கொல்லைப்புரத்து காபிக்குவளை

ரா.சண்முகவள்ளிஸ்ரீனிவாசன்

அளவான ஒரு வட்டவையில் கொதிக்கின்றது நீர். கண்ணாடி வளையல்கள் சத்தமிட்டபடி கைகள் அசைகிறது அருகில் இருந்த காப்பிதூள் டப்பாவை திறந்தாள். அந்த காப்பிதூள் அவளுக்கு மிகவும் பிரியமான ஒன்று . பஜார்ல இருக்குற காப்பிதூள் கடையினில் மெனக்கெட்டு வாங்கிட்டுவருவா. வேற எங்கையும் வாங்கினா அவளுக்கு பிடிக்காது. அங்க மட்டும் தான் காப்பி தூளில் சிக்கரி நாம சொல்லுற அளவுல கலந்துக்கொடுப்பாங்க. அந்த கடையைத் தாண்டி போறவங்கள ஒரு நிமிஷம் என்னை பாத்துட்டு போங்களேனு சொல்லுற மாதிரி இருக்கும் அங்க வறுபடுற காப்பிக்கொட்டைகளோட மணம். பதமா வறுத்த காப்பிக்கொட்டையை இதமா திரிச்சி வச்சிருப்பாங்க. நமக்கு எந்த அளவு சிக்கரி கலக்கனும் அப்படி சொல்லுறோமோ அந்த அளவு மட்டும் கலந்து கொடுப்பாங்க. சிக்கரி கலந்த காப்பி சுவையாதான் இருக்கும் ஆனா அது குறைஞ்சாலும், கூடுனாலும் காப்பியோட ருசியே போயிடும். அதனால தான் காப்பிதூள் வாங்குற வேலைய மட்டும் அவ கணவர்கிட்ட அவ சொல்லவே மாட்டா.

         காப்பிதூள் டப்பாவை திறந்ததும் வர்ர அந்த வாசத்த நூகர்ந்து பார்த்துட்டு ஒரு ஸ்பூன் காபிதூளை கொதிக்கிற அந்த நீரில் போட்டு தனியாவையும்,சுக்கையும் கொஞ்சமா எடுத்து பதமா இடிச்சி கொதிக்கிற கலவையில் சேர்த்து கடைசியா இனிப்புக்கு தக்கன கருப்பட்டியையும் சேர்த்தா போதும் . அவளோட விருப்பமான காபி தயார் ஆகிடும். அவ்வளவு தான் ஒரு கப்புல காபியையும் ஒரு கிண்ணத்துல கொஞ்சம் மிஞ்சரையும் எடுத்துக்கிட்டு அவளோட ஆஸ்தான இடமான அந்த கொல்லப்புறத்த நோக்கி வருவா .

    சமையலறையிலிருந்து வெளியேற பின்புறமாக உள்ள வாசல் அது. இரண்டு படிக்கட்டுகளை கொண்ட வாசல் அது. வாசலை விட்டு கீழே இறங்கினால் செம்மண் தரையில் ரோஜா, மல்லி, செம்பருத்தி,கேந்தி ,கருவேப்பிலை என அளவான செடிகளோடு அலங்கரிக்கும் அவளின் குட்டித் தோட்டம் ஒன்று இருக்கும்.அந்த படிக்கட்டில் அமர்ந்த படி அன்னாந்து பார்த்தால் அவளுக்கான மொத்த உலகமும் தெரியும். ஓங்கி வளர்ந்த பக்கத்துவீட்டு தென்னைகளுக்கு ஊடாக தெரிந்திடும் வானத்தையும், மேகத்தையும் ரசித்த படியே காபியை அருந்துவதும் ஒரு சுகம் தான்.

         அவளின் கைபேசியிலிருந்து விருப்ப பாடல்களை ஒலிக்க விட்டபடி அந்த கொல்லைபுறத்துக்கு அவள் வருகையில் மணி பதினொன்றை தொட்டிருந்தது. ஆம் இது அவளுக்கான நேரம் . எந்த இடையுறும் இல்லாது எந்த ஒரு சிந்தனைகளும் இல்லாது அவளை அவள் மட்டும் கொண்டாடும் ஒரு நேரம் இதுவே. அந்த கொண்டாட்டத்திற்கு பெரிதாக ஒன்றும் தேவையில் ஒரு குவளை கடுங்காப்பியும், கொரிக்க கொஞ்சம் மிச்சரும் , ஒலித்திடும் அவளின் விருப்பமான பாடல்கள் அவ்வளவு தான். எளிமையான இந்தக் கொண்டாட்டத்திற்கு வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

   பாடலை ரசித்தபடி அவளின் இதழ்கள் தீண்டியது காப்பிக் கோப்பை. சூடான அந்தக் காபி அவளின் தொண்டைக்குள் இறங்கிட கண்களை மூடி உள்ளிழுத்து கொள்கிறாள் அதன் கதகதப்பை. அவளின் அன்றைய நாளின் ஓட்டத்திற்கு அதுவே அவளுக்கு அருமருந்தாகிவிடுகிறது. ஒரு வாய் காப்பியை உள்ளிழுத்தவள் கொரிக்க அந்த மிச்சரைக் கையில் எடுத்ததும் படபடக்கும் இறக்கைகளோடு வந்து அமர்ந்தது ஒரு வெண்புறா.

    அவளின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் சிநேகிதன் அது. மிச்சரில் கிடக்கும் பொரிகடலையை எடுத்தப்படியே ” வந்துட்டியா எங்கடா இன்னும் ஆளக்கானும் தான் யோசிட்டு இருந்தேன் . கரெக்டா வந்துட்ட என்றபடியே எடுத்த பொரிகடலையை கையில் ஏந்தினாள்.

   நெருக்கமானவர்களின் கரங்களை அணைத்திடும் ஆர்வத்தோடு அவளின் கரங்களில் வந்து அமர்ந்தது அந்த புறா. அவள் அளித்த கடலைகளை கொத்தி உண்டது சில நொடிகளிலேயே மீண்டும் பறந்து பக்கத்து வீட்டு மாமரத்தில் குடியேறியது.

    மீண்டும் இதழ் தீண்டும் காபியில் அவள் மனம் லேசாக அந்த நீல வானத்தில் பறக்கத்தொடங்கியது. அவளுக்குள் தான் எத்தனை ஆசைகள் கனவுகள். சிறகினை விரித்து பறந்திடும் அந்த பறவைகளை பார்க்கையில் அவளும் அப்படி பறப்பது போன்ற ஒரு உணர்வு அவளுள் எழும்.

   இந்த காபிக்கான நேரம் என்பது அவளுக்கு அத்தனை முக்கியமானது. காலையிலேயே அலறி எழுப்பிவிடும் அலாரத்தில் தொடங்கும் அவளின் இயந்திர வாழ்க்கைக்கு சற்று ஓய்வு கொடுப்பது இந்த கொல்லைப்புறத்து காபி ஒன்றே.

000

 ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *