கூடுகட்டி முட்டைப் பொறிக்கும் புறாக்கள்
பேன்களைக் கொத்துகிறது
சிலுவை மரத்தில் தலை சாய்ந்திருக்கும்
இயேசுவின் முட்கிரீடக் கூட்டுக்குள்
முட்டைகள் பட படவென்று
விழுந்து பொறிகிறது
ஈரம் உதறிய கண்களைச் சுருட்டும்
புறாக்கள் பிறந்து விட்டன
,
சமாதானம் எப்போது வருமென்ற பேச்சு
இயேசுவின் உடலை உடையை
ஏலமிடும் கூட்டத்திலிருந்து பிறக்கிறது
இத்தனை பிறப்புகளுக்கு நடுவே ஓர் இறப்பு..
யூதாஸ் செத்தான்.
,
சமாதானம் எப்போது வருமெனச் சொல்வதற்கு
ஓடி வந்த தோமா விலாவிற்குள்
கையைவிட்டு சில்லறை தேடுகிறான்
இராயனுக்குப் பிடித்த
சிவப்புத் திட்டுகள் ஒட்டிய காசுகள்
விரல் இடுக்கு நிறைய அகப்படுகின்றன
,
ஏலம் முடியவில்லை
பேரம் பேசும் பெயரில்
உடலை அழுக விடுகின்றனர்
ஒன்று இரண்டு மூன்று என பல சாமங்களாக
முடிவேதும் இல்லை
,
புறாக்கள் பறக்கத் தொடங்கிவிட்டன
நீளமான துப்பாக்கி ரவைகளுக்கு இரையான
சிறகொடிந்து குருதியால் நனைந்த
வெண் சிவப்பு புறாக்களின் எண்ணிக்கை
எத்தனையென கணக்கெடுக்கத் தவறிவிட்டேன்
,
ஒடிந்த இறகுகள் ஒன்றுசேர்ந்து பறக்க
உடல் மேலேறுகிறது
சமாதானம் பிறக்கட்டும்
*******
அக்குள் இடுக்கினில்
கூடு கட்டிய தேனீக்களின் மலர் வாசம்
குருதி வீச்சம் வறண்டு
தேனற்ற வெற்று மொந்தையென
மயிரின் பிடியில்
சலம் உலர்ந்து பிசின் ஒட்டி
எலும்புக்கூட்டின் கண் பொந்துகளுக்குள்
தேனீக்களைக் கொட்டும்
,
கொட்டிப் பழகிய தேனீக்கள்
கூட்டுப்பையை கவுத்திக் கொட்டும்போதே
இரத்தம் உறியும்
காட்டேறி தோட்டேறி கொடுக்குகள்
தந்தம் போல அறுபட்டு விழும்
விழுந்த கொடுக்குகளை
கூட்டமாகத் தூக்கிச் செல்லும் எறும்புகள்
அஞ்சலி செலுத்தப் பொவதில்லை
கொட்டிய தேன் துளிக்கென
நினைவேந்தல் நிகழ்த்தப் போவதில்லை
பிசுபிசுத்து படர்ந்திருக்கும்
கறைகளை நக்கி நக்கி ஈரமிட்டு
தேனை உற்பத்தி செய்கிறது
,
மெத்தனோயிக் துளியால்
கொடுக்கைத் தீட்டி
படைக்கருவிகளின் கருவூலத்திற்குள்
விட்டெறிகிறது
எறும்பின் இரண்டாம் பிரிவு படைகள்
கடற்கரை மணலில் விளைந்த
பொடிய சங்குகளை ஊதி
போருக்குக் கிளம்பியது
வாசம் உறிஞ்சிப் பாதைகளின்
கோட்டைப் பிடிக்கும்
எறும்புக்கூட்டத் தலைவன் கவசம்
கழற்றி
நார் முடிச்சை இறுக்குகிறான்
வேகம் கூடுகின்றது
தேனீக்களுடன் போர் தொடங்கிவிட்டது
இரண்டு கொடுக்குகளும் மோதுவதில்
விழும் இடிகளுக்குக் கீழ் விழும் மழையில் தேன்துளிகள்
பிசுபிசுப்பின்றி வலுவலுவென கொட்டுகிறது
,
போர் உக்கிரமடைய காவடி எடுத்து
ஆடத்தொடங்கிய ஆண் மயில்களுக்கு
உயிரின் விலை தெரிவதே இல்லை
*******
கொல்லக் கொல்லச் சாகிறேன்
காற்றின் மொழியை
காலுக்குக் கீழிருந்து எடுத்து
உயிர் பிழைக்க
முயற்சிக்க முடியாது
தலைசாய்த்து நிற்கிறேன்
சாய்வதற்கு சுவர் தேடுகிறேன்
சுவரில் ஓவியம் கேட்கிறேன்
ஓவியம் தீட்டப்பட்டிருந்தால்
என்னைத் தீண்ட
ஓவியத்தில் ஏதாவதொரு பொருள்
உயிர் கொண்டிருக்குமா?
உயிர்கள் ஏதும் வேண்டாம்
பொருட்கள் கண் பெற்றும்
கண்ணில் கொஞ்சம் கருணை ததும்பியும்
என்னை ஒருமுறை பார்த்தால் போதும்
ஓவியமாக மட்டும் இருந்தால் இன்னும் போதும்.
*******

அரா
அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.