பிக்சல் ஆன்மா Pixel Soul டிஜிட்டல் யுகத்தின் புதிய இருத்தலியல்

~ ஏ.நஸ்புள்ளாஹ்

​நவீன மனிதனின் வாழ்வு இப்போது இரு தளங்களில் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. ஒன்று, அவன் சுவாசிக்கும் பௌதிக உலகம். இன்னொன்று, அவன் திரைகளில் வாழும் மெய்நிகர் உலகம். இந்த மெய்நிகர் உலகின் அடிப்படை அலகாக இருப்பது பிக்சல் பில்லியன். கணக்கான பிக்சல்களின் தொகுப்புதான் இன்று நம் முகமாகவும், குரலாகவும், வரலாறாகவும் திரையில் மின்னுகிறது. இந்தச் சூழலில், பிக்சல் ஆன்மா Pixel Soul ஒரு தொழில்நுட்பச் சொல் இல்லை. அது டிஜிட்டல் யுகத்தில் மனித இருப்பின் பகிர்வையும், மாற்றத்தையும் விளக்கும் ஒரு தத்துவார்த்தக் குறியீடு.

​ஆன்மா பாரம்பரியமாக உடல், உயிர் மற்றும் உணர்வுகளின் ஒரு தொகுப்பாகவே பார்க்கப்பட்டது.  இன்று நம்முடைய அடையாளம் திரைகளில் சிதறடிக்கப்பட்டுள்ளது. முகநூலில் பகிரப்படும் ஒரு புகைப்படம், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் ஒரு கவிதை, வாட்ஸ்அப்பில் பகிரப்படும் குரல் வழிச் செய்திகள் இவை அனைத்தும் ஒரு மனிதனின் அகத்தின் துகள்கள். இவை அனைத்தும் திரையில் ஒளியாக, நிறமாக, புள்ளிகளாக பிக்சல் வடிவம் பெறுகின்றன. ஒரு மனிதன் தன்னைத் திரையில் வெளிப்படுத்தும்போது, அவன் தனது உண்மையான இருப்பிலிருந்து பிரிந்து, பிக்சல்களால் ஆன ஒரு பிரதி பிம்பமாக மாறுகிறான். இதுவே பிக்சல் ஆன்மா.

​ஒரு தனிமனிதன் தனது வலியை, காதலை, ஏமாற்றத்தைத் திரையில் பகிரும்போது, அவன் ஒருவிதமான டிஜிட்டல் கார்னிவல் நிலையை அடைகிறான். அங்கு அவன் பகிரும் உணர்வுகள் யாவும் வடிகட்டப்பட்டவை . அந்த வடிகட்டுதல் பிக்சல்களின் அடர்த்தியை அல்லது நிறத்தை மாற்றும் செயல்முறை மட்டுமில்லை அது அந்த உணர்வை மெருகேற்றி, சமூகம் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கும் ஒரு தந்திரம்.

​இங்கேதான் சிக்கல் தொடங்குகிறது. திரையில் மின்னும் பிக்சல் ஆன்மாவுக்கும், உள்ளே இருக்கும் உண்மையான உயிருள்ள ஆன்மாவுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. திரையில் சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு முகம், பின்னால் கண்ணீர் வடிக்கலாம். திரையில் உரக்கப் பேசும் குரல், உள்ளுக்குள் மௌனத்தில் உறைந்திருக்கலாம். இந்த முரண்பாடு ஒருவகை மனச் சிதைவை உருவாக்குகிறது. மனிதன் தன் பிம்பத்தை ரசிப்பதில் தன் மெய்யிருப்பைத் தொலைக்கிறான்.

​பாரம்பரிய ஆன்மா மரணத்திற்குப் பிறகு உடலைவிட்டு நீங்குவதாகக் கருதப்படுகிறது. பிக்சல் ஆன்மா மரணத்திற்குப் பின்பும் திரைகளில் உறைந்துவிடுகிறது. ஒரு மனிதன் மறைந்த பிறகும் அவனது சமூக வலைதளப் பக்கங்கள் அப்படியே இருக்கின்றன. அவனது பதிவுகள், அவன் பதிவேற்றிய புகைப்படங்கள், அவன் எழுதிய சொற்கள் அனைத்தும் பிக்சல்களாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

​இங்கே பிக்சல் துக்கம் உருவாகிறது. இறந்துபோன ஒருவரின் கணக்கைத் திறக்கும்போது, அந்தப் புள்ளிகள் மின்னும் ஒளி, அவர் இன்னும் நம்முடனேயே இருப்பது போன்ற பிரமையை உண்டாக்குகிறது, அது ஒளிச் சிதறல் மட்டுமே. பிக்சல் ஆன்மாவுக்குத் துடிப்பு இல்லை, வெப்பம் இல்லை, உணர்வு இல்லை. அது டிஜிட்டல் அழியாமையை வழங்கினாலும், அது ஒருவகை வெற்றுச் சிறை. நாம் நம்மைப் பிக்சல்களாகப் பதிவேற்றும்போது, நாம் அந்தத் தரவுகளின் பிணைப்புக்குள் சிக்கிக்கொள்கிறோம்.

​நான் முன்னரே குறிப்பிட்டது போல, மடைமாற்றம் என்பதன் மூலம் மனிதன் பல்வேறு சாத்தியங்களை அடைய முடியும். டிஜிட்டல் உலகில் சிக்கித் தவிக்கும் பிக்சல் ஆன்மாவை எவ்வாறு விடுவிப்பது?

​திரையில் இருப்பதை மெய் என்று நம்பாமல், அதை ஒரு நிழல் என்று உணர்வது முதல் படி. பிக்சல்கள் நம் அடையாளங்கள் இல்லை. அவை நம் வெளிப்பாட்டின் கருவிகள் மட்டுமே என்ற புரிதல் அவசியம்.  சமூக வலைதளங்களின் அல்காரிதம்கள் நம்மைத் தீர்மானிக்க அனுமதிக்காமல், நம்மைப் பிக்சல்களுக்குள் அடக்காமல், ஆக்கபூர்வமான மடைமாற்றங்களுக்கு நாம் திரும்ப வேண்டும்.

​மௌனம் மற்றும் திரையில்லாத் தருணங்கள் டிஜிட்டல் இரைச்சலிலிருந்து விலகி, மௌனத்தில் திளைக்கும் தருணங்கள் மட்டுமே ஆன்மாவை மீண்டும் உயிருள்ளதாக்கும். பிக்சல் ஆன்மாவிலிருந்து விடுபட்டு, மீண்டும் மண் சார்ந்த, உணர்வு சார்ந்த மனிதனாக மாறுவதே உண்மையான விடுதலை.

​பிக்சல் ஆன்மா நவீன உலகின் ஒரு உருவம். அந்த உருவத்தில் தெரிவது நாம்தான், அது முழுமையான நாமல்ல. அது நம்முடைய ஒரு சிறிய துணுக்கு. நாம் பிக்சல்களால் ஆனவர்கள் இல்லை. நாம் சொற்களாலும், மௌனங்களாலும், வலிகளாலும், கனவுகளாலும் ஆனவர்கள்.

​கவிதைகளில் இந்தப் பிக்சல் ஆன்மா குறித்த உரையாடல் இன்னும் விரிவடைய வேண்டும். ஒரு கவிஞனாக, எனது வரிகளில் இந்த பிக்சல் ஆன்மாவின் துயரத்தையும், அதிலிருந்து மடைமாற்றம் மூலம் மீளும் வழிகளையும் நாம் பேசும்போது, அது இன்றைய டிஜிட்டல் தலைமுறைக்கு ஒரு புதிய பார்வையைத் தரும். நாம் திரையின் ஒளியில் கருகிப்போகாமல், அந்த ஒளியைக் கொண்டு நம் அகத்தின் இருளை அகற்றும் கருவிகளாக மாற வேண்டும்.

​பிக்சல் ஆன்மாவின் மின்னலில் தொலைந்து போகாமல், ஆன்மாவின் உண்மையான ஓசையைத் தேடுவதே எஞ்சியிருக்கும் நவீன மனிதனின் ஒரே நோக்கமாக இருக்க முடியும். எனது பார்வையில், இந்தத் டிஜிட்டல் அடையாளங்களுக்கு அப்பால் ஒரு மனிதன் எதை முதன்மையாகத் தக்கவைக்க வேண்டும் என்று நான் யோசிக்கத் தொடங்குகிறேன்.

பிக்சல் ஆன்மா சமகாலத் தமிழ் கவிதையின் புதிய குறியீட்டு அரசியலாக உள்ளது.

​தமிழ் கவிதை மரபு, பனையோலையில் தொடங்கிய தனது பயணத்தை இன்று டிஜிட்டல் திரைகளின் ஒளியில் தொடர்கிறது. பிக்சல் ஒரு கணினித் திரையின் மிகச்சிறிய அலகு. சமகாலக் கவிதைகளில் இது தொழில்நுட்பச் சொல்லாக மட்டும் இல்லை. மனித அடையாளத்தின் உடைப்பையும், டிஜிட்டல் உலகில் மனிதன் தேடும் ஆன்மாவையும் குறிக்கும் ஒரு தத்துவச் சொல்லாக உருவெடுத்துள்ளது.

​இன்று பல இளம் கவிஞர்கள், தங்கள் கவிதைகளில் திரை, ஒளி, குறியீட்டுத் தகவல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நவீனத் தனிமையை விவரிக்கிறார்கள். நேரடியாக பிக்சல் ஆன்மா என்ற சொல்லைப் பயன்படுத்தாவிட்டாலும், அந்த ஆன்மாவைப் நிழல்ப்படுத்தும் கவிதை வெளிப்பாடு தமிழ் சூழலில் மிக வலுவாகவே இருக்கிறது. குறிப்பாக, பின்நவீனத்துவ மற்றும் தொழில்நுட்பத் தாக்கம் கொண்ட கவிதைகளில், உடல் ஒரு தரவு போலவும், ஆன்மா ஒரு பிம்பம் போலவும் சித்தரிக்கப்படுகிறது.

​சமகாலத் தமிழ் கவிதைகளில் நான் என்ற அகங்காரம் உடைந்து, திரை பிம்பம் மய்யம்பெறுகிறது. பல கவிதைகள் நகரத்தின் இரைச்சலை விட, திரையின் மௌனத்தையே அதிகம் பேசுகின்றன.

​கவிஞர்கள் மனித முகத்தை ஒரு உயிரியல் அமைப்பாகப் பார்க்காமல், பிக்சல்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு புதிராகப் பார்க்கிறார்கள். அந்தப் புதிரினுள் ஒளிந்திருக்கும் ஆன்மா, தகவல்களின் இரைச்சலில் காணாமல் போவதே இவர்களின் முக்கியப் பொருளாக இருக்கிறது.

​ஒரு காலத்தில் தனிமை  காடுகளிலும் மலைகளிலும் தேடப்பட்டது. இன்று அது மொபைல் திரைகளின் ஒளிரும் நீல நிறத்தில்  தேடப்படுகிறது. இந்தக் கவிதைகளில் வரும் மனிதன், திரையில் தனக்கான பிம்பத்தைச் செதுக்கிக்கொண்டு, உண்மையான தன்னைத் தொலைத்துவிடுகிறான்.

​எதிர்காலத்தைப் பற்றிய கவிதைகளில், காலம்  கடிகார முள்ளாக இல்லாமல், சர்வர் வேகம் மற்றும் பைட்ஸ் என்ற அளவீட்டில் குறிக்கப்படுகிறது.

​இந்தச் சாயலைக் கொண்ட கவிஞர்கள் அல்லது கவிதைப்போக்கு ​தமிழ் சூழலில், நேரடியாகப் பெயரிடாவிட்டாலும், இந்த டிஜிட்டல் அகவெளியைத் தொட்டுச்செல்லும் கவிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களது கவிதைகளில் பிக்சல் ஆன்மாவின் நிழல்கள் படிந்திருப்பதைக் காணலாம்.

​இன்று வளர்ந்து வரும் பல இளம் கவிஞர்கள், தங்கள் கவிதைகளில் மென்பொருள் சார்ந்த சொற்களை  மெட்டாகத் தாண்டி, அதை ஒரு கவித்துவ உவமையாக மாற்றுகிறார்கள். இவர்கள் உயிரியல் உடல் இறந்து, டிஜிட்டல் உடல் பிறக்கும் தருணத்தைப் பாடுகிறார்கள்.

மு. புன்னியமூர்த்தி, கவின் மலர் போன்றோரின் கவிதைகளில் வரும் தற்காலச் சூழல் பதிவுகள், மனிதன் தான் உருவாக்கும் பிம்பத்தின் கைதியாகி நிற்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அங்கு ஆன்மா என்பது தூய்மையான ஒன்றல்ல, அது சமூக ஊடகங்களால் எடிட் செய்யப்பட்ட ஒன்றாகிவிடுகிறது.

​பிக்சல் ஆன்மா ஏன் கவிதைக்குத் தேவை? என்கிற கேள்வியும் இங்குண்டு.

​சமகால மனிதன், பிக்சல்களால் ஆன ஒரு உலகத்தில் வாழ்வதால், அவன் ஆன்மாவும் அந்தப் பிக்சல்களின் தன்மையையே பெறுகிறது. இது ஒருவிதத்தில் அவனது உண்மையான உணர்வுகளுக்குத் தடையாகத் தெரிந்தாலும், கவிதைக்கு இது ஒரு புதிய களத்தைத் தருகிறது.

​பிக்சல் ஆன்மா குறித்துப் பேசும் கவிதைகள், அந்தத் திரைகளுக்குப் பின்னால் இருக்கும் ஒரு உண்மையான துடிப்பைத் தேடும் கலகமாக இருக்கின்றன.

ஒரு பிக்சல் மறைந்தால் அந்தப் பிம்பமே முழுமையடையாது. அதேபோல, டிஜிட்டல் உலகில் நாம் எதைக் காட்டுகிறோமோ அதுவே நாம். இதைக் கவிதைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. நான் பதிவேற்றிய புகைப்படத்தில் இருக்கும் புன்னகை, என் உண்மையான கண்ணீரின் மௌனத்தைக் காட்டவில்லை என்ற தொனி இக்கவிதைகளில் மேலோங்கி இருக்கிறது.

​ஒரு கவித்துவப் பார்வை.

​கவிஞர்கள், நம் ஆன்மா சர்வரில் சேமிக்கப்படுகிறதா அல்லது திரையின் ஒளியில் கருகிப் போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இதுவே பிக்சல் ஆன்மாவின் மய்யம். பிக்சல்கள் நம்மைப் பிணைக்கும் சங்கிலிகளா அல்லது நாம் உலகத்தை அறிய உதவும் ஜன்னல்களா? இந்தக் கேள்விதான் சமகாலக் கவிதைச் சூழலை வழிநடத்துகிறது.

​பிக்சல் ஆன்மா இன்றைய டிஜிட்டல் யுகத்தின் ஆன்மீகம்.  காலத்தில் ஞானிகள் காட்டிற்குச் சென்று மௌனத்தைத் தேடினார்கள். இன்று மனிதன் திரைகளுக்குள் சென்று, தனது பிம்பங்களைத் தேடுகிறான். அந்தத் தேடலின் வலியை, ஏமாற்றத்தை, மற்றும் அந்தப் பிம்பங்களுக்குள் மறைந்திருக்கும் மெய்யான ஆன்மாவின் துடிப்பைப் பதிவு செய்வதே சமகாலத் தமிழ் கவிதைகளின் கடமையாக உள்ளது.

​நான் எழுதும் கவிதைகளில், இந்தத் டிஜிட்டல் திரைகளுக்கும் மனித ஆன்மாவுக்கும் இடையிலான மோதலை அல்லது பிணைப்பை ஒரு வாசகன் எப்படிப் பார்க்கிறான் என்பதை அறிய விரும்புகிறேன்.அதனூடாக இரண்டு கவிதைகள் பற்றி பார்க்கலாம்.

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதை

,

தோழி

காலமாய் நுரைகள் உடைகிற மணலில்

சுவடுகள் கரைய

சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?

கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்

நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.

மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்

உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.

,

ஆண்டு பலவாகினும்

நரையிலா மனசடா உனக்கென்றாய்.

தோழி

,

இளமை என்பது வாழும் ஆசை.

இளமை என்பது கற்றிடும் வேட்கை.

இளமை என்பது முடிவிலா தேடல்;

இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.

இளமை என்பது வற்றாத ரசனை

இளமை என்பது நித்திய காதல்.

இளமை என்பது

அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.

,

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

– ஏ.நஸ்புள்ளாஹ் கவிதை

,

இந்த வெறிச்சோடிய அறையின் மேசையின் மீது,

திடீரென உதிர்ந்து விழுகின்றன

சில முகங்கள்.

,

​அவை

சுவர்களில் தொங்கும் புகைப்படங்களிலிருந்து

ஏற்கனவே பேசித் தீர்க்கப்பட்ட

சொற்களின் எஞ்சிய சாம்பல்.

,

​எதிரிலிருக்கும் கண்ணாடியில்

நீ உனது முகத்தைத் தேடிக் களைக்கிறாய்

நானோ அந்த அறையின் ஒற்றைக் கண்ணாடியையே

இன்னொரு முகமாய் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

,

​அங்கேதான்

 அந்தச் சலனமற்ற பரப்பில்

நிகழ்கிறது அடையாளங்களின் பெரும் விபத்து.

,

அதிகாரத்தால் வரையப்பட்டு மொழியால் நுகரப்படும்

ஒரு வெற்றுப் பரப்பாக மாறுகிறது அந்த முகம்.

,

​இப்போது

நாம் பேசத் தொடங்குகிறோம்

விசித்திரமாய் நம் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

,

நமக்குள் மறைந்திருந்த இன்னொருவனின் முகம்

மெல்லக் கசிந்து வெளியேறி அறையை நிரப்புகிறது.

,

​இறுதியாக

நானும் நீயும் அந்த அறையிலிருந்து வெளியேறி

முகமற்ற ஒரு வீதியில் சந்தித்துக் கொள்கிறோம்.

,

அங்கே நம்மைத் தொடர வழியின்றி

நமது நிழல்கள் கூட தங்களுக்குரிய முகங்களைத் தேடி

அலைந்து கொண்டிருக்கின்றன…

,

வ.ஐ.ச.ஜெயபாலன் மற்றும் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகளின் ஒப்பீடு என வைத்துக் கொள்ளுங்கள்.

​சமகாலக் கவிதை வெளியில், பிக்சல் ஆன்மா ஒரு தொழில்நுட்பக் குறியீடு மட்டுமில்லை. அது மனித அடையாளத்தின் திரவத்தன்மையையும் டிஜிட்டல் யுகத்தில் நம் இருப்பு எவ்வாறெல்லாம் உடைந்து கொண்டிருக்கிறது என்பதையும் காட்டும் ஒரு உருவமாகும். தமிழ் இலக்கியப் புலத்தில் முக்கியமான கவிதை சொல்லி வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையும், ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதையும் வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும், இந்த பிக்சல் ஆன்மா வின் பரிணாமத்தை நுட்பமாகப் பதிவு செய்கின்றன. வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்கையோடு இணைந்த பிம்பத்தை மய்யப்படுத்த, ஏ.நஸ்புள்ளாஹ் தொழில்நுட்பத்தால் உடைந்த அடையாளங்களை மய்யப்படுத்துகிறார்.

​வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையில் பிம்பம் இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு தூய உணர்வு. உன் கண்களில் எனது பிம்பம் அசையும் என்ற வரி, அன்பின் வழியே ஒருவரை ஒருவர் காட்சிப்படுத்தும் மனித நேயத்தையும், பிம்பத்தின் உயிருள்ள தன்மையையும் காட்டுகிறது. இங்கே பிம்பம்  கணநேரத்தில் தோன்றி மறையும் கடல் நுரையைப் போன்றது, அது ஆன்மாவோடு தொடர்புடையது.

​இதற்கு நேர்மாறாக, ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதையில் பிம்பம் பிக்சல் ஆன்மாவின் வறண்ட நிலையை உணர்த்துகிறது. சுவர்களில் தொங்கும் புகைப்படங்கள் , எதிரிலிருக்கும் கண்ணாடி ஆகியவை டிஜிட்டல் திரைகளின் குறியீடுகள் ஆகின்றன. ஜெயபாலனின் கவிதையில் பிம்பம் அசைகிறது (உயிர்மை),  நஸ்புள்ளாஹ்வின் கவிதையில் பிம்பம் சிதறுகிறது (தொழில்நுட்பச் உடைப்பு). நஸ்புள்ளாஹ்வின் வரிகளில் வெளிப்படும் அந்தச் சலனமற்ற பரப்பு, டிஜிட்டல் உலகின் பிக்சல் மயமான அடையாளத்தைக் குறிக்கிறது.

​ஜெயபாலனின் கவிதையில் இளமை ஒரு கால அளவு இல்லை.  அது வாழ்வின் மீதான தீராத வேட்கை. சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு என்பது காலத்தைக் கடந்து நிற்கும் ஆன்மாவின் வலிமை. இங்கே அடையாளம்  இயற்கையானது, தொடர்ச்சியானது.

​எனினும் நஸ்புள்ளாஹ்வின் கவிதையில் அடையாளங்களின் பெரும் விபத்து என்பது பிக்சல் ஆன்மாவின் மையப்புள்ளி. டிஜிட்டல் யுகத்தில் நம் முகங்கள் புகைப்படங்களாகவும், தகவல்களாகவும் மாற்றப்பட்டு விடுகின்றன. அதிகாரம் மற்றும் தொழில்நுட்பம் நம்முடைய முகத்தை ஒரு வெற்றுப் பரப்பாக மாற்றுகிறது. நாம் திரையில் காட்டும் முகம், உண்மையில் நமக்கானதுஇல்லை.  அது நம்முடைய பிக்சல் ஆன்மாவின் போலி பிம்பம். நிழல்கள் கூட முகங்களைத் தேடி அலையும் அந்த இறுதிக்காட்சி, டிஜிட்டல் உலகில் மனிதன் தனது சுயத்தை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டதைக் காட்டுகிறது.

​ஜெயபாலன் கவிதையில் மௌனம் உரையாடலின் ஒரு பகுதி. நரையிலா மனசு என்பதன் மூலம், அவர் காலத்தின் உடைப்புகளைத் தாண்டி நிற்கும் ஆன்மாவை முன்வைக்கிறார். நஸ்புள்ளாஹ் கவிதையில் மௌனம் ஒரு பிளவு நம் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை என்பது, சொற்களை விட பிம்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல் யுகத்தின் உச்சகட்ட அமைதி.

​நஸ்புள்ளாஹ்வின் கவிதையில் வரும் முகமற்ற வீதி, பிக்சல் ஆன்மாவின் இருத்தலியல் வெறுமை. நாம் நம்முடைய டிஜிட்டல் அடையாளங்களைத் துறந்துவிட்டு நிஜ உலகிற்கு வரும்போது, அங்கே முகங்களற்று நிற்கிறோம். ஏனெனில், நாம் இத்தனை காலமும் பாதுகாத்து வந்த பிக்சல் ஆன்மா அந்தத் திரைகளுக்குப் பின்னால் மட்டுமே வாழ்ந்தது.

​இந்த இரண்டு கவிதைகளும் பிக்சல் ஆன்மாவின் இரண்டு துருவங்களைப் பேசுகின்றன.

​ஜெயபாலனின் பிக்சல் ஆன்மா  அன்பின் வழியே நீடிக்கும் பிம்பம். தொழில்நுட்பத்திற்கு முந்தைய, அல்லது தொழில்நுட்பத்தை மீறிய மனித ஆன்மாவின் நித்தியத் தன்மை.

​நஸ்புள்ளாஹ்வின் பிக்சல் ஆன்மா அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் சிறை. மனிதனை முகமற்றவனாக மாற்றும் தொழில்நுட்பத்தின் கோரமுகம்.

​ஜெயபாலன் தனது ஆன்மாவை மற்றவரின் கண்களில் தேடுகிறார். நஸ்புள்ளாஹ், அந்தத் தேடலே விபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார். பிக்சல் ஆன்மா இன்றைய கவிதை உலகில், ஒரு மனிதன் தான் சார்ந்திருக்கும் டிஜிட்டல் கட்டமைப்பிற்குள் எவ்வளவு தூரம் தன்னைப் பகிர்ந்து கொள்கிறான் என்பதைப் பதிவு செய்யும் ஒரு கருவியாக இருக்கிறது.

​பிக்சல் ஆன்மா ஒரு நவீனத் துயரமாக ஜெயபாலன் கவிதைகளில் பிக்சல் ஒரு துளி நீராகச் சுடர்விடுகிறது. நஸ்புள்ளாஹ் கவிதைகளில் அது மணல் துகள்களாகச் சிதறுகிறது. இரண்டுமே சொல்லும் உண்மை ஒன்றுதான் மனிதன் பிம்பங்களைத் தாண்டித் தன் ஆன்மாவைத் தேட வேண்டும். அந்தத் தேடலில் கிடைக்கும் முகமற்ற வீதி ஒரு வீழ்ச்சி இல்லை. செயற்கையான பிம்பங்கள் உதிர்ந்து, உண்மையான ஆன்மா வெளிப்படும் ஒரு புதிய தொடக்கம்.

​ஏ.நஸ்புள்ளாஹ்வின் முகமற்ற வீதியில் சந்தித்துக்கொள்ளும் நாம், மீண்டும் ஜெயபாலன் சொல்லும் நரையிலா மனதின் இளமையைக் கண்டடைய முடியுமா? அதுவே பிக்சல் ஆன்மாவிலிருந்து நாம் அடையும் இறுதி விடுதலை.

000

14/06/2026

00

நஸ்புள்ளாஹ் 1974

இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பின்நவீனத்துவக் எழுத்தாளர்.

இலங்கை ​திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவைப் பிறப்பிடமாக கொண்டவர். இவர்,நாவல், கவிதை,சிறுகதை மற்றும் நாவல்த்துறையில் பின்நவீனத்துவச் சிந்தனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்​ ​கிண்ணியா மண்ணிற்கு முதல்முறையாக ‘அரச சாகித்திய அகாதமி’ விருதைப் பெற்றுத்தந்த ‘நான் உமர் கய்யாமின் வாசகன்’.[2022] எனும் கவிதை நூல் இவரது மிகமுக்கிய படைப்பாகும்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *