப்பான்மையிலமைந்த வருகை நித்யாவுக்குள் ஒரு ஒவ்வாமையைத் தோற்றுவிப்பதை அவளது பார்வையிலிருந்தே உணர முடிந்தது. இவன் அருகில் போனதும் முகத்தில் வலுக்கட்டாயமாகச் சிரிப்பைப் பரப்பிய நித்யா
“போங்க காஃபி சாப்டுங்க“
என்று கூறியபடியே ரோட்டில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். அடைத்த கடையில் படியினருகே சென்ற வருண் தன் கையிலிருந்த பையை அங்கே நின்று கொண்டிருந்த காவ்யாவிடம் நீட்டி
“ஒரு நிமிஷம் இதப் புடிக்குறீங்களா? “ என்றான்.
அவள் அதனை இலட்சியம் செய்யாமல் முகத்தைக் கடுகடுவென வைத்தபடி இருந்தாள். ஒரு அந்நிய ஆணின் அணுகுமுறையை முறியடிக்கிற இறுக்கம் அவளது முகத்தில் தொனித்தது. ஏமாற்றத்துடன் பையைத் தன் அக்குளில் வைத்துக்கொண்ட வருண் குனிந்து கப்பில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த காபியை எடுத்தான். காபியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தபோது பக்கத்துச் சந்தொன்றிலிருந்து வெளிப்பட்ட வினித் நேரே வருணின் அருகே வந்து அவனது கையைப் பிடித்து உள்ளங்கையில் ஒரு வட்டப்பிஸ்கட்டை வைத்தான்.
“இல்லங்க வேண்டாம்“ என்று வருண் மறுத்தாலும் கையை இறுக்கிப் பிடித்த வினித் “சும்மா சாப்டுங்க தல“ என்று கூறியதை கொஞ்ச தூரத்தில் தார்ச்சாலையில் நின்று ஊர்க்காரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த நித்யா மெல்லிய முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்ப்பதை வருண் கவனிப்பதைக் கூட மறந்துபோய் வருணுக்குப் பிஸ்கட் சாப்பிடத் தந்த வினித்தையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா.

சிறிது நேரத்தில் கோவிலின் முன்பு மேளகாரர்கள் கூடி வாசிக்க,
கரகக் கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். பழக்கம் ஏற்பட்ட சிறிது நாட்களிலேயே நித்யாவின் மீது ஒரு உரிமையும் அளப்பரிய அன்பும் வருணுக்கு எற்பட்டுவிட்டது. கூடியிருந்த ஜனங்களுக்கு மத்தியில் தனது வாளிப்பான உடலை கூரேந்திய தனது மார்பை முன்னிருத்தி அவள் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் சடுதியில் வருணுக்கு நித்யாவின் மீது அளப்பரிய கருணை ஏற்பட்டு
“ச்சே… என்னதான் இருந்தாலும் பாவம்ல? “ என்று தோன்றியது. அதே சமயம் வினித் நித்யா உறவின் மீது வருணுக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது. உடனாடிக் கொண்டிருந்த பஃபூன்
“என்னடா நானும் பார்த்துக்குட்டே இருக்கேன். இவளுக எல்லாம் உனக்குட்டே வந்து ஏறுறாளுக. ஏன் எங்கள பார்த்தா ஆம்பளயா தெரியிலயா? “ என்றான்.
“ ஆம்பளயா இருந்து என்ன பண்டுறது?
அந்தளவுக்குத் தரமா எறக்கணும்ல? “ என்றான் வினித் கண்ணடித்தபடி.
கூட்டத்திற்குள் நின்றுகொண்டு அவர்கள் இருவருக்குமான நெருக்கத்தின் தூரத்தைப் பார்த்தபடி படபடவென கைவிரல் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்த வருணைப் பார்த்துவிட்டாள் நித்யா.
மைக்கைப் பிடித்தவள் பாடத் துவங்கினாள்
“ஊரிலுள்ள பேருக்கெல்லாம் வாக்குச் சொன்ன பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை
என்னைத் தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வவாக்கு தான்
தெய்வவாக்கை ஏற்றுக்கொண்டு வாழ்க்கை ஒன்று நீ கொடு“
நித்யாவின் பாடலில் பதட்டம் தணிந்து இளகிப் போயிருந்தான் வருண்.
’ஆனால், நித்யா பலே கில்லாடி தான்.’ அவள் பாடி முடித்ததும் வருண் இப்படித்தான் நினைத்தான்.
கொஞ்ச நாட்களுக்கு முன் தெய்வவாக்கு திரைப்படத்திலிருந்து தனக்குப் பிடித்த ஒரு காட்சியை விளக்கி இந்தப் பாடலில் உள்ள சுவாரசியத்தை அவன் விளக்கியிருந்ததை நினைவில் கொண்டு தான் அவள் பாடியிருக்கிறாள் என்பதை விளங்கிய வருண் மனதில் ஒரு மகிழ்ச்சி அதிர்வை உணர்ந்தான்.
நாயன மேளம் ஓய்ந்ததைத் தொடர்ந்து நித்யா அவனருகில் வந்தாள்.
“கரகம் அழைக்கக் கொஞ்ச தூரம் தோப்பு உள்ள போனுமாம். நீங்களும் ஏன் கெடந்து செரமப்படுறீங்க? கொஞ்சம் நேரம் இங்கன இருக்கியளா? சீக்கிரம் பெயிட்டு வந்துடுறோம்? “
என்றாள் குழைவாக.
“சரி அதுனால என்ன? போயிட்டு வாங்க இங்க வெயிட் பண்றேன். “ என்று கூறி வழியனுப்பினான் வருண்.
கொஞ்ச தூரம் சென்று திரும்பிய நித்யா கன்னக் கதுப்புகள் அரும்ப சிரித்தபடி பக்கவாட்டில் தலையைசைத்துச் சென்றாள்.
கரகம் அழைக்கச் சென்ற பிறகு சில வாத்தியக் கலைஞர்கள் ஓய்வாக அமர்ந்திருந்தனர். கோவிலின் வலப்புறம் போடப்பட்ட பந்தலுக்குக் கீழ சாதுவான முகபாவத்தில் பாவமாக அமர்ந்திருந்த முத்துக்கண்ணன் அருகில் சென்றான் வருண்.
“அண்ணே… வணக்கம். டீ சாப்ட்டீங்கள? “
அவரது மகனை விடவும் இளையவனாகத்தான் இருப்பான் வருண். ஆனாலும்,
“அண்ணே… சாப்டண்ணே“ என்றார் பாவமாக.
“நீங்க தான் காட்டுக்குள்ள காதல்கிளியக் கண்டேன் வாசிச்சுதா? பிரமாதமான வாசிப்புண்ணே“ என்றான்.
“நல்லதுண்ணே.ரொம்ப நன்றி. மகிழ்ச்சிணே“ என்றார்.
“நமக்கு எந்த ஊர்ண்ணே? “
“நான் பழனிண்ணே“
“ஓ… இங்க திருவிழாவுக்கு வந்தீங்களா? “
“இல்லண்ணே நிகழ்ச்சி பாக்க வந்தேன்“
“சரிங்கண்ணே“
“வாங்கண்ணே டீ சாப்டுவோம்? “
“இல்லண்ணே இப்பத்தான் சாப்ட்டோம். “
“சரிங்கண்ணே.பாத்துட்டு வந்துரட்டுமா? “
“சரிங்கண்ணே வாங்க“
நித்யா வரும் வரை மரக்கட்டை, அடைத்த கடையின் வாசல், டீக்கடை என்று மாறிமாறி அமர்ந்து கொண்டிருந்த வருணுக்குத் துணையாக அந்தப்பாடல் தான் இருந்தது.
“மகராசன் பேச்சு மலையேறிப் போச்சு“ என்கிற வரியில் கேப்டன் விஜயகாந்த் மீது வருணுக்கு அளவற்ற அன்பு சுரந்தது.
“வெதச்சாலும் முளைக்காது என்று வெத போட்டு வளத்தேனே அன்று
வெறகோடு வந்தேனே அங்கு வெறகாகிப் போனேனே இங்கு“
ஒரு அபலைப்பெண்ணின் நேசமும் துன்பம் ஊறிய வாழ்வும் வைரமுத்துவின் வரிகளும் ஜானகியின் குரலும் வருணின் நெடிய இரவை மேலும் ஈரப்படுத்திக் கொண்டிருந்தன.
கருவாயன் கட்டைக்கு விறகாய்ப் போன காளியம்மாளுக்காக மனமுருகிக் கரைந்த வருண் கரகம் தெற்கே போனதை மறந்துவிட்டான்.
“எங்க தங்கம் இருக்கீங்க? தெக்க மேளச்சத்தம் கேக்குற எடத்துக்கு வர்றீங்களா? “
நித்யாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
வருண் தெற்கே கிளம்பிச் சென்றான். ஒரு வீட்டு வாசலில் யாரையோ அழைப்பதற்காக மக்கள் கூடி அமர்ந்திருந்தார்கள். ஒற்றைத் தவில் மற்றும் ஒரு பம்பையுடன் கரகாட்டக் கலைஞர்கள் வாகனப் போக்குவரத்து குறைந்த சாலையில் நின்றபடி ராவடி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
தலைப்பாகையும் நரைத்த மீசையுமாக எக்ஸ் எல்லில் வந்த ஒரு முதியவரின் வண்டியில் ஏறி அமர்ந்த நித்யா
“நாங்க ’போப்போறோம்’.நீ களம்பு மாமா நாம போலாம்“ என்று கலாட்டா பண்ணிக் கொண்டிருந்த நித்யா வந்து நின்றதைக் கவனிக்கவில்லை. சிரித்தபடி நெளிந்து கொண்டிருந்த பெரியவரைப் பார்த்து வினித் கேட்டான்
“ஏம்ப்பு… உங்க வயசு வாலிபத்துல எத்தனை கலசத்துக்கு சீலு ஒடச்சிருப்பீங்க என்ன? “
“அதெல்லாம் ஏகப்பட்டது“ என்ற முதியவர் நரைத்த மீசையை நீவிக் கொண்டார். முதியவரின் தோளில் கிடந்த துண்டை எடுத்த நித்யா தார்ச்சாலையில் குறுக்காகப் போட்டாள்.
“டேய்… ஆம்பளப்பையா…“
“என்னடி பொம்பளப்பிள்ளே? “
“நாங் உங்க அப்பனையே போட்டவ“
“ஏய் நாங் உங்கோத்தாளையே போட்டவன்“
“அப்புடியா? “
“ஆமான்டி“
“நீ ங்கொப்பனுக்கே பொறந்தவன்னா… உன் பொண்டாட்டியத் தவிர வேற யாரையும் தொடலன்னு இந்தத் துண்டத் தாண்டி சத்தியம் பண்ணு பாப்பம்?“
வருணின் மனதை இந்தக் கேள்வி துணுக்குறச் செய்தது. பதட்டத்தில் கூடுதலாக நகத்தைக் கொறித்தபடி நின்றான்.
வினித் பதில் எதுவும் பேசாமல் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். கீழே தார்ச்சாலையில் ஒருக்களித்தபடி அமர்ந்திருந்த புவனா
“சித்தப்பா… தாண்டு சித்தப்பா… ஏய்… சித்தப்பா தாண்டு சித்தப்பா“
என்றாள்.
“சோலை… இளங்குயிலே அழகா… தோளிறங்கும் காவிரியே…
மாலை எடுத்து வாரேன் மச்சானே நாள் பார்த்து…
உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது“
பிரமாதமாகப் பாடத்தொடங்கினான் வருண்.
ஓடிச்சென்று நித்யா அவனது நெஞ்சில் கன்னத்தை வைத்துச் சாய்ந்து கொண்டாள். இடுப்பிலிருந்து மேலே தலை வரையிலான பாகத்தை அழுத்தமாக வினித்தின் நெஞ்சில் பரப்பியவள் கால்களைத் தளர்வாக தவிலின் அடிக்குத் தக்கவாறு அசைத்துக் கொண்டிருந்தாள்.
பதட்டத்தின் உச்சத்திற்குப் போய்விட்ட வருணின் பத்து விரல் நகங்களும் ஒட்டத் தரிக்கப்பட்டிருந்தன. எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கடைக்கு வந்து ஒரு டீக்குடித்தவன் கணநேர ஆசுவாசத்திற்குப் பின் மீண்டும் அந்த ’அடைத்த கடைவாசலில் ’ வந்து அமர்ந்து கொண்டான். ஏறத்தாழ விடிந்துவிட்டது. மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. டீக்கடைக்கு ஆள் வரத்து அதிமாகிக் கொண்டிருந்தது. பக்கத்து ஊரான ஆர். புதுக்கோட்டையில் யூட்யூப் புகழ் தட்டாம்பூச்சி ராஜேஸ்வரியின் கரகாட்டம் போல. ஆட்டம் முடிந்து டீக்குடிக்க வந்தவர்களின் உரையாடலிலிருந்து அறிந்து கொண்டான் வருண்.
முழுக்கைச் சட்டையின் கையை மேலேற்றிய ஒருவன்
“ஏன்டா கைய இப்புடீன்னா… அப்புடீன்னா இடுப்ப ரெண்டு திருப்பு திருப்புனா அவ்ளோதான் ஆட்டம் முடிஞ்சு போச்சு. அதுக்காடா அவளுக்கு அறுபதாயிரம்? “
கடை வாசலில் நின்று பொருமித் தள்ளினான்.
மணி ஐந்தரை இருக்கும். நித்யா அழைத்தாள்.
“இங்க வர்றீங்களா? ஆட்டம் முடிஞ்சது. கிளம்புவோம் வாங்க“ என்றாள்.
வருண் நடந்து செட்டிற்குள் சென்றான். ஏறத்தாழ மேக்கப்பை கலைத்து முடித்திருந்த நித்யா சுடிதாரில் இருந்தாள். ஈரத்துணியை வைத்து முகப்பூச்சை அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தாள். வருணைப் பார்த்ததும்
“வாங்க. டீ சாப்டீங்களா? வீட்ல இருந்திருந்தா தூங்கியிருக்கலாமா? “ என்று ஆதங்கப்பட்டாள்.
“இல்ல அதெல்லாம் ஒன்னுமில்ல. பரவாயில்லை. “ என்றான்.
“உட்காருங்க“ என்றாள்.
“என்ன மனுஷங்க பாருங்க? ஆடு மாடு கட்டுற எடத்துல உங்களுக்கு மேக்கப் போட எடம் குடுத்துருக்காங்க“ என்றான் பச்சதாபமாக வருண்.
“ஏங் கேக்குறீங்க? பாத்ரூம் போக அலோ பண்ண மாட்டாங்க. நான் நிகழ்ச்சி பண்ற நேரத்துல மைக்லயே விட்டுக் கிழிச்சிருவேன். மனுஷங்களா நீங்க? நான் ஒன்னும் இல்லாம இங்க வரல. உங்கள விட நல்ல வீடு நாங் கட்டியிருக்கேன். எதோ பொழப்புக்காக உங்கள்ட்ட வந்து இப்டி அசிங்கப்படுறேன்னு மைக்லயே திட்டுவேன்“ என்றாள் அங்கலாய்ப்பாக. அவர்கள் அமர்ந்திருந்த தரையில் அழுந்தித் தேய்ந்த ஆட்டுப் புழுக்கைகள் கிடந்தன. கால்நடைகளின் சிறுநீர் தாரையோடியிருந்தது.
வேஷம் கலைத்து முடித்த புவனா ஆசுவாசமாக அமர்ந்து சேட் பண்ணிக் கொண்டிருந்தாள். போனின் திரை வெளிச்சம் அடர்த்தியாக அவளது சிவந்த முகத்தில் படர்ந்து மேலும் கன்னத்தைப் பூரிப்பாகக் காட்டியது. பேக்கப் முடித்துக் கொண்ட நித்யா சூட்கேசையும் சலங்கைப் பையையும் தூக்கிக் கொண்டு வருணிடம்
“வாங்க போலாம்“ என்றாள் சிரித்தபடி. கிளம்பி நித்யாவுக்கு முன் சென்ற வருண் கோவிலின் முன்பு வண்டியைப் போட்டிருந்த நித்யாவின் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தான். கணக்கு வாங்கிக்கொண்டு வந்த நித்யா
“நீங்க முன்னாடி உட்கார்ந்துக்கோங்க. ஏறுங்க போலாம் பஸ் ஸ்டாண்ட்ல எறங்கிக்கோங்க“ என்றாள்.
நித்யாவின் அண்ணன் காரை ஓட்ட அவனருகில் வருண் அமர்ந்து கொண்டான். பின்புற வரிசையில் நித்யா, புவனா, காவ்யா மற்றும் தெற்றுப்பல் பெண் மூவரும் அமர்ந்திருந்தார்கள். மூன்றாவது வரிசையில் வினித்தும் பஃபூன் ஆடிய ஆளும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். வண்டி கிளம்பியது. அதிகாலை திண்டுக்கல் மாநகரம் பரபரப்பாக விழித்தெழுந்து கொண்டிருந்தது. இருக்கையில் ஒருக்களித்துச் சாய்ந்த பெண்கள் இலேசகாகக் கண்ணயர்ந்தார்கள். காரின் இடப்பக்கக் கண்ணாடியில் பின்புறம் உறங்கும் நித்யாவின் அழகை வருணால் பார்க்க முடிந்தது அவனுக்குப் பெருத்த சந்தோஷம். அதனை வினித் பின்புறமிருந்து கவனித்திருப்பான் போல. நித்யாவின் அண்ணன் ஏதோ பேசிக் கொண்டு வந்தான். ஆனால், வருணுக்கும் முழு இரவு உறக்கமில்லாததால் எதையும் காதில் வாங்கும் மனநிலை இல்லை. சிறிது நேரத்தில் வண்டி திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பில் ’ஆச்சீஸ் அசைவ ஹோட்டல்’ முன்பு நின்றது. இறங்கிய வருண்
“சரிங்க பார்ப்போம். போயிட்டு வரேன்“ என்று கூற நித்யா கைகுலுக்கினாள்.
“பஸ்சுக்குப் பணம் வச்சுருக்கீங்கள்ள? “ என்றாள்.
“ஆங்.. இருக்குங்க. “ என்றான்.
“சரி போயிட்டு வாங்க. பார்ப்போம்“ என்றவளின் முகத்தில் ஒரு ஒவ்வாமை தென்பட்டது. வருணைக் கீழ் மேலாகப் பார்த்தாள். அதிகாலை விடியலின் வெளிச்சத்தில் சோபையற்றுப் போன அவனது உடை சுருங்கித் தளர்ந்திருந்தது. கையசைத்து நித்யாவின் அண்ணனிடம் விடை பெற்றுக் கொண்ட வருண் பின்புறம் சென்று வினித்திடம் சிரித்தபடி
“போய்ட்டு வரேண்ணே“ என்றான். முகத்தில் ஒருவித கடுகடுப்புடன் இறங்கிய வினித் இணக்கமின்றி எங்கோ பார்த்தான். “சரிங்க“ என்று நித்யாவிடம் சிரித்து விடைபெற்ற வருண் பேருந்து நிலையத்திற்குள் நடந்தான். தனக்கு முன்பாகக் கையில் சூட்கேஸ் பிடித்தபடி சுடிதார் அணிந்து செல்லும் பெண்கள் காவ்யாவும் தெற்றுப்பல்காரியும் தான் என்பதை உணர வருணுக்கு நேரம்பிடித்தது.
ஒரு இரவு முழுவதும் நிகழ்ச்சியில் வருண் உடனிருந்தாலும் இருவரும் சிறிதளவு மரியாதைக்குக் கூட பார்க்கவோ சிரிக்கவோ இல்லை. ஒருவர் திருச்சி வண்டியிலும் மற்றொருவர் மதுரை வண்டியிலும் ஏறுவதை தூரத்திலிருந்து பார்த்தான் வருண். பேருந்து நிலைய டீக்கடையில் டீ சொல்லிவிட்டு இருக்கையில் பையை வைத்து அமர்ந்த வருணின் அலைபேசி அலறியது. நித்யா தான்.
“சொல்லுங்க“ என்றான்.
“பார்த்துப் போயிட்டு வாங்க. பைக்குள்ள ஒரு சர்ப்ரைஸ் இருக்கு பாருங்க“ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
பிரித்துப் பார்த்த வருண் அட்டையை வைத்துப் போனாக இருக்குமோ என்று பேராசைப்பட்டான். ஆனால், பவர் பேங்க் இருந்தது. இருந்தாலும் வருணுக்கு மகிழ்ச்சியாகத் தானிருந்தது.நித்யாவுக்கு அழைத்தான்
“ஏங்க எதுக்குங்க இதெல்லாம்? “ என்றான்.
“ஏன் நான் வாங்கித்தரக் கூடாதா? போனடிச்சா உடனே எடுக்க முடியுதா உங்களால? வச்சுக்கோங்க. போன் இனிமேல் என்ன ஆகக் கூடாது? “
“ஆஃப் ஆகக் கூடாது“ என்றான்.
“ம்ம் அது. பார்த்துப் போய்ட்டு வாங்க. பார்ப்போம். கூப்டுறேன்“ என்றாள். டீயைக் குடித்து முடித்த வருண் போனைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு ’பழனி’ வண்டி ஏறியமர்ந்தான். வீடு வந்து சேர்ந்தபின் மாலை நேரமாக நித்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்ன வருண்? நேத்து நிகழ்ச்சி எப்படி இருந்தது? “ என்றாள்.
“எல்லாம் சிறப்பு தான். ஆனா, நீங்க வினித் நெஞ்சுல சாஞ்சு ஆடுனது எனக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு“ என்றான்.
மறுமுனையில் சில விநாடிகள் பேச்சே இல்லை. அவனின் கணிப்பு உண்மையென்றால் அந்நொடி மறுமுனையில் நித்யா அந்த அதிர்ச்சிக்கு நாக்கைக் கடித்திருக்க வேண்டும்.
“ஒன்னு சொல்லவா வருண்? “ என்று குழைந்தாள் நித்யா
“ம்ம் சொல்லுங்க“ என்றான்.
“அது நான் வாழ்ந்த எடம் வருண்! “
அழைப்பு துண்டிக்கப்பட்டது. நெஞ்சின் அதிர்வு தாளாமல் தனது டைரியை எடுத்த வருண் எழுதத் தொடங்கினான்
“நீ அவன்
நெஞ்சில் சாய்ந்து
ஆடியதை
நான் பார்த்தேன்.
பொய் சொல்லாதடி திருடி!
முன்னெப்பொழுதோ
நெஞ்சில் விழுந்த
நேச விதை
எத்தனை தான்
மண்ணைப் போட்டு
மேவினாலும்
மேலெழும்பும் என்பதை
அறியாதவனா நான்?
ஆனால் அக்கணத்தில்
நான் ஆம்பளையாக
இல்லையென்பது
மறுக்க முடியாத
உண்மை!“
000

சு. ராம்தாஸ்காந்தி
பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்
அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன

