-பரிவை சே.குமார்
‘பாலுச்சாமி வர்றானாம்’ என்று பொதுவாகச் சொன்ன நாச்சிமுத்துவை ஏறிட்டுப் பார்த்த மற்றவர்களின் பார்வையில் ஆச்சர்யம் தொக்கி நின்றது.
பெரும்பாலான கிராமங்களில் விவசாயம் அற்றுப் போனதால் பல வீடுகளில் ஆட்கள் இல்லாதிருந்தாலும் சில வீடுகளில் இருக்கும் பெரிசுகளால் அவை இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. ஊர்ல் கூடிப் பேச என்று ஒரு கோவில் திண்ணையோ, வேப்ப மரமோ, கூத்துப் பொட்டலோ கண்டிப்பாக இருக்கும். அந்த இடங்களில் காலை, மாலை வேளைகளில் பெரிசுகள் கூடிப் பேசுவதை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல், திருவிழாக்கள், கூத்து, மாட்டு வண்டிப் பந்தயங்கள், உறவுகள் மற்றும் பக்கத்து ஊர்களில் நடந்த நிகழ்வுகள் என எல்லாம் கலந்து கட்டி பேசுவார்கள். இடையிடையே இளவயது நினைவுகளையும் மீட்டிக் கொள்வார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ஊர்க்கதைகளையும் புரணியையும் பேசியது இரண்டாயிரத்துக்கு முன்புதான். மெகா சீரியல்களும் செல்போன்களும் அவர்களைப் பிடித்துக் கொண்ட பிறகு கூடிப் பேசுதல் என்பது இல்லாமலேயே போய்விட்டது. அப்போதெல்லாம் வாசல்படியில் அமர்ந்தார்கள் என்றால் மணிக்கணக்கில் பேசுவார்கள். பசிக்குதுன்னு சாப்பாடு போடச் சொன்னால் பேச்சுச் சுவராஸ்யத்தில் ‘இருவே… அதுக்குள்ள என்ன அவசரம்’ன்னு சொல்வாங்க. இப்பல்லாம் அவங்க பொழுது போக்கு மெகாசீரியல்ல நடக்குறதைப் பார்த்து அதில் வரும் வில்லியைத் திட்டுவது மட்டுமே என்றாகிவிட்டது.
“எந்தப் பாலுச்சாமி…?” கண்களை இடுக்கியபடி கேட்டார் சுப்புணி.
“அட தெரியாதமாரிக் கேக்குறே..? நம்ம பர்மாக்கார ஊட்டுப் பாலுப்பய” விளக்கமாய் கந்தசாமி சொன்னதும், நினைவில் பின்னோக்கிப் போய் “டேய்… நம்ம பீக்குண்டிப் பாலுவாடா..!” எனக் கேட்கும் போதே சுப்புணிக்குச் சிரிப்பு வந்தது. அவரின் சிரிப்பு மற்றவர்களையும் தொத்திக் கொள்ள, “ஆமாடா கருப்பட்டி” என்ற கந்தசாமியை முறைத்தார் சுப்புணி.
சின்ன வயதில் பாலுவுக்கு அடிக்கடி வயித்தால போகும். சில நேரங்களில் அவசரத்தில் டவுசரில் போய்விடுவான். ஊருக்குள் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கும், அதில் பாலுவுக்கு வாய்த்த பெயர்த்தான் அவனது வயித்தாலையோடு தொடர்புடைய ‘பீக்குண்டி’.
நாச்சிமுத்துவைப் பார்த்து “நெசமாவா..?” என்றார் வைத்தியலிங்கம்.
“அட ஆமாடா வைத்தி. இதுல பொய் சொல்றதுக்கு என்ன இருக்கு, அவன் வர்றானாம்… கண்டிப்பா வருவானாம்” சத்தமாய்ச் சொன்னார் நாச்சிமுத்து.
“இதென்ன புதுக்கதயா இருக்கு… இம்புட்டுக் காலமும் வராதவன் இப்ப என்னாத்துக்கு வர்றானாம்..?” முகவாயில் கைவத்தபடி கேட்டார் கந்தசாமி.
“எனக்கென்ன தெரியும்… பொறந்த ஊருக்கு வர்றேம்ப்பான்னு சொல்லும் போது நம்ம வராதேன்னு சொல்ல முடியுமா இல்ல எதுக்கு வர்றேன்னு கேக்க முடியுமா..? அப்படிக் கேட்டா அவன் என்ன நெனச்சிப்பான். அதான் எல்லாரும் சொல்றமாரி நானும் நல்லா வாப்பான்னு சொல்லிட்டேன்”
“எப்பவாம் சித்தப்பு..?” பெரியகருப்பன் வேகமாய்க் கேட்டார்.
“எப்பன்னு சொல்லல மானி… வர்றேன்… வர்றதுக்கு முன்னால் உனக்குப் பேசுறேன்னு சொன்னான். வர்றேன்னு சொன்னா வருவானுல்ல…”
“எப்ப வந்தா என்னங்கிறேன்… எதுக்கு வர்றாங்கிறதுதானே முக்கியம்…” என்றார் சுப்புணி.
“எதுக்கா இருக்கும் நிலபுலமெல்லா ஒழுங்கு படுத்திடலாமுன்னு பாப்பானா இருக்கும்” என்ற வைத்தியலிங்கம், “ஏம்ப்பா… அதப்பத்தி எதுவும் பேசுனானா..?” எனக் கேட்டார்.
“எங்கிட்ட எதுவும் கேக்கல… பேசல. அவன் எதுக்கு இப்ப வர்றான்னு ஒரு விபரமும் எனக்குத் தெரியாதுப்பா… அவன் வந்தாத்தான் எதுக்கு இங்க வந்திருக்கான்னு தெரிய வரும்” என்ற நாச்சிமுத்துவின் முகம் வழக்கத்துக்கு மாறாக கருமை பூத்திருந்தது.
“ம்… ஆமா இங்க என்ன இருக்குன்னு வர்றான். வந்தாத் தங்க வீடு வாசலிருக்கா…? அப்ப இந்த ஊரு வேணான்னு போனப்போ உங்க வீட்டுலதானே சாவியெல்லாம் கொடுத்துட்டுப் போனாக. அது இப்பக் கெடக்கிற கெடயப் பாரு. அவுக வீடிருந்த இடமெல்லாம் இப்பக் கருவயும், எருக்கலையும் மண்டிப் போயிக் கெடக்கு. இப்ப வந்து இதப் பாத்தா அவனுக்கு நெஞ்சுவலிதான் வரும். அதுக்கு வராமலே இருக்கலாம் போ” என்றார் வைத்தியலிங்கம்.
“அதுக்கு நாங்க என்னப்பா பண்ண முடியும். எம்புட்டுக் காலத்துக்கு ஒருத்தரோட வீட்ட நாம செலவு பண்ணி மராமத்துப் பண்றது..? அவுக திரும்பி வருவாகன்னு நெனச்சி எங்கப்பாரு அவரு கைக்காசப் போட்டு வீட்ட சுத்தம் பண்ணி, மராமத்துப் பாத்துத்தானே வச்சிருந்தாரு. அவரு காலத்துல மட்டுமில்ல இப்ப வரை அவங்க வரல, பின்ன யாரு பாக்குறதுன்னு கெடக்கட்டும் போன்னு நா விட்டதுல கொஞ்சங் கொஞ்சமாச் செதஞ்சி போயி உருத்தெரியாமப் போயிருச்சு. அதுக்குள்ள இருந்த சாமாங்களும் பாதி இத்துப் போச்சு, பாதி யாரு வீட்டுக்குப் போச்சுன்னு தெரியாமப் போயிருச்சு. ஆட்டுக்கல்லு ராசப்பன் வீட்டுலயும், அம்மி சின்னநாச்சி வீட்டுலயும் கெடக்கதாக் கேள்வி. நாம போயிக் கேட்டா ஆமான்னு சொல்லுவாங்களாக்கும். எங்கப்பா இருக்கும் போதே மரப்பீரோவ மட்டும் பாதுகாப்பா இருக்கட்டும்ன்னு எங்க வீட்டுல தூக்கியாந்து வச்சிக்கிட்டாரு, அதேமாரி நானு கல்லொரல எங்க வீட்டுல கொண்டாந்து போட்டு வச்சேன். அவன் வந்தா இந்தாப்பா இதுகள மட்டுந்தான் காப்பாத்த முடிஞ்சிச்சுன்னு சொல்லி தூக்கிக் கொடுத்துருவேன்… பீரோவும், கல்லொரலுயும் எங்கிட்ட இருக்கு, மத்த சாமான் போன தெச தெரியல. வீடு சிதிலமாயிப் போச்சுன்னு அவனுக்கிட்ட பலதடவ சொல்லிட்டேன். அவன் அதப்பத்தி எதுவும் கேட்டுக்கல”
“தூக்கிக் கொடுத்துருவேங்கிறே… இருந்தாலும் அவுக அப்பன் பர்மாத் தேக்குல செஞ்ச வலுவான ரெண்டு பீரோலுக அது. காலத்துக்கும் அப்புடியே கெடக்கும். வர்றேன்னதும் கல்லொரலக் கொடுத்துடலாம் இப்ப யார உரல்ல இடிக்கிறா. ஆனா பீரோவக் கொடுக்க மனசு சம்மதிக்காதுதான்… பாக்கப் போனா அதனாலதான் உம்முகம் இறுகிப் போயிக் கெடக்கோன்னு தோணுது” நக்கலாய் சிரித்தார் கந்தசாமி.
“ஆளப்பாரு… என்னமோ பீரோல வாங்க முடியாதமாரி… எம்பொண்டாட்டி கொண்டாந்ததும் தேக்குப் பீரோலுதான், இப்ப நாலு மருமவளும் கொண்டாந்த பீரோலுக வீட்டுலதான் நிக்கிது. அவுகவுக வீடு கட்டிப் போனாக்கூட மரப்பீரோலயெல்லாம் அங்க போயி வச்சிக்கிட்டு இருக்க முடியாது. கப்போர்ட் போதும்ன்னு சொல்லிட்டாக. இதுல அடுத்தவமுட்டு பீரோலு எனக்கெதுக்குங்கிறேன்” சீறினார்.
“அட சும்மா சொன்னேன். எதுக்கு இப்ப நீ வெடுக்குன்னு பேசுறே. உங்ககிட்ட இருக்க சொத்துக்கு நீங்க ஏன் அவுக சொத்துக்கு ஆசப்படப் போறிய” கந்தசாமி சமாதானமாய் பேசினார்.
“அந்த வீட்டெடத்த எவனும் தொட்டுப் பாக்கல, நீங்கதானே மராமத்தெல்லாம் பண்ணுனீங்க. இனிமேயா வரப்போறான்னு நீங்களே எடுக்கிட்டிருக்கலாம்”
“என்ன எழவுக்கு அத எடுத்து… கொடுத்துட்டுப் போனாக உரிம கொண்டாடிட்டாகன்னு ஊரு பேசவா”
“அதானே… அடுத்தவன் சொத்து எங்க சித்தப்புக்கு எதுக்கு… இடபுலமில்லாமயா இருக்காக… எங்க அய்யா சேத்தது போக, சித்தப்பன் சேத்ததே நாலு பயலுகளுக்கும் தலமொறக்கிம் போதும் பின்ன எதுக்கு அந்த வாழ்ந்து கெட்ட வீடு…” படக்கெனச் சொன்னார் பெரிய கருப்பன்.
“ஆமா அது வாழ்ந்து கெட்ட வீடுதான்… ஒரு தலமொறயவே முழுங்குன வீடு, அந்த இடத்துல என்ன செஞ்சாலும் அது தழைக்காதுதான். இனிமே இந்த இடத்துல வீடு கட்டுனாலும் அது வெளங்காது. இங்க வந்து எங்க தங்குவாங்கிறதுதான் இப்போதக்கி என்னோட கவல மாமா” என்றார் கோவிந்தன்.
“தங்குறமாரி வர்றானோ இல்ல வந்துட்டு உடனே போறானோ… நமக்கென்ன தெரியும் மாப்ள. அதுபோக இனிமே அவன் இங்கியிருக்க நிலபுலம் பத்தியெல்லாம் கேக்க மாட்டான்னுதான் தோணுது. இம்புட்டு வருசமா அதப்பத்தி அவன் யோசிச்சமாரித் தெரியல.? எனக்கிட்ட அதப்பத்தி கேட்டதுமில்ல… பேசினதுமில்ல. அவனிப்ப நல்ல வசதியா வேற இருக்கான். சிட்டிக்குள்ள கெடந்தா இதெல்லாம் தங்கம்… கிராமத்துல கெடக்கதால பெரிசா ஒண்ணும் விலைபோகாதுல்ல… அதுனால இதெல்லாம் பத்திப் பேசமாட்டான்னுதான் தோணுது” முகவாயைச் சொறிந்தார் நாச்சிமுத்து.
“விவசாயமில்லாட்டாலும் வயலெல்லாம் உங்க அனுபவத்துலதானே இருக்கு. அவன் கேக்காட்டி அது உங்களுக்குத்தானே… நாலு பயலுக்கும் தலமொறக்கிம் இருக்க சொத்துல கூடுதலா ரெண்டு ஏக்கரு சேருமுல்ல” நக்கலடித்தார் சுப்புணி.
“மயிரு… யாருக்கு வேணும் அந்தச் சொத்து. அது காலத்துக்கும் அவனோட அப்பன் பேருலதான் இருக்கும். நீ வேணுமின்னா வெவசாயம் பண்ணிக்க… யாரு வேணாமின்னா” நாச்சிமுத்துவின் உடம்பு ஆடியது.
“அட ஏஞ்சுப்பு நீ வேற கேலியாப் பேசுறேன்னு கேணத்தனமா பேசிக்கிட்டு இருக்கே. வீட்டெடத்துக்கே அவன் என்ன சொன்னான்… அப்பறம் வயலப்பத்திச் சொன்னா. அன்னக்கி இவுக வீட்டு மேல, இவரு அப்பாரு மேல உள்ள நம்பிக்கையிலதானே அந்த அயித்த கொடுத்துட்டுப் போச்சு. அவன் வந்து வேண்டான்னு சொன்னா, இம்புட்டுக்காலம் பாத்தவுக வச்சிக்கிட்டுப் போறாவளே… அதானே நாயம். நீ வேற யாருக்கிட்ட கொடுக்கணுமின்னு நெனக்கிறே..?”
“வைத்தி… இவன வம்பிழுக்கத்தான் சொன்னேன். இம்புட்டுக் கோபமாயிட்டான்” என்றபடி பொடி டப்பாவைத் திறந்து ஆள்காட்டி விரலால் பொடியை உள்ளிருந்து இழுத்து வந்து விளிம்பில் வைத்துக் கட்டை விரலால் அழுத்திப் பிடித்து, மூக்கில் வைத்டு இழுத்த சுப்புணி, டப்பாவை நாச்சிமுத்துவிடம் நீட்ட, அவரும் அவ்வாறே எடுத்து மூக்கில் வைத்து ‘உர்ர்ர்ர்’ என இழுத்து, ‘ம்…ம்க்கும்’ எனச் செருமி, நான்கு தும்மலைத் தள்ளிவிட்டார். அதில் கோபமெல்லாம் கரைந்து போயிருந்தது.
“சரி… பாலு இங்க வர்றான்னு வச்சிப்போம்… வந்த உடனே பொசுக்குன்னு திரும்பிப் போக அவனென்ன பக்கத்துலயா இருக்கான். கர்நாடகாப் பக்கம் சின்னம்மாவோ சினேகாம்மாவோன்னு ஒரு ஊர்ல்ல இருக்கான்னு நீ சொல்லியிருக்கே. அப்பறம் எப்புடி இங்க வந்தோடனே ஓடமுடியும்..?” பீடியைக் கையில் எடுத்து தீப்பெட்டி மேல் தட்டியபடி கேட்டார் கோவிந்தன்.
“சின்னம்மாவுமில்ல பெரியம்மாவுமில்ல அது சிமோகா மாப்ள…” சிரித்தார் நாச்சிமுத்து.
“என்னமோ ஒரு காவா இருந்துட்டுப் போகட்டும். எனக்கென்ன தெரியும், நமக்கு இந்தா இருக்க காரக்குடிக்கி அங்கிட்டு இருக்க ஊரு கூட தெரியாது… இதுல சிம்மோவா எங்க தெரியப்போவுது. ஆமா நீந்தானே மாமா அவனோட அப்போவுல இருந்து கூட்டு” வாயில் பீடியைக் கவ்வி, தீப்பெட்டியை உரசி, கைகளால் காற்றை லாவகமாக மறைத்து அதைப் பற்ற வைத்து ‘உப்… உப்’பென இழுத்தார்.
“இந்தா மச்சான் பொகய அங்கிட்டு விடு. செங்கக்காலாவய அடுப்புமாரி இங்கிட்டுத் தள்ளாம” என பெரியகருப்பன் சொன்னதும் தன்னை அங்கிருந்து சற்றே விலக்கிக் கொண்டார் கோவிந்தன்.
“கூட்டுவாட்டெல்லாம் ஒரு மயிருமில்ல, எல்லாரும் ஒண்ணாத்தானே திரிஞ்சோம். என்னமோ அன்னயில இருந்து இன்ன வரக்கிம் எங்கிட்டப் பேசுறான்… அம்புட்டுத்தான்”
“அதத்தானே அவனுஞ் சொன்னான். பாலுப்பயலோட சித்தப்பமக்க பெரியப்பமக்களெல்லாம் இருந்தாலும் பேச்சுவார்த்த இல்லாமப் போயிருச்சுல்ல. ஊர் நெலவரத்தயெல்லாம் அவனுக்கு நீ மட்டும்தானே இப்பச் சொல்லிக்கிட்டு இருக்கே” என்றார் சுப்புணி.
“ஆமா… இங்க நடக்குறத அவனுக்குச் சொல்றதுதான் என்னோட வேல பாரு. அவனே ஆடிக்கொரு தடவ அம்மாசக்கொரு தடவ பேசுவான். ஊர் நெலவரமெல்லாம் எங்கிட்டக் கேக்கவுமாட்டான், பேசவுமாட்டான். தேவட்ட மணி… அதான் கண்டேவி ரோட்டுல ரைஸ்மில்லு வச்சிருக்கானுல்ல மணி, அவந்தான் அவனுக்குப் பெரண்டு… அவங்கிட்ட வேணுமின்னா இங்க உள்ள வெவரமெல்லாம் தெரிஞ்சிப்பானா இருக்கும். எனக்குப் போட்டுக் கொடுக்கிற புத்தியெல்லாம் அறவே இல்லப்பேம். அது எங்க வம்சத்துக்கே கெடயாது. அப்புடி சொல்லிக் கொடுத்து வாங்கித் திங்கிறவனுங்கக்கிட்ட போயிக் கேளு”
“எப்பா… நீ போட்டுக் கொடுத்தேன்னு சொல்லல. ஊர் விபரத்தக் கேட்டா சொல்ல நீ மட்டுந்தானே அவங்கூட பேசுறேன்னு சொன்னேன். இங்க யாரும் யாருக்கிட்டயும் வாங்கித் தின்னுக்கிட்டு இருக்கல”
“மணிக்கிட்ட நம்ம ஊருக் கதயள யாரு சொல்லப் போறா… நீந்தானே போகயில வரயில சொல்லிட்டு வருவே. அப்பல்லாம் நீ அங்கனதானே கெடயாக் கெடப்பே… இப்பத்தானே போறதக் கொறச்சிருக்கே” என்ற கந்தசாமியை முறைத்தார் நாச்சிமுத்து.
“இங்க இருந்து போனவன் அங்க போயி ஒருத்திய கட்டிக்கிட்டானுல்ல. அவ வேத்து மதத்துக்காரியின்னுதானே ஊருப் பெருசுக ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு ஒதுக்கி வச்சிச்சுக” பழசை நினைத்தவராய் வைத்தி சொல்ல “அவுக ஒதுக்கி வச்சாகன்னா அவன் இங்க வராம இருந்தான். அவனே இந்த ஊரு வேணான்னுதானே போனான். சொல்லப்போன அவந்தான் நம்மள ஒதுக்கி வச்சிருக்கான். நாம அவனயில்ல” என்றார் சுப்புணி.
“அது வாஸ்தவந்தான். ஆனா ஊருக்கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கும் போது அவனெப்படி இங்க வரமுடியும். நீ அவனோட பேசுறது கூட ஊருக் கட்டுப்பாட்ட மீறுன செயலுதானே சித்தப்பு” என்றார் பெரிய கருப்பன்.
“ஆமா வந்துட்டாரு ஊரு அம்பலம். அன்னக்கி கட்டுப்பாடு போட்டவுகளெல்லாம் கட்டத்தலயில போயி நீட்டி நிமுந்து படுத்துட்டாக. இவுக இன்னமும் தள்ளி வச்சிருக்கு, மொறப்பாடுன்னு சொல்லிக்கிட்டு… அட நீ வேற… இப்ப ஊருக்குள்ள ஒதுக்கி வக்கிற வீட்டோட யாரும் பேசாம இருக்காகளாக்கும், வெளிய தெரியாம கொடுக்கல் வாங்கலெல்லாம் நடக்கத்தானே செய்யுது. இதுல நாப்பது வருசத்துக்கு முன்னால ஊரவிட்டுப் போனவனோட பேசாம இருக்கணுமாம், அவன் இங்க வரக்கூடாதாம். இங்க இருந்திருந்தான்னா மிஞ்சிமிஞ்சிப் போனா ரெண்டு மூணு வருசம் அவன ஒதுக்கி வச்சிருப்பாங்களா… இன்னமும் பழசத் தூக்கிக்கிட்டுத் திரியாமத் திருந்துங்கடா…” எனக் கடுப்படித்தார் நாச்சிமுத்து.
“கேட்டேன் சித்தப்பு… அதுக்கு ஏன் பொரியிறே..?”
“தள்ளி வச்சா ஊருல சேராம கோவிலுகளுக்குள்ளயும் போக்கூடாதுல்ல. பின்ன வந்தா சாமி கும்பிடாமப் போவானா..?”
“வைத்தி… இப்ப மானிக்குச் சொன்னதுதான் உனக்கும். நாப்பது வருசத்துக்கு முன்னால கூடுன கூட்டம் எடுத்த முடிவுப்படி இன்னக்கி நடக்க முடியுமா சொல்லு..? ஒதுக்கி வக்கிறதும் சேத்துக்கிறதும் எப்பவும் நடக்கத்தானே செய்யுது. அவனென்ன நம்ம ஊடுகள்ல ஒட்டி உறவாடவா வர்றேன்னு சொல்லியிருக்கான். ஒரு காலத்துல நம்ம சௌந்தரத்தா கோவிலுக்குள்ள நம்ம சாதி ஆளுகதான் போகணுமின்னு வச்சிருந்தாக. இப்ப அப்படியா இருக்கு, கோவிலுக்கு மவுசு கூடிருச்சு. புள்ள வரம் கொடுக்கிறான்னு யார்யாரோ வர்றாக… அவுகளை எல்லாம் என்ன சாதியின்னு கேட்டா கோவிலுக்குள்ள விடுறோம். அன்னக்கி அந்நிய ஆளுக நுழையக் கூடாது இது எங்க ஊர்க்கட்டுப்பாடுன்னு போயி நின்ன எங்கப்பனயும் உங்கப்பனயும் போலீசுக்காரன் காத்துக்குடிக்க அடிச்சிப் போட்டதுக்கு அப்பறம் எவனாச்சும் அது எங்க கோவில்ன்னு போயி நின்னானா..? இல்லயில்ல… கோயிலு எங்க உரிமயின்னு நின்னிருக்கணுமில்ல, போலீஸ்காரன் பொடனியிலே போடுவான்னு பொத்திக்கிட்டு, மொதமரியாத நம்ம ஊருக்கு கெடச்சாப் போதுமின்னு நின்னோமா இல்லயா. இப்ப பாலு வந்து கோவிலுக்குள்ள போறதுதான் உனக்குப் பிரச்சினயாத் தெரியுதோ..?”
“முத்து நா அதுக்குக் கேக்கல… நீ என்னப்பா எதெதயோ கோர்த்து மாலயாக்குறே..?”
“பின்னே என்ன சொன்னே… தள்ளி வச்சோங்கிறீங்க, கோவிலுக்குள்ள போக்கூடாதுங்கிறிய… மனுசனா யோசிங்கப்பா. இன்னமும் நம்ம பெருசுக போன பாதயிலயே போவாம… பிற்போக்குத்தனத்த தூக்கிப் போட்டுட்டு முன்னாடிப் பாருங்க”
“சரித்தாம்ப்பா… அதுக்காக… அவங் கட்டியிருக்கது வேற மதத்துக்காரியில்ல… அவ எப்படி நம்ம கோயில்ல…”
“என்ன பண்ணனும்… தடுக்கணுமா…? அப்ப ஒண்ணு செய்யி அவங்கூட அவளும் உள்ள போனா, நீ முன்னால நின்னு மறி… நா உனக்குத் தொணயா நிக்கிறேன்”
“இப்ப அவனுக்காக நாம மோதிக்கிட்டு என்னாகப் போகுது… அவன் வர்றப்ப பாத்துக்கலாம்” என கந்தசாமி சொன்னதும் பாலு பற்றிய பேச்சு பாலையூர்ல செவ்வாய்க்கிழமை நடந்த வள்ளி திருமணம் நாடகத்தின் நாரதர் வள்ளி தர்க்கத்தின் பக்கம் திரும்பி, வண்டிப் பந்தயத்தில் சரவணன் செட்டியாரின் மாடு வென்றதிலும் மேலமடை முத்துவின் மாடு சக்கரம் கழண்டும் ஓடி வந்ததிலும் வந்து நின்றது.
திருமணமாகி நான்கு வருடம் கழித்துத்தான் பாலுச்சாமி பிறந்தான். அவன் பிறக்கும் முன்பே சொத்துப் பிரச்சினையில் அப்பா வழிச் சொந்தங்களுடன் பேச்சுவார்த்தை அற்றுப் போய்விட்டது. அவனுக்கு நாலு வயசிருக்கும்போது வயலுக்குத் தண்ணி பாய்ச்சப் போன அப்பா பாம்பு கடித்து இறந்து போனார். அதன்பின் அவனை வளர்த்துப் படிக்க வைத்தது எல்லாம் அம்மா காந்திதான். தனது கொழுந்தன்கள் தனக்குப் பண்ணிய கொடுமைகளைச் சொல்லிச்சொல்லி வளர்த்ததால் பாலுச்சாமி சித்தப்பன் பெரியப்பனுடன் ஒட்டவேயில்லை, அவர்களை மூர்க்கமாய் வெறுத்தான்.
பனிரெண்டாவது வரை படித்தவன் அதற்கு மேல் படிக்க விரும்பவில்லை, சில்வர் பட்டறையில் சேர்ந்து இரண்டு வருடத்தில் பாலீஷ் ஓட்டும் வேலைக்கு உயர்ந்திருந்தான். சனிக்கிழமை சம்பளம் கொடுப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை சந்தைச் சிலவுக்குப் போக. அம்மாவின் கையில் இருக்கும் மிச்சக் காசு அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்தப் போதுமானதாக இருந்தது. அதுபோக வீட்டில் இருந்த இரண்டு பால்மாடுகளும் வீட்டுச் செலவுக்கு உதவியாக இருந்தன.
காலம் நகர்ந்து போக, பாலு திருமண வயதை எட்டியதும் சுத்துபட்டு சொந்தங்களிடம் சொல்லி வைத்து பெண் பார்த்து திருமணத்தை முடித்து வைத்தாள் காந்தி. அவனது மகிழ்வான திருமண வாழ்க்கை மூன்று மாதம் கூட நீடிக்கவில்லை. திடீரென மனைவியின் இறப்பு அந்தக் குடும்பத்தை நிலை குலைய வைத்தது. ஏதோ ஒரு நோயை மறைத்துக் கட்டி வைத்து விட்டார்கள் என ஊருக்குள் பேச்சு சுற்றியது. பாலுச்சாமிக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, நம்ம தலையில எழுதுனது இதுதான் என நினைத்துக் கொண்டான். மறுதிருமணம் செய்வதில் அவனுக்கு விருப்பமில்லை.
தண்ணி பாய்ச்சுவதில் சித்தப்பனுடன் ஏற்பட்ட சிறு வாய்த்தகராறு அடிதடியில் வந்து நிற்க, ஊர்க்கூட்டத்தில் செல்வாக்கில் உயர்ந்த சித்தப்பனுக்கு ஊரே ஆதரவாய் நிற்க, நாச்சிமுத்துவின் அப்பா பரமசிவம் உள்ளிட்ட சிலர் மட்டுமே பாலுவின் குடும்பத்துக்கு ஆதரவாய் பேசினார்கள். கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் அடிதடியில் முடிந்தபோது பாலுச்சாமி இந்த ஊரும் உறவும் வேண்டாமென முடிவு செய்தான்.
தனது வீட்டில் நின்ற ஆடு, மாடு, கோழிகளை நீங்களே பாத்துக்கங்க என்று சொல்லி, வீட்டுச் சாவியையும் வயலோட பத்திரங்களையும் பரமசிவத்திடம் கொடுத்து “அண்ணே… எங்களுக்குன்னு இங்க உங்களத்தவர வேற யாருமில்ல… பாலுக்கு இங்க இருக்கப் பிடிக்கல, இந்த ஊரே வேணான்னு நிக்கிறான். நாங்க போறோம்… அவனோட கோபமும் வலியும் கொறஞ்சதுக்கு அப்பறம் வர்றோம். அது வரக்கிம் எல்லாம் உங்ககிட்ட இருக்கட்டும்” என்றாள் கமலா கண்ணீரோடு. பரமசிவம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பாலு பிடித்தபிடியில் நிற்க, கமலா அவன் கூடவே நின்றாள்.
“மாமா… ஒரு ரத்தத்துக்குள்ள அடிச்சிக்கிட்டு கூட்டத்துல வந்து நிக்கிறோம். இங்க இருக்க எல்லாரும் யாரு மாமா… அம்புட்டுப் பேரும் மாமமச்சான், அண்ணந்தம்பி, சித்தப்பன் பெரியப்பன்னு ஒரே சாதிக்காரதானே ஆனா கூட்டத்துல என்ன நடந்துச்சு… முக்காவாசிப் பேரு நியாயத்துக்குன்னு நிக்காம, எங்கிட்டு செல்வமிருக்கோ அங்கிட்டுத்தானே நின்னாக. நானும் ஒருநா பணக்காரனா இந்த ஊருக்கு வருவே மாமா. அதுவரக்கிம் இந்த மண்ண மிதிக்கமாட்டோம். போட்டது போட்டபடிதான் போட்டுட்டுப் போறோம். எங்க வயலெல்லாம் பொதி கட்டி நிக்கிது, காயப் போட்டுறாம நீங்க பாத்து அறுத்துக்கங்க” என்றான்.
“அப்படியெல்லாம் சொல்லாத மாப்ள… இது உன்னோட ஊரு, இங்க இருக்கக் கூடாதுன்னு உன்னய எவஞ்சொல்ல முடியும்”
“நானேதான் சொல்றேன்… காசு பணமில்லாம உறவுக கூட வாழ முடியாது மாமா. எங்கள விட்டிருங்க. எங்கயாவது கண்காணாமப் போயிடுறோம்”
“சொன்னாக் கேக்கமாட்டே… நாளக்கி சாதி சனம், பக்கத்து ஊரெல்லாம்… ஏன் உங்கம்மா வீட்டுச் சொந்தமெல்லாம் ஊரவிட்டு அடிச்சி விரட்டிட்டானுங்கன்னு ஊரத்தான் கேவலமாப் பேசும்”
“ஊரு கேவலமாப் பேசுனாலும் சரி, இல்ல எதுத்து நிக்க வக்கில்லாம பொட்டமாரி ஆத்தாளக் கூட்டிக்கிட்டுப் பொயிட்டான்னு யாரு பேசுனாலும் சரி… எனக்குத் தேவயில்ல மாமா… இந்த ஊரும் உறவும். எங்க மாமா பாவம், என்னாலயே முடியாதப்போ அவரு வந்து இந்தக் கூட்டத்துக்கிட்ட நீந்திப் போறதெல்லாம் முடியாத காரியம். அவருக்கிட்டயும் நீங்க பாத்துப்பீங்கன்னு சொல்லிடுறேன்”
“முடிவா இருக்கே… ம்… வயலெல்லாம் வேண்டாம் மாப்ள.. உங்க சித்தப்பன் பெரியப்பன் எதாவது சொல்லுவாங்க மாப்ள” என்றவரிடம், “சொத்து எங்கப்பன் பேர்ல இருக்கு, எவனும் உங்கிட்ட கேக்க முடியாது. நீங்க பாத்துக்கங்க… எங்களுக்கு நீங்களும் எங்க பக்கம் நிக்க இன்னும் சிலருந்தான் மனுசளா, தெய்வமாத் தெரியிறீங்க… உங்கிட்டத்தான் கொடுக்கணுமின்னு தோணுச்சு… கொடுத்துட்டோம். பத்திரமாப் பாத்துப்பியன்னு நம்பிக்கை இருக்கு” என்றான்.
அன்று கிளம்பிப் போனவர்கள் எங்கே போனார்கள்… என்ன ஆனார்கள்… என்று யாருக்குமே தெரியவில்லை.
நாலைந்து மாதங்களுக்குப் பின் நாச்சிமுத்து வீட்டுக்குப் போன் வந்தது. அப்போதுதான் பாலுச்சாமி கர்நாடகாவில் இருப்பது தெரியும். அதன் பின் நாச்சிமுத்துவிடம் எப்பவாவது தபால் அல்லது போனில் தொடர்பில் இருந்தான். அதேபோல் திண்ணப்பச் செட்டியார் ரைஸ்மில் ஓனரின் மகனும் பாலுச்சாமியின் நெருங்கிய நண்பனுமான மணியுடனும் தொடர்பில் இருந்தான். நாச்சிமுத்துவிடம் ஊர்க்காரியமோ, நிலவரமோ குறித்துப் பேசாத பாலு, எல்லா விபரங்களையும் மணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் செய்தான். மணிக்கும் அவனுக்குமிடையே எந்த ஒளிவு மறைவும் எப்போதும் இருந்ததில்லை. ஊரைவிட்டுப் போனபோது கூட ரெண்டு மூணு நாள் மணி வீட்டில் இருந்துவிட்டு திண்ணப்பச் செட்டியாரின் ஏற்பாட்டில்தான் சிமோகாவில் இருக்கும் சுப்பையாச் செட்டியாரின் தோட்டத்து கணக்கப்பிள்ளை வேலைக்கு அம்மாவுடன் கிளம்பிப்போனான்.
ஆரம்பத்தில் அவன் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்று நினைத்த ஊரார்கள், வருடங்கள் கடக்க அவன் வரமாட்டான் என்ற முடிவுக்கு வந்து அவனை மறக்க ஆரம்பித்தார்கள். நாச்சிமுத்துவின் அப்பாவின் மரணத்துக்குப் பின் பாலுவோட வீடும் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து, காலப்போக்கில் இடித்து விழுந்தது. இப்போது அந்த இடம் வீடிருந்த சுவடில்லாமல் மாறிப் போயிருந்தது.
இதற்கிடையில் பாலுச்சாமியிடமே தோட்டத்தை லீசுக்குக் கொடுத்துவிட்டார் சுப்பையாச் செட்டியார். தனக்குத் தெரிந்த காண்ட்ராக்டர் வீட்டுக்குப் போக, வர இருந்ததில் நர்ஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரின் மகள் மேரியுடன் பழக்கமாகி அது திருமணத்தில் முடிந்திருந்தது. இந்த விபரம் மணி மூலமாக நாச்சிமுத்துக்குத் தெரிய வந்ததும் ‘உனக்கு கல்யாணம் பண்ணிக்கணுமின்னு தோணுனா இங்கிட்டு வந்து நம்ம பொண்ணுகள்ல ஒருத்தியைக் கட்டியிருக்கலாமே. எதுக்கு வேற மதத்துக்காரி… ஊரு என்ன சொல்லும்..? இனி நீ இங்க வரமுடியுமா..?’ எனக் கோபமாய் நாச்சிமுத்து போனில் பேச, அதற்குப் பதிலாய் ‘ஆமாம்… எனக்கான வாழ்க்கையை நான்தான் முடிவெடுக்கணும். ஊருமில்லை உறவுமில்லை… அப்பறமென்ன சாதி சனமுன்னு. கல்யாணமே வேணான்னு பிடிவாதமா இருந்த எனக்கு ஏனோ மேரியப் பிடிச்சிப்போச்சு… விபரம் சொல்லி கட்டிக்கலாமான்னு கேட்டேன்… சரின்னா கட்டிக்கிட்டேன். அந்த ஊரே வேணாமின்னு வந்தவனுக்கு ஊர்க்கட்டுப்பாடு மயிருக்குச் சமம்டா’ எனக் கோபமாய் சொன்ன பாலு, அதன்பின் எழுதிய கடிதத்தில், மேரியுடன் தானிருக்கும் போட்டோவையும் வைத்து அனுப்பியிருந்தான்.

அதை வைத்தி, கந்தசாமி, சுப்பிணியிடம் காட்டியபோது சிவப்பாய் அழகாய் தெரிந்த பாலுவின் மனைவியைப் பார்த்ததும் ‘அழகான புள்ளயத்தான் கட்டியிருக்கான். இம்புட்டு அழகா இங்க எவ இருக்கா… அதுவும் ரெண்டாந்தாரம் இம்புட்டு லெட்சணமா அவனுக்குக் கெடச்சிருக்கா, நமக்கு வாச்சிருக்கு வாங்கருவாப் பல்லோட’ என்ற எண்ணம் வயிற்றெரிச்சலாய் ஆக, சுப்புணி தனது வீட்டில் பற்ற வைக்க, அந்த நெருப்பு ஊரெங்கும் பற்றி, நாச்சிமுத்துவிடம் விசாரணை என்ற நிலையில் வந்து நின்றது.
போட்டோவை வாங்கிப் பார்த்து ஊர்ஜிதம் பண்ணிய பெருசுகள், ஊர் கூட்டம் போட்டு ‘அவன் இந்த ஊருக்குள் வரக்கூடாது. அப்படியே வந்தாலும் யாரும் பேச்சுவார்த்த வச்சிக்கக் கூடாது’ என்ற எழுதாத சட்டத்தைப் போட்டார்கள். அந்த விபரத்தை நாச்சிமுத்து விரிவாக தபாலில் எழுதியதற்குப் பதிலாய், ‘எனக்கும் அந்த ஊருக்கும் என்ன இருக்கு. நானெதுக்கு அங்க வரப்போறேன்… உங்க சட்டதிட்டத்தை இன்னமும் பாதுகாப்பா வச்சிக்கங்க’ என நக்கலாய் பதில் எழுதியிருந்தான்.
சொன்னபடி இதுநாள் வரை இருந்த பாலு, இப்போது திடீரென ஊருக்கு வருகிறேன் என்று போனில் சொல்லியிருப்பது நாச்சிமுத்து உள்ளிட்ட எல்லாருக்குமே ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும்தான் இருந்தது. ‘எதுக்கு இப்ப இங்க வர்றான்..?’ என்பதுதான் அவர்கள் மனசுக்குள் குடைந்த கேள்வியாய் இருந்தது.
பாலுச்சாமி வர்றார் என்ற செய்தி ஊருக்குள் மெல்ல மெல்லப் பரவ இன்றைய தலைமுறைக்கெல்லாம் அவர் யாரென்றே தெரியவில்லை. ‘இந்த இடத்துல ஒரு வீடு இருந்துச்சு. இந்தப் பாலு இருக்காரே இவுக தாத்தாவுக்கு அப்பா பர்மாவுல இருந்தாரு. அதனால இந்த வீட்டை எல்லாரும் பர்மாக்கார வீடுன்னு சொல்வாங்க. நல்லா இருந்த குடும்பம், நாசமாப் போச்சு… இவரு மட்டும் வேற ஊருக்குப் போயி அங்கிட்டே இருந்துட்டாரு’ என்று மூத்தோர்கள் சொல்ல, புரிந்தது போல் தலையாட்டிக் கேட்டுக் கொண்டார்கள்.
‘பாலு இப்போ எப்புடி இருப்பான்…?’
‘முன் வழுக்க விழுந்திருக்குமா..?’
‘தொப்பயோட இருப்பானா..?’
‘அப்பமாரி உரிமயோட பேசுவானா..?’
‘பீக்குண்டின்னு சொன்னா கோபப்படுவானா..?’
‘முத்துக்காளயோட புளியமரத்துல புளியங்கா உழுப்புறேன்னு ஊட்டிவுப்பர விழுந்ததும் கொட்டாங்கெழங்கு பறிச்சி உப்புப் போட்டு அவிச்சித் தின்னதும் அவனுக்கு ஞாபகம் இருக்குமா..?’
‘புவனேஸ்வரி எனக்குத்தான்னு எல்லாரும் அவ பின்னால திரிஞ்ச நாளெல்லாம் நெனவுல வச்சிருப்பானா..?’ என மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
தங்களின் பால்ய கால நண்பனை பலகாலம் கழிச்சி சந்திக்கப் போறோம்கிற மகிழ்ச்சி அவர்கள் மனதில் இருந்தது.
எல்லாரும் கூடும்போது பழசை மனதில் அசைபோட்டு சிரித்துக் கொண்டார்கள். நாச்சிமுத்து மட்டும் ஏனோ மகிழ்வாக இருப்பது போல் தெரியவில்லை. அவரின் மனசுக்குள் ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருப்பது போல் மற்றவர்களுக்குத் தெரிந்தது. தான் எப்பவும் போல் இருப்பதாக காட்டிக் கொள்ள நாச்சிமுத்து சிரமப்படுவதையும் உணர்ந்தார்கள். யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
பாலுச்சாமி வருவதாகச் சொல்லியிருந்த நாளில் நாச்சிமுத்து, கந்தசாமி, பெரியகருப்பன், சுப்புணி, கோவிந்தன், வைத்தி உள்ளிட்ட எல்லாரும் ஆவலாய் காத்திருந்த வேளையில் கியா கார்னிவெல் காரில் மனைவி மேரியுடன் வந்து இறங்கினார் பாலுச்சாமி.
நாப்பத்தைந்து வருடத்துக்கு முன்பு பார்த்த பாலுச்சாமியை அப்படியே பார்ப்பது போல் இருந்தது. தலைமுடியும் தாடியும் மட்டுமே வெள்ளையாக மாறியிருந்தது. சற்றே வெளுத்திருந்தார், அவ்வளவே. மேரி வயாதானாலும் அன்று போட்டோவில் பார்த்த அதே அழகோடு இருந்தார், நர்ஸாக இருந்தவர் என்பதால் அவரின் நடை, உடையில் ஒரு நேர்த்தியும் உதட்டில் எப்போதும் மாறாத புன்னகையும் பூத்திருந்தது.
பாலுச்சாமி ஒவ்வொருவராய் பார்த்து யோசித்து பேரைச் சொல்லி, கட்டிக் கொண்டு மனைவிக்கும் அறிமுகப்படுத்த அவர் சிரித்துக் கும்பிட்டார். ஊரே அவர்களையும் அவர்கள் வந்த காரையும் ஆச்சர்யமாகப் பார்த்தது.
தனது வீடு இருந்த இடத்துக்குப் போனவர் அந்த இடம் கிடப்பதைப் பார்த்து நாச்சிமுத்திடம் “மாமாவுக்குப் பின்னால நீங்கள்லாம் இதச் சீண்டல போல. சரித்தான் நானே வேணான்னு விட்டுட்டுப் போனதுதானே… இந்த இடம் என்னய வாழ வைக்கலயில்ல, நீங்க வாழ்ந்து கெட்ட வீடுன்னு நெனச்சிருப்பிய” எனச் சொல்லி விரக்தியாய் சிரித்தபோது, “எடுத்துச் செலுத்த முடியலப்பான்னு உனக்கு விபரம் சொன்னேனுல்ல… மறந்துட்டியா..?” என்ற நாச்சிமுத்து முகத்தில் ஏனோ சிரிப்புமில்லை, வருத்தமுமில்லை.
“ஆமாமா… சொன்னே, இப்புடி கருவ மண்ட விட்டிருக்க மாட்டேன்னு நெனச்சேன்” பாலு எதார்த்தமாய்ச் சொன்னபோது நாச்சிமுத்து ஏதோ நினைப்பில் இருந்தார். அவரை ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருப்பதை பாலுவும் உணர்ந்தார். எல்லார் முன்னிலையிலும் ‘ஏன்டா இப்படியிருக்கே… உனக்கு என்ன பிரச்சினை’ன்னு கேட்க வேண்டாமென நினைத்தார். வீட்டிடத்தில் நின்றபோது கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
சௌந்தரத்தா கோவிலுக்குப் போய்விட்டு வரலாம் என அவர் சொன்னதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
“என்னப்பா… கோவில் பூட்டுத் திறப்பாத்தானே இருக்கு. எதுவும் பிரச்சினையில சாமிய உள்ள வச்சிப் பூட்டிட்டியளா..? தள்ளி வைக்கிறதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே. ஆமா இப்பவும் எந்தக் குடும்பமாச்சும் ஊரவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கா…?” எனக் கேட்டவர், “ஆமால்ல… மறந்தே பொயிட்டேன். இந்தா இவங்களக் கட்டிக்கிட்டேன்னு நாப்பது வருசத்துக்கு முன்னால எங்களை ஒதுக்கி வச்சவங்கதானே… ஆமா அதுக்கு எதுவும் அபராதம் கட்டணுமா..? கட்டிட்டு நாம சேந்துக்கலாம்ப்பா” என்று சிரிக்க, யாரும் பதில் சொல்லவில்லை.
நாச்சிமுத்து “டேய் யாராச்சும் ஓடிப்போய் வேளாரை சௌந்தரத்தா கோயிலுக்கு வரச்சொல்லுங்க” எனச் சொல்லிவிட்டு, “வாங்க போவோம்” எனச் சொல்லி முன்னே நடக்க, பாலுவும் மேரியும் அவர் பின்னே நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னே ஊரே நடந்தது.
வயல்பாதையில் போனபோது விவசாயமற்ற வயல்கள் ஊடு வரப்புகள் காணாமல் போய் மூழியாக கிடந்தன.
“ஆமா இப்ப இங்க விவசாயமும் இல்லாமப் போச்சுல்ல, ஊரு அன்னக்கி பாத்தமாரியே இருக்கு… எந்த விருத்தியும் இல்ல… ஊரச்சுத்தி கருவ மண்டிக் கிடக்கு. நல்லவேளை பசங்க படிச்சி வெளியூருகளுக்குப் பொயிட்டானுங்க இந்தப் பொட்டக்காட்டுல கிடக்காம. ஆமா நீங்கள்லாம் இன்னமும் இங்க கிடந்து இந்த வீணாப்போன நிலங்களக் கட்டிக்கிட்டு கிடந்து என்னத்தச் சாதிக்கப் போறீங்க..? என்ற பாலுவின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
“இன்னமும் பிறந்த ஊருலதான் கிடப்பேன்னு கிடந்து சாகாதீங்க. வெளியில போன உங்க தலமொறகளுக்கிட்டயாச்சும் இந்த வாழ்க்க வேணுமின்னு நெனக்காதேன்னு சொல்லுங்க”
“இந்த வாழ்க்கயில இருந்த, இருக்க மகிழ்ச்சி வேற எதுலயும் கிடைக்காது மாமு” என்றார் பெரியகருப்பன்.
பாலு அவரைப் பார்க்க, “அதுதான் உண்மை… என்னதான் வெளியூரு, வெளிநாட்டு வாழ்க்கயின்னாலும் இந்த மண்ண மிதிக்கயில மனசுக்குள்ள பூக்குற சந்தோசம், அதுல நடக்கும் போது பொங்குற கண்ணீரு… இப்ப உங்க வீட்டு இடத்தப் பார்த்ததும் உங்களுக்குள்ள உடஞ்சி பொங்குச்சு பாருங்க… அது, இடம்பெயர்ந்து வாழ்ற வாழ்க்கயில கெடய்க்குங்கிறீங்க..?”
இப்போது பாலுச்சாமியிடம் பதில் இல்லை.
கோவிலுக்குப் போனபோது வேளார் வந்து கதவைத் திறந்து கூட்டி வைத்திருந்தார். பாலு உள்ளே நுழைந்தார்… மேரி வாசலில் நிற்க, திரும்பிப் பார்த்து “உள்ள வா… எல்லாத் தெய்வமும் ஒண்ணுதான்… அதுகளுக்கு சாதி, மதமெல்லாம் தெரியாது. பிரிச்சி வச்சிருக்கிறது மனுசங்களான நம்மதான்” என அவளின் கை பிடித்து இழுத்தார்.
வேத்து மதத்துக்காரி எப்படி நம்ம கோவிலுக்குள்ள எனச் சொன்ன கந்தசாமி, “கீழ பாத்துப் போங்க… படியில தட்டிக்காம… பாத்துக் கால் வையிங்க” என்றார். நாச்சிமுத்துக்கு உதட்டில் லேசான புன்னகை அரும்பியதைப் பார்த்த கந்தசாமி, பின்னால் வந்தவர்களிடம் “தள்ளாம உள்ள வாங்க… எப்பவும் நாம பாத்த சௌந்தரத்தாதான் உள்ள இருக்கா. வேளாரு விபூதிதான் கொடுப்பாரு… விநியோகமெல்லாம் பண்ண மாட்டாரு” என்றபடி நாச்சிமுத்துவின் பார்வையில் இருந்து தப்பிக் கொண்டார்.
வேளார் தீபாரதனை காட்ட, பாலுச்சாமி கண்மூடி நீண்ட நேரம் கும்பிட்டார்.
நாச்சிமுத்து கண்மூடி கும்பிட்ட போது, ‘பத்திரத்தைத் திருப்பிக் கேட்டுறக்கூடாது’ என வேண்டிக் கொண்டார். கூடவே அப்படி நடந்தா சிதறுகாய் உடைப்பதாகவும் பேரம் பேசினார்.
தீபத்தைத் தொட்டுக் கும்பிட்ட பாலு, பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்து மனைவியிடம் கொடுத்து தட்டில் வைக்கச் சொன்னார். உண்டியில் சில ஐநூறு ரூபாய் நோட்டுக்களைப் போட்டார்.

மற்ற கோவிலுக்கோ, நாச்சிமுத்து உள்ளிட்ட யாருடைய வீட்டுக்குமோ போகாமல் வேப்பமரத்தடியில் நின்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
“நான் பணக்காரனா இந்த மண்ண மிதிப்பேன்னு சௌந்தரத்தா வாசல்ல நின்னு சொல்லிட்டுப் போனேன். இப்ப அப்படித்தான் வந்திருக்கேன்னு அவகிட்ட காட்டிட்டேன்… இதுக்குத்தான் முக்கியமா இங்க வந்ததே” என்று சொல்லி பழசை கொஞ்சம் கிளறினார்.
“எல்லாரையும் பார்த்ததில், பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி… எனக்குத் தெரிந்தவங்களைவிட தெரியாதவங்கதான் அதிகமா இருக்கீங்க…” எனச் சொல்லி மேரியின் ஹேண்ட் பேக்கை வாங்கி அதிலிருந்து பணம் எடுத்து எவ்வளவு எனப் பார்க்காமல் சின்னப்பிள்ளைகளிடம் கொடுத்தார்.
“அப்ப எல்லாரும் இருங்க… கிளம்புறேன். காலம் அனுமதிச்சா மறுபடியும் சந்திப்போம்” எனச் சொல்லி காரை நோக்கி நடந்தவர், திரும்பி “மச்சான்” என நாச்சிமுத்துவைக் கூப்பிட்டார்.
‘போச்சு… வேண்டுனதெல்லாம் போச்சு. இடப்பத்திரத்தைத் தான்னு சொல்லப் போறான். மனுசனாயிருந்தா என்ன சாமியா இருந்தா என்ன… செதறுகாய விட ஐநூறும் ஆயிரமும் பெருசுதானே.’ என நினைத்துக் கொண்டே அவரை நெருங்கியவர் நாக்கால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டார்.
அவர் தோளில் கை போட்டு, “நான் மணி வீட்டுல ஒரு வாரம் இருப்பேன். நீ நாளக்கிப் பத்திரத்தக் கொண்டுக்கிட்டு வா மச்சான்” என்றதும், நாச்சிமுத்துக்கு வேர்க்க ஆரம்பித்தது, முகத்தில் சுரத்தில்லை, நாக்கு வறண்டது.
“ஊருக்குப் போறதுக்குள்ள எல்லாத்தையும் உம்பேர்ல மாத்தித் தந்துடுறேன். அதுக்கான ஏற்பாட்டோடதான் வந்திருக்கேன். எதுக்கு நீ ஒரு மாரியிருக்கே… உனக்கு எதுனாலும் எங்கிட்டச் சொல்லு. நானிருக்கேன். இங்கேரு இந்த இடத்தயெல்லாம் நான் தானமாவோ இனாமாவோ தரல. இம்புட்டு வருசமாக் கட்டிக் காத்தது உங்க குடும்பம். இங்க வராதா எனக்கு எதுக்கு இதெல்லாம். இன்னும் எம்புட்டு நாள் இருப்பேனோ தெரியல. சௌந்தரத்தாக்கிட்ட ஜெயிச்சிட்டேன்னு சொல்ல வந்தேங்கிறதெல்லாம் சும்மா. அன்னக்கி நெலமக்கி ஊரு எனக்குப் பின்னால நிக்கல. இன்னக்கி நெலமக்கி எம்பின்னால நிறையப் பேரு இருக்காங்க பாரு… நீங்கள்லாம் எம்மேல வச்சிருக்க இந்த அன்பு போதும். ஜெயிச்சிட்டேன்னு வெத்துப் பந்தா காட்டி என்னத்துக்காகப் போவுது. இந்தச் சொத்தெல்லாம் உனக்குத்தான் கொடுக்கணுமின்னு நெனச்சேன்… அம்மாவோட எண்ணமும் அதுதான்… சாவும் போதுகூட நீ நம்ம ஊரு மண்ண ஒருவாட்டி மிதிச்சிட்டு வரணும். கெடக்க சொத்த பரமசிவண்ணங் குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்திருன்னு சொன்னுச்சு. அதுக்கான நேரம் இப்பத்தான் வந்திருக்கு” எனப் பாலுச்சாமி அவரின் தோள்மீது கைபோட்டு பேசிக் கொண்டே போக, தலையாரியாக இருந்த தான் இனிமேத்தான் பாலு வரப்போறானாக்கும் என வயலை எல்லாம் தன் பேருக்கு மாற்றிவிட்டதை எப்படிச் சொல்வேனெனத் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தார் நாச்சிமுத்து.
00

பரிவை சே.குமார்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.

