– மணவை கார்னிகன்
அன்றைக்கு நடை திறந்து முக்கால் மணி நேரம் கழித்து தான் கூட்டம் ஏற துவங்கி இருந்தது. எல்லோருடைய முகத்திலும் ஏதோ ஒரு தேவையும் ஏதோ ஒரு நிம்மதியும் அல்லது வேண்டுதலை நிறைவேற்ற,தேடித்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். அம்மனுக்கு பட்டாடை சாட்டி சாம்பிராணி வாசத்தை வீதி எங்கும் பரவச் செய்தார் ஐயர். நீல நிற சீருடை அணிந்த காவலொருவர் விறுவிறுவென அம்மனை தரிசிக்க வந்தார். சிறப்பு தரிசனத்திற்கும் பொது தரிசனத்திற்கும் நடுவே உண்டியலின் அருகே நின்று நேருக்கு நேர் அம்மனை தரிசிக்க, வேகமாக மூன்று முறை கையை தட்டினார். எல்லோரும் அவரை திரும்பிப் பார்த்தார்கள் மனிதர்கள் பார்ப்பதற்காக அவர் கைதட்டவில்லை இவருடைய வேண்டுதலை அம்மன் கேட்க வேண்டும் என்பதற்காக கைதட்டி அம்மனை கூப்பிட்டார் அம்மனும் இவருடைய வேண்டுதலுக்கு சிரித்த முகத்துடன் செவி சாயித்தாள்.
அடுத்ததாக உண்டியலுக்கு அருகே சகிலா வந்து நின்றாள். தீபார்த்தனை தட்டை கையில் எடுத்து அம்மனுக்கு நேராக சில நொடிகள் நிறுத்தி வலது பக்கமாக மூன்று முறையும் இடது பக்கமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு கீழே வைத்தார் ஐயர். மாம்பழக் கலர் பட்டாடை, நெற்றியில் பழைய ஒரு ரூபாய் காயின் அளவிற்கு தாழம்பூ குங்குமம், மூக்கில் வைரமுகுத்தி, தலையில் கிரீடமென எல்லாவற்றையும் பார்த்த சகிலா அம்மனை தரிசித்து விட்டு விறுவிறுவென வீட்டிற்கு புறப்பட்டாள்.
“என்னடி இன்னைக்கு உங்க ஆத்தா என்ன சேலை கட்டிருக்கா? பூக்காரி கேட்க”.
“மாம்பழக் கலர் சேலைக்கோவ்”
“வெள்ளி செவ்வாய்ல சிவப்பு சேலை கட்டுவா, மத்தெ நாளு பூஜைக்கேற்ப கட்டுவா, இன்னைக்கு ஏதோ பெரிய இடத்து பூசெ போல!, வைர மூக்குத்தி யெல்லாம் போட்டுருக்கா க்கா!!”
“அப்ப இன்னைக்கு ஆத்தா முகம் ஜொலிக்கும்னு சொல்லு”
“ஆமக்கோ”
“சரி சரி சீக்கிரம் போயிட்டு வா இன்னைக்கு திருச்சில ஏதோ மா நாடாம் கூட்டம் சாயந்தரம் அள்ளி பிச்சிக்கும் “. என்று பூக்காரி சொல்ல செவியில் வாங்கிக் கொண்டே வேக வேகமாக வீட்டிற்கு நடந்தால் சகிலா
வீடு என்றதும் நீங்கள் நினைப்பது போல ஓட்டு வீடோ ஆஸ்பெராசிட்டு வீடோ அல்லது மச்சு வீடோ கிடையாது தென்ன ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறிய குடிசை அந்த குடிசைக்கும் மாதம் ஐநூறு வாடகை.
வீட்டிற்குள் சின்னத்தாயி கிழவி கூனிக்குறுகி படுத்து கிடந்தாள்.அந்த சொர்க்க குடிலுக்குள் இரண்டு டம்ளர், ஒரு சொம்பு, ஒரு குடம்,இரண்டு தட்டு. ஒரு பழைய தகர பெட்டி, ஒரு கொடிக்கயிற்றில் இவர்களின் துணிகள்,
அம்மன் என்ன நிற பட்டாடை உடுத்தியிருக்கிறாளோ அதே நிறத்தில் பட்டாடையை உடுத்திக் கொண்டாள் மற்ற கவரிங் ஆபரணங்களையும் அவள்,அவளைப் போலவே மாட்டிக் கொண்டாள்.
“ஏ கிழவி அப்புறமா சுரேந்தர் கிட்ட இட்லி வாங்கி கொடுத்துடுறேன் சாப்ட்டுக்க,நைட்டு கோயில் சாப்பாடு வாங்கியாரேன் சரியா.நான் போயிட்டு வரேன்”என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சகிலா
சகிலாவுக்கும் அந்த கிழவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏன் இவளுக்கு சகிலா என்கிற பெயர்கூட சம்பந்தமில்லை மூன்று வருடத்திற்கு முன்பு இவள் பெயர் சங்கர்
அந்த வருடம் தேர்த்திருவிழாவிற்கு அக்கினி சட்டி எடுப்பதற்காக இடைபாலினத்தவர்கள் மும்பையில் இருந்து வந்திருந்தார்கள். அவர்கள் மீண்டும் மும்பைக்கு கிளம்பும் பொழுது சங்கரையும் கூட்டிச் சென்றார்கள்.
கிளம்பி வந்த சகிலா;கோவில் பின்புற வாசலில் சுமித்ரா தனது தலையை ஆட்டி ஆட்டி அனைத்து பக்தர்களையும் வரவழைப்பதை பார்த்து ரசித்தாள். அவ்வப்போது தனது கையை தூக்கிஅனைத்து பக்தர்களையும் ஆசீர்வதிப்பது போல பாவனையும் காட்டினாள் சுமித்ரா.அவளுடைய முன் கால்கள் இரண்டும் சங்கிலியால் இணைக்கப்பட்டு இருந்தது அவளது பின் வலது காலில் ஒரு சங்கிலி பக்கத்தில் இருக்கின்ற போஸ்ட் மரத்தில் இணைக்கப்பட்டிருந்தது.
அவள் பக்கத்தில் நின்று பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் சிலரோ அவளுக்கு சில்லறை காசுகள் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள் அவள் ஆடும் ஆட்டம் அங்கு வந்தவர்களை வியக்கச் செய்தது.தமிழ் தெரியாத மலையாள சுமித்ராவிடம் பாகன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான்.அவள் அத்துமீறும் போதெல்லாம் அந்த பாகன் நங்கூரம் போல வைத்திருக்கும் குச்சியை வைத்து இழுப்பான் அவள் அப்போது பீறிட்டு அழுவாள்.சத்தமிடுவாள்.
சகிலா தன்னை ஒரு அம்மனாகவே நினைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வந்தவள் சுமித்திராவிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டுகோவிலுக்குள் நுழைந்து மீண்டும் அம்மனை பார்த்து “இதோ உன்னைப் போலவே நானும் ” என்று புன்னகைத்து விட்டு அங்கிருந்து கோவிலின் முன் வாசலுக்கு போனாள்.மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெரிய தொட்டிலில் உப்பு குவியல்,பக்தர்கள் கொண்டு வரும் அர்ச்சனை தட்டில் உப்பை மட்டும் எடுத்து இதில் கொட்டி விடுவார்கள் அதன் பக்கத்தில் ஷகிலா நின்று கொண்டாள்.
இடுப்பில் சுருக்கு பையை போல ஒரு பையில் திருநீர் வைத்திருந்தாள்.கைதட்டி பக்தர்களை அழைத்து அவர்கள் தலைமீது கை வைத்து “ஆத்தா நானிருக்கேன் இனி உனக்கு எந்த குறையும் வராது டி போயிட்டு வா னு ஆசீர்வதிப்பாள் ” பக்தர்களில் சிலர் அவள் பக்கத்தில் நின்று வணங்கி அவள் தரும் திருநீரை வலது கை நீட்டி இடது கை தாங்கி பெற்றுக் கொள்வார்கள்.பிறகு அவளுக்கு அஞ்சோ பத்தோ தட்சனையாக தருவார்கள்.
சென்றாண்டு தேர் திருவிழாவிற்கு மும்பையில் இருந்து வந்த இடைபாலினத்தவர்களில் ஒருவராக சங்கர் சகிலாவாக வந்து இறங்கினான்.அவன் முகத்தில் அரும்பு மீசையும் குறுந்தாடியும் இல்லை அதற்கு பதிலாக கூந்தல் இருந்தது அவன் இங்கே இருந்தபோது மாநிறமாக இருந்தான் இப்போது முழுவதும் தாமரை நிறத்திற்கு மாறி இருந்தான்.
அவன் நடையிலும் நளினத்திலும் எந்த மாற்றமும் இல்லை உடல் மட்டும் கொஞ்சம் மெலிந்து இருந்தது அவன் நெஞ்சு கூட்டில் மார்பகங்கள் வளர துவங்கி இருந்தன.அவனது வலது கையில் ஆறாவது விரலை அறுவை சிகிச்சையில் அகற்றி இருக்கிறான்.விரல் நகங்களில் வண்ண சாயம் பூசி வளர்த்திருக்கிறான்.ஐ ப்ரோ பிளக் பண்ணி இருக்கிறான்.பான்பராக் போடும் பழக்கத்தையும் வைத்திருக்கிறான் இப்படி ஒவ்வொன்றையும் மாற்றி சங்கர் தன்னை சகிலாவாக இந்த சமயபுரத்திற்கு அறிமுகமானான்.
இவன் மும்பைக்கு சென்ற பிறகு கொஞ்ச நாள் கழித்து இவளுடைய குடும்பங்கள் இந்த ஊரை விட்டு சொந்த கிராமத்திற்கு சென்று விட்டது என்பதை சுரேந்தர் சொல்லி தெரிந்துகொண்டாள்.
“ஹலோ, சுரேந்திரு எங்க இருக்க? இந்த கிழவிக்கு நாலு இட்லி வாங்கி கொடுத்துட்டு வந்துரு”
“நான் இன்னும் சாப்பிட போகல போகும்போது வாங்கி தருகிறேன் இட்லி மட்டும் போதுமா”
“போதும் போதும் கிழவிக்கு உடம்பு முடியல படுத்த படுக்கையா கிடக்குது,நீ வேண அரை நாள் லீவு கேளு சாயந்திரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துருவோம்”
“லீவா வாய்ப்பே இல்ல இன்னிக்கி திருச்சியில.ஏதோ மாநாடாமா ஓனரு, ஓனர் பொண்டாட்டின்னு குடும்பமே கடையில தான் உட்கார்ந்திருக்கு இந்த டயத்துல நான் லீவு கேட்டேன் அவ்வளவுதான் “
கோயிலை சுற்றி எழுபது சதவிதம் ஃபேன்சி கடைகள் தான் அதில் ஒன்றில் இவன் வேலை பார்க்கிறான்.
“சரி அப்ப நாளைக்கு கூட்டிட்டு போவோம் வைக்கட்டுமா”
“ஊம்”
தகப்பன் காச நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்ததிலிருந்து சுரேந்தருக்கு படிப்பின் மீது கசப்பு ஏற்பட்டது. அதிலிருந்து அவன் பள்ளிக்கூடம் போகாமல் அங்கு இருக்கும் வேலை பார்த்து வந்தான் ஒருநாள் அவனது அப்பா இறந்து போனார் அதன் பிறகு ஒருவரின் சிபாரிசில் இந்த ஊருக்கு வந்தான்.சங்கரின் நட்பு கிடைப்பதற்கு ஒரு மாத காலம் ஆனது. சிறுக சிறுக இருவருமே பேசத் துவங்கிய காலத்தில் தான். சகுந்தலா மற்றும் கருணாகரன் நட்பு ஏற்பட்டது.அவர்கள் இருவரும் காதலித்து வருவதை சங்கர் சொல்லி தான் தெரியும்.
“டேய் சுரேந்தர் எங்கடா ருக்க “
“கெளவிக்கு இட்லி வாங்கி கொடுத்துட்டு வந்துடுருக்கேன்”
“சகுந்தலா வந்துருக்கா டா “
“எப்போ வந்தா “
“இப்பத்தான் “
“சரி வாறேன் வை “
தன் வீட்டு எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்து திருப்பூரில் வசித்த சகுந்தலா கருணாவை பார்க்க வேக வேகமாய் வந்துக் கொண்டிருந்தான் சுரேந்தர்.
தெப்பத்திலிருந்து அகினிச் சட்டியேந்தி வருபவர்களையும் கரும்புத் தொட்டி தூக்கி வரும் தம்பதிகளையும் பார்பதற்கு இருகண்கள் பத்தாது.
கோவில் நெருங்க நெருங்க ஆக்ரோசமாக ஓம்சக்தி பராசக்தி என்று கத்தும் போது, அவர்கள் கண்களில் பீறிட்டு எழும் கண்ணீரில் எத்தன துயரக் காட்சிகளை காண்கிறாளோ தெரியவில்லை. வாசலில் பிச்சையெடுக்கும் யாசகர்களுக்கோ, தீ விபத்தில் கொத்தாக இறந்த குழந்தைகளுக்கோ, சுனாமியில் காணாமல் போனவர்களுக்கோ இவளுடைய ஆயிரம் கண்ணில் ஒருக்கண் பார்த்திருந்தாலே இந்த பிரபஞ்சத்தின் பெருவெளியில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இடத்தில் உயிரோடு இருந்திருப்பார்கள் தானே ஏன் இவள் அப்படி பார்க்கவில்லை இவர்களுடைய பக்தி இவளுக்கு தேவை இல்லையா, இவர்களுடைய வருகை இவளுக்கு தேவையில்லை, இப்படி எல்லா கேள்விகளையும் தனக்குள்ளே கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் ஒரு நாளும் கோவிலுக்குள் சென்று அவளை பார்த்து கேட்டதில்லை அவனுக்கு நன்கு தெரியும் கேட்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று.
வாசலில் நின்று எட்டிப் பார்த்தான் சகிலாவை காணவில்லை செல்போனை எடுத்து சகிலாவிற்கு அழைப்பு விடுத்தான் நான் வெளியே டீக்கடையில் இருக்கிறேன் நீங்கள் வாங்க என்று சொல்லிக்கொண்டே சென்றான்.ஒரு சிகரெட்டை மின்சார கங்கு மூட்டியில் வைத்து பற்ற வைத்தான்.ஒரே இலுப்பில் ரயில் இன்ஜின் புகை போல அண்ணார்ந்து விட்டான். குனிந்த போது, எதிரே கையில் ஒரு குழந்தையுடன் சகுந்தலாவும் சகிலாவும் வந்து கொண்டிருந்தார்கள்.
“எப்படிடா இருக்க நல்லா இருக்கியா”
“ம்நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க,எங்க கருணா “
“அவன் வரலடா மூணு டீய சொல்லு” என்று சகிலாவிடம் இருந்து பதில் வந்தது
அவனுக்கு எதுவும் புரியவில்லை.மீண்டும் கேட்க வேண்டும் போல இருந்தது சகுந்தலாவின் பார்வை நிலம் சரிந்து கிடந்ததை உணர்ந்தான் சண்டையேதும் நடந்திருக்குமோ எண்ணினான்அப்படியே சண்டை போட்டு வந்தாலும் இவள் வீட்டுக்கோ அல்லது அவனுடைய வீட்டுக்கோ போக முடியாது.இப்படி இருந்தும் ஏன் இவள் தனியாக வந்தால் என்கிற கேள்விஅவனுள் ஊடுருவ சிகரெட்டை வேகமாக கீழே போட்டு அணைத்துவிட்டு. கருணாவைப் போல உரித்து வைத்திருந்த மகளை வாங்கிக் கொண்டான்.கடையிலுள்ள எல்லா தின்பண்டங்களையும் காட்டி இது வேண்டுமா அது வேண்டுமா என்று கொஞ்சலாக கேட்டான் இறுதியாக குச்சி மிட்டாயை வாங்கி கையில் கொடுத்தான்.
“கெழவி இவளை பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவா, நான் கொண்டு போய் வீட்டில் விட்டுட்டு வந்துடறேன், நீ கடைக்கு போ, மத்தத சாயந்திரம் பேசிக்குவோம்”என்று சகிலா சுரேந்தரிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்து கப்பு கப்பென்று இழுத்து விட்டு கடைக்கு கிளம்பினான் கடை மாநாடு கும்பளால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது வேர்க்க விறுவிறுக்க வியாபாரம் செய்து இருந்தவர்களுக்கு கண்களில் எதுவும் திருடு போகாமல் இருக்க வேண்டும் என்கின்ற மும்பரம் மட்டுமே இருந்தது.கூட்டத்திற்கு தகுந்த வியாபாரம் இல்லை.
கடைக்கு வந்த சகிலா
“நான் வீட்டுக்கு போறேன் கோயிலில் சோறு வாங்கிட்டேன் கடையில சாப்பிட வேணாம் வந்துரு” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
நேரம் கடந்தது ஏழு மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிய கூட்டம் ஒன்பது மணிக்கு பிறகு ஒன்றும் இல்லாத இடமாக மாறி இருந்தது. தேவுடா தேவுடா ஏழுமல தேவுடா என்று கத்தக்கூடிய செல்போன் பீசியில் ஒன்று காணவில்லை “நீ வித்தியா நீ வித்தியா” ஓனர் எல்லோரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார் இவனிடமும் கேட்கப்பட்டது எல்லோரும் நான் விக்கல என்கிற வார்த்தைகளை உதிர்த்த பிறகு.
“வந்தவன் எவனோ எடுத்து இருப்பானுங்க நாசமா போனவனுங்க எதுக்கு கோவிலுக்கு வரானுங்க கை கால் விளங்காம போகட்டும் ஊரான் வீட்டு சோத்த தின்னு எப்படித்தான் உடம்பு வலப்பானுங்களோ” ஓனரின் மனைவி திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.நடை சாத்த ஆரம்பித்தார்கள் உள்ளே கும்பிட்டது பத்தாது என்பது போல கையை உயர்த்தி கும்பிடும் கீழே விழுந்து கும்பிடும் சிலர் போய்க் கொண்டிருந்தார்கள்.தொலைந்து போன விளையாட்டு செல்போனை மறந்து எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.
“சுரேந்தர் நீ கிளம்பு, நாளைக்கு லீவு கீவு போற்றாத பஜார் போவனும்”
ஓனர் சொல்லும் போது கிழவியின் முகம் சுரேந்தருக்கு வந்து போனது. செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினான் பீடியை பற்ற வைத்து புகை விடும்போது கிழவியின் முகம் மறைந்து போனது.அடுத்து விட்ட புகையில் கருணா முகமும் அதற்கு அடுத்து விட்ட புகையில் சகுந்தலா முகமும் குழந்தையின் முகமும் மாறி மாறி அவன் முன் தோன்றின.
சிந்தனையை மேய விட்டபடி நிசப்த வீதியை கடந்து தெருவிற்குள் சென்று கொண்டிருந்தான். ஓரிரு வீட்டை தவிர மற்ற வீடுகளும் ஆழ்ந்த உறக்கத்தால் இருளப்பிக்கிடந்தது. குடிசைக்குள் தகர காண்டா விளக்கு அணையாதிருக்க, சன்னமாக சகிலாவின் குரல் கேட்டது. வடக்கு பார்த்தபடி குத்துக்காலிட்டு கிளவியும், கிளவியை பார்த்தபடி சகுந்தலாவும், இவர்களுக்கு நடுவே இருகையை தலைக்கு வைத்து கால் ஆட்டியபடி படுத்து கிடந்தால் சகிலா.
சாப்டிங்களா?
இல்லடா ஒக்காரு சேந்து சாப்படனும்
காண்டா விளக்கில் நாடாவை சிறிது ஏத்தி விட்டதும் வெளிச்சம் கூடுதலாய் பரவியது. தொட்டிலை விளக்கி குழந்தையை பார்த்தான் இடது கட்டைவிரலை ச்ர்… ச்ர்… ரென்று சூப்பியது குழந்தையை தன் கூப்பிய விரல்களை கண்ணத்தில் வைத்து முத்தம் கொடுத்தான். தொட்டிலுக்கு அருகிலேயே சம்மணம் போடு அமர்ந்தான். இவனுக்கும் சகுந்தலாவுக்கும் இலையில் சாப்பாடு பறிமாரப்பட்டது. கிளவியும் சகிலாவும் தட்டில் போட்டு சாப்பிட்டார்கள்.
“ஆமா பாப்பா பேரென்ன?”
“ரூபஶ்ரீ “
“ம்… கருணா ஏன் வரல”
“அவன் செத்து போயிட்டானாம் மூடிக்கிட்டு சாப்பட்ற”
“ஏன் இப்படி பேசுற? சகுந்தலா நீ சொல்லு என்னாச்சு”
அவ என்ன சொல்லுறது நானே சொல்லுறேன் கேளுங்க. திருப்பூர் போன புதுசுல எல்லாமே நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. வாரத்துல சனிகிழமெ சம்பளம், சினிமாவுக்கு போறது, வீட்டுக்கு தேவையான பண்டு பாத்திரம் வாங்குறது ஞாயித்து கிழமெ மூனு நேரமும் கடையில சாப்புடுறது சீல துணிமணினு வேணுங்கிறது எல்லாமெ வாங்கினாங்க ரெண்டு பேத்தோட அன்பும் மேற்குத் தொடர்ச்சி மல போல நீண்டு கிடந்தது ரூபா வைத்துல ஆறு மாசம் அப்பதான் முதல் முறையா சண்ட வந்துச்சு அதுக்கப்புறம் அடிக்கடி சண்ட போட்டுகிட்டாங்க. ரூபா பிறந்து ஒரு மாசத்துல ஒரு நாள் ராத்திரி படுத்துருந்த ஆள காணோம் சண்ட போட்டதுல எங்குட்டும் போய்டானா? பதறி போனா சகுந்தலா
போன் பண்ணுனா சுவிட்ச் ஆப் , ஐயோ இந்த மனுசன் எங்க போனானோ தெரியலயே விடிய விடிய தூங்காமெ கண்ணு செவந்து கெடக்கு அக்கம் பக்கம் விசாரிச்சாள் எல்லாருமே தெரியலங்குற வார்த்தைய தவிர வேறு வார்த்தெ இல்ல, வீட்ல வாச பண்டு பாத்திரம் எல்லாம் அப்படியே கெடக்கு. பத்துமணி வாக்குல சகுந்தலா போன் சினுங்க வேகமா எடுத்து ஹலோன்னாள் எங்கம்மா கருணா? “அவன நைட்டுலருந்து காணாம்ணே” “எப்படி இருப்பான் கூட வேல பாக்கிற பிள்ளைய கூட்டிட்டு ஓடுனா அங்க எப்டி இருப்பான் ” “என்னா ணே சொல்றீங்க” “போலீஸ் வந்து நிக்குது போன் போட்டா சுவிட்ச் ஆப்னு வருது கையில மட்டும் சிக்குனா செத்தான்”.
அப்பனை பற்றி சொல்லவும் குழந்தை தொட்டிலில் முண்ட ஆரம்பித்தது, சுரேந்தர் மெதுவாக ஆட்டிக் கொடுத்தான். சகிலா நொச்சு கொட்டினாள்.குழந்தை எதற்கும் அடங்காதவளாக அழுக ஆரம்பித்தாள்.
ரே ரே ரே …. பிள்ளையெ யாரு அடிச்சது.
சகிலாவின் புதிய குரல் குழந்தைக்கு எரிச்சலை உண்டாக்கியது.சகுந்தலா வேகமாக குழந்தையை வாரிக் கொண்டாள்.
“இங்க வா இங்க வா அத்தைக்கிட்ட வா
சித்தப்பன அடிச்சுப்புடலாம் அழுவாத “
சித்தப்பன் தன் பாக்கெட்டில் கைவிட்டு விளையாட்டு பொருளை நீட்டினான் அது “தேவூடா தேவுடா ஏழுமலை தேவுடா ” என்று சிணுங்கியது.
00

மணவை கார்னிகன்
இயற்பெயர் பெ.குமரேசன் சொந்த ஊர் மணப்பாறை தொழில் ரீதியாக(பலகார மாஸ்டர்) அய்யலூர் வளவிசெட்டிபட்டியில் வசித்து வருகிறேன் அவ்வூரில் ஒரு கம்யூனிச வாதியாக என்னை இணைத்துக் கொண்டேன்.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திண்டுக்கல் துணைச் செயலாளராக பொறுப்பு வகுக்கிறேன்.இலக்கியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து இலக்கிய கூடுகைகளும் பங்கேற்றேன்.ஆரம்பத்தில் ஐக்கூக்கவிஞர் மணவை கார்னிகனாக அடையாளமானேன்.சில சிறு பத்திரிகைகளில் தொடர்ந்து ஹைக்கூ கவிதை மற்றும் தன்முனை கவிதைகள் இடம் பிடித்து இருக்கின்றன. நடுகல்,இனிய நந்தவனம், அரசியல் சிம்மம், உயிர்வனம்,காலாண்டிதழ் இன்னும் பல இதழ்களில் இதுவரை எனது சிறுகதைகள் இடம் பிடித்திருக்கின்றன.தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தேடல் களம் இணைந்து நடத்திய கலைச் சொற்களில் கவிதை போட்டியில் கலந்து கொண்டுசான்றிதழும் பரிசும் பெற்றுள்ளேன்.

