அதி விரைவு வண்டியில்…

விழுந்தது செத்தது

வால் இல்லா பல்லி

ஈக்கள் மொய்க்காமல்

பறந்து சென்றன

பறவைகள் கொத்தித் திண்ணாது

படம் பிடித்து சென்றன

விரைவாகச் செல்பவர்கள்

அவரவர் அலுவல் இடங்களில்

குளிரூட்டிய அறையில் உட்கார்ந்திருக்கும் அதிகாரியிடம்

திட்டு வாங்குவதை

வாலைத் தேடிக் கொண்டிருந்த

பல்லியின் ஆவி கண்டு கொண்டது

வாலை மட்டும் கண்டுபிடிக்கவே இல்லை

அது எங்கோ ஒரு தொலைக்காட்சியகத்திலோ

விற்பனைக் கூடத்திலோ

மிஷ்கின் பாடலுக்கு

டிஸ்கோ நடனம் ஆடிக்கொண்டிருக்கலாம்

*****

தண்ணீர் வற்றிய

வறட்சியான கோடையில்

மரங்கள் இல்லாத

மரங்களில் இலைகள் இல்லாத மாநகரத்தின்

மாடக் கோபுரக் கலசம் மினுங்க

அதன் வனப்பில் மயங்கி

கால் நகம் தடவியே

உச்சியில் நின்ற பட்சி

உயிரை மாய்க்க விழுந்தது..

பாதி தூரத்தில் விழித்து

இறக்கை விரிய எழும்பி

பறந்து பறந்து ஓசை தர

360 டிகிரி கோணத்தில்

படு வேகமாக கலசம் சுற்றுகிறது

*****

தொலைவினில் இட்ட முத்தம் புன் முறுவலுடன்

முகம் முகமாய் பறந்து வந்து

பற்றிப் பிடித்து பல பொய் உரைத்தது

திறக்க முடியா தூக்கத்தின் கண்கள்

ஆழ்ந்தும் அடிக்கடி விழித்தும்

இமைக்காமல் படபடத்து

கனவுகளைக் களவாடின

மனங்கள் மணந்த வாசம்

மண்டி போட்டு அமர்ந்து,

மன்றாடி புலம்பி மலைத்தன

மறைந்திடும் மாயை கணத்தில்

வளைந்த நெடும் புருவம்

பீறிட்டு எழவும்

பீதியில் பாதைகள் பதுங்கின

பன்மையில் பழுது போக

ஒருமையில் உள்ளம் ஒன்றியும்…

ஒன்றாமல் நின்றது பெருவிரல்….

*****

அக்கா மகனை அவளுக்குப் பிடிக்கும்

எப்போதும் அவனை நான் கிண்டலடிப்பேன்

தலைக்குடுமியில் டம்ளரையும் டப்பாக்களையும் செருகி

வம்பிழுப்பேன்

காதில் கடித்து விளையாடுவேன்

அவனும் மேலேறி விழுந்து

மாமா என்பான்

இதையெல்லாம் பார்ப்பவள்

என்னை செல்லமாகத் திட்டி

கிண்டலடிப்பாள்

அவனை அழகனென கொஞ்சுவாள்

அத்தையென அறிமுகப்படுத்தச் சொல்வாள்

அரைகுறையாக நா குளறி மாமாவென அழைப்பவன்

எடுத்தவுடன் எப்படி அத்தையென்பான்

நல்லவேளை அவன் அழைக்கவில்லை

இப்போது அழைத்திட அவள் இல்லை

என்னிடம்

அறம் செய்ய விரும்பச் சொல்லும்

ஔவையின் ஆத்திசூடியை ஒப்புவிக்கிறான்

இப்போது தெளிவாகப் பேசுகிறான்

அத்தை எனத் தெளிவாகச் சொல்லவும்

அவனால் முடியும்

இத்தனை இருந்தும் அவனுக்கென்னத் தெரியும்

பொடியன்

அமைதியும் மௌனமுமாய் அமர்ந்திருக்கிறேன்

வெளிச்சம் வருகிறது வெளியே போகிறேன்

வெளிச்சம் போகிறது நானும் உடன் போகிறேன்

விடுமுறை வருகிறது எங்கும் போகாமல்

எதுவும் செய்யாமல் இடிந்து சாய்ந்து

இருக்கையிலிருந்து கட்டிலிலும்

கட்டிலிலிருந்து இருக்கையிலும்

மாறி மாறி விழுகிறேன்

என்னை மறந்தது அவளது அறம்

அமைதி காப்பது எனது அறம்

என்னிடம் ஆத்திசூடி சொன்னது

அவனது அறம்

சொல்லச் சொன்னது என் அக்காவின் அறம்

அறமெனப்படுவது அப்படியே போவது தான்.

அப்படியே போவோம் முட்மரங்களின் அன்பினூடே

பாதத்தடம் பதியாத சருகுகள் மேல்

பாதைகளற்ற வீதிகளில்

சுற்றி சுற்றி வரலாம்

குழாய்கள் சுற்றப்பட்ட தெருக்கள் பக்கம்

காற்றின் பின்னே.

*****

உடைந்த கம்பியும்    

ஒழுகும் மேற்கூரையும்

கீறிய இருக்கையும் 

பழம்பெரும் படிக்கட்டும்

இரையும் வானொலியும்       

சட்டையைக் கிழிக்கும்   

சாளரத் தகடுகளும்

தூக்கத்தில் கனவுகளுடனான பயணமும்

தூக்கத்தைத் தூக்கி அடிக்கும்

வேகத்தடைகளும்

புதிதாக ஒட்டிய                    

“திருடர்கள் ஜாக்கிரதை” வாசகமும் 

துருப்பிடித்த நடத்துநர் விசிலும்     

என்னுடன் பயணிக்கிறது

நான் என்னுடன் தனியே இருக்கிறேன்.

*****

அரா

அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.

சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *