விடுமுறை நாட்களில் தங்கள் ஊரை அடுத்துள்ள ஒரு பெரிய ஏரியைப் பார்க்கப் புறப்பட்டான் அஜித்.
மிகப் பெரிய ஏரி. கடல் போல விரிந்து பரந்து இருந்தது. சில்லென்று காற்று மனதையும் உடலையும் தொட்டது. அந்த ஏரிக்கு நடுவில் ஒரு தீவு ஒன்று இருப்பதாக அஜித் கேள்விப் பட்டு இருந்தான்.
நீர்வழி சாகசப் பயணத்துக்கு ஏற்றாற் போல் தயாராகி வந்திருந்த அஜித், நீரில் குதித்து நீந்த ஆரம்பித்தான்.
வெகு நேரம் நீந்தியும் தீவு கண்ணில் தென்படவில்லை.
ஒரு பாறை மேல் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டான். தனது தொலைநோக்கியை எடுத்து சுற்றுமற்றும் பார்த்தான்.
ஏரி நடுவே மரங்கள் நிறைந்த பகுதி தென்பட்டது. அதை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான்.
மரங்கள் நிறைந்த தீவுப் பகுதியை அடைந்தான் அஜித். யானைகளின் பிளிறல் அதி பயங்கரமாகக் கேட்டது.
“ஆஹா ! நிறையக் காட்டு யானைகள் கூட்டமாக வாழும் பகுதியோ ? தனியனாக மாட்டிக் கொண்டு விட்டேனோ?” என யோசித்தான்.
“துணிவே துணை” என முணுமுணுத்தபடி, தீவை நோக்கி நகர்ந்தவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.
பருத்து, கருத்து, வேகமுடன் வெகுண்டு வரும் யானைகளை எதிர்பார்த்து, மெல்ல மெல்ல நடந்து சென்றவன் கண்களில் ஒரு யானை கூடத் தட்டுப்படவில்லை.
பிளிறல் சத்தம் மட்டும் இன்னும் வேகமாக, கடூரமாக, அருகில் கேட்டது.
அஜித்துக்கு வயிறு பசித்தது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு, புளிசாதப் பொட்டலத்தைப் பிரித்தான்.
ஒரு துதிக்கை முன் வந்து, “ஃப்ஸ்ஸ்” என்று மூச்சுக் காற்றை வெளித்தள்ளியபடி புளிசாதத்தைத் தொட்டது. பிளிறல் சத்தமும் கேட்டது.
சிறுவனாக இருந்தாலும், துணிவும் அறிவும் கொண்டவன் அஜித்.
என்ன இது! பிளிறல் சத்தம் கேட்கிறது! துதிக்கை நீள்கிறது! ஆனால், யானை எதுவும் தட்டுப் படவில்லையே! ஏதாவது மந்திர சக்தியோ!
எதுவாக இருந்தாலும் பயமின்றி எதிர் கொள்ள வேண்டும் என முடிவு செய்து, “ஏய், தொடாதே! என் உணவைத் தொடலாமா? தள்ளிப் போ“ என அந்தத் துதிக்கையைத் தள்ளி விட்டான்.
மீண்டும் அதி பயங்கர பிளிறல்.
“கத்தினால், பயப்பட மாட்டேன்! தள்ளிப் போ” என துதிக்கையை மீண்டும் தள்ளி விட்டான்.
இன்னும் சில துதிக்கைகள் அஜித்தை நாலாப்புறமும் சூழ்ந்தன.
பையில் இருந்து சாட்டை மற்றும் பொம்மைத் துப்பாக்கியை எடுத்தான். சாட்டையைச் சுழற்றியும், துப்பாக்கியால் வான் நோக்கிச் சுட்டும் எல்லா துதிக்கைகளையும் விரட்டினான்.
துதிக்கைகள் நகர்ந்து ஓடின. பிளிறல் சத்தம் தொடர்ந்தது.
“சத்தம் மட்டும் தான் பெரிதாக இருக்கிறது. யானை என்றால் பெரிதாக , கம்பீரமாக எதிரில் வர வேண்டாமா? வெறும் துதிக்கை மட்டும் தான் இருக்கிறது” எனக் கேலிச்சிரிப்புடன் கேட்டான் அஜித்.
குழந்தைக் குரலில், “சிறுவனே, கீழே நன்றாகப் பார்! நாங்கள் இங்கே தான் இருக்கிறோம்” என யானைகள் அழுதன.
அஜித் நன்றாகப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! எல்லா யானைகளும் தரை மட்டத்தில், சின்ன தவளைகள் உருவ அளவில் நிண்று கொண்டிருந்தன.
துதிக்கைகள் மட்டும் நீளமாக இருந்தன.
“மனிதர்கள் சமைத்த உணவைச் சாப்பிட்டால், நாங்கள் எங்கள் உருவை அடைந்து விடுவோம் என்று எங்கள் கொள்ளுத் தாத்தா சொன்னார். ஆனால், இங்கே மனிதர்கள் வருவதே இல்லை.“ என்றது ஒரு யானை.
“வெகு நாட்கள் கழித்து நீ தான் வந்திருக்கிறாய். உனது உணவில் சிறிது சாப்பிட்டால், நாங்கள் வளர்ந்து விடுவோம். சிறிதளவு உணவு தருவாயா?” என்றது மற்றொரு யானை.
“சரி, ஒருவரொருவாக துதிக்கையை நீட்டுங்கள்“ எனச் சொல்லிய அஜித், ஒரு சில பருக்கைகளை ஒவ்வொரு யானைக்கும் கொடுத்தான்.
என்ன ஆச்சரியம்! யானைகள் வளர்ந்து, காட்டு யானைகளாய் உயர்ந்து நின்றன.
“மிக்க நன்றி தோழா! உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என யானைகள் கூறின.
“நான் இந்தத் தீவை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப் போகிறேன். தீவின் ஒரு பகுதி உங்களுக்கு! சுற்றுலா வரும் மனிதர்களுக்கு இடையூறு எதுவும் தரக் கூடாது” என்றான் அஜித்.
“நிச்சயமாக! மனிதர்கள் வந்தால், எங்களுக்கும் மகிழ்ச்சியே!” என்றது யானைகளின் தலைவன்.
“ஆம், மனிதர்களும், விலங்குகளும் ஒற்றுமையாக, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம்.” என்றான் அஜித்.
அதிசயத் தீவுக்கு சென்று வந்த அஜித்துக்குப் பாராட்டுகள் குவிந்தன.
அமைதியாக இருந்த ஏரிக்கரை, பரபரப்பான சுற்றுலாத்தளம் ஆகியது.
00
கமலா முரளி
ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ,கமலா முரளியின் படைப்புகள் தினசரி.காம், மஞ்சரி, கலைமகள், குவிகம் மின்னிதழ், நடுகல் இணைய இதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், மங்கையர்மலர், கோகுலம் ,இந்து தமிழ்திசையின் மாயாபஜார், சிறுவர் வனம், சொல்வனம் , தினமலர் பட்டம் போன்ற பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன.
இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” எனும் மொழிபெயர்ப்பு நூலும் “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.