–பல்லபுரம் பிரபாகரன்
கோடைக்காலத்தில் ஒரு மாலை நேரம்.
புயல் காற்று வீசியது.
கன மழையும் பெய்து ஓய்ந்தது.
கவின், அருள் இருவரும் வீட்டின் பின்புறம் சென்றனர். தோட்டத்தைச் சுற்றி வந்தபோது, மரங்களில் இருந்து மழைநீர்த் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன.
கவின் மரத்தை அண்ணார்ந்து பார்க்க, இலையில் இருந்த துளிகள் முகத்தில் விழுந்தன. அவற்றை ரசித்துக் கொண்டிருந்தவன் சட்டென்று திடுக்கிட்டுப்போய்,
“அருள், அருள்! இங்கே பாருடா!” என்று கத்தினான்.
“உன்னைப் பற்றி எனக்குத் தெரியும், தம்பி…
பக்கத்தில் வந்ததும் மரக்கிளையை குலுக்கிடுவ…
என்மேல் நனைத்துவிட்டு அம்மாவிடம் அடிவாங்கிட திட்டம் போட்டிருக்க தானே?…”
அருள் முன்கூட்டியே சூட்சுமத்தை தெரிந்து கொண்டது போல்,
“வரமுடியாது போ!” என்றான்.
‘காணாது கண்ட ஒன்றை மற்றவரிடம் சொல்லியாக வேண்டும்’ என்ற ஆர்வத்தில்,
“அம்மா, அம்மா! … இங்கே வாங்க!” கத்தினான் கவின்.
அம்மா சத்தம் கேட்டு வந்தாள். அம்மாவின் கரம் பிடித்து அருளும் வந்து பார்த்தான்.
அந்த மாமரத்து கிளையில் ஒரு சிலந்தி வலை. அந்த வலையின் நடுவில் சிலந்தியொன்று கற்பூரம் போல் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.
அருள், “அட! இது என்ன? வெள்ளை நிறத்தில் சிலந்தியா!” வாயடைத்துப் போனான்.
“இது சாதாரண சிலந்தி கிடையாது. ஓர் அபூர்வமான வகையைச் சேர்ந்தது. பொதுவாக வெள்ளை மலர்களில் வாழும் சிலந்திகள் வெண்மையாகத் தோன்றும். சில சிலந்திகள் சுற்றுப்புறச் சூழலுக்குத் ஏற்றபடி உடலை மாற்றிக்கொள்ளும்.” என்றாள் அம்மா.
அதுவரை இருவரும் பச்சோந்தி நிறம் மாறுவதைப் பற்றி கேள்விப்பட்டவர்கள். ஆனால், அதை நேரில் பார்த்ததில்லை.
“என்ன! சிலந்தி! பச்சோந்தி போல நிறம் மாற்றுமா?”
கவின் வியப்பில் வாயைப் பிளந்தான்.
“ஆம்!” அம்மா சிரித்தாள்.
வைர மாலையைப் போன்று மின்னும் மழைத்துளிகளால் வலையின் ஓர் ஓரம் கிழிந்திருந்தது.
அதைப் பார்த்து, பாவம்.
“எவ்வளவு கஷ்டப்பட்டு வலையை பின்னி இருக்கும்?” வருந்தினான் அருள்.
அடுத்த கணமே, வெள்ளை சிலந்தி வாயிலிருந்து நூலை வெளியிட்டு வலையை பின்னி சரிசெய்ய ஆரம்பித்தது.
அப்போது அம்மா சொன்னாள்:
எத்தனை முறை விழுந்தாலும் அத்தனை முறையும் எழுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். சோர்வடையாமல் புத்துணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.
உண்மையாக சொன்னால், சிலந்திகள்தான் உலகின் தலைசிறந்த நெசவாளிகள். சிலந்தியைப் பற்றிச் சொல்ல நிறைய உள்ளன.
சிலந்திகள் வீடு, கோவில், காடு…, பாலைவனம் முதல் பூஞ்சோலை வரை எல்லா இடங்களிலும் வாழும். அவை சமச்சீராக வலைப் பின்னும் வல்லமையை இயற்கையாகவே கொண்டுள்ளது. அந்த வலை மெலிந்து இருந்தாலும், அதிக வலிமையோடுதான் இருக்கும்.
“இதைக் கொண்டு கயிறு செய்ய முடியுமா?”அருள் கிண்டலாக கேட்டான்.
“புத்திசாலி புள்ளடா, நீ!” கன்னத்தைக் கிள்ளியபடி,
“அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன” என்றாள்.
அம்மா சிலந்தி பற்றிய பல சுவரஸ்யங்களை பகிரத் தொடங்கினாள்.
அப்போது ஙொய், ஙொய்……..
ஒரு பூச்சி பறந்து வந்தது. அது வலையில் இருந்த ஒட்டும் நூலில் ஒட்டிக்கொண்டது.
ஓவ்வொரு முறை தப்பிக்க முயற்சித்தபோதும், அடுத்தடுத்த பின்னலில் சிக்கிக்கொண்டது. அந்த வலையில் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்து சிலந்தி மின்னல் வேகத்தில் விரைந்து சென்றது.
சிலந்தி ஒரு வேட்டைக்காரனைப் போல வேட்டையாடி அதற்கான உணவைப் பெற்றுக் கொண்டது.
அம்மா குறுக்கிட்டுப் பேசினாள்:
இதுபோன்று வயல்வெளிகளில் பல பூச்சிகளைப் பிடித்துத்தின்று பயிர்களைக் காப்பாற்றும் பணிகளையும் செய்யும்.
அம்மா கொஞ்சம் பொறுங்க. இதோ வருகிறேன். அருள் விரைந்து சென்றவன் மீண்டும் திரும்பி வந்தான்.
அருள் தயக்கத்துடன்,
“அம்மா! இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு சிலந்தி வலை அங்கே இருந்தது. அதைக் காணவில்லையே!”
சிலந்திகள் ஏற்கனவே பின்னியிருந்த வலை நூலினை சாப்பிடும். அதில் நிறைந்துள்ள புரதத்தை மீண்டும் பயன்படுத்திக் கொள்வதற்காக.
“ஆக அது எதையும் வீணாக்காது! பழைய நூலில் இருக்கும் புரதத்தை எடுத்துக் கொண்டு புதிய வலையைப் பின்னுமா? அப்படியானால் அது ஒரு மறுசுழற்சி நிபுணரா?” அம்மாவை வியக்க வைத்தான் அருள்.
ஏறக்குறைய அப்படித்தான்.
அம்மாவின் குரல் ஒலித்தது.
அம்மா அவர்களிடம்,
இப்போ சொல்லுங்க. உங்களை ஆச்சரியப்படுத்திய ஒரு உயிரி எது?
’சிலந்தி’ என்றான் அருள்.
’வெள்ளை சிலந்தி’ என்றான் கவின்.
ஆமாம் வெள்ளை சிலந்திதான். அது ஒரு நெசவாளர்… வேட்டைக்காரன்… மறுசுழற்சி நிபுணர்… எல்லாவற்றையும் விட விடாமுயற்சியை கற்றுத்தரும் ஒரு நண்பன்.
அம்மா புன்னகையோடு சொல்லி முடித்தாள்.
வெள்ளை சிலந்தி வலையின் நடுவில் அமர்ந்திருந்தது. சூரியன் மறையும் நேரம். சூரியனின் ஒளிக்கதிர்கள் சிலந்தியின் மீது விழ, அது வெள்ளி நட்சத்திரம் போல் மின்னியது.
000

பல்லபுரம் பிரபாகரன்
பெற்றோர் : பி. பன்னீர்செல்வம் – வசந்தா
பிறந்த ஊர் : பல்லபுரம்
வட்டம் : இலால்குடி
மாவட்டம் : திருச்சி
படிப்பு : பி.டெக்., அக்ரி இன்ஜினியரிங்
சிறுகதைகள் மற்றும் குழந்தைகளுக்கான கதைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். வாழ்க்கை அனுபவங்களை உணர்ச்சி மிக்க கதைகளாக வடிவமைத்து இணைய இதழ்களில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
குழந்தைகளின் சிந்தனை, நல்ல மதிப்புகள் மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்டு பல கதைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவற்றில் சில கதைகள் அமேசான் கிண்டில் தளத்தில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து பின்வரும் வலைப்பதிவுகளில் எழுதி வருகிறார்:

