செம்மண்ணும் நீலமலர்களும் வெறுமையின் தனிக்குரல்

எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்த புத்தகம் இது. அப்போதுதான் என்னைப் போலவே பலரும் இந்த நாவலைத்  தேடிக்கொண்டிருப்பதையும் கண்டேன். ஒரு சிலருக்கு அப்படியொரு நாவலும் அதனை எழுதிய எழுத்தாளர் பெயரும் தெரிந்திருந்ததே தவிர மேற்கொண்டு எதுவும் தெரியவில்லை. இன்னும் சிலருக்கு அப்படியொரு நாவல் இருப்பது தெரியவில்லை. ஆனால் அந்த எழுத்தாளரின் பெயர் தெரிந்திருந்தது. சிலருக்கு இரண்டையுமே தெரியவில்லை.

ஆனால் மலேசிய இலக்கியச் சூழலில் முக்கியமான புத்தகம் என நான் மதிக்கும் எழுத்தாளர்களால்  சொல்லப்படுவதால்  படித்தேயாகவேண்டும் என்கிற வேட்கை எனக்கு  அதிகமானது. நூல்நிலையங்களிலும் கூட இருந்ததாத நினைவு படுத்துகிறார்களே தவிர புத்தகம் எங்கே என புலப்படவில்லை. இந்நாவலை வாசித்தவர்களில் சிலரை தொடர்பு கொண்டு புத்தகத்தைப் பற்றி கேட்டாலும் சரியான பதில் கிடைக்கவில்லை. கிடைக்காத புத்தகத்தை இன்னொருவனுக்கு இரவல் கொடுப்பதில் எதிர்நோக்கும் உளச்சிக்கல் எனக்குமே புரிகிறது. அதனால் மேற்கொண்டு யாரையும் இம்சிக்கவில்லை.

அவ்வப்போது; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த நாவல் குறித்த பேச்சை எப்படியாவது உரையாடலில் கொண்டுவந்துவிடுவேன்.

அப்படித்தான் ஒருநாள், எழுத்தாளர் பில்மோர் பாலசேனாவையும் ஏடம் அஸ்வினியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களின் உரையாடல் இன்றைய சூழலில் எழுதும் புதிய எழுத்தாளர்களிடம் தொடங்கி எங்களின் மூத்த எழுத்தாளர்களிடம் சென்றது. பில்மோர் பாலசேனாவுக்கு என்னை சிறுவயது முதல் தெரியும் என்பதால் எங்கள் உரையாடலில் கூடுதல் நெருக்கம் ஏற்பட சில விமர்சனங்களையும் பரிமாறிகொண்டோம்.

எங்களின் உரையாடல் அந்தப் புத்தகம் நோக்கி சென்றது. மாதம் ஒரு மலேசிய புத்தகத்தில் அந்தப் புத்தகம் குறித்தும் எழுதவேண்டிய அவசியத்தை அவரிடம் கூறி குறைபட்டுகொண்டேன். சட்டென அவர்; “அந்தப் புத்தகம் தன்னிடம் இருக்கிறது…. கொடுக்கிறேன்…. வாசித்துவிட்டு எழுதுங்கள்…. மறக்காமல் திரும்ப கொடுத்துவிடுங்கள்…” எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. உடனே பில்மோர் பாலசேனாவிற்கும் இந்தச் சந்திப்பிற்கு காரணமாக இருந்த எழுத்தாளர் ஏடம் அஸ்வினுக்கு பெரிய கும்பிடு போட்டேன்.

சில நாட்களிலேயே பில்மோர் பாலசேனா என்னை மீண்டும் சந்தித்து அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்.  நெகிழி அட்டை போட்டிருந்த அந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம் போல என் கைக்கு வந்தது.  என்னால் புத்தகத்தில் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை.

‘நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடுகிறது’ என்ற ரூமியின் கவிதையொன்றை நினைத்துக் கொண்டேன். நீயும் என்னைத்தான் தேடினாயா என கேட்டபடி புத்தகத்தைத் திறக்கிறேன்.

‘1988-ம் ஆண்டு ஜூன் முதல்நாள், புக்கிட் ராஜா செம்பனை ஆலை தமிழ் இளைஞர் மணிமன்றம்  கோமாளி மாத இதழின் கலந்துரையாடலின்போது நினைவுப் பரிசாக கிடைத்தது இந்த நாவல்’ என பில்மோர் பாலசேனா எழுதியிருந்தார். அவர் இளைஞராக இருந்த காலகட்டம் அது. நான் பிறந்து இரண்டு வயது குழந்தையாக இருந்தேன். அவர் அவரது அன்றைய நினைவுகளை சுவாரசியம் குன்றாமல் பகிர்ந்து கொண்டார்.

எம்.குமாரன் எழுதிய இந்த ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ என்னும் இந்த நாவலை அவரிடம் பேசிக்கொண்டே ஒவ்வொரு பக்கமாக திறந்து பார்க்கலானேன். 1969-ஆம் ஆண்டு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு இந்த நாவலுக்கு வழங்கப்பட்டிருந்தது முதல் பக்கத்தில் அச்சடித்திருந்தது. சென்னை, தமிழ்ப் புத்தகாலயம் இந்த நாவலை 1971-ஆம் ஆண்டில் பதிப்பித்திருக்கிறார்கள்.  இந்த நாவலுக்கு இந்த ஆண்டோடு 57 வயது ஆகிறது. இந்தப் புத்தகத்திற்கு இந்த ஆண்டோடு 55 வயது ஆகிறது.

நாவலாசிரியர் எம்.குமானை அன்றைய இலக்கியச் சூழலில் ‘மலபார் குமாரன்’ என்றே பலரும் அறிந்திருந்தார்கள். இப்போதுகூட இப்படித்தான் பலரும் இவரை நினைவுகூர்கிறார்கள். தனது பன்னிரெண்டாவது வயதில் கல்வி கற்க கேரளம் சென்ற இவர் அவரது நண்பர்களுடன் இணைந்து ‘கலாமாலா’ என்ற கையெழுத்து இதழை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அதுபற்றிய கூடுதல் தகவல் கிடைக்கவில்லை. ஜாசின் மலாக்காவைச் சேர்ந்த இவர், தனது 15வது வயதிலேயே மலையாளத்தில் கதை, கவிதை, கட்டுரை என எழுத தொடங்கியிருக்கிறார்.

1957-ம் ஆண்டு மலேசியா  திரும்பியவர் 1960-ம் ஆண்டு முதல் தனது படைப்புகளைத் தமிழில் எழுத தொடங்கியிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து 1970-ஆம் ஆண்டில் ‘சீனக்கிழவன்’ என்கிற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அந்தஒ புத்தகத்தில் இருந்து தலைப்புக் கதைதான் தற்போது வாசிக்க கிடைக்கிறது. அதுவும் மறைந்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது தொகுத்த ‘வேரும் வாழ்வும்’ என்கிற 50-ஆம் ஆண்டு மலெசிய சிறுகதைகள் என்கிற தொகுப்பின் வழியே சாத்தியமாகியுள்ளது. அதோடு இணையத்திலும் அந்தக்ச் சிறுகதையை வாசிக்கலாம். 1971-ஆம் ஆண்டு ‘செம்மண்ணும் நீலமலர்களும்’ என்ற குறுநாவல் வெளிவந்தது. அது தவிர  அவரது படைப்புகள் என வேறெதுவும் கைவசம் இல்லை.

அதோடு ‘கோமாளி’என்ற கேலிசித்திர (நகைச்சுவை) மாத இதழையும் நடத்தியுள்ளார். நான் மாணவனாக இருந்த சமயத்தில் என் வீட்டில் அந்தக் கோமாளி மாத இதழை பார்த்தும் வாசித்தும் இருக்கின்றேன். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த இதழில் சமகால அரசியல் பகடியும் இருந்தது. அதன் வழிதான் ‘மெட் செந்தூல்’ மலேசிய கேலிச்சித்திர கலைஞர் எனக்கு அறிமுகம். ஒருநாள் அவரது கேலிச்சித்திர புத்தகம் குறித்தும் அது கொடுத்த வாசிப்பனுபவம் குறித்தும் எழுதுகிறேன். கோமாளி இதழைத் தொடர்ந்து ‘குடும்பம்’ என்னும் இதழையும் அவர் நடத்தினார் என சொல்லப்படுகின்றது. மலேசியாவில் பிறந்த 52 எழுத்தாளர்கள் குறித்த விரிவான அறிமுக வரிசையையும் அவர் எழுதியிருக்கின்றார். இப்படி நினைவுக்கூரவும் மீண்டும் மீண்டும் சொல்ல முடிகிறதே தவிர இதோ இதுதான் அது என காட்ட முடியாத பலவீனமான சூழலை வேறெப்படி ஈடுகட்டுவது. எழுத்தாளர்களின் குறிப்புகளும் அவர்களின் படைப்புகள் ஆவணப்படுத்த வேண்டிய அவசியமும் இன்றிருப்பது போன்ற அன்று அதிகம் கவனிக்கப்படவில்லை. அல்லது அதுவெல்லாம் எதற்கு என்கிற மனைநிலையாகவும் அது இருக்கலாம். எம்.குமாரனைப் பற்றி பேசும்போது ‘இலக்கிய வட்டம்’ என்னும் சிற்றிதழின் தோற்றுனர்களில் ஒருவர் என்றும் 1985-ம் ஆண்டில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை மலேசியாவிற்கு அழைத்து வந்த ‘இலக்கியச் சிந்தனை குழுவில்’ இவரும் சேர்ந்து இயங்கியது குறிப்பிடத்தக்கது.

இப்போது வாசிக்க அரிதாக கிடைக்கும் அல்லது வாசிக்க கிடைக்கும் சூழலே இல்லாத நாவல் என்பதால் இந்த நாவலின் கதை சுருக்கத்தையும் உங்களிடம் பகிர விரும்புகின்றேன்.

நிரந்தரமில்லாத ஒரு வாழ்வில்; நம்பிக்கை இழந்து, வாழ்வின் ஒளிமயமான எதிர்காலங்கள் இருள் சூழ்ந்தது போன்ற மனச்சோர்வுடன்புக்கிட் தானா மேராதோட்ட நுழைவாசலில் வந்திறங்கினான் கன்னியப்பன். ஒரு மனிதனை இறக்கிவிட்டதால் சுமை குறைந்ததே என்ற பெருமூச்சுடன் நிலாய் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது பஸ்!’ என்று இக்குறுநாவலைத் தொடங்குகின்றார் நாவலாசிரியர் எம்.குமாரன்.

நாவலின் நாயகன் கன்னியப்பன். அந்த இளைஞனைச் சுற்றிதான் இந்நாவல் நகர்கிறது. மன கொந்தளிப்பும் வாழ்வின் மீதான அவநம்பிக்கையும் நிறைந்தவனாகவே கன்னியப்பனின் பாத்திரம் அமைந்திருக்கிறது. நாயகன் தற்காலிக ஆசிரியராக இருக்கிறான். அதன் நிச்சயமின்மை கொடுக்கும் அழுத்தத்தால் அந்த தற்காலிய ஆசிரியர் பணியை விட்டுவிட்டு தான் பிறந்த தோட்டத்திற்கே (எஸ்டேட்) ஏதாவது வேலை செய்து தனது வாழ்வை நடத்தலாம் என்ற எண்ணத்தில் வந்து சேர்கிறான். அதுமட்டும்தான் காரணமா என்றால் இல்லை. அதனுள் காதலும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

விடுமுறைக்கு தோட்டத்திற்கு வந்து போகும் போதெல்லாம் நீலாவின் மேல் இருக்கும் காதலும் அவனின் மனதிற்கு ஓரளவிற்கு நிம்மதியைக் கொடுக்கிறது. நாளை என்ன நடக்கும் என்கிற நிலையில்லாத வேலையில் இருந்து அல்லல்படுவதைவிட தான் பிறந்த மண்ணின் தன்னை நேசிக்கும் பெண்ணுடன் வாழ்வது அவனுக்கு தேவையாக இருந்தது.

ஆனால்; காதலி நிலாவை மணப்பதற்கு சாதி, வசதி, குடும்பச் சூழல் போன்றவை தடையாக இருப்பதை கன்னியம் அறிந்திருந்தான். தன் தோட்டத்திற்கே திரும்பிய கன்னியப்பன் நீலாவை வழக்கம் போல பார்க்க முடியாதில் குழம்புகிறான். ஒருமுறை அவளைச் சந்தித்தும் இருவரும் பேசமுடியாத சூழல் அமைகிறது. நீலா பேசாததற்கு சூழல்தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என யோசித்து கண்டறிவதற்குள் ஓர் அதிர்ச்சியான செய்தி அவனுக்கு கிடைக்கிறது.

நீலா, அவளது அத்தை மகனை மணந்து கொள்கிறாள். நாயகனால் அதனைத் தாங்கி கொள்ளமுடியாது தவிக்கின்றான். பின்னர் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் வேறொரு பெண்ணை மணந்து கொள்கிறான். முதலில் முரனாக அமைந்த அவனது தாம்பத்தியம் பின்னர் இருமனமும் இணைகிறது. மனைவியோடு வாழ்வை இனபாக அனுபவிக்க தொடங்கும்போது அவர்களின் அன்பின் அடையாளமாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தவள் பிரசவத்தின் போதே இறந்துவிடுகிறாள். மீண்டும் மீண்டும் வாழ்க்கை தன்னை பந்தாடுவதாய் உணர்ந்து மீளாத் துயருருகிறான் கன்னியப்பன்.

இதற்கிடையில்; அவனது நண்பர்கள் கூறியது அவன் நினைவிற்கு வருகிறது. அதன் அவசியமும் அவனுக்கு புரிகிறது.  தோட்ட துண்டாடலால் பாட்டாளி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இங்கு வாழும் தோட்ட மக்களிடம் கூட்டுறவு மனப்பான்மையை உருவாக்கி ஒரு லட்சம் ரிங்கிடை திரட்டி இந்தத் தோட்டத்தை எப்படியாவது வாங்க வேண்டும். அதுதான் இங்கு வாழும் பாட்டாளி மக்களுக்கு விடியலாக இருக்கும் என்ற பொதுநலத்துடன் உழைக்ல்க தயாராகிறான்.

நண்பர்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றான். பல சமூகத் தலைவர்களைச் சென்று சந்தித்து பேசுகின்றான். ஒவ்வொருவரிடமும் நிலமையை எடுத்துச் சொல்லி ஆதரவு கேட்கிறான். தொழிற்சங்கத்தில் சிலரும், அரசியலில் சிலரும், தோட்டத்தில் வாழ்பவர்களில் சிலரும் அவன் மீதும் அவனது எதிர்ப்பார்பின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் மக்களிடையே கூட்டுறவு மன்ப்பான்மை உருவாக்க முடியாமல் தினறுகிறான். ஒவ்வொருவருக்கும் இன்னொரு முகம் இருப்பதை புரிந்து கொள்கிறான். ஏதோ ஒரு வகையில் தானுமே ஏமாற்றப்படுவதாக உணர்கிறான்.

இதற்கிடையில் தனது காதலி நீலாவை மருத்துவமனையில் சந்திக்கின்றான். வேறு வழியின்றி அவள் செய்த திருமணத்தைப் பற்றியும் தெரிந்து கொள்கிறான். அவளது கணவனின் குடும்பம் செய்த சூழ்ச்சி இவனுக்கு அப்போதுதான் தெரிகிறது. தன்னை மன்னிக்கும்படி கேட்கிறாள் நீலா. தன்னைப் போலவே தனது தங்கையும் இந்தக் குடும்பத்தில் சிக்கி சீரழியக் கூடாது என்று கூறிவிட்டு; தன் தங்கையை திருமணம் செய்து கொண்டு தனது குழந்தையையும் பார்த்து கொள்ளும்படி கேட்கிறாள். மறுநாளே இறந்துவிடுகின்றாள்.

கன்னியப்பனுக்கு மனதில் ஒரு வேகம் பிறக்கிறது. நீலாவின் தங்கையை சந்தித்து பேசி தன்னுடனே அழைத்துவர முடிவெடுக்கின்றான். ஆனால் அவளோ தனது அக்காவின் குழந்தைக்கு தானே ஒரு தாயாக வாழ்ந்து தன் வாழ்நாளை அதே குடும்பத்தில் கழித்துவிடப் போவதாகச் சொல்லி குடும்பத்துடன் வெளியூர் போகிறார்கள்.

இத்தனை வெறுமைக்கு பிறகும் இத்தனை ஏமாற்றங்களுக்கு பிறகும் தன் வாழ்வில் ஓர் அர்த்தம் இருப்பதாக நம்பியிருந்த கன்னியப்பனுக்கு மீண்டும் ஓர் ஏமாற்றம் மீண்டும் ஓர் அடி.

நீலாவை தவறாக புரிந்து கொண்டது, மனைவி கமலாவின் மரணம், நீலாவின் மரணம், நீலாவின் தங்கை செல்லம்மாள் எடுக்கும் முடிவு, தோட்ட மக்களுக்காக போராடுகிறேன் என்கிறவர்களின் சுயநலம் போன்ற பல சம்பவங்கள் கன்னியப்பனின் செயலூக்கத்தை அழிக்கிறது. இறுதி அத்தியாயத்தில் தோட்டத் துண்டாடலுக்கு எதிராக மக்கள் நடத்தும் மறியலுக்கும் போராட்டங்களுக்கும் எந்தவொரு அர்த்தமும் இல்லை என்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றான் கன்னியப்பன். சமுகத்திற்கான தனிமனிதனொருவனின் லட்சியத் தேடல்கள் எல்லாம் அர்த்தம் இழந்து மனிதர்களின் கீழ்ம்மையினால் நிலைகுலைந்து போகிறது. ஆனாலும் எங்கோ ஓர் மூலையில் ‘நம் வாழ்க்கையை நாம்தான் காப்பார்ற வேண்டும்’ என்கிற சிறு நம்பிக்கையின் ஒளியில் இந்நாவல் முடிகிறது.

கமலா, நீலா உங்கள் உயிர் அமைதி கொள்ளட்டும். செல்லம்மாள் நலமே வாழ பிரார்த்தனை செய்வோம்மௌனமாக இறைஞ்சினான்.

எல்லா இளைஞர்களின் மண்வெட்டியும் வானோக்கி உயர்ந்தன. இப்போது வானம் பொழிய காத்திருக்கிறது!

பூமி விளையக் காத்திருக்கிறது!

சமுதாயம் வாழக் காத்திருக்கிறது!

உழைப்போம், உயர்வோம்!” எல்லோருடைய மண் வெட்டிகளும் மண்ணில் பாய்ந்து கொண்டிருந்தன. இளந்தலைமுறையின் எழுச்சி மிக்கமௌனப்புரட்சிஅங்கே நடந்து கொண்டிருந்தது.

என்பதாக நாவலாசிரியர் செம்மண்ணும் நீலமலர்களும் என்னும் இந்நாவலின் கடைசி அத்தியாயத்தை எழுதி முடிக்கின்றார்.

இந்நாவலில் கன்னியப்பனின் அப்பாவிற்கு அதிகம் இடம் இல்லை. அதோடு கன்னியப்பனின் குழந்தைக்கும் அதிகம் இடம் இருக்கவில்லை. அதே போல இந்நாவலில் வரும் பெண்கள் அடிமை மனப்பான்மை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள். தோட்டத்தில் வாழும் மக்களில் ஆண்களென்றும் பெண்களென்றும் குறைத்து பார்க்கப்படுவது இருக்கும் அதே சமயத்தில் ஆண்களுக்கு இணையாக தங்களின் ஆளுமையால் தனித்து தெரியும் குடும்பத்தை தன் ஒற்றைத் தோளில் சுமக்கும் பெண்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நாவலில் இடம் கொடுத்திருக்கலாம்.

முழுக்கவும் கன்னியப்பன் என்னும் தனிமனிதனின் அகப்பார்வையும் அவன் எதிர்நோக்கும் சிக்கல்களுமே நாவலில் மையம் என்பதால் மற்ற குறைகள் பெரிதாக தெரியவில்லை. அவற்றையும் கணக்கில் கொண்டு எழுதியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அதே சமயம் இந்நாவல் எழுதப்பட்ட கால கட்டத்தில் லட்சியவாத படைப்புகளே அதிகம் இருந்திருக்கின்றன. நாயகன் வெல்வது சமூகத்திற்காக உழைத்து சமூகத்தை காப்பாற்றுவது, உழைத்து முன்னேறி குடும்பத்தைக் காப்பாற்றுவது, முதல் காதலில் தோல்வி என்றாலும் அடுத்த காதலிலோ மன வாழ்க்கையிலோ வெற்றி, நாயகனின் வீரதீர செயல்கள், சாகசங்கள் போன்ற எதையுமே இந்த நாவலில் நம்மால் பார்க்க முடியவில்லை. அதுவே இந்நாவல் எதார்த்த வாழ்வை நமக்கு நிகர் அனுபவமாக கண்முன்னே காட்டிச் செல்வதாகத் தோன்றுகிறது. அதே சமயம் தனிமனிதனின் இருப்பும் அது எதிர்நோக்கும் சிக்கல்களுமே இந்நாவலில் பிரதானம். தோட்ட துண்டாடலை பின்னணியாக வைத்து ‘இருத்தலியல்’ தன்மையில் இந்த நாவலை எழுத்தாளர் எழுதியது இந்நாவல் நிலைத்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் எனலாம். எப்போதெல்லாம் நாயகனுக்கு மனநெருக்கடி அதிகமாகிறதோ அப்போதுதான் அதற்கு ஒரு வடிகாலாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாயகன் பொது காரியங்களின் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறான்.

தோட்டத் துண்டாடல் என்ற வார்த்தை சிலருக்கு புரியாமல் இருக்கக்கூடும். மலேசியா சுதந்திரம் அடைந்ததற்கு பிந்திய  காலக்கட்டத்தில் மலேசியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பிரச்சனைதான் இந்தத் தோட்ட துண்டாடல். மலேசியாவிற்கு வந்த பெரும்பாலான தமிழர்கள் தோட்டங்களில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

கிழக்கத்திய முதலாளிகள் பெரிய தோட்டங்களைச் சிறிது சிறிதாகப் பிரித்து விற்றால்தான் ஆசியாவில் இருக்கும்  சின்ன சின்ன முதலாளிகளால் வாங்க முடியும் என்று முடிவெடுத்து தோட்டங்களை அதற்கு ஏற்றவாறு கூறு போட்டு விற்க தொடங்கினார்கள். இந்தத் தோட்ட துண்டாடலில் அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. சின்ன முதலாளிகள் உருவாக வேண்டும் என்கிற போர்வையில் ஆயிரக்கணக்கான பாட்டாளி சமூகத்தினர் நிராதரவாக விடப்பட்டது மிகப்பெரிய அவலம்.

அதிலிருந்து அப்பாவி பாட்டாளி மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கூட்டுறவு மூலம் தாங்களே தோட்டத்தை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அப்படியான சூழலில்தான் தமிழர்களின் அலட்சிய மனப்பான்மை, ஒற்றுமையின்மை, பிரிவினை, சுயநலம் போன்ற பல கீழ்மையான என்ணங்களும் தோன்றி நிலைமையை இன்னும் மோசமாக்கியது. எம்.குமாரன் எழுதியிருக்கும் செம்மண்ணும் நீலமர்களும் என்னும் இந்நாவல் அப்படியான வரலாற்றை பின்புலமாக கொண்டு ஒரு தனிமனிதனின் வாழ்வை சொல்வதாக அமைந்திருக்கிறது.

110 பக்கள் கொண்ட இந்த நாவல் உங்களுக்கு கிடைத்தால் கட்டாயம் வாசியுங்கள்; அதே போல வாய்ப்புள்ள யாராவது இந்த நாவலை மீள் பிரசுரம் செய்து உதவுங்கள். ஒரு வாசகனின் எதிர்ப்பார்ப்பாக இந்த நேரத்தில் இதனைச் சொல்லி இந்த மாதத் தொடரை முடிக்கின்றேன்.

மீண்டும் அடுத்த மாதம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு உங்களைச் சந்திக்கின்றேன்.

00

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *