-சூர்யாராம்
ஒரு பசுமையான அழகிய காட்டில் ராஜா சிங்கமும் ராணி சிங்கமும் தங்கள் குட்டி சிங்கத்துடன் வாழ்ந்து வந்தனர். அந்த ராஜா சிங்கம் வீரத்திற்கும் நீதிக்கும் பெயர் பெற்றது. காட்டில் வாழும் அனைத்து விலங்குகளையும் பாதுகாத்து நல்லாட்சியுடன் ஆட்சி செய்து வந்தது.
குட்டி சிங்கமும் தன் பெற்றோரின் அன்பிலும் வழிகாட்டுதலிலும் வளர்ந்து வந்தது. ஒரு நாள் இந்தக் காட்டின் பொறுப்பை ஏற்க வேண்டியது தான்தான் என்பதால், ராஜா சிங்கம் அதற்கு சிறு வயதிலிருந்தே பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. காட்டைப் பாதுகாப்பது எப்படி, ஆபத்துகளை எதிர்கொள்வது எப்படி, விலங்குகளின் குறைகளை கேட்டு தீர்ப்பது எப்படி என்று எல்லாவற்றையும் பொறுமையாக சொல்லிக் கொடுத்தது.
ஒருநாள் அடுத்த காட்டிலிருந்து ராஜா சிங்கத்திற்கு விருந்துக்கு அழைப்பு வந்தது. பத்து நாட்கள் அங்கே தங்க வேண்டியிருந்ததால், தன் மகனை அழைத்து,
“நான் திரும்பி வரும் வரை இந்தக் காட்டின் பொறுப்பு உன்னுடையது. நான் செய்வதைப் போல பொறுப்புடனும் தைரியத்துடனும் செயல்படு.”
என்று அறிவுரை கூறிவிட்டு ராணி சிங்கத்துடன் புறப்பட்டுச் சென்றது.
குட்டி சிங்கமும் மிகுந்த பெருமையுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. தன் தந்தை சொல்லிக் கொடுத்தபடி ஒவ்வொரு வேலையையும் கவனமாகச் செய்தது. காட்டில் உள்ள விலங்குகளின் தேவைகளை கேட்டறிந்து உதவியது. பாதுகாப்புப் பணிகளையும் சிறப்பாக கவனித்தது.
அதைப் பார்த்த விலங்குகள்,
“ராஜா சிங்கத்தைப் போலவே குட்டி சிங்கமும் சிறப்பாக செயல்படுகிறது!”
என்று பாராட்டின.
இவ்வாறு சில நாட்கள் அமைதியாகக் கடந்தன.
ஒருநாள் ஒரு பெரிய குரங்குக் கூட்டம் அந்தக் காட்டிற்கு வந்தது. அவர்கள் பல வண்ண ஆடைகளை அணிந்து கொண்டு, மேளதாளங்களுடன் பாடியும் ஆடியும் வித்தைகள் செய்து காட்டினர். மரத்திலிருந்து மரத்திற்கு தாவினர். பல சாகசங்களையும் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
காடு முழுவதும் திருவிழா போல மாறியது.
“ஆஹா! எவ்வளவு அருமையாக ஆடுகிறார்கள்!”
“என்ன ஒரு திறமை!”
என்று விலங்குகள் அனைவரும் குரங்குகளைப் புகழ்ந்தனர்.
அதைப் பார்த்த குட்டி சிங்கம் யோசிக்க ஆரம்பித்தது.
“மக்களுக்கு இதுதான் பிடிக்கிறதோ? நான் காட்டைப் பாதுகாக்கிறேன். ஆனால் யாரும் என்னைப் பற்றி இவ்வளவு பேசவில்லை. நானும் இப்படி வித்தைகள் கற்றுக் கொண்டால் எல்லோரும் என்னைப் பாராட்டுவார்களே!”
என்று நினைத்தது.

அதனால் குரங்குகளின் தலைவனான குரங்கு ராஜாவிடம் சென்று,
“எனக்கும் உங்களைப் போல வித்தைகள் கற்றுத் தர முடியுமா?”
என்று கேட்டது.
குரங்கு ராஜா மிகவும் சூழ்ச்சிக்காரன். குட்டி சிங்கத்தின் மனதில் இருந்த குழப்பத்தை அவன் உடனே புரிந்து கொண்டான்.
“உனக்கு இவை வருமா? நீ ராஜாவாக இருக்கத் தகுதியற்றவன். மக்களை மகிழ்விக்கத் தெரியாதவன் எப்படி ராஜாவாக இருக்க முடியும்? இந்தக் காட்டிற்கு நான்தான் ராஜாவாக இருக்க வேண்டும்.”
என்று தினமும் கூற ஆரம்பித்தான்.
முதலில் குட்டி சிங்கம் அதை நம்பவில்லை. ஆனால் நாளுக்கு நாள் குரங்கு ராஜா அதையே சொல்லிக் கொண்டே இருந்தான்.
“உன்னால் எதுவும் முடியாது.”
“நீ ஒரு நல்ல ராஜா இல்லை.”
“என்னைப் போல யாராலும் மக்களை மகிழ்விக்க முடியாது.”
என்று தொடர்ந்து கூறியதால் குட்டி சிங்கம் தன் திறமையைப் பற்றியே சந்தேகப்பட ஆரம்பித்தது.
மெல்ல மெல்ல தன்னம்பிக்கையை இழந்தது.
இறுதியில்,
“ஒருவேளை நான் ராஜாவாக இருப்பதற்குத் தகுதியற்றவனோ?”
என்று நினைக்க ஆரம்பித்தது.
அதன் பிறகு குரங்கு ராஜா,
“இந்தக் காட்டின் ராஜாவாக என்னை அறிவித்து முடிசூட்டு விழா நடத்த வேண்டும்.”
என்று கட்டளையிட்டான்.
குட்டி சிங்கமும் அதற்கு சம்மதித்து ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் ராஜா சிங்கமும் ராணி சிங்கமும் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்தனர்.
காட்டின் நிலைமையைப் பார்த்தவுடனே என்ன நடந்திருக்கிறது என்பதை ராஜா சிங்கம் புரிந்து கொண்டது. ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாகக் காத்திருந்தது.
மறுநாள் குரங்கு ராஜா பெருமையுடன் வந்து,
“இன்று எனக்கு முடிசூட்டு விழா நடத்த வேண்டும். இந்தக் காட்டின் ராஜா இனி நான்தான்!”
என்று கூறியது.
அப்போது ஒரு பயங்கரமான கர்ஜனை கேட்டது.
அனைத்து விலங்குகளும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தன.
உண்மையான ராஜா சிங்கம் கம்பீரமாக நடந்து வந்தது.
அதைக் கண்டதும் குரங்கு ராஜாவின் முகம் வெளிறிப் போனது.
ராஜா சிங்கம் அமைதியாக அதனை நோக்கி,
“நீ இந்தக் காட்டின் ராஜாவாக வேண்டும் என்று விரும்புகிறாயா?”
என்று கேட்டது.
“ஆ… ஆமாம் ராஜா…”
என்று குரங்கு தடுமாறியபடி பதிலளித்தது.
“சரி. இந்தக் காட்டின் ராஜாவாக வேண்டும் என்றால் முதலில் என் மகனை நேருக்கு நேர் வென்று காட்டு. அதன்பிறகு உன்னை நான் ராஜாவாக அறிவிக்கிறேன்.”
என்று ராஜா சிங்கம் கூறியது.
அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் குரங்கு ராஜா நடுங்க ஆரம்பித்தது.
குட்டி சிங்கத்தையே தன்னால் வெல்ல முடியாது என்பது அதற்குத் தெரியும். சிங்கத்தின் ஒரு அடியே தன்னை அழித்துவிடும் என்பதையும் அது நன்றாக அறிந்திருந்தது.
உடனே குரங்கு ராஜா தலைகுனிந்து,
“மன்னித்துவிடுங்கள் ராஜா. ஆசையாலும் தற்பெருமையாலும் நான் தவறு செய்துவிட்டேன். இந்தக் காட்டை ஆளும் தகுதி எனக்கு இல்லை.”
என்று மன்னிப்பு கேட்டது.
அப்போது ராஜா சிங்கம் தன் மகனை அருகில் அழைத்துக் கொண்டு கூறியது:
“மகனே, குரங்கிற்கு அதன் திறமை உண்டு. மரம் தாவுவதிலும் மக்களை மகிழ்விப்பதிலும் அது சிறந்தது. ஆனால் காட்டைப் பாதுகாப்பதும், ஆபத்துகளை எதிர்கொள்வதும் சிங்கத்தின் பொறுப்பு.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகளும் பலங்களும் உள்ளன. மற்றவர்களின் திறமையைப் பார்த்து நம்முடைய திறமையை மறந்துவிடக் கூடாது. எது எப்போது, எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
மக்களை மகிழ்விப்பது நல்லது. ஆனால் பாதுகாப்பும் பொறுப்பும் அதைவிட முக்கியமானவை.”
அப்போதுதான் குட்டி சிங்கம் தனது தவறை உணர்ந்தது.
“அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். மற்றவர்களைப் பார்த்து என்னை நானே குறைத்து மதித்துவிட்டேன்.”
என்று கூறியது.
ராஜா சிங்கம் புன்னகையுடன் தன் மகனை அணைத்துக் கொண்டது.
அதன்பிறகு குட்டி சிங்கம் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து, ஒரு நாள் தன் தந்தையைப் போலவே சிறந்த ராஜாவாக மாறியது.
நீதி
மற்றவர்களின் திறமையைப் பார்த்து நம்முடைய திறமையை மறந்துவிடக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி பலமும் பொறுப்பும் உண்டு.
000

பெயர் : சூர்யா பாலா
புனைப்பெயர் : சூரியாராம்
கல்வித் தகுதி : B.Tech (Biotechnology)
தற்போது ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் வசித்து வருகிறேன். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் மீது ஆர்வம் கொண்டவள். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருவதோடு, VS Kitchen என்ற வீட்டுச் சமையல் தொழிலையும் நடத்தி வருகிறேன்.
கல்வி, தமிழ் மொழி வளர்ச்சி, சமூக சேவை மற்றும் தொழில்முனைவு ஆகிய துறைகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறேன்.

