-சுருளி காந்திதுரை
என்னடா, இவனோட பெரிய வம்பாப் போச்சு, இவனுக்குப் போய் அழகான பசங்க? இவன்… அப்பனா? குடிகாரப்பய? எப்பப் பாரு குடிக்க வேண்டியது, யார் கிட்டயாவது சண்டையிழுக்க வேண்டியதுதான் எதிர்வீட்டு பாலுச்சாமி சலித்துக் கொண்டார்.
இன்னொரு படிமேல போய் பெரிய தொல்லைக்கார… எங்க அப்பாவுக்கு சிறப்பு பெயர் வேற?ன்னு எண்ணிக் கொண்டே தூங்கிப் போனான் மகேஷ்.
காலையில் எழுவதும் தெரியாது வேலைக்குப் போவதும் தெரியாது. எங்கப்பா வேலைக்குப் போயிட்டார். பால்காரர் மணி அடிக்கும் சத்தம் கேட்டு பால் வாங்கியந்து டீ போட்டாள் வனஜா… நல்ல வேல வெட்டி செய்யக் கூடியவள். மக்கள் மனுசாளுன்னு பேசுவதும், ஏன்டா வேல எடுத்த வேல செய்து அக்கம் பக்கம் வீட்டை அண்ணா அண்ணி உறவாக வைத்துக் கொண்டாள்.
டீயைப் போட்டு வனஜா எப்பா எந்திரிங்க பிள்ளகள சாமி, எங்க அப்பன்னல்ல… பள்ளிக் கூடத்துக்கு போக வேணாமா? எழுப்பினாள். டேய், எந்திரிங்க ரெண்டு பேரும். வாயக் கொப்பளிச்சிட்டு, டீயக் குடிச்சிட்டு, காட்டப் பக்கம் போயிட்டு வாங்க. வந்து பல்ல கில்ல தேய்ச்சுக் குளிங்க…ன்னு வனஜா பிள்ளகளின் மீது பாசம் தழுவ எழுப்பினாள்.
பெரியவன் முருவலித்துக் கொண்டே எழுந்தான். சின்னவன் போம்மா என்று போர்வை இழுத்துப் போர்த்திப் படுத்தான்.
உனக்கு வேலயில்ல, சும்மா தூங்கவிடாம எழுப்புறே.. உம் தொல்ல தாங்கல… வேண்டா வெறுப்பாக எழுந்தான் கணேசன். வீட்டில் எல்லாம் முடித்து தலயச் சீவிப் பவுடர் போட்டு மகன்கள அலங்காரப்படுத்தியிருந்தாள் வனஜா.
மகேஷ் காட்டுப் பக்கம் போயிட்டு, பம்பு செட் ஓடின இடத்திலேயே மண், சாம்பல், செங்கப் பொடி, வேப்பம் குச்சி, நொச்சிக்குச்சி எது கிடைக்கிறதோ அதுதான் பல் விலக்க, பல்லு நல்லாத்தான் இருக்கு.
எதிரே கிளாஸ்மெட் சகாய ரவி வேப்பம் குச்சியில் பல் விலக்கிட்டே, கையில் ஒரு குச்சியோடு வந்தான். மோட்டாரும் ஓடல்லன்னா, தள்ளிப் போனா ஓடையில தண்ணிப் போகும்.
சகாய ரவி தண்ணி அதிகமா போகுதான்னுக் கேட்க,
சும்மாக் கொஞ்சமாத்தான். அதில முங்கிக்கிற வேண்டியத… குளிர் அடிக்குமேன்னா காக்காக் குளியல் தான்னு மகேஷ் சொன்னான்.
“டேய், அங்கபாரு ஆயில் மோட்டார் ஓடுதுன்னுச் சகாய ரவி சொல்ல,
ஒரே கூட்டமாயிருக்கு, வா வேகமா போயிட்டு வரலாம். தலை நீட்டுனா போதும் மசுரு பஞ்சு பஞ்சாப் போயிரும்ன்ளா மகேஷ்.
குளிக்கிற இடத்தில் கிழடு கட்டை, இளந்தாரிக்கு இடையில் மண்டையை நீட்டிட்டு வெளியே வந்தான் மகேஷ். வேகமா மேல் தேயித்தான். இன்னொரு முங்கு குளிச்சு முடிச்சாச்சு? காக்கா குளியல்தான்.
சகாயமும் இதே நிலையில் குளித்தான்.
மனிதர்களுக்கு இடயில் காளை மாட்டையும் பசு மாட்டையும் ஓட்டிவந்து குளிப்பாட்டப் போட்டி போட்டு நிறுத்துவாங்க.
ஓட்டமும் நடையுமாக இருவரும் அவரவர் வீட்டுக்குப் போனார்கள். வேர்த்துக் கொட்டியது மகேஷ் வீட்டுக்கு வந்ததும், சீப்பிட்ட ஒரு இழுப்பு, டவுடர் சட்டைப் போட்டுக் கிளம்பியாச்சு.
கணேஷ் எழுந்து தயாராகிச் சாப்பிட உட்கார்ந்திருந்தான். நான் போய்ச் சாப்பிட உக்காந்தேன்.
வட்டியில “தண்ணீரும் கஞ்சியும்” போட்டுக் கடிச்சுக்க கடலத் தொவையல் இருக்க, இருவரும் சாப்பிட்டாக.
தண்ணீரைக் குடிக்கும்போது உரிஞ்சிற சத்தம் கேட்டு “டேய் சத்தம் வராமக் குடிங்கன்னு, உறிஞ்சக் கூடாதுடா. வனஜா சத்தமிட்டாள்.
பள்ளிக்கூடம் எல்லாம் கூரை தான். ரெண்டு பெரிய வேப்பமரம். காக்கா அதிகமாகவே வேப்பம் பழம் திண்ண வரும். மாணவர்கள் தரையில்தான் உட்கார வேணும்.
ஏழாம் வகுப்புக்கு பலகை, எட்டாம் வகுப்பு அண்ணன்களுக்கு ஓட்டுக் கட்டிடம், பெஞ்சுலதான் உக்காருவாங்க.
சிலநேரம் வாத்தியாருக்கே சேர் இருக்காது. ஒண்ணாப்பு, ரெண்டாப்புல டீச்சர் எல்லாம் பாதி நேரம் பிள்ளகளோடு பிள்ளகளா தரையில உக்காந்துதான் கதை சொல்லுவாங்க.
தரையில் மொழுகிய சாணிப்பால் டவுசரில் ஒட்டிக்கும். உமி மாதிரி மிண்ணும் பறக்கும். பள்ளிக் கூடிட்டது போல வேகமாக நானும் தம்பியும் அவங்க அவங்க கிளாஸ்க்குப் போயிட்டோம்.
கிளாஸ்ல பசங்க, சத்தக்காடு, இருதயராஜ் சார், வகுப்புக்கு வரல.
கிளாஸ் லீடர், இல்ல லீடணி என்னுத்தான் சொல்லுவோம். வகுப்பில நல்ல படிப்பா… ஒல்லிப்பாச்சா?
எப்போதும் சித்ரா தான் லீடர்… சட்டாம்பிள்ள வேல நல்லாச் செய்யும்.
எலும்பும் தோலுமா இருக்கும். வெளிர் நிறம், யாரையுமே அவளுக்குப் பிடிக்காது. அவ அய்யரு, கோமதியும் சித்ராவும் தான் சிநேதிக.
நாங்க கிளாஸ்ல, கோனமண்டைக் கோமதியின்னு தான் சொலுவோம்.
கோமதி பெரிய வாயாடி. நல்ல படிப்பா. ஆனா லீடர் சித்ரா தான்.
யாரையும் அவள் அதிகம் கண்டிக்கமாட்டாள். பேர பெரியப்போடுல எழுதிப்போடுவா?
ஆனா, கோண மண்டைக் கோமதியிருக்காளே… அவன் பேசுறான். இவன் பேசுறான்னு பேர எழுதிப்போட்டு சாரிடம் அடிக்கச் சொல்லுவா?.
அவருக்கு என்ன கடுப்போ! எச்.எம். மேல இருக்கிற பாசத்த எங்க மேலக் காட்டுவர். அடிஸ்கேள் கொண்டான்னா? பெயர் இருப்பனுக்கு அடிதாம்.
ஆனா, கிளாஸ் சத்தமில்லாமயிருந்தது.
இருதயராஜ் சார் உச் உச்சுன்னு, பாம்பு மூச்சு விடுவது போல மூச்சு விடுவது போல மூச்சு விட்டு நாற்காலில உக்கார்ந்தார்.
பாவம் எச்.எம். அவருக்கு என்னென்ன வேல கொடுத்தாரோ தெரியல. எதையோ எடுத்தார் வாசித்தார்.
கடைசிப் பெஞ்சை நேசித்தார். நான் குட்டையா இருப்பதால் முதல் பெஞ்சு. வளந்த மாடுகள் என்னைச் சேர்க்க மாட்டார்கள்.
மணி அடித்தது போய்விட்டார். அடுத்த வகுப்பு சாமிக்கண்ணு. அய்யனார் கோயில் பூதத்து மீசை மாதிரியே மீசை. கண்ணும் நல்ல உருண்டக் கண் ஆளும் பெரிய ஆளு.
அவரப்பாத்தா பயமாயிருக்கும். இந்த வளந்த மாடுகள அவர் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார்.
ஆளு நல்ல குண்டு. பேச்சுக்கும் ஆளுக்கும் சம்மந்தமே இருக்கிற மாதிரி தெரியாது.
வரலாறு எடுப்பார். டேய் “அசோகர் வகுப்புடான்னு” கத்தவும்.. அவர் வரண்டாவில நடந்து எங்க வகுப்புக்கு வரவும் சரியா இருந்தது.
கிளாஸ் கலகலப்பாயிருக்கும். அதிகம் மாணவர்களைத் திட்டமாட்டார். டேய், யாரும் கழுத மேய்க்கப் போகாத? பத்திக்குச்சிப் பொருத்தாத.. இப்பிடிப் பேசுவார்.
டேய், வரலாறு படிக்கிறது பெரிசு இல்லடே. வரலாறா நீ மாறனும்… பெரியசாமி கையைத் தூக்கினான். நெனச்சேன் நீ கையைத் தூக்கிட்ட? என்ன சந்தேகம் சார் உங்களுக்கு!
சார், நான் எப்படி வரலாறுல இடம்பிடிக்கிறது.
அவர் படக்குன்னு பேசாமல் எழுந்து கடைசி பெஞ்சு வரை நடந்து போனார்.
எட்டாம் வகுப்பு என்பதால், பெண் பிள்ளகள் முன் சொல்லக் கூடாதுன்னு.
கடைசிப் பெஞ்சிட்ட போய் பெரியசாமி வகுப்பில இடம்பிடி. பத்திய நிப்பாட்டு, வாத்தியாரா மதிக்கக் கத்துக்க. அய்யா எல்லாம் உன்னக் கண்ட பயப்பிறாரு. முதல்ல வகுப்பில நல்ல மாணவனாயிரு வரலாறு தானக் கிடைச்சுரும்…
மெல்ல நகர்ந்து முன் பகுதிப் போனார். எல்லாரும் என்ன சொன்னார். என்னச் சொன்னார்ன்னுக் கேட்க.
ரெண்டு காரணங்களுக்காகத் தான் அவர் மீது எல்லோருக்கும் பயம். சாமிக்கண்ணு வாத்தியார் ஆல்ரவுண்டு அழகு ராஜா. அவர் இல்லாம பள்ளிக்கூடமே நடக்காது.
சகல விஷயமும் அவருக்குத் தெரியும். “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்.”
இசை அடிக்கிறது, மேடை, ரேடியோ போடுவது, அடி பம்பு ரிப்பேர் பார்ப்பது, போர்டுக்கு, கறுப்பு பெயிண்ட் அடிப்பது, விளயாட்டுப் போட்டிக்கு எதுக்கும் மாணவர்களக் கூட்டிப்போவது, சுற்றுலா எல்லாமே ஆண்டுவிழா நாடகம்.. விரிந்து கொண்டே போகும்.
அவர்ட்ட கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே நமக்கு வேணும். ஆகவே மாணவர்கள், “சாமிக்கண்ணு சார் மேல மதிப்பு மரியாதை” அவர் வேணாமுன்னா வேற யாரும் எதுலயும் சேக்க மாட்டாங்க.
காலையில லேட்டா வந்தாக் கேட்டுக்கு வெளியே நிப்பாட்டி, எல்லாருக்கும் பூசை போடுவார். பூசையை அவர் விரும்பிக் கொடுப்பார். ரோட்டில் போறவுங்க பாப்பாங்க.
லேட், அடிக்கடின்னா எச்.எம்கிட்ட அனுப்பிடுவார். எட்டாப்பு மாணவர்களத் தனிக் கவனமாக இருப்பார்கள். ஒட்டுமொத்த பள்ளிக் கூடத்துக்கும் நாங்கள் கதாநாயகர்ன்னு அவர்கள பார்வையில் வேறு மாதிரியாக இருக்கும்.
அது என்ன பெரிய கொடுமையினா. வாழ்க்கையிலே சிரிப்பை அறியாத எச்.எம் அவரு!
மட்டியக் கடிச்சுகிட்டு அடிச்சா. ஒரு அடிக்கு நூறு பொன் பெறும். எதாவது சேட்டைன்னு, போயி, டீச்சர்க சொல்லிட்டா அம்முட்டு தான் மனுஷன். எச்.எம்.ரூம்ல எப்போதும் நாலு அஞ்சு குச்சி எதை எடுப்பார் தெரியாது.
பிரம்பிலே பளிர்ன்னு, ஆளுக்குத் தக்கன அடிவிழும். தொடர் தாமதம்ன்னு, வீட்டுல இருந்து ஆளாக் கூட்டிட்டு வரணும்.
பலநேரம் அப்பா, அம்மாவை அழைப்பது சிரமம்தான். பல அப்பாக்களுக்கு, பையன்கள் படிக்கும் கிளாஸ் செக்சன் எதுவுமே தெரியாது.
அவர்களும் கேட்டது மில்ல. இவர்களும் சொன்னது கிடையாது. அம்மாக்கள் தெய்வம். யாருக்குமே எழுதப்படிக்க தெரியாது. கூட்டிட்டு வந்தால் அம்மாக்கள் தல மட்டும் ஆட்டுவார்கள். ஆனால வாத்திமார்களின் கோபம், அக்கரை மட்டுமே புரியும். அப்பாகளிடம் சொன்னால் எல்லாம் கூருகெட்ட மனுஷனுங்க. சொன்னா மாட்ட வெளுக்கிறது மாதிரி வெளுப்பாக. பல நேரம் அம்மாக்கள் அடிவாங்கு வார்கள். ஆதலால் யாரும் அப்பாக்களிடம் சேதி போகாமல் பார்த்துக் கொள்வார்கள்.
இதனாலே, அந்த ஏரியாவில படிப்பறிவு கம்மியாப் போச்சு. “எட்டாம் வகுப்பில நாற்பத்து ரெண்டு…”
“ஓடிப்பிழைச்சது ரெண்டு.
“தப்பிப் பிழைச்சது ரெண்டு தவறி விழுந்தது ரெண்டு தல்லாடிப்போனது நாலு” மிச்சம் முப்பத்துரெண்டும் ஏனோ தானோ தான். வாழ்க்கையில் வாழ்ந்தார்கள் மனிதர்களாக.
பெண்பிள்ளகள கேட்க வேண்டாம், எப்படியும் எட்டாப்பு தாண்டும்போது, மாப்பிள்ளயப் பார்த்துக் கட்டி வைப்பார்கள். அப்படியில்ல ரெண்டு வருஷம் வீட்ல இருக்கட்டும்.
பொட்டப்பிள்ளைக்குப் படிப்பு எதுக்கு. வண்ணாக் கணக்கு, பால் கணக்கு, காசு வழக்கு கணக்குப் பாத்தாப் போதும். இது எழுதப்படாத சட்டம் பல வீடுகளின் நிலம இதுதான்.
இன்னும் சில அப்பாக்கள் ரொம்பவே நல்லவர்கள். பிள்ளைக்குரிய வயதை எட்டி விட்டால் போதும். இடையிலே பள்ளிக்குப் போகவேண்டும். “சான்றிதழ்” வாங்கி என்ன நாக்கா வளிக்கப் போற போவியா? சாட்டிக்கேட், சட்டிக்கேட்… போ. அம்மாக்கள் அப்பாவை எதற்கும் எதிர்த்துப் பேசக்கூடாது.
அடித்தாலும், மித்தாலும் வாங்கிக் கொண்டு அழுகனும். நான்கு சுவத்துக்குள்ளத்தான்… அதைத்தாண்டி வெளியே வராது. பெண்கள் ஏன்? பொதுவாக படிக்க வருவதே மகாக் கஷ்டம் இதில் அடித்தால்… சிலர் கம்பைப் பிடிப்பார்கள். பெரிய வாத்தியார் கோபத்தில் கம்ப ஓங்க முன்ன ஓடிப்போய் வேலியைத் தாண்டி வெளியேப் போய் விடுவார்கள்.
நாலு வளந்தான் மாடுகள் தேடிப்போகும். இவர்கள் அவனை அடித்து தூக்கி வரப் போகல. யார் கண்ணுலயேம் படக்கூடாது.

டேய், இனிமே பள்ளிக் கூடத்துப் பக்கம் வராதே. நாங்கத் தேடுனம் கிடைக்கல்ல…ன்னு.. ஓப்பித்து விட்டுப்போய் விடுவார்கள். மறந்தும் வாத்தியார்கள் பார்வையில படக்கூடாது.
“ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில குரு! அகப்பட்டவனுக்கு அட்டமத்துல சனி…?” ஆனால் அகப்பட்டவர்கள் கல்வியில் கரை ஏறினார்கள். ஏதோ கொஞ்சம் தெரிந்து கொண்டார்கள்.
ஓடியவர்கள், ஓடினார்கள், ஓடிக்கொண்டே, சித்தாள், மெக்கானிக், சினிமா தியேட்டர் முறுக்கு விக்க, கடையில் வேல, வீட்டில் மாடு ஆடு மேய்த்து வாழ்க்கைக்கு உரியவர்களாக ஆகிப்போனார்கள்… படிப்ப மறந்து விட்டார்கள்.
ஏன்?
ஆசிரியரிடம் அடிவாங்க வேண்டாம். சரஸ்வதியிடம் மல்லுக்கட்ட வேணாம் பாருங்க. வரவே மாட்டேன் நீக்கிற சரஸ்வதியிட்ட இருந்து விலகிக் கொண்டார்.
பலநேரம் சாமிக்கண்ணு சார்மேலே எங்களுக்குக் கோபம் வரும், பாவம் அவர் என்ன செய்வார் எச்.எம்.சொல்லுற வேலயக் கேட்டுச் செய்யக் கூடியவர் அவ்வளவுதானே.
அப்படித்தான் எங்க கிளாஸ்ல கிருஷ்ணவேணி. வீட்டுப்பாடம் எழுதலன்னு, மேடம் கொண்டு போய் எச்.எம்கிட்ட விட்டாங்க… மதியம் சாப்பாட்டுக்குப் போறது முன்னாடி, எச்.எம். கைய நீட்டச் சொல்ல கிருஷ்ணவேணி, கையைக் காட்டிக்காட்டி ஏமாத்தக் கடுப்பாகிப்போனவரு. கைய எடுக்க அடிக்கும்போது பிரம்பு வலது முழங்களுக்குக் கீழ் கையில் கிச்சிறுச்சு… அப்பறம் கோவப்படட எச்.எம். கையில வெளுத்துவிட்டாரு.
மணியடிக்க எச்.எம். வீட்டுக்குச் சாப்பிடப் போய்ட்டு வரல்ல… ஆனால், கிருஷ்ணவேணி அழுதுகிட்டே வீட்டுக்குப் போக அவுங்கப்பாட்டி என்னான்னு கேடக. அழுதுகிட்டே வாத்தியார் அடிச்சாரு. நல்லாப் பூசணிப்பழம் மாதிரி பழுத்த உடம்புல்ல அடிபட்ட இடம் நல்லா சிவந்து போயிருச்சு.
அவ்வளவுதான் பாட்டி கொட்டு மேளமில்லாம சாமியாட, யாருடா? எச்.எம். எவன்டா எம் பேத்திய? அடிச்சவன்.
“இம்மாந்தாண்டி பிள்ளய எம்மோந்தண்டி அடி” அடி அடிச்சவனுக்கு. நல்ல சகல சாம்பூராணி வசனம் போடப் பள்ளிக் கூடமே. அல்லோலப்பட்டது.
“சாமிக்கண்ணு” சார். “சரஸ்வதி தமிழம்மா” எல்லாம் பேசிப்பாத்தாக எதுவுமே நடக்கல்ல.
வார்டு மெம்பரக் கூட்டியாந்து சமதானம் பண்ணிக் கிழவி மலயேறிட்டா? அப்பறம் என்ன கிருஷ்ணவேணியப் பார்த்த டீச்சர் எல்லாம் எதுவும் கேட்க மாட்டார்கள்.
ஆனா, எச்.எம். அடிப்பதை நிறுத்தல. கண்டிப்புதான் எங்க பள்ளிக்கூடத்துக்குப் பேர்ன்னு… அவர் சொல்லிட்டார். ஆண்டுவிழா வந்துட்டா. எல்லோருக்கும் “சாமிக்கண்ணு சார் தான் கடவுள்.
எந்த நடிப்புக்கும், அழகா “மேக்கப்” போடுவார். இப்ப மாதிரி ஆயிரக்கணக்கில வருடத் தொடக்கத்திலேயே வாங்கி விட்டு, போட்டோ, சி.டி. அதுக்கும் காசு பார்க்கும் “ஈனப்பிறவியில்ல” அவர்கள்…. மாணவர்களிடம் பைசா காசு செலவு செய்ய விடமாட்டார்கள். ஏழை மாணவர்கள் என்பதால்.
மிகவும் ஏழை மாணவர்கள் படிக்கிறப் பள்ளிக்கூடம். நடத்தியவர்கள். வருமானத்துக்காகன்னுச் சொன்னா நாக்கு அழுகிப் போய்விடும். சமூகத்திற்கு செய்யும் கடமையாகக் கருதினார்கள்.
டீச்சரும், சாரும் சம்பளம் கடந்து ஆத்ம திருப்தியை மாணவர்களிடம் கண்டார்கள். அவர்கள் தாம் களிமண்ணில் “உருவம் தரும் பிரம்மாக்கள்”. அங்கே சாதி, மத, நிற பேதமில. இருட்ட வீட்டில் சரஸ்வதியை கொலுவிருக்கச் செய்த புண்ணியவான்கள். “காகித ஓடங்களைக் கரையேற்றிய ஜீவநதிகள்.
“சாமிக்கண்ணு” சார் நாடகம் போடுவார். எல்லாமே அவர்தான். ஆனா அவர் பேரு வராது… யார் பேரும் வராது. நான் பலநேரம் ஒயிலாட்டம் தான். எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆக நான் ஏழாம் வகுப்பிலும் ஒயிலாட்டம் தான். கடந்த நான்கு வருடம் ஒயிலாட்டாக் குழுவில் இருந்தேன்.
ஆண்டு விழாவுக்கு மொத நாள் நாடகத்தில் நடிக்கும் ஒருவனுக்கு அம்மைப் போட்டு விட்டது. நாள நாடகம் சாயங்காலம் “ஆளு மேடையில வந்தா போதும்” கொஞ்சம் சாமிக்கண்ணு சார் என்ன அழைத்துக் கொடுத்தார். பலர் சார்கிட்ட நடிக்க வேஷம் கேட்டு அழையும் போது, சாரே நம்மளக் கூப்பிட்டுக் கொடுத்தா? மனசு இப்பிடிக் கணக்குப் போட்டுச்சு.
வசனம் போ பார்த்துட்டுவான்னு. அரைப்பக்க வசனம் தந்தார். சரிங்க சார்ன்னுச் சொன்னேன். என்ன பாத்திரம்னு தெரியாது. ஆனால் வீட்டில் அம்மாவிடம் சொன்னேன். ஒன்னும் பேசல.
அப்பா தீர்த்தம் சாப்பிடாமல் இருந்தார். எங்க அம்மா ஆசையாக நாளக்கு ஆண்டுவிழாவுல மகேஷ் நடிக்கிறான்.
வசனத்தை மனப்பாடம் செய்யல. வாசித்தேன். சிரித்தார். எங்கப்பா சிரிப்பு அடக்க முடியாமல் சிரித்தார்.
என்னங்க,
வசனத்தப் பார்த்தா தெரியல, ரௌடிப்பய பேசுறது மாதிரியிருக்கு…
அரும! அப்பா குடிகாரன், மகன் ரௌடி நல்ல குடும்பம். பிள்ளையப் படிக்க அனுப்புச்சா இருக்கட்டும் அந்த வாத்தியா… வச்சுக்கிருறேன். நல்லா ஏக வசனத்தில் திட்டினார்.
அம்மா, ஏங்க ஏதோ பிள்ள நடிக்கிறான். அதைப் போயி போடி… இந்த வயத்தில்ல “ரௌடிய நடிச்சா.” அவன் கெட்டுப்போக மாட்டானா?
வந்து வசனப் பேப்பரைக் கிழிச்சுப் போட்டுட்டார் கோபத்தில… நான் அழுதால் அடிவிழும்… அடிவாங்காமல் தப்பித்தால் போதும்.
எதுத்த வீட்டு தவமணியிடம் போனேன். என்னடா எனக்கு ரௌடி வேஷம் தந்திருக்கார்… போடா அவரு நடிக்கக் கூப்பிடமாட்டாறான்னு இருக்கையில…
உன்னக் கூப்பிட்டுக் கொடுத்திருக்காரு. முடிஞ்ச மட்டும் நல்லாப் பண்ணு… விளயாடப் போயிட்டேன். சகாயம் டேய், நினவில வச்சுக்கோ நல்லா நடி… நம்ம லீடர் குறத்தி வேஷம் என்றான்.
எனக்கு சிரிப்பு தாங்கல, ஏன்டா எனக்கு ரௌடி வேஷம்… வந்து சாப்பிட்டேன். தெரிந்ததை மனசுக்குள் சொல்லிப் பார்த்தேன். வேகமாகப் பொழுது விடிந்தது. மொத ஆளாப் போயி… வசனத்தை வாங்க வேண்டுமே.
அம்மா, இந்த மனுஷன் கிடக்கு, பாத்து வாத்தியார் மனம் கோணாம நடின்னுச்சு.. அவளுக்குத் தெரிந்த மொழியில் மகனை வாழ்த்தினாள்… மகேஷ் மனதுக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி… பயம்?
தம்பியக் கேக்கனுமே! எங்க அண்ணே, ஒயிலாட்டம், நாடகம் ரெண்டும் நடிச்சிருக்கீன்னு, பெருமைப் பீத்துறான்.
ஒயிலாட்டம் முடிந்துதான் நாடகம். உடனே அந்த “மேக்கப்” போடணும்.
பள்ளிக்கூடம் நடக்கும், அரங்கம், ரேடியோ, எல்லா வேலயும் நடிகர்கள் பார்க்கணும். போய் வசனம் கேட்டேன். போடா, நீ நடிப்பா… வகுப்பு வகுப்புக்குப் போய் பெரிய பையனைக் கூப்பிடச் சொன்னார்.
ஆறு, ஏழு, எட்டு, மூன்றிலும் இருந்து வந்தோம். வகுப்பு நடக்கல, ஆனால், மாணவர்கள் சத்தம் போடுவார்கள். இதில நாடக ஒத்திகை, ஒயிலாட்ட ஒத்திகை, கோலாட்ட மாணவி வரவும் போகவும் இருந்தார்கள்.
எனக்குப் புளிபோட்டுக் கரைக்கிது வவுத்துல.
அண்ணா, நீங்க நாடகத்தில நடிக்கிறீங்களா, இந்தப் பேப்பரை உங்ககிட்டக் கொடுக்கச் சொன்னாங்க… வந்து ஒருவன் கொடுத்தான்.
வாங்கினேன்! எட்டு மடிப்பில் கசங்கிய பேப்பர்.
விரித்தேன் வசனம் இருந்தது. இனி சார்கிட்ட கேட்க வேண்டியதில்ல… நேரம் கிடைக்கயில வாசித்துக் கொண்டேன்.
ஒத்திகை எதுவுமில.
ஒயிலாட்டம் ஆடிப்பார்க்கணுமே! அம்மா தமிழம்மா கூட்டி வரச் சொன்னாங்கன்னு ரெண்டு மாணவர்கள் வந்தார்கள். போனேன்.
என்ன, நான் அமைதியாகச் சிரித்தேன். அய்யா நாடகத்தில நடிக்கிறீங்களலாம். பெரிய ஆளாகிட்ட?
நல்லா நடிடா, உன்னால முடியும். முதல்ல இதப்பாரு, நாலு முடி வேட்டி, வெள்ளப் பனியன், நல்ல டவுசர், ஒரு கையிலி எடுத்துட்டு வந்திரு.
சரிங்கம்மா.
அரைமணிநேரம் ஒயிலாட்டம் ஆடிட்டு ஓடிப்போ, மொத வரிசை ஆடினேன்.
மணி அடித்தது… சாப்பிடப்போனேன். அம்மாட்ட கேட்டேன். வேட்டி, கையிலி, வீட்டில் இருந்த திருநீறு, குங்குமம் எடுத்து மடித்து மஞ்சள் பையில் வைத்தேன். கொஞ்சம் சரடு எடுத்து டவுசர்க்குள்ள வைச்சுக்கிட்டேன். ஏன்னா, வேட்டிக் களண்டுவிலாமக் கட்டனும்மில. சாப்பாடு இறங்கல. அம்மா, வாம்மா என்றேன். போ… வாறேன்…
நீ போ…ன்னு அனுப்பி வைத்தாள்.
மேக்கப் போடப்பட்டது. ஒயிலாட்ட வேஷ்டி கட்டி இடுப்பில சணல் போட்டு இருக்கிக் கட்டினார் சாமிக்கண்ணு சார். மேக்கப் முடியும்போது, டேய், வந்து வேட்டியக் கழட்டிப் போட்டு… வா… நான் கையிலிய கட்டி விடுறேன்… தலய ஆட்டினேன். வசனத்தப் படிச்சுருப்பா. எதையும் பத்திப் பயப்பிடாத.
நான் பாத்துக்கிறேன்… மேடையில ஏறி அங்கிட்டு இங்கிட்டுப் போயிட்டு வா. ஒரே இடத்தில நிக்காதே.
“மைக்கிட்ட போய். பேசுடா. நான் பாத்துக்கிறேன். மகேஷ் பயப்படாத.” சாமிக்கண்ணு சார் தைரியம் கொடுத்தார்.
ஒயிலாட்டம் முடிந்தது வந்தேன். அவரே பையில் இருந்தத எடுத்து மேடைக்குப் பின்னே ஆட்டக்காரனை நடிகனாக உருவாக்கினார். மேடையில நான் போக வேண்டிய காட்சி, மகேஷ் போ.
தல அலங்கோலம், பெரிய மீசை, கையில கைக்குட்டை, கழுத்தில கைகுட்டையை மடித்து அது ஒரு தினுசாகக் கட்டியிருந்தார். சைக்கிள் ஜெயின் சுத்திக் கொண்டே மேடையில் தோன்ற வேண்டும். போகும்போதே பெரிய சத்தத்தோட போகனும்.
சார் சொன்னது நினைவு வரவே, டேய், யாருடா அங்க நிக்கிறது. எல்லாரும் உக்காருங்கடா, இந்த சபையில யாருடா பெரியாளு, எமனையும் சைக்கிள் ஜெயின்னுல அடித்து விரட்டிடுவேன். எனக்கு தண்டனைக் கொடுக்கவா? ஏதோ பேசினேன். நல்ல கைத்தட்டல். எமன், பொடியன் போய்வா. அடுத்த பிறவியில் உனக்கு தண்டனை தரப்படும். மறுபடியும் சைக்கிள் ஜெயின் சுழற்றிக்கொண்டே, நமக்கு எல்லாம் தண்டனை தர எமனுக்கு சத்துப் பாத்தாதுடா… காட்சி முடிந்தது. குறத்தி குறவன், கோணமண்டை கோமதி குறவன், சித்ரா குறத்தி மேலே போனார்கள்.
நான் சாமிக்கண்ணு சார் காலத் தொட்டு வணங்கினேன். ஏலே நல்லா நடிச்ச. சத்தமா பேசின. அருமைடா, உண்மையிலே இவ்வளவு நடிப்பேன்னு நினக்கலடா மகேஷ்சு. மேல ஏறும்போது தான் வணங்கனும், இறங்கும் போது சிரிக்கனும். வீட்டுக்குப் போனேன். அம்மா எங்கள் வீட்டு வழியே போனவர்களிடம் கேட்டு செய்தி சேகரித்து வந்திருந்தாள்.
“ஆளு எம்மாட்டு இருந்துகிட்டு எமனுக்கு சத்துப்பத்தாதாம்ள…”
யாரோ சிறுவன் ரௌடி வேஷம் போட்டான். அவ்வளவோ… மறுநாள் தமிழம்மா நல்லபடி நடிக்கிற வாய்ப்பை ஏற்படுத்திருக்க. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன்… குடும்பச் சூழல் நாங்கள் வீடு மாறி வெளியூருக்குப் போய்விட்டோம்.
படித்து முடித்து வேலக் கிடைச்சதும், தேடிப்போனேன் கோயிலுக்கு.
சாமிகள் என் மனசுக்குள்ளே தான் இருக்காக. எனக்கு இதயம் கனமாகிப்போச்சு.. சாமி கருவறைக்குள் வந்து விட்டார்கள். மெல்ல பள்ளியை விட்டு வெளியே வந்தேன். ரெண்டு புறாக்கள் பேசிக்கொண்டன. பாவம் யாரையோ தேடி வந்துட்டுப் போறான். பாருடி, இவனுக்கு இன்னும் பள்ளிக்கூடத்து மேலயும், வாத்தியார் மேலயும் ஆசையா…?
குறத்தி மருத்துவராகப் போய்விட்டார். ரௌடி வாத்தியாராக விட்டேன்னு, சொல்லலாம்னு போனா, இருதயராஜ் சார், சாமிக்கண்ணு, சாரைத் தேடினேன். ஆனால் தமிழம்மா. போன மாதம் தான் கடவுளுக்குள் நித்திரை அடைந்துவிட்டார் என்றார்கள்.
ஒரு கணம் எனக்கு எல்லாமே நின்று விடும்போல் ஆகிவிட்டது. அய்யோ! சாமிக்கண்ணு ‘சார் இடத்தில்’ யாரும் வர முடியாது.
அவர் கடவுள் என்றது மனசு…. எனக்குப் பேச நா எழல. பள்ளியில் அமர்ந்து இருந்தேன். சாமியாக இருந்தவர்களத் தேடினேன். பலர் ஓய்வு பெற்று விட்டார்கள் என்றும், மோட்ச சாம்ராஜ்யத்தை நோக்கியிருந்தார்கள். சிலர் மெல்ல மெல்ல போயிக் கொண்டு இருந்தார்கள். என்னைப்பற்றி எதுவும் சொல்லலக் காற்றுப் போன பலூன் போல ஆகிவிட்டேன்; மீண்டும் அமைதியானேன்.
00


